‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 81

பகுதி பன்னிரண்டு : இமையாநீலம் – 6

ஒரு சொல்லென எழுந்து அவளை சூழ்ந்துகொண்டான். நீலம் என்பது நிறமல்ல. பீலி என்பது நோக்கல்ல. ஆழி என்பது வடிவல்ல. சங்கமென்பது பொருளல்ல. குழலிழிந்து இப்புவிக்குவளை நிறைக்கும் இசை என அவள் அறிந்தாள். விழிப்பென்பதும் துயிலென்பதும் இருவகை இசையே என்று கண்டாள். இருப்பென்பதும் இன்மையென்பதும் அவ்விசையின் எழுச்சியும் வீழ்ச்சியுமே. ஆதலென்பதும் அழிதலென்பதும் அலைவளைவுகளே.

அவளிருந்த இடமெங்கும் இசை நிறைந்திருந்தது என்று உணர்ந்தாள் செவிலி. அவள் கைபட்ட வெள்ளிக்கலங்கள் தங்களை மீட்டிக்கொண்டன. காலையொளி எழுந்ததும் பறவைகள் சாளரங்களினூடாக வந்து அவள் அறைக்குள் சுழன்றன. “அவள் கைதொட்டு அளித்த வெறும்நீர் இனிக்கிறது. அவள் செல்லுமிடங்களில் மலர்கள் இதழ்விரிக்கின்றன” என்று சேடி ஒருத்தி கேலியென சொன்னாள். “ஆம்” என்றாள் செவிலி. “இசையென அவளை சூழ்ந்திருக்கிறான்.” அஞ்சி “கந்தர்வனா?” என்றாள் சேடி. “ஆயிரம்கோடி கந்தர்வர்களின் அரசன்” என்றாள் செவிலி.

அவளிடம் அவனைப்பற்றி எவரும் பிறகெதையும் சொல்ல நேரவில்லை. முட்டைவிட்டு எழும் பறவைக்குஞ்சு நீலவானை முன்னரே அறிந்திருக்கிறது. அன்னை அதற்கு அளிப்பதெல்லாம் சிறகுகளைப்பற்றிய நினைவூட்டலை மட்டும்தான். ஓரிரு வாரங்களுக்குள் அவனைப்பற்றி அவளறியாத எதுவும் புவியில் எஞ்சவில்லை என்பதை செவிலி அறிந்தாள். அவன் பெயரை அவள் ஒருமுறைகூட சொல்லவில்லை. ஒருகணம்கூட அவனை விட்டு உளம் விலகவுமில்லை.

பறவை வானிலிருக்கிறது. அது வானை நோக்குவதேயில்லை. மண்ணில் அது வானை காண்கிறது. அவன் குழல்சூடிய பீலிவிழியை, நீலநறும் நெற்றியை, இந்திரநீலம் ஒளிவிடும் விழிகளை, குவளைமலர் மூக்கை, செவ்விதழ்களை, இளந்தோள்களை, கௌஸ்துபச் சுருள் கொண்ட மார்பை, பொற்பட்டு சுற்றிய அணியிடையை, கனலெனச் சுற்றிய கழல்மணியை, சிரிக்கும் கால்நகவிழிகளை, நாகமென நீண்ட கைகளை, துளைகொண்ட குழல்தொட்டு இசைமலரச் செய்யும் மாயவிரல்களை, இடைசூடிய ஆழியை, வெண்சங்கை ஒவ்வொரு நாளும் தன் அணியறை ஆடியில் தான் என நோக்கினாள்.

அவன் ஆண்ட பெருநகரத்துத் தெருக்கள் ஒவ்வொன்றையும் அறிந்திருந்தாள். அங்கிருக்கும் ஒவ்வொரு இல்லத்திலும் ஒருநூறு ஆண்டுகள் வாழ்ந்திருந்தாள். அங்கிருக்கும் ஒவ்வொரு பறவையும் அவளை அறிந்திருந்தது. ஒவ்வொரு விழியிலும் அவளுக்கான ஏழ்பிறவிப் புன்னகை இருந்தது. அவளுக்கான அரண்மனையும் அலர்காடும் காத்திருந்தன. அவள் அமர்ந்து எழுந்த வெம்மையுடன் அரியணை இருந்தது அங்கே.

