‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 69

பகுதி பதினொன்று : எண்முனைக் களம் – 4

அவை நிறைவுற்று ஜராசந்தர் அரண்மனைக்குத் திரும்பியபின் நெருப்பு எரியும் உடலுடன் மகளிர் மாளிகையில் அரசியின் மஞ்சத்தறைக்குச் சென்று அங்கே அணி களைந்துகொண்டிருந்த மிலிந்தையிடம் பிருஹத்சேனர் கூவினார் “இழிமகளே, நீ எண்ணியிருப்பதென்ன? ஜராசந்தன் நம் மகளுக்கு தந்தைக்கு நிகரான வயதுடையவன். இழிபண்பின் உறைவிடம் அவன். ஆசுரநாட்டு இழிமகள் ஜரையின் மைந்தன். அவன் அரண்மனையில் அவன் அரசியருக்கு தொழும்புப் பணி செய்ய அனுப்பவா நம் மகளை நேர்ந்து பெற்றோம்? மடியிலிட்டு வளர்த்தோம்? பொன்னும் மணியுமிட்டு அணி செய்தோம்? நம் மூதன்னையருக்கு அடுக்கும் செயலா இது? அதற்கு ஒரு போதும் ஒப்ப மாட்டேன்.”

அரசி நிகரான சினத்துடன் திரும்பி முகம் உருகும் அரக்குப்பாவையென சுளிக்க “வேறு என்ன செய்யவிருக்கிறீர்கள்? மச்ச நாட்டுப் பரதவனிடம் நதியில் மீன்பிடித்து அவள் வாழ வேண்டுமா? அவள் வயிற்றிலுதிக்கும் குழந்தைகள் செம்படவர்களாக சிற்றாடை கட்டி சேற்றில் உழல வேண்டுமா?” என்றாள். “அவள் ஊழ் இது என்றால் அவ்வாறே அமையட்டும். ஜராசந்தர் அரண்மனையில் அவள் இடம் எதுவாயினும் அரச முறைமைகளுக்கு அவள் உரியவளாக இருப்பாள். செம்பட்டுத்திரையிட்ட பொற்பல்லக்கும் அகம்படி வீரர்களும் அணிச்சேடியரும் அவளுக்கு அமைவார்கள். ஆணையிடவும் அரண்மனை வாழவும் தகுதி அமையும். அவள் மைந்தர் இளவரசர்களாகவே அறியப்படுவார்கள்” என்றாள்.

பின் அவள் குரல் தழைந்தது. “யாரறிவார்? அவர்களில் வீரமும் நுண்ணறிவும் கொண்ட மைந்தர் பிறந்து என்றோ ஒரு நாள் மகதப் பெருநிலத்தின் ஒரு பகுதியை வெல்லக்கூடும். முடிசூடி கோல்கொண்டு அரியணையமர்ந்து அவர்கள் ஆளவும் கூடும். மகதநிலம் மிகப்பெரியது. நெடுங்காலம் அது ஒற்றைநாடென திகழமுடியாது” என்றாள். பெருமூச்சுடன் மஞ்சத்தில் மெல்ல அமர்ந்து “இன்று நாம் எண்ணக்கூடியது இதுவே. பெருஞ்சுவரிலிருக்கும் ஒரேவாயில். நமக்குப்பின் காலப்பெருவெள்ளம்” என்றாள்.

“நான் இதற்கு எப்படி ஒப்புவேன்? என் உள்ளம் சொல்கிறது என் இளையோள் அந்த மச்சர்குடி மைந்தனுடன் காதல் கொண்டு வாழமுடியும். இந்த மதகளிற்றின் முன் அவள் மிதிபட்டு மண்ணில் உழல்வாள்” என்றார் பிருஹத்சேனர். “அது அரச குலப்பெண்டிரின் ஊழ். அவர்களில் இனிய காதல் வாழ்க்கையை அடைந்தவர்கள் மிகச்சிலரே. அரண்மனைக்கும் மணிமுடிக்கும் அவர்கள் கொடுக்கும் நிகர்விலை அது” என்றாள் அரசி. “என் இளமையில் பெருநிலம் ஆளும் திண்தோள் கொண்ட வீரன் ஒருவனை கனவுகண்டேன். வீணைநரம்பன்றி பிறிதறியாத உங்களுக்கு அரசியாகி இந்தச் சிற்றூரின் மரவீட்டில் பொய்யரசை ஆளவே எனக்கு ஊழிருந்தது.”

அன்றிரவெல்லாம் தன் அரண்மனையில் துயில் கொள்ளாது அமர்ந்திருந்த பிருஹத்சேனர் நெடுநாட்களுக்குப் பின் தன் வீணையை எடுத்து அதை மீட்டினார். ஒன்றுடனொன்று இணையாமல் தனித் தனியாக அதிர்ந்த உலோக விம்மல்களின் நிரையாக எழுந்தது இசை. ஆனால் அவர் உளம் கொண்ட துயரங்களனைத்தையுமே சொல்லி முடித்து அந்நிறைவை தன் குடத்திற்குள் நிறைத்து ரீங்கரித்தது. அதன் மேல் கவிழ்ந்து துயின்று கம்பித் தடங்கள் செவ்வரிகளாகப் படிந்த முகத்துடன் எழுந்தார். ஆடி முன் நின்று அறியாத தெய்வம் ஒன்று தன் சவுக்கை அவர் முகத்தில் வீசிச் சென்றதுபோல தெரிந்த அந்த வடுநிரையை நோக்கி நீள்மூச்செறிந்தார்.

