பகுதி பதினொன்று : எண்முனைக் களம் – 6
சொல்வடிவம் பெறா உணர்வொன்று எஞ்சிய விழிகளுடன் தலைதூக்கி சத்யபாமா “விதர்ப்பினியின் அரண்மனைக்குச் சென்றிருந்தீர் அல்லவா?” என்றாள். திருஷ்டத்யும்னன் “ஆம், அரசி. அவர் ஆணையைப் பெற்று இங்கு வந்துள்ளேன்” என்றான். அவள் புருவங்கள் நடுவே சிறிய முடிச்சு விழுந்தது. “அவளது ஆணையையா?” என்றாள். “ஆம்” என்றான் திருஷ்டத்யும்னன். ஒரு கணம் நிலைத்துநோக்கிவிட்டு “அமர்க!” என்று சொல்லி அவள் கை நீட்டினாள். திருஷ்டத்யும்னன் அமர்ந்து கொண்டான்.
சிறிதுநேரம் இருவரும் விழிகளை விலக்கிக்கொண்டு அமைதியால் சூழ்ந்து இறுக்கப்பட்டு அமர்ந்திருந்தனர். சத்யபாமா பேச்சை துவக்கட்டும் என்று திருஷ்டத்யும்னன் காத்திருந்தான். அவனுடைய ஓர் உடலசைவோ குரலின் தொடக்கமோ அவளுக்கு தேவைப்பட்டது. வேட்டைப்பூனையின் புலனடக்கத்துடன் தன்னை முற்றிலுமாக அணைத்துக் கொண்டு திருஷ்டத்யும்னன் இருந்தான். விழிகளை சற்றே சரித்து ஆடிக்கொண்டிருந்த சாளரத் திரைச்சீலையின் விளிம்பை நோக்கியபடி கைகளை விரல் கோத்து மடியில் இட்டுக்கொண்டு உடலில் எந்த அசைவும் எழாது இறுக்கிக் கொண்டான்.
உடலசைவு காலத்தை அலகுகளாகப் பிரித்து அளவிடுவது. அளவிடப்படும் காலம் மீது ஏறி நெடுந்தூரம் செல்லமுடியாது. செய் செய் என்று அது ஆணையிடும். ஏதும் செய்யாதபோது எடைகொண்டு ஒவ்வொரு உடல்கணுமேலும் ஏறி அமரும். ஒவ்வொரு எண்ணத்துடனும் பின்னி முயங்கி இறுக்கி நெரிக்கும். ‘உடலசைவுகளால் மானுடன் காலத்தை சமைத்துக் கொண்டிருக்கிறான்’ என்று துரோணர் சொல்வதுண்டு. ‘அசைவற்ற உடல் காலத்தை அசைவற்றதாக்குகிறது. அசைவற்ற உடலை அசைக்க உள்ளம் கொள்ளும் முயற்சியை வென்றால் அதுவும் அசைவிழந்து உடல்மேல் படிவதைக் காணலாம். கற்சிலைமேல் படியும் ஆடை போல. பின்னர் வெறும் வண்ணப்பூச்சாக ஆகிவிடுகிறது. உள்ளத்தை வெல்ல உள்ளத்தால் முயல்பவன் யோகி. அவர்களின் வழிகள் பல. உள்ளத்தை உடலால் வெல்லமுடியும் என அறிந்தவன் வீரன். மாபெரும் யோகிகள் அடையாத உச்சங்களை எளிய வீரர்கள் சென்றடையலாகும்’ துரோணர் விழிமூடி தன்னுள் மூழ்கியவர் என சொல்லெடுத்துக்கொண்டிருந்தார்.
சத்யபாமாவின் உடலில் காலம் பதறிக் கொண்டிருந்தது. அவள் தன் கட்டை விரலால் தரையில் விரிக்கப்பட்ட தடித்த மரவுரிக் கம்பளத்தை நெருடிக்கொண்டிருந்தாள். சுட்டுவிரல் மேலாடை நுனியை சுழற்றிக் கொண்டிருந்தது. விழிகள் அவள் உள்ளத்தில் ஓடிய எண்ணங்களுக்கு ஏற்ப அசைந்தோடின. இதழில் அவள் சொல்லாத சொற்கள் குவிந்து மலர்ந்து தயங்கி உள்ளிழுக்கப்பட்டு மறைந்தன. இப்புவியை அவள் உணர்ந்ததும் மெல்லிய அதிர்வுடன் விழித்து அவனை எவர் என வியக்கும் கணமொன்றில் நோக்கி மீண்டு “என்ன சொன்னாள்?” என்றாள். “யார்?” என்றான் திருஷ்டத்யும்னன். அச்சொல் அவளை பொறுமையிழக்கச் செய்யும் என அறிந்திருந்தான்.
