பகுதி பன்னிரண்டு : இமையாநீலம் – 2
கடல் நீர்ப்பரப்பில் படகு ஒழுகுகிறதா நின்றிருக்கிறதா என்றறியாது விழிமயக்கு ஏற்படுவது போல் சாத்யகி மணல் வெளியில் தெரிந்தான். தன் புரவியோசை அவனை எட்டிவிடக்கூடாது என்பதற்காக கடிவாளத்தை இழுத்து நிறுத்திய திருஷ்டத்யும்னன் அவனுக்கும் தனக்குமான தொலைவை விழிகளால் அளந்தான். பாலையில் அத்தொலைவை தன் புரவி எத்தனை நாழிகையில் கடக்கும் என அவனால் கணிக்க முடியவில்லை. பாலையில் விரைவதற்குரிய அகன்ற லாடம் கொண்ட சோனகப்புரவி அது. ஆயினும் பொருக்கு விட்டிருந்த செம்புழுதி வெளியில் கால் புதைய அது தள்ளாடியே வந்தது. உடல் வியர்த்து உருண்டு சொட்ட கடைவாயில் நுரை சல்லடை போல் தொங்க தலை தாழ்த்தி மூச்சிரைத்துக் கொண்டிருந்தது.
திருஷ்டத்யும்னன் சாத்யகியை நோக்கி விரைவது பொருள் உள்ளதாக ஆகுமா என்று எண்ணினான். விழிமுன் அவனை நிறுத்தி குளம்புச்சுவடுகள் அழியாமல் பார்த்துக் கொள்வது ஒன்றே வழி என்று பட்டது. பாலையைச் சூழ்ந்த எந்தச் சிற்றூரிலும் அவனுக்கு அடைக்கலம் கிடைக்க வாய்ப்பில்லை. மறுகணம் அவன் தன்னை முன்னரே பார்த்து முழுவிரைவில் விலகிச் சென்று கொண்டிருக்கிறானோ என்ற எண்ணம் எழுந்தது. தன் புரவி விரைவழியாது தொடராவிட்டால் விழி எல்லையில் இருந்து அவன் விலகிச் சென்றுவிடக் கூடும்.
குனிந்து புரவியின் வாயில் தொங்கிய நுரைக் கூட்டை கையால் தொட்டு வழித்து அதன் கண்களைச் சுற்றி தடவினான். வெப்பமாறி அது களைப்புடன் பெருமூச்சுவிட்டது. அப்போது கீழ்வானில் காலை ஒளி கசிந்து எழத்தொடங்கிவிட்டிருந்தது. முகில்சிதர்கள் மூடிய வானில் ஊறிப் பரவிய ஒளி அதை அழுக்கு படிந்த வெண்பட்டுப் பரப்புபோல ஆக்கியது. அதுவரை தெரியாது இருந்த பாலை மணலின் மடிப்புகளும் வளைவுகளும் துலங்கத் தொடங்கின. வளைவுகள் பஞ்சாலானவை போல மென்மையை விழிக்கு காட்டின.
இன்னும் சற்று நேரத்தில் பாலைநிலம் கண்கூசும் ஒளியை தேக்கிக்கொள்ளும். வெயில் எழும்போது பாலையின் உள்ளுறைந்த அனல் பெருகி காற்று உருகி கொதிக்கத் தொடங்கும். அப்போது புரவி மேலும் களைத்துவிடும் என்று திருஷ்டத்யும்னன் உணர்ந்தான். அத்திசையில் எங்கு பாலைச்சுனை இருக்கிறதென்று அவன் அறிந்திருக்கவில்லை. நச்சுச்சிலந்தி என நாளவன் அமர்ந்திருக்கும் பெரிய வலை இப்பாலை.
