யாகூப் கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

உங்கள் ‘நண்பர்’ அரவிந்தன் கண்ணையன் எழுதிய மறுப்பை வாசித்தீர்களா? அப்துல்கலாம் பற்றி அவர் எழுதியதற்கு நீங்கள் பதிலளிப்பீர்கள் என நினைத்தேன்

செல்வா

அன்புள்ள செல்வா,

இதில் என்ன ஐயம். அவர் நண்பர்தான். யாகூப் மேமனுக்கு ஆதரவாகப் பேசுபவர்களில்

1. தூக்குத்தண்டனை எதிர்ப்பாளர்கள்

2. பொதுவாகவே எப்போதும் அரசு என்னும் அமைப்பை எதிர்க்கும் கலகநோக்குள்ளவர்கள்

3. இந்தியாவின் இன்றைய அரசு இந்துத்துவச் சார்புள்ளது என உண்மையில் நம்புபவர்கள்

ஆகியவர்களின் குரல் எழுவதை புரிந்துகொள்கிறேன். ஜனநாயகத்தில் எல்லாவற்றுக்கும் மாற்றுத்தரப்பு இருக்கலாமே. நான் கடிந்து பேசுவது யாகூப்பை புனிதனாக ஆக்க முயலும் போலிகளைப்பற்றி மட்டுமே. உண்மையான மாற்றுக்குரல்களை கேட்டுத்தெரிந்துகொள்வதுடன் சரி

கலாம் பற்றி அத்தனைபேரும் ஒரே மாதிரி கருத்துச் சொல்லவேண்டுமென நான் எதிர்பார்க்கவில்லை. அரவிந்தன் முன்வைப்பது ஒரு சர்வதேச அளவுகோல். நான் சொல்வது ஏன் கலாம் இந்திய மதிப்பீடுகளுக்கு முக்கியம் என.

என் அணுக்கமான இடதுசாரி நண்பர்கள் பலர் கலாம் மீது மதிப்பில்லாதவர்கள். கலாமை ஓர் இடதுசாரி இங்குள்ள முதலாளித்துவ அரசின் குரலாக நோக்குவதை, நிராகரிப்பதை இயல்பாகவே எடுத்துக்கொள்கிறேன். நான் சொல்வது கலாமை நிராகரித்துவிட்டு ஊழல் அரசியல்வாதிகளுக்கு கொடிபிடிக்கும் போலித்தனம் பற்றியே

ஜெ

*

அன்புள்ள ஜெ

கீழ்க்கண்ட இரு கட்டுரைகள் சமஸ் அவர்களால் எழுதப்பட்டவை. நீங்கள் கோரிய சமநிலை உடைய கட்டுரைகள் இவை

உங்கள் பார்வைக்கு

http://writersamas.blogspot.in/2015/07/blog-post_51.html

http://writersamas.blogspot.in/2015/08/blog-post_6.html

எஸ்

அன்புள்ள எஸ்,

இக்கட்டுரைகளை முன்னரே படித்திருந்தேன். இடதுசாரிநோக்கு கொண்ட ஆனால் சமநிலையான கட்டுரைகள்

ஜெ
*
பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,

வணக்கம்.

மேற்கண்ட தலைப்பில் இன்று (21.018.15) நீங்கள் எழுதியுள்ள கட்டுரையில் நீங்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள்.சமீப காலமாக என்போன்ற பலரின் மனதில் தோன்றிய உள்ளக் குமுறல்களை ஒட்டுமொத்தமாக பிரதிபலித்தது.இதில் உள்ள ஒவ்வொரு வரியிலும் தெறிக்கும் உண்மைகளை நமது நாட்டிற்கு நல்லது வேண்டும் என நினைக்கும் எவராலும் எளிதில் புறந்தள்ள முடியாது.

இந்த போலி அறிவு ஜீவிகளாலும்,ஆர்ப்பாட்டமான,அரைவேக்காட்டு ஊடகங்களாலும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு ஏற்பட்டு வரும் ஊறு கொஞ்ச நஞ்சமல்ல.யாகூப் மேமன் தூக்கிலிடப்படுவதற்கு முந்தைய இரவு இந்த ஊடகங்கள் அடித்த கூத்தை எவராலும் மன்னிக்க முடியாது.நமது ஜனாதிபதி மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை இவர்கள் வாய் கூசாமல் கொச்சை படுத்தினார்கள்.இதற்காக பின் சில ஊடகங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க முனைந்தபோது, பிரஸ் கவுன்சிலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததை எங்கு போய் சொல்ல?.தேசிய நாளிதழ் என்று கொட்டை எழுத்தில் போட்டுக்கொண்டு வரும் செய்தித்தாள் ,மறு நாள் முதல் பக்கத்தில் ஒரு புறம் மறைந்த மேதகு அப்துல் கலாம் அவர்களின் இறுதி ஊர்வல படத்தையும்,மறுபுறம் யாகூப் மேமனின் மரணத்திற்கு கூடிய கும்பலின் படத்தையும் போட்டு ‘புண்ணியம்’ தேடிக்கொண்டது.

இந்த கீழ்த்தர நடவடிக்கைகள் எல்லாம் நீங்கள் கட்டுரையின் இறுதி இரு பத்திகளில் முத்தாய்ப்பாக எழுதியது போல் நாட்டை வெகு சீக்கிரம் கூறு போடவே வழி வகுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

பி.கு. நீங்கள் அடிக்கடி எழுதுவீர்கள் ஒரு சம்பவம் நடந்து அதன் தூசிகள் எல்லாம் அடங்கின பிறகு அதை ஆராய்ந்து காய்தல்,உவத்தல் இன்றி அதைபற்றி எழுதுவதுதான் ஒரு சமூக எழுத்தாளனின் கடமை என்று.அதை மீண்டும் ஒரு முறை மிகச் சரிவர நிறைவேற்றி இருக்கிறீர்கள்.

மிக்க நன்றி.

அன்புடன்,

அ .சேஷகிரி.

அன்புள்ள ஜெ சார்,

இன்றைய யாகூப் கட்டுரை படித்தேன், மிக உக்கிரமாக, ஆழமாக இருந்த முக்கியமான கட்டுரைகளில், ஒன்று என்பதில் சந்தேகமில்லை, என்னுடைய பயமெல்லாம் உங்களை பற்றியது தான், இது போன்ற கட்டுரைகளால், உங்களுக்கு அச்சுறுத்தலோ, தேவையற்ற எதிர்வினைகளோ வரலாம் என அஞ்சுகிறேன், அன்பின் காரணமாகக்கூட இருக்கலாம்.
TAKE CARE SIR.

அன்புடன்
சௌந்தர் .G

அன்புள்ள சௌந்தர்

எனக்கு வந்த கடிதங்களில் நூற்றுக்கும் மேல் இந்த எச்சரிக்கையை மட்டுமே கொண்டவை. எந்த அளவுக்கு அச்சுறுத்தப்பட்டிருக்கிறோம் என எண்ண வருத்தமாக இருக்கிறது. இங்கு இந்தக்குரல் எழாமலே ஆனமைக்கு இந்த அச்சமே முக்கியமான காரணம்போலும்

ஜெ

முந்தைய கட்டுரையாகூப் மேமன் என்னும் தேசநாயகன்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 83