யாகூப் மேமன் என்னும் தேசநாயகன்

ஜெ,

ஃபேஸ்புக்கில் எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் இப்படி எழுதியிருந்தார். எனக்கு உண்மையில் இந்தத்தகவல்கள் பெருத்த ஆச்சரியத்தை அளித்தன. நானும் இந்திய ஊடகங்கள் திரும்பத்திரும்பச் சொல்வதுபோல இந்திய நீதிமன்றங்கள் இஸ்லாமியர்களை வேண்டுமென்றே தண்டிப்பதாகவே நினைத்துக்கொண்டிருந்தேன். என்ன ஆதாரம் என்று இதுவரை கேட்கத்தோன்றவில்லை. வேதனையாக இருந்தது

சென்னை ரயில் குண்டுவெடிப்பு போன்ற வழக்குகள் நீதிமன்றங்களில் பல்லாண்டுகளாக முழுமையாகவே முடங்கிக் கிடக்கின்றன என்று பி. ஏ .கிருஷ்ணன் எழுதியிருந்ததை வாசித்தேன். தீர்ப்பளித்த நீதிபதிகளை தீவிரவாதிகளுக்கு காட்டிக்கொடுக்கும் ஊடகங்கள் இருக்கும் சூழலில் அவர்கள் என்னசெய்யமுடியும் என்றுதான் தோன்றியது

ஜெயராமன்

1

இந்திய அரசும் அலுவலர்களும் தொடர்ந்து முஸ்லிம்களிடம் பாரபட்சம் காட்டி வருகிறார்கள் என்பதே யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டததை கண்டிக்கும் இடதுசாரிகளின் தீவிர உறுதிப்பாடாக இருக்கிறது. பொதுப்பார்வையில் இது உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால் இத்தகைய தொல்லைகளுக்குக் காரணம் முஸ்லிம்கள் ஏழைகள் என்பதே. எந்த அமைப்பிலும் ஏழை ஒதுக்கப்படுவது இயல்பே, அது அவன் முஸ்லிம் என்பதால் அல்ல. ஆனால், அந்த ஏழை முஸ்லிமாக இருந்துவிட்டால் துன்பம் இரட்டிப்பாகிறது.

கலவர வழக்குகளை நானும் அறிவேன். நாட்டில் சுதந்திரமாக சுற்றித்திரியும் கலகக்காரர்கள் எவராயினும் கைதுசெய்யப்படவேண்டும் என்பதை நானும் உரத்துக்கூறுவேன். அநீதிக்கும், பாரபட்சத்துக்கும், மந்தத்தனம் காட்டும் அரசுக்கும் எதிராக குரல் கொடுக்கும் அதே நேரத்தில் ஒரு சமநிலையையும் நாம் பேண வேண்டியுள்ளது.

பம்பாய் குண்டுவெடிப்பு வழக்கை எடுத்துக்கொள்வோம்:

இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட 11 பேர்களில் 10 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பதை நாம் மறக்கக் கூடாது. யாகூப் ஒரு மேமன் என்பதனால்தான் தூக்கிலிடப்பட்டான் என்றால், குற்றம்சாட்டப்பட்டவர்களில் பிற மேமன்கள் விடுவிக்கப்பட்டுள்ளனரே! இவ்வழக்கில் 15 இந்துக்கள் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் பல்வேறு தண்டனைகளை அனுபவித்து வருவது நம்மில் பலருக்கும் தெரியாது.

சற்றும் சமநிலையின்றி, உண்மையைத் திரித்து, பிரிவினைவாதத்தை தூண்டும் இடதுசாரி அறிவுஜீவிகள் மதச்சார்பின்மைக்கு பெரும் தீங்கிழைக்கின்றனர். எளிய இந்துக்களை எரிச்சலடையச் செய்து அவர்களை சாதிக்குழுக்களின் பிடியில் விழச்செய்கிறார்கள்.

இந்திய அரசும் நீதித்துறையும், என்னதான் இரக்கமும் திறமையும் அற்றனவாய் இருந்தபோதும், வேண்டுமென்றே முஸ்லிம்களை தூக்குமேடைக்கு அனுப்புவதில்லை என்ற எளிய உண்மை நம் முன் உள்ளது. விடுதலை பெற்ற நாளிலிருந்து நாட்டில் இதுவரை 1414 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர். அதில் வெறும் 72 நபர்களே முஸ்லிம்கள்.

