‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 80

பகுதி பன்னிரண்டு : இமையாநீலம் – 5

மித்திரவிந்தை பிறந்த அவ்வருடம்தான் உஜ்ஜயினியை தனிநாடாக தங்களுக்கு பிரித்தளிக்க வேண்டுமென்று கோரி விந்தரும் அனுவிந்தரும் குலப்பெருமன்றை கூட்டினர். அவர்களின் அன்னையும் பட்டத்தரசியுமான மாளவஅரசி பார்கவியின் அணுக்கரான குலமூத்தார் சுருதகிருஷ்ணர் அவையில் எழுந்து ஜெயசேனர் யாதவ அரசியை மணந்ததனால் குலமிழந்து பெருமை குறைந்துவிட்டார் என்று அவரும் அவர் குலமும் எண்ணுவதாக அறிவித்தார். அவரை ஆதரித்து மூன்று குலத்தவர் கூச்சலிட்டனர். அதை எதிர்த்து பிறர் கூச்சலிட அரசி சினத்துடன் எழுந்து தன் கொடிவழி வந்த இளவரசர் இனி குலமுறை பிழைத்த அரசருக்குக் கீழே இருந்து ஆள முடியாது என்றாள். அவர்களுக்கென தனி நாடும் முடியும் கொடியும் வேண்டுமென்று சொன்னாள்.

ஜெயசேனரின் அமைச்சர் பிரபாகரர் அவந்தி தொல்பெருமை கொண்ட நாடென்றாலும் குடிபெருகாது படைசிறுத்த அரசு என்றும், சூழ்ந்துள்ள ஆசுர நாடுகளின் அச்சுறுத்தலை யாதவப்படையின்றி வெல்ல முடியாதென்றும் சொன்னார். சினத்துடன் எழுந்து “நாணிழந்து அவை நின்று இதை உரைக்கிறீர் அமைச்சரே. ஆசுரக் கீழ்மதியாளரை வெல்ல யாதவச் சிறுமதியாளர் தேவை என்று உரைக்க முடிசூடி அமர வேண்டுமா ஒரு ஷத்ரியன்? எங்குளது இவ்வழக்கம்? இதை சூதர் நூலில் பொறித்தால் எத்தனை தலைமுறைகள் அவைகள்தோறும் நின்று நாண வேண்டும்? இன்று ஷத்ரியர் கூடிய பேரவையில் அவந்தி என்னும் பேரே இளிவரலை உருவாக்குகிறது அறிவீரா?” என்றாள் பார்கவி.

“குலமிலியின் துணைவியாக இம்மணிமுடி சூடி இங்கமர எனக்கு நாணில்லை. ஏனெனில் உயிருள்ளவரை இம்மங்கலநாணை பூணுவேனென்று உரைத்து இங்கு வந்தவள் நான். என் மைந்தர் அவ்வண்ணம் அல்ல. அவர்கள் பிறந்தபோது தூய ஷத்ரியரின் மைந்தர். இவர் கொண்ட காமத்தின் பொருட்டு அவர்கள் ஏன் குலமிழக்க வேண்டும்?” என்று பார்கவி கூவினாள். கைகளை தூக்கியபடி “நான் இன்று என் மைந்தருக்காக அல்ல, என் கொடிவழியினருக்காக பேசுகிறேன். இதை ஏற்கமுடியாது. ஒருபோதும் மூதன்னையர் முன் நின்று நான் இதை ஏற்றேன் என்று சொல்லமுடியாது” என்றாள்.

அரசியின் எரிசினமே அவள் குரலை அவையில் நிறுவியது. மன்று மேலும் அவளை நோக்கி சென்றது. சிறுசாரார் “முடிசூடி அமர்ந்த மன்னனுக்கு  முழுதும் ஆட்பட்டிருப்பதே குடிகளின் கடமை” என்றனர். பெரும்பாலானவர்கள் திரண்டு “குலமிழந்த அரசரின் கோல்நீங்கிப்போக இளவரசர்களுக்கு உரிமை உண்டு. தங்கள் குருதிகாத்து கொடிவழி செழிக்கவைக்க அவர்கள் முயல்வது இயல்பே” என்று கூறினர். கண்முன் தன் குடியவை இரண்டாகப்பிரிந்து குரலெழுப்பி பூசலிடுவதைக்கண்டு ஜெயசேனர் நடுங்கும் உடலுடன் கைகளை வீசி “அமைதி! குடிகளே, குலமூத்தாரே, சான்றோரே! அமைதி கொள்ளுங்கள்! நாம் இதை பேசி முடிவெடுப்போம்!” என்று கூவிக்கொண்டிருந்தார்.

