‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 66

பகுதி பதினொன்று : எண்முனைக் களம் – 1

திருஷ்டத்யும்னன் தன் அரண்மனை சிறுகூடத்தில் பிரபாகரரின் அஷ்டாத்யாயி என்ற நூலை படித்துக் கொண்டிருந்தபோது அவன் துணைத்தளபதி வாயிலில் வந்து நின்று தலை வணங்கினான். கையசைத்து உள்ளே வரும்படி அவன் சொன்னபோது  வந்து வணங்கி பறவைத்தூதாக வந்த தோல் சுருளை வைத்தான். அவனை செல்லும்படி கை காட்டிவிட்டு எடுத்து விரித்து மந்தணக்குறிகளால் பொறிக்கப்பட்டிருந்த செய்தியை வாசித்தான். பாஞ்சாலத்திலிருந்து துருபதன் எழுதியிருந்தார். மத்ர நாட்டு சல்யரின் மகள் ஹைமவதியை மணம் கொள்ள அவனுக்கு உடன்பாடுள்ளதா என்பதை அறிவிக்கவேண்டுமென்று கோரியிருந்தார்.

மூன்றுநாட்களுக்கு முன்பு சல்யரின் மணத்தூது பாஞ்சாலத்தை எட்டியிருந்தது.  எட்டுமங்கலங்களுடன் வந்த ஏழு அவைத்தூதர் துருபதனை சந்தித்து சல்யரின் சொற்களை சொன்னார்கள். பாஞ்சாலமும் மத்ரமும் இயல்பாகவே இணையவேண்டிய நாடுகள், இரண்டுமே அஸ்தினபுரியின் இரு கைகளெனத் திகழவேண்டியவை என்றிருந்தார் சல்யர். இளவரசி ஹைமவதியின் இயல்புகளை சூதர்பாடியதும் நிறைவளிப்பதாக இருந்தது என்று துருபதர் சொல்லியிருந்தார்.

திருஷ்டத்யும்னன் சுருளை பிறிதொருமுறை படித்துவிட்டு அதை அருகே இருந்த சுடரில் பற்றவைத்து சாம்பலாக்கினான்.  உதிர்ந்த கரிச்சுருள்களை குவளை நீரில் இட்டுவிட்டு நிலைகொள்ளாது எழுந்து அறைக்குள் நடந்தபின் சாளரத்தருகே சென்று வெளியே ஆழத்தில் கரைமீது நுரைக்கோடென படிந்த அலைகளில் தொடங்கி விழிதொடும் எல்லையில் வான்விளிம்பாக நின்ற துவாரகையின் நீலக்கடலின் அலைகளை நோக்கிக் கொண்டிருந்தான். ஏவலன் வந்து வாசலில் நின்று யாதவர் என்று அறிவித்ததும் நீள் மூச்சுடன் வரச்சொல் என்றான்.

அவ்வாணை எழுவதற்குள்ளேயே சாத்யகி காலடிகள் ஒலிக்க “காலைத்துயிலா? இரவில் நெடுநேரமாயிற்றோ?” என்று உரக்கக் கேட்டபடி  உள்ளே வந்து பீடத்தின் மேலிருந்த சுவடியை நோக்கி ”இன்றென்ன காவிய வழிபாடா?” என்றான்.  திருஷ்டத்யும்னன் புன்னகைத்து  “ஆம், உங்கள் இளைய யாதவரின் லீலைகள்தான்” என்றான்.

பீடத்தில் கிடந்த  சுவடிக்கட்டை  கையிலெடுத்துப் புரட்டிய சாத்யகி ”அஷ்டாத்யாயி இனிமையான சொல்தேர்வுக்காக புகழ்பெற்றது. இங்குவந்த நாட்களில் மணிநீலக்கோட்டத்தில் சுப்ரர் என்ற பண்டிதர் பன்னிரண்டுநாட்களாக இதை பாடம்சொன்னார். இளைய யாதவரின் எட்டு துணைவிகளுக்கும் இணையான இடம் கொடுக்கும் நூல் இது ஒன்றே என்பார்கள்” என்றான். திருஷ்டத்யும்னன் சாளரத்துக்கு முதுகுகாட்டி திரும்பிநின்று சிரித்து “ஆம், எட்டு திருமகள்களை இளையவர் மணந்ததாக காட்டுகிறார்” என்றான்.