பி ஏ கிருஷ்ணன் [பேஸ்புக் குறிப்பு]

2

அன்புள்ள ஜெயராமன்

மலையாள இதழொன்றில் காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தியின் பேட்டி ஒன்றை படித்தேன். பரிதாபமாக இருந்தது. யாகூப் மேமன் குற்றவாளி அல்ல என்று தான் சொல்லவில்லை என்றும் தீவிரவாதச்செயல்பாடுகளுக்கு எவ்வகையிலும் ஆதரவாக இல்லை என்றும் மரணதண்டனையை மட்டுமே எதிர்த்ததாகவும் மன்றாடிச் சொல்லியிருந்தார். யாகூப் மேமனின் தண்டனையைக் குறைக்கவேண்டும் என்று கோரிய அறிவுஜீவிகளில் இருவரின் அறிக்கைகளையும் இதே தொனியில் வாசித்தேன்.அத்தனைபேரும் பதற்றம் அடைந்திருப்பது தெரிந்தது. காரணம் யாகூப் மேமனுக்கு மும்பையில் இஸ்லாமியசமூகம் திரண்டு அளித்த மிகப்பெரிய இறுதி அஞ்சலி. அதையொட்டிய ஊர்வலம். அதுவரை இருந்த அத்தனை மனநிலையையும் தலைகீழாக மாற்றிவிட்டது அது. யாகூப் மேமனுக்காக களமிறங்கி சமராடிய ஆங்கிலச் செய்தியூடகங்கள் கூட கொஞ்சம் பின்வாங்கி மாற்றிப்பேசத்தொடங்கின.

காரணம் அந்த உணர்வெழுச்சி யாகூப் மேமனுக்கு அளிக்கப்பட்ட அஞ்சலி மட்டுமாக இருக்கவில்லை. அது டைகர் மாமனுக்கும் தாவூத் இப்ராஹீமுக்கும் அளிக்கப்பட்ட உணர்வுபூர்வமான ஆதரவு அறிவிப்பாகவும் இருந்தது. இந்தியாவின் அரசுக்கும் ஜனநாயகத்துக்கும் இங்குள்ள பெரும்பான்மை மக்களுக்கும் எதிரான போர்முழக்கமாக ஒலித்தது. இனி மும்பை எதை அஞ்சவேண்டும் என அது காட்டியது. அதற்கான பொறுப்புகளில் இருந்து அந்த எதிர்மறை உணர்வெழுச்சியை , அடிப்படைவாத அலையை .உருவாக்கிய அறிவுஜீவிகள் மெல்லமெல்ல நழுவத்தொடங்கிவிட்டிருக்கின்றனர். இனி அதன் அனைத்து அழிவுகளுக்கும் அவர்கள் மீண்டும் அரசையும் இங்குள்ள பெரும்பான்மை மதத்தினரையும் பொறுப்பாக்குவார்கள். மீண்டும் இதேகுரலுடன் சிறிதுகாலம் கழித்து எழுந்துவருவார்கள்.

இந்த நாட்டின் மிகப்பெரிய சாபக்கேடு என்பது எந்தவிதமான சமூகப்பொறுப்பும் இன்றி தங்கள் பிம்பம் ஒன்றுக்காகவே பேசும் பொறுப்பற்ற அறிவுஜீவிகள், அவர்களைக்கொண்டு பிழைப்பு நடத்தும் ஊடகங்கள். இவர்கள் எவ்வகையிலும் அறத்துணிவோ தியாகங்களுக்குத் தயாரான மனநிலையோ உடையவர்கள் அல்ல என்பதை நமக்கு இந்திராவின் அவசரநிலை காலகட்டம் காட்டியதை மறக்கவேண்டியதில்லை. ஏன் இன்று தமிழகத்தில்ஜெயலலிதா அரசை எதிர்க்கவே சொல்லெண்ணி மென்றுவிழுங்கிக்கொண்டிருப்பவர்கள் இவர்கள். உண்மையிலேயே ஒடுக்குமுறைக்கரத்துடன் ஓர் அரசு வருமென்றால் பேச்சுபேச்சென்ன்னும் இந்தக்கிளிகள் கீச்சு கீச்சென்னும் என நாம் ஐயப்படவே வேண்டியதில்லை. இவர்களை நம்பி இங்கு அரசியல் அறமோ சமூக ஒழுங்கோ இல்லை. இவர்கள் பெரும்பாலும் அன்னியப் புரவலர்களை, ஊடகங்களை அண்டிப்பிழைக்கும் எளிய உயிர்கள் மட்டுமே. என்றோ ஒருநாள் இவர்களுக்காக நம் தலைமுறைகள் நாணம்கொள்ளப்போகின்றன.

