கூட்டமோ கூட்டம்

3

 

ரயிலில் அருகே இருந்தவர் கரைவேட்டி அணிந்திருப்பதைப் பிறகுதான் குனிந்து பார்த்தேன், அதற்கு முன்னரே அவர் கட்சிக்காரர் என்று தோரணை காட்டியது. அதிபிரம்மாண்டமான உடல். கைக்குத் தொப்பை இருப்பதை அவரிடம்தான் பார்த்தேன். மூச்சுவாங்க வேர்த்தபடி அமர்ந்தார். ஏஸி அவரது உள்ளுறுப்புகளைச் சென்றடைய இன்னும் நேரமாகும். நல்ல வெட்டரிவாள் மீசை. பாந்தமான சிரிப்பு. அவரை வழியனுப்பிவைத்தவர்கள் கும்பிட்டுச்சென்றதும் ‘’டப்பா உங்களோடதுங்களா?’’ என்றார். ‘’இல்லை’’ என்றேன். அவர் டப்பா என்றது சூட்கேஸை என்று உணர்ந்ததும் ‘’ஆமா சார்’’ என்றேன். ‘’பரவாயில்லீங்க’’ என்றார். மன்னிக்கும் பண்புடைய எளிய மனிதராகத்தெரிந்தார்.

‘’சாருக்கு எந்த ஊரு?’’என்றார். ‘’நான் நாகர்கோயில்’’ என்றேன். ‘’நமக்கு இங்கதான்சார்…சொந்த ஊரு காஞ்சீவரம். மெராஸுக்கு வந்தது அப்பாரு காலத்திலே..’’ ‘’அரசியலிலே இருக்கீங்களா?’’ ‘மகிழ்ச்சியுடன் ’’ஆமாசார்’’ என்றார். ‘’கட்சிவேலைதானுங்க நமக்கு ஆதிகாலத்திலே இருந்தே…இப்பதான் ஒரு பொறுப்பு கெடைச்சிருக்கு…இல்லேன்னா இந்த ஏஸி டப்பாவிலே ஊருக்குப்போறதெல்லாம் நமக்கு எங்கங்க?’’ பெட்டி என்பதை எப்போதுமே டப்பா என்றுதான் சொல்கிறார் என்று புரிந்துகொண்டேன்.

‘’எப்டீங்க கட்சிவேலை போய்ட்டிருக்கு?’’ என்றேன் ‘’என்னா சார் போங்க…எலக்சன் வருதுல்ல…வேல பெண்டு நிமிருது… காலமடக்கி உக்கார நேரமில்லேன்னா பாத்துக்கிடுங்க… ஆனால் கட்சிவேலைன்னா அது எலக்சனிலதானே, ஏங்க? அதைப்பாத்தா போருமா? நம்ம சோறுல்ல?’’ ‘’பின்னே’’ என்றேன் ‘’எப்டி ஜெயிக்கிற வழி இருக்கா?’’

‘’உண்மையச் சொல்லணுமானா இல்லேன்னுதான் சார் எல்லாரும் சொன்னாங்க. ஆனா கோயம்புத்தூரிலே வந்த கூட்டத்த பாத்து அப்டி சொன்னவங்களுக்கு அதிர்ச்சி. ஆனா எங்க தலைமைக்கு அதைவிட டபுள் அதிர்ச்சி… அங்க ஆரம்பிச்சுதுசார்… உடனே ஆளும்கட்சி அதைவிட டபுள் கூட்டத்த கூட்டியாகணும்னு ஆரம்பிச்சுட்டாங்க. அவங்களுக்கு என்ன பணம், பதவி எல்லாம் இருக்கு. ஒரு இண்டு இடுக்குவிடாம நோண்டி நொங்கெடுத்து அத்தனை ஜனத்தையும் கொண்டாந்து கொட்டினாங்க… பாத்தாங்க எங்க தலைமையிலே, திருச்சியிலே அதைவிட டபுள்கூட்டம் கூடியாகணும்னு கண்டிசனா சொல்லிட்டாங்க’’

‘’அடாடா’’ ’’பாத்தீங்களா, உங்களுக்கே பாவமா இல்ல? நாங்க தெருத்தெருவா அலைஞ்சோம். கண்டவன் காலிலே எல்லாம் விழுந்தோம். உள்ள பணத்தை எல்லாம் அள்ளி விட்டோம். கூட்டிக்காட்டிட்டோம்சார். மொத்த ஜில்லாவிலே பாதிப்பேர திருச்சி ரயில்வே மைதானத்திலே கூட்டிக்காட்டிட்டோம்ல? அசந்துட்டாங்க ஆளும்கட்சி சார்பிலே’’