அவ்வரிகளை மெல்ல விரல்களால் வருடிக்கொண்டிருந்தபோது தன்னுள் ஓர் இசை எழுவதை உணர்ந்தார். குருதியாலான கம்பிகள் கட்டப்பட்ட யாழ் தன் உடல். அது மீட்டும் இசையை செவிகளுக்கு அப்பால் அகச்சிறையில் வாழும் ஆத்மனால் மட்டுமே கேட்க முடியும். என்ன என்றறியாமல் அவர் உடல் அப்போது விதிர்த்தது. தன்னுள் எழுந்த அறிதல் ஒன்றின் விளைவு என உணர்ந்தபின்னரே அவர் அவ்வறிதலை சொற்களாக ஆக்கிக்கொண்டார். அதுவா அதுவா என மீண்டும் மீண்டும் தொட்டுத்தேர்ந்தார், கல்லா வைரமா என மயங்கும் வணிகனின் பதற்றத்துடன். பின் புறங்கழுத்தில் விழுந்த குளிர்ந்த அடி போல அதை உணர்ந்தார்.

அவர் மகள் ஜராசந்தனுக்கோ மச்சனுக்கோ மணமகள் அல்ல என்று. அவள் வாழும் இடம் பிறிதொன்று. தூய இசைமீட்டி அவள் செய்த தவம் அவளை அங்கு மட்டுமே கொண்டுசேர்க்கும். அவள் இசைத்தெய்வங்களால் சூழப்பட்டிருக்கிறாள். அவை அவளை தங்கள் மெல்லிய சிறகுகளால் சுமந்துகொண்டுசெல்கின்றன. எங்கு அவை தங்கள் சிறகமைத்து அமரமுடியுமோ அங்குதான் கொண்டுசெல்கின்றன. எவ்விடம் என்று அவர் அறிந்திருக்கவில்லை. எவரென்று உய்த்திருக்கவில்லை. ஆனால் திருமகள் தன் ஆலயத்தை சென்றடைவாள் என்று முழு உறுதியுடன் உணர்ந்தார்.

நிறைந்த உள்ளத்துடன் அவர் தன் மந்தண அவைக்கு வந்தபோது மத்ர குலத்தின் குடிமூத்தோர் எழுவர் சினத்துடன் அங்கு வந்திருந்தார்கள். முந்தைய நாள் அரியணையில் ஜராசந்தன் அமர்ந்தது அவர்களை கிளர்ந்தெழச்செய்திருந்தது. முகமன் ஏதுமின்றி சினத்துடன் கைநீட்டி எழுந்த பத்ரகுடியின் மூத்தாரான வீரபத்ரர் “அரசே, மத்ர நாட்டு மணிமுடிக்கு கட்டுப்பட்டவர்கள் நாங்கள். ஆசுர குலத்து ஜரையின் மைந்தனுக்கு அடிபணிந்து நிற்க எங்களால் ஆகாது” என்றார்.

சங்ககுடியின் மிருகசீர்ஷர் “அந்தக் குலமிலி என்று இவ்வரியணையில் அமர்ந்தானோ அப்போதே நாங்கள் மத்ரர்கள் அல்லவென்று ஆகிவிட்டோம். இனி இம்மண் எங்களுக்குரியதல்ல. எங்கள் குடிகளனைத்தும் கிளம்பி மத்ரபுரிக்கு செல்கிறோம்” என்றார். “இன்று ஜராசந்தனின் தொழும்பனாக தாங்கள் இவ்வரியணை அமர்ந்திருக்கின்றீர். மத்ரரென்று இனி பெயர் சொல்ல வேண்டாம்” என்றார் பிருங்க குடியின் சம்விரதர்.

பிருஹத்சேனர் “எம்முடிவையும் எடுக்கும் நிலையில் நானில்லை. படையற்றவன். அரசன் என்று பெயர் மட்டுமே கொண்ட சிற்றரசன். என்னால் ஆவது ஏதுமில்லை. அணைவது நிகழ்க!” என்றார். “அது உங்கள் விருப்பம். ஆனால் எங்கள் குடி பிறந்த இளவரசியை நீங்கள் அசுரக்குருதிகொண்ட அவலனுக்கு அளிக்கிறீர்கள். மூதன்னையர் வாழும் எங்கள் இல்லங்களில் இச்செய்தி அளித்த பெரும் சினத்தை அறிவீர்களா?” என்றார் சிருதகுடியின் பிருகதர். “இளவரசியை ஜராசந்தன் கொள்ள ஒப்பி வெறுங்கையுடன் நாங்கள் நாடு நீங்க மாட்டோம். இங்கு வந்தது எங்களுடன் அவளையும் அழைத்துச் செல்வதற்காகவே.”