அவர்களோ ஒவ்வொருவரும் பிறிதொருவரின் சொல்லினால் புண்பட்டனர். ஒவ்வொருவருக்கும் அவையில் தனிப்பட்ட எதிரிகளிருந்தனர். தன் எதிரியைக் கொண்டே தான் எடுக்கும் நிலைப்பாட்டை முடிவு செய்தனர். பூசலிடுவதின் பேரின்பத்தில் ஒருவர் மேல் மிதித்து பிறிதொருவர் ஏற விண்ணில் விண்ணில் என எழுந்து முகில்கள் மேல் அமைந்து வாள் சுழற்றினர். சொற்கள் கூர்மைகொண்டு கிழித்த குருதி பெருகி அவை நிணக்குழியாகியது. அதில் வழுக்கி விழுந்தும் எழுந்தும் புழுக்களைப்போல நெளிந்தனர்.

பொறுமை இழந்த ஜெயசேனர் எழுந்து கைகளைத்தட்டி “கேளீர்! கேளீர்! இதோ அறிவிக்கிறேன். அவந்தி இருநாடுகளெனப் பிரிந்தது. இனி அவர்கள் என் மைந்தர்கள் அல்ல. உஜ்ஜயினியை தலைநகராக்கி அவர்கள் தனிமுடிகொண்டு ஆளட்டும். தெய்வங்கள் சான்று. மூதாதையர் சான்று. இந்த அவையும் என் குடையும் கொடியும் சான்று” என்று ஆணையிட்டார். அதற்கென்றே பூசலிட்டபோதும் அத்தனை விரைவில் அவ்வறிவிப்பு எழுந்தபோது அவைமன்றில் இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்து சொல்லழிந்தனர்.

நடுங்கும் கைகளுடன் நின்று தன் அவையினர் விழிகள் ஒவ்வொன்றையாக நோக்கி பின் தலைமேல் இருகைகளை கூப்பி “அனைவரையும் வணங்குகிறேன். என் குலதெய்வங்களின் அருளால் மூதன்னையர் முகம் கொண்டு எனக்கொரு மகள் மடிநிறைத்திருக்கிறாள். திருமகள் அவள் என்றனர் நிமித்திகர். அவள் பிறந்த நாளன்று இங்கு இந்நாடு பிளவுறுமென்றால் அது தெய்வமென எழுந்தருளிய அவள் ஆடலே என்று கொண்டு நெஞ்சமைகிறேன். மங்கலமன்றி பிறிதறியாதவள் அவள் என்றனர் நிமித்திகர். மங்கலம் நிகழும் பொருட்டே இது என்று துணிகிறேன். அவள் அருள்க!” என்றபின் சால்வையை எடுத்து தோளிலிட்டு பின்னால் எழுந்து பதைத்த எவர் சொல்லையும் கேட்காமல் திரும்பி உள்ளறைக்குச் சென்றார். அவர் செல்லவிருப்பதை உணராது நின்ற குடைவலனும் அகம்படியினரும் அவருக்குப்பின்னால் ஓடினர். அவை அரசியையும் இளவரசர்களையும் நோக்கி செயலிழந்து அமர்ந்தது.

இளவரசி பிறந்த வேளையில் நாடு பிளவுண்டது என்று அவந்தியில் அவச்சொல் சுழன்றது. அவள் மாமங்கலை என்று சொன்ன நிமித்திகரோ “ஆம், நானே உரைத்தேன். அது என் சொல்லல்ல, என்னிலெழுந்தருளும் என் மூதாதையரின் பெருஞ்சொல். சொல் பிழைத்த வரலாறு அவர்களுக்கு இல்லை. மாமங்கலை மண்மேல் வந்துவிட்டாள். கிளைவிரித்து மலரெழுந்து கனி பழுத்து நிறைவாள். ஐயமொன்றில்லை” என்றார். விந்தரும் அனுவிந்தரும் அவர்கள் அரசநிகரிகளாக இருந்தாண்ட அதே மண்ணை தனிமுடியாகப் பெற்று எல்லை அமைத்து எடுத்தனர்.