ஒவ்வொரு நாளும் அவள் புத்தாடை அணிந்துகொண்டாள். ஒருமுறை சூடிய மணிகளையும் அணிகளையும் பிறிதொருமுறை சூட மறுத்தாள். “என் உளம் அமர்ந்தவன் நூறுநூறு முறை நோக்கிச் சலித்தவை இவை தோழி” என்றாள். சேடி வியந்து பிறசேடியின் விழிகளை நோக்கியபின் “இவை இன்றுவந்தவை இளவரசி” என இன்னொரு அணிப்பேழையை திறந்தாள். வீணையை யாழை நந்துனியை நாகக்குழலை மட்டுமன்றி துடியை கிணையை பறையைக்கூட அவள் குழலென்றே கேட்டாள். களிற்றுயானை என இமிழ்ந்த பெருமுரசும் அவளுக்கு இன்குழல் இசைச்சுருளென்றே ஆகியது.

செவிலி அவள் நிலையை எவருமறியாது காத்திருந்தாள். ஆயினும் ஆசிரியர் வழியாக சூதர் வழியாக சேடியரென அமைந்த உளவர் வழியாக செய்தியை அறிந்தனர் அவள் தமையர். “அவள் நோய்கொண்டிருக்கிறாள்” என்றார் விந்தர். “அவளை நாம் சிறையிலடைத்துள்ளோம். தனிமையில் நொய்ந்துவிட்டாள்” என இரங்கினார் அனுவிந்தர். “சென்று அவளை நோக்கி நிலையறிந்து வா” என தன் துணைவி சுஜாதையை அனுவிந்தர் மாகிஷ்மதியின் கன்னிமாடத்துக்கு அனுப்பினார்.

அரசமுறைப் பயணமாக மாகிஷ்மதிக்குச் சென்று கன்னிமாடத்தில் உறைந்த இளவரசியைக் கண்டு மீண்டுவந்த சுஜாதை “அரசே, காற்று புகாது மூடிய செப்புக்குள் முல்லைமொட்டு வெண்மலர்கொத்தாவது போன்ற விந்தை சொல்நுழையா இற்செறிப்புக்குள் கன்னியர் காதலியராவது. வான்பறக்கும் புள்ளின் வயிற்றுக்குள் அமைந்த முட்டையில் வாழும் குஞ்சின் பறத்தலுக்கு நிகர் அது. அவள் இன்று நாமறியா ஒருவனை உளம் அமர்த்தியிருக்கிறாள்” என்றாள்.

திகைத்து “யாரவன்? யாதவனா?” என்றார் அனுவிந்தர். “அவனேதான். வேறுயார் இந்த மாயத்தை செய்ய இயலும்?” என்றார் விந்தர். “அவளிடம் ஆயிரம் சொல்லெடுத்து உசாவினேன். அவன் பெயரோ குலமோ ஊரோ அவள் சொல்லில் எழவில்லை. ஆனால் அவள் உள்ளம் அமைந்தவன் இளைய யாதவனே என்பதில் எனக்கும் ஐயமில்லை. கன்னி ஒருத்தியின் உடலே யாழென ஆகி இசைநிறையச்செய்ய இயன்றவன் அவன் மட்டுமே” என்றாள் சுஜாதை.

“இனி அவள் மகளிர்மாளிகைக்குள் எவரும் நுழையலாகாது. இன்றே அவளை அஸ்தினபுரியின் அரசருக்கு மணம்பேசுகிறேன்” என்றார் விந்தர். “மூத்தவரே, அது எளிதல்ல. மணத்தன்னேற்பு வழியாக அன்றி எவ்வழியாக அவளை அஸ்தினபுரியின் அரசர் மணந்தாலும் நாம் மகதருக்கும் கீசகருக்கும் எதிரிகளாவோம்…” என்றார் அனுவிந்தர். “மணத்தன்னேற்பில் நாம் எதையும் முன்னரே முடிவெடுக்க முடியாதல்லவா?” என்றார் விந்தர். “முடியும், நான் எண்ணிவகுத்துள்ளேன்” என்றார் அனுவிந்தர்.

