தோன்றாத்துணை

1

 

சென்னையில் பழைய ஜெமினி ஸ்டுடியோ அருகே பார்ஸன் காம்ப்ளெக்ஸ் என்ற பெரிய கட்டிடத்தின் நாலாவது மாடியில் மாத்ருபூமி நிருபராக அப்போது இருந்த கே.ஸி.நாராயணனின் அலுவலகமும் குடியிருப்பும் இருந்தது. நான் தருமபுரியிலிருந்து வந்து தங்கியிருந்தேன். கே.ஸி.நாராயணன் இப்போது மலையாள மனோரமா குழுமத்தின் இதழ்களுக்கான பொது ஆசிரியர். இப்போது கவிஞராகப் புகழ்பெற்றிருக்கும் மங்காடு ரத்னாகரன் அப்போது மலையாள இந்தியா டுடே இதழின் உதவி ஆசிரியர். சி.பி.எம் [மா.லெ] குழுவின் கெ.என்.ராமச்சந்திரன் குழுவின் பிரச்சாரகராக சென்னையில் பணியாற்றிய ஒரு நண்பர் வந்திருந்தார்.

ஸக்கரியா வந்திருப்பதாக மங்காடு ரத்னாகரன் சொன்னார். கே.ஸி.நாராயணன் நம்பூதிரியானாலும் மீன் இல்லாமல் சாப்பிடமாட்டார். அவரே மீனை கழுவி வெட்டி வாணலியில்போட்டு வறுத்து அடுக்கிக்கொண்டிருந்தார். ஒரு நண்பருடன் ஸக்கரியா வந்து சேர்ந்தார். ஸக்கரியாவை நான் நேரில் சந்திப்பது அப்போதுதான். சிரியன் கிறித்தவர்களுக்கு ஒரு அரேபிய அழகு உண்டு. கெட்டி மீசை, உருண்ட முகம். நல்ல நிறம். வழுக்கை இல்லாவிட்டால் மம்மூட்டியின் தம்பி என்று சொல்லிவிடலாம். கே.ஸி.நாராயணன் என்னை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது என்னுடைய ‘ரப்பர்’ நாவல் வெளிவந்து பரிசுபெற்றிருந்தது. ‘கதா’ விருது பெற்றிருந்தேன்

ஸக்கரியாவிடம் ”நான் உங்கள் கதைகளை எல்லாம் படித்திருக்கிறேன்”என்றேன். அவரது கதைகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து கேரள இலக்கியத்தில் அலைகளைக் கிளப்பிக்கொண்டிருந்த காலம் அது. அவரது ‘தேடிப்போகவேண்டியதில்லை’ போன்ற சில கதைகளை நான் தமிழாக்கம்செய்து ‘மஞ்சரி’ இதழில் வெளியிட்டிருந்தேன். அப்போது ஸக்கரியா இன்றுபோல அரசியல் கட்டுரைகள் எழுதி பிரச்சினைகளை கிளப்ப ஆரம்பிக்கவில்லை

ஸக்கரியா ”நீ தமிழனா மலையாளியா?”என்றார் ஐயமாக. ”இன்னும் தீர்மானிக்கவில்லை”என்றேன் ஸக்கரியா மலர்ந்து ”அது நியாயமான பேச்சு”என்றார். அதற்குள் தொலைபேசியில் ஓர் அழைப்பு. புனத்தில் குஞ்ஞப்துல்லா வந்திருப்பதாகவும் அருகே ஓர் ஓட்டலில் தங்கியிருப்பதாகவும். கே.ஸி.நாராயணன் ”இங்கே கறியாச்சன் வந்திருக்கிறார். மீனும் சரக்கும் இருக்கிறது”என்றார். புனத்தில் குஞ்ஞப்துல்லா உடனே வருவதாகச் சொன்னார்.

சக்கரியாவும் மங்காடு ரத்னாகரனும் குடிக்க ஆரம்பித்தார்கள். நான் வழக்கம் போல கொக்கோகோலாவுடன் அமர்ந்திருந்தேன். ”நீங்கள் ரொம்ப அழகாக இருக்கிறீர்கள்”என்றேன். ”நீ என்னை சின்ன வயதில் பார்க்கவேண்டும்… எல்லாம் போயிற்றே. கொஞ்சநாள்முன் எம்.டி. [எம்.டி.வாசுதேவன்நாயர்] என்னைப்பார்த்தபோது ‘டேய் நீ எப்டிடா இப்டி ஆனே? தேவதூதன் மாதிரியல்லவா இருந்தாய்’ என்று கேட்டார்” என்றார் ஸக்கரியா.

