பகுதி பதினொன்று : எண்முனைக் களம் – 7
சத்யபாமாவின் அறையை விட்டு வெளிவந்து தேர்க்கூடத்தை அடைந்ததும் அங்கே காத்திருந்த சாத்யகியின் தேரை திருஷ்டத்யும்னன் கண்டுவிட்டான். அவனை முன்னரே பார்த்துவிட்டிருந்த சாத்யகி புன்னகையுடன் இறங்கி நின்றான். அணுகிய திருஷ்டத்யும்னன் ”உள்ளுணர்வால் தங்களை இங்கு எதிர்பார்த்தேன் யாதவரே” என்றான். சாத்யகி ”தாங்கள் இங்கு என்ன பேசியிருக்கக்கூடும் என்பதை அன்றி எதையும் எண்ண முடியாதவனாக இருந்தேன் பாஞ்சாலரே. அரசவவைக்கூடத்தில் ஒரு கணம்கூட என் உடல் அசைவின்றி அமையவில்லை. உண்டாட்டு அறையின் உடற்கொந்தளிப்புடன் அது இசையவுமில்லை” என்றான்.
திருஷ்டத்யும்னன் புன்னகைசெய்தான். “தாங்கள் யாதவ அரசியிடம் பேசி முடிப்பதற்கு எவ்வளவு நேரமாகும் என்று கணக்கிட்டு வெளிவரும் தருணத்தில் இங்கு வரவேண்டும் என்று எண்ணினேன். ஆனால் அங்கு அமர்ந்திருக்க முடியவில்லை. ஆகவே கிளம்பி இங்கு வந்து தேரிலேயே காத்திருக்கலாம் என்று எண்ணினேன்” என்ற சாத்யகி விழிகூர்ந்து ”மிக விரைவில் வந்துவிட்டீர்கள்” என்றான். ”சுருக்கமான சந்திப்புதான்” என்றான் திருஷ்டத்யும்னன் தேரிலேறிக் கொண்டபடி.
“என்ன சொன்னார்கள்?” என்றான் சாத்யகி. ”சியமந்தகமணியை பெற்று வந்திருக்கிறேன்” என்றான் திருஷ்டத்யும்னன். சில கணங்கள் சாத்யகி ஓவியம் போலிருந்தான். காற்று வந்து தொட்டது போல கலைந்து “உங்களிடமா? சியமந்தகமா? என்றான். ”ஆம் ,நாளை விதர்ப்பினி அவையில் சூடி அமர்வற்கு” என்றான் திருஷ்டத்யும்னன்.
சாத்யகி மூச்சை துருத்தி என வெளிவிட்டு பின்னர் சட்டென்று சிரிப்பு பற்றிக்கொள்ள ”பிறிதொருவர் என்றால் மணியை திருடிக்கொண்டு வந்திருக்கிறீர்கள் என்றே எண்ணுவேன்” என்றான். திருஷ்டத்யும்னன் சிரித்து ”ஒரு வகையில் திருட்டுதான். என் அரசுசூழ்கைப் பயிற்சியால் அவர்களின் உள்ளத்துக் கதவுகளை ஒவ்வொன்றாகத் திறந்தேன்” என்றான். சாத்யகி “நான் இன்னமும் நம்பவில்லை. விதர்ப்பினிக்காக யாதவ அரசி அவரே சுடர்மணியை எடுத்து அளிப்பது என்றால்… துவாரகையில் ஒரு வேளை இளைய யாதவர் இம்மாயத்தை நிகழ்த்தக்க்கூடும். பிறிதொருவரால் இயலும் என்றே எண்ணமுடியவில்லை” என்றான். திருஷ்டத்யும்னன் ”இந்த மணி விதர்ப்பினிக்கு மட்டுமல்ல” என்றான். ”நாளை காலை இதை ஜாம்பவதி அணிவார். உச்சிவேளையில் கைகேயி அணிவார். அதன் பின் இரவிலேயே விதர்ப்பினியிடம் இது சென்றடையும்..”