முடிவெடுக்க முடியாமல் அவன் கடிவாளத்தைப் பற்றியபடி அங்கேயே நின்றிருந்தான். தலைக்கு மேல் எங்கோ ஒரு முகில் விலக அருகே ஒரு மானுட உருவம் எழுவது போல அவன் நிழல் நீண்டு சரிந்தது. அதை குனிந்து நோக்கி பொருளற்று சில கணங்கள் விழித்துவிட்டு மீண்டும் நோக்கியபோது பாலையின் அலைகளுக்கு அப்பால் சாத்யகியின் உருவம் அசைவற்று இருப்பதாக உணர்ந்தான். பாலையில் அவன் விழுந்துகிடக்கிறான் என்று தோன்றியது. புரவியுடன் அவனை அம்பெய்து கொன்று எவரேனும் அந்த மணியை கவர்ந்து சென்றிருக்கக் கூடுமோ? புரவி நின்றிருக்கிறதா விழுந்து கிடக்கிறதா என்று அத்தனை தொலைவில் விழி காட்டவில்லை. விழியென்பது எத்தனை திறனற்ற கருவி! அவ்விழியுலகு உருவாக்கும் உலகென்பது எத்தனை பெரிய பொய்!
எதற்கு இக்கணம் இவ்வெண்ணங்கள்? இத்தருணத்தை இன்னும் சில நொடிகள் கடத்திச் செல்ல விழைகிறேன். சவுக்கொன்று பிடரியை அறைந்தது போல திருஷ்டத்யும்னன் உணர்ந்தான். சாத்யகி அவனை நோக்கி வந்து கொண்டிருந்தான். மிக மெல்ல அவனுடைய உருவம் பெரிதாகிக் கொண்டிருந்தது. விழிமயக்கா எனத் தத்தளித்து இல்லை என தெளிந்தான். சிறு வண்டு ஒன்று உருப்பெற்று அணுகுவது போல.
அவன் புரவி அதை அறிந்துகொண்டது. நின்ற இடத்திலேயே கால் மாற்றி வைத்து வால் சுழற்றி மெல்ல செருக்கடித்தது. திருஷ்டத்யும்னன் உடல் தளர்ந்தான். திரும்பி வருகிறான். எவரோ சியமந்தகத்தை அவனிடம் இருந்து கவர்ந்து சென்றிருக்க வேண்டும். துரத்தி அதை வென்று மீட்டு வருகிறான். அவனைப்பற்றி எண்ணிக்கொண்ட அனைத்தும் பொய். அந்த ஆறுதல் எழுந்த மறுகணமே அதற்குள் இருந்து கிழித்து மேலெழுந்து வந்த எண்ணம் ஒன்று பெரிதாகியது. கவர்ந்து சென்றவனிடம் இருந்து சியமந்தகத்தை மீட்டிருப்பான் என்று என்ன உறுதி? கிடைக்கவில்லை என்ற செய்தியுடன் வருகிறானா? அந்த அலையைக் கிழித்து எழுந்தது அடுத்த எண்ணம். ஒரு வேளை எங்கோ சியமந்தகத்தை ஒளித்து வைத்துவிட்டு கதை ஒன்று சொல்ல விழைகிறானா?
மூடன்! இந்தச் சிறு நீலமணியைக் கொண்டு இவன் எதை அடையப் போகிறான்? கோட்டையும் காவலும் கருவூலமும் கொண்ட அரசருக்கே அருமணிகள் பெரும் சுமை. இல்லை, இது ஒரு பெருந்தெயவம். இவனுக்கு இந்த யாதவமணி நாடொன்றையும் சிறு குலச்சூழல் ஒன்றையும் அருளக்கூடும். அந்தச் சொல்லுறுதி அம்மணிக்குள் ஒளிக்கப்பட்டுள்ளது. அதன் நீல விழிக்குள் ஓடும் நீரோட்டம் என்பது அச்சொல்லளிப்புதான்.