“ஆம், ஆம்” என்றனர் குடிமூத்தார். “அதுவும் என் ஆணையில் இல்லை. இவ்வரண்மனையே மகதத்தின் படைகளால் ஆளப்படுகிறது. உங்களால் முடிந்தால் அழைத்துச் செல்லலாம்” என்றார் பிருஹத்சேனர். “எங்களிடம் வாளில்லாமல் இருக்கலாம் அரசே. வாள் முனையில் வீழ்த்த தலையிருக்கிறது. எங்கள் பதினெட்டு தலைகள் விழுந்த இம்முற்றத்திலிருந்து ஜராசந்தன் அவளை கொள்ளட்டும். அசுரன் அவளைக்கொள்ள எங்கள் புல்லுயிர் காத்து இங்கு இருந்தோம் என்ற பழி தேவையில்லை. மறைந்து விண்ணேகி அன்னையர் முன்சென்று நாங்கள் நாணி தலைகுனிய வேண்டியதில்லை” என்றார் சம்விரதர்.

பிருஹத்சேனரின் அமைச்சர் “ஆவதென்ன என்று பார்ப்போம் குடிமூத்தாரே. உங்கள் எதிர்ப்பை ஜராசந்தருக்கு அறிவிக்கிறேன். இங்கு இவ்வரசை அவர் அமைத்ததும் உங்களை குடித்தலைவர்களென கோல்கொள்ளசெய்ததும் இது மத்ரநாடு என தொடர்வதற்காகவே. உங்கள் உணர்வுகளை அவர் புரிந்து கொள்ளாமலிருக்கமாட்டார்” என்றார். “அவனிடம் எங்களுக்கு முறையீடு ஏதுமில்லை” என்றார் சம்விரதர். “நான் முறையிடுகிறேன். கலிகர் சொல்புகும் செவிகொண்டவர்” என்றார் பிருஹத்சேனரின் அமைச்சர்.

அமைச்சர் மகதர் அமைந்த மாளிகைக்குச் சென்று அங்கு தன் வீரருடனும் அமைச்சருடனும் மதுவருந்தி பகடையாடிக்கொண்டிருந்த ஜராசந்தர் முன்நின்று வணங்கி மத்ர குடியினரின் எதிர்ப்பைப் பற்றி சொன்னார். “குடிமூத்தார் தலைவிழ நாம் இங்கு கோல்கொள்ள முடியாது அரசே” என்றார். முதலில் ஏளனமும் சினமும் கொண்டு நகைத்தபடி “என் வீரர்களை அனுப்புகிறேன். அவர்கள் பதினெட்டு பேரும் இங்கு வரட்டும். அவர்கள் என் சொல்லுக்கு மறுசொல் எடுக்கிறார்களா என்று பார்க்கிறேன்” என்றுதான் ஜராசந்தர் சொன்னார். ஆனால் அமைச்சர் கலிகர் “அவர்கள் இறப்புக்கெனவே வந்திருக்கிறார்கள் அரசே. படைகொண்டு அச்சுறுத்தமுடியாது” என்றதும் திகைத்து நோக்கினார்.

“இவ்வரியணை முற்றத்தில் தங்கள் தலை இட்டு உங்கள் கோலுக்கு பழி சேர்க்க வந்திருக்கிறார்கள். அவ்வாறு நிகழுமென்றால் இங்குள்ள மத்ரகுடிகள் மலைகடந்து செல்வார்கள். நம்மால் அவர்களை தடுக்கமுடியாது. இங்கு மகதப்படை மட்டுமே எஞ்சும். குடிகளென எவரும் இல்லாமல் இங்கு வாழ்வது அரிது” என்றார் கலிகர். ஜராசந்தர் தன் மீசையை முறுக்கியபடி சின்னஞ்சிறு விழிகள் ஒளியிழக்க தன்னுள் ஆழ்ந்து அமர்ந்தார். அமைச்சர் கலிகர் “அதற்கு வழியொன்றுள்ளது அரசே” என்றார். “பாரதவர்ஷமெங்கும் மறுக்கவியலாத மணமுறை என்பது மணத்தன்னேற்பே. மத்ர நாட்டு இளவரசிக்கு பிருஹத்சேனர் மணத்தன்னேற்பு நிகழ்வை ஒருங்கு செய்யட்டும்.”

ஜராசந்தர் திரும்பி “எண்ணி சொல்லெடுக்கிறீரா அமைச்சரே? இன்றுவரை எந்த மணத்தன்னேற்பிலும் நான் வென்றதில்லை. கதையில் எனக்கு நிகரானவர் என பலராமரும் பீமனும் கீசகனும் துரியோதனனும் இருக்கையில் உறுதியான வெற்றி என்று நான் அதை சொல்ல முடியாது. வில்லென்றால் பார்த்தனும் கர்ணனும் இளையயாதவனும் அஸ்வத்தாமனும் இருக்கையில் நான் எதை வெல்ல முடியும்?” என்றார். அமைச்சர் “ஆம். மணத்தன்னேற்பு அறிவித்தால் அவர்கள் வந்து சேர்வார்கள். பார்த்தன் வந்தால் வில்லிலும் பலராமர் வந்தால் கதையிலும் தாங்கள் வெல்வது அரிது. ஆனால் அதற்கும் வழியொன்றுள்ளது” என்றார்.