ஒரு கணத்துக்குள் திருஷ்டத்யும்னன் எடுத்த சூழ்மதி அனைத்தையும் புரிந்துகொண்ட சாத்யகி உரக்க சிரித்தபடி தேர்த்தட்டில் இருந்து எழுந்துவிட்டான். “ஆம், இப்படியொரு வழி இருக்கிறது. இதை நான் எண்ணவே இல்லை. இப்போது சியமந்தகம் சூடும் தனித்தகுதியை யாதவஅரசி அழித்துவிட்டார். அதை விதர்ப்பினி அடைந்து ஆவதொன்றும் இல்லை. ஆனால் அனைவரும் நிகரென்று ஆகும் போது சியமந்தகத்தை அளித்தவர் என்ற இடத்தில் ஒரு படி மேலாகவே அவர் இருப்பார்” என்றான்.
”அவ்வளவுதான்” என்றபடி கால்களை நீட்டி அமர்ந்த திருஷ்டத்யும்னன் தன் இடைக்கச்சையை அவிழ்த்து அதில் இருந்த சிறிய பொற்பேழையை எடுத்தபடி “பார்க்கிறீர்களா?” என்றான். சாத்யகி பதற்றத்துடன் அதைத் தொட்டு விலக்கி “வேண்டாம்” என்றான். ”ஏன்?” என்றான் திருஷ்டத்யும்னன். ”இவ்வளவு அண்மையில் நான் இதை பார்த்ததில்லை. எப்போதும் அவைமேடையில் தொலைவில்மட்டுமே கண்டிருக்கிறேன். எச்சரிக்கும் விழி. சிலசமயம் அச்சுறுத்தும் நோக்கு. ஒரே ஒருமுறை புன்னகைத்தது, கிருதவர்மர் தண்டிக்கப்பட்ட அன்று.”
”இப்போது பாரும்” என்றான் திருஷ்டத்யும்னன். “இல்லை… இங்கில்லை. இதைப் பார்ப்பது ஓர் அரிய தருணம். இவ்வளவு இயல்பாக அது நிகழக்கூடாது. ஏற்ற இடத்தை தேர்வு செய்கிறேன்” என்றான் சிரித்தபடி. ”சரி, தேர்வு செய்யும்” என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி அண்ணாந்து விண்மீன்கள் ஒழுகிச் சென்ற கரிய வானத்தை நோக்கிய பின் “நாம் கீழே நாளங்காடி பூதத்தின் ஆலயத்துக்குச் செல்வோம்” என்றான். திருஷ்டத்யும்னன் ”அவ்வாறே” என்று சொன்னதும். தேரோட்டியிடம் ”நாளங்காடி” என்றான் சாத்யகி.
தேரின் அசைவுகளுக்கேற்ப உள்ளத்துச் சொற்கள் ஒழுங்கமைய இருவரும் சற்று நேரம் அமர்ந்திருந்தனர். சாத்யகி வலிகொண்டவன் என உடல் அசைந்துகொண்டே இருந்தான். பின்பு ”பாஞ்சாலரே, இதை முதலில் அண்மையில் பார்க்கையில் உங்கள் உடல் பதறவில்லையா?” என்றான். ”இல்லை” என்றான் திருஷ்டத்யும்னன். “உண்மையில் அத்தனை எளிதாக இதை என்னிடம் அளித்துவிடுவார் யாதவ அரசி என நான் எண்ணவில்லை. எண்மரும் இதைச் சூடுவதே உகந்த வழி என்று அரசியிடம் நான் சொல்லி புரியவைத்ததும் எழுந்து இடையில் கை வைத்து சாளரம் வழியாக கடலை நோக்கி நின்றார். திரும்பி என்னிடம் பாஞ்சாலரே, இந்த மணி ஒரு துளிக் கடல் என்று எனக்குத் தோன்றியுள்ளது என்றார். கடலளவு ஆழம்கொண்டது. இதன் ஈடற்ற ஈர்ப்பு அதனால்தான் என்றபின் மேலும் ஏதோ சொல்ல விழைந்து சொல்லின்றி அமைதியடைந்தார்.
“பின் அவரில் ஏதோ எழுவதை கண்கள் மாறுவதில் இருந்து தெரிந்துகொண்டேன்” என்றான் திருஷ்டத்யும்னன். “சட்டென்று திரும்பி தன் அணுக்கச் சேடியிடம் ‘கீர்த்தி, அந்த மணியை எடுத்து வா” என்றார். அப்போதும் அது சியமந்தகமே என்று என்னால் எண்ணக் கூடவில்லை. நான் அவர் ஆடை காற்றில் நெளிவதையும் சுடரொளியில் அணிகள் மின்னுவதையும் பார்த்துக் கொண்டிருந்தேன். அவ்வறையில் முடியும் அணியும் சூடி அவர் நின்றிருக்கையில் வளைதடி ஏந்தி கன்று மேய்த்து கான் விளிம்பு ஒன்றில் சந்தித்தால் மேலும் அழகாய் இருப்பார் என்று எண்ணினேன். அவ்வெண்ணத்திற்க்காக புன்னகைத்தேன்.”