திருஷ்டத்யும்னன் சாத்யகியின் தோற்றம் அணுகி வருவதை உறுதி செய்துகொண்டான். நினைத்ததைவிட விரைவாக அவன் வந்து கொண்டிருந்தான். விழி தொடும்போது நெடுந்தொலைவு என காட்டியது. எண்ணி இருந்ததைவிட சடுதியில் குறைந்தது. அவன் நீள்நிழல் ஒருபக்கமும் புழுதிப்புகைவால் இன்னொரு பக்கமும் என இரு சிறகுகளாக விரிய சிறுபூச்சியாக பின் பறவையாக சாத்யகி உருவம் கொண்டான். இங்கு வந்து என்ன சொல்லப் போகிறான்? எச்சொல் எடுத்தாலும் அதில் வஞ்சத்தின் களிம்பு படிந்திருப்பதை உணராமல் இருப்பானா? மூடா, இன்று நீ செய்தது எதுவும் பிழையே. கிளம்பிச் செல்! பிறிதொருமுறையும் என் முன் எழாது இரு! செல்! சென்று விடு! விலகு! தயவு கூர்ந்து விலகு! உடல் பிளந்து எழுந்தது வெம்மையென சூழும் ஒரு மன்றாட்டாக அச்சொல். விலகு! வராதே!
திருஷ்டத்யும்னன் தனக்குப் பின் தொலைவில் எங்கோ புரவியின் குளம்படியோசையை கேட்டான். ஈரமுரசுத்தோலில் கழிகள் ஒலிப்பதுபோல, இருண்ட அறையில் வௌவால்களின் சிறகடிப்பு போல அவ்வொலி கேட்டது. சற்று நேரத்தில் வட திசைச் சரிவில் அவ்வொலி எழுந்தது. செவி கூர்ந்து நோக்கி நிற்கவே அது சென்று எதிரே எழுந்து வந்துகொண்டிருந்த உருவத்தில் படிந்தது. புரவியின் காலடிகளை, குளம்புகளின் சுழற்சியை காணமுடிந்தது. தாழ்ந்த தலையுடன் கொக்குபோல வந்த கரிய புரவியின் கழுத்தோடு தலைசாய்த்து தொடைகளால் அதன் விலாவைத்தழுவி அமர்ந்திருந்த சாத்யகி உருகி வழிந்தவன் போலிருந்தான்.
பின்பு அவன் குழல்சுருள்கள் எழுந்து காற்றில் பறப்பதை, புரவியின் நாசித்துளைகளை கண்டான். தன்னைச் சூழ்ந்து பறவைகளின் சிறகடிப்பு போல ஒலித்த புரவிக் குளம்புச் சத்தத்தை கேட்டான். திருஷ்டத்யும்னன் சேணத்தில் காலூன்றி தன் புரவியில் இருந்து இறங்கி கைகளை கட்டிக்கொண்டு நின்றான். அவன் புரவி தலையசைத்து மெல்ல கனைத்தபடி சற்றே விலகி குனிந்து தரையை முகர்ந்து வால் சுழற்றி உடல் சிலிர்த்தது. அணுகி வந்த சாத்யகியின் புரவியின் குளம்புகள் விரைவழிந்தன. தரையிறங்கும் பறவையென அது நெட்டுக்கால் தூக்கி வைத்து வந்தது.
ஒவ்வொரு குளம்பும் தனித்தனியாக ஒலிக்க அது அணுகுவதை கணம் கணமென கண்டான். சாத்யகி கடிவாளத்தை இழுக்க புரவி தலைதூக்கி முகம் வளைத்து மெல்ல கனைத்து பக்கவாட்டில் திரும்பியது. வால் சுழற்றி முன்னங்கால்களை இரு முறை மாற்றி உதைத்து மூச்சுசீற வாய்நுரை துளிகளாகிச் சொட்ட நின்றது. கடிவாளத்தை இடக்கையால் பற்றியபடி கால்சுழற்றி மணலில் தாவி இறங்கிய சாத்யகி பெருமூச்சுவிட்டபின் இடையில் கையூன்றி அசைவற்று அவனை நோக்கியபடி நின்றான்.