‘’அப்றம்?’’ ‘’அப்றமென்ன அதுக்கு டபுள் கூட்டம் வேணும்னு தாத்தா கண்டிசனா சொல்லிட்டாராம். விடுவானுகளா?சர்க்காருல்ல இருக்கு கையிலே? டேய் எங்க கூட்டத்தில கலந்துக்கலைன்னா ரேசன் கெடையாதுடான்னு கிராமம் கிராமமா மோளம் கொட்ட வச்சிட்டாங்க… ஊருசனம் அத்தினிபேரும் வந்து கூடி சிட்டிய மொச்சிட்டாங்கள்ல? அன்னிக்கு அவனுக அடிச்ச மூத்திரம் காய மூணுநாளாச்சுன்னு நூஸ் வந்திருக்கு சார்…சில்லாவிலே அத்தன ஊரும் காலியா கெடந்திருக்கு… ஆளில்லாததக் கண்டு நாயெல்லாம் பயந்துபோயி ஊளை போட்டுட்டே இருந்திருக்குன்னா பாத்துக்கிடுங்க’’

‘’உங்கம்மா விடமாட்டாங்களே’’ ‘’நல்ல கத அவுங்க யாரு? டேய், மருதையிலே அதுக்கு டபுள் கூட்டம் கூட்டியாகணும், என்னா செய்வீங்களோ ஏது செய்வீங்களோன்னு சொல்லிட்டாங்க. நாங்களும் எறங்கிட்டோம் சார். ரெண்டுல ஒண்ணு பாத்துப்போடுறதுன்னு. மதுரை ராம்நாடு காமராசர் மாவட்டங்களிலே ஒத்த ஒரு தலைய விடல. தெக்குஜில்லா முழுசையும் அப்டியே பத்திக்கிட்டு வந்து மருதையிலே குமிச்சிட்டோம்ல… …மொத்த மருதையே நிறைஞ்சாச்சு… ஹெலிகாப்டர்லே இருந்து பார்த்தாங்க அம்மா.டேய் மேலூர் ரோட்டிலே எடவெளி தெரியுதுன்னாங்க…அதுக்கு திருப்பத்தூர் காரைக்குடி வட்டாரத்திலே இருந்து கொண்டாந்து கொட்டினோம்ல..’’

நான் கொஞ்சம் விபரீதமாக உணர்ந்தேன். ‘’சாருக்குத் தெரியும், பெரிசு சும்மா இருக்காதுன்னு. வாள்க்கைப் பிரச்சின பாருங்க…டேய், அதே மதுரையிலே டபுள்கூட்டத்த காட்டுங்கடான்னுட்டார். அன்னிக்கு இந்தப்பக்கம் விருதுநகர், அந்தப்பக்கம் திண்டுக்கல், கெழக்கே திருப்பத்தூர் வரை ஒரே தலைதான். ஆனாக்க மதுரைக்கு தெக்க திருநெல்வேலி, இந்தப்பக்கம் புதுக்கோட்டை ,அந்தப்பக்கம் பழனி தாராபுரம் வரை ஒரு ஊரில கூட ஒரு ஆளுகூட கெடையாது. மொத்த ஊரே காலி’’

நான் சோர்வுடன் ‘’அப்றம்?’’ என்றேன். ‘’அடுத்தாப்ல எங்களுக்கு தஞ்சாவூரிலே ஆர்ப்பாட்டம். டேய், அதுக்கு டபுள் கொண்டாங்கடான்னாங்க. இதுக்குள்ள ஒருமாதிரி எல்லாம் பழகிப்போச்சுங்களா? எல்லாத்துக்கும் ஆளு, ஏசெண்டுன்னு ஆகிப்போச்சு. மருதையிலே கூடின மொத்தக்கூட்டத்தையும் ஒரு சகாய ரேட்டுக்கு பேசி அப்டியே ஒட்டுமொத்தமா பத்திகிட்டு தஞ்சாவூருக்குக் கொண்டாந்தாங்க. தஞ்சாவூரிலே இருந்து இந்தப்பக்கம் கடலூரு பாண்டிச்சேரி சேத்து மொத்த ஊரையும் காலி பண்ணி கூட்டம் கூட்டியாச்சு. சொன்னா நம்பமாட்டீங்க சார், அந்தக் கூட்டத்தோட மொத்தப் பரப்பளவு இருக்கே அது தஞ்சாவூரோட பரப்பளவேதான். பேராவூரணிபக்கம் கொஞ்சம் கேப் இருந்தது…மூணுமணிநேரத்திலே அடைச்சிட்டோம்’’

நான் மேலே கேட்கவில்லை. அவரே சொன்னார் ‘’ அவங்க அதுக்கு டபுளா நடத்தினாங்க. அவங்களோட கூட்டத்தோட பரப்பளவு மொத்த தஞ்சை புதுக்கோட்டை ஜில்லாக்களோட பரப்பளவேதான் சார்…’’ ‘’நீங்க என்ன பண்ணினீங்க?’’ ‘’ இப்பல்லாம் ஜனங்க வீடுகளுக்கே போறதில்லீங்க…போக விடுறதில்லைன்னு வச்சுக்கிடுங்க… அப்டியே கூட்டத்திலே இருந்து கூட்டத்துக்குப் போறதுதான்… நாங்க அந்தக்கூட்டத்த அப்டியே பத்திக்கிட்டு ஈரோட்டுக்குக் கொண்டு போனோம். அவங்க அப்டியே தர்மபுரிக்குக் கொண்டு போனாங்க…கடேசியிலே போனவாரம் நாகர்கோயிலில் கூட்டம்… அதான் அதோட பீக்கு…’’