“கீர்த்தி வந்து செம்பட்டால் மூடிய தாலம் ஒன்றை பீடத்தில் வைத்தாள். அதில் ஏதோ ஓலையோ கணையாழியோ என்றுதான் நான் எண்ணிக் கொண்டிருந்தேன். இப்போது எண்ணுகையில் எங்கோ என் உள் ஆழம் அது சியமந்தகம் என்று அறிந்திருந்தது என்றும் அதை நேருக்கு நேர் மறுத்து மேற்பரப்பில் கையால் அலையெழுப்பிக் கொண்டிருந்தேன் என்றும் தோன்றுகிறது. யாதவ அரசி அந்தப் பேழையை எடுத்து என்னிடம் நீட்டி தாங்கள் கூறியபடி இதோ சியமந்தகத்தை அளித்துவிட்டேன். உகந்த வண்ணம் செய்யுங்கள் என்றார்.”
“சியமந்தகம் என்ற சொல் என் செவிக்கு வந்ததும் என் கைகள் நடுங்கத் துவங்கின. அனல்விடாய் கொண்டவன் போல என் நாவு வறண்டது” என திருஷ்டத்யும்னன் தொடர்ந்தான். “அதை தொடலாகாது என்று எண்ணினேன். அந்த மணிக்கு மிக அருகே கண்காணா பெருந்தெய்வம் ஒன்று நின்றிருப்பது போல் தோன்றியது. அதை நோக்கியபடி விழிதிறந்து அமர்ந்திருந்தேன்.”
”இதை ஏழு அரசியரும் சூடட்டும். தேவையென்றால் முறையான திருமுகம் ஒன்றை மகளிர் அரண்மனையில் இருந்து விடுக்கிறேன் என்று அரசி சொன்னார்” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். “நான் தலைவணங்கி ஆம் அரசி தங்களால் அளிக்கப்பட்டது என்று ஓலை மூலமாக நிறுவப்பட வேண்டும் என்றேன். தங்கள் குடிச்செல்வமான சியமந்தகம் இளையயாதவரின் கால்களுக்கு தங்களால் சூட்டப்பட்டது என்றும் இளைய யாதவர் சூடிய பிற ஏழு அரசியருக்கும் இந்த அருமணி நிகர்உரிமை கொண்டது என்றும் அவ்வாணை சொல்லவேண்டும். தங்களின் குடிமுத்திரை அவ்வோலையில் பதிக்கப்பட வேண்டும். துவாரகையின் அரசியாக அல்ல, ஹரிணபதத்தின் இளவரசியாக அவ்வோலை எழுதப்பட வேண்டும் என்று சொன்னேன். ஆம் என்றபடி புன்னகைத்து அவர் அமர்ந்து கொண்டார்.”
“பேழையைத் திறந்து மணியை பார்க்க வேண்டும் என்று எண்ணினேன். ஆனால் அதற்கென அகம் உன்னிய ஒவ்வொரு கணத்திலும் பேழையை உள்ளத்தால் மேலும் தள்ளி விட்டேன். ஒழுக்கில் நம்மை நோக்கி வந்த நெற்று நம் உடலின் அலைகளால் அணுகாது விலகி விளையாடுவது போல் இருந்தது” என்றான் திருஷ்டத்யும்னன். “அறைக்குள் இருந்த செவ்வொளியில் பீடத்தில் அமர்ந்திருந்த யாதவ அரசியை நோக்கினேன். அவரது சிறிய முகம் வியர்வை பனித்திருந்தது. எடை ஒன்றை இறக்கி வைத்தவர் போல் இருந்தார். அப்போது உணர்ந்தேன், அவர் அதை அதுவரை சுமந்து கொண்டிருந்தார் என்று. எவ்வண்ணமேனும் பிறிதொருவரிடம் அதை அளிக்கக் காத்திருந்தார்.”