அனுவிந்தரும் விந்தரும் மந்தண மன்றுகூடி சூது சூழ்ந்து நிறைமதி நாளில் மாகிஷ்மதியில் அவளுடைய மணத்தன்னேற்புக்கு நாள் ஒருக்கினார்கள். அதில் போட்டி என்பது கதாயுதப்பயிற்சி மட்டுமே என முடிவெடுத்தனர். அவ்வழைப்பு அத்தனை அரசர்களுக்கும் ஜெயசேனரின் ஆணைப்படி முத்திரையிடப்பட்டு அனுப்பப்பட்டது. ஆனால் விந்தரும் அனுவிந்தரும் எண்ணி முடிவெடுத்த பன்னிரெண்டு ஷத்ரிய அவைகளுக்கும் பதினெட்டு சிறுகுடி மன்னர்களுக்கும் அன்றி பிற எந்நாட்டிற்கும் உரியநேரத்தில் சென்றடையாமல் மதிசூழப்பட்டது. ஒவ்வொரு நகருக்கும் அவந்தியால் வகுக்கப்பட்ட நேரத்தில் பிந்திச்செல்லும் தூதர்கள் அனுப்பப்பட்டனர். ஜராசந்தருக்கும் கீசகருக்கும் அஸ்தினபுரியின் பீமனுக்கும் மணத்தன்னேற்பு நாளுக்கு மறுநாள்தான் ஓலைகள் சென்றடைந்தன.

துவாரகைக்கும் மாகிஷ்மதிக்கும் நடுவிலிருந்த பெரும்பாலைநிலத்தை எண்ணிய அனுவிந்தர் அன்று விடியலில் செய்தி கிடைத்தால் போதுமென வகுத்தார். ஜெயசேனரின் ஓலையுடன் வந்த அவந்தியின் தூதன் புழுதிபடிந்த புரவியுடன் துவாரகையின் எல்லையில் அமைந்த காவல்மாடத்தை அன்று பின்மாலையில் அடைந்தான். தூதென்று அவன் சொன்னான், ஏதென்று சொல்லவில்லை. ஆனால் அவன் உணவுண்டுகொண்டிருக்கையிலேயே அவன் இடையிலிருந்து அந்தச்செய்தி அகற்றப்பட்டது. அதை போலிசெய்தபின் முதலோலை மீளவைக்கப்பட்டது. தூதன் சற்று இளைப்பாறி வெயிலமைந்தபின் துவாரகை நோக்கி கிளம்பும்போது காவலர்தலைவன் அனுப்பிய பறவைத்தூது துவாரகைக்கு சென்றுவிட்டது.

பறவை அக்ரூரரின் மாளிகைச் சாளரத்தில் அந்திக்கருக்கலில் வந்து அமர்ந்தது. அவந்தியின் அரசர் ஜெயசேனரின் இளமகள் யாதவ இளவரசி மித்திரவிந்தையின் மணத்தன்னேற்பில் கலந்துகொண்டு கதாயுதம் ஏந்தி களம் கொள்ள வேண்டுமென்று இளைய யாதவரை அழைத்திருந்தார் அமைச்சர் பிரபாகரர். அவ்வழைப்பில் ஏழு நாட்களுக்கு முந்தைய நாள் குறியிடப்பட்டிருந்ததைக் கண்டதுமே அனைத்தையும் அறிந்துகொண்ட அக்ரூரர் உடல்பதற சால்வை நழுவி இடைநாழியிலேயே உதிர ஓடி மூச்சிரைக்க இளைய யாதவரின அவைக்களத்தை அடைந்தார்.

நூலவைக் கூடத்தில் புலவர் சூழ அமர்ந்து வங்கநாட்டுக் கவிஞர் கொணர்ந்த காவியமொன்றை ஆய்ந்து கொண்டிருந்த இளையவர் முன் சென்று நின்று “இளையவரே, தாங்கள் சூடவேண்டிய அவந்திநாட்டு இளவரசியை பிறர் கொள்ளும்படி வகுத்துவிட்டனர். அவளுக்கு நாளைக்காலை மணத்தன்னேற்பு என்கின்றனர். செய்தி பிந்திவரும்படி வஞ்சமிழைத்துள்ளனர்…” என்று கூவினார். “ஏதுசெய்வதென்று அறியேன். இளவரசியை பிறர் கொண்டால் அது துவாரகைக்கு இழப்பு. அஸ்தினபுரியின் இளவரசர் கொண்டால் மேலும் இக்கட்டு…” என்றார்.

