‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 79

பகுதி பன்னிரண்டு : இமையாநீலம் – 4

சிறகசைக்காமல் விண்ணுக்குச் சுழன்றேறும் இரு பருந்துகள் என நகர்மையத்தில் அமைந்த யாதவரின் அரண்மனை நோக்கி புரிசுழல் சாலையில் ஏறிச்சென்றபோது சாத்யகி மெல்ல மெல்ல ஒலி அவிந்து இன்மை என்றாகிவிட்டிருப்பதை திருஷ்டத்யும்னன் உணர்ந்தான். முன்னால் சென்றபோது தொடர்ந்து வரும் புரவியின் மேல் சாத்யகி இல்லையென்றே தோன்ற துணுக்குற்று இருமுறை திரும்பி நோக்கினான். ஒருமுறை சாத்யகியின் விழிகளை சந்தித்தபோது அவை தன்னை அறியவில்லை என்றுணர்ந்து திரும்பிக்கொண்டு அறியா அச்சம் ஒன்று தன்னுள் நிகழ்வதை அறிந்தான்.

ஏதாவது ஒன்றை அவனிடம் கேட்பதனூடாக அவன் மேல் இறங்கிச் சூழ்ந்த அவ்வொலியின்மையை கிழிக்கமுடியும் என்று எண்ணினான். ஆனால் அவன் உள்ளத்தில் எழுந்த ஒவ்வொரு சொல்லும் பொருளிழந்து கூரற்று தெரிந்தன. பலமுறை சொற்களை எடுத்து நெருடி பின் நழுவவிட்டு இறுதியில் பெருமூச்சுடன் புரவிமேல் சற்று அசைந்து அமர்ந்தான். பன்னிரண்டாவது பாதை வளைவை கடந்தபோது இயல்பாக விழிதிருப்பிய திருஷ்டத்யும்னன் வியந்து கடிவாளத்தைப்பற்றி இழுத்து நிறுத்தி எதிர்ச்சுவரை நோக்கினான். திரும்பி சாத்யகியை நோக்கிவிட்டு வியப்புச்சொல் ஒன்று ஒலியின்மையாக தங்கிய உதடுகளுடன் மீண்டும் அச்சுவரை நோக்கினான்.

இணைக்குன்று மேல் எழுந்த துவாரகையின் பெருவாயில் அச்சுவரில் தலைகீழ் நிழல்வடிவில் விழுந்து கிடந்தது. விழிமயக்கா என்று வியந்து புரவியை ஒரு எட்டு எடுக்க வைத்து தலை நீட்டி மீண்டும் நோக்கினான். நிழல்கொள்ளும் பலநூறு தோற்றங்களில் ஒன்று போலும் என்று சொன்ன சித்தத்தை உறைய வைத்தபடி அது அதுவேதான் அதுவேதான் என்று எக்களித்தது அவனுள் உறையும் சிறுவனின் நோக்கு. ஒவ்வொரு சிற்பமும் நிழலுருவாக தெரிய நீர்ப்பாவை போல் மெல்ல அசைந்தபடி தெரிந்தது பெருவாயில். அந்த மாளிகை தன் வெண்பளிங்கு மார்பின்மேல் அணிந்த அட்டிகை போலிருந்தது.

திருஷ்டத்யும்னன் அருகே வந்துநின்ற சாத்யகியிடம் “பெருவாயில்!” என்றான். சாத்யகி “ஆம், காலையிலும் மாலையிலும் இளவெயில் எழும்போது சில சுவர்களில் பெருவாயிலின் இத்தலைகீழ் வடிவம் எழுவதுண்டு” என்றான். திருஷ்டத்யும்னன் “எவ்வாறு?” என்று நோக்க சாத்யகி கைநீட்டி “அதோ அந்த மாளிகையின் சிறு சாளரம் துளைவிழியென மாறி அப்பால் எழுந்த பெருவாயில் மேல் விழுந்த ஒளியை அள்ளி இங்கு தலைகீழாக சரித்துக் காட்டுகிறது” என்றான். திருஷ்டத்யும்னன் புரிந்துகொண்டு “ஆம், சில ஆலயங்களிலேயே இவ்வமைப்பு உள்ளது. முகப்புப் பெருங்கோபுரம் உள்ளறை ஒன்றின் சுவரில் தலைகீழாகத் தெரியும்” என்றான். “ஆனால் அதை மிகச்சிறிய நிழலாகவே கண்டுள்ளேன்” என்றான். சாத்யகி “இங்கு அனைத்துமே பெரியவை” என்று சொன்னபின்  நீள்மூச்சு விட்டான்.

