‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 75

பகுதி பதினொன்று : எண்முனைக் களம் – 10

கோசலத்தின் பன்னிரு பெருங்குடிகளும் எண்பேராயமும் ஐம்பெருங்குழுவும் கூடிய பேரவையில் இளவரசி கௌசல்யை அரங்கு நுழைந்தாள். இளைய யாதவரை மணம் கொள்ள அவள் உளம் கனிகிறாளா என்று கோசலத்து முதுவைதிகர் கார்க்கியாயனர் வினவினார். தலைகுனிந்து விரல்களால் மேலாடையைப் பற்றிச் சுழித்தபடி “ஆம்” என்று அவள் மெல்லிய குரலில் சொன்னதும் நிறைந்திருந்த அவையினர் எழுந்து “ஆழிவண்ணனை அணைந்த திரு வாழ்க! அவள் கரம் கொண்ட நீலன் வாழ்க! வெற்றி கொள் துவாரகை வாழ்க! புகழ் சேர் கோசலம் வாழ்க!” என்று குரல் எழுப்பினர்.

கார்க்கியாயனரின் அழைப்பின்படி கோசலமன்னர் நக்னஜித் தன் துணைவி பிரபாவதியுடன் வந்து மகள் கைபற்றி “அவையோர் அறிக! என் முதுமூதாதையர் அருளால் மூதன்னையர் வடிவில் இவளை ஈன்றேன். தெய்வம் எழுந்தருளிய ஆலயமென இவளிருந்த அரண்மனை இதுகாறும் இருந்தது. இன்று என் செல்வம் அனைத்தையும் அளித்து இவளை யாதவ இளையவருக்கு அளிக்கிறேன், கொள்க!” என்று இளைய யாதவரிடம் நீட்டினார்.

வெண்தாமரை அருகிருந்த நீலம் என அவைநின்ற இளையவர் விழி ஒளிர்ந்த நகைப்புடன் “எங்கிருந்து சென்றாளோ அங்கு மீள்கிறாள்” என்றார். அவர் சொன்னது என்ன என்று நானோ அருகிருந்தவரோ அறியவில்லை. இளையவர் கைபற்றி அரங்கின் முன் இளவரசி வர இருவரும் தலைதாழ்த்தி அவையை வணங்கினர். அரிமலர் மழைபொழிய சேடியர் அளித்த தாலத்தில் இருந்து செம்மலர் தொடுத்த மாலையை எடுத்து இளையவரின் கழுத்தில் இட்டாள். வெண்மலர் தொடுத்த மாலையை அவர் அவளுக்கு அணிவித்தார்.

நிமித்திகன் மேடையேறி கோல் தூக்கி மண நிகழ்வு முடிந்ததை அறிவிக்க அரண்மனைப் பெருமுரசம் முழங்கியது. அதைக் கேட்டு காவல் மாடங்களின் முரசுகள் ஒலிக்க அந்நகரமே ஒரு பெரும் முரசென விம்மியது. அதன் கார்வையென தெருக்கள்தோறும் இருந்து எழுந்த பொது மக்களின் வாழ்த்தொலிகள் பொங்கின. பாஞ்சாலரே, அந்நகர் அந்நாளுக்காக தவமிருந்தது என்று அறிந்தேன். அதன் பின் எந்நாளும் அதை எண்ணியிருக்குமென உறுதிகொண்டேன்.

“பெரும் புகழ் கௌசல்யையின் இளைய வடிவம் இவள். இவள் மணிவயிற்றில் எழுக இன்னொரு ராமன்!” என்று கார்க்கியாயனர் வாழ்த்தினார். அவையின் வலப்பக்கத்தில் ஏழு வைதிகர் இளங்காலையிலேயே எழுப்பி நிறுத்திய வேள்விக்குளத்தின் அருகணைந்து தென்னெருப்பைச் சான்றாக்கி கார்க்கியாயனர் தொட்டளித்த மங்கல நாணை கௌசல்யையின் கழுத்தில் அணிவித்தார். மங்கலச்செல்வியின் கைபற்றி ஏழுஅடி எடுத்து வைத்து மண நிறைவு செய்தார். குல மூதாதையரும் பெருங்குடித் தலைவர்களும் வணிகத் தலைவர்களும் வந்து மணத்துணையினை வாழ்த்தி பரிசில் அளித்தனர்.

