அந்த மாபெரும் வெள்ளம்…

images

[மூத்த நண்பர் ஒருவர் எழுதிய கடிதத்தில் இரு விஷயங்களை சொல்லியிருந்தார். அவருடைய நாவல் முயற்சி பாதியில் நிற்கிறது. அவர் செய்த மொழிபெயர்ப்பு பணிகள் காரணமாக அவ்வாறாக ஆயிற்றா என்று கேட்டிருந்தார். மேலும் மொழியாக்கப் பணிகள் வருகின்றன,செய்யலாமா என்றும் ஐயம் கொண்டிருந்தார்

அவருக்கு எழுதிய கடிதத்தின் அதே விஷயங்களை ஒருநாள் கழித்து இன்னொரு மூத்த நண்பருடனான உரையாடலிலும் சொல்ல வேண்டியிருந்தது.

இந்த விஷயம் ஒரு பொதுவான விவாதத்துக்கு உரியது என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆகவே அக்கடிதத்தை பிரசுரிக்கலாமென தோன்றியது

ஜெ

அன்புள்ள நண்பருக்கு,

நான் கிட்டத்தட்ட 12 நாட்களாக தொடர் பயணம். இப்போதுதான் இணையப்பக்கத்தை திறந்து மின்னஞ்சல்களை வாசித்தேன்.

பொதுவாக இப்போது இதை ஒரு வழக்கமாக கொண்டிருக்கிறேன். இணையம் செல்பேசி இரண்டும் என்னை தொடர்ச்சியாக பிணைத்திருக்கலாகாது என. ஒருநாளில் பெரும்பாலான நேரம் செல்பேசியை அணைத்துவிடுகிறேன். மின்னஞ்சல்களை பலநாட்களுக்கு ஒருமுறை மட்டுமே பார்க்கிறேன். இது அபாரமான ஒரு சுதந்திரத்தை அளிக்கிறது. எதைச் செய்கிறேனோ அதில் நாட்கணக்கில் முழுமையாக இருக்க முடிகிறது. அவசரமாகச் செய்யவேண்டிய ஏதும் எனக்கு இல்லை. பிறருக்கு அவசரம் இருக்கிறது -மலேசியாவில் இருந்து கூப்பிட்டபடியே இருந்தார்கள். நான் ‘அந்தரவெளியில்’ இருந்தேன். உற்சாகமாக இருந்தது

மொழியாக்கங்களைப் பொறுத்தவரை அவை ஒருபோதும் அசல் படைப்புத் திறனை கெடுப்பதில்லை — மொழிபெயர்க்கப்படும் நூல்கள் யந்திரத்தனமாகச் செய்யப்பட வேண்டிய படைப்பூக்கம் அற்ற ஆக்கங்களாக இல்லாமலிருக்கும் என்றால். நேர்மாறாக மொழியாக்கம் எப்போதும் நம்மை படைப்பூக்க மனநிலையில் வைத்திருக்கும். ஒரு பெரிய படைப்பாளியின் மீது ஆரோகணித்து நாம் நம்மைவிட பெரிய அவனது அக உலகிற்குள் செல்கிறோம். அது நம் வாழ்க்கையை அர்த்தப்படுத்துகிறது, உத்வேகப்படுத்துகிறது.

கறாராகச் சொல்ப்போனால் 60 வயதுக்கு மேல் ஒருவர் உண்மையிலேயே மிகச்சிறந்த ஆக்கம் ஒன்றை எழுதிவிட முடியாது – சில விதிவிலக்குகள் உண்டுதான். ஏனென்றால் ஒரு வயதில் நமக்கு வாழ்க்கை குறித்த சில பதில்கள் வந்துவிடுகின்றன. நம் குருதி அதன் கொந்தளிப்பை இழந்துவிடுகிறது. எந்த அளவுக்கு நாம் கனிகிறோமோ, எந்த அளவுக்கு சமநிலை கொள்கிறோமோ, அந்த அளவுக்கு நாம் படைப்பூக்கத்தை இழக்கிறோம்.

ஏனென்றால் படைப்பூக்கம் என்பது ஒரு உக்கிரமான கொந்தளிப்பு நிலை. ஆன்மீகம் அதன் உச்ச எல்லையே ஒழிய இயல்புநிலை அல்ல. ஆன்மீகத்தின் சமநிலையும் கனிவும் படைப்பூக்க நிலைக்கில்லை. அதற்கு ஓர் எல்லை வரை முதிர்ச்சியின்மை தேவை. இளமையில் மகத்தான ஆக்கங்களை எழுதிய பல படைப்பாளிகள் முதுமையில் மௌனத்தை நோக்கிச் சென்றிருக்கிறார்கள். பலர் சாதாரண ஆக்கங்களை உருவாக்கியிருக்கிறார்கள். தல்ஸ்தோய் போன்ற சிலர் ஆன்மீகம் கனிந்த -ஆனால் படைப்பூக்கம் அற்ற – குறுங்கதைகள் போன்றவற்றை அளித்திருக்கிறார்கள். வாழ்க்கையின் இறுதியில் அலைகளடங்கும் மனநிலை வாய்க்குமென்றால் எப்படியோ மெல்லமெல்ல படைப்பூக்கமும் குறைகிறது