“நாம் நமது சிற்பியை இங்கு அனுப்புவோம் நாம் மட்டுமே வெல்லும் உள்நுட்பம் கொண்ட பொறி ஒன்றை அவன் அமைக்கட்டும். அதை வெல்ல பார்த்தனால் இயலாது. துவாரகையின் மன்னனாலும் இயலாது. கர்ணனாலும் இயலாது. நாம் வெல்வோம், மாத்ரியை கொண்டு செல்வோம். பாரத வர்ஷத்தின் ஷத்ரியர்கள் அதை எதிர்க்க முடியாது. குடிகள் அனைவரும் அதை ஏற்றேயாக வேண்டும்” என்றார். “நான் மட்டுமே வெல்லும் பொறி என்றால்…” என்று ஜராசந்தர் இழுக்க “அதை நானறிவேன், தங்களுக்கு அமைத்துக் காட்டுவேன். மணநிகழ்வு நாள்வரை அப்பொறியிலேயே நீங்கள் பயிற்சி எடுக்கலாம். அதன் நுட்பமென்ன என்றறியாத எவரும் அதை வெல்ல முடியாது” என்றார் கலிகர்.

அஸ்தினபுரியருகே கானாடிக்கொண்டிருந்த பார்த்தரும் இளைய யாதவரும் மாத்ரியின் மணத்தன்னேற்புக்கான அறிவிப்பை மத்ரத்திலிருந்து வந்த பிராமணத்தூதரின் வழியாக அறிந்தனர். துரியோதனனும் கர்ணனும் அதற்கு செல்லவிருப்பதாக அஸ்தினபுரியிலிருந்து வந்த ஒற்றன் சொன்னான். முன்னரே மாத்ரியைப் பற்றி இளைய யாதவர் ஓரிரு சொற்கள் சொன்னதை அர்ஜுனர் நினைவுகூர்ந்தார். அச்சொற்களில் ஒருவரி எண்ணத்தில் ஒளிகொண்டது. “இசையின் முழுமையறிந்தவள் அவள்.” புன்னகையுடன் அர்ஜுனர் “இளைய யாதவரே, அவ்விளவரசியை தாங்கள் வெல்ல விரும்புகிறீர்களா?” என்றார்.

“ஆம்” என்றார் இளைய யாதவர். விழிதிருப்பியபடி “பால்ஹிக மலைக்குடிகளில் ஒரு நாடு எனக்கென இருந்தாக வேண்டும். துவாரகையின் வேர்களில் ஒன்று அங்கு இறங்கிச் சென்றாலொழிய நான் உத்தரபதம் மீது ஆணைகொண்டிருக்க மாட்டேன்” என்றார். பார்த்தர் “அவ்வண்ணமெனில் இவளே அதற்குரியவள்” என்றார். “ஆம், அதை நான் கணித்தேன். ஆகவே முன்னரே அவளைப்பற்றிய அத்தனை செய்திகளையும் திரட்டிவிட்டேன். அழகி. இன்னிசை தேர்ச்சி கொண்டவள். அவளை வித்யாலக்ஷ்மி என்றனர் சூதர்” என்றார். அர்ஜுனர் சிரித்தபடி “வடபுலப்பாதைக்கு அவள் உதவாவிடில் அவளை ஏற்க மாட்டீர்கள் அல்லவா?” என்றார். இளைய யாதவர் சிரித்து “அவள் பெயரை அறிந்த கணமே ஏற்றுவிட்டேன்” என்றார். “இனி எஞ்சுவது அவள் என்னிடம் வந்து சேர்வது மட்டுமே.”

மண நிகழ்வுக்கு அவர்களிருவரும் ஒரே தேரில் வந்திறங்கினர். சப்தசிருங்க மலை மடிப்பில் இருந்த உபமத்ரத்தின் தலைநகராகிய ஹம்சபுரியில் மணத்தன்னேற்பு விழவிற்கென அணிமுற்றம் ஒன்று ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த அரண்மனை மிகச்சிறியது. மரத்தாலான பன்னிரண்டு அறைகளும் மூன்று கூடங்களும் மட்டும் கொண்டது. அதன் இரு பக்கமும் படைத்தலைவர்களும் அமைச்சர்களும் தங்கும் சிறு மரவீடுகள் இருந்தன. மகதத்தின் சுங்கநாயகத்தின் மாளிகை மன்னர் அரண்மனையைவிட பெரிதாக அமைந்திருந்தது. மகதத்தின் நிலைப் படைத்தலைவனின் மிகப்பெரிய மாளிகை அப்பால் பெருஞ்சாலையின் ஓரத்தில் படைவீடுகள் சூழ அமைந்திருந்தது. அங்குதான் ஜராசந்தர் தங்கியிருந்தார்.

நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து செல்லும் கிளைச்சாலையின் எல்லையில் மலையிறங்கிய உருளைக்கல் அடுக்கிக் கட்டப்பட்ட முந்நூறு சிற்றில்லங்கள் சிதறிக் கிடக்கும் அலைமண் பரப்பே அந்நகர். மணத்தன்னேற்புக்காக வந்த மன்னர்களுக்கு மலைச்சரிவில் மரப்பட்டைகளால் சுவர்கட்டி ஈச்சஓலையால் கூரையிட்டு அமைக்கப்பட்ட சிறிய பாடிவீடுகளே அளிக்கப்பட்டன. அரசர்கள் தங்கள் அகம்படியினருடன் தங்கிய பாடிவீட்டின் மேல் அவர்களின் கொடிபறக்கும் மூங்கில் எழுந்து நின்றது.

அங்கு யாதவருடன் தங்கிய பார்த்தர் என்ன நிகழ்கிறதென்பதை தன் உளவுச்செய்திகளைக் கொண்டு புரிந்துகொண்டார். “இந்நகரும் இச்சிற்றரசும் பால்ஹிக மண்ணுக்குள் ஒரு வணிகப்பாதை அமைக்கும் பொருட்டு மகதத்தால் உருவாக்கப்பட்டவை. பிருஹத்சேனரின் மகளை தான் மணம் கொள்வதை மத்ர நாட்டு குடிகள் ஏற்கும் பொருட்டு ஜராசந்தர் நடத்தும் நாடகம் மட்டும் இது” என்று இளைய யாதவரிடம் சொன்னார். “அந்தப் பொறி நாமறியாத நுட்பமுடையது. அதை தான்மட்டும் வெல்லவே ஜராசந்தர் அமைத்திருப்பார். மகத நாட்டிலிருந்து வந்த கலிங்கத்துச் சிற்பி ஒருவனால் அது சமைக்கப்பட்டுள்ளது. அவன் பெயர் சுபகன்.”

இளைய யாதவர் காலையில் மலைச்சரிவின் இளவெயிலில் சிறுபறவைகள் சூழ அமர்ந்து குழலிசைத்துக்கொண்டிருந்தார். “அப்பொறிக்கு நிகரான பிறிதொன்றை அமைத்து அவன் ஜராசந்தருக்கு அளித்திருப்பான். மகதத்தில் அவர் அப்பொறியில் நீண்ட பயிற்சி எடுத்திருப்பார்” என்றார் பார்த்தர். இளைய யாதவர் குழலைத்தாழ்த்தி உளமளிக்காது தலையசைக்க “இளையவரே, நான் அதிலுள்ள பேரிடரைப் பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் குழலிசைத்து பிறிதெவருடையதோ வாழ்வென்று அதை கேட்டிருக்கிறீர்கள்” என்று பார்த்தர் சினந்தார். “பாண்டவரே, இவை அனைத்தும் பிறிதெவருடைய வாழ்க்கையோ அல்லவா? என் வாழ்க்கை என்று இவற்றை நடிக்கிறேன்” என்றார்.

மேலும் சினந்து “இந்த வீண்வேதாந்தச் சொற்களை சில தருணங்களிலேனும் நான் வெறுக்கிறேன்” என்றபடி பார்த்தர் வெளியே சென்றார். முற்றத்துக்குச் சென்று அந்தப் பொறியை கூர்ந்து நோக்கியபடி பன்னிருமுறை கடந்து சென்றார். பின்பு அதை கன்றுத் தோலில் பன்னிரு வரைபடங்களாக வரைந்தார். அப்பன்னிரு வரைபடங்களையும் ஒன்றாக்கி ஒற்றை ஓவியமாக்கினார். மகிழ்வுடன் வந்து “இளையவரே, அப்பொறியின் நுட்பத்தை புரிந்துகொண்டேன். நாம் அதை நோக்கி தொடுக்கும் ஒவ்வொரு அம்பையும் காற்றசைவால் அறியும் சிறகுகள் கொண்டது அது. ஒவ்வொரு அம்பு கடந்து செல்லும்போதும் தன்னை ஒரு முறை மாற்றிக் கொள்கிறது. ஆகவே அதை முன்னரே கணித்து வெல்லமுடியாது” என்றார்.

“அதை நோக்கிச் செல்லும் அம்புகளை எண்ணி கணக்கிட்டு ஒவ்வொரு அம்புக்கும் அது எங்ஙனம் மாறுகிறது என்று அறிந்து நாண் தொடுப்பவனே அதை வெல்ல முடியும்” என்றார். அதுவும் பிறிதெவருடைய செய்தியோ என்பது போல இளைய யாதவர் அமர்ந்திருந்தார். “ஜராசந்தருக்கு அந்த கணிப்புமுறை பயிற்றுவிக்கப்பட்டிருக்கும். அங்கே அம்புகள் தொடுக்கப்படுவதை நான் எண்ணிக்கணக்கிட்டு அப்பொறியையும் நோக்கினேன் என்றால் அம்முறையை உய்த்துவிடுவேன். நாம் இறுதியில் களமிறங்குவோம்” என்றார் பார்த்தர்.