யாகூப் மேமனுக்கு ஆதரவாக இங்கே எழுந்த உணர்வெழுச்சி எந்தவகையான தர்க்கபூர்வ அணுகுமுறையும் அற்றது. தெளிவாகவே சீன ஆதரவு – இந்திய எதிர்ப்பு நிலைப்பாடு கொண்ட இந்து ஆங்கில நாளிதழால் பெரிதும் முன்னெடுக்கப்பட்டது. பாரதிய ஜனதாவுக்கு எதிரான வலுவான அரசியல் ஆயுதமாக அதை அரசியல்வாதிகள் கண்டனர். உதிரித்தேசியர்கள், மாவோயிஸ்டு கலகக்காரர்கள் என அத்தனை இந்திய எதிர்ப்புச் சக்திகளும் அதனுடன் கரம்கோர்த்துக்கொண்டதை சமூகஊடக வலையில் சற்றேனும் உலவியவர்களால் இன்றும் காணமுடியும். மலையாள இஸ்லாமிய வார இதழான சந்திரிகா யாகூப் மேமனை மகத்தான இஸ்லாமியத் தியாகியாகச் சித்தரிக்கும் கட்டுரைகள் கொண்ட சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டது. யாகூப் ’இந்துக்களால் பழிவாங்கப்பட்டவர்’ என அட்டைப்படம் அறிவித்தது. இஸ்லாமிய இதழ்களில் அவர் புனிதர் அளவுக்குக் கொண்டாடப்பட்டார்.

உண்மையில் இந்திய எதிர்ப்பு சக்திகள் அனைத்தும் ஒரே குரலில் திரண்டு பேசிய பிறிதொரு தருணம் சமீபத்தில் இங்கே வந்ததில்லை. அதனுடன் குரலிணைத்துக்கொண்டவர்கள் இரு தரப்பினர். ஊடகங்கள் உருவாக்கும் உணர்வெழுச்சிகளில் அடித்துச்செல்லப்படும் உணர்வுமூடர்கள், தங்களை முற்போக்கெனக் காட்ட விழையும் முதிராமனங்கள். உண்மையிலேயே மரணதண்டனைக்கு எதிரான நிலைபாடு கொண்டவர்கள் என்றால் அவர்கள் மரணதண்டனை விதிக்கப்பட்ட அனைவருக்கும் இதே ஆதரவைக் காட்டுவார்கள். ஆனால் ஊடகங்கள் தூண்டிவிடாவிட்டால் அப்படி ஒரு குரலே இங்கு எழுவதில்லை. ஊடகங்களோ இதைப்போல அரசியல் உள்ளடக்கம் கொண்ட, இந்திய எதிர்ப்பாக மாற்றத்தக்க வழக்குகளில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன.

நுண்ணிய ஆராய்ச்சி எல்லாம் இல்லாமல் மிக எளிய பொதுப்புத்தியால் மட்டுமே காணக்கூடிய சில உண்மைகள் உண்டு. அவற்றைக்கூட நம் ஊடகங்களில், சமூகவலைத்தளங்களில் பேச ஆளில்லை என்பது மிகமிக துரதிருஷ்டவசமானது.

அ. டைகர் மேமன் மும்பைக்குண்டுவெடிப்புக்கு முந்தைய நாள்வரை சீரிய குடிமகனாகவும் தேசபக்தராகவும் இருக்கவில்லை. பாகிஸ்தானின் உளவு நிறுவனத்துடனும் தாவூத் இப்ராகீமுடனும் தொடர்புள்ள நிழல் உலக தாதாவாக மும்பையில் பதினைந்தாண்டுக்காலமாக செயலாற்றியிருக்கிறார். அவரது தம்பியாக அவரது அத்தனை கணக்குவழக்குகளையும் நடத்தியவர் யாகூப் மேமன். அது நீதிமன்றத்தில் ஆவணங்கள் வழியாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. மும்பைக் குண்டுவெடிப்பில் அவருக்குப் பங்களிப்பு உண்டு என்பது நீதிமன்றத்தில் திட்டவட்டமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர் குடும்பத்துடன் குண்டுவெடிப்புக்கு முன்தினமே இந்தியாவை விட்டு வெளியேறியிருக்கிறார். அவர் குண்டுவெடிப்புச்செயல்பாட்டுக்கான அனைத்து நிதியாதாரங்களையும் கையாண்டிருக்கிறார்.
.
இ. ஐ.எஸ்.ஐ ஆதரவுடன் பாகிஸ்தானில் அவர் இருந்திருக்கிறார். அங்கு டைகர் மேமனுடன் தங்கியிருந்தார். ஒரு ‘நிரபராதியை’ பெரும்பொருட்செலவில் பராமரிக்கும் அளவுக்கு கருணை மிக்கது அல்ல ஐ.எஸ்.ஐ.