திருஷ்டத்யும்னன் அசைவின்றி நிற்பதன்றி வேறெதுவும் அங்கு ஆற்றவியலாது என்று எண்ணினான். அவ்வெண்ணம்கூட அவன் அசைவற்ற உடலுக்கு அப்பால் எங்கோ எழுந்தது. கையில் கடிவாளத்தை உணர்ந்த சாத்யகி அதை மீண்டும் புரவியின் மேலே வீசினான். அவ்வசைவால் கலைந்த சித்தம் முடிவெடுக்க உறுதியான காலடிகளுடன் நடந்து அணுகி வந்தான். அவன் அடிவைப்பிலிருந்த உறுதி திருஷ்டத்யும்னனில் சிறு ஐயத்தை கிளப்பியது. அறியாது அவன் கை உடைவாளின் உலோகப்பிடியை தொட்டது. விழியால் சாத்யகியின் இடையில் இருந்த உடைவாளைத் தீண்டியபின் நிமிர்ந்து அவன் கண்களை நோக்கினான்.
நிலைகுத்திய நோக்குடன் கனவில் எழுந்தவன் போல சாத்யகி வந்து கொண்டிருந்தான். அவன் காலடிகள் செம்மணலில் புதைந்து மணல் பொருபொருக்கும் ஒலி எழுப்பின. குறடுத் தடங்கள் அவனுக்குப் பின்னால் இரு ஆமைகளின் நிரைகளாக நீண்டன. அவன் மூச்சு தன்னை தொடும் என திருஷ்டத்யும்னன் உணர்ந்தான். சாத்யகியின் விழிகள் அவன் விழிகளை தொட்டன. ஒரு சொல்கூட இல்லாமல் இரு கூர்வேல் நுனிகள் என தெரிந்தன.
திருஷ்டத்யும்னன் தன் இதழ்களை நீவிக் கொண்டான். இதயம் ஒலிப்பதை செவிகளில் கேட்டான். ‘அஞ்சுவது நானா? என்ன விந்தை!’ என எண்ணிக் கொண்டான். இத்தருணத்தை இத்தனை குளிர்ந்த கரிய பெரும்பாறையென என் மேல் ஏன் ஏற்றிவைத்துக் கொண்டிருக்கிறேன். இங்கு வென்று மேல் எழ வேண்டியவன் நான். ஆனால் நிழலென தரையில் விழுந்து நீண்டு கிடக்கிறேன்.
சாத்யகி “வணங்குகிறேன் பாஞ்சாலரே. தங்களிடம் பிழை ஒப்புதல் செய்யவே வந்தேன்” என்றான். “தாங்கள் எனக்களித்த மணியைக் கவர்ந்து தப்பிச்சென்றேன். செல்லமுடியாதென்று உணர்ந்து அடிபணிவதற்காக மீண்டேன். இதை தங்களிடம் ஒப்படைத்து சிறைப்படுகிறேன்.” திருஷ்டத்யும்னன் “என்ன நடந்தது?” என்றான். அவன் குரல் வேறு எவருடையதோ என ஒலித்தது.
“நேற்று இந்த மணியை தாங்கள் என்னிடம் அளித்துச்சென்ற பிறகு என் அறைக்குச் சென்றேன். பின்பு அதைக் கவர்ந்து எனக்கென வைத்துக் கொள்ள கரவெண்ணம் கொண்டேன். உடனே இதை எடுத்துக் கொண்டு பயணப்பைகளுடன் என் புரவியில் தப்பி ஓடினேன். துவாரகையின் கருவூலத்தைக் கவர்ந்த கள்வன் நான். பிழையுணர்ந்து திரும்பி வந்துள்ளேன்” என்றான். அடைத்தகுரலில் “யாதவரே” என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி தன் கச்சையில் இருந்த அப்பொற் பேழையை எடுத்து நீட்டினான்.
