‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 83

பகுதி பன்னிரண்டு : இமையாநீலம் – 8

மதுராவின் ஒவ்வொரு செடியையும் சுபத்திரை அறிந்திருந்தாள். ஒவ்வொரு பறவையும் அவளை அறிந்திருந்தது. அரண்மனையில் தன் மாளிகையில் அவள் இருக்கும் நேரமென்பது இரவில் துயிலும்போது மட்டுமே என்றனர் செவிலியர். இருள் புலரியில் விழித்தெழுந்து படைக்கலப் பயிற்சிக்கு களம் செல்வாள். பின்பு தோளிலேற்றிய அம்பறாத்தூணியுடன் இடக்கையில் வில்லுடன் புரவி மீதேறி குறுங்காட்டுக்குள் அலைவாள். வேட்டையும் கான்விளையாட்டுமென பகல் நிறைப்பாள். இரவெழுந்தபின் படகில் காளிந்தியில் களிப்பாள். நீராடி சொட்டும் உடையுடன் நள்ளிரவில் அரண்மனைக்கு மீள்வாள். இளவரசியருக்குரிய இற்செறிப்பு நெறிகளெதுவும் அவளை தளைக்கவில்லை. அரசகுடியின் முறைமைகள் எதையும் அவள் அறிந்திருக்கவில்லை.

“வேள்விப்புரவிக்கு பெருவழியென ஒன்றில்லை என்றறிக!” என்றார் அவைப்புலவர். “அதன் காலடி படும் இடங்கள் அதற்குரியவை ஆகின்றன. அங்கெழுகின்றன தொடர் பெரும்படைகள். பின்பு அவை அழியாத பெரும்பாதைகள் என்றாகின்றன. இப்புவியில் பாதை கட்டி ஒழுகுபவர் கோடி, பாதை சமைப்பவர் சிலரே. அவர்களையே தெய்வங்கள் அறிந்திருக்கின்றன.” மதுராவிலும் மதுவனத்திலுமென அவள் வளர்ந்தாள். பிற நிலங்களை அவள் விரும்பவில்லை. இளமையில் ஒரு முறை தன் முதற் தமையனின் தேரிலேறி துவாரகைக்கு வந்தாள். அன்று பேருருக் கொண்டு தலைமேல் எழுந்த தோரணவாயிலை முகில்குவை ஒன்று சரிந்து மண்ணில் இறங்கிய வளைவென எண்ணினாள். “அந்த முகில் ஏன் வளைந்திருக்கிறது?” என்று தமையனிடம் கேட்டாள். “அது முகில் அல்ல, வாயில்” என்று அவர் சொன்னார். “அவ்வாயில் வழியாக நம் நிழல்கள் மட்டுமே உள்ளே செல்லக்கூடுமா?” என்றாள். அவள் என்ன கேட்கிறாள் என பலராமர் வியந்து நோக்கினார்.

வெண்பளிங்குப் பெருமாளிகைகள் சூழ்ந்த நகரம் அவளை அச்சுறுத்தியது. தமையனின் கைகளை பற்றிக்கொண்டு விழிகளால் ஒவ்வொரு மாளிகைத் தூணையும் தொட்டுத் தொட்டு வந்தாள். வானிலிருந்து முகில் நிரைகள் புரிசுழல் பாதையில் இறங்கிப் படிந்தவை போலிருந்தன அம்மாளிகைகள். “மூத்தவரே இவை விண்ணிலிருந்து இழிந்தவையா?” என்றாள். “இல்லை, இவை மானுடரால் கட்டப்பட்டவை. யவனரும் சோனகரும் பீதரும் கலிங்கரும் தென்னவரும் இணைந்து எழுப்பியவை” என்று சொல்லி அவள் இடையை ஒற்றைக் கையால் வளைத்து சுழற்றித் தூக்கித் தன் தோளில் அமர்த்திக்கொண்டார் பலராமர். மலைத்த விழிகளுடன் ஒளிரும் அவற்றின் சுவர்களையும் மாடக்குவைகளையும் நோக்கி வந்த சுபத்திரை “இவை இமயத்து உப்புக்கற்களால் கட்டப்பட்டவையா?” என்றாள். “இல்லை. யவன நாட்டு வெண்பளிங்கால் ஆனவை. வேண்டுமென்றால் அருகே சென்று நோக்கு” என்றார் பலராமர்.