அவள் குரல் உயர்ந்தது. “அவள் என்ன சொன்னாள் என்று எனக்குத் தெரியும். சியமந்தகத்தை என்னிடம் இருந்து வாங்கி வரச்சொல்லியிருப்பாள். நாளை அரசர் அவையில் அதை முடிசூடி அவள் அமர்ந்திருக்க விழைகிறாள்” என்றாள். “அவள் நாளை அரசர்கூடிய பேரவையில் துவாரகையின் பட்டத்தரசி என அமரப்போவதில்லை. யாதவப் பெண்ணாகிய என்னை இன்னமும் பாரதவர்ஷத்தின் ஷத்ரிய அரசர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால் மட்டுமே அவள் அவையமர்கிறாள். அது ஓர் அரசுசூழ்தல்முறை மட்டுமே. அனைவரும் அதை அறிவர். இங்கு நகராள்வதும் இளைய யாதவர் இணையமர்வதும் நானே. சியமந்தக மணியை மார்பில் அணிந்து ஷத்ரிய அவையில் அமர்ந்தால் அரசர் நடுவே அவள் பட்டத்தரசி என அறியப்படுவாள் என்று எண்ணுகிறாள். நான் ஒருபோதும் அதற்கு ஒப்பப் போவதில்லை” என்றாள்.
திருஷ்டத்யும்னன் “அரசி, சியமந்தகத்தின் மேல் தனக்கும் ஓர் உரிமை உள்ளது என்று விதர்ப்பினி சொல்கிறார். தங்களிடம் அதை முறைப்படி சொல்லும்படியே என்னைப் பணித்தார்” என்றான். இரு கைகளையும் கைப்பிடி மேல் வைத்து சற்றே முன்னால் நகர்ந்து வியப்புடன் விரிந்த விழிகளுடன் “சியமந்தகத்தின் மேலா? அவளுக்கா? என்ன உரிமை?” என்றாள். “அது யாதவர்களின் குடிச் செல்வம். அவளுக்கும் அதற்கும் என்ன உறவு? வீண்சொல் எடுக்கிறாள். அவள் வஞ்சம் இங்கு ஒருபோதும் நடக்கப் போவதில்லை.”
திருஷ்டத்யும்னன் “அரசமுறைமைகள் குடிமுறைமைகள் என முன்னோர் வகுத்த சில உள்ளன அரசி” என்றான். ”என்ன உரிமைகள்? யாதவர்களை ஒடுக்கும் ஷத்ரியர்களுக்கும் யாதவர்களுக்கும் பொதுவான முறைமைகள் என்ன? தங்கள் அவையில் நிகரமரவே யாதவர்களுக்குத் தகுதியில்லை என்பவர்களுக்கு யாதவ மணி மட்டும் தகுதி கொண்டதாகி விடுமா? என்ன சொல்கிறார்கள்?” என்றாள். அவளுடைய படபடப்பைக் கண்டு உள்ளூர புன்னகைத்தபடி திருஷ்டத்யும்னன் அவளை மேலும் உணர்வெழுச்சி நோக்கி தள்ளினான். “அரசி, என்னதான் இருந்தாலும் பாரதவர்ஷம் என்பது ஷத்ரிய நிலம் அல்லவா? போர்வென்று முடிகொண்ட ஷத்ரியர்கள் அமைத்த நெறிகளை ஏற்றுதானே எவராயினும் ஒழுக முடியும்?” என்றான்.
சத்யபாமா உரத்த உடைந்த குரலில் “எவர் சொன்னது அது? ஷத்ரியர் என்பவர் எவர்? லகிமாதேவியின் சூத்திரப்படி எவர் ஒருவர் மண்ணை வென்று அரியணை அமர்ந்து கோல் ஏந்தி முடிசூடும் வல்லமை கொண்டிருக்கிறாரோ அவர் மேல் வெண்குடை கவிந்தாக வேண்டும். இந்த மண்ணை வென்றவர் என் கணவர். இப்பாரதவர்ஷத்தில் எவரும் அமராத அரியணையில் அமர்ந்தவர். ஷத்ரியகுலமே இங்கு வந்து அவருக்கு அடிபணியும் நாள் வரத்தான் போகிறது” என்றாள். “ஆம். அதை நானும் அறிவேன். அந்த நாள் வரும் வரை நாம் ஷத்ரியர் சொல்லுக்கு பணிந்தே ஆக வேண்டும். இளைய யாதவர்கூட ஷத்ரியருக்கு அஞ்சியே விதர்ப்பினியை தன் பட்டத்தரசியாக ஷத்ரிய அவையில் அமர வைக்கின்றார்” என்றான்.