நான் ”ஏன்?” என்றேன். அந்தக்காலத்தில் நான் அடிக்கடி அந்தக் கேள்வியைக் கேட்பேன். ”குடிதான்.வேறென்ன?” நான் ”எத்தனை வயதில் குடிக்க ஆரம்பித்தீர்கள்?” என்றேன். ”ஒரு ஐந்து ஆறு… அதற்கு முன்னால்கூட இருக்கும். நினைவில்லை” மங்காடு ரத்னாகரன் ”கிறிஸ்தியானிகள் குழந்தை பிறந்ததுமே வாயில் நாட்டுச்சாராயம்தான் தொட்டு வைக்கிறார்கள் என்று சொல்வார்கள்”என்றார். ”அது எப்படி என்று தெரியவில்லை. ஆனால் சில இடங்களில் ஞானஸ்னானம் செய்யும் நீரில் கொஞ்சம் சாராயம் மணக்கும்” என்றார் சக்கரியா.

தொடர்ந்து குடிபற்றிய குட்டிக்கதைகள். டெல்லி இதழாளரான ஒரு மேனன். அவர் குடிக்காமல் இருக்கும் நேரமே கிடையாது. கண்விழித்ததுமே ஊற்றிக்கொள்வார். திருமணநாளிலும் கொஞ்ச குடித்திருந்தார். மனைவி ஒரு கிராமப்புறத்து, படிக்காத, ஆசாரகுடும்பத்துப் பெண். ஆனால் இந்திராகாந்தி கொல்லப்பட்டபோது டெல்லியில் மது கிடைக்கவில்லை. மேனன் குடிக்காமல் வீட்டுக்கு வந்தார். அவரது வாயின் அசல் நெடி வந்ததைக் கண்ட மனைவி அலறி அழுதுகொண்டு குற்றம்சாட்டினாள் ”நீங்க குடிச்சிருக்கீங்க…”

புனத்தில் குஞ்ஞப்துல்லா வந்தார். உயர்தரமான டிசைனர் சட்டை. கற்றைமுடி, தடித்த கண்ணாடி. சற்றுகுள்ளமான உருவம். பர்மியரைப்போல இருந்தார். அவரது அம்மாவழி தாத்தா ஒரு பர்மியர் என்று பிறகு சொன்னார். அவர் வடகராவில் புகழ்பெற்ற டாக்டர். பின்னர் அரேபியாசென்று கொஞ்சநாள் வேலைபார்த்தார். அப்போதுதான் திரும்பிவந்திருந்தார். நான் என்னை அறிமுகம்செய்துகொண்டேன்.

அவருக்கு சாகித்ய அகாதமி விருது பெற்றுத்தந்து இந்தியாவில் மிக இளம்வயதிலேயே அவ்விருது பெற்றவராக ஆக்கிய நாவலான ‘ஸ்மாரகசிலைகளை’ மொழியாக்கம் செய்யும் ஆசையைச் சொன்னேன். ‘எந்து வேணமெந்நாலும் செய்யடோ’ என்றார். பின்னர் பல வருடங்கள் கழித்து நான் குளச்சல் மு.யூசுப்பிடம் சொல்லி அவர் அந்தநாவலை ‘மீஸான் கற்கள்’ என்ற பேரில் மிகச்சிறப்பாக மொழியாக்கம்செய்தார். காலச்சுவடு வெளியிட்டது. ஸக்கரியா கதைகளின் ஒரு அந்தரங்க தொகுப்பு கொண்டுவரும் நோக்கம் இருந்தது. அதை எம்.எஸ் மூலம் நிறைவேற்றிக்கொண்டேன்.தமிழினி வெளியிட்டது.

”நீ குடிப்பதில்லையா?”என்றார் புனத்தில் குஞ்ஞப்துல்லா. ”இல்லை” என்றேன். என்னுடைய கொகோகோலாவைப்பார்த்துவிட்டு ”அதைவிட நீ இதையே குடிக்கலாம். கெடுதல் குறைவுதான்”என்றார். இலக்கிய வம்புகள் வழியாக பேச்சு முன்னேறி தற்கொலை செய்துகொண்ட ஒரு இதழாளரைப்பற்றி வளர்ந்தது. ”பாவம், ரொம்பநாளாகவே தற்கொலைசெய்துகொள்ள ஆசைப்பட்டார். அதற்காக ஆராய்ச்சியெல்லாம்கூடச் செய்தார்” என்றார் ஸக்கரியா.