“இம்மாளிகைகள் ஏன் நகைக்கின்றன?” என்றாள். திரும்பி நோக்கி வெடித்துச் சிரித்து “ஆம் அந்தத் தூண்களெல்லாம் பல்வரிசை போலிருக்கின்றன” என்றார் பலராமர். “மூத்தவரே, இவை மழை பெய்தால் உருகிச்செல்லுமா?” என்றாள். “மழை பெய்தாலா?” என்று கேட்டபின் சிரித்து “உருகுவதில்லை தங்கையே. இவை உறுதியான கற்கள்” என்றார். தலையசைத்து “இல்லை, இவை உருகி வழிந்தோடிவிடும். நான் நன்கறிவேன்” என்றாள் சுபத்திரை. “எப்படி தெரியும்?” என்றார் பலராமர். “அறிவேன். அரண்மனைக்குச் சென்றபின் இளையவரிடம் கேட்கிறேன்” என்றாள் சுபத்திரை. “கண்மூடினால் இவை நெரிந்து விரிசலிடும் ஒலியைக்கூட கேட்க முடிகிறது மூத்தவரே.”

அரண்மனை வாயிலில் அவளை எதிர்கொண்டு அள்ளி தன் நெஞ்சோடணைத்து தூக்கிக்கொண்ட இளைய யாதவர் “ஏன் என் இளவரசியின் விழிகளில் அச்சம் எஞ்சியிருக்கிறது?” என்றார். “எதிர்வரும் மதகளிற்றை அஞ்சாதவள் இந்நகரை அஞ்சுகிறாள். இது மழையில் உருகிவிடுமாம்” என்றார் பலராமர். “உருகிவிடுமா மூத்தவரே?” என்றாள் சுபத்திரை. குனிந்து புன்னகையுடன் “ஆம் தங்கையே. ஒருநாள் இவை முற்றாக உருகி மறையும். ஒரு சிறுதடம் கூட இங்கு எஞ்சாது” என்றார் நீலன். “அவ்வண்ணமெனில் இவை உப்பால் ஆனவை அல்லவா?” என்றாள் அவள். “ஆம், இவையும் ஒருவகை உப்பே” என்றார் யாதவர்.

அவளை “வருக!” என்று அழைத்துச்சென்று அவளுக்கென அமைக்கப்பட்ட அணிமாளிகையை காட்டினார். அங்கு அவள் நீராட வெண்பளிங்கு சிறுகுளம் இருந்தது. அதனுள் மலர்மணம் நிறைந்த நன்னீர் நிரப்பப்பட்டிருந்தது. பொன்னும், மணியும், பளிங்கும், தந்தமும், சந்தனமும் கொண்டமைத்த களிப்பாவைகள் இருந்தன. மலர்ப்பந்து விளையாட தோழியர் நின்றிருந்தனர். உணவூட்ட தோழியரும் அணி செய்ய ஏவலரும் சூழ்ந்திருந்தனர். அவளோ உப்பரிகைக்குச் சென்று நின்று உச்சி வெயிலில் ஒளிவிட்ட மாளிகைகளை நோக்கி உப்புக் குவியல்கள் இவை என எண்ணிக் கொண்டாள். அங்கிருந்து விழி திருப்பி கீழே அலையடித்த பெருங்கடலை நோக்கினாள். “அன்னையே, இக்கடல் காளிந்தியை விட பெரிதா?” என்றாள். செவிலி புன்னகை செய்து “காளிந்தி சென்றணையும் பெருவெளி இதுதான். அதைப்போன்ற ஒரு நூறு பெரு ஆறுகள் சென்று நிறைந்தாலும் ஒரு துளியும் கூடாது தேங்கிய நீர்ப்பரப்பு” என்றாள்.

