யாகூப்பும் இஸ்லாமியரும்- ஒரு கடிதம்

ஜெமோ சார் ,

இது உங்களுக்கு நான் எழுதும் இரண்டாவது கடிதம். உங்களுடைய எழுத்துக்களை தொடர்ந்து படித்து வருபவன் நான்.

உங்கள் “யாகூப் மேமன் என்னும் தேசநாயகன் ” என்ற பதிவை படித்தேன். வேதனையும் , மன உளைச்சலும் அடைந்தேன். யாகூப் மேமன் குற்றவாளியா அல்லது நிரபராதியா என்பதை பற்றி நான் விவாதிக்க விரும்பவில்லை. அதை பற்றி அவர் மன சாட்சியே அறியும். அவர் அதற்கு இறைவனிடம் பதில் சொல்ல வேண்டும்.

இஸ்லாம் மரண தண்டனையை எதிர்க்கவில்லை. தவறு செய்தவன் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கருத்தில் முஸ்லிம்களுக்கு கருத்து வேறுபாடு இருக்க முடியாது. ஆனால் அவர் கடைசி இரு நாட்கள் நீதித்துறையுடன் நடத்திய போராட்டமே முஸ்லிம்களை இவ்வாறு கூட வைத்தது. உச்ச நீதிமன்ற வரலாற்றில் இதுபோல் நடந்தது இல்லை என்று சொல்கிறார்கள். ஏன் இத்தனை அவசரம்?

ஒரே இரவில் உள்துறை அமைச்சர் ஜனாதிபதியை சந்திக்கிறார்.உச்ச நீதிமன்றம் மேமனின் கடைசி மனுவையும் நிராகரிக்கிறது. இதுபோன்ற முன்னெடுப்பை, அவசரத்தை வேறு எந்த வழக்கிலாவது பார்திருக்கிறீர்களா? மராட்டிய அரசு ஒருவித குதூகலத்துடன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்ததை பார்க்க முடிந்தது. ஏன் இத்தனை அவசரம்? மரண தண்டனையை எதிர் நோக்கி ஏறத்தாழ 60 கைதிகள் காத்திருக்கின்றனர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இவருக்கு முன்னர் தண்டனை பெற்றவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். இவரிடம் மாத்திரம் ஏன் இத்தனை அவசரம்? இதை போன்ற அவசரத்தை ஏன் மட்டற்றவர்களிடம் காட்டவில்லை? இன்னும் ஓரிரு நாட்கள் தாமதித்தால் என்ன குறைந்து போய்விட போகிறது?

இத்தகைய செயல்கள் முஸ்லிம்களை ஒருவித கைவிடப்பட்ட மனநிலைக்கு தள்ளுகிறது. விளைவு – இவ்வாறு அணி திரள்வது மூலம் பாதுகாப்பு உணர்வை அடைகின்றனர்.

அப்துல் கலாமின் மரணத்தில் நாடே துக்கம் கொண்டாடியது. அனைத்து தரப்பு மக்களும் பங்கு கொண்டனர். முஸ்லிம்கள் தனித்துவிடப்படவில்லை. அதனால் முஸ்லிம்கள் இவ்வாறு அணிதிரளும் மனநிலைக்கு ஆளாகவில்லை.

ஆனால் யாகூப் மேமனில் மரணத்தினால் ஏற்பட்ட மனநிலை வேறு. இத்தகைய அவசரமும் முன்னெடுப்பும் ஒவ்வொரு முஸ்லிமையும் தேச துரோகிகளாக சிந்திக்க வைக்கிறது. நமக்கு சரியான நீதி கிடைக்காது என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே மிகுந்த அழுத்தத்தில் இருக்கும் முஸ்லிம்களை இத்தகைய செய்கைகள் இன்னும் விளிம்பு நிலைக்கு தள்ளுகின்றன.

நீங்கள் எழுதியிருப்பது போல் யாகூப் மேமனுக்கு மும்பையில் இஸ்லாமிய சமூகம் திரண்டு அளித்த மிகப்பெரிய இறுதி அஞ்சலி டைகர் மாமனுக்கும் தாவூத் இப்ராஹீமுக்கும் அளிக்கப்பட்ட உணர்வுபூர்வமான ஆதரவு கண்டிப்பாக அல்ல. மாறாக அழுத்தத்திற்கு ஆளான சமுகம் வெளிப்படுத்தும் எதிர்வினை. நீங்கள் எழுதியிருப்பது போன்ற எண்ணத்தை பெரும்பான்மை சமுகம் கொள்ளுமானால் – விளைவை எண்ணிப்பார்க்க முடியவில்லை. நிச்சயம் நல்லதுக்கில்லை.

எவ்வளவு தான் குற்றம் செய்திருந்தாலும் அரசின் இத்தகைய நடவடிக்கைகள் குற்றவாளிகளின் மேல் ஒருவித பரிவைத்தான் எற்படுத்துகின்றனவே தவிர , சட்டம் கடமையை செய்தது என்ற எண்ணத்தை அல்ல.