மணத்தன்னேற்பு நாளில் முற்றத்தில் மூங்கில் தூண்களுக்கு மேல் தொங்கவிடப்பட்ட செம்பாலான இலக்கு வீரர்களுக்கு அறைகூவலாக நிறுத்தப்பட்டது. மணத்தன்னேற்பு நிகழ்வுக்கு வந்திருந்த பல நாட்டு இளவரசர்களும் மன்னர்களும் அதைச் சூழ்ந்து அரைவட்டமாக அமர்ந்திருந்தனர். நடுவே பொற்பட்டு விரித்த பீடத்தின்மேல் தன் பெருங்கைகளை மடிமீது கோர்த்து சிறுவிழிகள் கரந்த வஞ்சமும் கூர்ந்த மீசைக்குக் கீழ் மடிந்த இதழ்களில் ஏளனச் சிறுநகைப்புமாக ஜராசந்தர் அமர்ந்திருந்தார். அஸ்தினபுரியிலிருந்து துரியோதனரும் கர்ணரும் வந்து அமர்ந்திருந்தார்கள். அஸ்வத்தாமரும் ஜயத்ரதரும் சிசுபாலரும் வந்திருந்தார்கள்.

பார்த்தர் துணை வர இளைய யாதவர் அவை புகுந்தபோது அனைவரும் அவர்களை நோக்கினர். அவர்கள் அமர்வதுவரை விழிதொடர்ந்து பின் தங்களுக்குள் ஓரிரு சொற்கள் பேசினர் அவையோர். அவ்வொலி தேனீக்கூட்டம் பறப்பதுபோல் ரீங்கரித்தது. எதிரே போடப்பட்ட அரைவட்ட அரச பீடத்தின் நடுவே அரியணையில் பிருஹத்சேனர் அமர்ந்தார். அருகே அரசி மிலிந்தையும் மறுபக்கம் அமைச்சரும் அமர்ந்தனர். பின்னால் படைத்தலைவர் நின்றார். வலப்பக்கம் இசைச்சூதரும் அணிச்சேடியரும் நிரைவகுக்க இடப்பக்கம் குடித்தலைவர் எழுவரும் கோல்களுடனும் தலையணிகளுடனும் கல்லெனச் சமைந்த முகங்களுடன் இருந்தனர். உபமத்ரத்தின் நகர்மக்கள் அரங்கைச்சூழ்ந்து நின்றனர்.

நிமித்திகர் மேடையேறி மத்ர மண்ணையும் குலதெய்வங்களையும் பிருஹத்சேனரின் கொடிவழியையும், ஏழுகுடிகளையும் வாழ்த்தி அங்கு அரச முறைப்படி மணத்தன்னேற்பு நிகழவிருப்பதை அறிவித்தார். மத்ர நாட்டு இளவரசி லக்ஷ்மணையின் அழகையும் கல்வியையும் புகழ்ந்து சூதர்கள் இருவர் பாடினர். இரு அணிச்சேடியரால் வழிநடத்தப்பட்டு பொன்னூல் பின்னிய வெண்பட்டாடை அணிந்து குழலில் வெண்மலர்கள் சூடி வெண்கல்லால் ஆன மணியாரம் அசைய மாத்ரி வந்து தன் வெண்பட்டுப் பீடத்தில் அமர்ந்தாள்.

அங்கிருந்த விழிகள் அனைத்தும் அவளைக்கண்டு ஒளிகொண்டன. சூதர் சொல்வழி அறிந்து தாங்கள் வரைந்த உள்ளத்து ஓவியங்கள் அனைத்தும் நேர்க்காட்சி முன் வெற்று வண்ணங்கள் என்றாவதை உணர்ந்தனர். அப்பகுதிக்கே புத்தழகொன்று குடிவந்தது. அவளை வேட்க வந்திருந்த வீரர் முகங்கள் அனைத்தும் காலைக்கிழக்கு நோக்கிய பொற்குடங்கள் என ஒளி கொண்டன.

நிமித்திகர் எழுந்து மூங்கில் மேல் தொங்கும் செம்பு இலக்கு நடுவே இருக்கும் சக்கரத்தின் புள்ளியை அம்பினால் அடிப்பவர் வெல்வார், இளவரசியை கைக் கொள்வார் என்பது போட்டிமுறை என அறிவித்தார். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் வெல்வார்கள் என்றால் அவர்கள் தங்களுக்குள் போர் புரிந்து ஒருவர் வெல்ல வேண்டும். வென்றவர் இளவரசியை கைக்கொள்ள அனைத்துவகையிலும் உரிமை கொண்டவராவார் என்றார்.