பிறகு இரு சாத்தியங்களே உள்ளன. ஒன்று நினைவில் தோய்தல். பெரும்பாலான முதிய எழுத்தாளர்கள் தங்கள் இளம்பருவம் குறித்த சித்திரங்களை உருவாக்குகிறார்கள். இப்பருவத்தில் வாழ்க்கையின் முதிரா இளமைப்பருவம் மிகுந்த ஒளியுடன் எழுந்து வருகிறது. சிறு தகவல்கள் கூட துல்லியமாக நினைவில் விரிகின்றன. அதுவரைக்குமான எழுத்துத்திறனுடன் அது இணையும் என்றால் குறிப்பிடத்தக்க சில ஆக்கங்கள் உருவாகமுடியும். இரண்டாவதாக, இப்பருவத்தில் மரபிலக்கியத்தில் இயல்பாகவே மனம்தோய்வதனால் நல்ல ஆய்வுகள் அல்லது மறு ஆக்கங்களை உருவாக்கலாம்.

இளமையில் இலட்சியவேகம் ஒன்று நம்மில் உள்ளது. முதுமையில் அதை யதார்த்தம் வெல்கிறது. எத்தகைய யதார்த்தப்படைப்பாக இருந்தாலும் அதை உருவாக்க ஓர் இலட்சிய வேகம் தேவையாகிறது. இதோ ஒரு அற்புதமான ஆக்கத்தை உருவாக்கி உலகை உலுக்கப்போகிறேன் என்ற எழுச்சி. அது இல்லையேல் இலக்கிய ஆக்கம் தொடங்குவதில்லை. அதற்கு எங்கோ இளமையின் அசட்டுத்தனம் மிச்சமிருக்கவேண்டியிருக்கிறது.

ஆனால் முதுமையில் ஒருவர் இலக்கிய ஆக்கத்தில் ஈடுபடக்கூடாதெனச் சொல்லமாட்டேன். மாறாக முதுமையில் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு மகத்தான விஷயங்களில் ஈடுபடவேண்டும் என்றே சொல்வேன். நாவல்களை எழுதலாம், ஏன் காவியங்களைக்கூட எழுதலாம். எதுவும் பயனுள்ளதே. நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், முதுமையில் நாம் நமக்கே நிறைவூட்டும் படைப்பூக்கத்துடன் இயங்க முடியாது போகும், அதை எண்ணி நாம் சோர்வுறுதலாகாது என்றுதான். அது நம் நோக்கத்துக்கே எதிரானதாகும். நாம் எழுதுவதே ஊக்கத்துக்காகத்தான். முதுமைக் காலகட்டத்தில் நம்மால் எழுதமுடிவதன் அதிகபட்சத்தை சாதிப்பதே போதும் என்ற எண்ணமே உகந்தது

ஏன் படைப்பிலக்கியத்தில் ஈடுபடவேண்டும்? அது பிரசுரமாகி புகழ் வந்து சேர்வதற்காக அல்ல. அதன் மூலம் உலகை கரைசேர்ப்பதற்காகவும் அல்ல. அந்த படைப்பியக்கம் நமக்களிக்கும் கரையற்ற உவகையின் பொருட்டே அது தேவையாகிறது. நான் என் நண்பர்களில் எழுத முடிந்த அனைவரிடமும் எதையாவது எழுதச் சொல்வதுண்டு. அதில் உள்ள உத்வேகம் நம்மை இந்த எளிய, அபத்தமான, சிக்கலான உலகில் இருந்து சட்டென்று விடுவித்து விடுகிறது. இன்னொரு உலகில், நாமே நமக்கென உருவாக்கிய ஆழமான கனவில், நம்மை அது வாழச் செய்கிறது.

இரு உதாரணங்கள் ஒன்று, என் நண்பர் ஷாஜி. அவரது சொந்த வாழ்க்கையின் கனத்த துயர்மூடிய நாட்களில் அவரை நான் வலுக்கட்டாயமாக இசை விமர்சனத்துக்குக் கொண்டு வந்தேன். அவர் ஆங்கிலத்தில் எழுதியவற்றை மொழியாக்கம் செய்தேன். இன்னொருவர் நண்பர் சுகா. திரைப்படத் துறையில் உச்சகட்ட சோர்வின் கணங்களில் அவரை எழுதும்படி வலியுறுத்தினேன். அவருக்கு தமிழ் தட்டச்சை அறிமுகம் செய்தேன். எழுத்தைக் கண்டு கொண்டதும் சட்டென்று அவர்களின் அக உலகம் விரிந்தது. துயரங்கள் மறைந்தன, வாழ்க்கை பொருள் உள்ளதாக ஆகியது. இருவரையும் தமிழில் இன்று எழுதும் முக்கியமான உரைநடையாளர்கள் என எந்த நல்ல வாசகர்களும் சொல்வார்கள். இனிமேல் எழுத்தில்லாமல் அவர்களால் இருக்க இயலாது. வாழ்க்கையின் கடைசி வரை அது அவர்களுக்கு துணை செல்லும்.