சாத்யகி நினைவுகூர்பவனைப்போல ஏடுகளைப் புரட்டியபடி ”முதலில் ஆதிலட்சுமியாகிய விதர்ப்பினி.  அன்னலட்சுமி என்று அவரை சொல்கிறார்” என்றான். “அவரை நேரில் பார்த்தபோதும் அதையே எண்ணினேன். விளைந்த கதிர்போலிருந்தார்.” சாத்யகி நகைத்து ”அன்னலட்சுமி என்பது உண்மைதான். இன்று இந்நகரில் உணவறை அனைத்தும் விதர்ப்ப அரசியின் ஆணைப்படியே இயங்குகின்றன. அவர் வந்து தன் கைகளால் உணவளிப்பதை பெரும் கொடையென இம்மக்கள் எண்ணுகிறார்கள்” என்றபின் மேலும் சிரித்தபடி ”கவிஞர் சமைத்தளிக்கும் முகங்களை தங்களுக்கென சூடிக்கொள்வதே மானுடருக்கு எளிதானது” என்றான்.

“இளைய யாதவரேகூட அப்படித்தானோ?” என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி விழிமாறுபட்டு “இல்லை பாஞ்சாலரே, ஒவ்வொருமுறையும்  இக்கவிஞர் காணாத ஒன்றை நோக்கி  அவர் எழுவதை பார்க்கிறேன்” என்றான். “அவர் ஆடும் சிறுகுழவி போல. அதை நம்மால் வரையறுக்கவே முடியாது.  அவை செல்லும் உச்ச எல்லை என நாம் எண்ணுவதற்கு அடுத்தநிலையிலேயே எப்போதும் நாம் அவற்றை காணமுடியும். மைந்தரை சற்றும் புரிந்து கொள்ளாதவர் அன்னைதான் என்பார்கள்” என்றான்.

திருஷ்டத்யும்னன் “இரண்டாவது அரசி தனலட்சுமி என்கிறார். செல்வத்திருமகள் ஏன் எளிய யாதவர் குடியை நாடிவந்து பிறந்தார் என விளக்குவதற்கு எட்டு பாடல்கள் எழுதியிருக்கிறார்” என்றான். சாத்யகி “ஆம். எட்டும் இன்றும் எங்கள் குடிகளில் பாடப்படுகின்றன. கன்றுபெருகி கலம்நிறையச்செய்யும் பாடல்கள் அவை என்கிறார்கள்” என்றான். “ஆனால் அவர் சொல்வது எங்களுக்குள் உள்ள நம்பிக்கைதான். கால்நடைகளன்றி பிறிதெவையும் செல்வங்களே அல்ல என்கிறார். மானுடர் இப்புவியில் நுகரும்  பொருட்களில் காற்றும் நீரும் மண்ணும்  தெய்வங்களுக்கு உரியவை. மணியும் பொன்னும் மண்மகள் அளிப்பவை. எனவே அவற்றை எந்த மானுடனும் தெய்வங்களுக்கு கொடையளிக்க முடியாது.”

“மானுடன் இங்கு பெருக்கி எடுக்கும் பெருஞ்செல்வம் என்பது கால்நடைகள் மட்டுமே. கதிர்மணிகள் நாளவனாலும் நிலமகளாலும் இணைந்து சமைக்கப்படுபவை. கால்நடை மட்டுமே முற்றிலும் மானுடனால் வளர்த்து நிறைக்கப்படுவது. ஆகவேதான் தொன்று முதலே தெய்வங்களின் மானுடப் படையல் என்பது கன்றும் கால்நடைகளும் என வகுத்தனர். எண்ணி நோக்கும்போது உகந்ததென்றே தோன்றுகிறது அது” என்றான் சாத்யகி.

திருஷ்டத்யும்னன் “பிரபாகரர் யாதவ குலத்துதித்தவரோ?” என்றான். சிரித்தபடி சாத்யகி “யாதவரைவிட பசுக்களை விரும்புபவர் வேதியர் அல்லவா?” என்றதும் திருஷ்டத்யும்னன் வெடித்து நகைத்தான். சாத்யகி  நூலைப்புரட்டியபடி “மூன்றாவது அரசியை நேரில் கண்டவர்கள் அவர் கஜலட்சுமி என்பதை முற்றிலும் ஏற்றுக்கொள்வார்கள்” என்றான். சிரிப்பை அடக்கமுடியாமல் அருகே வந்தபடி “ஆம், உண்மை” என்று சிரித்தான் திருஷ்டத்யும்னன்.