முரசு ஒலித்ததும் அரசரும் இளவரசரும் ஒவ்வொருவராகச் சென்று வில்நாட்டி நாண்பூட்டி அம்பு தொடுத்தனர். அந்த செம்புப் பொறி ஏழு சிறகுகள் கொண்ட சக்கரம். அதன் சிறகுகள் மூச்சுக்காற்றுக்கே சுழல்பவை. அம்பு செல்லும் காற்றை அவை பூனைச்செவிகள் என அறிந்தன. அவற்றின் அசைவினால் அச்சக்கரம் முன்னும் பின்னுமாக மேலும் கீழுமாக சுற்றிக்கொண்டிருந்தது. சிறகுகள் வழியாக தன்னை திருப்பிக்கொண்டு அம்புகளுடன் பகடையாடியது அது. முதல் சில அம்புகள் தொடுக்கப்பட்டதுமே அனைவரும் அதை அறிந்தனர்.

அதை வெல்வது எளிதல்ல என்று தெளிவானதும் அத்தனை விழிகளும் கர்ணரையே நோக்கின. அவர் வந்து அவை நடுவே நின்றபோது கண்களிலும் முகத்திலும் இருந்த நம்பிக்கையைக் கண்டு அவரே வெல்வாரோ என்று பார்த்தரும் எண்ணினார். மூன்று அம்புகளில் முதல் அம்பு கடந்து சென்றது. இரண்டாவது அம்பு சக்கரத்தைப் பதித்த சரடுமேல் குத்தி நின்றது. மூன்றாவது அம்பு சுற்றி நின்ற சிறகுகளில் ஒன்றை உடைத்தது. மையத்தை அம்புகள் தொடாமை கண்டு நம்பாதவர்போல் திகைத்து அவையை நோக்கிவிட்டு தன் வில்லை அங்கேயே வீசி கர்ணர் திரும்பிச் சென்று துரியோதனர் அருகே எடையுடன் அமர்ந்தார். துரியோதனர் சரிந்து அவரிடம் ஏதோ கேட்க கையசைத்து பொறுமை இழந்து மறுமொழி சொன்னார்.

அவையினர் அனைவர் நோக்கும் பார்த்தரை நோக்கி திரும்பின. அவர் எழுந்து சென்றபோது கர்ணரின் முனகல் ஒலி மட்டும் முரசொலிபோல அனைவருக்கும் கேட்டது. அவை நடுவே நின்று ஒருமுறை கர்ணரையும் ஜராசந்தரையும் நோக்கிவிட்டு வில்லெடுத்து மும்முறை அம்பு தொடுத்தார். முதலிரு அம்புகளும் பிழைத்தன. மூன்றாவது அம்பு அப்பொறியின் உள்சிறகுகளிலொன்றை உடைத்து வந்து விழுந்தது. வில்தாழ்த்தி பார்த்தர் மீண்டபோது அவர் இதழ்களில் ஏன் புன்னகை இருந்தது என அனைவரும் வியந்தனர்.

ஜராசந்தர் எழுந்தபோது சிறுநகைப்பு பரவியது. பார்த்தர் நின்று தோற்ற இடத்தில் கதை பழகும் துதிக்கைத் தோள்கள் கொண்ட ஜராசந்தர் வெல்வதெப்படி என்று எண்ணினர். மீசைக்குள் கரந்த வஞ்சச் சிரிப்புடன் வில்லேந்திச் சென்ற ஜராசந்தர் மேலே நோக்கி விழி கூர்ந்து முதல் அம்பை தொடுத்தார். சக்கரம் தன்னை திருப்பிக் கொண்டு அதைத் தவிர்த்தது. ஜராசந்தரின் உடலில் சிறு நடுக்கம் ஒன்று கடந்து செல்வதை காண முடிந்தது. நெடுநேரம் கூர்ந்து நோக்கி அம்பெடுத்து தொடுத்தபோது பொறி மீண்டும் தன்னை விலக்கிக்கொண்டதைக் கண்டார்.

ஜராசந்தரின் கால்கள் நடுங்குவதை அனைவரும் கண்டனர். மூன்றாவது அம்பு பிழைக்கும் என்பதும் அனைவருக்கும் தெரிந்திருந்தது. எங்கோ எவரோ மெல்ல சிரித்தனர். அந்த ஒலி அடுக்கி வைக்கப்பட்ட செம்புக்கலங்கள் அதிர்வை கடத்துவது போல எங்கும் சென்று அவையை நகைக்கவைத்தது. மூன்றாவது அம்பும் பிழைத்தபோது சினம் தாளாமல் தன் தொடையை ஓங்கி அறைந்து அம்புபட்ட யானை என உறுமி உடல் தசைகள் புடைக்க களம் நடுவே நின்றார். அமைச்சர் கலிகர் “அரசே” என மெல்ல அழைக்க தன் உள்ளத்தை அடக்கி திரும்பி வந்து அமர்ந்தார்.