அங்கு நிகழ்ந்த மணமே அதற்கு முன்பு பலமுறை நிகழ்ந்த ஒன்றின் மறு நடிப்பே எனத் தோன்றுவது எனக்கு மட்டுமா என எண்ணிக் கொண்டேன். மணமக்களை வாழ்த்த எழுந்த முதல் முதுசூதர் “பல்லாயிரம் முறை பாலாழி விட்டெழுந்து அரசகோலம் கொண்டு தன் திருமகளை அடைந்தான் அவன். மீண்டும் ஒரு முறை அதைக் காண விழிபூக்கப் பெற்றோம். நாம் வாழ்க!” என்று சொன்னபோது என் மெய் சிலிர்த்தது.

மணமுடித்து வெளியே இளையவர் வந்தபோது ஏழு களிற்றுக் காளைகளும் அணி செய்யப்பட்டு கொம்புப் பூண்களும் சங்கு மாலைகளும் அணிந்து நிரையாக நின்றிருந்தன. அவற்றின் அருகணைந்து ஒவ்வொன்றின் பிடரியையும் புள்ளிருக்கையையும் நெற்றிக்குமிழியையும் மூக்குப் பெருநரம்பையும் தொட்டு வருடி இளையவர் குலாவினார். அன்னையை அணைந்த கன்றுகள் போல அவை ஆகிவிட்டிருப்பதை கண்டேன்.

இளையவர் விடைவென்ற நிகழ்வை கவிச்சூதர் ஒருவர் “ஏழு களிற்றுக் கன்றுகளுக்கு முன் ஏழு உருவங்களாக அவன் எழுந்தான். ஏழு மேருக்களும் ஒன்றாகி அவன் முன் நின்றன” என்று பாடியதை கேட்டேன். ”ஏழு வண்ணக் கதிர்களும் ஒன்றானது போல. ஏழு சந்தங்களில் எழுந்த வேதம் ஓங்காரமெனக் குவிந்தது போல” என்றார் சூதர். ”இணைப்பவன். ஒன்றாக்குபவன். அவ்வொன்றே தானென ஆனவன் அனைத்தையும் கடந்தவன். இங்கு எழுந்தருள்க அவன் அருள்!” என்று முடித்தார்.

கண்ணீர் வார கைகூப்பி நின்றிருந்த கோசலர் தன் தோள்தழைந்த மணிமாலையைக் கழற்றி சூதர் கழுத்தில் அணிவித்து தோள் தழுவி தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டார். அரசி முகம்பொத்தி விரல் மீறி வழிந்த கண்ணீருடன் தோள் குறுக்கி நின்றாள். அவைப் பெண்டிர் அனைவரும் விழி சோருவதைக் கண்டேன். அவையமர்ந்த அவையோர் சொல்லற்ற திளைப்பொன்றில் மூழ்கியதைக் கண்டேன். அங்கு காற்றென நிறைந்திருந்தது ஒரு சொல். அதை வாழ்க என பொருள் கொண்டது என் அகம்.

அன்று முதல் மறுநாள் உச்சி வரை மாபெரும் உண்டாட்டுக்கு நிமித்திகன் ஆணையை அறைகூவினான். நகரில் எட்டு இடங்களில் உண்டாட்டு முற்றங்கள் திறக்கப்பட்டன. முந்தைய நாள் இரவே பதினான்கு அடுமனைகளில் சமைக்கப்பட்ட உணவுவரிசைகள் கொண்டு வந்து குவிக்கப்பட்டன. உண்டு குடித்து மயங்கி விழித்து உண்டு விழுந்து எழும் களியாட்டு முடிந்ததும் அச்சிறு நகரமே உண்டொழிந்த மிச்சில் களமென்றானதைக் கண்டேன்.