திருஷ்டத்யும்னன் அந்தக் கையை அது என்னவென்றே அறியாதவன் போல நோக்கினான். வலக்கை பொற்பேழையுடன் திருஷ்டத்யும்னனிடம் நீட்டப்பட்டிருந்தது. அதில் நடுக்கம் ஏதும் இருக்கவில்லை. திருஷ்டத்யும்னன் கை அதை வாங்குவதற்கு எழவில்லை. அவன் நெஞ்சு அளித்த ஆணையை அவன் கை பெற்றுக் கொள்ளவில்லை. சாத்யகி பெற்றுக் கொள்ளும்படி பேழையை சற்று ஆட்டினான். அவ்வசைவையே ஆணையாக ஏற்றுக்கொண்டு திருஷ்டத்யும்னனின் வலக்கை அவனறியாமல் சற்று உயர்ந்தது.
அக்கணம் அவன் விழி திரும்பி சாத்யகியின் இடக்கையை நோக்கியது. சாத்யகி அக்கையால் தன் உடைவாளை உருவி தூக்குவதற்குள் பாய்ந்து அவன் கணுக்கையை பற்றிக் கொண்டான் திருஷ்டத்யும்னன். தன் இடக்காலால் ஓங்கி சாத்யகியின் ஊன்றிய வலக்காலை உதைக்க நிலை தடுமாறி சாத்யகி பின்னால் விழுந்தான். பிடிக்குள் நின்ற சாத்யகியின் உடைவாளைப் பற்றி திருப்பி தூக்கி வீசினான். அவன் மார்பின்மேல் முழங்காலை ஊன்றி இடது கணுக்காலை தன் காலால் அழுத்தி மணலுடன் அவனை ஆழ அழுத்தினான்.
உலோகம் மென்மணலில் உரசிச் செல்லும் ஒலியுடன் சென்ற வாள் மணலைச் சீவியபடி பாதி புதைந்தது. பொற்பேழை சாத்யகியின் கையில் இருந்து நழுவி மணலில் முக்கோணமென புதைந்து கிடந்தது. தன் பற்கள் வலிப்பு வந்தது போல கிட்டித்துக்கொள்ள கழுத்து தசைகள் இழுத்து நின்றதிர “என்னை உயிர்துறக்க விடுங்கள் பாஞ்சாலரே! நட்பின் பொருட்டு உங்கள் கால் தொட்டு மன்றாடுகிறேன். தன்னிறப்பின் சிறுமதிப்பையேனும் நான் கொள்ள அருளுங்கள். இத்தருணத்தில் என் சங்கு அறுத்து என் குருதி வீழ்த்தினேன் என்றால் சற்றேனும் என் குலம் ஏற்றுக்கொள்ளும்” என்றான்.
“யாதவரே யாதவரே” என்று இடறிய குரலில் அழைத்தான் திருஷ்டத்யும்னன். சாத்யகி “நான் வாழ மாட்டேன். முன்னரே இறந்துவிட்டேன். இனி உங்கள் வஞ்சத்தின் பொருட்டு இவ்வுடல் எஞ்ச வேண்டும் என்றால் அவ்வாறே ஆகுக” என்றான். “யாதவரே, என்ன நிகழ்ந்தது உங்களுக்கு?” என்றான் திருஷ்டத்யும்னன். “சதுக்கப் பூதம் முன் சொன்னீர்கள். மாறாச் சொல் எதையும் மானுடர் சொல்லலாகாது என” என்றான் சாத்யகி. “அச்சொல்லின் பொருளை இப்போது உணர்கிறேன்.”
திருஷ்டத்யும்னனின் பிடி தளர்ந்தது. சாத்யகியின் உடல் மேலிருந்து அவன் எழப்போனான். மறுகணம் உடைந்து அவன்மேல் விழுந்து அவன் தோள்களைச் சுற்றி தன் கையால் வளைத்து நெஞ்சோடு இறுக அணைத்து அவன் காதில் “யாதவரே, என் நெஞ்சை இன்னுமா நீர் உணரவில்லை?” என்றான். உலோகம் கிழிபடும் ஒலியுடன் சாத்யகி அவனை தழுவிக் கொண்டு தோளில் முகம் புதைத்து அழத் தொடங்கினான். அவ்வுடல் தன் கைக்குள் அதிர்ந்து கொண்டிருப்பதை திருஷ்டத்யும்னன் உணர்ந்தான்.
