‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 82

பகுதி பன்னிரண்டு : இமையாநீலம் – 7

கம்சனின் சிறையிலிருந்த பன்னிரண்டு வருடங்கள் வசுதேவர் ரோகிணியை ஒருமுறையேனும் சந்திக்கவில்லை. அவள் வயிற்றில் பிறந்த வெண்ணிற மைந்தன் இளமையிலேயே பெருந்தோள் கொண்டு வளர்வதை சிறையிலிருந்து கேட்டு அகவிழியால் சித்திரம் எழுதிக்கொண்டார். தோள்தொட்டணைத்து உச்சி முகர்ந்து மகிழ்ந்தார். கம்சன் கொல்லப்பட்டு மதுராபுரி விடுதலைபெற்று அவர் சிறைமீண்டு வெளியே வந்தபோது கல்வாயிலில் உடலெங்கும் குருதி வழிய நின்ற இருமைந்தரையும் கண்டு இரு கைகளையும் விரித்தபடி அணுகி மெய்தளர்ந்து அவர்கள் கால்களில் விழுந்தார். பின்பு விழித்துக் கொண்டபோது அவர் கண்டது ஐராவதத்தின் துதிக்கை போன்ற இரு கைகளால் தன்னை ஏந்தி எடுத்துச் செல்லும் முதல் மகனை.

விழிதூக்கி அவன் கண்களை நோக்கி “மைந்தா நீயா?” என்றபடி மெலிந்த கைகளால் அவன் தோளை தொட்டார். யானை மருப்பை வருடியது போல உணர்ந்தார். இத்தனை இறுகிய பெருந்தோள்களுடன் இளமைந்தன் ஒருவன் இருக்க முடியுமா என்று வியந்தார். இவன் என் மகன் இவன் என் மகன் என எழுந்த நெஞ்சை கண்பட்டுவிடும் என்ற எண்ணத்தால் அடக்கி பற்களை இறுகக் கடித்தார். விம்மி எழுந்த அழுகை இதழ்களில் அதிர்ந்து வெளியேறியது. நூறு நெடுமூச்சுகளின் வழியாக தன்னை தளர்த்திக்கொண்டார். அன்றும் தொடர்ந்த சில மாதங்களும் எப்போதும் அவன் கைவளைப்பிற்குள் இருப்பதாகவே உணர்ந்தார். மைந்தனை ராமன் என பிறர் அழைக்க அவர் பலன் என்றே எப்போதும் சொன்னார்.

ரோகிணியை அவர் எண்ணவேயில்லை, மைந்தரையே உளம் சூழ்ந்திருந்தார். மதுவனத்திலிருந்து வந்த படகில் பலராமனின் அன்னை மதுராவை அடைந்த செய்தி அவர் பின்னுச்சிவேளை இளந்துயிலிலிருந்தபோது அமைச்சர் ஸ்ரீதமரால் கொண்டுவரப்பட்டது. அப்போதுதான் தன் முதல் மணத்துணைவியை அவர் நினைவுகூர்ந்தார். புன்னகைத்தபடி “முத்துக்களின் ஒளியில் சிப்பியை மறந்துவிட்டேன், நான் எளிய வணிகன்” என்றார். ஸ்ரீதமர் புன்னகைத்து “சிப்பியின் ஒளிமிக்க தசையையே முத்து என்கிறார்கள் அரசே” என்றார். “ஆம்” என்று நகைத்தபடி தன்மேலாடையை எடுத்துச்சூடி முகம் கழுவச்சென்றார். அங்கு ஆடியில் தன் முகம் நோக்குகையில் முதல்முறையாக முதுமையை உணர்ந்தார். தாடி நரையோடி நீண்டிருந்தது. எண்ணியவை ஏங்கியவை கைவிட்டவை கடந்துசென்றவை அனைத்தும் வரிகளென முகத்தில் பரவியிருந்தன.