நீலத்தொடுவானை நோக்கி விம்மி நின்றபின் “இந்நீர் அருந்துவதற்குரியதா?” என்றாள். “இல்லை என் கண்ணே, வெறும் உப்புவெளி இது” என்றாள் செவிலி. “அந்த உப்பு அலையில் திரண்டு கரையென வந்ததா இந்நகர்?” என்றாள். “இது உப்பென்று எவர் சொன்னார்கள்? இது தூயவெண்பளிங்கில் எழுந்த மாநகர் அல்லவா?” என்றாள் செவிலி. “இளையவர் சொன்னார்” என்றாள் சுபத்திரை. பின்பு நீர்வெளியை நோக்கி நெஞ்சு மறந்து நின்றாள். தொலைவில் நின்ற சூரிய வட்டம் ஒரு பொன்மத்தெனத் தோன்றியது. அது சுழன்று சுழன்று கடைய அலைகள் விளிம்பை நக்கிச் சென்றன. அதில் பிறந்த வெண்நுரையை நோக்கினாள். கடல் கடைந்த வெண்ணையோ உப்பெனப்படுவது? எவர் கடைந்து வழித்துருட்டி வைத்தது இப்பெருநகர்? நீலம் பரந்த விண்ணை நோக்கி அவள் அஞ்சி நின்றாள். கருமுகில் கோத்து அங்கு பெருமழை எழுமெனில் இந்நகர் முற்றிலும் கரைந்து மீண்டும் கடல் சேரும். இங்கு சொல்லெனும் சுவடு மட்டுமே எஞ்சும்.

அஞ்சி திரும்பி ஓடி பாய்ந்து செவிலியை அணைத்து முலைக்குவடுகளில் முகம் மறைத்து “அன்னையே அஞ்சுகிறேன்! நான் அஞ்சுகிறேன்!” என்றாள். “ஏன் என் கண்ணே?” என்றாள் செவிலி. “இந்நீலக்கடலுக்கு அப்பால் எங்கோ வஞ்சமென கருமுகில் எழுகிறது. பெருமழை அதன் கருவில் ஒளிந்திருக்கிறது” என்றாள். “அங்கொரு பெருவாயிலை கண்டேன். அது விண் நோக்கித்திறந்து வருகவென மழையை அழைத்து நிற்கிறது.” அவள் சொல்வதென்ன என்று அறியாமல் “நீலம் இந்நகராளும் அரசரல்லவா?” என்றாள் செவிலி. திகைத்தவள் போல் நிமிர்ந்து அவளை நோக்கி “ஆம், என் இளைய தமையன் அக்கடல் நீலம் கொண்டவர். விண்ணீலம் கொண்டவர்” என்றாள். “நீலத்தால் சூழ்ந்துள்ளது இந்நகரம். நீலனால் ஆளப்படுகிறது” என்றாள் செவிலி. “நீலத்தால் சமைக்கப்பட்டது இது. நீலம் இதை உண்ணுமென்றால் அதுவே ஆகுக! நாம் ஏதறிவோம் கண்ணே?”

அதன் பின் விளக்கவொண்ணா சொல்லொன்று அவளை ஆற்றியது. நீலம் நீலம் என்று சொல்லிக்கொண்டிருந்தாள். நீலமறியும் நீலம். நீலத்துடன் ஆடும் நீலம். பின்பு அவள் துவாரகைக்கு வந்ததே இல்லை. மதுராவுக்குத் திரும்பியபின் தன் அன்னையிடம் சொன்னாள் “அன்னையே, கடல்வெண்ணெயால் அமைந்த நகரம் அது. நீலம் சூழ்ந்தது. நீலத்தால் ஆளப்படுவது.” ரோகிணி “நீ பேசுவது ஒவ்வொன்றும் சூதர் சொல் போலிருக்கிறதடி” என்றாள். “இவற்றை பொருள் கொள்ள உன் இளைய தமையனால் அன்றி பிறரால் இயலாதென்று தோன்றுகிறது.” அவள் “நான் இனி அவரிடம் செல்லப்போவதில்லை. அவர் இங்கு வரட்டும்” என்றாள். துவாரகைக்குச் செல்வதை அவள் தவிர்த்தாள். மும்மாதத்திற்கு ஒருமுறை தந்தையைக் காண வரும் இளைய தமையனை எண்ணி ஒவ்வொரு நாளும் காலை கண்விழிப்பாள். ஒவ்வொரு இரவும் விழி அமைவாள்.