மறுநாள் நற்புலரியில் நகர்விட்டு கன்னியுடன் கிளம்ப இளையவர் முடிவெடுத்தார். செய்தியை நான் சென்று கோசலருக்கு சொன்னேன். உண்டாட்டின் சோர்வும், உளம்நிறைந்த மயக்குமாக தன் மஞ்சத்தில் கிடந்த நக்னஜித் எழுந்து ”என் தேவி ஒழிந்த இந்நகர் பறவை விட்டுச்சென்ற வெறும் கூடல்லவா? இங்கு இனி எங்ஙனம் நான் வாழ்வேன் அமைச்சரே?” என்றார். “அஞ்சற்க! இன்னும் ஒரு வருடத்தில் இவ்வரண்மனை நிறைய ஓர் இளவரசன் எழுந்தருள்வான்” என்றேன்.

ஒளிபட்ட மணியென முகம் மலர “ஆம், அது நிகழும். அதை உணர்கிறேன்” என்று சொல்லி என் கைகளை பற்றிக்கொண்டு “இங்ஙனம் இவை நிறைவடையும் என்று என்றோ அறிந்திருந்தேன். மங்கலம் அன்றி ஏதும் துலங்காதவள் என் மகள் என்று அவள் பிறந்த நாளிலேயே உணர்ந்தேன். அவள் உடலில் எழுந்த ஆழியும் வெண்சங்கும் அழியாத நற்குறிகள் என்று அன்றே நிமித்திகர் கூறினர். அவளை வெற்றித் திரு என்று பாடினர் சூதர். அவளை அடைந்த துவாரகை இனி ஒருபோதும் தோல்வியை அறியாது” என்றார். நான் “ஆம். அவ்வாறே ஆகுக!” என்று தலைவணங்கினேன்.

மறுநாள் காலை பிரம்ம தருணத்தில் கிளம்பி நகரின் அன்னையர் ஆலயங்கள் அனைத்திலும் பூசனை முடித்து ஆழிவண்ணன் ஆலயத்தில் வழிபட்டு காவல்தெய்வங்களிடம் விடைபெற்று கதிர்எழும் வேளையில் நகர் நீங்குவது என இளையவர் முடிவு செய்திருப்பதை சொன்னேன். ”அவ்வண்ணம் நிகழ்க மங்கலம்! அவருடன் நூறு தேர்களில் என் களஞ்சியத்தில் இருந்து எழுந்த மகட்செல்வமும் செல்லும். என் மகள் செல்லும் இடமெல்லாம் பொன்னும் மணியும் தொடரும்” என்றார் நக்னஜித்.

அன்றிரவெல்லாம் நகர் துயிலவில்லை என்பதை மாளிகைமுகப்பில் இருந்து நோக்கினேன். இளவரசி நகர்விட்டு மறுநாள் காலை கிளம்ப இருக்கும் செய்தி சொல்லிலிருந்து சொல்லெனப் பரவி நகரை துயர்கொண்ட விரல் யாழை என மீட்டிக் கொண்டிருந்தது. இல்லங்களில் விளக்கொளிகள் அணையவில்லை. சாளரவிழிகள் எவையும் மூடவில்லை. அங்காடிகள் தோறும் பந்தங்கள் குமிழியிட்டுக் கொண்டிருந்தன. பிரம்ம கணத்திற்கென மணிவண்ணன் கோட்டத்து ஏழுநிலை மாடத்து மேலிருந்த வெண்கல மணி முதல் முழக்கத்தை எழுப்பியபோது என் நெஞ்சே அதிர்ந்தது.