“அதைப் பற்றித்தான் நான் எண்ணிக் கொண்டிருந்தேன்” என்றாள் சத்யபாமா. ”இனியும் எதற்கு இந்த நாடகம்? இந்நகர் கட்டப்பட்ட காலத்தில் உருவாக்கப்பட்ட முறை அது. அன்று நம் கருவூலம் வலுப்பெற்றிருக்கவில்லை. நம் படை வல்லமை வளர்ந்திருக்கவில்லை. இன்று எட்டு புறங்களிலும் நம் படைகள் பெருகியுள்ளன. பாரதவர்ஷத்தின் எந்த நாடும் எண்ணிப்பார்க்க முடியாத பொருளாற்றல் கொண்டிருக்கிறோம். எவருக்காக இனி நான் அஞ்ச வேண்டும்? நாளை சியமந்தகத்தை நானே சூடி வருகிறேன். பட்டத்தரசியாக அரசர் அவையில் நான் அமர்கிறேன். வந்திருக்கும் சிற்றரசர்களில் எவர் அவையை புறக்கணிக்கிறார் என்று பார்க்கிறேன்.”
திருஷ்டத்யும்னன் “என்றாயினும் அதை தாங்கள் செய்தே ஆக வேண்டும்” என்றான். அவள் தலையை அசைத்து குழலை பின்னால் தள்ளி ”ஆம், எதற்கும் ஓர் இறுதி முடிவு வந்தாக வேண்டும்” என்றாள். திருஷ்டத்யும்னன் புன்னகைத்தான். “இந்தப் பூசல் எழுவதற்காகவே சியமந்தகத்தை இளையவர் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறார்” என்றான். “இந்த மணி செல்லும் இடமெல்லாம் பூசலை உருவாக்குகிறது என்பார்கள். அதுவே நிகழ்கிறது.” சத்யபாமா “இந்தப்பூசல் இவளே உருவாக்குவது. இவளது பேராசை” என்றாள். திருஷ்டத்யும்னன் “அதற்கு முன் விதர்ப்பினியின் தரப்பைச் சொல்ல ஒப்புதல் உண்டா?”’ என்றான். “சொல்லும்” என்றாள் சத்யபாமா.
“அரசி, தங்கள் தந்தை சத்ராஜித் இந்த மணியை மார்பில் அணிந்து ஒருமுறை கேகய நாட்டுக்கு சென்றிருக்கிறார். இளைய கைகேயி பத்ரையின் இடைமணி விழாவை சிறப்பிக்கையில் விளையாட்டென சியமந்தகத்தை எடுத்து சிறுமகவான விதர்ப்பினிக்கு அணிவித்திருக்கிறார். அதற்கு சூதர்சொல் சான்றுகள் உள்ளன” என்றான். சத்யபாமா திகைத்து ”அதனால் என்ன?” என்றாள். “தங்களுக்கு அந்த மணி அணிவிக்கப்படுவதற்கு முன்னரே விதர்ப்பினிக்கு அணிவிக்கப்பட்டிருக்கிறது. அன்று தங்கள் தந்தை அந்த மணி மீது அவளுக்கும் உரிமை உண்டு என்று ஒரு சொல் சொன்னதாக விதர்ப்பினி சொல்கிறார்.”
உரக்க “பொய்!” என்று கூவியபடி எழுந்துவிட்டாள் சத்யபாமா. “நானும் அதை நம்பவில்லை அரசி. ஆனால் அந்நிகழ்வு உண்மை. சியமந்தக மணியைச் சூடி விதர்ப்பினி அன்று அவை சுற்றிவந்தது பாடப்பட்டுள்ளது. தங்கள் தந்தையே அளித்த மணியை சிற்றுணர்வால் ஆளப்படும் தாங்கள் மறுக்கிறீர்கள் என்று பொன்விழையும் பாணர் எழுதி நிறுவ அதுவே போதும்” என்றான். “நிறுவட்டும்” என்றாள் சத்யபாமை. “ஆம், சிற்றுணர்வேதான். என் குடிச் செல்வத்தை பிறிதொருத்தி சூட நான் ஒப்ப முடியாது. அதை அவள் தொட்டால் இந்த மணி நெருப்பாக எரிந்து அவள் குடியை எரிக்கும்.”
“ஆம், அரசி. அதை நானும் அறிவேன்” என்றான் திருஷ்டத்யும்னன். “தங்களை ஏன் பட்டத்தரசியாக ஏற்க முடியவில்லை என்றிருக்கிறார்கள் இவர்கள் என்று அறிந்திருக்கிறீர்களா?” தளர்ந்த காலடிகளுடன் அமர்ந்து “ஏன்?” என்றாள் சத்யபாமா. “தாங்கள் அரச குடி பிறக்கவில்லை. அரச குடிக்குரிய பெரும்போக்கும் கொடைத்திறனும் நிலைபேறுள்ள நோக்கும் தங்களிடமில்லை. முடிசூடினாலும் எளிய யாதவப் பெண்ணாகவே உளநிலை கொண்டுள்ளீர்கள். இந்நிகழ்வையே அதற்கென முதற்சான்றாக அவர்கள் முன்வைப்பார்கள்.”