அவந்தியின் தலைநகராகிய மாகிஷ்மதி ஐம்பத்தாறு நாடுகளில் ஒன்றென அது உருவான தொல்பழங்காலத்தில் கட்டப்பட்டது. தாழ்ந்த மரக்கட்டடங்கள் ஒன்றுடனொன்று தோள் முட்டிச் சூழ்ந்த அங்காடி முற்றமும் அதன் தென்மேற்கு மூலையில் ஏழன்னையர் ஆலயமும் நடுவே கொற்றவையின் கற்கோயிலும் கொண்டது. சிற்றிலையும் சிறுமலரும் எழும் குற்றிச்செடி போல் அந்நகர் காலத்தில் சிறுத்து நின்றிருந்தது. அங்கு பெரும் துறைகள் இல்லை. அங்காடிகள் அமையவில்லை. மலைப்பொருள் கொள்ள வரும் சிறுவணிகரும் பொருள்கொண்டு இறங்கும் பழங்குடிகளுமன்றி பிறர் அணுகவில்லை.

உஜ்ஜயினியோ ஒவ்வொரு நாளும் புது ஊர்கள் பிறந்து கொண்டிருந்த தண்டகாரண்யப் பெருநிலத்தை நோக்கிச் செல்லும் வணிகப்பாதையின் விளிம்பில் அமைந்திருந்தது. சர்மாவதியில் கட்டப்பட்ட புதிய துறைமுகத்தை கொண்டிருந்தது. தென்மேற்கே விரிந்த பெரும்பாலையில் கிளை விரித்துச் சென்று சிந்து நாட்டுக்கும் துவாரகைக்கும் வணிகம் அமைத்த மணற்சாலைகளின் தொடக்கமாக இருந்தது. எனவே ஒவ்வொரு நாளும் செல்வம் அங்கு குவிந்தது. விந்தரும் அனுவிந்தரும் அந்நகரைச் சுற்றி ஒரு கற்கோட்டையை எழுப்பினர். காவல்மாடங்களில் தங்கள் மணிப்புறா கொடியை பறக்கவிட்டனர். துவாரகையை அமைத்த சிற்பிகளை வரவழைத்து வெண்சுதை மாடங்கள் கொண்ட ஏழு அரண்மனைகள் கட்டிக் கொண்டனர். அவர்களுக்கென தனிப்படையும் அமைச்சும் சுற்றமும் அமைந்தன.

காலம் பெருக களஞ்சியம் நிறைய வளைநிறைத்து உடல் பெருத்த நாகங்களென்றாயினர் உடன்பிறந்தார். மாகிஷ்மதியும் தங்களுக்குக் கீழே அமைந்தாலென்ன என்ற எண்ணம் கொண்டனர். விந்தர் அனுவிந்தரிடம் சில மாறுதல்களை முன்னரே கண்டிருந்தார். இளையவராகவும் இரண்டாமவராகவும் இருப்பதில் கசப்பு கொண்டவராகத் தெரிந்த அனுவிந்தரை மாகிஷ்மதியின் மன்னராக்கி தன் இணையரசராக அறிவிக்க வேண்டுமென்று திட்டமிட்டார். ஏழு பெண்ணழகுகளும் எழுந்து வளர்ந்த இளவரசியை யாதவகுலம் கொள்ளலாகாது  என்றார் விந்தர். அவள் இளைய யாதவனை எவ்வகையிலும் அறியலாகாது என்றார் அனுவிந்தர். “பெண் உள்ளம் கவரும் மாயம் கற்றவன் அவன். அவனைக்குறித்த ஒரு சொல்லும் ஒரு தடயமும் அவளை சென்றடையலாகாது” என்று ஆணையிட்டனர்.

விந்தரும் அனுவிந்தரும் அமைத்த ஒற்றர் வலையத்தால் மகளிர் மாளிகை முற்றிலும் சூழப்பட்டது. நினைவறிந்த நாள் முதலே தமையர்களின் ஆணைக்கு அமையும் சேடியரும் செவிலியரும் ஏவலரும் வினைவலரும் படைவீரரும் சூழ இளவரசி மித்திரவிந்தை வளர்ந்தாள். அவள் செவியில் விழும் ஒவ்வொரு சொல்லும் ஏழுமுறை சல்லடைகளால் சலிக்கப்பட்டது. இளைய யாதவர் என்ற சொல்லையோ துவாரகை என்ற ஒலியையோ அவள் அறியவில்லை. அவள் வேய்ங்குழல் என்றொரு இசைக்கருவி இருப்பதை அறியவில்லை. மயிலென ஒரு பறவையை கண்டதில்லை. அவள் விழிகளில் நீலம் என்னும் நிறம் தெரிந்ததே இல்லை. ஆழியும் சங்கும் அங்குள்ள பிறர் சித்தத்திலிருந்தும் மறைந்தன.