பெருமூச்சுடன் உடல் எளிதாகி அமர்ந்து “சியமந்தகம் அவரிடம் இளையயாதவரால் ஏன் அளிக்கப்பட்டது என எண்ணிக்கொண்டேன்” என்றான் திருஷ்டத்யும்னன். “நாற்களத்தில் முழுவல்லமை கொண்ட காய் ஒன்று அவரை நோக்கி நகர்த்தப்பட்டிருக்கிறது. இத்தனை நாள் அதற்கு எதிர்நகர்வு செய்யும் வழியறியாது தவித்துக் கொண்டிருந்தார். அதை என்னிடம் அளித்ததும் ஆட்டத்திலிருந்து விலகிக்கொண்டுவிட்டார்.“ சாத்யகி “ஆம், அதை என்னால் உணரமுடிகிறது” என்றான்.
“எண்ணங்கள் என் மீதாக கடந்து செல்கையில் அவையனைத்தும் அப்பேழையைத் திறப்பதைச் சுற்றியே அமைந்திருப்பதைக் கண்டேன். யாதவரே, எண்ணங்கள் மையம் கொண்டு சுழன்று சுருள் வடிவாவதை அப்போதுதான் உணர்ந்தேன். ஒரு கணத்தில் என்ன ஒரு மூடத்தனம் என்று எண்ணினேன். ஏன் அந்தத் தயக்கம்? அஞ்சுவதனால் அடையப்போவதென்ன? அக்கணமே எண்ணப்பெருக்கை அறுத்தபடி பெட்டியை எடுத்துத் திறந்தேன். உள்ளே சியமந்தகம் எளிய நீல மலரிதழ் போல் தெரிந்தது. ஒளியே இல்லை. விளக்கை நோக்கி அதை திருப்பினேன். செவ்வொளியில் அது சற்று பச்சை நிறம் கொள்வது போல் இருந்தது. தளிரிலை போல.”
“அப்போது நான் அடைந்த ஏமாற்றம் எனக்கு பெருத்த ஆறுதலை அளித்தது ஏன் என எண்ணிக்கொண்டே இருக்கிறேன். நச்சுநாகம் என அஞ்சியது நீர்ப்பாம்பு எனத் தெளிந்ததுபோல. ஆனால் மெல்ல ஏமாற்றத்தின் விசை கூடியது. நான் எண்ணிவந்த அரிய தருணம் வீண் என்றாகிறதா என மயங்கினேன். அதுதானா என்று விரல்களால் எடுத்து நோக்கினேன். சீராக சரிவுகள் வெட்டப்பட்ட இருபத்து நான்கு பட்டை கொண்ட படிகக்கல். கல்லென்று அதை ஒரு போதும் கருத முடிந்தது இல்லை என்று எண்ணினேன். சித்தம் கொண்ட எழுச்சிக்கு அடியில் கைவிரல்கள் அதை கல் என்றே சொல்லிக்கொண்டிருந்தன.”
“அப்போது எனக்குத் தோன்றியது என்ன என்று இப்போது வகுத்துக்கொண்டிருக்கிறேன். ஒற்றைச் சொல். கல். இது கல் இது கல் என்றே என் சித்தம் உரைத்தது. ஆம், கல் மட்டுமே. பிறிதனைத்தும் நம் அச்சங்களும் விழைவுகளும் படிந்து உருவானவை. வெறும் கல். இதோ இந்நகர் அமைந்திருக்கும் பாறை போல. அங்கு மலைமேல் எழுந்திருக்கும் பெருவாயில் போல” என்றான் திருஷ்டத்யும்னன். ”அந்தப் பேழையை எடுத்து இதைப் பார்க்கும் கணத்தை நீர் இத்துணை மிகைப்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று எண்ணுகிறேன். அதை அரியதொரு தருணமாக ஆக்கும்போதுதான் அது வல்லமை கொள்கின்றது. அதன் விழிநோக்கி நீ வெறும் கல் என்று சொல்லும். அதை நீர் வெல்வீர். உன்னை அஞ்சுகிறேன் என்று உணர்ந்த கணமே அந்தக் கொலைத்தெய்வம் பேருருக்கொள்ளும்.”
சாத்யகி ”பாஞ்சாலரே, உங்களுக்கு இந்த மணி எளிய நிகழ்காலம். யாதவருக்கு இது கதைகளும் உணர்வுகளும் பின்னி விரியும் இறந்தகாலம். இந்த விழி உங்களிடம் எளிய சொல்லொன்றை சொல்லியிருக்கலாம். என்னிடம் பெருங்காவியங்களையே உரைக்கும்” என்றான்.
