வணக்கம்.
பல்கலைக்கழக நூலகத்திலிருந்து எடுத்த தேவதேவன் கவிதைகள் கடந்த ஐந்து மாதங்களாக என்னிடம் இருக்கிறது. வாசித்துக்கொண்டே இருக்கிறேன். தேவதேவன் கவிதைகள் எப்போதும் என்னோடே வருகின்றன. ஏராளமான தருணங்களில் சிற்சில விஷயங்களுக்கெல்லாம் ஏற்றதாக தேவதேவன் கவிதை நினைவில் மின்னிக்கொண்டேயிருக்கிறது. பாதத்திலொரு முள்தைத்து முள்ளிள்ளாப் பாதையெல்லாம் முள்ளாய் குத்தும் என நாள்தோறும் பலமுறை உரக்கச்சொல்வேன். இப்படி ஏராளம். கவிதைகளுக்குள் சிக்கிக்கொண்டுவிட்டேனென்று தோன்றுகிறது. குறிப்பாக தேவதேவனைத் தாண்டிப்போவது ஆகாத காரியமென்று படுகிறது. இதனால் பிற புனைவுகளை வாசிப்பது குறைந்துவிட்டது. தேவதேவனைப் பார்த்து ஆரத்தழுவி முத்தமிடவேண்டுமென்று தோன்றுகிறது. ஒரு பயனுமற்ற செயலின்மைக்கு வந்துவிட்டேனோ என்ற அச்சத்தில் கேட்கிறேன். தேவதேவனிடமிருந்து வெளியேறுவது எப்படி? அது சரியா? தவறா? என்னை ஆற்றுப்படுத்துங்கள்.
வே.ஸ்ரீநிவாச கோபாலன்
கீழநத்தம், திருநெல்வேலி.
அன்புள்ள ஸ்ரீனிவாச கோபாலன்,
நெடுநாட்களுக்கு முன் என் பழையநண்பர் ஒருவரை சந்தித்தேன். இலக்கிய போதையால் உலகியல் வாழ்க்கையில் சில சரிவுகளை சந்தித்தவர். ஆனால் வாழ்க்கை இப்போது ஒருமாதிரியாக ஓடி மறுபக்கம் வந்துவிட்டது. அவர் சொன்னார், பலவற்றை இழந்துவிட்டோமோ என்று தோன்றும்போது பக்கத்துச் சூழலில் இதேவயதில் வாழ்க்கையில் ஒரு சுவையும் இல்லாமல் ஒரு அனுபவமும் இல்லாமல் உட்கார்ந்திருக்கும் மொண்ணை மக்கள்கூட்டம் கண்ணில்படுகிறது, அப்பாடா தப்பித்தோம் என்று தோன்றுகிறது என்று.
தேவதேவனிடமிருந்து ஏன் தப்பிக்கவேண்டும்? கவிதை இசை போன்றவை ஓர் இனிய செயலின்மையை உருவாக்குகின்றன. எவரும் அவற்றால் எதையும் இழப்பதில்லை. இழந்தால்கூட அடைவதன் முன் அவை ஒரு விஷயமே அல்ல. அவை நிரப்பும் வெறுமை மிகப்பிரம்மாண்டமானது. நீங்கள் இளைஞர், கொஞ்சம் போனால் தெரியும்.
ஜெ