மீண்டும் ஒருமுறை அக்கோபுரத்தை நோக்கியபின் “செல்வோம்” என்றான் திருஷ்டத்யும்னன். புரவிகள் எடைமிக்க குளம்போசையுடன் கற்பாளைங்களை மிதித்து முன் சென்றன. இறுதி வளைவிற்கு அப்பால் தொலைவில் வெண்சுண்ணத்தில் எழுந்த இளைய யாதவரின் மாளிகை தெரிந்தது. நிரை வகுத்த பெருந்தூண்களுடன் அது தந்தத்தால் செதுக்கப்பட்ட சீப்பு போல என்று திருஷ்டத்யும்னன் நினைத்தான். அக்கணமே சாத்யகி “பூதம் ஒன்றின் பல்நிரை விரிந்த நகைப்பு” என்றான். திருஷ்டத்யும்னன் திரும்பி அவனை நோக்க அச்சம் எழுந்த முகத்துடன் கடிவாளத்தை நரம்பு புடைக்க இறுகப்பற்றி இறுகிய பற்களின் ஊடாக நாகச் சீறல் போல எழுந்த குரலில் “இல்லை, நான் அங்கு வரப்போவதில்லை பாஞ்சாலரே” என்றான் சாத்யகி. “அப்பேருருவப் புன்னகையை என்னால் எதிர்கொள்ள முடியவில்லை.”

“ஏன்?” என்றான் திருஷ்டத்யும்னன். “அது… அம்மாளிகையின் தூண் நிரை…” என்று நடுங்கும் கைகளால் சுட்டி சாத்யகி சொன்னான். “ஒருமாளிகை புன்னகையென மாறுவதை இப்போதுதான் பார்க்கிறேன். எப்போதும் இது என்னை நோக்கி இளிவரல் நகை விடுத்துக்கொண்டுதான் இருந்திருக்கிறது. இப்போதுதான் நான் அதை காண்கிறேன்.” மெல்லிய விம்மலால் இடறிய குரலில் “இல்லை பாஞ்சாலரே, அதை எதிர்கொள்ளும் ஆற்றல் எனக்கில்லை” என்றான். திருஷ்டத்யும்னன் “யாதவரே!” என்று சொல்லி அவன் புரவியின் கடிவாளத்தைப் பற்ற கை நீட்டி சாய்வதற்குள் சாத்யகி கால்களை ஓங்கி புரவியின் விலாவில் உதைத்து கடிவாளத்தை இழுத்து அதைத் திருப்பி உருளைக்கற்கள் மலையிறங்கும் ஒலியுடன் கல்பாவிய சரிவுப்பாதையில் சுழன்றிழிந்து சென்றான்.

அவன் புரவியின் வால் சுழல்வதை, பின்னங்கால் சதைகள் நெகிழ்வதை சில கணங்கள் நோக்கிவிட்டு “யாதவரே!” என்று கூவியபடி தன் புரவியையும் குதிமுள்ளால் குத்தி எழுப்பி அது கனைத்து காற்றில் எழுந்து முன்குளம்பு மண்ணை அறைந்து பின் குளம்பு அதைத் தொடர்ந்து விழ விரைந்து சென்றான். சாத்யகியின் புரவி பேயெழுந்தது போல கனைத்தபடி எதிரே வந்த பிற புரவிகளையும் வணிகர்களின் மஞ்சல்களையும் சுமையேறிய அத்திரிகளையும் ஊடுருவிச் சென்றது. வௌவால் போல அறியா விழியொன்றால் செலுத்தப்பட்டது அது என்று தோன்றியது. அப்புரவி சென்ற வழியையே அவனும் தேர்ந்ததால் திருஷ்டத்யும்னனும் அதை தொடரமுடிந்தது. இருப்பினும் “விலகுங்கள்! விலகுங்கள்!” என கூவியபடியே அவன் சென்றான்.