நாளங்காடி இரவில் முற்றிலும் ஒழிந்து கிடந்தது. கடைமுகப்புகள் அனைத்தும் தடித்த தோல்திரைகளும் ஈச்சைத் தட்டிகளும் மூங்கில் படல்களும் இழுத்து இறக்கப்பட்டு மூடப்பட்டிருந்தன. அவற்றில் வரையப்பட்ட வண்ணஓவியங்கள் தெருமுனைப் பந்தங்களின் ஒளியில் தழலாடின. வணிகர்களின் குலக்குறிகள் பொறிக்கப்பட்ட கொடிகள் நிறமிழந்திருந்தன. கற்தூண்களில் எரிந்த மீன்நெய்ப் பந்தங்கள் காற்றிலிருந்த மழைத்துளிகள் பட்டு மெல்ல வெடித்து தழைந்தாடி ஒரு கணத்தில் சிறகோசையுடன் எழத் துடித்து மீண்டும் சீறி தழலிட்டுக் கொண்டிருந்தமை செவ்விதழ் சிறகுடன் பருந்துகள் அமர்ந்து கூருகிர் கவ்விய இரைகளை கொத்தி உண்பது போல் தோன்றியது.
ஒழுகுநீர்ப்பாதைகளுக்குள் இருந்து சாலைமேல் வந்த எலிகளைப் பிடிப்பதற்காக முன்னங்கால் நீட்டி ஊன்றி பின்னங்கால் மடித்து கேளா ஒலிக்கு மெல்ல செவிதிருப்பியபடி ஊழ்கத்தில் என அமர்ந்திருந்த பூனைகள் தேரொலி கேட்டு தோல் அதிர்ந்து விழி மட்டும் திறந்து நோக்கி சிறு செந்நா நீட்டி மென்குரல் கூவி நோக்கின. சுவர் ஓரமாகச் சென்ற எலிகள் அதிர்வுணர்ந்து நின்று நுண்மயிர் சிலிர்த்து மணிக் கண்களை காட்டின. பின் நீரில் பாய்ந்து சலசலத்தோடி மறைந்தன. புறாக்கள் அங்காடி மாடங்களின் விளிம்பில் தொற்றி அமர்ந்து குறுகும் ஒலி சூழ்ந்திருந்தது.
தெருமுனைகளில் அமைந்த தட்டிக்கூடாரங்களில் அங்காடிக் காவலர்கள் துயின்று கொண்டிருந்தனர். அவர்களின் கால்களும் துயிலில் விழுந்த கைகளும் மழைத்துளி வழிந்த தட்டிப்பரப்புக்கு அடியில் தெரிந்தன. ஒரே ஒரு காவலன் மட்டும் சகட ஒலி கேட்டு கையூன்றி ஒருக்களித்து கள் மயக்கமும் துயிலும் கலந்த விழிகளால் பொருளின்றி நோக்கி மீண்டும் தலை சாய்த்துக்கொண்டான். சுண்ணாம்புக் கல் பரப்பப்பட்ட தேர்ச்சாலை கால்களும் சகடங்களும் பட்டுத் தேய்ந்து நீர் பரவியது போல பளபளத்தது. பந்தங்கள் தலை கீழ் நதியில் தொங்கி ஆடின. தேர் தன் உடைந்து பரவிய நிழல்கள் போல் சென்றது.
அங்காடி பூதத்தின் பெருஞ்சிலை நாற்தெருக்கள் சந்திக்கும் மையத்தில் வடங்கட்டி சூழப்பட்ட சதுக்கத்தின் நடுவே அமைந்த கற் பீடத்தின் மேல் நின்றிருந்தது. வலக்கையில் பற்றி நிலம் பதித்த உழலைத்தடியும் இடக்கையில் சுற்றிய பாசாயுதமுமாக பத்து ஆள் உயரத்தில் எழுந்த பூதத்தின் நிழல் பெரும்பூதமென நீண்டு தரையில் விழுந்திருந்தது. உறுத்த விழிகளும் இளநகை எழுந்த பெரியவாயும் இளம்பிறையென வளைந்த பன்றித் தேற்றைகளும் தோளில் சரிந்த குழல் சுருளும் அகன்று இரு பலகைப்பரப்பென எழுந்த மார்பும் தொப்புள்சுழி ஆழ்ந்த பெருவயிறும் மண்ணில் ஆழ ஊன்றிய பெருந்தொடைகளும் நரம்புகள் புடைத்த கால்களும் கொண்டிருந்த பூதம் அக்கணம் மண்பிளந்து எழுந்தது போலிருந்தது. அதற்கு முன் அணிந்தவை என இடையில் சல்லடமும் தோள்வளைகளும் ஆலிலை ஆரமும் நாகக்கழலும் நாகக்குண்டலங்களும் தெரிந்தன.