வெய்யவிழிநீர் தன் தோள்களையும் மார்பையும் நனைத்து வழிந்ததை, எரியும் பச்சைமரம் வெடிப்பதுபோல் விம்மல்கள் எழுந்ததை அறிந்தான். ஒரு அழுகை காலத்தை கற்பாறைகள் என மாற்றி நிற்கச் செய்துவிடும் என பின்பு நினைவு மீண்டபோது உணர்ந்தான். சாத்யகியின் குழலை அள்ளிப் பற்றித் தூக்கி “யாதவரே, இப்பிழை என் நெஞ்சுக்கு பெரிதெனப் படவில்லை. இது ஒரு கணம் நீர் கொண்ட உளப்பிறழ்வு மட்டுமே. இவ்வுலகில் இதை நான் மட்டுமே இன்று அறிந்துள்ளேன். பிறிதெவரும் அறியப் போவதில்லை” என்றான்.
“யாரும் அறியாவிட்டால் என்ன? என் நெஞ்சு அறிந்துள்ளதே?” என்றான் சாத்யகி. திருஷ்டத்யும்னன் “நீர் இங்கு விழைவது இறப்பென அறிகிறேன். ஆனால் உமது இடக்கரம் அவ்வாள் நுனியை தொட்டபோது என் நெஞ்சு உரைத்த ஒன்றை நான் சொல்லியே ஆகவேண்டும். யாதவரே, இப்புவியில் மானுடர் எவரும் இறப்பை விழைவதில்லை. எதுவரினும் எஞ்சி வாழ்வதென்பதே உயிர்களின் அடிப்படை விழைவு. ஆனால் ஒவ்வொருவருக்கும் அதுவன்றி ஒரு கணமும் வாழமுடியாது என்று சில உறவுகள் இருக்கும். இப்புவியில் இன்றுவரை நான் அறிந்ததில் உங்கள் உறவொன்றே அத்தகையது. நீர் மாய்க்கும் உயிர் உம்முடையது மட்டுமல்ல” என்றான்.
சாத்யகியின் உடல் வாள் இறங்கியது போல அதிர்ந்தது. திருஷ்டத்யும்னனின் முழங்கை மேல் கைவைத்து பற்றிக்கொண்டு விழிதூக்கி அவனை நோக்கி “ஆம்” என்றான். “நீர் இன்றி நான் இல்லை யாதவரே. இது நட்பல்ல. அதற்கப்பால் ஒரு சொல் இருக்கும் என்றால் அது.” எத்தனை எளிய சொற்களில் எதை சொல்லிக்கொண்டிருக்கிறோம் என்று நெஞ்சு துணுக்குற திருஷ்டத்யும்னன் சாத்யகியின் கையை உதறி எழுந்துகொண்டான். உடலில் இருந்து மணல் உதிர ஆடையை உதறி திரும்பி நான்கு எட்டு எடுத்து வைத்து நின்றான். ஒளிகொண்ட வானத்தின் கீழே அலை அலையென எழுந்து உறைந்திருந்தது பாலை.
“வீண் மெல்லுணர்வொன்றை உங்கள் மேல் சுமத்தவில்லை யாதவரே. நான் உணர்வதை நீங்கள் உள்ளூர உணரவில்லை என்றால் உங்களுக்குத் தடையில்லை. அங்கு கையருகேதான் உங்கள் வாள் கிடக்கிறது” என்றான். சாத்யகி இரு கைகளையும் மணலில் ஊன்றி மெல்ல எழுந்து அமர்ந்தான். அவர்கள் நடுவே பாலையின் காற்று மணல் உதிரும் மெல் ஒலியுடன் நெடுநேரம் கடந்து சென்றது.