அரச நெடும்பாதையில் சென்ற பன்னிரு சுழல்வழிகளையும் திரும்ப இறங்கி பக்கவாட்டில் கிளைத்த சூதர் தெருவுக்குள் நுழைந்தான் சாத்யகி. திருஷ்டத்யும்னன் அவனிடமிருந்து விழிவிலக்காது தொடர்ந்தான். உடம்பெங்கும் மூச்சின் அனல்பரவ குழலிலிருந்தும் காதுகளின் இதழ்களிலிருந்தும் எதிர்க் காற்றில் வியர்வை சிதறித் தெறித்தது. சாத்யகி புரவியை இழுத்து நிறுத்த முயல விரைவழியாத அப்புரவி சக்கரம் போல மும்முறை சுற்றி கால்களை மாறி மாறி உதைத்து தலை தாழ்த்தி நுரை தொங்க, மூக்கு விடைத்துச் சீறி, விழியுருட்டி நின்றது. அவனைத் தொடர்ந்த திருஷ்டத்யும்னனின் புரவி அதனை சற்று வளைந்து கடந்து ஒருமுறை வட்டமிட்டு எதிராக நின்றது.

“யாதவரே, என்ன செய்கிறீர்?” என்றான் திருஷ்டத்யும்னன். பேய் எழுந்த விழிகளுடன் “என்ன? என்ன?” என்றான் சாத்யகி. “என்ன செய்கிறீர்? எப்படி வந்தீர் தெரியுமா? உமது புரவிக்குளம்புகளில் சிக்கி எவரேனும் உயிரிழந்திருக்கவும் கூடும். தெய்வங்கள் துணை இருந்ததால் தப்பினீர்” என்றான். சாத்யகி பித்தனின் நோக்குடன் ‘உம்?’ என்றான். “யாதவரே, யாதவரே” என்று திருஷ்டத்யும்னன் உரக்க அழைத்தான். சிறகற்று மண்ணில் விழுந்தவனைப் போல ஓருடலசைவுடன் சாத்யகி மீண்டான். தலைதூக்கி “பாஞ்சாலரே” என்றான். திருஷ்டத்யும்னன் “யாதவரே, அனைத்தையும் உதறி அவர் முன் அம்மணமாக நிற்கும் பொருட்டு சென்றவர் நீங்கள்” என்றான்.

“என்னால் இயலவில்லை பாஞ்சாலரே. ஒவ்வொன்றாக கழற்றிக்கொண்டு வந்தேன். கையளவுக்கு மட்டும் எஞ்சிய ஒன்று என்னை தடுத்தது. அச்சிறு ஆணவமே என்னை நானென்று ஆக்குகிறது. இப்பெயரை, இக்குலத்தை, இவ்வுடலை, இவ்விழைவை நான் சூடச்செய்கிறது. அதையும் இழந்தால் உப்புப்பாவை கடலை அடைந்தது போல நான் எஞ்ச மாட்டேன். மீட்பும் இறப்பும் இன்மையும் ஒன்றென ஆகும் ஒரு தருணம் அது.”

சாத்யகி சொன்னான் “அடியிலா ஆழம் ஒன்றின் இறுதி விளிம்பை அடைந்தது போலும் உடல் மெய்ப்புற்றது. அவ்வாழத்திலிருந்து எழுந்து வந்த கடும் குளிர்காற்றுபோல அச்சம் என்னை பின்தள்ளியது. என்னால் அங்கு வரமுடியாது. எத்தனை கீழ்மகனாக எஞ்சினாலும் சரி, தீரா நரகத்தில் இழிசேற்றில் புழுவென நெளிந்தாலும் சரி, இவ்வாணவம் ஒரு துளி என்னிடம் எஞ்சியிருக்க வேண்டும். இது மட்டுமே நான். இக்கீழ்மையின் நிழல் துண்டு மட்டுமே சாத்யகி என்னும் வீரன்.”