பற்களைக் கடித்து “முன் வைக்கட்டும். அதை நான் பொருட்படுத்தப்போவதில்லை” என்றாள் சத்யபாமா. “இந்த மணி ஒன்றால்தான் இந்நகர்வாழ் மூடர் நடுவே நான் ஷத்ரியப்பெண்ணான அவளைவிட ஒரு படி மேலாக எண்ணப்படுகிறேன். யாதவரின் குடித்தலைவி என்ற இடமே என்னை பட்டத்தரசியாக்குகிறது இளவரசே. இம்மணியைச் சூடி அவளும் அமர்வாள் என்றால் யாதவர்கூட அவளை ஏற்க மாட்டோம் என்று சொல்லத் தயங்குவர். யாதவகுலம் ஏற்றுக்கொண்ட அரசமகள் எனும் நிலையில் அவள் அவையில் முதன்மை கோரினால் மன்று அதை மறுக்கவியலாது.”
“நீங்கள் எண்ணுவது போல அவள் தனித்தவள் அல்ல” என்றாள் சத்யபாமா. “அரசுசூழ்தல் அறிந்த அமைச்சர்கள் அவளுக்குப் பின்னால் இருக்கிறார்கள். இன்று துவாரகையின் அரசியாக அவள் ஆவதை ஷத்ரியர்களும் விழைகிறார்கள். ஒருவேளை விதர்ப்பத்தில் இருந்தேகூட ஒற்றர்கள் அவளுக்கு நெறிவகுத்து அளிக்கக்கூடும். அவள் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் அரசாடலின் காய்கள். இதில் என் ஆடல் இது, சியமந்தகத்தை எந்நிலையிலும் அவளுக்கு அளிக்க முடியாது.”
திருஷ்டத்யும்னன் மாறாமல் புன்னகைத்து “உண்மையில் இதையே நான் எண்ணினேன்” என்றான். “தங்கள் சொற்களை விதர்ப்பினிக்கு அளிக்கிறேன்” என்றபடி எழுந்து தலைவணங்கினான். “அவளிடம் சொல்லும், இந்த வீண் விழைவுகளைக் கடந்து இந்நகர் வெற்றியுடன் வாழ அவளால் என்ன இயலுமோ அதைச் செய்யும்படி நான் ஆணையிட்டேன் என்று. பிறிதெதுவும் இங்கு நிகழாது என்று அவள் தெளிவு கொள்ள வேண்டும் என்று நீரும் வழிகாட்டும்” என்றாள் சத்யபாமா.
திருஷ்டத்யும்னன் மீண்டும் தலைவணங்கி “விடைகொள்கிறேன் அரசி. இச்செய்தியை நான் கேகயத்து அரசிக்கும் தெரிவிக்கவேண்டும். இன்றிரவுக்குள் முடித்தேன் என்றால் என் பணி நிறைவடைந்தது” என்றான். “கைகேயிக்கா? ஏன்?” என்றாள் சத்யபாமா ஐயத்துடன். “அதைச் சொல்லவிட்டுவிட்டேன் அரசி” என்றான். “சொல்லும்” என்றாள் சத்யபாமா. “ஏனென்றால் சியமந்தகமணியை விதர்ப்பினிக்கு மட்டுமென அளிக்கலாகாது, எண்மருக்கும் அதில் நிகர் உரிமை உள்ளது என்று என்னிடம் கைகேயி சொன்னார்.” சத்யபாமா ஏளனமாக “அவளுக்குமா? என்னதான் எண்ணியிருக்கிறார்கள் இவர்கள்?” என்றாள். “அரசி, அவர்களனைவரும் துவாரகைக்கு அரசியர் அல்லவா?” என்றான் திருஷ்டத்யும்னன்.
“ஆம், ஆனால் இங்கு பட்டத்தரசி என்பவள் நான்” என்றாள். “அது மாறாத உண்மை அரசி. ஆனால் பிற அனைவரும் என்ன எண்ணுகிறார்கள் என்பதும் உணரப்படவேண்டியதல்லவா? எண்மர் அமர்ந்த முழுப்பேரவையில் எவர் பட்டத்தரசி என்னும் வினா எழும் என்றால் அதை எப்படி எதிர்கொள்வது?” சத்யபாமா விழிசுருக்கி “ஏன்?” என்றாள். ”அவ்வாறு எழ வாய்ப்பில்லை. ஆனால் அது எழும் என்றால் முறைமைப்படி அவர்கள் ஐங்குடியினரும் அமரும் ஓரு பொதுமன்று கூடவேண்டும் என்றுதான் கோருவர். இங்குள்ள ஷத்ரியர்கள் அதில் முன்னிற்பார்கள். அந்த அவையில் யாதவர்களின் குரல் ஒன்று மட்டுமே தங்களுக்கு ஆறுதலாக ஒலிக்கும். பிறர் குடியையே தேர்வார்கள் என்பதனால் விதர்ப்பினிக்கு ஒப்புதல் அளிக்கக்கூடும்.”
