தெய்வங்கள் பேய்கள் தேவர்கள் – கடிதங்கள்

இனிய ஜெயம்,

ஜன்னல் இதழில் நீங்கள் எழுதிவரும் பேய்கள் தேவர்கள் தெய்வங்கள் தொடரை தவறாமல் வாசித்து வருகிறேன். உங்களின் தீவிரம் குறையாமல் வெகுஜன வாசிப்புக்கு உகந்த மிக முக்கியமான தொடரை எழுதி வருகிறீர்கள். இந்துமதம் எனும் விருட்சத்தின் கிளைகளின் மலர்களில் மணமாக வீசும், வேர் பற்றிய சேற்று நீரின் வாடையை , வெளித் தெரியும் விருட்சம் ஒன்றின் கட்புலனாகா ஆணிவேரின், அதன் பன்மைத்துவத்தை ஆழத்தை கதைகள் வழியே முன்வைக்கிறீர்கள்.

வைப்பு முறைப்படி இருபுராணமரபு கட்டுரைக்குப் பிறகு, வேர்களும் விருட்சங்களும் கட்டுரை வரவேண்டும் என நினைக்கிறேன். முதல் கட்டுரையான இருபுராண மரபு கட்டுரையில் எந்த புராணக் கதைக்கும் சமமாக இயங்கும் கறுப்புக் கதையை, தென்னை காராம்பசு x பனை எருமை புராணங்களை கொண்டு விளக்குகிறீர்கள்.

இதற்கு அடுத்த கட்டுரையாக வேர்களும் விருட்சங்களும் வந்தால் [மூன்றாவது கட்டுரை] வேர்களாகப் பரவிய கேசன் கேசினி மீது ஆதி கேசவனின் படுக்கை குறித்த கதை வாசிப்பின் இன்பத்தையும் ஆழத்தையும் கூட்டுகிறது.

பேய் சொன்ன பேருண்மை கட்டுரையில் எவ்வாறு அருகொலை பெண் தெய்வங்கள் சமணத்தால் உள்ளிழுக்கப்பட்டு அகிம்சை பேசும் தெய்வங்களாக மாறுகின்றன என்ற உங்களின் வரைவை இப்போதும் இங்கே கடலூர் அருகே கிராமங்களில் பார்க்கலாம். ஒரு வார திருவிழாவில் கன்னிப்பெண்கள் நீலியாக மாறி சாமியாடுவார்கள். அவ்வழியே செல்லும் சமண முனிவரை வழி மறிப்பார்கள். அந்த முனிவர்கள் ,நீலியை கல்லாக மாறும்படி சபிப்பார்கள். நீலி சாப விமோசனம் கேட்க, முனிவர் சீவகசிந்தாமணி பாடி அவர்களுக்கு சாப விமோசனம் தருவார். இதற்க்கு பறையும் மேளமும் கொட்டி சீவகசிந்தாமணியை முழுவதும் மனப்பாடமாக பாடும் குழுக்கள் உண்டு. இது குறித்து சன் தொலைகாட்சி தமிழகம் நிகழ்ச்சிக்காக ஒரு செய்தித் தொகுப்பு நண்பர்கள் உதவியுடன் எடுத்தேன். ஆனால் அது ஒளிபரப்பாகும் போது, இந்துமதத்தின் மூடத்தனத்திற்கு எதிரான பகுத்தறிவின் சிம்மகர்ஜனையாக ஒலித்தது. சாவுங்கடா என்று விட்டுவிட்டேன்.

தனது ஆண்மையை பலியாகத் தந்து பெண்மையை சமன் செய்யும் நம்பூதிரி கதையை திற்பரப்பில் வைத்து உங்கள் வசம் கதையாகக் கேட்டிருக்கிறேன். ஆனால் இந்தத் தொடரின் மத்தியில் அக் கதையை வைத்துப் பார்க்கும்போது அக் கதைக்கு இன்னும் ஆழம் கிடைக்கிறது. இணையற்ற அழகு இன்று வெளியான ஆற்றாது அழுத கண்ணீர் கட்டுரை. பெண் என்றால் பேயும் இரங்கும் என்ற சொலவடைக்குப் பின்னால் இயங்கும் கலாச்சார வேர் ஆச்சர்யம் அளித்தது. உணர்சிகரமான கதை. எதற்கும் அடங்காத பொன்னிறத்தாள் பெண்ணின் கண்ணீருக்கு அடங்கினாள் எனும் வரியை வாசிக்கையில் தொண்டை கட்டி கண் கலங்கியது. நமது வேருக்கு உயிர் நீர் அந்தக் கண்ணீத் துளிகள் அல்லவா? நானும் ஒரு பெண். உனது கண்ணீரும் எனது கண்ணீரும் குருதியால் ஆனது என்கிறாள் வெள்ளைக் குட்டி. ஆம் பெண்ணின் கண்ணீராலும் குருதியாலும் வளம் கொண்டதல்லவா இந்த விருட்சம் . இத் தொடரை துவங்குகையில் நீங்கள் உங்கள் மனதில் எங்கோ உங்கள் அம்மாவை நினைத்திருக்கக் கூடும். வாசிக்கையில் நான் என் அம்மாவை நினைத்துக்கொண்டேன். தொடருங்கள்….

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 76
அடுத்த கட்டுரைஎம்.எஸ்.வியும் கலாமும்