“இறப்புக்கு அஞ்சுகிறீர்களா?” என்றான் திருஷ்டத்யும்னன். “பாஞ்சாலரே, என்று குருநாதரின் கால்களைத் தொட்டு வணங்கி முதல் படைக்கலத்தை எடுத்து களம் நிற்கிறானோ அன்றே போர்வீரன் இறப்பின் மீதுள்ள அச்சத்தை வென்றிருப்பான். ஆனால் அடையாளம் அழிவதை, ஆணவம் கழிவதை அவன் தாளமாட்டான். வீரனின் இறப்பென்பது உண்மையில் அதுவே” என்றான்.

திருஷ்டத்யும்னன் சாத்யகியின் அருகே புரவியை செலுத்தி அவன் தோளை தொட்டான். “அக்கணத்து உணர்வெழுச்சியை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது யாதவரே. ஆனால் அது ஒரு கணம்தான். தீயவை செய்வதற்கு முன் கடக்கவேண்டிய ஒரு கணம் உண்டு என்று ஒருமுறை என் ஆசிரியர் சொன்னார். நூற்றியெட்டு தெய்வங்களால் காக்கப்படும் பெரும் அகழி அது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு முகம் கொண்டு எழுந்து வந்து நம்மை விலக்கும். மூதாதையென, குல தெய்வங்களென, அறநெறிகளென, அயலென, உறவென, குலமென, குடியென, கல்வியென, அகச்சான்று என உருக்கொண்டு சினந்தும் அழுதும் நயந்தும் பேருரு காட்டியும் பேதையென நின்றும் சொல்லெடுக்கும். ஒரு கணத்தில் அவற்றை தாண்டிச் சென்றுதான் தீயவை எவற்றையும் நாம் ஆற்றுகிறோம்.”

“பின்பொரு நாள் துரோணரின் அச்சொற்களை எண்ணிக்கொண்டிருந்தபோது நான் அறிந்தேன் நல்லவை ஆற்றுவதற்கும் அதே ஒரு கண தடையே உள்ளது” என்றான் திருஷ்டத்யும்னன். “அதே அடியிலா அகழி. நூற்றியெட்டு பாதாள தெய்வங்கள் அங்கும் எழுந்து வருகின்றன. அச்சமென, ஐயமென, விழைவென, ஆணவமென உருக்காட்டுகின்றன. அக்கணத்தைக் கடந்து நாம் உரியவற்றை இன்றியமையாதவற்றை மேன்மையானவற்றை முழுமையை அடைய முடியும். ஒரு கணம்தான் யாதவரே, என் கை பற்றிக்கொள்ளுங்கள். அவ்வகழியை இணைந்தே கடந்து செல்வோம். இத்தருணத்தில் அதை கடக்காவிடில் பிறகு ஒருபோதும் அது நிகழாமல் ஆகிவிடும். ஒரு கணம் விரிந்து ஒரு பிறவியென்றாகலாம். ஏழ்பிறவியென எழலாம். முடிவிலி கூட ஆகலாம்.”

சாத்யகி தன் புரவியின் கழுத்தில் வளைந்து முகம் பதித்துக்கொண்டான். அவன் கண்களிலிருந்து நீர் உதிர்ந்து அதன் பிடரி மயிரில் சொட்டியது. “வருக!” என்று மிகத்தாழ்ந்த குரலில் திருஷ்டத்யும்னன் அழைத்தான். அவ்வொலியை தன் உடலில் பரவிய தோல்பரப்பால் கேட்டான். “வருக!” என்று மேலும் குரல் தழைந்து அவன் அழைத்தபோது ஒவ்வொரு மயிர்க்காலும் அதைக் கேட்டு அசைந்தது. சாத்யகி நெஞ்சு முட்டிய நீள்மூச்சை வெளியிட்டான்.