அவர் வந்து இறங்குகையில் புலரிக்குமுன்னரே வந்து நகரின் புறக்காவல் கோட்டத்து எட்டாவது மாடியில் விழிநட்டு நின்றிருப்பாள். அவர் புரவியின் புழுதி விண்ணிலெழுவதைக் கண்டதுமே கூவியபடி பாய்ந்திறங்கி தன் புரவியிலேறி அதை வெண்நாரையென வானில் பறக்கச்செய்து சென்று அவரை எதிர்கொள்வாள். புரவியிலிருந்தே தாவி அவர் தேர்த்தட்டில் ஏறிக் கொள்வாள். அவள் தோளைப்பற்றி “என்ன செய்கிறாய்? நீ என்ன புள்ளா?” என்பார். “இளநீலப் புள்ளென்று உங்களை சொல்கிறார்கள். நான் இணையெனப் பறக்கும் வெண்புள்” என்பாள். “முன்னரே ஒரு வெண்மதவேழம் என்னுடன் இணையாக மண்ணில் ஓடிவருகிறது பெண்ணே” என அவர் நகைப்பார். இருவரும் இணைந்து மதுராவுக்குள் நுழைகையில் ஒவ்வொருமுறையும் அந்நகரம் அதற்கு முந்தைய கணம் வானெழினியில் வரைந்தெடுத்தது போலிருக்கும்.

முதல் தழுவலுக்குப்பிறகு விருந்தாடி விடைபெற்று மீளும் வரை தன் தமையனை எவ்வண்ணமேனும் தொட்டபடியே இருக்கவே அவள் விழைவாள். குடியவை அமர்ந்து அவர் உரையாடுகையில் அவர் அருகமர்ந்து அவர் மேலாடை நுனியை தன் கையால் பற்றியிருப்பாள். அவர் அரியணை அருகே குறுபீடத்திலமர்ந்து அவர் முழங்காலில் ஒரு கை வைத்திருப்பாள். இரவில் அவர் துயில்கையில் அம்மஞ்சத்தருகே அமர்ந்து அவர் கைகளை தன் தோளில் வைத்து முழங்கை அணிந்த கங்கணத்தை சுழற்றிக் கொண்டு இறுதிச் சித்தமும் உருகி துயிலில் விழும் கணம் வரை அவரை உணர்ந்திருப்பாள். விழித்தெழுகையில் அவர் தொடுகையை உணர அவள் விழைவாள் என அவர் அறிந்திருந்தார். செவிலியரால் கொண்டு செல்லப்பட்டு தன் மஞ்சத்தில் துயின்று முதற்புள் குரல் கேட்டு அவள் விழிக்கையில் தன்னருகே புன்னகையுடன் அமர்ந்திருக்கும் தமையனையே வானெனக் காண்பாள்.

“மூத்தவரே, இன்று நானொரு கனவு கண்டேன்” என்று சொல்லி நகைத்தபடி எழுந்து அவர் கைகளை பற்றிக்கொண்டு சொல்லத்தொடங்குவாள். கனவுகளில் அவள் உலகில் மானுடரென பிறஎவரும் எப்போதும் வந்ததில்லை. விழிதிறந்த முதற்கணம் தெரிவது அவர் புன்னகைப் பெருமலர்முகம் என்றால் அதற்கு நிகரென பிறிதொரு பேரின்பம் மண்ணிலில்லை என்று அறிந்திருந்தாள். “மூத்தவரே, ஆழியும் வெண்சங்குமேந்தி நீங்கள் நின்றிருக்கும் பேராலயம் ஒன்றை கண்டேன். அங்குள சிற்பங்கள் அனைத்தும் உயிர் கொண்டிருந்தன. சுவர்கள் தோலதிரும் உயிர்ப்புடனிருந்தன. உங்கள் விழிகளோ இரு நீலச்சுடரென கருவறைக்குள் எரிந்தன” என்றாள். “நீ அங்கு ஒரு சிற்பமாக இருந்தாயா?” என்றார். “ஆம், நானறிந்த அனைவரும் அங்கு சிற்பமென இருந்தனர். அன்னை அங்கே சுரபி என்னும் ஆயர்தெய்வமாக இருகைகளிலும் ஆக்களைப் பற்றி இடையில் பாற்குடம் தளும்ப நின்றிருந்தாள்.”

