யாகூப் கேள்விகள்

எதிர்பார்த்தது போலவே யாகூப் மேமன் பற்றிய கடிதங்கள். பெரும்பாலானவை தங்களை சட்டவல்லுநர்களாகவும் அரசியல் நுண்ணறிவாளர்களாகவும் நியமித்துக்கொண்டு மயிர்பிளக்க முயல்பவை. இவற்றுக்கு எந்தப் பொருளும் இல்லை. நாம் முதலில் சாதாரண குடிமக்கள். ஊடகங்கள் கொண்டு வரும் செய்திகளை வைத்துக்கொண்டு நம் பொதுப்புத்தியாலும் நீதியுணர்வாலும் முடிவெடுக்க வேண்டியவர்கள். அந்த நிலையில் நின்றுகொண்டு பேசுவதே உசிதமானது. நான் பேசுவது அப்படித்தான். ஒரு பொதுப்புத்திப்பார்வையில் சாமானியனுக்கும் தெரியும் உண்மைகளைப்பற்றி மட்டும்தான்.

கேள்விகள், பதில்கள், கடிதங்கள் என நீட்டிச்செல்ல விரும்பவில்லை. சென்றால் இந்த இணையதளமே ஃபேஸ்புக் ஆகிவிடும். நான் சுடச்சுட இவற்றில் கருத்துச்சொல்லாததும் இதனால்தான். உணர்ச்சி வேகங்கள் அடங்கிய பின்னர் ஒட்டுமொத்தமாக என்ன தோன்றுகிறது என்று பார்க்கலாம் என்பதே என் எண்ணம். அதுவே என் கருத்துக்கள். அவை என்னளவில் தெளிவானவை. எவரும் அவற்றை மேலதிகமாக தெளிவாக்கும் அல்லது மாற்றும் எதையும் சொல்லவில்லை.

முதல்வினா இந்தியாவின் நீதியமைப்பு, அரசு, இங்குள்ள குடிமைச் சமூகத்தின் பொதுமனசாட்சி ஆகியவை முற்றிலும் அறமற்றவை, இஸ்லாமியருக்கு எதிரானவை என்றெல்லாம் நீங்கள் நம்புகிறீர்களா இல்லையா என்பதுதான். அப்படி நம்பக்கூடியவர்களின் கூற்றுக்களுடன் விவாதிக்க ஏதுமில்லை. அப்படி நம்பாமல் இவை எல்லா மானுட அமைப்புகளின் குறைகளுடன் பிழைகளுடன் நம்மிலிருந்து உருவான நமது அமைப்புகள் என்று நம்புகிறீர்கள் என்றால்தான் நான் பேசுவது உங்களுக்குப் பொருளாகும்.

எனக்கு வந்த வினாக்கள் இவை

1. யாகூப் மேமன் நிரபராதி. அவர் நிரபராதி அல்ல குற்றவாளி அல்ல என்பதற்குரிய எந்த சான்றையும் நான் முன்வைக்கவில்லை. ஆகவே என் கட்டுரை பிழையானது

என்ன வேடிக்கை பாருங்கள். இப்படித்தான் இந்த விவாதம் செல்கிறது. யாகூப்பை விசாரணை செய்ய நானோ நீங்களோ நீதிமன்றங்கள் அல்ல. இன்று உலகநாடுகளில் இருப்பவற்றில் ஜனநாயக முறைமைகள் சீராகக் கடைப்பிடிக்கப்படும் வெகு சில நாடுகளில் ஒன்று இந்தியா. இங்குள்ள நீதிமன்றங்களால் மிக நீண்டகால அவகாசம் அளிக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட வழக்கு இது. குற்றவாளி நீதிமன்றத்திலும் சிறையிலும் ‘மிகச் சுதந்திரமாக’ பல்லாண்டுக்காலம் இருந்திருக்கிறார். செய்தியாளர்களிடம் பலமுறை பேசியிருக்கிறார். [அவை அப்போதே செய்தியாகியிருக்கின்றன] மிகச்செலவேறிய திறன் வாய்ந்த வழக்கறிஞர்கள் அவருக்காக வாதாடியிருக்கிறார்கள்.