உ. அவர் ஐ.எஸ்.ஐயை விட்டு வந்ததற்கு இரு காரணங்கள். ஒன்று அவர் ஐ.எஸ்.ஐ மேல் கொண்ட அவநம்பிக்கை அல்லது பூசல். அது எத்தனை நாள் தன்னையும் குடும்பத்தையும் பாதுகாக்கும் என்ற ஐயமாக இருக்கலாம். அல்லது நாமறியாத காரணங்கள் இருக்கலாம் இந்திய உளவுத்துறை அவரைத் தொடர்புகொண்டு சில வாக்குறுதிகளை அளித்தது என உளவுத்துறைத்தலைவர் ராமன் குறிப்பிடுகிறார்
.
ஊ. இந்திய உளவுத்துறையிடம் நேபாளத்தில் அவர் சரண் அடைந்திருக்கலாம். அல்லது அவர் அங்கே கைதுசெய்யப்பட்டிருக்கலாம். அவர்கள் அவரை இந்தியாவுக்குக் கொண்டுவந்து இந்தியாவில் கைதுசெய்யப்பட்டமைக்கான ஆதாரங்களை உருவாக்கி இந்தியக் காவல்துறையிடம் ஒப்படைத்தார்கள். இது வழக்கமான நடைமுறை.

எ. யாகூப் மேமன் அனைத்து ஆதாரங்களையும் அளித்தார், முதல் அப்ருவர் ஆனார் என்பது அப்பட்டமான பொய். இவ்வழக்கில் அப்ரூவர் ஆனவர்கள் அனைவருமே மிகக்குறைவான தண்டனையுடன் தப்பியதை மும்பைக் குண்டுவெடிப்பின் வழக்கு விவரங்களை வாசித்தால் தெரிந்துகொள்ளமுடியும். யாகூப் தகவல்களை அளித்திருந்தால் அது இந்திய உளவுத்துறைக்குத்தானே ஒழிய வழக்குக்கு அல்ல.

ஒ. யாகூப் மேமனுக்கு குண்டுவெடிப்பில் உடன்பாடில்லை என்றால் அவர் அதை குண்டுவெடிப்புக்கு முன் அரசுக்குத் தெரிவித்திருக்கலாமே? அதை அவர் ஒருங்கிணைத்து நடத்தியபின் பிற சிக்கல்களால் சரண் அடைந்தால், அல்லது ஏமாற்றப்பட்டு சரண் அடைந்தால் நிரபராதி ஆகிவிடுவாரா என்ன? கொல்லப்பட்ட மானுட உயிர்களுக்கு மயிர் மதிப்புகூட இல்லையா? அந்த மக்களிடம் அரசுக்கு என எந்தப்பொறுப்பும் இல்லையா?

ஓ. யாகூப் மேமன் குற்றவாளி அல்ல என்று எந்தத் தரப்பும் சொல்லவில்லை. உளவுத்துறைத்தலைவர் ராமன் அவர் உளவுத்துறைக்கு உதவிகரமாக இருந்தமையால் அவருக்கு மரணதண்டனை வழங்கக்கூடாது என அவர் தனிப்பட்டமுறையில் கருதுவதாக மட்டுமே சொல்கிறார். நீதிமன்றம் செய்யும் முடிவுகளைப்பற்றி அவர் என்ன சொல்வது?

