பாவனை சொல்வதன்றி…

ஜெ

தொடர்ந்து ஃபேஸ்புக் புரட்சியாளர்களை நக்கலடித்துக்கொண்டே இருக்கிறீர்கள். அது ஒரு மேலோட்டமான உணர்ச்சிவெளிப்பாடுதான். ஆனால் அது மக்களின் குரலும் அல்லவா? சாமானியனின் குரலுக்கு எந்த மதிப்பும் இல்லையா என்ன?

சாமிநாதன்

11351180_850453585035300_4143526249531611741_n

அன்புள்ள சாமிநாதன்,

அது சாமானியனின் குரல் அல்ல. சாமானியன் போலிவேடங்களைப்போடுவதில்லை. இங்கே இணையத்தில் எழுதுபவர்கள் புரட்சியாளர்களாக, மதப்பற்றாளர்களாக, சாதிச்சார்பானவர்களாக ஓர் உச்சநிலையை வேஷமாக அணிந்துகொள்கிறார்கள். உண்மையில் அவர்கள் மிகமிகச் சாமானியர்கள். எந்தவிதமான தீவிரமும் இல்லாத மொண்ணை வாழ்க்கை வாழ்பவர்கள். அது அவர்களுக்கே தெரியும். ஆகவே இந்த வேடம் இணையத்தில் அவர்களுக்கு ஓர் ஆறுதலாக அமைகிறது. இணையம் அவர்களின் பகற்கனவுகளின் வெளி

இதை எப்படிச் சொல்கிறேன்? உண்மையான தீவிரம் இருந்தால் ஒருவர் இந்த ஃபேஸ்புக் குறிப்புகளுடன் அமையமாட்டார், தான் நம்புவதை மேலும்மேலும் வாசித்து அறிவார். தன் மொத்த உபரிநேரத்தையும் அதற்காக செலவிடுவார். எப்போதும் அந்த எண்ணநிலையில் இருப்பார். விளைவாக சில ஆண்டுகளிலேயே அவர் எதைச்ச் சொல்கிறாரோ அதில் ஒரு நிபுணராக ஆகியிருப்பார். நம் இணையமொண்ணைகளைப் பாருங்கள் பத்தாண்டுகளாக கூச்சலிட்டுவருபவர்கள் கூட எங்கே தொடங்கினார்களோ அங்கேதான் இருக்கிறார்கள். காரணம் ஃபேஸ்புக்குக்கு வெளியே அவர்களுக்கு தாங்கள் சொல்லும் எந்த கருத்தியலிலும் அரசியலிலும் நம்பிக்கை இல்லை

இது வேஷம். தமிழ்ச்சமூக உளவியலின் கோமாளித்தோற்றம். இதைவைத்து தமிழகத்தை எவ்வகையிலும் கணிக்கமுடியாது. தவறாகப்புரிந்துகொள்ளவே வாய்ப்பு அதிகம். வெளியேயும் இதேபோன்ற கோமாளிகள் நிறைந்துள்ளனர். இந்தப்படத்திலுள்ள ஆத்மாவைப்பாருங்கள். என்ன ஒரு ‘கொயந்த’ முகம். ஏன் இதைச்செய்கிறது? இந்தவேடம் மூலம் அது எதை மாற்றி நடித்துக்கொள்கிறது. இதேதான் நம்மூர் ஃபேஸ்புக் கொந்தளிப்பாளர்களும் செய்கிறார்கள்

சமூகத்தைப்புரிந்துகொள்ள ஃபேஸ்புக் உதவாது. சமூகத்தின் பகற்கனவுகளை, பாவனைகளை , மனநோய்களை கண்டுகொள்ள மட்டுமே உதவும்

ஜெ

முந்தைய கட்டுரைஜடாயு ராமாயணம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 66