அவந்தி இரு நாடெனப்பிரிந்தபோதே ஜெயசேனர் உளம் தளர்ந்துவிட்டார். அரண்மனைக்கு வெளியே அவரைக் காண்பது அரிதாயிற்று. அவையமர்ந்து அரசு சூழ்தலும் அறவே நின்று போயிற்று. அமைச்சர் பிரபாகரர் ஆயிரமுறை அஞ்சி ஐயம்கொண்ட சொல்லெடுத்து இடும் ஆணைகளால் ஆளப்பட்டது அந்நகரம். குடிகள் பொருள் விரும்பியும் குலம்நாடும் சூழல் விரும்பியும் ஒவ்வொரு நாளுமென உஜ்ஜயினிக்கு சென்று கொண்டிருந்தனர். அரண்மனை உப்பரிகையில் ஒரு நாள் காலையில் வந்து நின்று நோக்கிய ஜெயசேனர் கலைந்த சந்தை நிலமென தன் நகரம் தெரிவதைக் கண்டு உளம் விம்மினார்.

அவரைச் சூழ்ந்து ஒற்றர்களையே அமைச்சென படையென குடியென ஏவலரென எண்ணி  நிறைத்திருந்தனர் மைந்தர். வெறுமை அவரை மதுவை நோக்கி கொண்டு சென்றது. ஓராண்டுக்குள் விழித்திருக்கும் நேரமெல்லாம் மது மயக்கில் இருப்பவராக அவர் ஆனார். உடல் தளர்ந்து மதுக்கோப்பையை எடுக்கும் கைகள் நடுங்கி மது தளும்பி உடை மேல் சிந்தலாயிற்று. கண்கள் பழுக்காய்ப் பாக்குகளென ஆயின. உதடுகள் கருகி அட்டைச்சுருளாயின. கழுத்திலும் கைகளிலும் நரம்புகள் கட்டு தளர்ந்த விறகின் கொடிகள் என்று தெரிந்தன. படுக்கையிலிருந்து எழும்போதே மதுக்கிண்ணத்துடன் ஏவலன் நின்றிருக்க வேண்டுமென்றாயிற்று.

நாளெழுகையில் மதுவருந்தி குமட்டி கண்மூடி அமர்ந்திருப்பவரை ஏவலர் இருவர் மெல்ல தூக்கி காலைக் கடன்களுக்கு கொண்டு செல்வர். புகழ் பெற்ற அவந்தியின் அருமணிபதித்த மணிமுடியை சூடும் ஆற்றலையும் அவர் தலை இழந்தது. எனவே ஏழன்னையர் வழிபடப்படும் விழவுநாளில் மட்டும் அரைநாழிகை நேரம் அந்த மணியை அவர் சூடி அமர்ந்திருந்தார். அரியணைக்குப்பின் வீரனொருவன் பிறரறியாது அதை தன் கையால் பற்றியிருந்தான். வலக்கையில் அவர் பற்றியிருந்த செங்கோலை பிறிதொருவன் தாங்கியிருந்தான். அரியணையில் அமருகையில் சற்றுநேரம் கூட மதுவின்றி இருக்க முடியாதவரானார்.

உற்ற ஆசிரியர்கள் அமர்த்தப்பட்டு நெறிநூலும் காவியமும் இளவரசிக்கு கற்பிக்கப்பட்டன. இசையும் போர்க்கருவியும் பயிற்றுவிக்கும் சூதரும் ஷத்ரியரும் அமர்த்தப்பட்டனர். ஆனால் விந்தரின் அமைச்சர் கர்ணகரின் கட்டுப்பாட்டில் இருந்தது அவள் கல்வி. ஒவ்வொரு நூலும் முற்றிலும் சொல் ஆயப்பட்டன. ஒவ்வொரு கலையும் நுணுகி நோக்கப்பட்டது.. சிற்பியரும் சூதரும் இணைந்து கல்லிலும் சொல்லிலும் செய்த பொய்யுலகொன்றன்றி பிறிதேதும் அறியாது வாழ்ந்தாள். பொய்மை அளிக்கும் புரை தீர்ந்த மகிழ்வில் திளைத்தாள். அவள் செல்லுமிடமெங்கும் முன்னரே சென்று அவளுக்கான உலகை அமைக்கும் வினைவலர் திரள் குறித்து அவள் உணர்ந்திருக்கவில்லை. அவள் அறிந்தவற்றாலான அச்சிறு உலகுக்கு அப்பால் புன்னகையும் குழலிசையும் நீலமுமென நிறைந்திருந்தான் அவள் நெஞ்சுக்குரியவன்.