நீராடி ஆடைமாற்றி நான் இளையவரின் அறைவாயிலை அடைந்தபோது அக்கணம் வரைந்து முடித்த அழகோவியம் போல் அவர் அங்கிருந்தார். ஈரக் குழல்கள் தோளில் சரிய வெண்பளிங்குப் பெருந்தோள்களில் மணியாரங்களுடன் மூத்தவர் நின்றிருந்தார். இடிக் குரலில் என்னை நோக்கி “எங்கு சென்றிருந்தீர்? வேளை எழுந்துவிட்டது அல்லவா?” என்றார். “ஆம் மூத்தவரே. நாம் கிளம்புவோம்” என்றேன். படியிறங்கி அரண்மனை முற்றத்துக்கு வந்தபோது எங்களுக்காக கோசலத்தின் வெள்ளித்தேர் நின்றிருந்தது. வெண்புரவிகள் பூட்டப்பட்டு பாகன் அமர்ந்திருந்தான்.

இருள் இதழ்விரிந்து முடியாத அரசவீதியில் புழுதிபடிந்த தெருவில் மெத்தைமேல் உருண்டோடும் களித்தேர் என சென்று கோசலத்து அரசமனையின் முகமுற்றத்தை அடைந்தோம். அங்கு நக்னஜித்தும் அவர் துணைவியும் அமைச்சர்களும் படைத்தலைவர்களும் பந்த ஒளியில் செந்நிறச் சிற்பங்களென நின்றிருந்தனர். கார்க்கியாயனர் கங்கை நீர் நிறைந்த பொற்கலங்கள் ஏந்தி பதினாறு இளைய வைதிகருடன் நின்றிருந்தார். அப்பால் அணிச்சேடியரும் இசைச்சூதரும் நின்றனர். செவ்வொளியில் உருகிச் சொட்டிய பொற்துளிபோல அணித்தேர் ஒன்று நின்றிருந்தது. இளையவரின் தேர் முற்றத்துக்குள் நுழைந்ததும் ஒளிரும் கவசங்களும் அனல்சூடிய வேல் நுனிகளுமாக நின்றிருந்த படைவீரர்கள் வாழ்த்தி குரலெழுப்பினர்.

கோசலத்தின் பேரமைச்சர் வந்து இளையவரையும் மூத்தவரையும் முகமன் சொல்லி வாழ்த்தி வரவேற்றார். இருவரும் இறங்கிச் சென்று நக்னஜித்தின் முன் நின்று தலைவணங்கி வாழ்த்தும் முகமனும் உரைத்தனர். மறுமுகமன் சொல்லும் நிலையில் மன்னர் இருக்கவில்லை. வெப்பநோய் உச்சத்தில் உடல் கொதிக்க நின்றிருப்பவர் போல் இருந்தார். இதழ்கள், விரல்நுனிகள், இமைகள் எங்கும் துடிப்பு ஓடிக் கொண்டிருந்தது. அரசி முதுசேடி ஒருத்தியால் தாங்கப்பட்டிருந்தார். அருகே நின்ற படைத் தலைவன் “இளவரசி அணிக்கோலம் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்” என்றான்.

பிறகு ஒருபோதும் நிகழாதது என்று ஒரு கணமும் என்றோ கண்டு உணர்ந்தது என மறு கணமும் தோன்றச் செய்யும் அருங்கணங்களில் ஒன்று அது. எனவே அக்காட்சிகளை முழுக்க விழிகளால் தொட்டு எடுக்க விழைந்தேன். பந்த ஒளியில் அசைந்த பெருமரத்தூண்களில், கரிய கூரைச் சரிவில், மங்கிய தொன்மையான வண்ணச்சித்திரங்கள் கொண்ட மரச்சுவர்களில், தரையில் ஊற்றிய மஞ்சள் நீரின் ஈரத்தில் அலையடித்த பந்தத்தின் ஒளியையும் சூழ்ந்திருந்த விழிகள் ஒவ்வொன்றிலும் எழுந்த சுடர்த் துளியையும் தொட்டுத் தொட்டு அள்ளி என்னுள்ளே வரைந்து கொண்டிருந்தேன்.

