நகைச்சுவை:கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,
 உங்களின் காடு மற்றும் கொற்றவை படித்து உங்கள் ரசிகனான நான் நகைசுவை என்கின்ற பெயரில் நீங்கள் எழுதும் குப்பைகளை படித்து இன்று மனம் வருந்துகின்றேன். இந்துத்வா தவிர மற்ற அனைத்தையும் கொச்சைப் படுத்துவது உங்கள் நோக்கமோ.
வளர்க உங்கள் பணி

ஸ்ரீசரண் 

திரு சரவணன்,

எந்த வாசகரும் எழுத்தாளனுக்கு நிபந்தனை விதிக்க முடியாதென்பதை மட்டும் நினைவு கொள்ளுங்கள். எனக்கு குப்பை கொட்ட வேண்டுமென்று தோன்றினால் அதைச் செய்வேன். பிடிக்காதவர்கள் வாசிக்க வேண்டாம்.

இதே வரிசையில் ஆரம்பத்தில் எல்லா இந்து சிந்தனைகளும் விரிவாகவே கிண்டல்செய்யபப்ட்டன. அதற்காகவும் இதேபோன்ற கடிதங்கள் இந்துத்துவர்களிடமிருந்து வந்தன.  உங்கள் வாசிப்புமுறையை நீங்கள்தான் பரிசோதனை செய்துகொள்ளவேண்டும்.

ஜெ
***

ஜெ..

கோயமுத்தூர்ல நடந்த கூட்டத்தப் பத்திப் படிச்சனுங்க..  காஸிரங்காக் கூட்டத்துக்கு நம்மூருத் தமிழ் வாத்தியாருங்களக் கூப்புடாதது கூட பரவால்லீங்க.. ஆனா, கோயமுத்தூர்ல நடந்த கூட்டத்தப் பத்தி எழுதையில நம்மூரு பாஷைய உட்டுட்டீங்க.. நெம்ப கஸ்டமா இருந்துச்சிங்க.. இன்னொரு விஸ்கா எழுதையில இதக் கொஞ்சம் மறந்திராதீங்க..

பாலா

அன்புள்ள பாலா,

நான் மிக அதிகமாக தொடர்புகொண்டுள்ள பிற தமிழ்பகுதி கொங்குமண்டலம். ஈரோட்டில்தான் மாதம் தோறும் பலநாள் செலவழிக்கிரேன்.கொங்கு பண்பாடு அளவுக்கு என்னைக் கவர்ந்த தமிழர் பண்பாடு பிறிதில்லை. ஆனாலும் கொங்கு மொழி மட்டும் பிடிக்கே சிக்க மாட்டேன் என்கிறது.
ஜெ

**

அன்புள்ள ஐயா
சிலநாட்களுக்கு முன்புதான் நான் உங்கள் ஆலய தரிசனம் நகைச்சுவைக் கட்டுரையைப் படித்தேன். தமிழ்நாட்டுக்கோயில்களின் பயங்கரமான நிலையை அது காட்டியது. மிக உற்சாகமான வாசிப்பனுபவத்தைத் தந்த கட்டுரையை சிரித்தபடியே வாசித்தேன். அதேசமயம் வெட்கமும் அடைந்தேன்.கோயில்கள் தெய்வீகமான சூழல் வெண்டும் என்ற நோக்கத்துடன் பெரும் பக்தியுடன் நம் முன்னோர்களால் உருவாக்கபப்ட்டவை. அக்காலத்தின் மிகச்சிற்நத சிற்பக்கலை நுட்பங்களுடன் கட்டப்பட்டவை அவை. இன்று அவையெல்லாம் எந்த நோக்கத்துக்காக கட்டப்பட்டனவோ அதற்கு நேர் எதிரான எல்லைக்கு நம்மை கொண்டுசெல்லும் இடங்களாக ஆகி விட்டிருக்கின்றன.\

இது தொடர்பாக நான் என் மகளின் அனுபவம் ஒன்றை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். அவள் ஒரு பொறியியல் மாணவி உங்களுடைய சிறந்த வாச்ககி. சமீபத்தில் அவள் திருப்பரங்குன்றம் சென்ற அனுபவத்தை எழுதியிருக்கிறாள். அவளுடைய வலைப்பூ இது