பன்னிரண்டாவது வயதில் சர்மாவதியில் இன்னீரில் ஆடி எழுந்து ஈரம் சொட்ட அவள் வந்து மறைப்புரைக்குள் நின்று ஆடை மாற்றிக்கொண்டிருந்தபோது குழலிசை ஒன்றை கேட்டாள். அதுவரை கேட்டிராத அவ்வோசை எதுவென்று அகம் திகைத்து ஆடையள்ளி நெஞ்சோடு சேர்த்து நின்றாள். தன்னைச் சூழ்ந்து ஒலித்த மென்பட்டு நூல் போன்ற அவ்விசையைக் கேட்டு அவள் முதலில் அஞ்சினாள். கந்தர்வரோ கின்னரரோ கிம்புருடரோ அறியா உருக்கொண்டு தன்னை சூழ்ந்துவிட்டதாக எண்ணினாள். அச்சக்குரலெழுப்பி ஓடிவந்து செவிலியிடம் “அன்னாய், நான் ஒரு ஒலி கேட்டேன். வெள்ளிக்கம்பியை சுற்றியது போன்ற அழகிய இசைச்சுருள் அது” என்றாள்.

எது அவ்வொலி என்று எண்ணி எழுந்து அறைக்குள் புகுந்ததுமே செவிலியும் அக்குழலிசையை கேட்டாள். என்ன மாயமிது என்று எண்ணி மலைத்து சுவருடன் முதுகு சேர்த்து தன் நெஞ்சம் அறைவதைக் கேட்டு நின்று நடுங்கினாள் மெல்லிய குழலோசை செவ்வழிப்பண்ணில் ’இன்று நீ! இன்று நீ!’ என்று சொல்லிக்கொண்டிருந்தது. முலை கனிந்த பேருடல் குலுங்க வெளியேறி இடைநாழி வழியாக ஓடி ஏவலரை அழைத்து “பாருங்கள்! எங்கொலிக்கிறது இவ்விசை?” என்றாள். ஏவலர் வரும்போது அந்த இசை நின்றுவிட்டிருந்தது. “இங்குதான் எங்கோ அவ்விசையை எவரோ எழுப்புகிறார்கள். நான் கேட்டேன்” என்று செவிலி கூவினாள்.

வாளுடனும் வேலுடனும் ஆடை மாற்றும் அறையைச்சூழ்ந்து ஒவ்வொரு மூலையிலும் இடுக்கிலும் தேடினார்கள் வீரர்கள். “செவிலியன்னையே, இங்கு மானுடர் வந்ததற்கான தடயமேதுமில்லை” என்றான் படைவீரன். “அவ்வண்ணமெனில் குழலிசை இசைத்தது யார்? நான் கேட்டேன்” என்றாள் செவிலி. “அது மாயமாக இருக்கலாம். அவனறியாத மாயம் ஏதுமில்லை என்று சூதர்கள் சொல்வது உண்மையாக இருக்கலாம்” என்றான் வீரன். “வாயைமூடு. இச்சொல்லை சொன்னதற்காகவே நீ கழுவிலேறுவாய்” என்று செவிலி சீறினாள்.

