அமெரிக்க இலட்சியவாதம்

statue-of-liberty

திரு ஜெ

உங்களுடைய இன்றைய கட்டுரை ’அமெரிக்கா கனடா ஐம்பது நாட்கள்’ சுருக்கமாக நன்றாக இருந்தது.

நீங்கள் சென்று 50 நாட்கள் ஆகிவிட்டது என்பது வியப்பாக இருக்கிறது.

ஒரே ஒரு விளக்கம் தந்தால் நல்லது.

கட்டுரையில் “அமெரிக்க வழிபாட்டாளர் , ஆனால் அந்நாட்டின் செல்வம் வெற்றி ஆகியவற்றுக்கு மேலாக அதன் இலட்சியவாதமே அவரை கவர்ந்திருக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.

அமெரிக்க இலட்சியவாதம் பற்றி கொஞ்சம் விரிவாக விளக்க முடியுமா ? தளத்தில் முன்னரே எங்கேனும் இதைப்பற்றிய விளக்கங்கள் உள்ளதா ?

அமெரிக்க இலட்சியவாதம் மற்றும் ஐரோப்பிய இலட்சியவாதம் இடையே இருக்கும் இடைவெளி மற்றும் முரண் என்ன ?

– சு.பா.

அன்புள்ள சுரேஷ்,

அமெரிக்கா பற்றி விசித்திரமான ஒரு இரட்டைநிலை இந்தியாவில் உள்ளது.அமெரிக்கா என்றாலே ‘ஏ அமெரிக்க ஏகாதிபத்தியமே’ என்ற குரல்தான் நம்காதுகளில் ஒலிக்கும். நமது பொது ஊடகங்களில் ஒருபோதும் அமெரிக்கா நல்லவிதமாகக் குறிப்பிடப்பட்டதில்லை. ஆகவே கொஞ்சம் வாசிக்கத்தெரிந்தவர்கள் கூட அமெரிக்கவெறுப்புடன் பேசுவதைக் காணலாம்.

இங்கிருந்த இரு அரசியல் தரப்புகள் காங்கிரஸும் இடதுசாரிகளும். இடதுசாரிகள் அமெரிக்கவெறுப்பாளர்கள், ரஷ்ய ஊதுகுழல்கள். நாம் நெடுங்காலம் சோவியத் ருஷ்யாவின் நட்புநாடாக இருந்தோம். ஆகவே காங்கிரஸும் அமெரிக்க எதிர்ப்புத்தன்மை கொண்டது. விளைவாக நம் சூழலே அமெரிக்க வெறுப்பு கொண்டது. 1950-களில் இந்தியாவை பஞ்சத்தில் இருந்து காப்பாற்றியது அமெரிக்காவின் நன்கொடைகள் என்பதுகூட மறக்கப்பட்டது.

கடைசியாக கென்னடி காலகட்டத்தில் இங்கே அமெரிக்கா பற்றிய ஒரு நல்லெண்ணம் இருந்தது. இங்கு அமெரிக்காவின் கேர் அமைப்பு அளித்த மக்காச்சோளம் காமராஜர் அமைத்த மதிய உணவுத்திட்டத்தின் முக்கியமான அடிப்படையாக இருந்தது. முத்து பதிப்பகம் வழியாக அமெரிக்க நூல்கள் இங்கே ஓரளவு பிரசுரமாயின. அமெரிக்க வாழ்க்கை அறிமுகமாகியது. ஆனால் அனைத்தும் சீனப்போருக்குப்பின் இந்திய-ருஷ்ய உறவு உருவானபோதே இல்லாமலாயின.

ஆனால் மறுபக்கம் நம் மக்கள் அனைவருமே தங்கள் பிள்ளைகள் படித்து எப்படியாவது அமெரிக்கா போய் குடியேறிவிடவேண்டும் என்றே விரும்புகிறார்கள். ஒரு வாய்ப்பு கிடைத்தால் அமெரிக்காவில் போய் குடியேற விரும்பாத இந்தியர்கள் முனிவர்களாகத்தான் இருப்பார்கள். [முனிவர்களுக்கே அங்கே ஆசிரமக்கிளைகள் உள்ளன] அமெரிக்காவைக் கரித்துக்கொண்டும் பல இடதுசாரிகளின் பிள்ளைகள் கூட அமெரிக்காவின் குடிமக்கள்தான். அமெரிக்காவின் மோஸ்தர்கள்தான் இந்தியாவை ஆள்கின்றன. அமெரிக்கபாணி வணிகம்தான் நம்முடைய முன்னுதாரணம்.