திருஷ்டத்யும்னன் “என்னுடன் வாருங்கள் யாதவரே! இப்புவியில் நான் இருக்கும் காலம் வரை இருங்கள். என்றோ ஒரு நாள் இன்று நான் உங்கள் முன் நின்று விடும் இந்த விழிநீருக்கு ஈடு செய்யுங்கள். பிறிதொரு களம் வரலாம். அங்கு நான் பெரும் பிழைசெய்து களம்படக்கூடும். அக்கணம் எண்ணி என் நெஞ்சமர ஒரு முகம் வேண்டும் யாதவரே. நெஞ்சறிந்த என் இளமை முதல் என்னை அச்சுறுத்தும் கொடும்கனவுகளில் மெய்த்துணையென இன்று உங்கள் கை உள்ளது. அதை இழக்க நான் விழையவில்லை” என்றான்.
சாத்யகி பெருமூச்சு விட்டான். மீண்டும் ஒரு பெருமூச்சுவிட்டு எழுந்து கைகளால் குழலைக் கோதி பின்தள்ளி ஒரு முடிச்சரடை எடுத்து அதை கட்டிக்கொண்டான். பின் திரும்பிச்சென்று தன் உடைவாளை எடுத்து உறைக்குள் இட்டான். அந்த உலோக ஒலி சிறு பறவை ஒன்றின் அகவல் போல ஒலிக்க திருஷ்டத்யும்னன் திரும்பி அவனை நோக்கி கன்னங்களில் வழிந்த கண்ணீருடன் புன்னகைத்தான். சாத்யகி உதடுகளை இறுக்கி கண்ணீர் வழிய மென்நகை புரிந்தான். “என்னுடன் இரும் யாதவரே” என்றான் திருஷ்டத்யும்னன். “ஆம்” என்றான் சாத்யகி.
இரு புரவிகளும் இணையாக தளர்ந்த காலடிகள் எடுத்துவைத்து திடஒளி போல கிடந்த பாலைநிலத்தின் அலைகளின் மேல் நடந்தன. புலரியில் செந்நிறம் கொண்டிருந்த மணல் எப்படி அத்தனை வெளுத்தது என்று திருஷ்டத்யும்னன் எண்ணிக்கொண்டான். அருகே நோக்கி பின் விழி தூக்குகையில் மணல்வளைவுகள் கடல் போலவே அலைபாய்ந்தன. தொடுவான்கோடு புகைக்கு அப்பாலென நெளிந்தது. மிகத் தொலைவில் ஒரு பாலைச் சோலை இருக்கக்கூடுமென பறவைக் குரல்கள் காட்டின. வரும்போது தெரியவில்லை. திரும்பும்போது துவாரகையின் தோரண வாயில் நெடுந்தொலைவில் எங்கோ என நெஞ்சு உணர்ந்தது. நான்கு திசைகளிலும் மானுடம் இன்னமும் தோன்றவில்லை என்ற உளமயக்கு உருவாக்கும் வெறுமையே சூழ்ந்திருந்தது.
நெடுந்தூரம் வந்த பின்னரே சாத்யகியிடம் ஒரு சொல்லும் பேசவில்லை என்பதை திருஷ்டத்யும்னன் உணர்ந்தான். ஆனால் பிறிது எதையும் பேச முடியாது என்றும் தோன்றியது. இருமுறை திரும்பி நோக்கி சொல் எழாது தலை அசைத்துவிட்டு பின்பு முடிவெடுத்து திரும்பி “என்ன நிகழ்ந்தது?” என்றான். சாத்யகி உலர்ந்த உதடுகளை நனைத்தான். “சொல்லும், மொழியாக மாறும் உணர்வுகள் நமக்கு வெளியே பொருட்களென ஆகின்றன. அவற்றை ஐம்புலன்களாலும் காணமுடியும். ஆராயமுடியும்” என்றான் திருஷ்டத்யும்னன்.