தேரிலேறி நகர் மீளும்போது அவளருகே ஈரக்குழல் காற்றில் பறக்க உடல் ஒட்டி அமர்ந்திருந்த மித்திரவிந்தை மெல்லிய குரலில் “அந்த இசைக்கு என்ன பெயர் அன்னாய்?” என்றாள். “அது இசையல்ல பிச்சி, வெறுமொரு ஓசை” என்றாள் செவிலி. “இல்லை, நான் இதுவரை கேட்ட எவ்விசையையும் வெல்லும் இனிமை கொண்டது அது. யாழும் முழவும் காற்றொலிக்கும் பிறவெதுவும் அதற்கிணையாகாது. அன்னையே, பிற இசையனைத்தும் இலைகளும் தளிர்களுமென்றால் இவ்விசையே மலர்” என்றாள். கண்மூடி முகம் மலர்ந்து “நறுமணம்போல் மெல்லொளி போல் இன்சுவைபோல் இளங்குளிர்போல் இசையொன்று ஆக முடியுமா? இன்று கண்டேன். இனி ஒரு இசை என் செவிக்கு உகக்காது” என்றாள்.

அரண்மனைக்குச்செல்லும் பாதையில் அவள் முன் எழுந்த காட்சிகள் அனைத்திலும் அந்த இசை பொன்னூல் மணிகளில் என ஊடுருவிச் செல்வதை கேட்டாள். தன் அறைக்குச்சென்று புத்தாடை புனைந்து அணிகள் பூண்டு இசையறைக்குச் சென்று அமர்ந்தவள் யாழ் தொட்டு குறுமுழவு தொட்டு சலித்தாள். “இக்கருவிகள் எவையும் அவ்விசையை எழுப்ப முடியாது. குயிலைச் சூழ்ந்த காகங்கள், நாகணவாய்கள், மைனாக்கள் இவை.  வான்தழுவும் கதிரொளியை கல்லில் எழுப்ப முயல்வது போன்றது அன்னையே, இவை தொட்டு அவ்விசையை உன்னுவது.”

“அது இசையல்ல குழந்தை, ஏதோ கந்தர்வர்கள் செய்த மாயம். அதற்கு உன் உள்ளத்தை அளிக்காதே. விலகிவிடு. ஒவ்வொரு நாளும் உன்னைச்சூழும் செயல்களில் எண்ணத்தை நாட்டு. இல்லையேல் அக்கந்தர்வன் உன்னை கவர்ந்து செல்வான். விண்முகில்களில் வைத்து உன்னை நுகர்வான். சூடியமலர் என மண்ணில் உதிர்த்து மறைவான்” என்றனர் செவிலியர். அஞ்சி எழுந்தோடி அன்னை கழுத்தைச் சுற்றி இறுக அணைத்தபடி “என்னை ஏன் அக்கந்தர்வன் கொண்டு செல்லவேண்டும்?” என்றாள். “கன்னிக் கனவுகளைத் தொட்டு அவர்களை மலரச்செய்பவன் கந்தர்வன். முழுதும் மலர்ந்த மலர்களை தனக்கென சூடிச்செல்வான். கன்னியர் கனவுகளை உண்டுதான் அவர்கள் உயிர்வாழ்கிறார்கள். இளையோளே, கந்தர்வரின் இசைக்கும் நறுமணத்துக்கும் முழுமனம் அளிக்காதிருப்பதே கன்னியர் தங்களை காத்துக் கொள்ளும் முறையாகும்” என்றாள் செவிலி.

இளவரசி முகம் வெளுத்து செவிலிமுலையில் முகம் சேர்த்து உடல் நடுங்கினாள். பின்பு விழி தூக்கி “என்னால் இயலவில்லை அன்னையே. என் உளம் முழுக்க விசையாக்கி விலக்க விலக்க பேருருக்கொண்டு என்னைச் சூழ்கிறது அவ்விசை. அந்த மெட்டன்றி பிறிதெதையும் என் செவியறியவில்லை. சித்தம் என் எண்ணங்களையே தான் வாங்கவில்லை” என்றாள். “இப்போது என் விழிகளில் விரல்நுனிகளில் ததும்புகிறது அது. நான் பார்க்கும் இவ்வொவ்வொன்றும் மெல்லிய ஒளிவளையமாக அவ்விசையை சூடியுள்ளன” என்றாள். “அன்னையே, என் உடலே ஒரு நாவென்றாகி தித்திக்கிறது. பாருங்கள்! தித்திப்பு என் கைகளில், இதோ என் தோள்களில்,  இக்கணம் என் நெஞ்சில், இடையில்…” என்று கூவினாள்.