“பிற அரசியரை நேரில் காணும்போது அவர்கள் பிரபாகரர் அளித்துள்ள பட்டங்களுக்கு முற்றிலும் உரியவர்கள் என்றே தோன்றுகிறது. அது நம் உள்ளங்களை இக்காவியங்கள் நெறிப்படுத்தியிருப்பதனால் இருக்கலாம். விழிகளை ஆள்வது உள்ளத்தில் ஓடும் மொழியின் பெருக்கு என்பார்கள்” என்றான் சாத்யகி. “அதையே நானும் எண்ணினேன்” என்றான் திருஷ்டத்யும்னன். “இந்நகர்போல காவியமாக ஆகிக்கொண்டே இருப்பது பிறிதொன்றில்லை. இளைய யாதவர் ஒன்றை சொல்லி முடிக்கையில் அது நேராகச் சென்று காவியத்தில் அமர்ந்துகொள்கிறது என்று படுகிறது.”

சாத்யகி சிரித்து “இங்கே வீதிகளில் விழிநட்டு நடக்கவேண்டும் என்பார்கள். விழுந்தால் காவியங்களில் சிக்கிக்கொள்வோம். அங்கிருந்து மீள்வது அரிது” என்றான். “நாம் அங்கே நம்மை ஆடியில் பார்த்துக்கொண்டால் திகைத்து அலறிவிடுவோம். நமக்கு கூருகிர்களும் வல்லெயிறுகளும் முளைத்திருக்கலாம். நமது பற்கள் வைரக்கற்களாக மாறியிருக்கலாம்.” திருஷ்டத்யும்னன் “நாமறியா கன்னியருக்கு நாம் கொழுநர்களாகி விட்டிருப்போம் இல்லையா?” என்றான். “விளையாட்டில்லை பாஞ்சாலரே, இங்குள்ள எவருக்கும் இறந்தகாலம் என்பது அவர்களின் நினைவு அல்ல. அந்நினைவாக மாறிப்படிந்திருக்கும் காவியங்களே” என்றான் சாத்யகி.

“ஒரு விந்தையான உணர்வாக அது உடனிருக்கிறது” என்றான் திருஷ்டத்யும்னன். “நான் காணும் இந்தப் பெருமாளிகைகள், சுழல்வடிவத்தெருக்கள், உச்சியில் எழுந்த பெருவாயில், அதன்காலடியில் விரிந்த பெருந்துறைமுகம்… இவையெல்லாம் உண்மையில் பருவடிவப்பொருட்கள்தானா? வெறும் மொழியாலமைந்தவையா? இவ்வழகுகள் கவிஞன் சமைத்த சொல்லணிகளா? சிலசமயம் சென்று தொட்டுப்பார்க்கத்தோன்றும். ஆம், இவை கல்லும் மண்ணும் மரமும் சுண்ணமும்தான் என்று சொல்லிக்கொள்வேன். மறுகணம் காவியத்திலும் கல்லும் மண்ணும் மரமும் சுண்ணமும் கடினமானவைதானே என நினைப்பேன்.”

சாத்யகி “விழித்தெழமுடியாத கனவில் வாழ்வதென்பது ஒரு நல்லூழ் பாஞ்சாலரே” என்றான். “அங்கே புறவுலகில் நிகழ்பவை அனைத்தும் மானுடர் அறியவொண்ணா பேரொழுங்கில் இயங்குகின்றன. ஆகவே அவை எப்போதும் ஒழுங்கற்றவை என்று உளம்மயங்கச் செய்கின்றன. ஒவ்வொன்றும் பொருளற்றிருக்கிறது. சிதறிக்கிடக்கிறது. இந்தக்காவியப்பெரும்பரப்பில் அனைத்தும் அணிகலனில் மலர்வரிகளும் மணிகளுமென சீராக பொருந்தியிருக்கின்றன. பொருளற்றவை என ஏதும் இங்கில்லை. இலக்கணத்தில் அமைந்த ஏழுபொருள்கொண்ட அழகிய சொற்களால் ஆன வானமும் மண்ணும் மாளிகைகளும் மானுடரும்…”

சாத்யகி “இதன் நாயகன் அவர். இவை அவரது ஆடல்கள். ஆனால் அவர் மட்டும் இக்காவியத்திற்கும் அப்பால் எங்கோ இருக்கிறார்” என்று தொடர்ந்தான். உடனே புன்னகைத்து “ஆனால் அதையும் முன்னரே காவியத்தில் சொல்லிவிட்டார்கள். மண்ணில் ஆழ அடிபரப்பி நின்றிருக்கும் மலைகளை நிமிர்ந்து நோக்கினால் அவை முகில்சூடி விண்ணின் பகுதியாக நின்றிருக்கக் காணலாம் என.” திருஷ்டத்யும்னன் புன்னகைசெய்தான்.

