சசிப்பெருமாள் – கடிதம்

மிக நீண்ட வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழகத்திற்கு திரும்பியவுடன் ஆறு மாதங்கள் வட மாவட்டங்கள் முழுவதும் சுற்றினேன். எப்படி இருக்கிறது தமிழ்நாடு என்று கேட்ட என் அமெரிக்க நண்பருக்கு நான் சொன்ன பதில் ‘இதே குடி நிலைமை தொடர்ந்தால், இன்னும் ஐந்து வருடத்திற்கு பிறகு மனிதன் வாழ தகுதி இல்லாத ஊராகி விடும் என்று சொன்னேன்.’

சென்னையில் என் வீட்டை சுற்றி நடக்கும் தூரத்தில் 3 கடைகள். நான் சென்ற எல்லா சிற்றூர்களிலும் கடைகள். ஒரு காலத்தில் எங்கள் சுற்று வட்டாரத்தில் புகழ் பெற்ற எங்கள் அரசு பள்ளியில் ஆசிரியர்களே குடித்து விட்டு வருவதாக கேள்விப்பட்ட போது ஐந்து வருடமே மிக அதிகமோ என்று தோன்றுகிறது. என் மாமா இறந்த போது சுடுகாட்டு கொட்டகைக்கு சென்ற போது அங்கே நடக்க முடியாத அளவுக்கு பாட்டில்கள் உடைத்து வீசப்பட்டு இருந்தன.

சொந்தக்காரர்களிலே சிலர் காலை பத்து மணிக்கே கச்சேரியை ஆரம்பித்துவிடுவதாக கேள்விப்பட்டேன். இது போன்ற கட்டுப்பாடற்ற குடிப்பழக்கம் இந்த நாட்டில் எந்த காலத்திலும் இருந்திருக்குமா என்பது சந்தேகம் தான். அமெரிக்காவில் நான் இருந்த மாகாணத்தில் 9 மணிக்கு மேல் பீர் மற்றும் ஒயின் தவிர மற்ற hot சரக்கு வேண்டுமென்றால் பாருக்கு தான் போக வேண்டும். Bar ல் விலை மிகவும் அதிகம்.

திருச்செங்கோடு ஆசிரமத்தில் இருந்த போது குடியினால் மக்களும் அழிந்து, கிராம பொருளாதாரமும் அழிவதை பார்த்து தான் ராஜாஜி முதலில் இந்தியாவிலேயே முதல் முதலாக சேலம் மாவட்டத்தில் மதுவிலக்கை அறிமுகப் படுத்தினாராம். இப்போது மொத்த மாநிலமே அழிந்து கொண்டிருக்கிறது. 2 தலைமுறை சீரழிக்கப்பட்டு விட்டது. தொலைநோக்கு பார்வையுள்ள எந்த தலைவரும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை காணவில்லை. அடுத்து என்ன நடக்கும் என்பதும் தெரியவில்லை!!!

இது போன்ற இருண்ட நம்பிக்கையில்லாத சூழ்நிலையிலும் போராடிக் கொண்டிருக்கும் சசிப்பெருமாள் போன்றவர்களை சாஷ்ட்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும். இன்றும் நமக்கு நம்பிக்கை அளிக்கும் காந்திய கொள்கைகளுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!!

கோ இராசேசு

முந்தைய கட்டுரைஅஞ்சலி : சசிப்பெருமாள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 63