அன்றிரவு தனிமையில் மென்சிறகுச் சேக்கையில் விழிமூடி படுத்திருக்கையில் அவ்விசையை கேட்டாள். பெருகிவந்து அவளைச் சூழ்ந்து அந்த மஞ்சத்தை மெல்ல தூக்கி சாளரம் வழியாக வெளியே கொண்டு சென்று விண்மீன்கள் செறிந்த கோடை காலத்து வானின் முகில்களின் மீது வைத்துச் சென்றது. அனலேறிய விழிகளுடன் அன்றிரவு முழுக்க அவ்விசையையே கேட்டுக்கிடந்தாள். தன்னை இங்குவிட்டு அங்கு சென்று திரும்பி நோக்கி இவளெவள் இதுவென்ன என்று வியந்தாள். அது நான் அங்கே நான் என இருந்தாள்.

ஏவலரை அனுப்பி அக்குளியலறையை நன்கு நோக்கிய செவிலி அதன் மூங்கில் கழி ஒன்றில் வண்டு இட்ட துளை வழியாக காற்று வெளியேறும் ஒலியே அது என்று அறிந்தாள். அத்துளைகளை உடனடியாக மூட ஆணையிட்டாள். “இளவரசி, வண்டு துளைத்த வழியில் காற்று கடந்து செல்லும் ஒலி அது. இசை அல்ல என்றுணர்க!” அவள் நீள்மூச்செறிந்து “ஆம், அவ்வண்ணமே நானும் எண்ணினேன்” என்றாள். “வெறுமொரு மானுட இதழ் எழுப்பும் இசையல்ல அது. விண்வடிவான ஒன்றின் மூச்சு. இசையாக மாறி எழுந்தது. செவிலியன்னையே, இனி ஒரு மண்ணிசைக்கென என் செவிகளை கொடுக்கலாகாது” என்றாள்.

நாளும் பொழுதும் என வாரங்களும் மாதங்களும் அவ்விசையில் அவள் இருந்தாள். கண் குழிந்து உடல் மெலிந்து இளங்காற்றில் நடுங்கும் சிலந்திவலை போல் நொய்மை கொண்டாள். “எண்ணெய் தீர்ந்த சுடரென குறுகிக் கொண்டிருக்கிறாள். இனி வாழ மாட்டாள்” என்றனர் சேடியர். “கந்தர்வன் அவள் நலமுண்ணுகின்றான். இனி அவள் சூடுநர் இட்ட பூ.” அன்னை மருத்துவரைக் கொண்டு அவளை பார்க்க வைத்தாள். ”நோயென்று ஏதும் உடலில் இல்லை அரசி. ஆனால் சென்று தொடுவானில் மறையும் குதிரையின் குளம்படி என அவள் நரம்புகள் அதிர்வை இழக்கின்றன” என்றார் மருத்துவர். “அன்னை இங்கிருந்து தன்னை விலக்க எண்ணிக்கொண்டாளோ என்று ஐயுறுகிறேன். இதற்கு மருத்துவம் செய்வதற்கொன்றுமில்லை. அவளே எண்ணங்கொள்ள வேண்டும்.”

பாலும் இளநீருமன்றி எதுவும் பருக முடியாதவளானாள். அவள் இதழ்களிலிருந்து சொற்கள் மறைந்தன. விழிகள் எவரையும் நோக்காதவையாயின. மூச்சு ஓடுவதையும் காணமுடியாமலாகியது. உலோகப்பரப்புகளின் ஊடாக வண்ண நிழலொன்று செல்வதுபோல் ஓசையற்று நடந்தாள். ஒவ்வொரு நாளும் அவளைக்கண்டு நெஞ்சு கலுழ்ந்தாள் செவிலி. அவள் படுக்கையறை மஞ்சத்தின் கீழ் கால் மடித்தமர்ந்து கை நீட்டி நீல நரம்புகள் புடைத்த அல்லிமலர்க் கால்களைத் தொட்டபடி தலை சாய்த்து அமர்ந்திருந்தாள். முலை சேர்த்து அவளுக்கு அமுதூட்டிய பகல்களை தோளிலேற்றி தோட்டத்தில் உலவிய மாலைகளை மடிசேர்த்து அமர்த்தி விண்மீன் காட்டிச் சொன்ன இரவுகளை எண்ணி எண்ணி உளம் உருகினாள். இரவும் பகலும் அங்கிருந்து அவள் கால்களை வருடிக் கொண்டிருந்தாள். அவளிலிருந்து அவள் விழைந்த கைம்மகவை அள்ளி அள்ளி எடுப்பவள்போல.