உள்ளே கொம்பொலி எழுந்தது. மங்கல இசை முழங்க இளவரசி வருவதை செவியறிந்தது. மரக்கதவு திறந்ததும் விண்திறந்து பொழியும் சிறு மழை போலே இசை குளிர்ந்து கவிந்தது. பந்தத்தின் ஒளிபட்டு கன்னமும் கழுத்தும் மின்ன, குழல்புரிகள் பொன்னெனச் சுருண்டிருக்க பொன்னூல் பின்னிய அணிப்பட்டாடையும், வைரங்கள் வயின் வயின் இமைத்த மணியாரங்களும், வளையல்களும், குழைகளும், தோள்வளைகளும், மேகலையும் பூண்டு இளம் கௌசல்யை அடியெடுத்து முற்றத்துக்கு வந்தாள்.

அவளுக்கு இருபுறமும் எண்மங்கலங்கள் எடுத்த அணிச்சேடியர் வந்தனர். இசைச் சூதர் இரு பிரிவுகளாக மங்கலம் சூழ்ந்து தொடர்ந்தனர். முற்றத்தில் நின்ற மங்கலச் சேடியர் எழுந்து குரவையிட்டபடி அவளை எதிர்கொண்டு குருதியென செந்நீரும் செம்மலரும் சுடரும் காட்டி வரவேற்றனர். முற்றத்து இசைச் சூதர் எழுந்து மங்கல இசை எழுப்பி இணைந்துகொண்டனர். அரசப் படையினர் எழுப்பிய வாழ்த்தொலிகள் முற்றத்தை நிறைத்தன.

இளவரசி கையில் பொற்குடம் ஒன்று ஏந்தி வந்தாள். அதில் வைத்த மாவிலையின் நடுவே பொன்னிறத் தெங்கம்பழம் இருந்தது. அரண்மனைத் தாழ்வாரத்தின் ஏழு நீளக்கற்படிகளில் ஒவ்வொன்றாக இறங்கியபின் திரும்பி ஏழாவது படியில் அப்பொற்குடத்தை வைத்து வணங்கினாள். நக்னஜித்தும் துணைவியும் நெஞ்சு விம்மி கால்தளர்வதைக் கண்டேன். இளவரசி அவர்களை அணுகி இருவர் கால்களையும் முழந்தாள் இட்டு தொட்டு விழி ஒற்றி சென்னி சூடி வணங்கினாள். கை நீட்டி அவள் குழல் தொட்டது அன்றி இதழ் அசைத்து ஒரு சொல்லும் எடுக்க அவர்களால் இயலவில்லை.

அவள் தொழுதபடி எழுந்தபோது நக்னஜித் மெல்லிய விம்மலுடன் திரும்பிக்கொண்டார். அரசியைத் தாங்கி நின்ற முதியவள் “சென்று வாருங்கள் இளவரசி! மழை சுமந்த முகில் சென்ற இடமெல்லாம் பசுமையே காணும் என்பார்கள். அவ்வண்ணமே ஆகுக!” என்றாள். இளவரசிக்குப் பின்னால் மேலாடையால் முற்றிலும் முகம் மறைத்து நெஞ்சைப்பற்றிக் கொண்டு நின்ற அவள் செவிலி நடுங்கும் கைகளால் தன் மகவின் முழங்கையை பற்றிக் கொண்டு “சென்று வாருங்கள் இளவரசி! இங்கு தாங்கள் விளையாடி விட்டுச்சென்ற பாவைகள் எங்களுக்கு எஞ்சியிருக்கும்” என்றாள்.

சூழ்ந்திருந்த விழிநீர் அவளை கலங்க வைக்கவில்லை என்று அறிந்தேன். மணக்கோலம் கொண்டபோது தெரிந்த அதே முகமலர்வு அவ்வண்ணமே இருந்தது. அப்பண்பை அதற்கு முன் இளைய யாதவரிடம் மட்டுமே கண்டிருக்கிறேன். பாஞ்சாலரே, முகமலர்வு என்பது எவரிலும் நிலையாகத் தெரிவதல்ல. சுடர் போல அது எழுந்தும் விழுந்தும் அலைவுற்றே மானுடரிடம் திகழும். சித்திரம் என எழுதிய முகமலர்வு என்பது தெய்வங்களுக்கு உரியது. இளைய யாதவரின் அதே முகமலர்வு அரசியிலும் திகழ்வதைக் கண்டு நாம் அறியாத பேரிணை ஒன்று அங்கு நிகழ்ந்ததோ என்று உளம்வியந்தேன்.