‘’ம்ம்’’ என்றேன். படபடப்பாக இருந்தது. ’’சொன்னா நம்ப மாட்டீங்க சார்…மொத்த தமிழ்நாட்டோட பாதி சனத்தொகைய நாங்க நாகர்கோயிலிலே கூட்டிட்டோம்ல…அதப்பாத்துட்டு அவங்க முக்காவாசி ஜனத்தொகைய அங்க கொண்டாந்துட்டாங்க…ஜனங்க நிக்க எடமில்லாம பல எடங்களிலே பலக வச்சு பால்கனி கட்டி மேலே மேலேயாக நிக்கவச்சாங்க சார்…’’ ‘’ம்’’ ‘’அப்றம் என்னாச்சுன்னாக்க பெரீய பிரச்சினயா ஆகிப்போச்சுங்க’’ ‘’என்ன?’’

அவர் ஏப்பம் விட்டார் ‘’என்னாச்சுன்னாக்க ரயிலெல்லாம் பின்னாடி ஓட ஆரம்பிச்சிட்டுது சார்’’ ‘’ரயிலா?’’ ‘’ஆமா சார். மெட்ராஸ் போற கேகே எக்ஸ்பிரஸ் மதுரையிலே இருந்து பின்னால வந்து மணியாச்சி தாண்டுறப்ப புடிச்சிட்டாங்க. அப்றம்தான் தெரிஞ்சுது ஏகப்பட்ட ரயில்கள் அப்டி தெக்குபக்கமா வர ஆரம்பிச்சுட்டுதுன்னு…பல எடங்களிலே ஏரிகளோட கரைகள் உடைச்சிருக்கு…பெரிய பில்டிங்குகள் கொஞ்சம் சரிஞ்சாப்பல இருந்தப்ப கண்டுபுடிச்சுட்டாங்க…’’ ‘’என்னாது?’’என்றேன் குலை நடுங்க. ‘’சார்…தமிழ்நாடே தெக்குபக்கமா கொஞ்சம் சரிஞ்சிருக்கு சார், எடை தாங்காம’’

நான் சிறுநீர் அழுத்தத்துக்கு ஆளானேன். ‘’… இப்ப கூட்டத்த நாங்க அப்டியே மொத்தமா பத்திக்கிட்டு வடக்க கொண்டுட்டு போறம்… மெட்ராஸிலே நாளன்னிக்கு எங்களுக்குக் கண்டன ஆர்ப்பாட்டம் இருக்கு சார்… ஒன்பதுகோடிப்பேர் கலந்துக்கிடறாங்க… அதான் இப்ப பிரச்சினை… தமிழ்நாடு வடக்குப் பக்கமா சரிஞ்சா என்னாகும்? ‘’என்னாகும்?’’ ‘’என்னாசார் படிச்சவங்க இப்டி கேக்கறீங்க? மேட்டூர் தண்ணி திரும்ப கர்நாடகாவுக்கு போயிடும்சார்.. பாலாறு தண்ணி ஆந்திராவுக்கு போயிரும்சார்…அதான் எங்கம்மா ஒரு புதிய அணிய உருவாக்கியிருக்காங்க’’

‘’என்னது?’’ ‘’கழக அகத்தியர் அணின்னு பேருசார்…என்னையமாதிரி ஒரு பத்தாயிரம்பேர நேரா எதிர்த் திசைக்கு அனுப்பறது…நாங்க எடைய சமப்படுத்திருவோம்ல?’’ நான் ஆசுவாசம் அடைந்தேன். இந்தமட்டுக்கும் தமிழகத்தின் மீது அரசியல்கட்சியினருக்கு அக்கறை இருப்பதே பெரிய விஷயம். ஆனால் ஒரு சிறு ஐயம் ‘’இல்ல, உங்க கூட்டத்துக்கு டபுளா அவங்க கூட்டத்துக்கு ஆள் வரணுமானா என்ன செய்வாங்க?’’ என்றேன். ’’அது ஒண்ணுமில்ல சார்… கள்ள ஓட்டையும் சேத்தா கவுண்டு வந்திரும்’’ என்றார். இதுதான் கொஞ்சம் குழப்புகிறது.

மறுபிரசுரம்/ Jul 7, 2010

 

முந்தைய கட்டுரைநெல்லும் தண்டபாணியும்
அடுத்த கட்டுரைதினமலர் – 4: ஜனநாயகம் எதற்காக? கடிதங்கள்-1