ஒ. இந்நிலையில் யாகூப் நிரபராதி என்று எப்படி எவரால் கருத்துப் பரவல். செய்யப்பட்டது? இத்தனை பிரம்மாண்டமான ஊடகப்பிரச்சாரம் எப்படி நிகழ்ந்தது? இதைச்செய்த ஊடகவியலாளர்களின் நம்பகத்தன்மை என்ன? இந்தியாவில் எவர் நிரபராதி என்று முடிவுசெய்யும் உரிமையை இவர்களுக்கு அளித்தவர் யார்? இந்தியாவின் நீதியமைப்பின் மேல் சிறுபான்மையினருக்கு பெரும் அவநம்பிக்கையை உருவாக்கி ஒட்டுமொத்தமாகவே தேசிய அழிவுகளுக்கு இட்டுச்செல்லும் இந்தப்புல்லுருவிகளை எவர் தண்டிப்பது?

ஐ. இத்தனை முறையாக விசாரித்த நீதிபதியை பெயர்குறிப்பிட்டு அடையாளப்படுத்தி உலகளாவிய இஸ்லாமியத் தீவிரவாதத்தின் முன்னால் நிறுத்தி காட்டிக்கொடுக்கும் ஊடகங்கள் இங்கே எந்த அறத்தை நிலைநாட்டுகின்றன? அவற்றின் உண்மையான நோக்கம் என்ன?

*

3

இந்திய நீதிமன்றத்தில் காவல்துறை சமர்ப்பித்த வழக்கில் நீதிமன்றம் யாகூபுக்கு மரணதண்டனை வழங்கியது. பலபடிகளாக இவ்வழக்கு பல்லாண்டுக்காலம் நடைபெற்றது. [விரைந்து நடந்தால் அவசரமாக நடத்தி முடித்தார்கள் என்பார்கள் நம் அறிவுஜீவிகள். மெல்ல நடந்தால் தாமதமே தண்டனை என்பார்கள்] யாகூப் மேமனுக்கு தன்னை பாதுகாக்க அனைத்து சட்டபூர்வ வாய்ப்புகளும் அளிக்கப்பட்டது. இத்தனை ஆண்டுக்காலம் வழக்கு நீண்டதே இந்திய நீதிமன்றங்களின் நிதானமான நடைமுறைகளால்தான். ஒரு நிரபராதி தண்டிக்கப்படலாகாது என்பதற்காக அமைக்கப்பட்டுள்ள நடைமுறைகள் அவை. குற்றவாளிக்கு அனைத்துவகையான வாய்ப்புகளும் அளிக்கப்பட்டன என்பதை வழக்கை சற்றேனும் வாசிக்கும் எவருக்கும் தெரியும். இன்று உலகநாடுகளில் வேறெந்த நாட்டிலும் இத்தனை முழுமையான சட்ட வாய்ப்பு ஒரு பயங்கரவாதக் குற்றவாளிக்கு அளிக்கப்படுவதில்லை

200 பேர் கொல்லப்பட்டு 3000 பேர் ஊனமான பெரும் குற்றம் மும்பை குண்டுவெடிப்பு. இந்தியாவின் மீதான போர் அது. சாமானியர்கள் மீதான போர். இந்தியாவில் மிக அரிதாகவே இத்தகைய பயங்கரவாதக் குற்றங்களில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுகிறார்கள். ஏனென்றால் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள் நேரடியாகவும் வேறுபெயர்களிலும் முழுமையாகப் பரவியிருக்கும் இந்தியாவில் குற்றவாளிகளுக்கு எதிராகச் சாட்சி சொல்லவோ வழக்கை நடத்தவோ ஏன் தீர்ப்பளிக்கவோகூட அஞ்சும் நிலை உள்ளது . தமிழகத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் பெரும்பாலான வழக்குகள் அப்படியே கைவிடப்பட்ட நிலையில் உள்ளன.

அதிருஷ்டவசமாக சில அப்ரூவர்களால் மும்பை குண்டுவெடிப்பு வழக்கு ஓரளவு நீதிமன்றத்தில் நின்றது. அதில் கீழ்நீதிமன்றத்தால் தூக்கு விதிக்கப்பட்டவர்கள் அனைவருமே உயர்நீதிமன்றத்தால் தண்டனைக்குறைப்புச் செய்யப்பட்டனர். ஏனென்றால் நேரடியான ஆதாரம் இல்லை. தீவிரவாதச்செயல்பாடுகளுக்கு எங்கும் நேரடியான ஆதாரத்தைக் கொண்டுவரமுடியவும் முடியாது. சொந்தக்குடும்பம் பாதிக்கப்பட்டால்கூட நீங்கள் சாட்சி சொல்வீர்களா என்று எண்ணிப்பாருங்கள், நான் சொல்லமாட்டேன். எஞ்சிய குடும்பத்தைப்பற்றியே கவலைப்படுவேன். இந்திய நீதிமன்றங்கள் உண்மையில் இஸ்லாமிய தீவிரவாதிகளைத் தண்டிப்பதில் கைகள் கட்டப்பட்ட நிலையிலேயே உள்ளன, இங்குள்ள நீதிமன்றத்தின் பழைமையான , நிதானமான , முழுக்கமுழுக்க புறவயமான அணுகுமுறையே காரணம்.