“அவ்வண்ணமெனில் அடுத்த வினா எட்டு அரசியரும் எவ்வண்ணம் விழைகிறார்கள் என்பதே. அவர்களில் தங்களை ஆதரிப்பவர் எவர் என்று நாம் நோக்கியாகவேண்டும்” என்று திருஷ்டத்யும்னன் தொடர்ந்தான். சத்யபாமா பெருமூச்சுடன் “அப்படியொன்று நிகழுமா என்ன?” என்றாள். “ஆம். இறுதியில் அதுவே நிகழும். அரசு சூழ்தலில் யாதவர்களுக்கு என தனிநெறிகள் இல்லை. அவர்களது சிறிய குடியரசுகளுக்கு இதுவரை ஷத்ரிய நெறிகளே வழிகாட்டுகின்றன. முடியரசின் நெறிகள் என்றும் ஷத்ரியர்களுக்கே நலம்பயப்பவை.”
“என்ன நிகழும்?” என்றாள் சத்யபாமா. “எட்டரசியரின் கருத்தை பெருமன்று உசாவலாம். விதர்ப்பினியை அரசியாக்க வேண்டும் என்று பிற ஷத்ரிய அரசியர் கோரலாம். அவ்வண்ணம் ஆக்கவில்லை என்றால் தாங்கள் அவையமர மாட்டோம் என்று மறுக்கவும் செய்யலாம். அவர்களை மன்னரோ மன்றோ கட்டுப்படுத்த முடியாது. அவ்வண்ணம் அரசியர் மறுத்தார்கள் என்றால் இங்கு குடிமன்றுகள் எவையும் கூடமுடியாது. அரசுமன்றுகளும் முறைப்படி அமையாது. குலதெய்வங்கள் பூசனை கொள்ளாதொழியும். அந்த இக்கட்டை எந்த அரசும் விரும்பாது” என்றான் திருஷ்டத்யும்னன்.
சத்யபாமா “இதை நான் எண்ணியதில்லை” என்றாள். “பிற அரசியர் அறுவரையும் நாங்கள் இருவரும் பொருட்டென எண்ணிக் கொண்டதே இல்லை. அவர்கள் எண்ணுவது என்ன என்று அறிந்திருக்கவுமில்லை.” திருஷ்டத்யும்னன் “அவ்வாறல்ல அரசி. விதர்ப்பினி அரசியரை நன்கு அறிந்தே இருக்கிறார்கள்” என்றான். “சற்றுமுன் நான் மாத்ரியை கண்டுவிட்டு வந்தேன்” என அவன் சொல்வதற்குள் “மாத்ரியையா? என் உளவுச் சேடியர் சொல்லவில்லையே?” என்றாள் சத்யபாமா.
சிரித்தபடி “தங்கள் உளவுச் சேடிகள் அனைவருமே விதர்ப்பினியை மட்டுமே முன் நோக்குகின்றனர். பிற அறுவரையும் அவர் பெயர்களுக்கு மேல் அறிந்திருக்கவே வாய்ப்பில்லை” என்றான் திருஷ்டத்யும்னன். “இன்று நான் மாத்ரியின் மந்தண அவைக்குச் சென்றபோது ஒன்று கண்டேன். எட்டு அரசியரும் தங்களுக்கென தனி அரசியலை கொண்டிருக்கிறார்கள். அதில் மாத்ரி கேகய நாட்டு அரசி பத்ரையின் சொற்படி ஆடும் பாவை.” சத்யபாமா “ஆம். நான் அதை உணர்கிறேன். பத்ரை போர்த்தொழில் கற்றவள். அரசு சூழ்தல் அறிந்தவள். ஷத்ரியப் பெண் என்ற ஆணவம் கொண்டவள்” என்றாள்.
“உண்மை. நிமிர்ந்த தோள்களும் நேர்நோக்கும் கொண்டவர் கைகேயி. ஆணையிடும் குரலில் என்னுடன் பேசினார்” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். “அவருக்கு இடைமணி அணிவிக்கும் விழாவுக்கு விதர்ப்பினி அங்கு வந்தார் என்றும் தங்கள் தந்தை சியமந்தகத்தை விதர்ப்பினிக்கு அணிவித்திருப்பதற்கு தானே சான்று என்றும் பத்ரை சொன்னார். அதையே நான் சற்று முன் சொன்னேன்.” சத்யபாமா “ஓ” என்று சொல்லி எண்ணம் அழுந்த பீடத்தில் சாய்ந்தாள்.
“அரசி, இன்னொன்று கருதப்படவேண்டும். பத்ரையும் ஷத்ரியமகள். அவர்களின் குரல் எழுவது எப்படியானாலும் அதன் இறுதியிலக்கு விதர்ப்பினிக்காகவே என்று எளிதில் உய்த்துணரலாம். அதற்குத் துணையாக மலைமகள் லக்ஷ்மணையை எடுத்துக் கொண்டிருக்கிறார். அவைமன்றில் ஷத்ரியர்களும் பிறரும் என இருபால் பிரிவினை உருவாகும் என்றால் ஷத்ரியர்களின் குரல் வலுக்கவேண்டும் என்பதற்காகவே முடிவல்லமை இல்லாத உபமத்ரத்தின் அரசியையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டிருக்கிறார். அவர் நெடுந்தூரம் சென்றுவிட்டார் என்பதை அவர்களின் பேச்சிலிருந்து அறிந்தேன். இனி அவையில் இளைய யாதவர் எழுந்து அரசியர் மன்றை நோக்கி உங்கள் ஆணை என்ன திருமகள்களே என்று வினவினால் விதர்ப்பினியின் குரலே ஓங்குமென்று எண்ணுகிறேன்” என்றான்.