நடுங்கும் காலடிகளுடன் படியிறங்கி முற்றத்தில் நின்ற தேரில் ஏறி “படித்துறைக்கு விரைக!” என்றார். எரிந்தும் இடிந்தும் பழுதடைந்த மதுராவை யாதவ வீரர்களும் யவனத்தச்சர்களும் செப்பனிட்டுக்கொண்டிருந்தனர். உடைந்தும் சிதைந்தும் கிடந்த மரப்பலகைகளின் மேலும் சட்டங்களின் மேலும் சகடங்கள் ஏறி இறங்கிச் சென்றன. தேரில் நின்று ஒவ்வொரு கணமும் குளிர்ந்த அலையாக பின்னோக்கிச்செல்ல ரோகிணியை தன் நினைவின் ஆழத்திலிருந்து மீட்டெடுத்தார். இளமகளாக தன் கைபிடித்து அவள் அருகணைந்த முதல் நாளை. அன்றறிந்த நாணம் நடுங்கும் அவள் உடலை. அதிலூறிய காமத்தின் மந்தண நறுமணங்களை. பிறிதொருவர் இலாதபொழுது செவியில் இதழ்தொட்டு அவள் கூறிய சிறு மென்சொற்களை. அவ்வுணர்வுக்கு ஒலி எழுந்ததென வெளிப்படும் மூச்சை. அவர் மட்டுமே கேட்ட சில ஒலிகளை.

துறைமேடைக்குச் சென்று இறங்கியபோது அவர் அழுது கொண்டிருந்தார். ஏவலன் அவர் தோள்களை மெல்ல தாங்கி விழாது பற்றினான். அலை ஒலியோடு தரைதழுவிச் சென்ற காளிந்தியின் இருள்நீலத்தை நோக்கிக் கொண்டிருந்தார். காலமில்லா வெளியில் எங்கென்று அறியாது நின்றிருந்தார். தொலைவிலென. முரசோசை கேட்டதும் துறைமேடை உயிர் கொண்டு எழுந்தது. காவல்மாடத்தின் உச்சியிலிருந்த பெருமுரசம் முழங்கியது. கொம்புகள் பிளிறி வருக என்றன. மலரில் வந்தணையும் பட்டாம்பூச்சியென இரு வண்ணப்பாய்கள் காற்றில் துடிக்க மெல்ல அருகுசேர்ந்தது அணித்தோணி. “அதுதான் அரசே” என்றார் ஸ்ரீதமர். “ஆம்” என்றார் வசுதேவர். “அதுதான் என பார்க்கும் முன்னரே உள்ளம் அறிந்துவிட்டது.” அவரது உளநடுக்கம் தாடியின் அசைவில் வெளிப்பட்டது.

படகின் உள்ளறைக்கதவு திறக்க மங்கலத் தாலத்துடன் அணிச்சேடி ஒருத்தி வெளிப்பட்டாள். தயங்கும் வாய் ஒன்று இதழ்பிரிந்து அறியாச்சொல் வெளிப்படும் தருணமென அவ்வறை வாயிலில் ரோகிணி தோன்றினாள். முகில் விலகி எழும் நிலவு போல் வெண்ணிறம் கொண்ட உடல், பொன்னூல் பின்னல் மேவிய மஞ்சள் பட்டாடை. கருங்குழல் புரிகள் சூழ்ந்த வட்ட வெண்முகம். எஞ்சும் கனவுகள் நிறைந்த நீல நீள்விழிகள். அவள் தன் நெடிய காலெடுத்து வைத்து படகு வளைவுக்கு வந்து நடைபாதை நீண்டு அணைவதற்காக காத்து நின்றபோது திரும்பி அரண்மனைக்கு ஓடிவிட வேண்டுமென்ற எண்ணத்தை வசுதேவர் அடைந்தார். வெண்சுதையில் வடித்த கொற்றவை போலிருந்தாள். ஆடைக்குள் மதகளிற்றின் துதிக்கைகள் என எழுந்த அவள் பருத்த தொடைகளை இடையின் இறுகிய அசைவை கண்டார். அவளை அவ்வண்ணமே அவர் அறிந்திருந்தார் என்றாலும் நெடுங்காலத் தனிமையில் அவரது அச்சமும் விழைவும் கலந்து அவளுடலை முழுமையாகவே மாற்றி புனைந்து கொண்டிருந்தது.