ஆகவே முற்போக்கு முகத்துக்காக அமெரிக்காவை திட்டுவதும் கூடவே எப்பாடுபட்டேனும் அமெரிக்காவை எட்டிவிடுவதை வாழ்நாள்கனவாகக் கொண்டிருப்பதும் இந்திய வழக்கம். இங்கே அமெரிக்க நிதி பெற்று அமெரிக்கத் திட்டங்களை செயல்படுத்தும் கும்பல்கள்கூட அமெரிக்க ஆதரவை கொஞ்சம் அடக்கியே வாசிப்பார்கள். அமெரிக்கா சென்று நிதி திரட்டி வரும் இடதுசாரிகள் அமெரிக்கவசையை குரல்மாற்றாமல் சொல்லிக்கொண்டிருப்பார்கள்.இந்தியப் போலிப்பாவனைகளில் முக்கியமானது இது.

இரண்டு அமெரிக்காக்கள் உண்டு என்று புரிந்துகொள்வது நல்லது . ஒன்று முதலாளித்துவ அமெரிக்கா. கறாரான வணிகம் மூலமும் தொழில்நுட்ப மேலாதிக்கம் மூலமும் உலகை அடக்கி ஆளும் அமெரிக்கா அது. இன்னொன்று ஜனநாயக அமெரிக்கா. உலகுக்கே ஜனநாயகம், தனிமனித உரிமை ஆகியவற்றை கற்றுக்கொடுத்த நாடுகளில் ஒன்று அது. இன்றும் உலகின் மனசாட்சியாக அமெரிக்க ஜனநாயகம் விளங்குகிறது. அமெரிக்காவின் சுதந்திர சிந்தனை, தனிமனித உரிமையை மதிக்கும் அரசாங்க அமைப்பு, அறிவுக்கு அங்கே இருக்கும் மதிப்பு என்பவை உலகுக்கே முன்னுதாரணமானவை.

ஐநூறாண்டுகளுக்கு முன் ஐரோப்பியர்களால் கண்டுபிடிக்கப்பட்ட புதியநிலத்தில் குடியேறியவர்கள் பொதுவாக இரண்டு வகையினர். ஐரோப்பாவிலின் அறிவியக்கத்தின் அடியில் இருந்து கிளம்பி வந்தவர்கள் முதல்வகை. தப்பியோடிய குற்றவாளிகள், பஞ்சத்தால் இடம்பெயர்ந்த விவசாயிகள், பொன்தேடி வந்த சாகசக்காரர்கள் போன்றவர்கள் அவர்கள். ஐரோப்பாவின் அறிவியக்கத்தின் உச்சியில் இருந்து கிளம்பி வந்தவர்கள் இரண்டாவது வகை. சுதந்திர சிந்தனைக்காக தண்டிக்கப்பட்ட மதக்குழுக்கள், பல்வேறு கைத்தொழில் நிபுணர்கள், தொழில்நுட்பத்திறனாளர்கள் அவர்கள்.

இவ்விருவரும் இணைந்து அங்கே உருவாக்கிய நாகரீகம் என்பது வரலாற்றில் நிகழ்ந்த ஒரு பெரிய பரிசோதனை. பலபடிகளாக அழிவும் ஆக்கமுமாக முன்னகர்ந்து அது அமெரிக்கா என்ற தேசத்தை உருவாக்கியது. அமெரிககவில் மேலே சொன்ன இருதரப்பினரிடையே நிகழ்ந்த முரணியக்கத்தில் இரண்டாம்தரப்பினரின் கை மெல்ல மெல்ல மேலோங்கியது. அவர்கள் ஐரோப்பாவில் பதினாறாம் நூற்றாண்டில் உருவாகிவந்த சுதந்திர ஜனநாயகவாத சிந்தனைகளையும், தொழில்நுட்ப வளர்ச்சியையும் மேலும் தீவிரமாக எதிரொலித்தார்கள். ஊக்கத்துடன் முன்னெடுத்துச்சென்றார்கள். அமெரிக்க இலட்சியவாதம் என்பது முதன்மையாக அதுதான்.

அமெரிக்க இலட்சியவாதம் ஐரோப்பிய இலட்சியவாதத்தின் வளர்ச்சிநிலைதான். அடிப்படையில் முரண்பாடுகள் என ஏதுமில்லை என்றே சொல்லவேண்டும். அமெரிக்கச் சுதந்திரப்போராட்டம் என்பது பிரெஞ்சுப்புரட்சியின் உணர்வுநிலைகளின் எதிரொலி கொண்டது. பிரெஞ்சுப்புரட்சி ‘சமத்துவம் -உரிமை- ஜனநாயகம்’ என்னும் நவீன விழுமியங்களை உலகமெங்கும் கொண்டுசென்றது. ஆனால் பிரான்ஸில் அது விரைவிலேயே தோற்றது. அங்கே அது மீண்டும் மேலெழுந்து வர மேலும் பல்லாண்டுகள் ஆயின.அமெரிக்காவில் படிப்படியாக மேலும் வலுப்பெற்று வளர்ந்தது. உலகமெங்கும் அவ்விழுமியங்கள் சென்று சேர அமெரிக்காவின் வெற்றி காரணமாகியது.