சத்யபாமா ஏதோ சொல்லவந்தபின் தயங்கி நீள்மூச்சுடன் தளர்ந்து பீடத்தில் அமர்ந்தாள். “ஆம்” என்று தனக்குத்தானே தலையசைத்தாள். திருஷ்டத்யும்னன் அவள் உள்ளம்குவிந்து மீண்டும் பேசவருவது வரை பொறுமைகாக்கவேண்டும் என முடிவெடுத்து தன் உடலை இருக்கையில் சாய்த்து அசைவிழந்தான். அவள் அலைபாய்ந்த கருவிழிகளுடன் விரல்களால் ஆடையை சுழற்றியபடி நெடுநேரம் அமர்ந்திருந்தாள். காற்று கடந்து செல்லும் சுனையென அவள் உடலில் எண்ணங்கள் சிறுஅசைவுகளாக நிகழ்ந்து கொண்டிருந்தன. பிரிந்து பிரிந்து செல்லும் எண்ணங்களை வளைதடியில் தட்டித் தொகுக்கும் ஆயனென அவள் உள்ளம் தவிப்பதை திருஷ்டத்யும்னன் உணர்ந்து தனக்குள் புன்னகைத்துக் கொண்டான்.
சத்யபாமா நீண்ட மூச்சுடன் திரும்பி “என்ன செய்வது பாஞ்சாலரே? எனக்கு ஒன்றும் தோன்றவில்லை” என்றாள். “அவருக்கு அவள் மேல் உள்ள அன்பையும் நான் அறிவேன். எட்டரசியர் அவையில் அவளுக்கு உகந்தமுறையில் சொல் எழுந்தால் அக்கள்வர் அவளுக்கு மணியை அளிக்க அதையே சுட்டிக்காட்டவும் செய்வார். யாதவர்களுக்குள் ஒற்றுமை இல்லை. சிறியகுலமாகிய அந்தகர்கள் நான் அரசியானால் மேலெழுந்துவிடுவார்கள் என அஞ்சும் விருஷ்ணிகளும் போஜர்களும் அதை ஆதரிக்கக்கூடும்…” பின்பு தனக்குத்தானே தலையசைத்து “நீங்கள் எண்ணுவதைவிடவும் இக்கட்டு வலுவானது” என்றாள்.
“அரசி, இன்று இங்குள்ள நிலைமையை நாம் தொகுத்துப் பார்க்க முயல்வோம்” என்று அவன் சொன்னதும் அவள் உள்ளம் தனித்துச் சுழல்வதைக் காட்டும் விழிகளுடன் மெல்ல தலையசைத்தாள். “எட்டு அரசியரில் கோசல அரசி நக்னஜித்தியும், அவந்தி அரசி மித்ரவிந்தையும், கேகயத்து அரசி பத்ரையும், விதர்ப்பினியும் ஷத்ரியர். தாங்களும் கான்வேடர் குலத்து அரசி ஜாம்பவதியும் மச்சர்குலத்து அரசி காளிந்தியும், மத்ர அரசி லக்ஷ்மணையும் ஷத்ரியர்கள் அல்ல. துலாமுள் இரு பக்கமும் அசையாது முற்றிலும் நிலை பெற்றிருக்கும் சூழல் இன்றுள்ளது. அதை உணர்ந்து தங்கள் தரப்பில் ஒலிக்க வேண்டிய குரலில் ஒன்றை விதர்ப்பினியின் தரப்பு வென்றுள்ளது. லக்ஷ்மணை பத்ரையின் தோழியெனச் சென்று விதர்ப்பினியை ஆதரிப்பார்கள் என்றால் தாங்கள் முன்னரே தோல்வியடைந்து விட்டீர்கள்” என்றான் திருஷ்டத்யும்னன்.
சினத்துடன் இரு கைகளையும் அரியணையின் பிடியில் அடித்து சத்யபாமை கொதித்தாள். “மூடப்பெண், அவளை இப்போதே வரவழைக்கிறேன். அவள் இங்கு நகர்நுழைந்தபோது இங்குள்ள முதற்குடி யாதவரும் வணிகப் பெருமுதலிகளும் அவள் அரசி அல்ல என்றும் அவள் அரியணையமர ஒப்ப மாட்டோம் என்றும் பேசிக் கொண்டதை நான் அறிந்தேன். என் அகம்படியினருடன் அணிவாயில் முகப்பு வரை சென்று எதிர்கொண்டு அழைத்து பட்டத்துயானை மீதேறி அவளை அழைத்து வந்தேன். இங்கு அவருக்கு நிகராக அரியணையில் அவளை அமர்த்தி அரச முறைமைகள் அனைத்தையும் செய்ய வைத்தேன். அன்று என் இடைவளைத்து தோளில் சாய்ந்து கண்ணீர் விட்டாள். அவளை எண்மரில் ஒருத்தியாக்கியது இளைய யாதவரின் காதலல்ல, நான் கொண்ட கனிவு. அதை அவள் மறந்துவிட்டாளா என்று கேட்கிறேன்.”