இளைய யாதவர் புன்னகையுடன் திரும்பி தன் தோழர் ஸ்ரீதமரிடம் “அவந்திக்கு நாளை புலரிக்குள் சென்று சேர வாய்ப்புள்ளதா ஸ்ரீ?” என்றார். “எளியவர் செல்வது எண்ணிப்பார்க்கவே முடியாதது. ஆனால் உள்ளத்தில் முடிவுகொண்டவர் சென்றால் முடியும்” என்றார் ஸ்ரீதமர். படைத்தலைவர் சங்கமர் “புரவிமீது முழு ஓட்டத்தில் நிறுத்தாமல் செல்லலாம் என்றால் இயல்வதுதான்” என்றார். அக்ரூரர் “அத்தனை தூரம் எப்படி புரவிகள் நில்லாது செல்லமுடியும்?” என்றார். “வழியில் ஏழு காவல்மாடங்கள் உள்ளன. அங்கே புரவிகளை காத்து நிற்கும்படி ஆணையிடுவோம். புரவிகளை மாற்றிக்கொண்டே செல்லலாமே” என்றார் சங்கமர்.

“ஆனால் அப்புரவிமேல் செல்வது மானுட உடல்” என்றார் அக்ரூரர். “அதற்கும் களைப்பும் பசியும் உண்டு.” சங்கமர் “நான் மானுட உடல்களைப்பற்றிப் பேசவில்லை” என்றார். “அவ்வண்ணமெனில் இப்போதே கிளம்புவோம். இன்னும் ஓர் இரவு நமக்கிருக்கிறது” என்று இளையவர் எழுந்தார். பலராமர் “இளையோனே, நானும் உடன் வருகிறேன்” என்றார். “மூத்தவரே, தங்கள் உடலைச் சுமக்கும் புரவி அத்தனை தொலைவு வர முடியாது. இங்கு என் மணிமுடிக்குக் காவலாக தாங்கள் இருங்கள்” என்றார் இளையவர். “இந்தப்பயணத்தை தனியாகவே நிகழ்த்த விரும்புகிறேன். நான் அவைபுகுவதை அவர்கள் அறியலாகாது” என்றார்.

“அக்ரூரரும் சங்கமரும் ஒரு சிறியபடையுடன் இன்றே அவந்திக்கு கிளம்பட்டும். அவர்கள் செல்வதை அவந்தியின் ஒற்றர்கள் விந்தருக்கு அறிவிப்பார்கள். நான் செல்வதை அச்செய்தி மறைத்துவிடும்” என்று இளைய யாதவர் ஆணையிட்டார். அக்ரூரர் “இளவரசே, இன்னும் நாம் அறிந்திராத ஒன்றுள்ளது. அவந்தி நாட்டு இளவரசியின் உள்ளம்” என்றார். “யாதவர் என்ற சொல்லே அவள் காதில்விழாது வளர்த்துள்ளனர். அவையில் அவள் தங்களை அறியேன் என்று உரைத்துவிட்டால் அதைவிட இழிவென வேறேதுமில்லை.”

இளையவர் “ஆம், அதற்கும் வாய்ப்புள்ளது” என்றார். அக்ரூரர் “அத்துடன் அவர்கள் எவரேனும் களம்புகுந்து இளவரசிக்காக சமராடலாமென ஐயம் கொண்டிருப்பதால் அவளை அவைக்களத்துக்கு கொண்டுவராமலும் போகலாம். அந்நிலையில் பெரும்படை கொண்டுசென்று அவந்தியை வென்று அரண்மனையைச் சூழ்ந்து மகளிர்மாளிகையை உடைத்தாலொழிய அவளை கைபற்ற முடியாது. அது துவாரகையால் இப்போது இயல்வதல்ல. அவந்தி இளவரசர்கள் அஸ்தினபுரிக்கு அணுக்கமானவர்கள்” என்றார்.

அக்ரூரர் தொடர்ந்தார் “தனியாகச் சென்று எவ்வண்ணமேனும் இளவரசியை தாங்கள் சந்தித்து அவள் உள்ளம் தங்களை ஒப்பும்படி செய்தால் மட்டுமே அவளை அடைந்து மீளமுடியும். தாங்கள் இதை முன்னரே செய்திருக்கவேண்டும். மிகவும் பிந்திவிட்டோம் என அஞ்சுகிறது என் உள்ளம்.” நகைத்தபடி இளைய யாதவர் “கதிர்விளைவது அப்பயிரின் எண்ணப்படி அல்ல, வானாளும் காற்றுகளின் கருத்துப்படியே என வேளாளர் சொல்வதுண்டு அக்ரூரரே” என்றார். “நம்முடன் பெண் ஒருத்தி வருவாளென்றால் அவளை அவந்திநாட்டு மகளிர்மாளிகைக்கு அனுப்ப முடியும். அவள் சென்று இளவரசியிடம் உரையாடி உளம் அறிந்து வரக்கூடும்.”