இளையவர் இளவரசியின் கைபற்றி “அரசே, விடைகொடுங்கள்” என்று சொன்னார். நக்னஜித் இரு கைகளையும் தூக்கி “தெய்வங்கள் வாழ்த்தட்டும். காலம் சூழ்ந்து பொன்தூவட்டும். காவியங்களின் சொற்கள் தொடர்ந்து வரட்டும். எளியவன் விழிநீர் உங்கள் சுவடுகளில் உதிரும். அதுஒன்றே என்னால் ஆகக்கூடுவது” என்றார். வைதிகர் வந்து கங்கை நீர் தெளித்து வேதம் ஓதி வாழ்த்தினர். கார்க்கியாயனர் அவளை வழிநடத்தி அணித்தேரில் ஏறச் செய்தார்.

இளைய யாதவரும் மூத்தவரும் நானும் ஏறிக்கொண்ட தேர் முன்னால் செல்ல இளவரசியும் ஏழு பரிசில் சேடியரும் ஏறிக்கொண்ட தேர் தொடர்ந்தது. வெளியே காத்து நின்ற காவல் புரவிகள் கவச வீரர்களுடன் குளம்படி முழங்கி முன் சென்றன. அவர்களுக்குப் பின்னால் மங்கலச் சேடியர் ஏறிய தேர்களும் இசைச் சூதர்கள் ஏறிய தேர்களும் சென்றன. தொடர்ந்து மகள் செல்வம் கொண்ட வண்டிகளும் தேர்களும் சென்றன.  இளைய யாதவருக்கும் இளவரசிக்கும் பின்னால் மீண்டும் பரிசில் தேர்கள் அணிவகுத்தன.

அவ்வணிவலம் அரசப் பெருவீதியை அடைந்ததும் மாளிகைகளிலும் உப்பரிகைகளிலும் திண்ணைகளிலும் சாலை ஓரங்களிலும் அங்காடி முகப்புகளிலும் கூடிய மக்கள் அரிமலர் அள்ளி வீசி வாழ்த்தினர். ”பெருந்தோள் ராமன் ஜானகியைக் கொண்டான். இப்பெருநாளில் எங்கள் குலத்திருவை யாதவன் கொண்டான். தந்தையரே, மூதன்னையரே, இங்கு எழுந்தருள்க! குலதெய்வங்களே உங்கள் வாழ்த்துகள் எழுக! விண் நிறைந்த கந்தர்வர்களே, உங்கள் இசை எழுக! மண்எழுந்த கவிஞர்களே, உங்கள் சொல்மழை எழுக” என்று வாழ்த்தினர்.

அரண்மனை முகப்பில் இருந்த கோசலை அன்னையின் ஆலயத்தில் வணங்கி பின் நகரமைந்த ஒவ்வொரு தெய்வத்தையும் வாழ்த்தி கோட்டை முகப்பில் எழுந்த மணிவண்ணன் கோட்டத்தில் மலர்கொண்டு விடைபெற்று பெருவாயிலைக் கடந்தனர். மீண்டும் ஒரு முறை நகர் காத்து அமைந்திருந்த கோசலை அன்னையை வணங்கி இளவரசி பெருஞ்சாலையில் ஒழுகிய தேரில் ஏறிக் கொண்டார்.

எங்கள் அணி நகர் நீங்குவதை ஒற்றர்கள் எங்கோ நோக்கி இருந்தனர். கோசல இளவரசியை இளையவர் மணம் கொண்டதை முன்னரே ஒற்றர் செய்தி வழியாக கலிங்கரும், வங்கரும், மகதரும் அறிந்திருந்தனர். ஜயத்ரதரின் படைகளும் அவர்களுடன் இணைந்து கொள்ள நகர்சூழ்ந்த குறுங்காட்டைக் கடந்து கோசலத்தின் எல்லையை நாங்கள் நீங்கியதுமே பன்னிரு படைப்பிரிவுகளாக வந்து வளைத்துக்கொண்டனர்.