தேரை நிறுத்தி பாகன் திரும்பி நோக்க ”போதும்” என்று கையசைத்து சாத்யகி இறங்கினான். சுண்ணாம்புப் பாறைத் தளத்தில் குறடுகள் உரசி ஒலிக்க அருகே சென்று இடையில் கைவைத்து நின்று பூதத்தை நோக்கினான். திருஷ்டத்யும்னன் இறங்கி அவன் அருகே வந்தான். பூதச் சதுக்கத்தின் நான்கு மூலைகளிலும் எழுந்த பந்தத்தூண்களின் தழல்கள் ஆடின. அப்பகுதியே அந்தி என சிவந்திருந்தது. அருகிருந்த கலிகை அன்னையின் சிற்றாலயமும் அதற்கப்பால் இருந்த அன்னையரின் மரத்தாலான சிற்றாலயங்களும் அவ்வொளியில் அசைந்து கொண்டிருந்தன.
திருஷ்டத்யும்னன் ”இத்தகைய ஓர் தெய்வம் வேறெந்த நகரிலும் இல்லை” என்றான். ”இது தென்னவர் தெய்வம்” என்றான் சாத்யகி. ”அங்கே கடல் சூழ்ந்த மூதூர்மதுரையிலும் பெருநகர் புகாரிலும் வணிகத் தெருக்களின் மையங்களில் இத்தெய்வத்தை நாட்டியிருக்கிறார்கள். தென்னகம் ஏகிய அகத்தியர் தன் சொல்லில் இருந்து இத்தெய்வத்தை எழுப்பியதாக சொல்கிறார்கள். சொல்லுக்குக் காவலென நின்றிருப்பதனால் இதை வாய்மைப்பூதம் என்பதுண்டு. இதன் முன் நின்று உரைக்கப்படும் சொற்களைக் கேட்டு இது சான்றுரைத்து தலையசைக்கும். பின்பு அவை சொன்னவரின் சொற்களல்ல. கேட்டு நின்ற பூதத்தின் சொற்கள்.”
“தென்னக வணிகர் இதை நம்பியே பொருள் கொண்டு பொருள் அளிக்கிறார்கள். தலைமுறைகளைக் கடந்தும் நின்றாளும் சொல் அது” என்றான் சாத்யகி. “இங்கு தென்னவரின் வணிகம் பெருகியபோது சதுக்கப்பூதத்தை நாட்ட வேண்டும் என்று கோரினர். இளையவ யாதவர் அங்கிருந்து பெருஞ்சிற்பிகளை வரவழைத்து நாளங்காடியிலும் அல்லங்காடியிலும் இரு பூதங்களை நிறுவினார். நாளங்காடி பூதம் பகல்பூதம் என்றும் அல்லங்காடி பூதம் இரவுப்பூதம் என்றும் சொல்லப்படுகிறது. அல்லங்காடி பூதம் பகலில் விழிதிறக்கும் நாளங்காடி பூதமோ இரவில்தான் விழிதிறக்கும். தங்கள் முன் சொல் அளித்தவன் வினைமுடித்து வீடேகி விழி மயங்கும்போது எழுந்து ஒவ்வொருவரையாக அணுகி அவர்களின் நெற்றிப் பொட்டைத் தொட்டு அச்சொல்லை ஒரு முறை நினைவுறுத்தி திரும்பும் என்கிறார்கள். ஒரு நாளும் அச்சொல்லை அவர்கள் மறக்க பூதம் விடுவதில்லை.”
திருஷ்டத்யும்னன் விழிதூக்கி பூதத்தின் முகத்தை நோக்கி ”இப்போது இந்த பூதம் விழித்திருக்கிறது அல்லவா?” என்றான். “ஆம்” என்று சிரித்த சாத்யகி ”நான் அவ்வப்போது இங்கு வருவதுண்டு. எனக்கென ஒரு சொல்லை இந்நகர் புகுந்த முதல் நாளில் எடுத்திருந்தேன். சஞ்சலங்கள் என எதையும் உணர்ந்ததில்லை. ஆனால் காலம் என விரிந்திருக்கும் வலை என்ன பொருள் கொண்டிருக்கிறதென்று அறியேன். எனவே இங்கு வந்து நான் அறிந்த காலத்துக்கு என் அகச்சான்றை நிறுத்துவேன். அறியாத வருங்காலத்துக்கு நீயே சான்று என்று சொல்லி வணங்குவேன்” என்றான்.