அக்ரூரர் “பெண் என்றால்…” என்று தயங்கி “அவந்தியில் நம் யாதவ வணிகர் சிலர் உள்ளனர். அவர்களின் மகளிர்களில்…” என தொடர “மதுராவிலிருந்து சுபத்திரை வந்திருக்கிறாள் அல்லவா? அவள் என்னுடன் வரட்டும்” என்றார் இளைய யாதவர். உரக்கநகைத்து “ஆம், அவள் வரட்டும். அவளுக்கும் ஒரு நல்ல சமராடலை கண்ட களிப்பு எஞ்சும்” என்றார் பலராமர். “ஆம், அவள் மட்டும் வந்தால்போதும்” என்றார் இளையவர்.

திகைப்புடன் “அரசே!” என்றார் அக்ரூரர். ஏதேனும் சொல்லலாகாதா என்னும் முகத்துடன் பிறரை நோக்கிவிட்டு அவர் “பெரும்பாலையை ஓரிரவில் பெண்ணொருத்தி கடப்பதென்றால்…” என்று தொடங்க இளையவர் “பெண்கள் எவராலும் இயலாது. சுபத்திரை மட்டுமே அதை ஆற்ற முடியும். அவள் வில்லின் உள்ளமறிந்தவள். புரவிகள் அவளை அறியும்” என்றார்.

“அரசே, மதுராவிலிருந்து இளவரசி இங்கு வந்து ஏழு நாட்களே ஆகின்றன. நெடும்பயணத்தின் களைப்பு இன்னும் ஆறவில்லை. இந்நீண்ட பயணத்திற்குப்பின் ஒருவேளை அதற்குப் பின் நிகழ இருக்கும் போரையும் இளவரசி எதிர்கொள்ள வேண்டும் அல்லவா?” என்றார் அக்ரூரர். இளைய யாதவர் “அவள் குன்றா வல்லமை கொண்டவள்” என்றார். பலராமர் தொடையில் அறைந்து நகைத்தார். “அவள் எனது பெண்வடிவம் அக்ரூரரே. கதையாடும் பெண் இப்பாரதவர்ஷத்தில் அவளொருத்தியே.”

“ஆம், அதை அறிவேன்” என்றார் அக்ரூரர். “ஆனால் நாம் இளவரசியை களத்துக்குக் கொண்டுசெல்கிறோம். அவர் வெல்வாரென்பதில் ஐயமில்லை. ஆனால் எவ்வண்ணமேனும் அவர் சிறைப்பட நேர்ந்தால் அது குலமன்றுக்கு முன் கேள்வியாகும். அரசியல் சூழ்ச்சிகளே நிலைமாறும். எனவே அவர் தந்தையிடம் ஒரு சொல் ஒப்புதல் கேட்டாக வேண்டும்.” இளைய யாதவர் “அவள் என் தங்கை. என் தமையனின் சொல்லே போதும்” என்றார்.

“இல்லை அரசே, முறைமைப்படி மட்டுமே அவள் தங்கள் தங்கை. தந்தை வசுதேவருக்கும் முதல் அரசி ரோகிணி தேவிக்கும் பிறந்தவரென்பதனால் அவ்வண்ணமாகிறது. ஆனால், மதுராவின் அரசரான வசுதேவர் துவாரகைக்கு தன் இளவரசியை விருந்தனுப்பி இருப்பதாகவே அரச முறைமைகள் கொள்ளும். போருக்கு அவரை அழைத்துச் செல்ல மதுராவின் அரசரின் ஒப்புதல் தேவை” என்றார் அக்ரூரர்.

இளைய யாதவர் சற்று எண்ணிவிட்டு “ஆம் ஒப்புதல் தேவை. ஒப்புதல் கோரி ஒரு பறவைத் தூது அனுப்புங்கள்” என்றார். அக்ரூரர் “பறவை சென்று மீள இருநாட்கள் ஆகுமே?” என்றார். “உகந்தவழியை அவந்தியின் இளவரசர்கள் நமக்கு காட்டியிருக்கின்றனர் அக்ரூரரே. இருநாட்களுக்கு முன் நாள் குறித்து அத்தூது செல்லட்டும்” என்றார். அவர் என்ன எண்ணுகிறாரென்பதை விழி நோக்கி அறிந்த அக்ரூரர் “ஆனால்…” என மேலும் இழுக்க “இன்னும் ஒரு நாழிகைக்குள் நாங்கள் கிளம்பியாக வேண்டும். சுபத்திரைக்கு ஆணை செல்லட்டும்” என்றார் இளைய யாதவர்.