மணச்சொல்லாடல் நிகழ்ந்து கொண்டிருந்தபோது சூதன் ஒருவன் அவரிடம் சொன்னான். “இளவரசே, பெண்ணெனப் பிறந்ததனால் மட்டுமே கதாயுதம் எடுக்க முடியாமல் போனவர் யாதவ இளவரசி. நீள்வெண் கரங்களும் திரண்ட பெருந்தோள்களும் கொண்ட நெடிய உருவினர்.” அச்சொல் அன்று அவரது இளமையின் ஆணவத்திற்கு அறைகூவலாகவே ஒலித்தது. அவ்வண்ணமெனில் அவளையே கொள்வேனென்று எழுந்தது அகம். கம்சனின் ஒப்புதல் பெற்று தனிச்சிறு படகில் சென்று சுஷமம் என்ற பெயர் கொண்ட அவளது ஆயர்பாடியை அடைந்தார். யமுனைப் படித்துறையில் இறங்கி மேலேறிச்செல்லும் மரப்படிகளில் ஏறி அங்கு நின்ற பெருமருதத்தின் அடிமரத்தின் கீழ் நின்று நோக்கியபோது அப்பால் இரு வெண்காளைகளைக் கட்டிய கயிற்றை ஒற்றைக் கையால் பற்றி இடையில் பால்நிறைந்த பெருங்கலத்துடன் செல்லும் அவளை கண்டார்.

அக்காளைகளிரண்டும் மூக்கணைக் கயிறுகள் இடப்படாதவை. அவற்றில் ஒன்று அவரது மணமறிந்து சற்றே தலைதிரும்ப ஒரு கையால் அதை இழுத்து நிறுத்தினாள். அது தலை திருப்பி மூச்சிரைத்து உடல்வளைந்து நின்று வால்சுழற்றி சிறுநீர் கழித்தபின் கால் மாற்றி வைத்தது. இடையிலிருந்த பாற்குடத்தின் ஒரு துளியேனும் ததும்பவில்லை. அப்போதுதான் அவருள் அச்சம் எழுந்தது. திரும்பி படியிறங்கி படகேறி மீண்டுவிட வேண்டுமென்று எண்ணினார். அவ்வெண்ணத்திற்கு மேலென பெருவிழைவு அலையடித்து மூடியது. இப்பெண்ணை இங்கு தவிர்த்தால் எஞ்சிய வாழ்நாளெல்லாம் இவளுக்கென ஏங்கி அழிவோம் என்று எண்ணினார். இவள் முன் ஆணென தருக்கி எழ முடியாமலிருக்கலாம். இவள் கால்களில் அடைக்கலமென்றாகி நின்றால் முழு அருளும் பெற்று உய்யவும் கூடலாம். பிறிதொரு வழியும் எனக்கில்லை. இவளுக்குப் பின்னாலிருந்து என் சித்தம் ஒருபோதும் விலகப்போவதில்லை.

அவள் சென்ற பாதையில் தயங்கும் காலடிகளை வைத்து நுழைந்தார். அவள் சென்று நுழைந்த ஆயர் இல்லத்து வாயிலில் சென்று நின்று “அன்னையே” என்றார். தொழுவத்தில் ஒற்றைக்கையால் காளைகளை தறியில் சுற்றிக் கட்டிவிட்டு மறுகையால் பாற்குடத்தைச் சுழற்றி மேடை மேல் வைத்துக்கொண்டிருந்த அவள் திரும்பி நோக்கி கன்னத்தில் சரிந்த கார்நெடுங்கூந்தலை ஒதுக்கி “எவர்?” என்றாள். “நான் மதுராபுரியின் கம்சரின் அமைச்சன்” என்ற வசுதேவர் “மதுவனத்து சூரசேனரின் மைந்தன்” என தொடர்ந்தார். அவள் முகத்தில் நாணம் எழவில்லை. கண்களில் மட்டும் மென்னகை எழுந்தது. “தாங்களா? வருக!” என்றபடி மேலாடை திருத்தியமைத்து கீழாடையின் மடிப்புகளை சற்றே நீவி சீரமைத்தபடி வெளிவந்து திண்ணையில் நின்றாள். “வந்து அமர்க! தந்தையை வரச்சொல்கிறேன்” என்றாள்.