அக்கணத்திலென அப்பால் ஒரு தட்டுமணி முழங்கியது. “பீலிவிழி அறியும் பொய்மை அனைத்தும்! பீலிவிழியன்றி மெய்மைக்கு ஏது காவல்? நெஞ்சே! பீலிவிழி அன்றி விண்ணறிந்த மண்ணறிந்த பிறிதேது?” என்று பாடியபடி சூதன் ஒருவன் பக்கவாட்டு சந்து ஒன்றிலிருந்து அவர்கள் முன் தோன்றினான். பாடியபடியே அவர்களை நோக்கி புன்னகைத்து கடந்து சென்றான். “பீலிவிழி இமைப்பதில்லை. விழியிமைக்கும் இடைவெளிகளில் வாழும் தெய்வங்களே! உங்களைப் பார்க்கும் விழி அது ஒன்றே அல்லவா?”

திருஷ்டத்யும்னன் அப்போது அவ்வுணர்ச்சிகள் அனைத்தையும் அடுமனை மணங்களை அள்ளி அகற்றும் சாளரக்காற்று போல அந்தப் பாட்டு விலக்குவதை அறிந்தான். “சூதரே” என்றான். சூதன் நின்று “வணங்குகிறேன் இளவரசே” என்றான். “இப்பாடல் எதிலுள்ளது?” என்றான். “இது விழிபீலி என்ற குறுங்காவியம். எனது குருமரபின் ஏழாவது ஆசிரியர் கச்சரால் எழுதப்பட்டது. நாங்கள் இதைப் பாடி அலைகிறோம்” என்றான். “பாடுங்கள்” என்றான் திருஷ்டத்யும்னன்.

கால்சுழற்றி புரவியிலிருந்து இறங்கியபடி திரும்பி சாத்யகியிடம் “வருக யாதவரே!” என்றான். சாத்யகி அசையாமல் இருந்தான். “வருக யாதவரே, இது ஒரு தருணமாக அமையலாமே” என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி எடைமிக்க உடலை மெல்ல புரவியிலிருந்து இறக்கி தள்ளாடுவது போல ஒரு கணம் நின்றபடி அவர்களை நோக்கினான். பின்னர் நெடுமூச்சுடன் கடிவாளத்தை புரவிமேல் வீசிவிட்டு திருஷ்டத்யும்னனை தொடர்ந்தான்.

அருகே இருந்த கல்மண்டபத்தின் திண்ணையில் திருஷ்டத்யும்னன் ஏறி அமர்ந்துகொண்டு “அமருங்கள் யாதவரே” என்றான். உடலை கால்களால் உந்தி முன்செலுத்தி வந்து அவனருகே அமர்ந்து கைகளை நெஞ்சில் கட்டி தலைகுனிந்து அமர்ந்தான் சாத்யகி. புன்னகையுடன் அவர்கள் முன்வந்து எதிர் படியில் அமர்ந்து கொண்ட சூதன் “தொடக்கத்திலிருந்தே பாடலாமா?” என்றான். “ஆம்” என்றான் திருஷ்டத்யும்னன்.

சூதன் தன் தட்டுமணியின் சீரான தாளத்துடன் பாடத் தொடங்கினான். “இனியவர்களே, கேளுங்கள்! இளையோன் கதை கேளுங்கள்! கொண்டு வந்த வினைக் கணக்கு தீர்க்கும் மானுடரே, கேளுங்கள்! இங்கெழுந்த வாழ்வில் இன்சுவை அனைத்தும் தேடும் இளையோரே, கேளுங்கள்! வாள் ஏந்தி புகழ் ஈட்டும் வீரரே, கேளுங்கள்! இது அவந்திநாட்டு அரசியின் கதை. அவளை மித்திரவிந்தை என்றனர் மூத்தோர். அன்னை சுதத்தை என்றார். தந்தை சுவகை என்றார். குலம் வழுத்தும் பாவலரோ சிபி மன்னன் குலக்கொடியான அவளை சைப்யை என்றனர். தொல்புகழ் அவந்தியின் மன்னர் ஜெயசேனன் துணைவி ரஜதிதேவியில் பெற்றெடுத்த புதல்வி அவள். திருமகளென குலமெழுந்தவள். அவள் அடிசேர் மண்ணை வணங்கி அலகிலா செல்வமடைந்து பொலிக! ஆம், அவ்வாறே ஆகுக!”

