பாபநாசம் படத்தைப்பற்றி முந்நூறுக்கும் மேற்பட்ட கடிதங்கள் வந்தன. பெரும்பாலும் அனைவருக்கும் சுருக்கமான பதில் அளித்திருப்பேன். அனைவருக்கும் நன்றி. விமர்சனங்கள் பற்றி கருத்து எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை. நான் சினிமா விவாதங்களை நல்ல பணம் பெற்றுக்கொண்டு மட்டுமே செய்வதாக இருக்கிறேன் ;))
பாபநாசம் ஐம்பதாவது நாளை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இரண்டு வாரங்களுக்காகத்தான் இப்போது பெரிய சினிமாக்களே எடுக்கப்படுகின்றன. ஐம்பது நாட்கள் இத்தனை அரங்குகளில் பெரும்பாலும் நிறைந்த காட்சிகளாக ஒரு தமிழ் சினிமா ஓடி நெடுநாட்களாகின்றன. இது ஒரு வெற்றிப்படம் என்ற எண்ணம் முன்னரே இருந்தது. இத்தனைபெரிய வெற்றி என்பது அனைவருக்குமே ஓர் இன்ப அதிர்ச்சிதான்.
திருஷ்யம் இந்தியுடன் ஒப்பிட்டுச் சிலர் எழுதியிருந்தனர். அது மூலப்படத்தை அப்படியே திரும்ப எடுக்கும் முயற்சி. பிற திருஷ்யம் மறு ஆக்கங்கள் எவையும் பாபநாசத்துடன் சாதாரணமாகக் கூட ஒப்பிடும்படி இல்லை என்கிறார்கள் – தரத்திலும் வசூலிலும். அதற்குக் காரணம் பாபநாசம் கதபாத்திரங்கள் பண்பாட்டுச்சூழல் உரையாடல் ஆகியவற்றை முழுமையாக புதியதாக உருவாக்கிக் கொண்டதுதான். சுயம்புலிங்கத்தை ஜார்ஜ்குட்டியுடன் ஒப்பிட்டு நோக்கியிருப்பீர்கள்.தமிழில் உள்ள டீக்கடை பாயையும் மலையாளத்தின் மாப்பிளையையும் ஒப்பிட்டால் இன்னும் தெளிவாகத்தெரியும்.
ஜார்ஜ்குட்டியை சுயம்புலிங்கமாக ஆக்கியதற்கு சில மதச்சார்பின்மைவாதிகளின் வசை வந்தது. இவர்களேதான் முழுக்கமுழுக்க கிறித்தவப்பின்னணி கொண்ட கடல் வந்தபோது ‘அன்னியத்தன்மை நெருடுகிறது’ என எழுதியவர்கள். நண்பர் சிறில் அலெக்ஸ் கிறித்தவர்களும் இங்குள்ளவர்களே, அன்னியர்கள் அல்ல என எழுதிய சூடான கட்டுரை ஞாபகம் வருகிறது.
எந்த ஒருபடமும் இயக்குநர் மற்றும் மையநடிகரின் ஆக்கம் மட்டுமே. பிறர் அவர்களுக்கு தங்கள் பங்களிப்பை அளிப்பவர்கள் மட்டுமே. ஆகவே அத்தனை பாராட்டுக்களையும் ஜித்து ஜோசப்புக்கும் கமல்ஹாசனுக்கும் சொல்லிவிடுகிறேன். நன்றி