ஏனெனில் இத்தகைய மனநிலையைத்தான் நானும் அடைந்தேன். நான் சந்தித்த மற்றவர்களும் சொன்னார்கள்.
இப்படிக்கு
பாக்கர்.

அன்புள்ள பார்க்கர்,

எனக்கு வந்த கடிதங்களில் இஸ்லாமியப்பெயருடன் எழுதப்பட்ட எவற்றையுமே அச்சேற்றமுடியாது. ஆகவே உங்கள் கடிதம் என்னை நெகிழச்செய்கிறது.

சிலவிஷயங்களை உங்கள் முன்பு வைக்க விரும்புகிறேன். யாகூப் மேமன் தூக்கிலிடப்படுவதற்கு முன்பு நிகழ்ந்த பரபரப்பு என்பது ஊடகங்களால் திட்டமிட்டு செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒன்று. சி.ஏ.பாலன் எழுதிய தூக்குமரநிழலில் என்ற சுயசரிதை தமிழில் முக்கியமானது. அதை வாசித்துப்பாருங்கள். எந்த ஒரு தூக்குத்தண்டனையும் கடைசிநிமிடப் பரபரப்புடன் மட்டுமே நிகழும். ஏனென்றால் இந்தியாவின் சட்ட அமைப்பு அளிக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்ளவே குற்றவாளியின் வழக்கறிஞர்கள் முயல்வார்கள். ஒரு தூக்குத்தண்டனைகூட விலக்கல்ல.

வழக்கறிஞர்களும் மனித உரிமை ஆர்வலரும் கடைசிக்கணத்தில் தண்டனையை நிறுத்திவைக்க சட்டத்தின் இண்டு இடுக்குகளைக்கூட தேடிக் கண்டடைவார்கள். அசாதாரணமான சூழல்களைச் சுட்டிக்காட்டி தடைகளை பெறுவார்கள். புதிய காரணம் சொல்லி கருணை மனு போடுவார்கள். தூக்கிலிடுவதிலுள்ள மிகச்சிறிய நடைமுறைப் பிழையை சுட்டிக்காட்டி தடைவாங்கியிருக்கிறார்கள். அவ்வளவையும் தாண்டி கடைசித்தருணத்தில்தான் தூக்கு உறுதியாகும். தூக்கிலிடும் சிறைக்காவலர்கள்கூட இதையெல்லாம் எதிர்பார்த்தே இருப்பார்கள். இந்த கடைசிக்கண நாடகத்திற்கு இதற்குமுன் நிகழ்ந்த ஒரு தூக்குத்தண்டனை கூட விதிவிலக்கு அல்ல.

பலசமயம் தூக்குத்தண்டனை இவ்வாறான கடைசிகட்ட நடவடிக்கைகள் வழியாக தொடர்ந்து பலமுறை ஒத்திப்போடப்பட்டிருக்கிறது. அவ்வாறு பலமுறை ஒத்திப்போடப்படச் செய்து ஒத்திபோடப்பட்டமையால் குற்றவாளி அடைந்த மன உளைச்சலைக் காரணமாகக் காட்டி இரக்கம் கோரியிருக்கிறார்கள். அதை ஏற்று நீதிமன்றம் தூக்குத்தண்டனையை ரத்து செய்த நிகழ்வுகூட இந்திய நீதித்துறை வரலாற்றில் உண்டு.

ஆகவே யாகூப் மேமனின் வழக்கில் மட்டும் நீதிமன்றம் அசாதாரணமான பிடிவாதமோ அவசரமோ காட்டியது என்பதுபோல கடைந்தெடுத்த பொய்ப்பிரச்சாரம் வேறு இல்லை. எல்லா தூக்குத்தண்டனைகளிலும் நிகழ்வதுதான் அது. அதை இஸ்லாமியருக்கு எதிரான அரசுதந்திரம் என்று மாற்றியது நம் ஊடகங்களின் ஒரு கீழ்மை மிக்க தந்திரம். பாரதிய ஜனதா அரசுக்கு எதிரான நடவடிக்கை என்ற எண்ணத்தில் இந்திய நீதித்துறையையே சிறுமைப்படுத்திவிட்டனர்.

அதிலும் யாகூப் மேமன் சாதாரண குற்றவாளி இல்லை. மும்பை நிழலுலக தாதாவாக விளங்கியவர். தாவூத் இப்ராகீம் இன்னும் கூட இந்தியாவின் பெருநகர்களை கட்டுப்படுத்துகிறார் என்பது உண்மை. பாகிஸ்தானின் உளவமைப்பால் இயக்கப்படுபவர் தாவூத். இன்னமும்கூட ஒரு குண்டுவெடிப்பை நிகழ்த்தக்கூடியவர். இந்தியாவின் இஸ்லாமியத் தீவிரவாத இயக்கங்கள் இன்று டைகர்மேமனையும் யாகூப் மேமனையும் ஆதரித்து உச்சகட்ட பிரச்சாரத்தில் இருக்கின்றன. இந்நிலையில் அரசு அசாதாரணமான சூழ்நிலையை உணர்ந்தால், அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டால் என்ன பிழை?