மூத்தவர் தோள்தட்டி உரக்க நகைத்து ”நன்று! ஒரு போர்கூட இன்றி எப்படி மகள் கொண்டு நகர் மீள்வது என்று எண்ணியிருந்தேன். மிகநன்று!” என்றார். “இளையவனே, இளவரசியுடன் நீ இந்நகர் நீங்கு. நம் நகர் சென்று சேர். இப்போரை நான் நிகழ்த்துகிறேன்” என்றார். இளையவர் புன்னகைத்து கையசைக்க நானும் மூத்தவருமாக அப்படையை எதிர்கொண்டோம்.

“என் தோளில் சிசுபாலனின் அம்பு பட்டது. இளைய யாதவருக்கு நான் அளித்த மணப் பரிசாக அம்மண்ணில் குருதி சிந்தினேன். அவர்களை அங்கே தடுத்து நிறுத்திவிட்டு நாங்கள் துவாரகை மீண்டபோது வெற்றித்திரு நகரில் எழுந்ததைக் கொண்டாடும் முகமாக துவாரகை களிவெறி கொண்டிருந்தது. மதுக்கிண்ணமென்றே ஆனது நகர். எவரும் எவரையும் அறியாது விழுந்து கொண்டிருந்தனர் நகர்மக்கள்” என்றார் அக்ரூரர்.

திருஷ்டத்யும்னன் அக்கதை கேட்டு அந்நாடகத்தில் தானும் நடிப்பவன் போல் விழிமயங்கி நெடுநேரம் அமர்ந்திருந்தான். பின்பு அக்ரூரரிடம் “யாதவரே, என்ன சொன்னாலும் அரசெழுந்து அமைந்த பெருமணம் கொண்டு இந்நகர் புகுந்த இளவரசியர் பிறருக்கு நிகரல்ல. இளையவரின் நெஞ்சில் எட்டு அரசியர் கொள்ளும் இடம் நிகராக இருக்கலாம். ஆனால் அவர்கள் ஒருபோதும் நிகரானவர்கள் அல்ல” என்றான். “நானும் அதை உணர்கிறேன். விண்ணில் அவர்கள் இணையாகலாம். மண்ணில் அல்ல” என்றார் அக்ரூரர். “மச்சநாட்டரசரின் மகள் காளிந்தி இங்கு ஒற்றை மரவுரியாடையுடன் நகர்புகுந்தாள். இங்குள்ள ஒரு பெண்கூட அதை மறக்கவில்லை.”

திருஷ்டத்யும்னன் புன்னகை செய்தான். “நகரில் மட்டுமல்ல. அரசவையில்கூட காளிந்தியை எவரும் அரசியென்றே எண்ணுவதில்லை. இளையவருக்கு ஏதோ படைத்தேவை இருந்தமையால் நிகழ்ந்த மணம் என்பதே கணிப்பு. மச்சகந்தி என்று அவளை எவருமறியாது பகடியுரைப்பவரும் உண்டு.” திருஷ்டத்யும்னன் “அரசகுலங்கள் குருதியால் ஆக்கப்படுகின்றன” என்றான்.

“ஆம், ஆகவேதான் ஷத்ரிய அரசி ஒருத்தி தன்னை வந்து சந்திக்கும்படி ஆணையிடும்போது மீற முடியாதவனாகிறேன். இன்று உங்களிடம் இருந்து சியமந்தக மணியைப் பெற்று தன்னிடம் ஒப்படைக்கும்படி அரசி கௌசல்யை ஆணையிட்டிருக்கிறார். அதை ஏற்றே உம்மை பேசுவதற்கு அழைத்தேன்” என்றார். “சியமந்தகத்தையா?” என்று சற்றே திகைப்புடன் திருஷ்டத்யும்னன் கேட்டான். “ஆம், அந்த மணி தங்களிடம் அல்லவா உள்ளது?” என்றார் அக்ரூரர். “அரசி இன்று காலை அதை ஜாம்பவதி சூடி தன் குல வழிபாட்டுக்கு செல்லக்கூடும் என்று அஞ்சுகிறார். அதை ஜாம்பவதி சூடலாகாது என்பதற்காகவே என்னை ஆணையிட்டு அனுப்பியிருக்கிறார்.”