அன்று நிலப்பிரபுத்துவத்தில் இருந்து நவீன உலகு நோக்கி வந்துகொண்டிருந்த அனைத்துச் சமூகங்களுக்கும் அமெரிக்காவின் வெற்றி ஊக்கமூட்டியது. அமெரிக்காவின் மக்களும் ஊடகங்களும் உலகமெங்கும் நிகழ்ந்த அனைத்து ஜனநாயகப்போர்களுக்கும் ஆதரவானவர்களாக இருந்தனர்.காந்தியின் போராட்டங்களின் வெற்றிக்கு அவருக்கு அமெரிக்க ஊடகங்கள் அளித்த பெரும் ஆதரவு முக்கியமான காரணம்.

அமெரிக்கா சுதந்திரம் அடைந்தபோது தனக்கென உருவாக்கிக்கொண்ட அரசியல் சாசனம் உலகமெங்கும் படிப்படியாக சுதந்திரம் பெற்ற நாடுகள் அனைத்துக்குமே முக்கியமான முன்னுதாரணம். இந்திய அரசியல்சாசனத்தில்கூட அதன் செல்வாக்கு அதிகம். தனிமனித உரிமையை, ஜனநாயகப்பண்புகளை அது மக்களுக்கு வாக்களிக்கிறது. சுதந்திரம் என்பதே அமெரிக்க இலட்சியவாதத்தின் ஆப்த மந்திரம். அதை உணர்த்துவது அங்குள்ள சுதந்திரதேவிச் சிலை.

அமெரிக்காவில் நியூயார்க் துறைமுகத்தை நோக்கியபடி நின்றிருக்கும் இச்சிலை ரோமாபுரியின் பழைய சுதந்திரதேவதையான லிபர்ட்டாஸின் நவீன வடிவம். கிரேக்கமரபின் அறிவுத்தேவதையான சோஃபியாவின் வளர்ந்த வடிவம் இது. பிரெடெரிக் அகஸ்தே பர்தோல்டியால் வடிவமைக்கப்பட்டு பிரெஞ்சுமக்களால் அமெரிக்காவுக்கு வழங்கப்பட்டது.

அத்தனைபேருமே அச்சிலையைப்பற்றி பலகோணங்களில் வாசித்திருக்கலாம். க்ளுஸெப் டொர்னடோர் இயக்கிய இத்தாலியப்படமான ’தி லெஜெண்ட் ஆஃப் 1900’ அச்சிலையை காட்டும் விதம்தான் மிகச்சரியான புரிதலை அளிக்கும்.

உலகமெங்கும் இருந்து பஞ்சத்தால் வெளியேறியவர்கள், மத ஒடுக்குமுறையால் வெளியேறியவர்கள், அரசியல் அகதிகள் அமெரிக்காவுக்கு வந்து குடியேறிக்கொண்டிருந்த காலம் அது. மூட்டைமுடிச்சுகளுடன் பஞ்சைகளாக கப்பலில் வரும் மக்கள் நியூயார்க் துறைமுகத்துக்குள் நுழையும் கப்பலின் டெக்கில் நின்று மேலே பார்க்கிறார்கள்.தெய்வத்தை கண்டதுபோலப் பரவசம், கண்ணீர், வரிசையாக அவர்களின் கண்களில் சுதந்திரதேவியின் சிலை தெரிகிறது.

அதுதான் அமெரிக்காவின் ஆன்மீகம். உலகமெங்கும் இருந்து வந்தவர்களால் ஆன நாடு அது. ஆகவே அது ஓர் நவீன ஜனநாயக சமூகமாக இருக்கிறது. உலகுக்கு ஜனநாயகத்தை அது வாக்களிக்கிறது. அந்த வாக்குறுதியை நம்பித்தான் இங்கிருந்து மக்கள் இன்றும் சென்றுகொண்டிருக்கிறார்கள். எப்படி எதற்காகச் சென்றாலும் எவருமே திரும்பிவருவதில்லை.

அமெரிக்காவின் அரசியல் என்பதையே அங்குள்ள முதலாளித்துவ மையஅதிகாரத்துக்கும் சுதந்திர ஜனநாயகத்தின் விழுமியங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட பெருவாரியான மக்களுக்கும் இடையேயான முரணியக்கமாகவே நான் புரிந்துகொள்கிறேன்.இந்தியா போன்ற மூன்றாமுலக நாடுகளில் பெரும் வணிக மேலாதிக்க சக்தியாகத் திகழும் அமெரிக்காவை பார்க்கிறோம். அமெரிக்காவுக்குச் சென்றால் நாம் அங்குள்ள மக்களின் ஜனநாயக நம்பிக்கையை, அதன் விளைவான தனிமனித உரிமையை, அபாரமான தனிநபர் பொதுஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் காண்கிறோம். அவை உருவாக்கிய மிகவெற்றிகரமான சமூகக் கட்டுமானத்தை காண்கிறோம்.இருபக்க உண்மை அது.