முதுமையில் எந்த அளவுக்கு ஒருவர் லௌகீக உலகுடன் தொடர்புள்ளவராக இருக்கிறாரோ அந்த அளவுக்கு அவர் துயரம் கொள்ள நேரும். இந்த பூமி உடலை. மனதை மேன்மேலும் விசையுடன் இழுக்கும் காலகட்டம். அப்போது மனம் மேலும், மேலும் வானில் எழுந்து பறந்து கொண்டிருக்க வேண்டும். ஆகவே மாபெரும் பணிகளை ஏற்று அதன்மீது ஆரோகணித்துச் செல்பவர்களே அக்கால கட்டத்தில் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்.

ஆகவே நான் உங்களை எழுதச் சொல்வேன். நாவல் எழுதுகிறீர்கள் என்று சொன்னீர்கள். அதில் ஒவ்வொரு நாளும் அமரச் சொல்வேன். அதில் உள்ள தோல்விகள் இயல்பானவை, அவற்றுக்காக மனம் சோரலாகாது. அதில் பெறும் வெற்றிகள் ஒவ்வொன்றும் காலம் அளிக்கும் பரிசுகள். அவற்றைக் கொண்டாடுங்கள். நாவலில் உங்களுக்கான உலகை உருவாக்கி அதில் நீந்துங்கள். அது இளமைப்பருவம் குறித்தானது என்றால் அதன் ஒளிக்கு ஈடு இணை வேறில்லை

கூடவே மொழியாக்கங்களிலும் ஈடுபடும்படிச் சொல்வேன். மொழியாக்கங்கள் படைப்புத்திறனைக் குறைப்பதில்லை, கூட்டவே செய்கின்றன. தஸ்தயேவ்ஸ்கி கூட மொழியாக்கங்கள் செய்தவர்தான். சுயமாக நாவல் எழுதும்போது அது நம்மை ஒரு மன உச்சம் நோக்கிக் கொண்டு செல்லும் கணம் தன்னிச்சையாக அமையவேண்டும் -மொழியாக்கத்தில் என்றால் அது ஏற்கனவே அமைந்து அங்கே நமக்காக காத்திருக்கிறது. நல்ல கவிதைகளை மொழியாக்கம் செய்யும்போது நானே கவிதையை உருவாக்கிய பரவசத்தில் திளைத்திருக்கிறேன்.

ஏன் நாம் நம் சாத்தியங்களைக் குறுக்கிக் கொள்ளவேண்டும்? இப்போது நீங்கள் பொறுப்புகள் அற்று இருக்கிறீர்கள். இந்த சுதந்திரத்தை ஏன் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளக் கூடாது. எல்லா மொழியாக்க வாய்ப்புகளையும் ஏன் ஏற்றுக்கொள்ளக்கூடாது? ஏன் எல்லாவற்றையுமே செய்து முடிக்க முனையக்கூடாது? செயலூக்கம் கொண்ட எத்த்னை வருடங்கள் காத்திருக்கின்றன! அவை எவ்வகையிலும் உடலை பாதிக்காது. மனச்சோர்வும் தனிமையும் மட்டுமே இப்பருவத்தில் உடலைப்பாதிப்பவை. உழைப்பு எந்த அளவுக்கு கடுமையாகிறதோ அந்த அளவுக்கு உள்ளத்தையும் உடலையும் ஊக்கமூட்டும்.

மொழியுடன் இருந்து கொண்டிருங்கள். மிக இளமைப்பருவத்தில் ஒளிமிக்க மணிமுடியுடன் உங்களுக்குக் காட்சியளித்த அந்த தேவதையை ஒவ்வொரு கணமும் கூடவே வைத்திருங்கள். அதற்கான எல்லா வழிமுறைகளும் சிறந்தவையே. மொழியில் இருந்து கொண்டிருங்கள். சிற்றோடையாக உங்களுக்கு அறிமுகமான அந்தப் பெருக்கு இப்போது பேராறாக மாறிவிட்டிருக்கிறது. அது உங்களைக் கொண்டு செல்லட்டும்

வாழ்த்துக்கள்

ஜெ

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Aug 25, 2010

முந்தைய கட்டுரைஃபுகொகாவும் யோஷிடாவும் இணையும் புள்ளி
அடுத்த கட்டுரைதினமலர் – 9:ஊழலின் அடித்தளம்