சாத்யகி மெல்லிய குரலில் “நான் எதையும் இப்போது கோவையாக உணரவில்லை பாஞ்சாலரே” என்றான். “அறைதிரும்பி குறுபீடத்தில் அந்த மணியை வைத்துவிட்டு உடைமாற்றிக் கொண்டிருந்தேன். அதை திறந்து நோக்க வேண்டும் என்று என் மிக அருகே நின்ற ஓர் அறியா இருப்பு என்னிடம் ஆணையிட்டது. திரும்பலாகாது என்று பல்லாயிரம் முறை எனக்கு சொல்லிக் கொண்டேன். திற திற என்று ஆணையிட்டபடி அவ்விருப்பு ஆடிப் பாவைகளென தன்னைப் பெருக்கி என்னைச் சூழ்ந்தது. எடைதாளாது என் அகம் முறிந்த கணத்தில் குனிந்து இதைத் திறந்தேன். உள்ளே அந்த மணி ஒளி சுடர்ந்து கொண்டிருந்தது. அதில் இருந்து விழி விலக்க முடியவில்லை. பின்பு நான் எண்ணியது எல்லாம் ஒன்றே. அந்த மணி எனக்கு மட்டுமே உரியது. பிறர் எவருக்கும் அதன் மேல் விழி தொடும் உரிமைகூட இல்லை. எனக்கு என்னும் ஒற்றைச் சொல்லாக மட்டுமே அக்கணத்தை அவ்வுணர்வை சொல்வேன்.”
திருஷ்டத்யும்னன் தன் இடையில் இருந்த சியமந்தகத்தைத் தொட்டு “இப்போது என்னையும் இது அச்சுறுத்துகிறது யாதவரே” என்றான். “யாதவர்கள் எவரையும் இது விட்டு வைக்காது” என்றான் சாத்யகி. “இல்லை” என்றான் திருஷ்டத்யும்னன். அவனை நோக்காது “உம்மிடம் நான் இதை கொடுத்ததே ஓர் இரவு இதை வைத்திருக்கும் ஆற்றல் எனக்கில்லை என்று உணர்ந்ததால்தான். இளைய யாதவருக்கு என ஐந்து தொழும்பர் குறிகளைப் பெற்ற உடல் கொண்ட உம்மால் இதன் மாயத்தை வெல்ல முடியும் என்று எண்ணினேன்” என்றான்.
“பாஞ்சாலரே” என்று வியப்புடன் அழைத்தபடி சாத்யகி அருகே வந்தான். “எண்ணிப் பாரும். நீர் இதை கவர்ந்து சென்றிருப்பீர் என்று எப்படி எண்ண முடிந்தது என்னால்? நீர் சென்ற வழியை நான் இத்தனை தெளிவாகக் கண்டடைந்தது எப்படி? யாதவரே, நீர் ஆற்றிய இதை நான் பல முறை கனவில் நிகழ்த்திவிட்டேன்” என்றான் திருஷ்டத்யுமனன். சாத்யகி பெருமூச்சுவிட்டான். “இதை பிறிதொருவர் அறிய வேண்டியதில்லை” என்றான் திருஷ்டத்யும்னன். “அறியாமல் இருப்பார்களா?” என்றான் சாத்யகி. “அறிவார்கள். ஏனெனில் ஒவ்வொருவரும் தங்கள் மிகைவிழைவாலேயே இந்த மணியை அணுகுகிறார்கள். அகக்கனவில் இதைக் கவர்ந்து தப்பி ஓடாத எவரும் இந்நகரில் இருக்க மாட்டார். அனைவரும் அறிந்த ஒன்றென்பதனாலேயே எவராலும் சொல்லப்படாத ஒன்றாக இது எஞ்சும். அவ்வாறே இருக்கட்டும்.”
திருஷ்டத்யும்னன் திரும்பி சிரித்தபடி “கீழ்மை நிறைந்த ஒரு பொது மந்தணம் நட்பு என்றென்றும் உறுதியாக இருக்க இன்றியமையாதது அல்லவா?” என்றான். சாத்யகி புன்னகைத்தான்.