மங்காடு ரத்னாகரன் ”எந்த மரணத்தில் வலி குறைவு?”என்றார். ”சந்தேகமென்ன தூக்க மாத்திரைதான்” என்றார் டாக்டர் புனத்தில் குஞ்ஞப்துல்லா.”ஆனால் அதற்காக டிராங்குலைஸர்களை நாடினால் சிலசமயம் கடைசிக்கணங்கள் கொடூரமான மனவாதைகள் நிறைந்தவையாக ஆகிவிடும். பிழைத்துக்கொண்ட ஒருவரிடம் பேசியிருக்கிறேன்…”

”துப்பாக்கிக் குண்டு பட்டுச் சாவதுகூட எளிமையான மரணம்தான் என்றேன். தல்ஸ்தோய் போரும் அமைதியும் நாவலில் ஒரு இடத்தில் அதை எழுதியிருக்கிறார். சாதாரணமான ஒரு குற்றத்துக்காக ஒருவனை சுட்டுக்கொல்ல தளபதி கவனமில்லாமல் ஆணையிடுகிறான். அவனுக்கு நம்பவே முடியவில்லை. அவன் விளக்கிக் கொண்டிருக்கும்போதே சுட்டு விடுகிறார்கள். அவன் பேசியபடியே குனிந்து தன் மார்பைப் பார்க்கிறான். ஓட்டையைக் கண்டபின்புதான் ‘அய்யோ சுட்டுவிட்டார்கள்! சுட்டுவிட்டார்கள்!’ என்று அலறுகிறான்” என்றேன்.

”கிழவர் எது சொன்னாலும் சரியாகத்தான் இருக்கும்.” என்றார் புனத்தில் குஞ்ஞப்துல்லா. ”ஆனால் சுடுவதில் சில விதிகள் உண்டு. நெற்றிப்பொட்டில் சுட்டுக்கொண்டால் சிலசமயம் குண்டு வழுக்கிப் போகும். மண்டை ஓடு அத்தனை கெட்டியானது.” கே.ஸி.நாராயணன், ”காதில் சுடலாம்…சினிமாக்களில் அப்படித்தான் சுடுகிறார்கள்” என்றார் . ”சுடலாம். ஆனால் சரியாகப்படவேண்டும். வாய்க்குள் விட்டு சுட்டுக்கொள்வதுதான் கிளாஸிக் வழி. குறியே தவறாது. மூளை இருந்தால் கண்டிப்பாக சிதறிப்போகும்”

”ரயிலில் தலைவைப்பதுதான் மலபாரில் பிரபலம். வெள்ளைக்காரன் கேரளத்திற்குச் செய்த மிகச்சிறந்த உதவியே அதுதான். மங்காட்டில் எந்த ரயிலும் நிற்பதில்லை. யாரும் அதில் ஏறி எங்கும் செல்வதில்லை. ரொம்பநாள் தற்கொலைக்குமட்டும்தான் அது பயன்பட்டுவந்தது. அந்தக்காலத்தில் இரவு ஒன்பதரைக்கு ஒரு ரயில் மங்களூருக்குப் போகும். அது தற்கொலைக்கு ரொம்ப வசதியானது. ‘ஒன்பதரை வண்டியிலே போறவனே’ என்றாலே அந்த அர்த்தம்தான்”என்று மங்காடு ரத்னாகரன் சொன்னார்.

புனத்தில் குஞ்ஞப்துல்லா ”ரயிலில் தலைவைப்பது ஆழங்களில் குதிப்பது என்பவையெல்லாம் அவ்வளவு நல்ல வழிகள் அல்ல. சில பிணஆய்வுகளில் சாவுக்கு முன் கடும்இதயஅடைப்பு நிகழ்ந்திருப்பதைக் காணமுடிந்திருக்கிறது.”என்றார். ஸக்கரியா ”கொடுமையான சாவு என்றால் நீரில் மூழ்குவதுதான். நான் சின்னவயதில் இரண்டுமுறை மூழ்கிச்சாகப் பார்த்திருக்கிறேன். அது அடிக்கடி கனவிலும் வரும்” என்றார்.