“ஆனால் நான் வெண்பறவையாக சிற்பங்கள் நடுவே சிறகுரச பறந்தேன்” என்றபின் திகைத்து “மூத்தவரே, நான் அப்போது ராமா என்றழைத்துக் கொண்டிருந்தேன்” என்றாள். அவர் புன்னகைத்து “கோசலத்து ராமனை அழைத்தாய் போலும். அவனும் என்னைப்போல் நீலன். எனவே அவனே நான்” என்றார். “என்றும் அவன் சொல்லில் அமைந்திருந்தேன். இன்று இவ்வண்ணம் இங்கு எழுந்தேன்.” மூச்சிரைக்க அவள் சொன்னாள் “நான் அங்கு சூழப்பறந்தேன். பின்பு சென்று இளவல் பரதன் வில்லேந்தி அமர்ந்திருந்த இணைக்கருவறைக்குள் சென்றேன்.” மீண்டும் அவன் கைகளை பற்றிக்கொண்டு “அங்கு கருவறையில் சிலையென நின்று நான் வெளியே நோக்கிக்கொண்டிருந்தேன். பெருந்தூண்கள் நிரைவகுத்த நிழலும் ஒளியும் ஆடிய நீள்தாழ்வாரத்தில் கிரௌஞ்சங்கள் உங்கள் பெயர் சொல்லி கூவிக்கொண்டிருந்தன” என்றாள். “விந்தை! அவை கண்ணா என அழைத்தன.”

“நீ ஏன் துவாரகைக்கு வருவதில்லை?” என்று இளையவர் கேட்டார். “இங்கு மதுராவில் எழுந்தருளும் உங்களையே நான் விழைகிறேன். இங்கிருக்கும் நீங்கள் ஏறுதழுவும் யாதவ இளையோன். அங்கோ மணியொளிரும் முடி சூடி அமர்ந்திருக்கும் மாமன்னர். அது நீங்கள் உலவும் வானம், இது நீங்கள் வந்தமரும் சிறு மலர்க்கிளை. எந்தையே, இங்கேயே உங்களை காண விழைகிறேன்” என்றாள் சுபத்திரை. “ஆம், இக்கிளையில் பூத்த அழகிய வெண்மலர் நீ” என்று சொல்லி அவள் காதோர குறுநிரையை கையால் பற்றி சுழற்றி இறுக்க “ஐயோ” என்று சொல்லி அவள் கைகளை கட்டிக்கொண்டாள். “இன்று நாம் என்ன செய்யவிருக்கிறோம்? யமுனையில் ஆடுவோம் அல்லவா?” அவர் அவள் மூக்கைப்பிடித்து இழுத்து “நாம் சிறுதோணியில் மதுவனம் செல்வோம். பாட்டனாரை கண்டுவருவோம்” என்றார். “ஆம்” என்று அவள் எழுந்து அவர் தோள்களை பற்றிக்கொண்டாள்.

ரோகிணி “என்ன செய்கிறாய் மாயனே? இவள் உன்னையன்றி பிறிதிலாதிருக்கிறாளே?” என்றாள். “உன் செய்திகளை மட்டுமே கேட்கிறாள். நீ கற்ற நூலன்றி பிறிதொன்றை கற்காமலிருக்கிறாள். இவள் கனவில் பிறிதொரு முகம் எழுவதே இல்லை என்கிறாள்.” அருகே இருந்த தேவகி சிரித்தபடி “தங்கையர் அப்படி தமையனின் நிழலாக அமைவதுண்டு. உளம் கவர்ந்த ஒருவன் வந்து கைபற்றும் கணம் வரைதான் அது” என்றாள். தூண்பற்றிச் சுழன்று விளையாடிக்கொண்டிருந்த சுபத்திரை சீற்றத்துடன் “அன்னையே, வீண்பேச்சு வேண்டியதில்லை. பிறிதொரு ஆண்மகன் என் கைபற்றப் போவதில்லை” என்றாள். “பின் கன்னித் தவம் கொள்ளப்போகிறாயா என்ன? எங்கோ உனக்குரிய ஆண்மகன் பிறந்திருப்பானல்லவா?” என்றாள் தேவகி.