சற்றுநேரம் எண்ணங்களில் இருவரும் வழிதவறினர். சாத்யகி மீண்டும் சுவடிகளை எடுத்து  புரட்டியபடி ”இளையவரின் எட்டுத்துணைவியரில் ஒவ்வொருவருக்கும் ஒரு அத்தியாயம்… பெரும்பாலான நூல்களில் சத்தியபாமையும் ருக்மிணியுமன்றி பிறர் வெறும் பெயர்களாகவே எஞ்சுகிறார்கள். ஏனென்றால் யாதவர்களின் பாணர்களோ ஷத்ரியர்களின் சூதர்களோ பாடியவை அவற்றின் மூலவடிவங்கள். பிரபாகரர் ஒவ்வொருவரின் கதையையும் இணையாக அமைத்திருக்கிறார் ” என்றான்.

”நான்காவது அத்தியாயத்தில் காளிந்தி. யமுனைக்கரையின் மச்சகுலச் சிற்றரசர் சூரியனுக்கும் சரண்யுவுக்கும் பிறந்தவர். கனகை  என்று தன் அன்னையால் அழைக்கப்பட்டார். யமுனையின்  நிறம் கொண்டவராதலால் காளிந்தி என்றனர் குலப்பாடகர். யமுனைக் கரையிலிருந்த களிந்தகம் என்னும் சிறு நாணல்தீவில் ஏழு வருடங்கள் தவமிருந்து இளையவரை அடைந்தார். யமுனையிலெழுந்த மீன்கணம் போல் மைந்தர்கள் கொண்டவர் என்பதனால் அவரை சந்தானலட்சுமி என்கிறார்  பிரபாகரர். மைந்தர்செல்விக்கு சங்குசக்கரக்குறி அடிவயிற்றில் என்று நிமித்திகர் சொல்கிறார்கள்.”

“ஐந்தாமவர்  நக்னஜித்தி. கோசல நாட்டு மன்னர் நக்னஜித்துக்கு  முதல் மகள் என பிறந்தார். சத்யை என்றும் கௌசல்யை என்றும் பெயர் கொண்டவர். ஏழு பெருங்காளைகளை அடக்கி மணத்தன்னேற்புப் பந்தலில் இளைய யாதவரால் வெற்றி கொள்ளப்பட்டவர். இரு புயங்களிலும் சங்கும் சக்கரமும் அமைந்தவர்.  அவரை  விஜயலக்ஷ்மி என்கின்றார் பிரபாகரர்” என்று சாத்யகி வாசித்தான். நிமிர்ந்து “இங்கே வெற்றிக்கான வேள்விகளில் அமர்பவர் நக்னஜித்தியே…” என்றான்.

சுவடியைப்புரட்டி “ஆறாவது அரசி மித்ரவிந்தை. சுதத்தை என்றும் சைப்யை என்றும் பெயர் கொண்டவர். அவந்தி நாட்டு அரசர் ஜயசேனருக்கும் ரஜதிதேவிக்கும் பிறந்த மகள். தான்யலட்சுமி  என்று அவரை  பிரபாகரர் கொண்டாடுகிறார். இங்கு நிலம் ஒருக்கும் நாளிலும் முதற்கதிர் அறைசேர்க்கும் விழவிலும் கொலுவமர்பவர் அவரே. இரு கன்னங்களிலும் சங்குசக்கரம் அமைந்தவர்” என்றான் சாத்யகி. “மத்ரநாட்டு பிரஹத்சேனரின் மகள் லக்ஷ்மணை ஏழாவது அரசி. சாருஹாசினி என்று அவரை சூதர் வழிபடுகிறார்கள். வீணைக்கலை தேர்ந்த அவரை இங்கு வித்யாலட்சுமி என்பது மரபு. அனைத்து கலைவிழவுகளிலும் அன்னையே முதல்வி.”

சாத்யகி தொடர்ந்தான் “எட்டாவது அரசி கேகயநாட்டு மன்னர் திருஷ்டகேதுவுக்கும் சுருதகீர்த்திக்கும் மகளாகப் பிறந்தார். அன்னை கைகேயி  இரு தோள்களிலும் சங்குசக்கரம் அமைந்தவர். அவரை வீரலட்சுமி என்று அழைக்கிறார் பிரபாகரர். படைக்கலப்பூசனையிலும் பலிநிகழ்வுகளிலும் அன்னையே கொற்றவை என வந்து பீடம்கொள்கிறார்.” திருஷ்டத்யும்னன் “எட்டு அன்னையர். வாழும்போதே கோயில்கொண்டவர்கள்” என்றான். “காவியங்கள் அவர்களின் வண்ணநிழல்கள் என்று தோன்றுகிறது. காலம் சரியச்சரிய அவை நீண்டு வளர்கின்றன.”

