வாசிப்பு – இருகடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் சார்,

நீண்ட நாள்களுக்கு பின் எழுதுகிறேன், கடந்த 3-4 மாதங்களில் 3 புத்தகம் படித்துவிட்டேன், ஆனால் எது பற்றியும், கட்டுரை வடிவில் எழுதி தொகுத்துக்கொள்ள என்னால் இந்த நாட்களில் முடியவில்லை. பின் தொடரும் நிழலின் குரல் என்னை வெகுவாக பாதித்து மனதளைவில் ஒரு பெரிய சலனத்தையும், தீவிர அமைதியையும் ஒரு சேர அமைத்து விட்டது. என்னால் அதிலிருந்து உண்மையில் மீள முடியவில்லை. உங்களுக்கு ஒரு வாசிப்பனுபவ கடிதம் எழுதி அதையும் நிறுத்தி விட்டேன்.
‘படிச்சாச்சு’ , ‘புரிஞ்சாச்சு’ , இனி அதை பற்றி எழுதி என்ன ஆகப்போகிறது என்பது போன்ற மனநிலைக்கு நான் எப்படி தள்ளப்பட்டேன் என்று தெரியவில்லை.

அதே நேரத்தில் மனச்சோர்வு, தடை, குழப்பம், போன்ற நிலையும் இல்லை , தொடர்ந்து படித்துக்கொண்டு தான் இருக்கிறேன்,இது என்ன மனநிலை, எனக்கு மட்டும் தான் இப்படியா? இப்படி தொகுத்துக் கொள்ளாமல், 3-4 வருடங்களுக்கு முன் படித்திருக்கிறேன், அப்போது ஒன்றும் பெரிதாக தோன்றியதில்லை, படிப்பது பற்றி உங்களுடைய கட்டுரை படித்த பின், நான் படிக்கும் அனைத்தையும் தொகுத்து ஒரு சிறு கட்டுரையேனும் என்னளவில் எழுதி வைத்துக்கொள்வேன். இப்போது அப்படி தொகுக்காமல் படிப்பது எதோ ஒரு நெருடலாக உள்ளது. உங்கள் உதவி தேவை

அன்புடன்
சௌந்தர் G

அன்புள்ள சௌந்தர்

ஒரு நாவல் உருவாக்குவது எப்போதும் நிலைகுலைவு. மீண்டும் அடுக்குவதே நாவலை உள்வாங்கும் முறை. அச்செயல் முடியும்போதுதான் நாவல் உங்களிடம் முழுமையாக வளர்ந்திருக்கும்

வாழ்த்துக்கள்

ஜெ

*

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

முதலில் சிலவற்றை சொல்லி விடுகிறேன்… உங்களை நான் கடவுள், அங்காடி தெரு போன்ற படங்களுக்கு வசனம் எழுதிய ஒரு வசனகர்த்தாவாகவே பல வருடங்களுக்கு முன் தெரிந்து கொண்டேன் (இப்போது என்னை நினைத்து நானே வெட்கப் படுகிறேன்). அப்போது எனக்கு புனைவு, இலக்கியம் என்றால் சாண்டில்யன், கல்கி, சிட்னி ஷெல்டன், டான் பிரவுன் போன்றவர்கள் தான். சுமார் ஓராண்டுக்கு முன் பவா செல்லதுரை அவர்களை பற்றிய ஆவணப் படம் ஒன்றை யூ ட்யுபில் பார்த்தேன். அதில் உங்களது பேச்சை பார்த்துவிட்டு ஏதோ கூகுள் செய்த போது தங்களின் இணைய தளத்தை பார்வையிட நேரிட்டேன். அப்போது தொடங்கியது என் உண்மையான இலக்கிய வாசிப்பு.

அந்த நாளிலிருந்து, தங்களின் அனைத்து கட்டுரைகளையும் தினமும் வாசித்து உள்வாங்கி வருகிறேன். தற்போது இந்த கடிதத்தை எழுதும் போது கூட ஒரு வித படபடப்பும், கை நடுக்கமும் ஏற்படுகிறது (நான் exaggerate செய்யவில்லை!!!). என் ஆதர்ச படைப்பாளிக்கு ஒரு கடிதம் போட கிட்ட தட்ட ஒரு வருடம் ஆகியுள்ளது. உங்கள் படைப்புக்களில் முதலில் நான் படித்தது “அறம்” சிறுகதை தொகுப்பு தான். குறிப்பாக என்னை புரட்டிப் போட்டு வெகு நாட்கள் ஆட்கொண்டு சிந்திக்க வைத்த கதைகள் “சோற்றுக் கணக்கு”, ” யானை டாக்டர்”, “நூறு நாற்காலிகள்”, “தாயார் பாதம்” மற்றும் “மத்துறு தயிர்” ஆகியவை. உங்களை “அல்ப்ரெட் ஹிட்ச்காக் of human emotions” என்று தான் என் உறவினர்களிடமும், நண்பர்களிடமும் அறிமுகம் செய்து வைத்தேன். தங்களின் எழுத்தின் வீரியமும், மொழி ஆளுமையும் கண்டு வியக்கிறேன். நானும் சில சிறுகதைகளை எழுதினேன். அவற்றில் தங்களின் பாதிப்பு தான் அதிகம். ஆகையால் அவற்றை வெளியிடாமலே நானே அவ்வப்போது படித்து வருகிறேன். தங்களிடம் ஏகலைவனாக நான் கற்றுக்கொண்டவை பல.