அவந்திநாடாளும் ஷத்ரியத் தொல்குடி மாமன்னர் ஜெயசேனர் மதுவனத்து யாதவக் குடித்தலைவர் சூரசேனரின் இளைய மனைவி சித்திதாத்ரியின் மகள் ரஜதிதேவியை மணந்தபோது ஷத்ரிய அவைகளில் இளிவரல் எழுந்தது. குலம் இழந்து முடி மீது அவநிழல் விழச் செய்தார் ஜெயசேனர் என்றனர். ஆனால் சர்மாவதியின் எல்லையில் அமைந்த அவந்திநாடு ஏழு ஆசுர சிறுநாடுகளால் சூழப்பட்டிருந்தது. தலைக்கு மேல் பெரும்பாறைகள் உருண்டமர்ந்திருக்க நடுவே கைக்குழந்தையை இடையில்சூடி நின்றிருக்கும் பதற்றத்தை எப்போதும் கொண்டிருந்தார் ஜெயசேனர். பெருநாடுகளோ ஆசுரகுடிகளை அஞ்சி அவர் வந்து தங்கள் காலடியில் பணியவேண்டுமென எதிர்பார்த்தன.

மதுராவை யாதவர் வென்றதும் ஒரு புது காலகட்டம் தொடங்கவிருப்பதை உணர்ந்தார். விருஷ்ணிகுலத்து வசுதேவரின் தங்கை அழகி என்றும் நூலறிந்தவள் என்றும் அறிந்தார். பொன்னும் மணியும் கன்யாசுல்கமென அனுப்பி வசுதேவரின் வாக்கு பெற்று சித்திதாத்ரியின் உள்ளத்தை வென்றார். தயங்கிய சூரசேனரை கனியச்செய்து மணவாக்கு பெற்று ரஜதிதேவியை அடைந்தார். அவர்களுக்கு ஒன்பது பேரழகுகளும் சங்கு சக்கரக் குறியுமாக மகள் ஒருத்தி பிறந்ததும் ஷத்ரியரில் இழிநகைகள் பொறாமைகளாக மாறின. மித்திரவிந்தை சூதர்களின் சொற்கள் வழியாக இளவேனிலில் வேங்கை மரம் உதிர்த்த மலர்கள் ஊரெங்கும் பரவி மணப்பது போல் புகழ் பெற்றாள்.

ஜெயசேனரின் பட்டத்தரசியான மாளவத்து குலமகள் பார்கவிக்கு விந்தர் அனுவிந்தர் என இரு மைந்தர்கள் அப்போதே தோள்பெருத்து போர்க்குண்டலம் அணிந்து விட்டிருந்தனர். இருவரும் அரசர் யாதவ இளவரசியை மணந்ததை விரும்பவில்லை. யாதவர் படைத் துணையுடன் அசுர மன்னர்களை வென்றனர். அதன் பின் ஒவ்வொரு நாளும் யாதவர்களின் படைவல்லமையை எண்ணி அமைதி இழந்தனர். “முள்ளை எடுக்க முள்ளை நாடினோம் இளையோனே… இனி இப்பெரிய முள்ளை வீசிவிட்டு முன்னகர்வது எங்ஙனம் என்பதுவே வினா” என்றார் விந்தர். “ஒவ்வொருநாளும் சிதல்புற்றென யாதவர் வளர்கிறார்கள்.”

மித்திரவிந்தை பிறந்து இவள் முடிசூடி நாடாள்வாள் என்று நிமித்திகரின் நற்குறிச் சான்று பெற்று நாளும் அழகு பொலிய வளரத் தொடங்கியபோது விந்தரும் அனுவிந்தரும் அச்சம் கொண்டனர். “இளையோனே, யாதவர்கள் அவள் தங்களுக்குரியவள் என எண்ணுகிறார்கள். துவாரகையில் அமர்ந்த இளைய யாதவன் அவளை மணம் கொண்டான் என்றால் மாகிஷ்மதி அவர்களின் சொல்லுக்குள் செல்லக்கூடும்” என்றார் விந்தர். “நம் தந்தையே மாகிஷ்மதியை இடையனின் கால்களில் வைத்து வணங்க உள்ளம் கொண்டிருக்கிறார் என்று ஐயுறுகிறேன்” என்றார் அனுவிந்தர்.