“நான்…” என்று சொல்லத்தொடங்கியபின் மீண்டும் திரும்பிச் சென்றுவிட வேண்டும் என்ற உணர்வை வசுதேவர் அடைந்தார். “அமருங்கள் அமைச்சரே” என்றாள் ரோகிணி. தன் மணத்தூது அங்கு சென்றடைந்த செய்தியை அவள் அறிந்திருக்கவில்லையோ என எண்னினார். ஆனால் மறுகணமே அவள் “தங்கள் மணத்தூது வந்தது. எங்கள் ஒப்புதலை தந்தை ஓலை வழியாக தெரிவித்துவிட்டார் என்றறிந்தேன்” என்றாள். அவள் விழிகளை நிமிர்ந்து நோக்க அஞ்சி தலை குனிந்து “இளவரசி, என்னைக் கண்டபின்னும் அம்முடிவை நீட்டிக்க முடியுமா உங்களால்?” என்றார். “ஏன்?” என்று அவள் வியந்தாள். “இது என் தந்தை எடுத்த முடிவல்லவா? அவருக்கு என்றும் கடன் பட்டவளல்லவா நான்?” வசுதேவர் தலை நிமிர்ந்து “எனது தலை உங்கள் தோளளவுக்கே உள்ளது இளவரசி” என்றார்.

“உங்கள் முன் என் தலை என்றும் தாழ்ந்தே இருக்கும் அமைச்சரே” என்றாள் ரோகிணி. அச்சொல்லில் இருந்த செதுக்கி எடுத்த முழுமை அவரை வியப்புறச் செய்தது. விழிதூக்கி நகை நிறைந்த அவள் முகத்தை நோக்கினார். “நான் அருளப்பட்டவனானேன்” என்றார். இதழ்கள் நடுவே வெண்பற்கள் ஒளிர “அவ்வண்ணமே நானும்” என்று சொல்லி “அமர்க!” என்றாள் அவள். பின்னர் மங்கலநன்னாளில் மூதாதையர் சொல்நின்று குலத்தவர் சூழ அவள் கையை பற்றுகையில் பொற்தேர் ஒன்றில் ஏறிய விண்ணவன் போல் தன்னை உணர்ந்தார். அகத்தறையில் அவள் உடலோடு அணுகி பிறிதிலாதிருக்கையில் அவள் செவியில் சொன்னார் “உன்னுடனிருக்கையில் நான் இந்திரன்.” காமத்தால் சிவந்த விழிகளோடு “ஏன்?” என்று அவள் கேட்டாள். “வெண்யானை மருப்பமர்கிறேன்” என்றார். அவர் தோளில் ஓங்கி அறைந்து “காமதேனு ஒன்றுக்காக காத்திருக்கிறீர்கள் போலும்” என அவள் நகைத்தாள்.

உண்மையில் அவ்வெண்ணம் உள்ளே எங்கோ எழுந்திருந்தது. இவள் எனையாளும் பெண்ணரசி. நான் ஆளும் பெண்ணொருத்தி எனக்குத் தேவை என்று அத்தனை அண்மையில் தன் உள்ளத்தை தொடரும் உளம் அவளுடையது என்றெண்ணியபோது அச்சம் மீதூறியது. தேவகியை அவர் மணந்தபோது அவள் விழிகளை நோக்காது தலைகுனிந்து “இது எனையாளும் அரசரின் ஆணை, ரோகிணி. நான் சொல்வதற்கேதுமில்லை” என்றார். அவள் அவர் தோளில் கை வைத்து மறுகையால் அவர் முகத்தை தூக்கி “நன்று, காமதேனுவுக்காக விரும்பினீர்களல்லவா?” என்றாள். திடுக்கிட்டு அவள் விழிகளை சந்தித்து அங்கிருந்த இனிய புன்னகையைக் கண்டு மலர்ந்து அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து “என் மீது சினம் கொள்கிறாயா?” என்றார். “இல்லை, நீங்கள் நிறைவுற்றீர்கள் என்றால் அது எனக்கு மகிழ்வளிப்பதல்லவா?” என்றாள்.