சாத்யகி புன்னகைத்தான். திருஷ்டத்யும்னன் திரும்பி மீண்டும் தொலைகடலை நோக்கத்தொடங்கினான். ஏட்டுக்கட்டை மூடி அடுக்கிக்கட்டி பீடத்தில் வைத்தபடி சாத்யகி அவனை நோக்கி அமர்ந்திருந்தான். பின்னர் “இன்று தங்களை பாலைவனத்தின் புரவியாடல் ஒன்றுக்கு அழைத்துச் செல்லலாம் என்று வந்தேன்” என்றான்.

திருஷ்டத்யும்னன் எண்ணம் கலைந்து காற்றில் பறந்த குழலை சிறகாக விரித்து தோள் மேல் சரித்தபடி “இல்லை யாதவரே, இன்று பாஞ்சாலத்திற்கு திருமுகம் ஒன்று அனுப்பும் பணி உள்ளது“  என்றான். அவன் மேலே சொல்ல விழைகிறானா என்பதுபோல் சாத்யகி நோக்க “தந்தையின் திருமுகம் வந்துள்ளது. சல்யரின் மகளை நான் மணக்க முடியுமா என்று கேட்டிருக்கிறார்” என்றான். “சல்யரின் தூது தேடி வந்துள்ளது. பாஞ்சாலத்தின் தகுதிக்கு உகந்தது அவ்வுறவு. சல்யர்  பாண்டவர்களுக்கு மிக அணுக்கமானவர். பாஞ்சாலத்தின் படைக்காவலுக்கும் மத்ர நாட்டின் உதவி இன்று தேவை.”

சாத்யகி தலையசைத்தான்.  “அஸ்வத்தாமா அருகிருக்கும்வரை ஒரு கணமும் பாஞ்சாலம் பாதுகாப்புடன் இல்லை. அஸ்தினபுரியோ    தொலைவில் உள்ளது. மலை இறங்கி வரும் படைகளை எதிர்கொள்ளவும் அஸ்தினபுரியின் படைகளுக்கு பயிற்சி இல்லை” என்றான் திருஷ்டத்யும்னன். “மத்ரம் பால்ஹிக நாடுகளில் ஒன்று. பால்ஹிகத்தின் உறவென்பது அனைத்து மலைநாடுகளையும் அருகணையச்செய்யும். தந்தை சல்யரின் மகளை அவரே உவந்திருப்பாரென்றே எண்ணுகிறேன். மத்ரம்  மகள்கொடைக்கென தூது அனுப்புவதை எவ்வண்ணமோ தந்தை தூண்டியிருக்கக் கூடும்.”

சாத்யகி “அரசுசூழ்தலில் அது முறைதானே?” என்றான். திருஷ்டத்யும்னன் “பாஞ்சால அரசர்கள் தங்கள் குடிகளுக்குள்ளேயே மணம் கொள்ளவேண்டுமென்ற நெறி நெடுங்காலம் எங்களை தனிமைப்படுத்திவிட்டது. என் தமையன்கள் அனைவருமே எங்கள் ஐங்குடியிலேயே பெண் கொண்டிருக்கிறார்கள். நான் அதைக் கடந்து பெண் கொள்வதென்பது பாஞ்சாலம் தன் வாயிலொன்றை திறப்பது. இத்தருணத்தில் அது இன்றியமையாதது. பாஞ்சாலத்தின் மணிமுடி எனக்கில்லை என்பதனால் தகுதி உடைய பெருமன்னர் மகள்கள் எவரையும் நான் கோர முடியாது. மத்ர நாட்டு இளவரசியைப்போல் ஒரு பெண்ணை நான் அடைவது முற்றிலும் அரிது” என்றான்.