அந்த இலட்சியவாதத்தின் முகங்கள் இன்றும்கூட உலகை உத்வேகமூட்டுபவை. ஜார்ஜ் வாஷிங்டன்,பெஞ்சமின் ஃப்ராங்லின் தாமஸ் ஜெஃபர்ஸன், ஆபிரகாம் லிங்கன் போன்ற அரசியல்வாதிகள். வால்ட் விட்மன், ராபர்ட் ஃரோஸ்ட் போன்ற கவிஞர்கள்.அவ்வரிசையில் அமெரிக்காவின் அறிவியலாளர்களான ஃபோர்ட், எடிசன் முதலியவர்களையும் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

அமெரிக்க இலட்சியவாதத்தின் தத்துவார்த்தமான உச்சம் என்பது ஆழ்நிலைவாதம் [Transcendentalism] அதன் முன்னோடியான எமர்சனும் தோரோவும் என் இளமை ஆதர்சங்கள். நான் எமர்சனை மொழியாக்கம்செய்திருக்கிறேன்.பாஸ்டனில் எமர்சனின் இல்லம் எனக்கு மிக மன எழுச்சிகொடுத்த அவர் வாழ்ந்த அதே காலத்திலேயே இருக்கும் அவரது அறைகளை நூலகத்தைப்பார்க்கையில் என் ஆசானுடன் சிறிதுநேரம் இருந்து மீண்ட உணர்வை அடைந்தேன். அருகேதான் உள்ளது அவரது நண்பர் தோரோ இரண்டு ஆண்டுக்காலம் காட்டில் தன்னந்தனியாக விறகுவெட்டி வாழ்ந்த வால்டன் ஏரிக்கரைக் காட்டின் சிறிய மரக்குடில்.

மானுட இனத்துக்கான பெரும்விழுமியங்களான அறம், நீதி ,கருணை ஆகியவற்றை இயற்கையின் உள்ளக்கிடக்கை என்று புரிந்துகொள்ளமுடியும் என்று வாதிட்டது ஆழ்நிலைவாதம்.மதம் சாராத, கடவுளை மையமாக ஆக்காத ஒரு ஆன்மீகத்துக்கான தத்துவத்தேடல் அது.

இன்று அதற்கு எதிரான அமெரிக்க தத்துவசிந்தனையாகிய செயல்முறைவாதம் [ நடைமுறைவாதம் என்பது இன்னொரு சொல். பிராக்மாடிசிசம்] குறித்து எனக்கு எதிர்மறை எண்ணம் இருந்தது. இன்று அது இன்னொரு இலட்சியவாதமே என்ற எண்ணம் உள்ளது. இவ்வுலகை ஆக்கிய இலட்சியக்கனவுகளுக்கு எதிராக முற்றிலும் புறவுலகத் தர்க்கம் மற்றும் பயன்பாடுசார்ந்து கொள்கைகளை விளங்கிக்கொள்ள முயல்வது அது.

அப்படி முழுமையாக வகுத்துரைப்பது உண்மையில் சாத்தியம் அல்ல, ஆனால் அந்த இலக்கும் அதற்காக அமெரிக்காவில் நிகழ்ந்த ஒட்டுமொத்தமான சிந்தனை இயக்கமும் முதன்மையான விளைவுகளை உலகசிந்தனையில் உருவாக்கியது. உலகளாவிய இலட்சியக்கனவுகளுக்கு சமானமான எதிர்விசையாகச் செயல்பட்டு நவீன தத்துவத்த்தின் முரணியக்கத்தை அமைத்தது. அவை இரண்டும் இணைந்த ஒரு ஒட்டுமொத்தமே அமெரிக்கசிந்தனை என்பது.

அமெரிக்கா இந்த இடத்தை வந்தடைய பல படிகளை கடந்துள்ளது. பல சரிவுகளையும் பிழைகளையும் சந்தித்துள்ளது. ஆனால் இன்றுவரை அது தனிமனித உரிமை, ஜனநாயகம் என்னும் இரு விழுமியங்களை உறுதியான நம்பிக்கையுடன் முன்னெடுத்துச்செல்வதாகவே உள்ளது. அதன் முன்னுதாரணத்தையே உலகமெங்கும் நாம் கடைப்பிடிக்கிறோம் என்பதே உண்மை.

ஜெ

முந்தைய கட்டுரைவெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 64
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 65