தனக்கென ஆழி ஒளிசூடி எழுந்ததை, வெண்சங்கு மூச்சுகொண்டதை மித்திரவிந்தை அறிந்திருக்கவில்லை. அவளுக்கு மணத்தன்னேற்புக்கென அரங்கு ஒருக்கப்பட்டிருப்பதை செவிலிதான் வந்து சொன்னாள். அரங்கு ஒருங்கி அதில் அணிவேலைகள் நடப்பதைக் கண்டு உசாவியபின்னரே அவளும் செய்தியை அறிந்திருந்தாள். மூச்சிரைக்க ஓடி மகளிர்மாளிகைக்குள் சென்று அவள் அமர்ந்திருந்த கலைமண்டபத்தின் தூண்பற்றி நின்று “இளவரசி, அங்கே தங்கள் மணத்தன்னேற்புக்கென அனைத்தும் ஒருங்கிவிட்டிருக்கின்றன. வரும் நிறைநிலவுநாள் காலை முதற்கதிர் எழுகையில் முரசு இயம்பும் என்கிறார்கள்” என்றாள்.

நிமிர்ந்து நோக்கிய நங்கையிடம் “தங்கள் உளம் வாழும் வேந்தருக்கு அழைப்பில்லை என்று அறிந்தேன் தேவி. அஸ்தினபுரியின் இளவரசர் மட்டுமே வெல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது இக்களம். கதையேந்தி எதிர் நின்று போரிட அவருக்கு நிகரென இருக்கும் நால்வர் ஜராசந்தரும் கீசகரும் பீமசேனரும் பலராமரும் மட்டுமே. அவர்கள் நால்வருமே இங்கு வராமல் ஒழியும் வகையில் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. எனவே அஸ்தினபுரிக்கு அரசியென தாங்கள் செல்வது உறுதியென்றாகிவிட்டது என்கிறார்கள் ஏவலர்கள்” என்றாள்.

தன் உளம்நிறைத்து அருகிலென நின்றிருந்த அவனை நோக்கி முகம் மலர்ந்து அமர்ந்திருந்த திருமகள் திரும்பி “என்னை அவர் கொள்ள வேண்டுமென்பது அவர் திட்டமாக இருக்க வேண்டும் அல்லவா? அவர் என்னைக் கொள்வது என் தேவை அல்ல. அவர் முழுமை அது. அதற்கு நான் என்ன இயற்றுவது?” என்றாள். “இங்கு அவருடனிருக்கையில் ஒரு கணமும் பிரிந்திலேன். நான் எண்ணுவதும் ஏதுமில்லை செவிலி அன்னையே!”

செவிலி சொல்லிழந்து நோக்கி “அவ்வண்ணமே” என்றாள். ஆனால் ஒவ்வொரு நாளும் வளரும் அச்சமும் பதற்றமும் கொண்டவளானாள். “இளவரசி, தன்னேற்புக்கென அழைப்பு மணநிகழ்வன்று காலையில்தான் யாதவ மன்னரை சென்றடையும். இங்கு வருபவர்கள் பதினெட்டு சிற்றரசர்களும் அஸ்தினபுரியின் பெருந்தோளரும் மட்டுமே. நிலையழிந்திருக்கிறேன். நினையாதது நடக்குமெனில் எப்படி உயிர்வாழ்வேன்?” என்றாள். புன்னகையோடு மித்திரவிந்தை “இதில் எண்ணிக் கலுழ ஏதுள்ளது? தன் விழைவெதுவோ அதை நிலைநாட்டும் வித்தை அறிந்தவர் அவர் என்கிறார்கள். அவர் எண்ணுவது நிகழட்டும்” என்றாள்.

