அன்புள்ள ஜெ
நீங்கள் டி என் பி எஸ் ஸி அளவுக்கு உயர்ந்துவிட்டீர்கள்
கீழே இணைப்புகளை அனுப்பியிருக்கிறேன்
பன்னீர்செல்வம் ஈஸ்வரன்
<a href=”http://www.jeyamohan.in/wp-content/uploads/2015/07/Screenshot_2015-07-29-17-31-20.png”>
அன்புள்ள பன்னீர்,
சந்தோஷம்
இப்படி பல பிரமோஷன்கள் வழியாக உயர்ந்துகொண்டிருக்கிறேன். முதன்முதலாக என் பெயரை அரசு டிவியில் காட்டியபோது என் சொந்தக்காரர் ஒருவர் பரவசம் அடைந்தது நினைவுள்ளது.கதா விருதுக்காக. அதன்பிறகுதான் நான் இந்திய ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மாவுடன் நிற்கும் புகைப்படம் ஒரு பாஸ்போர்ட் என அலுவலக வட்டாரங்களில் கண்டுகொண்டேன்
குமுதம் என்னை கார்ட்டூன் வரைந்தபோது ஒருநண்பர் உற்சாகமாக எனக்கு பிரமோஷன் வாழ்த்து சொல்லியிருந்தார். ‘ஜெயகாந்தன் ஜெயமோகன் சேர்ந்து எழுதிய [கண்ராவிக்] கதை நீ என்ற பாடலுக்கு பல வாழ்த்துக்கள் வந்தன. இப்போது இது.
என்னைப்பொறுத்தவரை வினவு எனக்கு முழுப்பக்க கட்டுரை போட்டபோதுதான் ‘ஆகா நாமகூடவா?’ என்ற பரவசம் வந்தது. ராஜாதிராஜ ராஜமார்த்தாண்ட ராஜகம்பீர என்னும் தொனியில் ‘முதலாளித்துவ, வகுப்புவாத, பிற்போக்கு,இந்துத்துவ, தரகுமுதலாளித்துவ, சாம்ராஜ்யத்துவ, ஆணாதிக்க, திரித்தல்வாத, புரட்டுவாத ஜெயமோகன்’ என்று போட்டு ஒரு லெட்டர்பேட் அடிக்கவேண்டுமென்று ஆசை வந்தது. பட்டங்களில் அடைவதற்கு மிக எளியது இந்த வரிசைதான். ஒன்று வந்தால் மற்றவையும் தொடரும்
இந்தக்கேள்விபதில் கொஞ்சம் தந்திரமானது என நினைக்கிறேன்.. இந்தவருட இயல்விருது வென்றவர் என்ற கேள்விக்கு கணிசமானவர்கள் பூமணி என்றுதான் சொல்லியிருப்பார்கள். ‘அப்ப சாகித்ய அக்காடமியும் இயலும் வேற வேறயா? அய்யய்யோ’ என வருந்தியிருப்பார்கள்.
எனக்கும் ஓவியக்கலைக்கும் மட்டுமல்ல வீட்டுக்கு பெயிண்ட் அடிப்பதற்கும்கூட சம்பந்தமில்லை என்று தெரிந்த ஒருவர் கேள்விகளை அமைத்திருக்கிறார். ‘தவறான இணையைக் கண்டுபிடி’ என்ற கேள்வியுடன் ‘ஜெயமோகன் – அருண்மொழிநங்கை’ என்று வராதவரை எனக்கு மகிழ்ச்சியே
ஜெ