ஆம், அத்தனைக்கும் மேலாக ஒருவேளை அரசுக்கு வேறுநோக்கம் இருக்கலாம். அது ஒரு செய்தியை எவருக்கேனும் அளிக்க விரும்பியிருக்கலாம். பாகிஸ்தான் அரசுக்கோ, உளவுத்துறைக்கோ. அல்லது வேறு தீவிரவாத அமைப்புகளுக்கோ. அதன் பின்னணியை நாம் அறியப்போவதில்லை. அதற்கான அரசியல் காரணங்கள் உடனடியாக வெளித்தெரியப்போவதுமில்லை.

ஆனால் இதனால் நீதிமன்றத்தால் 20 ஆண்டுக்காலம் விசாரிக்கப்பட்டு பலமுறை தன்னை நிரூபிக்க வாய்ப்பளிக்கப்பட்டு ஐயம்திரிபற நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்ட யாகூப் நிரபராதியோ புனிதரோ ஆவதில்லை. அவர் கொன்றழித்த அப்பாவிகள் முன் அவரது குற்றம் எளிதாக ஆவதுமில்லை. இஸ்லாமியர்களின் உணர்வுகளை நீங்கள் சொல்வதுபோல எடுத்துக்கொள்ளவேண்டுமா அல்லது யாகூப் ‘என்னதான் செய்திருந்தாலும் இஸ்லாமியருக்கு அவர் நிரபராதியே, அவர் விண்ணுலகுக்குச் செல்வார்’ என எழுதும் இஸ்லாமிய இதழ்களை ஆதாரமாகக் கொள்ளவேண்டுமா?

மும்பையில் யாகூப்புக்கு அளிக்கப்பட்ட அந்த எழுச்சி மிக்க நல்லடக்கம் டைகர் மேமனுக்கு உரியது அல்ல, அது வெறும் அச்ச உணர்ச்சியின் வெளிப்பாடு என்கிறீர்கள். தாவூதின் தங்கை ஹசீனா பார்க்கர் இயற்கையாக மரணமடைந்தபோது இதில் பாதியளவுக்கு கூட்டம் கூடியது என்பதை அறிந்திருக்கமாட்டீர்கள். யாகூபின் சவ ஊர்வலத்தில் இந்திய இறையாண்மைக்கும் அரசுக்கும் எதிரான கோஷங்களும் தாவூதையும் டைகரையும் போற்றும் கோஷங்கள்தான் எழுந்தன. அவற்றை பாராட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இந்தியாவில் மிகச்சிறிய அளவில் இருந்த இந்துமதவாதம் இன்று பலமடங்காகப் பெருகிக்கொண்டிருக்கிறது என்பதை சாதாரண இஸ்லாமியர் உணரவேண்டும். என்னைப் பொறுத்தவரை யாகூபின் தூக்கை ஒட்டி இஸ்லாமியர் எழுதியதும் பேசியதும்போல சமீபகாலத்தில் சாமானிய இந்துக்களிடம் ஆழ்ந்த மனக்கசப்பை உருவாக்கிய தருணம் பிறிதொன்றுமில்லை. சாமானியர் உள்ளத்தில் உருவாக்கப்பட்டுள்ள இஸ்லாமியர் இந்தியாவுக்கு எதிரிகள் என்ற எண்ணத்தை மீண்டும் மீண்டும் ஆழமாக நிலைநாட்டுகின்றன இச்செயல்கள்.

‘குண்டுவைத்துக் கொன்று நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்களைக்கூட இவர்கள் கொண்டாடுவார்கள் என்றால் அப்படித்தான் கொல்வோம் என்றுதானே சொல்கிறார்கள்?” இதுதான் இன்று சாமானியனின் குரல். இந்த ஊடகவாதிகளின் போலிக்குரல்களைக் கொண்டு இந்தியமனநிலையைக் கணிக்கமுடியாது. இவர்களின் கூச்சல்கள் உச்சத்தில் இருந்தபோது இந்திய சாமானியன் மோதிக்கு வாக்களித்தான் என்பதை மறக்கவேண்டியதில்லை

மேலும்மேலும் இந்தியச் சாமானியனை இஸ்லாமியர்கள்மேல் அச்சமும் கசப்பும் கொள்ளச்செய்யவேண்டாம் என்பதே இந்திய இடதுசாரிகளிடம், இஸ்லாமியத் தலைவர்களிடம் நான் கோருவது. உண்மையில் எனக்கு அச்சமாக பதற்றமாக இருக்கிறது. ஒவ்வொருவரும் வெறிகொண்டிருக்கிறார்கள். வெறுப்பை மேலும் மேலும் வளர்க்கிறார்கள்.இந்த அச்சத்தையும் பதற்றத்தையும் நான் பகிர்ந்துகொள்ளமுடியவில்லை.

இந்தியாவின் எளியமக்கள் தங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இனியாவது இஸ்லாமியர் உணரவேண்டும். உண்மையில் இந்த பிளவால் இருபக்கமும் மதவாதிகளுக்குத்தான் நன்மை.

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 83
அடுத்த கட்டுரையாகூப் கேள்விகள்