மணத்தன்னேற்பு குறித்த அன்றே விந்தரும் அனுவிந்தரும் தங்கள் படைகளுடன் வந்து நகரை சூழ்ந்திருந்தனர். அரண்மனையில் ஜெயசேனர் தன் யாதவ அரசி ரஜதிதேவியுடன் அணுக்கர் சூழ அறியாச் சிறையிலிருக்க பட்டத்தரசி பார்கவியால் ஆளப்பட்டது மாகிஷ்மதி. கர்ணகரின் சொல்படி செயலாற்றினர் ஒற்றர். அரண்மனை முற்றத்தில் அமைந்த மணத்தன்னேற்புக் களத்தில் இடப்பக்கம் குலமூதாதையரும் குடிமுதல்வரும் அமரும் நூறு இருக்கைகள் அமைந்தன. வலப்பக்கம் மாலைகொள்ள வரும் அரசகுடியினருக்காக நாற்பது இருக்கைகள் மட்டும் போடப்பட்டன.

அக்ரூரரின் படைப்பிரிவு துவாரகையிலிருந்து கிளம்பியதை ஒற்றர்வழி அறிந்தார் அனுவிந்தர். “அவர்கள் கடுகி வருகிறார்கள். நாளை உச்சிவெயிலுக்குள் வந்துசேரக்கூடும்” என்றார். விந்தர் நகைத்து “புலரி மூப்படைவதற்குள் அஸ்தினபுரியின் இளவரசர் அவளுக்கு மாலையிட்டிருப்பார்” என்றார். “அவளை அம்மாளிகைக்கு வெளியே வீசும் ஒளியும் காற்றும்கூட தொடக்கூடாது. களம்வென்ற கௌரவர் மலர்மாலை கொண்டு சென்று நின்றிருக்கையில் அதன் வாயில் திறக்கட்டும். அவள் விழிதொடும் முதல் ஆண்மகனே அவர்தான் என்றாகட்டும்” என்றார். அனுவிந்தர் “ஆயினும் நாம் வாளாவிருக்கலாகாது மூத்தவரே. இளைய யாதவன் மானுடனல்ல மாயன் என்கிறார்கள். நாம் நூறுவிழிகள் கொண்டு துஞ்சாமலிருக்கவேண்டிய நேரம் இது” என்றார்.

மகளிர் மாளிகைக்குள் எவரும் நுழைய ஒப்புதல் அளிக்கப்படவில்லை. உள்ளிருந்து ஒருவரும் வெளியேறவும் முடியவில்லை. வேலணியும் வாளணியும் மாளிகையை சூழ்ந்திருந்தன. வில்லணியினர் காவல்மாடங்களில் கண்துஞ்சாதிருந்தனர். அனுவிந்தர் நூறு வேட்டைநாய்களை கொண்டுவந்து மகளிர்மாளிகையைச் சூழ்ந்த அணிக்கானகத்தில் நிறுத்தி அயலவர் மணத்தை கூர்ந்துசொல்லச் செய்தார். அவன் மாயச்சிறகுகொண்டு பறந்து வரக்கூடுமென்பதனால் மாளிகையைச் சூழ்ந்து நூறு கிள்ளைக்கூண்டுகள் அமைக்கப்பட்டன. அவை மணிக்கண்களால் வானை நோக்கி ‘எவர்? எவர்?’ என அஞ்சி அஞ்சி வினவிக்கொண்டிருந்தன.

“இளவரசி, இம்மாளிகைக்குள் நாகரும் தேவரும் நுழையமுடியாதபடி காவலிடப்பட்டுள்ளது” என்றாள் செவிலி. “இளைய யாதவர் நகர் நுழைந்தால்கூட இம்மாளிகையை போரில்லாது அணுகவியலாது. போரிடுவது இத்தருணத்தில் நிகழாது என்கிறார்கள்.” அச்சொற்களை உள்வாங்காமல் விழிமலர்ந்து புன்னகைத்து “இன்று காலைமுதல் இச்சிற்றெறும்புகள் என் அறைக்குள் வந்துகொண்டிருக்கின்றன அன்னையே. செந்நிறமும் கருநிறமும் கொண்டவை. இவற்றையே நோக்கிக்கொண்டிருக்கிறேன்” என்றாள்.

செவிலி குனிந்து நோக்கி “மரச்சுவரின் விரிசல் வழியாக வருகின்றன” என்றாள். அவற்றிலொன்று இழுத்துச்சென்ற மணியை நோக்கி “இது வஜ்ரதானியம் அல்லவா? எங்கிருந்து கொண்டுசெல்கிறது?” என வியந்தாள். “செந்நிறமணிகளும் உள்ளன அன்னையே” என்றாள் மித்திரவிந்தை. “ஆம், அவை கேழ்வரகு மணிகள். அவை தினை மணிகள். பொன்னிறமானவை நெல்மணிகள்” என்றாள் செவிலி. “கீழே மகளிர்மாளிகையின் கூலக்களஞ்சியம் உள்ளது. அங்கிருந்து நிரைஎழுகின்றன.”