அந்நாளில் ஒருமுறை அஸ்தினபுரியின் அவை விருந்துக்குச் சென்ற அவந்தி வேந்தர் விந்தரும் அனுவிந்தரும் காலையில் கதாயுதப்பயிற்சிக்காக துரியோதனரின் களம் சென்றனர். இரும்பு கதை ஏந்தி ஒரு நாழிகை நேரம் தன்னுடன் தோள் பொருதிய விந்தரை அள்ளி நெஞ்சோடு அணைத்துக்கொண்டு துரியோதனர் சொன்னார் “இன்று முதல் நீர் என் தோழர். வாழ்விலும் முடிவிலும் என்னுடன் இரும்!” புவியாளும் பெருமன்னனின் விரிதோள்களின் அணைப்பு விந்தரை அகம் நெகிழச் செய்தது. அத்தோள்களில் முகம் சாய்த்து விழிநீர் உகுத்து “இன்றென் வாழ்வு நிறைவுற்றது. இனி என்றும் தங்கள் அடிகளில் அமர்பவனாகவே எஞ்சுவேன்” என்றார்.

அன்று உண்டாட்டின்போது அவந்தியின் அரசர் இருவரை தமக்கு இருபக்கமும் அமரச் செய்து தன் கையால் உணவள்ளி ஊட்டினார் துரியோதனர். தன் தம்பியருடன் சேர்ந்து கானாட அழைத்துச் சென்றார். அஸ்தினபுரியிலிருந்து திரும்புகையில் அனுவிந்தர் “மூத்தவரே, நம் இளவரசியை அஸ்தினபுரியின் நாளைய அரசர் கொள்வார் என்றால் எதையும் அஞ்சவேண்டியதில்லை. யாதவர் அஞ்சும் படைபலம் நமக்கு வரும். நிமித்திகர் சொல் பிழைக்காது நம் இளையோள் பெருநிலத்து முடியும் சூடுவாள்” என்றார். நெஞ்சு விம்ம எழுந்து இளையோனை தோள் சேர்த்து அணைத்துக்கொண்டு “ஆம், பொன் ஒளிர் பெருவாயில் திறந்ததுபோல் உணர்கிறேன். இது ஒன்றே வழி” என்றார் விந்தர்.

தன் இளையவளுக்கு துரியோதனர் மணக்கொடை அளிப்பதை ஏற்க விழைவதாக ஒலைத் தூதொன்றை அனுப்பினார் விந்தர். துரியோதனர் அப்போது காசிநாட்டு இளவரசியை மணந்து மலர்வனம் ஆடி மகிழ்ந்து கொண்டிருந்தார். ஓலை நோக்கியபின் “காசி நாட்டு அரசி ஒப்புவாள் என்றால் அந்த மணம் நிகழட்டும்” என்றார். “வல்லமை கொண்ட அரசொன்று அரியணைக்கு வலப்பக்கம் நிற்குமென்றால் அது நன்றே. அவந்தி நாட்டு அரசி அவை புகட்டும்” என்று அவர் ஒப்புதல் அளித்தார்.

அஸ்தினபுரியின் இளவரசர் அவந்தி நாட்டு இளவரசி மித்திரவிந்தையை மணக்க இருக்கிறார் என்று சிலநாட்களுக்குள்ளேயே பாரதவர்ஷமெங்கும் சூதர்கள் பாடி அலையத் துவங்கினர். அச்செய்தியை அறிந்தார் மூத்தவர் பலராமர். அவையமர்ந்து இசைத்துக்கொண்டிருந்த இளையவரின் முன் சென்று நின்று தன் இரு பெரும் கரங்களை ஓங்கித் தட்டி “என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது நம்மைச் சூழ்ந்து என்றறிவாயா? இங்கு வீணே இக்கம்பிகள் எழுப்பும் ஒலியைக் கேட்டு அமர்ந்திருக்கிறாய். மூடா!” என்று கூவினார். “சொல்லுங்கள் மூத்தவரே” என்றார் இளையவர்.