திருஷ்டத்யும்னன் புன்னகைத்து “பொறுத்தருள்க அக்ரூரரே! சியமந்தகம் என்னிடம் இல்லை” என்றான். அக்ரூரரின் விழிகளில் எழுந்த வினவை நோக்கி ”அது இப்போது சாத்யகியிடம் உள்ளது” என்றான். “சாத்யகியிடமா?” என்றார் அக்ரூரர். “ஆம், புலரி எழுந்ததும் ஜாம்பவதி தன் குல மூதன்னையரை வழிபட எழுவார். அப்போது சியமந்தகத்தை அவரிடம் கொடுக்கும்படி சொல்லி நேற்றிரவு அவரிடம் அளித்தேன்.”

“சாத்யகியிடமா?” என்று அக்ரூரர் மீண்டும் கேட்டார். அவர் நெற்றியில் விழுந்த முடிச்சை திருஷ்டத்யும்னன் நோக்கினான். “ஏன்?” என்றான். “ஒன்றுமில்லை” என்றார் அக்ரூரர். “சாத்யகியை ஐயுறுகிறீரா யாதவரே?” என்றான் திருஷ்டத்யும்னன். “நான் என்னை எண்ணியே ஐயுறவில்லை” என்று புன்னகைத்தார் அக்ரூரர். “அந்த மணி ஒவ்வொருவரிடமும் விளையாடாது அமையாது என்று இப்போது உணர்கிறேன்.”

திருஷ்த்யும்னன் சற்றே அசைந்து அமர்ந்து “அவ்வாறல்ல யாதவரே” என்றான். ”இளைய யாதவருக்காக ஐந்து தொழும்புக் குறிகள் சூடியவர் அவர் ஒருவரே. அனைத்து ஐயங்களுக்கும் அப்பாற்பட்டவர் அவர். இத்தருணம் மணியுடன் அவர் சென்று ஜாம்பவதியிடம் அளித்திருப்பார்.” விழிகளில் அறியமுடியாத ஓர் ஒளியுடன் “அளித்தால் நன்று” என்ற அக்ரூரர் “நான் எண்ணிக்கொள்வது எல்லாம் அதை அவனிடம் அளிக்க உம்மைத் தூண்டியது எது என்பதைப் பற்றித்தான்” என்றார்.

திருஷ்டத்யும்னன் “புலர்காலையில் அரசி அணி செய்வதற்கு முன்னரே மணி அவரிடத்தில் இருந்தாக வேண்டும். அரசகுடி பிறந்த நான் முறைமைப்படி நள்ளிரவுக்குப் பின் அரசியை சந்திக்கலாகாது. ஆகவே சாத்யகியிடம் அளித்தேன்” என்றான். அக்ரூரர் “அது சாத்யகிக்கு வைக்கப்படும் தேர்வாக இருக்கும். ஒரு வேளை உமக்கான தேர்வாகக் கூட இருக்கலாம்” என்றார். திருஷ்டத்யும்னன் “மிகையாக ஐயுறுகிறீர்கள் என்று எண்ணுகிறேன் யாதவரே” என்றான். அக்ரூரர் புன்னகைத்தார். தன் உள்ளம் ஏன் படபடக்கிறது என்று திருஷ்டத்யும்னன் எண்ணிக் கொண்டான்.

முந்தைய கட்டுரைபாபநாசம் வெற்றி
அடுத்த கட்டுரைநாட்டார் தெய்வங்களும் சம்ஸ்கிருதமும்