“மறந்திருக்க மாட்டார்கள் அரசி” என்றான் திருஷ்டத்யும்னன். “ஆனால் அன்றே அவரை வெல்லும் நோக்கம் விதர்ப்பினிக்கு இருந்தது என்றால் இதைவிட நெகிழ்வான சில நிகழ்வுகள் அவர்களுக்குள்ளும் நிகழ்ந்திருக்கலாம். லக்ஷ்மணை எளியவர். இசையன்றி அரசியல் அறியாதவர். ஏதேனும் தருணத்தில் அவரால் சொல் ஒன்று அளிக்கப்பட்டிருக்கலாம். இன்று நாம் ஏதும் சொல்ல முடியாது.”
சத்யபாமை முற்றிலும் தளர்ந்து பீடத்தில் சாய்ந்தாள். தருக்கி நிமிரும் அகவிரைவு கொண்டவர்களின் இயல்புக்கேற்ப அனைத்து எழுச்சிகளும் விரைவிலேயே விலக பாய்கள் அவிழ்ந்து சரிய அசைவிழந்த படகென ஆனாள். திருஷ்டத்யும்னன் “நான் கேகயத்து அரசியின் சொல்லை மீண்டும் தங்களிடம் சொல்லவிழைகிறேன் அரசி. அதில் நாம் செல்லவேண்டிய திசைக்குறிப்பு உள்ளது” என்றான். சத்யபாமா விழிமட்டும் திருப்பி நோக்கினாள். “சியமந்தகம் எட்டு அரசியருக்கும் நிகர் உரிமை கொண்டதாகவே அமைய வேண்டும் என்று அவர் சொன்னார் அல்லவா? அதை நாம் ஏற்கலாம்” என்றான். “அதை…” என்று தளர்ந்த குரலில் கேட்ட சத்யபாமை சற்றே சினம் எழ “விதர்ப்பினி கோருவதனால் இவளும் கோருகிறாள். பிற அனைவரும் கோருகிறார்களா என்ன?” என்றாள்.
“முறைப்படி அவ்வண்ணம் கோர அவர்களுக்கு என உரிமை உண்டு அல்லவா? நாம் வேண்டுவது அதுவே” என்றான் திருஷ்டத்யும்னன். “தாங்கள் இளைய யாதவரின் பட்டத்தரசியாக முடிசூடி இங்கு அமர்ந்திருக்கையில் தனிக் கருவூலமோ தங்களுக்கென உரிமைப் பொருளோ கொண்டவரல்ல. சியமந்தகம் என்று இங்கு வந்ததோ அன்றே இளைய யாதவரின் கருவூலப் பொருளாகிவிட்டது. அரசி, அரசநெறிப்படி தாங்கள் அணிந்துள்ள இந்த அணிகள் ஒவ்வொன்றும் கூட கருவூலத்துக்குரியவையே. எட்டு அரசியரும் அக்கருவூலத்துக்கு நிகர் உரிமை கொண்டவர் என்பதால் சியமந்தகமும் அவர்களுக்கு உரிமை உடையதே” என்றான்.
சத்யபாமையின் விழிகளில் மெல்லிய ஆவல் ஒன்று தெரிந்தது. “அவ்வண்ணமெனில் அவளை விதர்ப்பினியின் குரலாக கொள்ளவேண்டியதில்லை. அவளுக்கு எதிராகவும் கொண்டுசெல்லலாம், அல்லவா?” திருஷ்டத்யும்னன் “ஆம் அரசி, அங்குதான் நமக்கு சிறுவாய்ப்பு உள்ளது” என்றான். “தன்னை விதர்ப்பினியின் கீழே அமர்த்திக் கொள்ள கைகேயி சித்தமாக இல்லை என்றே எண்ணுகிறேன். விதர்ப்பமும் கேகயமும் நிகர்நிலை நாடுகள் என்பதால் தானும் பட்டத்தரசிக்கு நிகரே என்றே அவர் எண்ணலாம். இயல்பில் எங்கும் தலை வணங்கா தன்மை கொண்டவர் கைகேயி. ஆகையால் அவரை வீரலட்சுமி என்று இங்கு சூதர் அழைக்கிறார்கள். உண்மையில் அவ்வழைப்பினாலேயே அவர் உள்ளம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒருபோதும் விதர்ப்பினிக்கு வெறுந்துணையாக அமையமாட்டார். சியமந்தகத்தை அவர் கோருவது உங்களுக்கும் விதர்ப்பினிக்கும் நிகராக அமைவதற்காகவே. தனக்கென கோரமுடியாது என்பதால் எண்மருக்காகவும் கோருகிறார்.”