 http://atomhouse.wordpress.com/

சங்கர நாராயணன்
மதுரை

***

அன்புள்ள ஜெ,
சமீபகாலமாக நீங்கள் எழுதும் நகைச்சுவைக் கட்டுரைகளைப் படித்து வருகிறேன். நீங்கள் தீவிரமான உணர்ச்சிகளுடன் எழுதும் விஷயங்களையே கிண்டல்செய்து கீழிறக்குகிறீர்கள். குறிப்பாக ‘கொற்றவை’ வாசித்தவர்களுக்கு அது அளிக்கும் போதை கலந்த பரவசம் அற்புதமான அனுபவம். அதில் உங்கள் கற்பனை மூலம் தமிழின் ஒரு பெரும் பரப்பைத் தொட்டு விட்டிருக்கிறீர்கள். சந்தேகமில்லாமல் அது உங்களுடைய ‘மாஸ்டர்பீஸ்’.  ஆழமான உணர்வுகள் இல்லாத ஒருவர் அந்த படைப்பை எழுதியிருக்க முடியாது. அதே உணர்வுகளை கிண்டல்செய்து இப்போது எழுதுகிறீர்கள். ஒரு பக்கம் பகவத் கீதைக்கு உரை ,மறுபக்கம் பகவத் கீதை வரிகளை கின்டல்செய்கிறீர்கள். இந்த முரண்பாடு ஏன்? இது வாசகர்களுக்குக் கஷ்டமாக இருக்கிறது. மேலும் நீங்கள் எழுதிய கொற்றவை போன்ற கனமான நூல்களை வாசிக்காத எளிய வாசகர்கள் இந்தக் கட்டுரைகளை மட்டும் படித்து விட்டு உங்களைப்பற்றி ஒரு பிம்பத்தை உருவாக்கிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. இதைப்பற்றி நீங்கள் யோசிக்க வேண்டும்

அரசன் முருகேசன்

அன்புள்ள அரசன்,

இந்த நகைச்சுவைக் கட்டுரைகளை நான் ஏன் எழுதுகிறேன் என்று என்னால் முடிவாகச் சொல்ல முடியாது. எழுதத் தோன்றுகிறது, எழுதுகிறேன். எழுத்தாளன் அவ்வளவுதான் கூற முடியும். ஆனால் யோசிக்கும்போது இப்படி தோன்றுகிறது. அதி தீவிரமான ஈடுபாடு இல்லாமல் இலக்கியம் எழுத முடியாது. அந்த ஈடுபாடு நம்மை அதில் மூழ்கடித்தும் விடும். நமக்கு அது மட்டுமே எஞ்சுவதாகவும் ஆகும். நான் பல வருடங்கள் ஒன்றில் மூழ்கி இருந்து ஒரு ஆக்கத்தை எழுதினால் அதில் இருந்து வெளிவருவதற்கே அடுத்து முயல்வேன். என்னுடைய தீவிர ஈடுபாடுகளையே தலைகீழாக்கிக் கொள்ள, அவற்றில் இருந்து சற்றேனும் விலக எனக்கு ஒரு அகத்தேவை இருக்கலாம். என்ன காரணத்தால் ஓஷோ தத்துவக் கட்டுரைகளில் பாலியல் நகைச்சுவையைச் சேர்க்கிறார்? அது போல ஏதோ ஒன்று

ஆனால் இந்த நகைச்சுவைக் கட்டுரைகளை எழுதும்போது ஒன்று தெரிகிறது, தமிழ்நாட்டில் நாம் மிகமிகக் குறைவான நகைச்சுவை உணர்வுடன் இருக்கிறோம். எதையுமே தீவிரமாக, ஒருவகை மனப்பீடிப்பாக மட்டுமே வைத்திருக்கிறோம். எளிய கிண்டல்கள் விமரிசனங்கள் கூட நமக்குக் கஷ்டமாக இருக்கிறது. இந்த அளவுக்கு இறுக்கமான, தாழ்வுணர்ச்சி மிக்க ஒரு சமூகம் வேறு இருக்குமா என்றே தெரியவில்லை.

ஒன்று மட்டும் சொல்கிறேன். நான் வாசகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யக்கூடியவன் அல்ல. எனக்கென ஒரு வழி உண்டுபண்ணி அது வழியே செல்பவனும் அல்ல. விமரிசகர்கள், நலம்விரும்பிகள் எவரையும் நான் என்னை பற்றி எதையும் ஊகிக்க அனுமதிப்பதில்லை. நான் அடுத்தாற்போல் எதை எழுதுவேன் என என்னாலேயே சொல்லிவிடமுடியாது. அது முற்றிலும் என் அகம் போன பாதைதான்.

ஓஷோ சொன்னதுபோல ‘எனது பாதை வெண்மேகங்களின் பாதை’.

ஜெ


முந்தைய கட்டுரைஊமைச்செந்நாய் (குறுநாவல்) : 1
அடுத்த கட்டுரைஒழுக்கம்:கடிதங்கள்