”அப்படி முழுக்கச் சொல்ல முடியாது…”என்று புனத்தில் குஞ்ஞப்துல்லா சொன்னார். ”மூச்சுத்திணறல் ஒரு கொடிய அனுபவம்தான். ஆனால் நுரையீரலில் நீர் நிறைந்துவிட்ட பின் கொஞ்சநேரம் அபூர்வமான ஒரு மோனநிலை உருவாகும் என்று சொல்கிறார்கள். அது ஒரு தியானம் போல ஆனந்தமானதாக இருக்கும்…பிரம்மாவிஷ்ணுவையெல்லாம்கூட பார்க்க முடியும்..” ஸக்கரியா ”உண்மையா?” என்றார் ”எப்படி தெரியும்?”

”நிமோனியா நோயாளிகளில் நுரையீரல் சளியால் நிறையும் நிலை அபூர்வமாக வரும். அப்போது அந்த நிலைக்குப் போய் அதிசயமாக பிழைப்பவர்கள் உண்டு. ஒருநோயாளி அந்த நிலையை என்னிடம் வர்ணித்திருக்கிறார்…” புனத்தில் குஞ்ஞப்துல்லா விளக்கினார்

நான் ”தூக்குப் போட்டுக்கொண்டால்?”என்றேன் ஆவலாக. ”தூக்கு போட்டுக்கொண்டால் வலிக்குமா?” .புனத்தில் குஞ்ஞப்துல்லா என் முகத்தைப்பார்த்து ”இவனைப் பார்த்தால் தூக்குபோட்டுக்கொள்ளும் திட்டம் இருப்பது போல தெரிகிறதே…”என்றார். என் கையைப்பற்றிக் குலுக்கி, ”நல்ல திட்டம். இடப்பள்ளி ராகவன்பிள்ளை கூட தூக்குதான் போட்டுக்கொண்டார். நல்ல கலைஞர்கள் கண்டிப்பாக தூக்குபோட்டுதான் சாகவேண்டும். அப்போதுதான் ‘சமூகத்தின் முன் ஒரு கேள்விக்குறியாக அவன் நின்றான்’ என்று நம்மால் எழுதமுடியும்”என்றார்

இன்னொரு டம்ளர் ஊற்றி அருந்தியபின் ”தம்பிக்கு தூக்குபோட்டுக்கொள்ளும் திட்டம் இருந்தால் நான் சில நல்ல டிப்ஸ் தருகிறேன். சரியாக தூக்கு போட்டால் வலியே இல்லாமல் சுகமாக சாகலாம். கத்துக்குட்டித்தனமாக போட்டுக்கொண்டால் பயங்கரமான அவஸ்தைதான்…” நான், ”சரியாக எப்படி தூக்குப் போட்டுக்கொள்வது?”என்றேன். ”சர்க்கார் தூக்கு போட்டு கைதிகளைக் கொல்கிறதே அதுதான் சரியான வழிமுறை… அதற்கு மூன்று அடிப்படைகளைக் கவனிக்க வேண்டும். ஒன்று , தூக்கின் முடிச்சு கழுத்துக்குப் பின்னால் முகுளத்தின் மீது இருக்கவேண்டும். இரண்டு, தூக்குக் கயிறு வழவழப்பாகவும் சட்டென்று இறுகும்விதத்திலும் இருக்க வேண்டும். தூக்கு போட்டுக்கொள்பவர் தூக்கை விட உயரமான இடத்தில் இருந்து  சட்டென்று ஆழத்தில் குதிக்க வேண்டும். அவ்வளவுதான் முகுளமும் மூளையும் தனித்தனியாகப்பிரிந்து அக்கணமே மூச்சு நின்று, பிரக்ஞை தவறிவிடும். ஒரு பிரேக் டேன்ஸ் ஆடினால் கதை சுபமங்களமாக முடியும்…”

நான் ”தப்பாக போட்டுக்கொண்டால்?”என்றேன். ”தப்பாக போடுவதென்றால் படிப்படியாக தூக்கு இறுகுவதுதான். கொஞ்சம் கொஞ்சமாக கழுத்து இறுகி மூச்சு திணறும். தப்பவேண்டுமென்று உடம்பு போராடும். வலியில் உடல் கிடந்து துள்ளும்… கைகளால் தொடைகளை பிராண்டிக்கொள்வார்கள்….” . நான், ”தூக்கு போட்டால் நாக்கு வெளியே வருமா?”என்றேன். ”வரலாம்…ஆனால் வந்தாக வேண்டுமென்பதில்லை…முன்கழுத்து இறுகினால் சிலசமயம் நாக்கு நீளும். சிலருக்கு மலஜலம் கழிந்திருக்கும். விந்து ஒழுகிய பையன்களைக்கூட நான் பிண ஆய்வு செய்திருக்கிறேன்”