திருஷ்டத்யும்னன் புன்னகைத்து சற்று அருகே சென்று விண்மீன்கள் சூடி நின்றிருப்பது போல் தலை ஓங்கி எழுந்த பூதத்தை நோக்கினான். அவ்வுயரத்தில் வெறித்த விழிகள் எம்மானுடரையும் நோக்காது வானில் நின்றன. ”யாதவரே, நாம் ஏன் சொல்லளிக்கிறோம்? நிலையற்றுக்கொந்தளிக்கும் அலைப்பரப்பு நாம் வாழும் சொல்லுலகு. நிலைபேறுள்ளவை என சொல்லுக்கு அப்பால் எழுந்து நின்றிருக்கின்றன ஐம்பூதங்கள். அவற்றை சான்றாக்குகையில் சொல்லையும் நிலைகொண்டதாக்குவதாக மயங்குகிறோம். மானுடர் எளியவர். எனவே மாறாச் சொல் என எதையும் மானுடன் சொல்லலாகாது. அப்படியொன்றை சொன்ன கணமே ஐம்பூதங்களும் இளிவரல் நகையுடன் அவனை சூழ்ந்து கொள்கின்றன. பீஷ்மரே ஆனாலும் மானுடனால் எச்சொல்லையும் முற்றாக கடைப்பிடிக்க இயலாது.”
சாத்யகி ஏதோ சொல்ல வந்து தயங்கி இதழ் கோட்டினான். பின்பு பெருமூச்சுடன் ”நீர் பூதம்போன்றவர் பாஞ்சாலரே. இரக்கமற்றவர். சில சமயங்களில் உம்முடன் இருக்க அஞ்சுகிறேன்” என்றான். திருஷ்டத்யும்னன் சிரித்து ”துரோணர் போன்ற ஆசிரியர் ஒருவரிடம் சொல் பயின்றால் வரும் வினை அது. புதிய தருணங்களில் அழகிய சொற்றொடர்களை அமைத்துவிட வேண்டும் என்ற துடிப்பில் இருந்து தப்ப முடியாது. எங்கோ சூதர்கள் அச்சொற்களை காவியங்களில் பொறிக்கப் போகிறார்கள் என்ற எண்ணம். சூழ்ந்திருக்கும் அனைத்திலும் செவிகள் எழுந்துவிட்டன என்ற கற்பனை” என்றான்.
திருஷ்டத்யும்னன் “இவ்விடத்தை ஏன் சியமந்தகத்தை நோக்க நீர் தேர்வு செய்தீர் என எனக்குப் புரியவில்லை” என்றான். சாத்யகி “நான் அதைப் பார்க்கையில் எனக்கு இப்பூதம் சான்று நிற்க வேண்டும். காட்டுங்கள்” என்றான். திருஷ்டத்யும்னன் தன் கச்சையிலிருந்து அந்தப் பொற்பேழையை எடுத்து நீட்டினான். அதை வாங்காமல் இடையில் கைவைத்து உதடுகளை இறுக்கியபடி சிலகணங்கள் சாத்யகி நோக்கி நின்றான். ”பாருங்கள் யாதவரே” என்றான் திருஷ்டத்யும்னன்.
சாத்யகி ஒரு கணத்துக்குப் பின் அதை வாங்கி மூடியை திறந்தான். உள்ளே இருந்த கல் உலோகப்பரப்பு போல் பந்த ஒளியை எதிர் கொண்டு மென்மையாக மின்னியது. சேற்றுக்குள் இருக்கும் தவளையின் விழி என திருஷ்டத்யும்னன் எண்ணி அவ்வெண்ணத்துக்காக புன்னகைத்துக்கொண்டான். சாத்யகி “நீர்க்குமிழி” என்றான். குறுவாள் நுனியை தடவுவதைப் போல் அதைத் தொட்டு நிமிர்ந்து ”கூர்மையாக இருக்கும் என்ற உளமயக்கில் இருந்தேன். இத்தனை மென்மையாக இருப்பது சற்று ஏமாற்றத்தை அளிக்கிறது” என்றான்.