“அதையே நான் அஞ்சுகிறேன் இளையவளே” என்றாள் ரோகிணி. “இவள் உளம் நிறைக்க வேண்டுமென்றால் உன் இளைய மைந்தனைப்போல ஆயிரம் விழிகளும் பல்லாயிரம் கைகளும் கொண்டு இவளுடன் ஆடும் ஒருவனே வந்தாக வேண்டும்” என்றபின் நகைத்து “இவனே பிறிதொரு வடிவு கொண்டு வராமல் அது நிகழப்போவதில்லை” என்றாள். இளைய யாதவர் சிரித்தபடி “என் ஆடி நிழலொன்று இவளை அணுகட்டும்” என்றார். “அவ்வண்ணமெனில் நான் ஏழுமுறை அவனை தேர்வேன். முற்றிலும் நீங்களே என்றான ஒருவன் என்றாலொழிய என் கை பற்ற ஒப்பமாட்டேன்” என்றாள் சுபத்திரை. “ஆடி ஒன்று வாங்கவேண்டும் அவ்வளவுதானே?” என்று தேவகி நகைக்க “அந்த ஆடிக்குள் நான் புகுந்து கொள்வேன். என் பாவையையே அவ்விளையோன் மணப்பான். நான் ஒளிந்திருந்து நோக்கி நகைப்பேன்” என்றாள் சுபத்திரை.

ஆவணி மாதத்து ஏறுதழுவலுக்கு இளையவர் வந்திருந்தார். அவரைக்காண நகரைச் சூழ்ந்திருந்த யாதவ ஊர்களிலிருந்தெல்லாம் திரண்டு வந்த மக்கள் களம் நிறைத்து முகம் பேரலையென கொந்தளித்தனர். கொம்பு கூர்த்து மூச்சு சீறி மண்புரட்டி எதிர்வந்த பன்னிரு வெண்களிறுகளை வென்று அவர் கை தூக்கி ஆர்ப்பரித்தார். நான்கு களிறுகளை வென்று அவருக்கு நிகரென அவள் நின்றாள். “இளையவள்! கொற்றவை!” என்று ஆர்ப்பரித்தனர் மக்கள். உண்டாட்டு முடிந்து துவாரகைக்கு கிளம்புகையில் “இளையவளே, என்னுடன் வருக!” என்றார். “சென்று வாருங்கள் மூத்தவரே. இங்கு இருப்பினும் நான் உங்களுடனே வாழ்கிறேன் அல்லவா?” என்றாள் சுபத்திரை. “இம்முறை நீ துவாரகையில் இருந்தாக வேண்டும் சுபத்திரை” என்று சொன்னபோது அவர் விழிகளை நோக்கி ஒரு கணம் எண்ணி “ஆணை” என்றாள் சுபத்திரை.

உஜ்ஜயினி வரை நீர்வழியில் வந்து அங்கு ஒருநாள் தங்கி பாலைப்பெருநிலம் கடந்து துவாரகை நோக்கி சென்றபோது அவ்வழியை புதிதென மீண்டும் கண்டாள். மண்டபங்கள் எழுந்திருந்தன. சுனைகள் தோண்டப்பட்டிருந்தன. வணிகர் நிரை மும்மடங்கு பெருகியிருந்தது. நகர்முன் எழுந்த பெருந்தோரணவாயிலை நோக்கியபோது தொலைவில் அது ஒரு சிறு கணையாழி என மணலில் கிடப்பதை கண்டாள். நகர் தெருக்கள் வழியாக செல்லும்போது “இளையவரே, இந்நகரை முதலில் பார்த்தபோது இது உப்பாலானதா என்று வினவினேன், நினைவுள்ளதா?” என்றாள். “ஆம், உப்பே என்று உரைத்தேன் அல்லவா?” என்றார் இளைய யாதவர். “இன்று இது கற்பூரத்தால் ஆனதென்று தோன்றுகிறது” என்று அவள் சொல்ல “ஆம். ஒவ்வொரு கணமும் காற்றில் கரைகிறது” என்றார்.