பலபடிகளாக நடந்த விசாரணையின் இறுதியில் தீர்ப்பு வந்துள்ளது. அந்தத் தீர்ப்பு பிழையானது, அவர் நிரபராதி என்கிறார்கள். இனிமேல் ஃபேஸ்புக்தான் நீதிமன்றமா? இங்குள்ள அரைவேக்காட்டு இதழாளர்கள்தான் எவர் குற்றவாளி எவர் நிரபராதி என தீர்ப்பளிக்கவேண்டுமா? யாகூபின் சவ ஊர்வலத்தை முன்பக்கம் நான்கு பத்திச் செய்தியாக்கி கலாமின் இறுதியூர்வலத்தை நான்காம் பக்கத்துக்குத்தள்ளிய இந்த இதழாளர்கள் கலாமை தூக்கிலிட்டு யாகூப்பை இந்திய ஜனாதிபதி ஆக்கியிருக்கவேண்டும் என்றுதான் வாதிடுவார்கள்.

2 பால்தாக்கரே இறுதி அஞ்சலிக்கும் பெருங்கூட்டம் வந்ததே. தாக்கரே தாவூதை விட கொடியவர்

தாக்கரே இந்து அடிப்படைவாதம், மராட்டிய இனவாதம் பேசியவர். ஆனால் அவர் இந்தியாவின் ஜனநாயக அரசியலில் ஈடுபட்டு அதற்குரிய ஆதரவு வளையம் ஒன்றை உருவாக்கியவர். ஒப்பிடுவதென்றால் அவரை வேண்டுமென்றால் அஸாதுதீன் ஒவைஸியுடன் ஒப்பிடலாம். ஜவஹருல்லாவுடனோ ஜைனுலாபிதீனுடனோ ஒப்பிடலாம். அவர்களுக்கு பெரும்கூட்டம் வருகிறது. அதுதான் ஜனநாயகம்

ஆனால் யாகூப் மேமன் அப்படி அல்ல. அவர் நிழல் உலகத்து ஆள். தீவிரவாதி. பால்தாக்கரேவை நீதிமன்றம் தண்டிக்கவில்லை. கலவரங்களில் அவர் பங்குள்ளவர் என்றால் அப்படி கலவரங்களுக்குக் காரணமாக அமையாத, பங்களிப்பில்லாத அரசியல்வாதிகள் இங்கே மிகச்சிலரே என்பதை மறக்கவேண்டியதில்லை.


3 இந்தியாவில் இந்து தீவிரவாதிகள் தண்டிக்கப்படவில்லை. இந்துக்கள் தண்டிக்கப்படவில்லை

இந்தியாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட எல்லா தீவிரவாதச் செயல்பாடுகளும் நீதிமன்றத்துக்கு முன் வந்துள்ளன. ஆகவேதான் நீங்களும் நாமும் அதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம். குற்றம் சாட்டப்பட்ட அவர்களும் சிறையில் இருந்து நீதிமன்ற விசாரணையைத்தான் சந்திக்கிறார்கள். மும்பை குண்டுவெடிப்பு வழக்கிலேயே இந்துக்கள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்.

பெரும்பாலான தீவிரவாத வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படுவதே வழக்கம். அவர்கள் விடுதலை செய்யப்பட்டால் அப்போது ஆரம்பிப்பார்கள் இந்த மதச்சார்பற்றவர்கள், அவர்கள் தூக்கில் போடப்படவேண்டும் என்று. ஆனால் நீதிமன்றங்கள் தொடர்ந்து இஸ்லாமியத் தீவிரவாதிகளை விடுதலை செய்யும்போது மட்டும் அவர்கள் நிரபராதிகள் என்பதற்கான ஆதாரமாகக் கொள்வார்கள். இந்து தீவிரவாதம் என ஒன்று இருந்தால் அதை எதிர்கொள்வது இஸ்லாமியத் தீவிரவாதத்தை ஆதரிப்பதன் வழியாக அல்ல.