பெருமூச்சுடன் அதை நோக்கியபின்பு மெல்ல இருவிரலால் பற்றித்தூக்கி பந்த ஒளியில் காட்டி ”வைரம் ஒளியை வாங்கி எரியத் தொடங்கும்” என்றான். ”இது ஒளிவிடுவதை நான் காணவில்லை. இருண்ட அறைகளில் ஒரு வேளை சற்று ஒளிவிடுவதாகத் தெரியலாம்” என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி அதை நோக்கி நின்றபின் திரும்பி ”உண்மையில் உள்ளம் சோர்ந்திருக்கிறது. உமது சொல் என் அகம்பதிந்தமையால் இருக்கலாம். வெறும் கல் இது என்றே உள்ளம் சொல்கிறது” என்றான்.
அதை பேழையிலிட்டு மூடியபடி “என் குலம் சுமந்த கதைகள் எவையும் இதன் மேல் வந்தமரவில்லை ” என்றான். “இனி நான் எப்போதும் ஒரு கல் என்றே இதை எண்ணுவேன் போலும்” என்றபடி அதை திரும்ப அளித்தான். திருஷ்டத்யும்னன் அதை வாங்கிக்கொண்ட பின் சாத்யகி தன் தோள்கள் தளர்ந்து கைகள் உடலை உரசி பின் விழ பெருமூச்சுவிட்டு “இதுவும் நன்றே” என்றான். “இவ்வேளையில் இப்படி இதை பார்த்துவிட்டதனால் ஒவ்வொரு கணமும் அஞ்சியதில் இருந்து விடுபட்டவன் ஆனேன். இக்கணம் இத்தனை எளிதாக என்னை கடந்துபோகும் என்று நான் எண்ணியிருக்கவில்லை” என்றான்.
திருஷ்டத்யும்னன் அவனுடைய நிலைகொள்ளாமையை நோக்கிக் கொண்டிருந்தான். ”இந்த மணியை துவாரகையில் ஒவ்வொருவர் மீதும் ஏவி விளையாடுகிறார் இளைய யாதவர். இதோ எட்டு அரசியருக்கும் முன்னால் இது வைக்கப்பட்டுவிட்டது” என்றான். “நாளை புலரியில் இதை நான் ஜாம்பவதியை நோக்கி செலுத்துகிறேன்.” சாத்யகி “யானை சூதறியாது என்பர்” என்று புன்னகை செய்தான். “ஆனால் இது அஞ்சும் நெருப்புத்துளி” என்றான் திருஷ்டத்யும்னன். “இந்த மணி உம்மிடம் இருக்கட்டும். நாளை பிரம்மதருணத்திற்கு முன்னரே இதை ஜாம்பவதியிடம் ஒப்படைத்துவிடும்.”
“நானா?” என்றான் சாத்யகி. “இன்று இனிமேல் நான் அரசியை சந்திக்கமுடியாது. நான் அவரை சந்திக்க அரசமுறைமைகள் உள்ளன. இந்நகரின் ஊழியராக உமக்கு அவை ஏதுமில்லை.” சாத்யகி “ஆனால்…” என்றான். “அஞ்சுகிறீரா?” என்றான் திருஷ்டத்யும்னன். “இல்லை, இது வெறும் கல்” என்றான் சாத்யகி. “ஆம், அச்சொல்லையே பற்றிக்கொள்ளும்” என்றான் திருஷ்டத்யும்னன்.
நள்ளிரவுக்கான பொழுதறிவிப்புச் சங்கு தொலைவில் துறைமுகப்பின் காவல் மாடத்தில் எழுந்தது. தொடர்ந்து பெருமுரசும் சோம்பல் முறிக்கும் சிம்மம் என ஒரு முறை உறுமி அமைந்தது. ” செல்வோம்” என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி ”ஆம்” என்றபடி சிரித்து “இன்று என் உடலில் இருந்து நிறை அனைத்தும் விலகியது போல் உணர்கிறேன். தேரைப் பற்றியபடி காற்றில் மிதந்துவிடுவேன் என்று தோன்றுகிறது” என்றான். ”முயன்று பாரும்” என்றபடி திருஷ்டத்யும்னன் தேரில் ஏற சாத்யகி திரும்பி பூதத்தை ஒருமுறை நோக்கியபின் தானும் ஏறினான்.