சாத்யகி “எனில் இத்தனை சிந்திக்க ஏதுள்ளது? மணம் கொள்ள சம்மதம் என்று செய்தி அனுப்ப வேண்டியதுதானே?” என்றான். “ஆம். எண்ணப்புகுந்தால் அத்தனை  சொல்நெறிகளும்  ஆம் என்ற செய்தியை நோக்கியே என்னை செலுத்துகின்றன. ஆனால்…” என்றான் திருஷ்டத்யும்னன். பின்பு “சில சமயம் காட்டில் நமது குதிரை தயங்கி நின்றுவிடும் யாதவரே. சுற்றி நாம் எதையும் காணமாட்டோம். புரவி அங்கே நிற்பதற்கு அடிப்படை என ஏதும் நம் விழிக்கோ சித்தத்திற்கோ சிக்காது. அதை தட்டி ஊக்குவோம். கடிந்து ஆணையிடுவோம். சினம்கொண்டு குதி முள்ளாலும் சவுக்காலும் புண்ணாக்குவோம். உடல் நடுங்கி விழி உருட்டி மூச்சு சீறி அசையாமல் நின்றுவிடும்” என்றான்.

“புரவிக் கலையறிந்தவர்கள் சொல்வார்கள், புரவி அறிந்ததை ஒருபோதும் மானுடன் அறியமுடியாது என்று. புரவி திரும்பாத திசைக்கு அதைச் செலுத்துவது இறப்புநோக்கி செல்வது.  இப்புள்ளியில் என் நெஞ்சு  நிலைத்துவிட்டதை உணர்கிறேன். சித்தச் சவுக்கால்  அடித்துக்கொண்டே இருக்கிறேன்.”

சாத்யகி சற்று தயங்கி பின் முடிவெடுத்து  “பாஞ்சாலரே, உங்கள் தோழனென நான் சொல்லக்கூடும் என்றால் உறுதியாக இதை உரைப்பேன். தாங்கள் ஒருபோதும்  அந்த விறலியை மணம்கொண்டு அவளை அரசுகட்டிலில் அமர்த்த முடியாது. அரசகுடியினர் அதை ஏற்கப்போவதில்லை. தங்களுக்கு அவைதோறும் அவமதிப்பே எஞ்சும்” என்றான். “அரசகுடிப்பிறந்தோர் அவர்களின் குடிக்கு கட்டுப்பட்டோர். எண்ணத்திலும் செயலிலும் தங்கள் மக்களின் நலம் மட்டுமே நாட வேண்டும்.  அதற்கு உகந்ததன்றி பிறிதெதையும் செய்யக்கூடாது. இத்தருணத்தில் அஸ்தினபுரியின் அவையில் உங்கள் இடம் என்ன என்பதும் மலையரசுகளில் உங்கள் தோழர்கள் எவரென்பதும் அன்றி எதுவுமே வினாவல்ல. எப்படி நோக்கினாலும் மத்ர நாட்டு இளவரசியை மணம் புரிவதன்றி பிறிதெதுவும் உகந்ததல்ல.”

“ஆம். அதை உணர்கிறேன்” என்றான் திருஷ்டத்யும்னன். “அவ்வாறன்று என்று சொல்ல ஒரு சொல்லேனும் என்னிடமில்லை. நான் கற்ற அனைத்துக்கல்வியும் அதையே ஆதரித்து நிற்கிறது. ஆயினும் யாதவரே, ஒரு வேளை இப்புரவி அஞ்சி நிற்பது பாஞ்சாலத்தின் நலன் கருதியோ என்னவோ? என் அறியாவிழைவை மட்டுமே இது சுட்டுகிறது என்று எப்படி கொள்ளமுடியும்? நாமறியாத எதிர்காலமெதையோ அது தன் நுண்ணுணர்வால் உய்த்திருக்கலாமல்லவா?” சற்றே சலிப்புடன் சாத்யகி “இது சொல் விளையாட்டு. இப்படி தன்னை  எவ்வகையிலும் நிறைவுறுத்திக் கொள்ள அறிவுடையோரால் முடியும்” என்றான்.

“இன்றே நான் தந்தைக்கு சொல்லனுப்ப வேண்டும்” என்றான் திருஷ்டத்யும்னன். “மிஞ்சினால் நாளை. அதற்குமேல் எனக்கு காலமில்லை. ஆனால் என் நெஞ்சு குழம்பி இருக்கிறது. இத்தருணத்தில் அச்சொல்லை அளிக்க என் அகம் துணியவில்லை. இன்னும் ஒரு மாதம், இம்முடிவை ஒத்திப்போடுவேனென்றால் என் அகம் சற்று தெளியும். ஒவ்வொன்றும் குழம்பி அலையும், ஒவ்வொன்றும் பிரிந்து அமையும். அதன் பின் இன்னும் தெளிவாக முடிவெடுக்க முடியும்” என்றான் திருஷ்டத்யும்னன். “தாங்கள் என்னிடம் கோருவதென்ன?” என்றான் சாத்யகி.