4. அக்கட்டுரையே இஸ்லாமியருக்கு எதிரானது. வன்மத்தை உமிழ்வது

இந்த வரியே நான் முதன்மையாகச் சுட்டும் மனநிலைக்குச் சான்று. இஸ்லாமியத் தீவிரவாதத்தை எதிர்ப்பவர்கள் இந்துவெறியர்கள் என முத்திரையிடப்படுகிறார்கள். இஸ்லாமியத் தீவிரவாதம் எவராலும் எதிர்க்கப்படக் கூடாதது என்றே மெல்ல மெல்ல ஆக்கப்படுகிறது. விளைவாக நடுநிலை இஸ்லாமியர், மிதவாத இஸ்லாமியர் என ஒரு வட்டம் இல்லாமலாகும் நிலையை இங்குள்ள போலி முற்போக்கினரும் கூலி ஊடகங்களும் உருவாக்குகின்றன. மிகமிக ஆபத்தான போக்கு இது.

இந்தியாவில் இஸ்லாமியரும் இந்துக்களும் கொள்ளும் மானசீகமானப் பிளவு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இஸ்லாமியர் தங்களை அநீதிக்கு ஆளானவர்களாக, ஒடுக்கப்பட்டவர்களாக உணர்கிறார்கள். தீவிரவாதம் நோக்கி அவர்களை இழுக்க அந்த உணர்வு திட்டமிட்டு பரப்பப்படுகிறது. இந்திய அரசு, நீதிமன்றம், குடிமைச்சமூகம் ஆகியவற்றை தருணம் கிடைக்கும்போதெல்லாம் தீமையின் உருவமாக சித்தரிக்கும் அத்தனைபேரும் அந்தப்பிரச்சாரத்தின் பகுதிகளே.

பலர் உண்மையில் இஸ்லாமிய மதவெறியை முற்போக்காக , இடதுசாரித்தனமாக மாறுவேடமிட்டு வெளிப்படுத்துகிறார்கள். ஏனென்றால் அவ்வாறு இங்குள்ள அமைப்புகள் மேல் நம்பிக்கையை இழந்தபின் இஸ்லாமியர் செல்வதற்கு தீவிரவாதத்தின் பாதை மட்டுமே எஞ்சியிருக்கிறது.

இங்கு மிதவாத இஸ்லாமியர் இல்லாமலாகும் தோறும் இஸ்லாமிய சமூகம் பொதுச்சமூகத்திலிருந்து அன்னியமாகிறது. அதன் குரலாக ஊடகங்களில் ஒலிக்கும் தீவிரவாத நோக்குள்ளவர்கள் இந்துக்களை அச்சுறுத்தி கசப்படையச்செய்து மேலும் மேலும் அன்னியப்படுத்துகிறார்கள். அப்படி ஒரு மிகப்பெரிய மானசீகமான அன்னியமாதல் நிகழ்ந்த தருணம் யாகூபின் மரணம். உண்மையில் ஆங்கில இதழ்களில் எழுதும் அரைவேக்காட்டு அறிவுஜீவிகளின் தீவிரவாத ஆதரவு போலி மனிதாபிமானம் ஒரு சதவீதம் பேரையாவது ஏற்கச்செய்திருக்குமா என்பதே ஐயத்திற்குரியது.

ஆனால் அது 100 சதவீத இஸ்லாமியரையும் யாகூப் நிரபராதி, இந்துக்களால் கொல்லப்படும் புனிதர் என நம்பவைத்தது. அந்தக்கருத்து அவர்களால் மேடைகளில் முன்வைக்கப்படும்தோறும் இந்துக்களில் 99 சதவீத்தினரும் இஸ்லாமியர் மீதான ஆழமான கசப்பை அடையவே வழிவகுத்தது. யாகூபின் சவ ஊர்வலத்தில் வந்த கூட்டத்தின் ஒட்டுமொத்த விளைவு இதுதான்.நான் கவலைகொள்வது இந்த மாபெரும் பிளவைப்பற்றி மட்டுமே.

முந்தைய கட்டுரையாகூப்பும் இஸ்லாமியரும்- ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைமேமன் -மேலும் கடிதங்கள்