“கால்முளைத்த கூலமணிகள்” என மித்திரவிந்தை நகைத்தாள். “பேரரசி ஒருத்திக்கு சீர்கொண்டு செல்லும் யானைகள் என எண்ணிக்கொண்டேன்.” செவிலி அவளை நோக்கி “இளவரசி ஆடல்பருவத்தை நீங்கள் கடக்கவேயில்லை” என்றாள். “பொருள்சுமந்த சொற்கள் என பின்னர் தோன்றியது” என்றாள் மித்திரவிந்தை. பெரியதோர் வெண்பையுடன் சிலந்தி ஒன்று சென்றது. “அதுவும் கூலமூட்டையா கொண்டுசெல்கிறது?” என்றாள். “இளையோளே, அது அவளுடைய மைந்தர்மூட்டை” என்றாள் செவிலி. “எட்டு புரவிகள் இழுக்கும் தேர்போன்றுள்ளது” என்றாள் மித்திரவிந்தை. “நான் சென்று கூலப்புரையில் எங்குள்ளது விரிசலென்று கண்டுவருகிறேன்.”

அவள் தலையசைத்தபின் குனிந்து நோக்கினாள். மணிசுமந்து சென்ற எறும்புகளின் கண்களை நோக்க விழைந்து மேலும் குனிந்தாள். அவற்றின் சிறுகால்கள் புரவிக்குளம்புகள் போல் மண்ணை உதைத்து முன்செல்வதை கண்டாள். எத்தனைபெரிய விழிகள் என அவள் எண்ணிக்கொண்டாள். ‘இவை துயில்வது எங்கனம்?’ செந்நிற எறும்பு “நாங்கள் துயில்வதே இல்லை” என்றது. “ஏன்?” என்றதும்தான் அவள் திகைத்து அவ்வெறும்புகளுடன் உரையாடிக்கொண்டிருப்பதை உணர்ந்தாள். “நீங்கள் யார்?” என்றாள். “என் பெயர் ஹர்ஷை. நான் சோனகுலத்தவள்” என்றது செவ்வெறும்பு. “நாங்கள் மைந்தரால் பொலிந்தவர்கள். அங்கே எங்களவள் ஒருத்தி தன் வயிறுபெருத்து மைந்தர் செறிந்து காத்திருக்கிறாள். அவளுக்கென சீர்கொண்டுசெல்கிறோம்.”

“எத்தனை மைந்தர்?” என்றாள் மித்திரவிந்தை உடல்மெய்ப்புற. “என் பெயர் மித்ரை. நான் குலத்தால் ஹிரண்யை” என்றது பொன்னிற எறும்பு. “எங்களுக்கு எண்ணென ஏதுமில்லை. விருகன், ஹர்ஷன், அனிலன், கிரிதரன், வர்தனன், உன்னதன், மகாம்சன், பாவனன், வஹ்னி, குஷுதி என அம்மைந்தர் பெயர்கொண்டுள்ளனர்” என்றது. கருநிற எறும்பு திரும்பி “இன்னும் முடியவில்லை கன்னியே” என்றது. “என் பெயர் காளகுலத்து கண்வை. எங்கள் குடியெழும் மைந்தர்கள் இன்னுமுண்டு. சங்கிரமஜித், சத்வஜித், சேனஜித், சபதனஜித், பிரசேனஜித், அஸ்வஜித், அக்ஷயன், அப்ரஹ்மன், அஸ்வகன், ஆவகன், குமுதன், அங்கதன், ஸ்வேதன், சைஃப்யன், சௌரன் என அந்நிரை முடிவிலாது செல்கிறது.”

“மென்மையான சிறிய வளை. அதற்குள் செம்மணல் விரித்து எங்கள் குருதியால் பாத்தி கட்டியிருக்கிறோம். அவ்வெங்குழம்பில் அவை ஊன் உண்டு உயிர் துளிர்த்துக்கொண்டிருக்கின்றன. இவை அவர்களுக்கான கூலமணிகள்” என்றது வெண்ணிற எறும்பான தவளகுலத்து சங்கவை. விழிநீர் குளிர மித்திரவிந்தை பெருமூச்சுவிட்டாள்.

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 80
அடுத்த கட்டுரைதேவதேவனை தவிர்ப்பது…