திருஷ்டத்யும்னன் “ஒரு மாதம் இம்மண நிகழ்வை ஒத்திப்போடுவதற்கான வலுவான ஒரு சொல். அதுமட்டுமே” என்றான். ”என் எளிய தயக்கங்களோ ஐயங்களோ எந்தையை நிறைவிக்காது. அவர் மேலும் சினம் கொள்ளவே வழி வகுக்கும். இன்று வந்த ஓலையிலிருந்தது அழைப்பு அல்ல. ஆணை. நான் இங்கு வந்த பணி முன்னரே முடிந்தும் விட்டது. மைந்தனென அவ்வாணையை ஏற்று நான் கிளம்பியாக வேண்டும்” என்றான்.

சாத்யகி “அதை நாம் இன்று மாலைக்குள் கண்டடைவோம். இவ்வகை இக்கட்டுகளுக்கு சற்று நேரமளிப்பதே உகந்தது“ என்றான். கைதூக்கி சோம்பல்முறித்து “பாஞ்சாலரே, நீர் வரவில்லை என்றால் நானும் புரவியாடலுக்கு செல்ல விரும்பவில்லை. இன்று சில அலுவல்பணிகளை முடிக்கலாமென எண்ணுகிறேன். விதர்ப்ப அரசி அரசுமன்று சூழும் விழவு நாளை நிகழவிருக்கிறது. மாளவரும் கூர்ஜரரும் சைப்யரும் மத்ரரும் தங்கள் முதன்மை அமைச்சர்களை தூதாக அனுப்பியிருக்கிறார்கள். ஏழு சிற்றரசர்கள் நேரில் வந்துள்ளனர். ஒவ்வொருவரையும் எதிர்கொண்டழைத்து முறைமை செய்து அவர்களுக்குரிய மாளிகைகளில் அமர்த்தும் பணியையே சென்ற இரண்டு நாட்களாக இரவும் பகலுமென இயற்றி வருகிறேன். சற்று உளம் திருப்பி ஓய்வு கொள்ளலாமென்று இந்தப்புரவி ஆடலை ஒருங்கமைத்தேன்” என்றான்.

“சிற்றரசர்கள் யார் யார் வந்துள்ளனர்?” என்றான் திருஷ்டத்யும்னன். “பன்னிரு சிற்றரசர்களால் சூழப்பட்டது யாதவக்குடி. அவர்களில் எழுவர் நேரில் வந்துள்ளனர். ஐவர் தூதுக்கு மறுமொழி அளிக்கவில்லை. அவர்கள் மகதத்திற்கு தூதனுப்பியுள்ளனரா என்று நம் ஒற்றர்கள் நுணுகி நோக்கிக் கொண்டிருக்கிறார்கள். இங்கு வராதவர் அனைவரும் எதிரிகளே என்பதுதான் அக்ரூரரின் நிலை. யாதவரோ போர் என ஒன்று நிகழ்வதற்கு முந்தையகணம் வரை எவருமே எதிரிகளல்ல என்ற எண்ணம் கொண்டவர். மந்தண அறையில் ஒவ்வொரு நாளும் சொல்லாடல் சுழன்று கொண்டிருக்கிறது” என்றான் சாத்யகி.

“மன்று சூழ்தலுக்கான உடனடித்தேவை என்ன?” என்றான் திருஷ்டத்யும்னன். ”ஒவ்வொரு நாளும் முகில் கறுத்துச் சூழ்வது போல மகதத்திற்கும் இளைய யாதவருக்குமான பூசல்கள் வலுப்பெற்று வருகின்றன. காசி நாட்டு எல்லைக்குள் யாதவர் படை நுழைந்ததும் அதற்கு முன் மகதத்தின் எல்லைகளை நோக்கி நமது படைகள் அணி நீக்கம் செய்ததும் ஜராசந்தரை சினம் கொள்ளவைத்துள்ளது. மதுராவிலிருந்து மதுவனம் வரைக்கும் அனைத்து யாதவ நகர்கள் அருகிலும் மகதத்தின் படை  புதிய நிலைகளாக வந்து அமைந்துள்ளது” சாத்யகி சொன்னான். “நாளெழும்போதெல்லாம் கடுமையான செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன.”