பின்பு அவர் சிறையுண்டபோது அவளுக்கு ஒரு சொல்லை அனுப்பினார். “அச்சமும் சிறுமதியும் கொண்டதனால் உன்னுடன் நிகர் நிற்க இயலாதவனாக இதுநாள் வரை உணர்ந்தேன் தேவி. இன்று சிறைப்பட்டு இத்துயர் மலைகளைத் தாங்குகையில் இங்குள்ள தனிமை வழியாக முட்கள் கூர்ந்த இருளினூடாக உன்னை அணுகுகிறேன். எனையாளும் அரசி, என்றேனும் உனை காணும்போது உன்முன் தலை நிமிர்ந்து நிற்பேன். அருள்க!” மறுமொழியாக அவள் வெண்மலர் ஒன்றை வைத்துச் சுருட்டிய தாழைமடல் ஓலையை அவருக்கு அனுப்பினாள். “என்னுடன் தங்கள் முகம் கொண்டு வந்த இளமைந்தன் இருக்கிறான்.” பலராமனை நேரில் கண்டபோது என்றும் அவருள்ளிருந்த பொன்றாப் பெருவிழைவு உருவெடுத்து நின்றதுபோல் உணர்ந்தார். அவர் முகம், அவள் கொண்ட பேருடல். அவனுடைய பெருந்தோள்களை கையால் தழுவியபடி சொன்னார் “மறுபிறவியில் நான் அடைய விழைந்த உருவில் இருக்கிறாய் மைந்தா. உன் வழியாக நான் நிறைவுற்றவனானேன்.”

நடைபாலத்தில் இறங்கி அவரை அணுகிய ரோகிணி விழிநீர் சோர இரு கை கூப்பி நெஞ்சமர்த்தி நோக்கி நின்றாள். மெலிந்த கைகள் நடுங்க விழிநீர்த்துளிகள் ஒளிர்ந்து நிற்க வசுதேவர் நின்றார். காற்று பட்டு நாவான இலைப்புதர்வெளியென வாழ்த்தொலிகள் சூழ்ந்து எழுந்து அவர்களை தனிமை கொள்ளச் செய்தன. “வருக மதுராவின் அரசி!” என்று ஸ்ரீதமர் சொன்னார். வசுதேவர் அவளிடம் சொல்லத்தக்கவை அவை மட்டுமே என உணர்ந்து உளம் எழுச்சி கொள்ள “அரசி, வருக. நீ அமர்ந்து ஆள ஒரு அரியணை இங்குள்ளது. உன் இளமைந்தரால் ஈட்டப்பட்டது. இதுநாள் வரை உனக்கென காத்திருந்தது அது” என்றார். அவள் மேலும் ஒரு அடி எடுத்து வைத்து தன் வலக்கையை நீட்டி “தங்கள் காலடிகளில் அமர்வதற்கு மட்டுமே இத்தனை நாள் தவமிருந்தேன்” என்றாள்.

அன்றிரவு அவளுடன் இருக்கையில் அவள் திரண்ட தோள்களை மீள மீள விழிகளால் தழுவியபடி அவர் சொன்னார் “நீ மாறிவிட்டாய் அரசி. என் கைபற்றி இளமகளாக எழுந்தவள் இப்பன்னிரண்டு ஆண்டுகளில் பெருமகளாக திரண்டுவிட்டாய். உன் பொலிவுசூழ்ந்த பன்னிரண்டு ஆண்டுகளை நான் இழந்துவிட்டேன். மீண்டும் அவற்றை எப்பிறவியிலோ அடைய விழைகிறேன்.” அவரை மெல்ல அடித்து “என்ன இது வீண் சொல்?” என்றாள் ரோகிணி.