“அறிவிலியே கேள், சர்மாவதியினூடாக உஜ்ஜயினி வந்து பாலைவனப் பாதை வழியாகவே துவாரகைக்கு வருவதே இன்று நம் வணிகப்பாதையாக உள்ளது. அவந்தியை அஸ்தினபுரி மண உறவுடன் பிணைத்துக்கொள்ளுமெனில் ஒவ்வொரு முறையும் அஸ்தினபுரிக்கு சுங்கம் கட்டி நாம் இங்கு வரவேண்டி இருக்கும். அது கூடாது. அவந்தி நம்முடனே இருந்தாக வேண்டும். இன்று வரை யாதவர்களால் படைநிறைத்து ஆளப்படும் மாகிஷ்மதி நம் வணிகத்தின் விழுதாக அமைந்துள்ளது. உஜ்ஜயினியும் அவ்வாறே அமையவேண்டும்” என்றார்.

“வணிகத்தைப் பற்றி தங்களிடம் யார் சொன்னது மூத்தவரே?” என்று புன்னகையுடன் கேட்டார் இளையவர். “என்னிடம் அக்ரூரர் சொன்னார். சொன்னதுமே இங்கு வந்துவிட்டேன்” என்றார் பலராமர். தொடர்ந்து உள்ளே நுழைந்த அக்ரூரர் “ஆம் இளையவரே. உஜ்ஜயினி நம் கையை விட்டு செல்லலாகாது” என்றார். இளையவர் தன் கையிலிருந்த யாழை அகற்றிவிட்டு எழுந்தார். “அவந்தி நாட்டு அரசு குறித்து சூதர் பாடிய பாடல்கள் அனைத்தும் கேட்டுள்ளேன். ஆனால், அவள் என்னை மணக்க விழைகிறாள் என்று அறிந்திலேன். அவ்வுறுதி இன்றி அவளை எங்ஙனம் நான் கொள்ள முடியும்?” என்றார்.

“என்ன பேசுகிறாய் இளையோனே? ஷத்ரியன் பெண் கொள்வதற்கு பெண்ணுள்ளம் உசாவும் வழக்கம் உண்டா?” என்றார். “நான் ஷத்ரியன் அல்ல. குழலேந்தி மலர்மரத்தடியில் அமர்ந்திருக்கும் யாதவன்” என்றார் இளையவர். “யாதவனா என்று கேட்டால் நான் ஷத்ரியன் என்று மறுமொழி சொல்வாய். உன்னுடன் பேச என்னால் ஆகாது” என்று சொல்லி கைதூக்கி “இதோ, நான் ஆணையிடுகிறேன். உஜ்ஜயினியின் இளவரசியை நீ கொணர்ந்தாக வேண்டும். மறுமொழி எதுவும் கேட்க விழையேன்” என்று சொல்லி பலராமர் வெளியே சென்றார்.

அக்ரூரர் “இளையவரே, பிறர் அறியாமல் விரைந்து ஒரு மணத்தன்னேற்பு நிகழ்வை ஜெயசேனர் ஒருக்கக்கூடும். விந்தனும் அனுவிந்தனும் இளவரசியை துரியோதனனுக்கு வாக்களித்திருப்பதாகவே சொல்கிறார்கள்” என்றார். இளையோன் “பார்ப்போம்” என்றார். “எங்கு உதித்து எங்கு அவள் எழுந்தாள் என்று அறிவேன். அங்கு அவள் சென்றாக வேண்டும் அல்லவா?” என்றார். அக்ரூரர் “புரியவில்லை இளையவரே” என்றார். அவர் புன்னகைசெய்தார்.

முந்தைய கட்டுரைவெண்முகில் நகரம்: முன்னுரை
அடுத்த கட்டுரைநீலமெனும் வெளி