விடியலில் ஒரு நாள் துயின்று புலரியொளியில் எழுந்தபோது அக்கால்கள் குளிர்ந்திருப்பதை கண்டாள். திடுக்கிட்டு எழுந்து இறந்த மீன்கள் போல குளிர்ந்திருந்த அவ்விரல்களைப் பற்றி அசைத்து “இளவரசி இளவரசி” என்று கூவினாள். விழிப்பின்மை கண்டு பதறி விழுந்துகிடந்த அவள் இரு கைகளையும் தூக்கி தன் கன்னங்களில் அறைந்து கொண்டாள். மித்திரவிந்தையின் உடல் மட்டுமே எஞ்சியிருந்தது. அவள் மூக்கில் கை வைத்தபோது மூச்சு ஓடுவதை உணரமுடியவில்லை. இமைகளைத் தூக்கியபோது கருவிழி மறைந்து பால்படலம் மட்டுமே தெரிந்தது. “தெய்வங்களே! என் குலதெய்வங்களே!” என்று ஓசையின்றி அலறியபடி மஞ்சத்தில் தானும் விழுந்தாள் செவிலி.

அக்கணம் அவளில் எழுந்தது அவள் செய்தேயாக வேண்டிய பணி.  இளவரசியின் இரு கைகளையும் இறுகப்பற்றி அள்ளித்தூக்கி தன் நெஞ்சோடணைத்து வெள்ளைச் சங்குமலர் போன்ற செவிமடலில் வாய்வைத்து “அவன் பெயர் கிருஷ்ணன். கன்னியருக்கு அவன் கண்ணன். இப்புவிக்கு ஆழிவெண்சங்குடன் அமர்ந்த அரசன். அன்றலர்ந்த நீலன். பீலி விழி பூத்த குழலன். அவன் இதழ் மலர்ந்த இசையையே நீ கேட்டாய். இப்புவியை உருக்கி வெண்ணிலா வெள்ளமாக ஆக்கும் அவ்விசையைப் பாடாத சூதர் இங்கில்லை. அன்னையே, நீ அவனுக்குரியவள்” என்றாள். அதை சொன்னோமா எண்ணினோமா பிறிதொரு குரல் அருகே நின்று அதைக் கூவக்கேட்டோமா என மயங்கினாள்.

வாழ்வெனும் பெருக்குக்கு கரையென்றான இருளுக்கு அப்பால் சென்றுவிட்டிருந்த அவள் தன் குரலை கேட்டாளா என்று அவள் ஐயுற்றாள். மீண்டும் மீண்டும் “அவன் பெயர் கிருஷ்ணன், உன் நெஞ்சமர்ந்த கண்ணன்” என்று கூவினாள். “அன்னையே எழுக! உன் கைமலர் மாலை சூடும் நீலத்தோள் கொண்டவன் அவன். உன் விழிமலர் நோக்கி விரியும் முகக்கதிர் கொண்டவன். அவன் பெயர் கிருஷ்ணன். உன் முத்தங்கள் கரைந்த மூச்சில் அவன் பெயர் கண்ணன்.”

என்ன செய்கிறேன், எவர் சொற்கள் இவை என்று தனக்குத்தானே வியந்தபடி மெல்ல அக்குளிர்ந்த உடலை தலையணை மேல் வைத்தாள். எழுந்து நின்று இரு கைகளாலும் முலைகளை அழுத்தியபடி இதழ் விம்ம கண்ணீர் வார நோக்கி நின்றாள். விழிகள் அசையாது அவள் முகத்திலேயே நிலைக்க மென்புன்னகை ஒன்று தன் மகளின் முகத்தில் மலர்வதைக் கண்டாள். “அன்னையே, எந்தாய்!” என்று அலறியபடி முழந்தாள் நிலத்தில் ஊன்ற விழுந்து அவள் இரு கைகளையும் பற்றி தன் தலைமேல் அறைந்தபடி “விழித்தெழுக! பிழை பொறுத்து என்னை ஆள்க! அன்னையே, என் குலதெய்வமே, மலர் அமர்ந்த செந்திருவே” என்று கதறினாள்.

புன்னகை இதழ்களை மலரச்செய்ய விழி விரித்து அவளை நோக்கி மெல்லிய குரலில் “கிருஷ்ணன்” என்றாள் மித்திரவிந்தை.

முந்தைய கட்டுரைசிந்திப்பவர்களுக்கான சிறப்புவாசல்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 81