இளைய யாதவர் எழுந்தபோது எவரும் எண்ணவில்லை அவர் வெல்வாரென்று. ஆனால் இளநகையுடன் சென்று சிறுமைந்தன் போல் வில்லெடுத்து அக்கணமே வளைத்து முதல் அம்பிலேயே சக்கரத்தை உடைத்து வென்றார். சில கணங்கள் தங்கள் விழிகளை நம்பாமல் அமர்ந்திருந்தது அவை. நிமித்திகன் வெள்ளிக்கோலைச் சுழற்றியபடி மேடைமேல் பாய்ந்தேறி “துவாரகையின் இளைய யாதவர் இப்போட்டியில் வென்றிருக்கிறார்” என்று கூவிய பின்னரே அவை பெருங்குரலில் வாழ்த்தொலி எழுப்பியது. அதன் பின்னரே ஷத்ரியர் அங்கு என்ன நடந்ததென உணர்ந்தனர்.

ஜராசந்தர் பெருஞ்சினத்துடன் எழுந்து கடல்நண்டு போல் தன் பெருங்கரங்களை விரித்தபடி இளைய யாதவரை நோக்கி வந்தார். “இது வஞ்சம்! இது சூது! மாயத்தால் இளவரசியை மணம் கொள்ள விடமாட்டேன்!” என கூவ “மாயம் செய்தவர் நீர் மகதரே. இத்தனை விழிகளுக்கு முன் முறையாக மாத்ரரின் கன்னியை நான் கொண்டிருக்கிறேன். நெறிப்படி அவள் என்னுடையவள்” என்ற இளைய யாதவர் கையில் மாலையுடன் நின்ற இளவரசியை அணுகி அவள் வலக்கையை பற்றினார். இளவரசி அம்மாலையை அவர் தோளில் அணிவிக்க அவள் கையைப் பற்றி இழுத்துக்கொண்டு வெளியே சென்றார்.

“நிறுத்துங்கள்! நிறுத்துங்கள் அவனை!” என தன் படைகளுக்கு ஆணையிட்டபடி ஜராசந்தர் ஓடிவந்தார். “ஏன் நிறுத்த வேண்டும்? முறைப்படி இளைய யாதவர் இளவரசியை மணம் கொண்டிருக்கிறார்” என்று அஸ்வத்தாமா சொன்னார். கர்ணர் உரக்க “ஆம் மகதரே, நம் விழிமுன் நிகழ்ந்த போட்டி இது. வென்றவருக்குரியவள் இளவரசி” என்றார். “நான் ஒப்ப மாட்டேன்…” என்று கூவிய ஜராசந்தர் “இச்சூது என்னவென்று மன்று கூடி விசாரிக்க வேண்டும். அதுவரை இளவரசி இந்நகர் விட்டு செல்லமுடியாது” என்றார்.

அவர் தன் படைத்தலைவரையும் வீரரையும் நோக்கி ஆணையிட அவர்கள் படைக்கலங்களுடன் இளைய யாதவரை சூழ்ந்தனர். ஆஷாடமாதத்தில் ஒருமுகில் மட்டும் கறுத்து சிறுமழை பெய்வதுபோல அங்கு ஒரு சிறு போர் நடந்தது. இளைய யாதவரின் படையாழி பட்டு பன்னிருவர் துண்டாகி விழுந்தனர். பார்த்தரின் அம்புகளால் பதினெண்மர் சரிந்தனர். மகதரின் படைகளை கர்ணரும் அஸ்வத்தாமரும் வில் கொண்டு செறுக்க இளைய யாதவர் இளவரசியை தூக்கிச் சென்று தன் தேரிலேறி விரைந்தார். பின்தொடர்ந்த மகதத்தின் படைகளை அம்பால் வேலிகட்டி செறுத்து அவருக்குபின் நின்றார்கள் பார்த்தரும் கர்ணரும் அஸ்வத்தாமாவும்.

“இளைய யாதவர் குருதித்தடம் கோடாக நீள தேரை நகர்வீதியில் செலுத்தி ஹம்சபுரியின் எல்லை கடந்து மீண்டார்” என்றான் சாத்யகி. “இளைய யாதவர் அடைந்த பெருவெற்றிகளில் ஒன்றாக மாத்ரியை மணம் கொண்டது சொல்லப்படுகிறது. சொல்லிச் சொல்லி ஒவ்வொருவரும் அருகிருந்து பார்த்ததுபோல் வளர்ந்திருக்கிறது. இக்கதையை நானே உடன் வாழ்ந்ததுபோல் அறிவேன். ஒவ்வொரு முகத்தையும் சொல்லையும் உணர்வையும் மீட்டிக் கொள்கிறேன்” என்றான்.

திருஷ்டத்யும்னன் “சல்யர் அந்நிகழ்வுக்கு வந்திருந்தாரல்லவா?” என்றான். “இல்லை. சல்யரும் பால்ஹிக நாடுகள் பிறவும் அந்நிகழ்வை புறக்கணித்தன. இன்னும் உபமத்ரம் ஒரு நாடாக அஸ்தினபுரியால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை” என்றான் சாத்யகி. “இன்று உம்மிடம் மாத்ரி பேச விரும்புவதும் அதை ஒட்டியே என எண்ணுகிறேன்.” திருஷ்டத்யும்னன் தலையசைத்தான்.

முந்தைய கட்டுரைமேகி நாடகம், இரு கடிதங்கள்- பாலா
அடுத்த கட்டுரைஅப்துல் கலாமும் முஸ்லீம்களும்