அன்று புலரியில் உளம் நிறைந்தெழுந்த எழுச்சியில் புரண்டு அவள் குழலுக்குள் கை செலுத்தி அள்ளி முகத்தை தன் முகத்தோடிணைத்து செவிகளில் “உன் சிறு வடிவொன்று எனக்குத் தேவை. ஒரு நாளும் விடாது அவளை நான் விழிகளால் வளர்ப்பேன். இப்பன்னிரண்டு ஆண்டுகளை ஒவ்வொரு கணமென மீண்டும் அவளில் காண்பேன். அருள்க!” என்றார். சிரித்தபடி அவரை வளைத்து தன் வெண்பளிங்குத் தேர்மேல் ஏற்றிக் கொண்டு செவியும் அறியாது நெஞ்சும் அறியாது ஆத்மாவுடன் நேரடியாகச் சொல்லும் சொற்களை அவள் சொன்னாள் “அவ்வாறே ஆகுக!”

பெருந்தோள் ரோகிணியின் மகளெனப் பிறந்தவள் சுபத்திரை. மதுராவின் அரசராக வசுதேவர் அமர்ந்தபின் பட்டத்தரசியாக முடிசூடிய ரோகிணியின் வயிற்றில் இளவரசியென்றே கருக்கொண்டாள். அவள் பிறப்பதற்கு முன்னரே பொற்தொட்டிலும், மணிவிழிபதித்த பாவைகளும், மலர்கள் விரிந்த தோட்டமும், செவிலியரும், சேடியரும் அவளுக்காக ஒருங்கியிருந்தனர். மகளை தாயின் கையிலிருந்து வாங்கி முகம் நோக்கி எடுத்து விழிமலைத்த வசுதேவரை நோக்கி அருகே நின்ற தேவகி சொன்னாள் “அக்கையின் அதே உருவம். மூத்த மைந்தனின் இணை நிற்கும் உயரத்தையும் தோள்களையும் ஒரு நாள் பெறுவாள்.” நெஞ்சு விம்மி கண்ணீர் ஊறி குழந்தை மேல் சொட்ட “ஆம்” என்றார் வசுதேவர்.

இரண்டாவது மாதத்திலேயே கையறைந்து கால் தூக்கிக் கவிழ்ந்தது குழந்தை. நான்காவது மாதத்திலேயே எழுந்தமர்ந்தது. பிற குழந்தைகள் தவழும் காலத்தில் கை நீட்டி ஓடி சுவர் பற்றி ஏறியது. இரண்டு வயதில் தேர்ந்த சொல்லெடுத்து மொழி பேசியது. நான்கு வயதில் மூத்தவர் பலராமர் குறுவாளெடுத்து அவள் கையில் அளித்து படைக்கலப் பயிற்சியை தொடங்கினார். பாரத வர்ஷத்திலேயே கதாயுதமெடுத்து போர் புரியும் பெண் அவளொருத்தி மட்டுமே என்றனர் சூதர். இருகைகளிலும் வாளேந்தி கால்களால் புரவியைச்செலுத்தி எதிர்வரும் எட்டு வீரர்களுடன் வாள் செறுத்துக் களமாட அவளால் இயன்றது.

யமுனைக்கரைக் குறுங்காடுகளில் அவள் புரவி தாவிச் செல்கையில் தொடர இளைய யாதவரால் அன்றி பிறிதெவராலும் இயலாதென்றனர் புரவிச்சூதர். ஆண்டு தோறும் மதுராவில் எழும் கன்றுசூழ் களியாட்டில் களமிறங்கி எதிர்வரும் களிற்றுக் காளையின் கொம்பு பற்றித் திருப்பி நிலத்தில் சாய்த்தடக்கி கழுத்திலணிந்த வெண்பட்டாடையை எடுத்து தன் தலையில் சுற்றிக்கொண்டு கைதூக்கி அவள் நிற்கையில் “இவள் பெண்ணல்ல. கன்னி உருக்கொண்டு வந்த மலைமகள் பார்வதி” என்றனர் மக்கள்.

