அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
தொடர்ச்சியாக தொடர்பில் இருப்பதற்கு பல கருவிகள் வந்துவிட்டன. வாட்ஸப், நிலைத்தகவல், செல்பேசி அழைப்பு, ஸ்லாக் என தினுசு தினுசாக வந்துவிட்டாலும், அந்தக் கால கடிதம் போல், சுவாரசியமாக எதுவும் இருப்பதில்லை. நான் பழமைவிரும்பி என இந்தக் கால தலைமுறை நினைப்பார்கள்.
இந்தப் பதிவைக் கண்டேன்: பாவனை சொல்வதன்றி http://www.jeyamohan.in/77515#.VceRGflViko
அதை நான் இவ்வாறும் பார்க்க நினைக்கிறேன். ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் துள்ளலோடு இயங்குபவர்களை இரு வகையாகப் பார்க்கிறேன். முதல் பிரிவினர் செய்தியைக் கொண்டு செல்ல விரும்புபவர்கள். இரண்டாம் பிரிவினர் அந்தச் செய்திக்கான கருவியை விரும்புபவர்கள்.
நான் இதில் இரண்டாம் ரகம். எனவே அந்தப் பிரிவைப் பற்றி எளிதில் விவரிக்க முடியும். எனக்கு ஃபேஸ்புக், டம்ப்ளர், லிங்க்ட் இன், டிவிட்டர் போன்ற சமூக வலையகங்கள் பிடிக்கும். அதில் சமையலைக் குறித்தும் பதிவு செய்கிறேன். இலக்கியத்தைக் குறித்தும் பதிவு செய்கிறேன். ஃபெட்னா போன்ற நிகழ்வுகளில் நடக்கும் விஷயங்களை பத்திரிகை நிருபர் போல் நேரடியாகச் சென்று பதிவு செய்கிறேன். கிசுகிசு, கிறுக்கல், கவிதை, கட்டுரை எல்லாம் பதிவு செய்கிறேன்.
ஃபேஸ்புக், வலைப்பதிவு போன்றவை எனக்கு ஆயுதமாக இல்லை. துணைக்கருவியாக உதவுகிறது. இன்றைக்கு சினிமா விமர்சனம் போட நான் இந்த இடைமுகத்தை நாடுகிறேன். நாளை சினிமா என்னும் வஸ்து தீர்ந்துவிட்டால், மின்விசிறிகளின் நுட்பவியல் என்பது குறித்து எழுத அதே இடைமுகத்தை-என்னுடைய கருவியாக வைத்துக் கொள்வேன்.
இதைப்புத்தக வெளியீட்டோடு ஒப்பிடலாம். அது ஒரு கருவி. நூல்வகைகளில் தன்முன்னேற்றம், குழந்தை வளர்ப்பு, ஜோசியம், வாஸ்து என்று பலவிதமாக அச்சுத்தாள்களை நிரப்ப புத்தகங்கள் பயன்படுகின்றன. அதே நூல்கள் பல மொழிகளில் வெளியாகின்றன. அமேசான் கிண்டில், மின் புத்தகம், தடி அட்டை என பல சாதனங்களில் கிடைக்கின்றன. இரண்டாம் வகையினருக்கு கருவி முக்கியம். உள்ளடக்கம் அவ்வளவு முக்கியமில்லை.
இப்பொழுது முதல் சாராரைப் பார்ப்போம்.
இவர்கள் ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களை ஆயுதங்களாகக் கருதுகிறார்கள். புத்தகத்தினால் புரட்சி ஏற்படுத்துவது, எழுதுவதினால் சமூகத்தில் மாற்றம் உண்டாக்குவது போன்றவற்றில் தீவிர ஆர்வம் கொண்டவர்கள். அந்த ஆர்வத்தை அவருடைய நம்பிக்கை என்று அவரை பின் தொடர்பவர்கள் எண்ணக்கூடும்.
என்னுடைய கார் நிறுத்தும் இடத்தில் திருகுகள், மரையாணிகள், திருப்புளி என நூற்றுபத்தியெட்டு விதமான கருவிகள் கொண்ட பெட்டி இருக்கும். இதனால் நான் மெக்கானிக் ஆகமுடியாது. என்னிடம் காடு மலைகள் ஏறுவதற்கான காலணிகள் இருக்கிறது. இதனால் நான் கடுமையான மலையேற்றங்களை மேற்கொள்பவன் என ஆகாது. என் வீட்டில் விலையுயர்ந்த பியானோ இருக்கும். இதனால் நான் இளையராஜா என எடுத்துக் கொள்ளமுடியாது.