“ஏன் அப்படி எண்ணினேன் என்று நூறு முறை எனக்குள் வினவிக்கொண்டு விட்டேன் மூத்தவரே. இது நிகரற்றதாக உள்ளது, மானுடத்திறனால் அமைந்ததாக அல்ல மானுட விழைவின் உச்சமாக தன்னை காட்டுகிறது. நனவென எண்ணக்கூடவில்லை. பெரும் கனவென படுகிறது. கலைந்துவிடுமென்ற அச்சமே கனவை பேரழகு கொண்டதாக ஆக்குகிறது” என்றாள் சுபத்திரை. இளைய யாதவர் புன்னகைத்து “கனவென அல்லாத ஏதுமில்லை இப்புவியில் என்று வேதாந்திகள் உரைப்பதுண்டு. நான் ஒரு நூலை உனக்கு இப்போது பாடம் சொல்லலாம் என நினைக்கிறேன்” என்றார். “ஓடும் தேரிலா?” என்றாள் அவள். “ஆம், தேரில் வகுப்பெடுப்பதே எனக்கு உகந்தது என நினைக்கிறேன். புரவியோட்டும்போதே என்னை முழுமையாக உணர்கிறேன்” என்றார். “அய்யோ, வேண்டாம். குளம்படித்தாளத்துடன் நூல் கற்றால் அதை ஓடிக்கொண்டுதான் நினைவுகூரவேண்டும்” என அவள் நகைத்தாள்.

துவாரகையின் மாளிகையில் ஒவ்வொரு கணமும் அவள் அமைதியை இழந்திருந்தாள். அதன் பேரவைக்கூடத்தில் சென்று இளைய யாதவரின் அருகமர அவள் உளம் கூடவில்லை. அதன் தெருக்கள் அவளை கவரவில்லை. அதன் துறைமுகத்துக்கு ஒரு முறைக்கு மேல் அவள் செல்லவும் இல்லை. பெரும் பாலை நிலமும் எவரோ களைந்திட்டுச் சென்ற செம்பட்டாடை போல கிடந்தது. துவாரகையின் சூதர்சாலைகளை மட்டுமே அவள் விழைந்தாள். அங்கு அவள் தன் தமையனைப் பற்றி எழுதப்பட்ட காவியங்களை மட்டுமே பயின்றாள். அச்சொற்களிலெழுந்த எண்வகை நிலங்களின் எட்டு திருமகள்களின் அழகில் தன்னை ஆழ்த்திக் கொண்டாள். எட்டு முகம் கொண்டு எழுந்தருளிய தன் இறைவன் ஒன்பதாவது அழகு முகத்தை தனக்கு அளித்ததாக நினைத்தாள்.

சூதர் அவரை சொல்லித்தீரவில்லை என்று கண்டாள். அவரை சொல்பவரெல்லாம் பெண்ணென்று ஆகும் விந்தையென்ன என்று எண்ணி மாய்ந்தாள். சொல்லச் சொல்ல இனிமை கொண்டன சொற்கள். நவில்தொறும் எழுந்தது நூல்நயம். ஒவ்வொரு வாயிலாக மூடி சூழ்ந்திருந்த புறவுலகிலிருந்து அவள் அகன்று சென்றாள். சொல்லால் அமைந்த மரங்கள் சொல்வானத்துக்குக் கீழே சொல்மண்ணின் மேலெழுந்து சொல்மலர்களைச்சூடி நின்ற வெளியில் சொல்லேயாக பறந்தன புட்கள். அவரன்றி பிறிதேதும் இலாத வெளியில் இருந்தாள். அப்போது அவள் வாயிலை வந்து முட்டி நுழைந்து அழைத்தார் யாதவரின் இளமைத்தோழரான அமைச்சர் ஸ்ரீதமர். “இளவரசி தங்களை சித்தமாகச் சொன்னார் இளையவர். நாளை காலை முதல் நாழிகையில் புரவியில் அவருடன் கிளம்பி அவந்தி நாட்டுக்குச் செல்லவேண்டுமென்று ஆணையிட்டுள்ளார்” என்றார்.

முந்தைய கட்டுரையாகூப் கடிதங்கள்
அடுத்த கட்டுரையாகூப்பும் இஸ்லாமியரும்- ஒரு கடிதம்