இந்தியாவில் இதுவரை எத்தனை குண்டுவெடிப்புகள் பயங்கரவாதச்செயல்கள் நடந்துள்ளன என்று கவனியுங்கள். பாகிஸ்தான் தூண்டுதலால் நிகழ்ந்தவை. தேசத்துக்கு எதிரான போர்கள். இதுவரை நீதிமன்றம் எத்தனைபேரைத் தூக்கிலிட்டது என்று மட்டும் பாருங்கள் இதிலுள்ள விகிதாச்சாரம் என்ன என்று தெரியும் மிகப்பெரும்பாலான இஸ்லாமியத் தீவிரவாதிகள் நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்டுள்ளனர். மும்பை குண்டுவெடிப்பு வழக்கிலும் அப்படித்தான். கடுமையாகத் தண்டிக்கப்பட்டவர் ஒரே ஒருவர், அவர் யாகூப் மேமன். வலுவான சாட்சியும் ஆவணச்சாட்சியமும் இருந்தமையால் அது நிகழ்ந்தது. அப்படி ஒரே ஒருவர் தற்செயலாக சாட்சியங்கள் அமைந்து தண்டிக்கப்படும்போதுதான் இங்குள்ள இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புகளும் அவர்களுக்கு ஆதரவான அறிவுஜீவிகளும் கிளம்பி வருகிறார்கள்.

யாகூப் மேமன் முழுக்கமுழுக்க நிழல் உலகக் குற்றவாளி. அந்த ஒருகாரணத்துக்ககாவே ஒரு உறுதியான அரசால் சுட்டுத்தள்ளப்படவேண்டியவர். உலகிலுள்ள அத்தனை ஜனநாயக நாடுகளும் நிழலுலகை ‘பூஜ்யம் சகிப்புத்தன்மை’ கொண்டே அணுகுகின்றன. இந்தியாவின் நிதானமான சட்டபூர்வ அணுகுமுறையாலும், அரசியலிலும் காவல்துறையிலும் உள்ள ஊழலாலும் மட்டுமே மும்பையில் வசதியாக கோலோச்ச அனுமதிக்கப்பட்டவர்கள் டைகரும் யாகூப்பும். .ஒருவேளை இத்தகையவர்கள் இத்தனை சுதந்திரமாகச் சுற்ற அனுமதிக்கப்படும் ஒரே நாடு இந்தியாதான்.

தாவூத் இப்ராஹீம் மும்பைக் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி பேரழிவுக்குக் காரணமாக அமைந்து பாகிஸ்தானின் உளவுத்துறைப் பாதுகாப்புக்குச் சென்றுவிட்ட பின்னரும் அவரது தங்கை ஹசீனா பார்க்கர் மும்பையில் அதிகாரம் மிக்க நிழல் உலக மையமாகச் செயல்பட்டார். ’நாகபடாவின் காட்மதர்’ என அழைக்கப்பட்டவர் அவர். எந்த ஐயத்துக்கும் அவர் இடம் வைக்கவில்லை. அச்சுறுத்தல் ஆள்கடத்தல் கொலை என அனைத்தும் அவரால் வெளிப்படையாகச் செய்யப்பட்டன. இதழாளர்கள் மிரட்டப்பட்டனர். காவல்துறையினரே அச்சுறுத்தப்பட்டனர். முன்பு அவரது கணவர் பார்க்கர் தாவூதின் வலங்கையாக இருந்தார். தாவூதின் எதிர்கோஷ்டியான அருண் காவ்லி கும்பலால் 1991ல் அவர் கொல்லப்பட்டபோதுதான் தாவூத் கொடூரமான ஜேஜே ஆஸ்பத்திரிப் படுகொலைகளை நிகழ்த்தினார். அக்குற்றத்திலும் ஹசீனாவுக்குப் பங்குண்டு, நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட முடியவில்லை.