இவ்வளவு ஏன்?
எனக்கு சி#, எச்.டி.எம்.எல். போன்ற நிரலிகள் எவ்வாறு எழுத வேண்டும் எனத் தெரியும். இதனால் நான் திறமையான நிரலாளர், வடிவான இணையத்தளங்களை உருவாக்குபவர் என்று சொல்லவியலாது.
கருவிகளைக் கையகத்தே வைத்திருப்பவர், திறமையானவர் என்று எப்படிச் சொல்ல முடியாதோ, அதே போல், ஃபேஸ்புக் போன்ற தளங்களில் புழங்குபவர் அவரவருக்கான தேர்ந்தெடுத்த துறைகளில் கரை கண்ட சாமர்த்தியசாலி என்றும் அறிய முடியவில்லை.
இதை இன்னொரு விதமாகவும் பார்க்கலாம். ஃபிலிம்ஃபேர் விருதுகள் அல்லது ஐபிஎல் துவக்க விழாக்களை பார்க்கும்போது இது எளிதில் தெரியவரும். இந்த விழாக்கள் பிரும்மாண்டமானவை என்பது மனதில் பதியவைக்கப்படும். பல முக்கியஸ்தர்களும், புகழ்பெற்றவர்களும், கலந்துகொண்டு சிறப்பிக்கிறார்கள் என்பது மீண்டும் மீண்டும் அல்லோல்லகல்லோலப்படும். கிரிக்கெட் பந்தயத்தில் எவ்வாறு போட்டி பலமாக நிலவுகிறது, அந்த ஆட்டம் எவ்வளவு சுவாரசியமாக இருந்தது என்பதை விட இடைவேளையில் எந்த கச்சேரி நடக்கிறது, எந்த நடிகர்கள் மேடையேறுகிறார்கள் என்பது முன்னிறுத்தப்படும். மோசமான சித்தாந்தத்தைக் கூட விலாவாரியான தயாரிப்பு வேலை முலாம் போடுவதால் மறைத்து, மட்டமான தயாரிப்பைக் கூட சந்தையில் விற்றுவிடலாம்.
ஃபேஸ்புக் கொந்தளிப்பாளர்களையும் இவ்வாறு சொல்லலாம். இவர்களுக்கு எந்த ஊடகத்தில் எவ்வாறு இயங்க வேண்டும் என்பது தெரிந்திருக்கிறது. பலவிதமான செல்பேசி அப்ளிகேஷன்களையும் திறன்பேசிக்கேற்ற முழக்கங்களையும் விளம்பரம் போல் எளிதில் விற்கமுடிகிறது. அதற்கு நிறைய நேரமும் தேவைப்படும். அதுவும் அபரிமிதமாக செலவிட இவர்களுக்கு வாய்ப்பு அமைந்திருக்கிறது.
ஃபேஸ்புக்கில் எப்பொழுது பதிவிட்டால், எவ்வளவு கவனம் பெறும்? எவ்வாறு பதில்களை இட்டால், மேலும் மேலும் மறுமொழிகளைப் பெறலாம்? எவ்வகையில் படங்களை அமைத்தால் பெரும்பாலோரின் விருப்பத்திற்கேற்ப கவர்ச்சிகரமாக விளம்பர வாசகம் போல் ஈர்க்கும்? மூன்று விநாடிக்குள் வீடியோவிற்குள் விழவைத்து பார்வையாளரை சுண்டியிழுப்பது எப்படி? வெகுஜன ஊடகங்களுக்கு எவ்வாறு இந்தச் செய்தியை கொண்டுசெல்வது? லைக்குகளையும் மறுமொழிகளையும் எங்ஙனம் பொறுக்குவது? பொதுநலச்சேவை என்னும் போர்வைக்குள் பதுங்கிக் கொண்டு, எவ்வாறு விவாதத்தை திசை திருப்புவது? போன்றவற்றிற்கு இந்த முதலாம் ரகத்தினர் வழிகாட்டி எழுதும் அளவு தேர்ச்சி பெற்றவர்கள்.
தங்களின் பதிவுகளுக்கு பதில் போடுவது போல், ’வெண்முரசு’க்கும் பதில் போட வேண்டும். அதற்கு இன்னும் நிறைய உழைப்பு தேவை.
அன்புடன்
பாலா
பாஸ்டன்
https://snapjudge.wordpress.com/