சுபத்திரை இரு கைகளாலும் துடுப்பிட்டு யமுனையின் எதிரொழுக்கில் தனித்துச் சென்று மதுவனத்தில் தன் பாட்டனின் இல்லத்தில் விருந்தாடி அன்றே கிளம்பி நிலவெழுந்த நதியில் தனித்து மீண்டு மதுராவை அடைபவளாக இருந்தாள். எங்கும் அவளை எதிர்கொள்ளும் வீரர் எவரும் இல்லை என்று அறிந்திருந்தமையால் அவளை எண்ணி வசுதேவர் அஞ்சவுமில்லை. மதுராவின் வேள்விப்புரவி என்று அவளைப்பாடினர் கணியர். வெண்புரவி பொற்குளம்புகளும் செந்நெருப்பென சுழலும் வாலும் பொன்னொளிர் பிடரியும் கொண்டிருந்தது. “இப்பாரதவர்ஷத்தை எண்ணி அளந்து வலம் வரும் கால்கள் கொண்டவள் இவள். கடிவாளமிட்டு கையணைக்கும் வீரன் எங்குளான்? உலகமைத்த விண்ணவன் அறிவான்” என்றார் அவைப்புலவர் சுமந்திரர்.

மதுராவின் நகர்ப்புழுதியில் அவள் காலடிகளை மட்டும் தனித்தறியமுடிந்தது என்றனர் சூதர். அவை கருக்கொண்ட பிடியானையின் காலடிகள் போல ஆழப்பதிந்திருந்தன. அவளுடைய கதை தங்கள் கதையை தாக்குகையில் அவ்வடியை தங்கள் உடல் வழியாக மண் பெற்றுக்கொள்வதை எதிர்நின்ற பயிற்சியாசிரியர் உணர்ந்தனர். அத்தனை பேராற்றல் எவ்வண்ணம் பேரழகாகப் பூக்கிறது, எப்படி பெண்மையெனக் கனிகிறது என வியந்தனர். “கற்பாறையென அடிமரம் பருத்த கானகவேங்கையில் எழும் மலரின் இதழ் எத்தனை மென்மையானது? தேன் எத்துணை இனியது? மதகளிறு பெற்ற பிடி பெருமத்தகம் எழுந்து வருகையில் தெரியும் பெண்ணழகை எப்பெண் இப்புவியில் பெற்றிருக்கிறாள்?” என்றனர் சூதர்.

தன் துணைவியென ஒருமகள் என விழைந்து பெற்ற வசுதேவர் பின்னர் உணர்ந்தார், அவள் தன் உள்ளில் எழுந்த பெண்வடிவம் என. “ஆம் அரசே, ஒவ்வொரு ஆண்மகனும் தன்னுள் ஒரு பெண்ணை நடித்துக் கொண்டிருக்கிறான். இப்புவி என்பது அன்னை தான் விளையாட அமைத்த பெருங்களம். அதன் நடுவே தன் விண்மைய ஒளிப்பீடத்தில் அவள் அமர்ந்திருக்கிறாள். இங்குள அனைத்தும் அவளை நோக்கி தொழும்பொருட்டே எழுந்தவை. அன்னை எழுந்தருளாத ஆண்மகன் உள்ளம் ஏதுமில்லை” என்று சாக்தராகிய சுமந்திரர் பாடினார். “உள்ளமைந்த தாமரையில் எழுந்தருள்க தேவி! என் உடலறிந்த உன்னால் நான் சமைத்த உன்வடிவில் தோன்றுக!”

ஒவ்வொருநாளும் ஒவ்வொரு கணமும் அவளை நோக்கிக் கொண்டிருந்தார். இளவயதிலேயே அவர் விழிகள் முன் இருந்து பழகிய அவள் அவரது நோக்கை உணராதவளானாள். என்றேனும் ஒருமுறை அவள் திரும்பி நோக்கி விழிமுட்டி “எந்தையே, ஏன் நோக்குகிறீர்கள்?” எனும்போது “இங்கு நான் நோக்க பிறிதென்ன உள்ளது?” என்பார் வசுதேவர்.

முந்தைய கட்டுரைகொலம்பஸ் தமிழ்ச்சங்க உரை
அடுத்த கட்டுரைமேகி இன்று…