“ஓங்கிய கதாயுதத்துடன் நம் கோட்டை வாசலில் வந்து நின்றிருக்கிறார் ஜராசந்தர் என்று அக்ரூரர் சொல்கிறார்” என சாத்யகி தொடர்ந்தான். “எக்கணமும் போர் வெடிக்கும் என்கிறார்கள் அமைச்சர்கள். இளைய யாதவரோ எதையும் எண்ணாதவர் போல் தன்னியல்பில் இசையிலும் போர் விளையாட்டிலும் ஈடுபட்டிருக்கிறார். மூத்த யாதவருக்கு போரென்பது போர்முரசு முழங்கும் கணத்தில் தொடங்குவது மட்டுமே. துவாரகை அதை வெல்ல இப்புவியில் ஒரு நாடுண்டோ என எண்ணியுள்ளது. இந்நகரில் புரவியில் உலாவுகையில் பாரதவர்ஷமே  இதன் மேல் பகை கொண்டுள்ளது என்ற எண்ணமே எவரிடமும் இல்லை என்று தோன்றுகிறது.”

“அயல் வணிகர் இந்நாட்டின் அரசியலை முற்றும் அறிந்திராதவர். அயல் வணிகரிடமன்றி பிறரிடம் உரையாடாத இந்நகர் மக்களோ அவ்வரசியல் அறிந்தும் புரியமுடியாத உளம் கொண்டவர்கள். நடுவே வீரரும் அமைச்சரும் என சிலர் நின்று அலைமோதிக் கொண்டிருக்கிறோம்” என சாத்யகி தொடர்ந்தான். “இந்த மன்றுசூழ் நிகழ்வில் சிற்றரசரும் நட்பு நாட்டரசரும் அமர்வதேகூட வெறும் நடிப்புதான் என்று எனக்குத் தோன்றுகிறது. இங்கும் படைசூழ்தலும் அரசுசூழ்தலும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன  என்று மகதத்திற்கு காட்டவிரும்புகிறார் இளைய யாதவர். அந்நாடகத்தில் அக்ரூரரிலிருந்து இவ்வெல்லையில் நான் வரை அனைவரையும் நடிக்க வைக்கிறார்.”

சாத்யகி முகம் மாறுபட்டு சிரித்து “இவற்றுக்கு பொருளென ஒன்றுண்டு என்றால் அது யாதவ அரசியிடமிருந்து சியமந்தக மணியை விதர்ப்ப அரசிக்காக நீர் எப்படி கொண்டுவரப்போகிறீர் என்பதில்தான்” என்றான். திருஷ்டத்யும்னன் புன்னகைத்து “அந்த மணி தன் வழியை தானே உருவாக்கிக் கொள்ளும். எவர் முடியில் அது அமர வேண்டுமென அது அறிந்திருக்கும்” என்றான். “ஆம். இதுநாள்வரை அந்த மணி செய்த பயணங்களை எண்ணுகையில் வியப்புறுகிறேன்”  என்றான் சாத்யகி. “விதர்ப்ப அரசி அந்த மணியை நீங்கள் கொண்டுவந்து விட்டீர்கள் என்றே எண்ணுவது போல் உள்ளது. அவர் சேடியரும் பிறரும் சியமந்தகம் சூடி அரசி அமர்கையில் அணிய வேண்டிய பிற ஆடைகளையும் அணிகளையும் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.”

“எனது உளவுச்சேடி ஒருத்தி அதை சொன்னபோது முதலில் சற்றே நகையாடத்தோன்றினாலும் பிறகு தோன்றியது விதர்ப்பினி அரசு சூழ்தல் அறியாவிட்டாலும் மானுடரை அளவிடத்தெரிந்தவர் என. தங்களை மதிப்பிட்டே அவ்வெண்ணத்தை கொண்டிருக்கிறார்” என்றான் சாத்யகி. திருஷ்டத்யும்னன்  “யாதவரே, இன்று நானும் நான் என சொல்ல அஞ்சும் இடத்திற்கு வந்துள்ளேன். நீலச்சுடர் சூடிய அந்தக் கல் ஆடும் களத்தில் ஒரு கருவென நின்றிருப்பதாக உணர்கிறேன். நிகழ்வது ஆகுக!” என்றான்.

“எப்போது யாதவ அரசியை சந்திக்கவிருக்கிறீர்கள்?” என்றான் சாத்யகி. “இன்றிரவு அரசவைக்கு செல்வேன். அவை அமர்ந்து இரவுணவுக்குப்பின் தன் அரசுசூழ் சிற்றறையில் என்னைப் பார்க்க யாதவ அரசி நேரம் வகுத்து அளித்திருக்கிறார்” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். சிரித்தபடி “நலம் திகழ்க!” என்று சொல்லி சாத்யகி எழுந்து கொண்டான்.

முந்தைய கட்டுரைபாவனை சொல்வதன்றி…
அடுத்த கட்டுரைமதங்களின் தொகுப்புத்தன்மை