மும்பைக் குண்டுவெடிப்புக்குப் பின் தாவூத் தப்பிச்சென்றார். தாவூதின் அத்தனை குற்றச்செயல்பாடுகளையும் ஹசீனா மும்பையில் இருந்து ஒருங்கிணைத்தார். அவரை இந்திய நீதித்துறை ஒன்றுமே செய்யமுடியவில்லை. அவர்மேல் தொடுக்கப்பட்ட வழக்குகள் எவற்றுக்கும் நீதிமன்றத்தில் ஆதாரம் காட்ட போலீஸால் முடியவில்லை, ஏனென்றால் சாட்சிகள் எவருமில்லை. துணிந்த சாட்சிகளும் கொல்லப்பட்டனர். இத்தனைக்கும் ஹசீனா பாகிஸ்தானுக்கு சட்டவிரோதமாகச் சென்று பல்லாண்டுக்காலம் காணாமலிருந்து மீண்டுவந்தார் அந்த பாஸ்போர்ட் ஆவணங்களைக்கூட நீதிமன்றம் தண்டனைக்குப் போதுமானதாகக் காணவில்லை. உச்சகட்ட நிழல் உலக அதிகாரத்துடன் வாழ்ந்த ஹசீனா பார்க்கர் இயல்பான முறையில் இதயநோயால் ஜூலை 7 ,2014ல் உயிரிழந்தார். மும்பையில் அவரது ஆதரவாளர்களும் இஸ்லாமிய மதவாதிகளும் பல்லாயிரக்கணக்கில் கூடி அவருக்கு அஞ்சலி செலுத்தினர்

இப்போது யாகூப்புக்கு மும்பை இஸ்லாமியர் அளித்திருக்கும் பெருந்திரள் அஞ்சலியின் பொருள் என்ன? மும்பை வாழ் மக்களுக்கு அது அளிக்கும் செய்தி என்ன? ‘நாம கலாமுக்கு அஞ்சலி செலுத்தறோம் சார். எங்கியாவது ஒரு முஸ்லீம் அவருக்காக ஒரு தட்டி வச்சத பாத்திகளா? எத்தனை முஸ்லீமகள அங்க அஞ்சலி ஊர்வலத்தில பாக்க முடிஞ்சுது? அவங்க யாக்கூப் மேமனுக்கு தட்டி வைக்கிறாங்க சார். அவனுக்ககாத்தான் தொப்பியப்போட்டுட்டு ஒண்ணாக்கூடி போறாங்க” என்றார் ஆட்டோ ஓட்டுநர். திகைப்பாக இருந்தது, சென்று சேர்ந்திருக்கும் செய்தி இதுதான். உண்மையில் இதனால் மிகப்பெரிய லாபம் அடைந்திருப்பது பாரதிய ஜனதாதான்

தேசப்பகைவர்களை விடுவோம். இடதுசாரிகள் இந்த எளிய உண்மைகளை ஏன் புரிந்துகொள்வதில்லை? இந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள் என்றும் இடதுசாரிகளுக்கு எதிரானவர்கள்தான் என்பதை இவர்கள் அறியமாட்டார்களா?. இந்திய நடுநிலையாளர்களை இந்துத்துவ அரசியலை நோக்கித்தள்ளும் அனைத்தையும் முறையாகச் செய்யவேண்டும் என நேர்த்திக்கடன் கொண்டவர்களைப்போல ஏன் இவர்கள் நடந்துகொள்கிறார்கள்?

இந்த தேசத்தை மதவெறுப்பால் பிளவுபடச்செய்வது இந்த போலி முற்போக்குக் கும்பலே. இஸ்லாமியத் தீவிரவாதமே இஸ்லாம் என்று இஸ்லாமியரிடம் மீண்டும் மீண்டும் சொல்லி அவர்களையே நம்பவைத்துவிட்டிருக்கின்றனர் இங்குள்ள முற்போக்குப்போலிகள். இந்த நாடு என்றேனும் இதற்கான விலையைக் கொடுக்கும் என்றால் அதற்கு முதல்பொறுப்பு இவர்கள்தான்

ஜெ

முந்தைய கட்டுரைமேகி இன்று…
அடுத்த கட்டுரையாகூப் கடிதங்கள்