நான் பெருமூச்சுடன் பின்னுக்குச் சாய்ந்தேன். ”எப்படிச் செத்தால் நிறைய இரங்கற்பாடல்கள் வரும் என்று பார்த்துச் சாகிறவன்தான் நல்ல கலைஞன்”என்றார் ஸக்கரியா. ”இடப்பள்ளி ராகவன் பிள்ளை பெரிய ஆள். சாகாமலிருந்திருந்தால் அவரது கவிதைக்காக நாம் அவரை தூக்கிலே ஏற்றியிருப்போம். இப்போது அழியாத புகழ் வந்துவிட்டதே. ரமணனை படிக்காத மலையாளி உண்டா?” [காதலில் தோற்ற கவிஞர் இடப்பள்ளி ராகவன் பிள்ளை தற்கொலை செய்துகொள்ள அவரது நண்பரும் கவிஞருமான சங்ஙம்புழ கிருஷ்ணபிள்ளை ‘ரமணன்’ என்ற குறுங்காவியத்தை எழுதினார். மலையாளத்தில் மிகப்பிரபலமான கவிதை இதுவே] ”மலையாளிப்பெண்கள் எல்லாருமே சின்ன வயசில் அவர்களுக்காகச் சாவதற்கு ஒரு ராகவன்பிள்ளை கிடைக்க மாட்டரா என்று ஆசைப்படுகிறார்கள்” ஸக்கரியா சொன்னார். எல்லாரும் சிரித்தார்கள்.

பிறகு ஆளுக்கொரு கருத்து சொல்லி சிரித்துக்கொண்டிருந்தார்கள். நான் ”நாக்கு வெளியே வரவில்லை என்றால் அதிக வலி இருக்கவில்லை என்றுதான் அர்த்தம் இல்லையா?”என்றேன். புனத்தில் குஞ்ஞப்துல்லா என்னைக் கூர்ந்து பார்த்தார். ”ஏன் கேட்கிறாய்?” நான் கண்களை திருப்பிக்கொண்டு மெல்ல, ”என் அம்மா தூக்குபோட்டுத்தான் இறந்தாள்”என்றேன்

சட்டென்று அந்த அறையே பனிக்கட்டிபோல ஜில்லிட்டு அமைதியாகியது. எல்லாரும் என்னையே பார்த்தார்கள். அந்த அறைக்குள் அதுவரை இல்லாதிருந்த ஒருவர், அனைவருக்குமே புதிய ஒருவர் வந்து அமர்ந்துகொண்டது போல ஒரு சங்கடம் உருவானது.

கே.ஸி.நாராயணன்னுக்குக் கூட அது அதற்கு முன்பு தெரியாது. நான் யாரிடமும் சொன்னதில்லை. சற்று நேரம் கழித்து புனத்தில் குஞ்ஞப்துல்லா ”ஐ யம் ஸாரி”என்றார். ”பராவாயில்லை. அதில் என்ன இருக்கிறது?”என்றேன். ”ஹாரிபிள்”என்றார் சக்கரியா. நான் பலவீனமாகப் புன்னகைசெய்து மீண்டும் ”பரவாயில்லை”என்றேன். அதன்பின்பு அந்த அறையில் சிரிப்பு திரும்பிவரவில்லை.

அந்த அனுபவத்தை பின்னர் ஸக்கரியா ஒரு சிறுகதையாக எழுதினார். நான்தான் அதில் கதாநாயகன். சமீபத்தில் மங்காடு ரத்னாகரன் அதை எழுதியிருப்பதாகச் சொன்னார்கள். நான் அந்த நாளை மறந்து விட்டேன். அப்போதெல்லாம் அது என்னுடைய ஓர் அன்றாட தினம்.

 

மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் May 27, 2010

பிரிவின் விஷம்

புனத்தில் குஞ்ஞப்துல்லாவின் மீசான் கற்கள்.

சாக்கியார் முதல் சக்கரியா வரை

முந்தைய கட்டுரைஅறம் – கதையும் புராணமும்
அடுத்த கட்டுரைதினமலர் 33, மதமும் தேசியமும்