“இன்று நாம் செய்யக்கூடுவது அவர்களைப் பிரிப்பதே” என்றான் திருஷ்டத்யும்னன். “இரண்டு அணிகளாக அவர்கள் பிரிந்தால் தாங்கள் வெல்வது எளிது” என்றான். சத்யபாமா “ஜாம்பவதி எந்நிலையிலும் என்னுடன் இருப்பாள். அதில் ஐயமேதுமில்லை” என்றாள். திருஷ்டத்யும்னன் “ஆம்” என்றான். “காளிந்தியும் தங்களுக்காக பேசுவார். எஞ்சும் இருவரும் ஷத்ரியப் பெண்கள். அவர்களில் ஒருவரை தாங்கள் வென்றெடுப்பீர் என்றால் அவையில் பிறிதொரு குரலெழாது வெல்ல முடியும்.” சற்றுநேரம் உளம்துழாவியபின் “காளிந்தியிடமும் ஜாம்பவதியிடமும் நான் ஆணையிட முடியும்” என்று சத்யபாமா சொன்னாள்.
“ஆம் அரசி, அவர்களுக்கென தனி உள்ளங்கள் இருக்க வாய்ப்பில்லை. ஷத்ரிய இளவரசிகள் அவ்வாறல்ல. இளமையிலேயே மண்ணாளும் கனவுகளுடன் வளர்கிறார்கள். பிறிதொருவருக்குக் கீழாக இருப்பதில் ஆணவம் புண்படுகிறார்கள். அவர்களை நோக்கி நாம் ஆணையிட முடியாது. அவர்கள் கோரும் ஏதோ ஒன்றைக் கொடுத்து ஓர் அரசுமுறைப் புரிதலை மட்டுமே உருவாக்கிக்கொள்ள முடியும்” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். “இன்று கைகேயியை வென்றெடுக்க மிக எளிய வழி ஒன்று தங்களுக்கு உள்ளது. சியமந்தகத்தை அவர்களுக்கும் அளிப்பதாக சொல்லுங்கள்.”
“என்ன சொல்கிறீர்?” என்று அரையுள்ளத்துடன் சினந்தாள் சத்யபாமை. “ஆம் அரசி, தங்களுக்கு நிகராக சியமந்தகம் விதர்ப்பினிக்கு மட்டும் அளிக்கப்படும் என்றால் மட்டுமே விதர்ப்பினி வெற்றிகொள்கிறார். அரசியர் எண்மருக்கும் அந்த மணியை அளிக்கிறீர்கள் என்றால் வேடர்குலத்து ஜாம்பவதி அணியும் அதே மணியை தானும் அணிவதாகவே விதர்ப்பினி எண்ணமுடியும். தங்கள் இயல்பான பெருந்தன்மையால் அந்த மணியை எண்மருக்கும் அளித்தீர்கள் என்று சூதர்களை பாட வைக்கமுடியும். அந்நிலையில் என்றும் அந்த மணி தங்களுக்குரியதாக இருக்கும். பிற எழுவரும் வெறுமனே அதைச் சூடி அமர்வதாகவே பொருள் கொள்ளப்படும்.”
“ஆனால் நாளை அவையில் அவள் அமர்ந்து அணிந்திருப்பது…” என்று சத்யபாமா சொல்லத் தொடங்கவும் “நாளை மாலை அரசப்பேரவையில் விதர்ப்பினி சியமந்தகத்தை சூடுவதற்கு முன்னதாகவே உச்சிப்பொழுதின் அவையில் அதை பத்ரை சூடட்டும். புலரியில் எண்குலத்து மூதன்னையர் ஆலயத்தில் பூசனை முடிக்கச் செல்லும் ஜாம்பவதி அதை அணியட்டும். விதர்ப்பினி மீண்டும் அணியும்போது அந்த அணிதல் எப்பொருளும் இல்லாதாகிவிட்டிருக்கும்” என்றான்.
சில கணங்கள் அச்சொற்களின் முழுப்பொருளை உணராதவள் போல் இருந்த சத்யபாமை முகம் மலர்ந்து “ஆம். அது உகந்த வழியே” என்றாள். “சியமந்தக மணியை தங்களிடம் பெற்று அரசியார் ருக்மிணிக்கு அளிப்பதாக வாக்களித்துள்ளேன். அதே வாக்கை பத்ரைக்கும் லக்ஷ்மணைக்கும் அளித்துள்ளேன். எண்மருக்கும் மணி அளிக்கப்படக்கூடாது என்று நான் எவரிடமும் சொல் பெறவில்லை. தாங்கள் எண்ணிய இலக்கும் ஈடேறும், என் சொல்லும் கனியும்” என்றான் திருஷ்டத்யும்னன். சத்யபாமை சிரித்தபடி “அவ்வண்ணமே ஆகுக!” என்றாள்.