என்னை ஒரு ஆக்கப்பூர்வ தர்க்கவாதியாக நான் மாற்றிக்கொண்டதற்கு உங்களுக்கு பெரும் பங்கு உண்டு. ஒரு கருத்தை எப்படி பல கோணங்களில் அலசி ஆராய்ந்து வெளிப்படுத்த வேண்டும் என்பதற்கு உங்களின் சமீபத்திய கட்டுரைகளான “நான் ஹிந்துவா” மற்றும் “டாக்டர் கலாம்” பற்றிய கட்டுரைகளே சிறந்த எடுத்துக்காட்டு. இதை எல்லாம் ஏன் இங்கே குறிப்பிடுகிறேன் என்று எனக்கு தெரியவில்லை. உங்களின் பதிலை எதிர்பார்த்து தான் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

தங்களின் வழிகாட்டுதலின் பேரிலேயே டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, சுந்தர ராமசாமி, தி. ஜானகிராமன் போன்றவர்களின் படைப்புக்களை வாசித்தேன். ஜெயமோகன் speech, ஜெயமோகன் videos என்று எப்பொழுதும் தங்களை யூ ட்யூபில் தேடி உங்களின் பேச்சுக்களை கேட்டும் வருகிறேன். தமிழ் மொழியின் பால் கொண்ட ஆர்வத்தினால் எழுத வந்தேன் என்று சொல்வதை விட, ஜெயமோகனின் எழுதினால் ஈர்க்கப்பட்டு தான் நான் எழுத வந்தேன். என் அலுவலக பணியின் மன அழுத்தத்தை ஓரளவு குறைப்பது தங்களின் படைப்புக்களை வாசிப்பதும், எழுதுவதும் தான் என்பதை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

என் பார்வையில் நீங்கள் மற்றவர்கள் குற்றம் சாட்டுவது போல் ஹிந்துத்வா எழுத்தாளர் என்றெல்லாம் தோணவில்லை. ஏதாவது சொல்ல வேண்டும் என்று பேசுபவர்களின் அரைவேக்காடு தனம் தான். உங்கள் பாஷையில் சொல்வதென்றால் “மொன்னைத்தனம்” என்று குறிப்பிடலாம்!!!!

உங்களின் வெண்முரசை இன்னும் வாசிக்க ஆரம்பிக்க வில்லை. விஷ்ணுபுரத்தை இரண்டாவது முறையாக படித்து வருகிறேன். இன்னும் என்னால் முழுமையாக உள்ளே சென்று நீங்கள் சொல்ல வரும் தத்துவ கோட்பாடுகளை உள்வாங்கிக் கொள்ள இயலவில்லை. கூடிய விரைவில் அதனை படித்து முடித்து என் பதிவுகளை செய்வேன். காடு என்னை புரட்டிப் போட்ட கதை. அந்த எழுத்தின் உக்கிரம் கொழுந்து விட்டு ஜுவாலையாக இன்னும் என் கண் முன் எரிகிறது. கொற்றவையை நீங்கள் தொடங்கிய முதல் வரியே என்னை கட்டிப் போட்டது “அறிய முடியாதவையின் நிறம் நீலம் என்றனர்” என்று தொடங்கும் ஒரு வரியே தங்களின் இலக்கிய ஆளுமையை இவ்வுலகிற்கு எடுத்துக் காட்டுகிறது..

எதையோ எழுதத் தொடங்கி, எது எதையோ பதிவு செய்துவிட்டேன். தங்களின் கண்கள் வழியே இவ்வுலகை பார்ப்பது மிகவும் அழகாகவே உள்ளது என்று தான் தோன்றுகிறது.

என் வாழ்க்கையின் நெடு நாள் தேடலுக்கான விடை தான் http://www.jeyamohan.in என்ற இணைய தளம். இதில் வஞ்சப் புகழ்ச்சியோ, உள்ளர்தாமோ இல்லை. என் இதயத்திலிருந்து வெளிக்கொணரும் வார்த்தைகள் இவை..

வாசிப்புக்களும், பதிவுகளும் தொடரும்…

நன்றி

பிரவீன்.

அன்புள்ள பிரவீன்,

நன்றி.

தமிழில் பொதுவாக நவீன இலக்கியம், நவீனச் சிந்தனை ஆகியவற்றுக்கு ஏதேனும் ஒரு வாசல்திறந்தால்போதும் , உள்ளே நுழைந்துவிடமுடியும். என் இணையதளம் அத்தகைய ஒரு வாயில். இது ஒரு தொடக்கமாக இருக்கட்டும்

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 84
அடுத்த கட்டுரைக.நா.சுவின் தட்டச்சுப்பொறி