தமிழ் இலக்கியத் தோட்டத்தின் விருது

உருவாக்க காலம் முதலே கனடாவின் இலக்கியத்தேட்டம் வழங்கும் விருதுகள் மேல் எனக்கு ஆர்வமும் ஒருவகை பங்களிப்பும் இருந்துள்ளது. தமிழகத்தின் கலாச்சார அரசியல் மற்றும் சாதிய அரசியல் காரணமாக புறக்கணிக்கப்படும் இலக்கிய முன்னோடிகளைக் கவுரவிப்பதற்கான முயற்சியாக அவை இருக்கவேண்டுமென்பதே நான் ஆரம்பம் முதல் சொல்லிவந்தது. தமிழகம் செய்யத்தவறும் விஷயங்களையே அதுசெய்யவேண்டும். ஏனெனெறால் அது அதற்கான தகுதி கொண்டவர்களால் உருவாக்கப்பட்ட அமைப்பு.

நான் எண்ணியதற்கு எதிராக, தமிழகப் பல்கலைக்கழக சிற்றரசியலுக்குள் சென்று விழுந்தபோது அதை மிகக்கடுமையாக எதிர்த்தமைக்குக் காரணமும் இதுவே. நேரடியாக வெளிப்படையாக எதிர்ப்பதற்கு முன்னர் மென்மையாக உள்விவாதங்களில் என் எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறேன். அந்தக் கடுமையான எதிர்ப்பு அவ்வமைப்புக்கு நலம்தான் செய்தது என அதற்குள் இருப்பவர்கள் இன்று ஒப்புக்கொள்வார்கள் என்றே நினைக்கிறேன். இல்லையேல் பேராசிரியர்கள் ஒருவருக்கொருவர் கொடுத்துக்கொள்ளும் விருதுகளாக அவை தேய்ந்துபோயிருக்கக் கூடும்

சென்றவருடம் அம்பைக்கு அளிக்கப்பட்ட இயல் விருது எனக்கு மனநிறைவை அளித்தது. இவ்வருடம் ஐராவதம் மகாதேவனுக்கும் ஞானிக்கும் அளிக்கப்பட்ட விருது இயல் விருது என்னசெய்யவேண்டுமென நான் எண்ணினேனோ அதைச் செய்த விருது. அது மட்டுமே இன்று செய்யச்சாத்தியமான செயல் அது. அம்பை, ஞானி, ஐராவதம் ஆகிய மூவருமே இங்குள்ள எந்த அமைப்புக்களாலும் கௌரவிக்கப்படாதவர்கள். தங்கள் அளவில் சமரசமற்ற அறிவுச்செயல்பாட்டாளர்களாக அவர்கள் இருப்பதே அதற்கான காரணம். தமிழ்ச் சிந்தனைத்தளத்தில் அவர்களின் சாதனைகளை வரலாறு பதிவுசெய்யும்.

ஆகவே சென்னை இயல்விருது வழங்கும் விழாவில் ஐராவதம் மகாதேவனையும் ஞானியையும் அறிமுகம் செய்து பேசினேன். என்னைப்பொறுத்தவரை அது எனக்களிக்கப்பட்ட பெரும் கௌரவம். அதற்காகவே இயல் விருதுக்கு நான் கடமைப்பட்டவன். நான் இலக்கியத்தேட்டத்துக்கு அளித்த அந்த அங்கீகாரத்தை அவர்கள் எனக்களிக்கும்பொருட்டு இவ்வருட இலக்கிய தேட்ட விருதுகளில் புனைகதைக்கான விருது ’கொற்றவை’ நாவலுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. மகிழ்ச்சியூட்டும் அங்கீகாரம் அது.

என் படைப்புகளைப்பற்றி எனக்கு எப்போதுமே கர்வம் உண்டு. அதிலும் கொற்றவை தமிழின் எக்காலத்திலும் சிறந்த ஆக்கங்களில் ஒன்று. அதற்கு விருதளிப்பதன் மூலம் அந்த விருது தனக்கென ஒரு தரக்கட்டுப்பாட்டை தானே விதித்துக்கொள்கிறதென்றே நினைக்கிறேன். அப்படி எதிர்பார்க்கிறேன்

**

கனடிய தமிழ் இலக்கியத் தோட்டத்தின் விருது வழங்கும் விழா இந்த வருடம் இரு பிரிவுகளாக கொண்டாடப்பட்டது. இயல் விருது விழா சென்னையிலும் மற்றைய விருதுகளுக்கான விழா ரொறொன்ரோ பல்கலைக் கழக மண்டபத்திலும் நடைபெற்றன.

கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழிலக்கியத்தில் தீவிர சிந்தனையாளராகவும், கோட்பாட்டாளராகவும், திறனாய்வாளராகவும் இயங்கி வந்த திரு கோவை ஞானிக்கும், கல்வெட்டு ஆராய்ச்சிகள் மூலம் தமிழின் தொன்மையை உலகுக்கு உணர்த்திய திரு ஐராவதம் மகாதேவனுக்கும் இவ்வருடத்திய இயல் விருதுகள் வழங்கப்பட்டன.

ரொறொன்ரோ பல்கலைக் கழக மண்டபத்தில் 17 ஜூலை அன்று நடைபெற்ற விழாவில் ஏனைய விருதுகள் வழங்கப்பட்டன.

புனைவு விருது ஜெயமோகனுடைய கொற்றவை நாவலுக்கு வழங்கப்பட்டது.

அபுனைவு பிரிவில் இரு பரிசுகள் வழங்கப்பட்டன.

ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியத்துக்காக கலாநிதி நா.சுப்பிரமணியன் அவர்களுக்கும்
ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும் என்ற நூலை எழுதிய ஆ.சிவசுப்பிரமணியன்
அவர்களுக்கும் இந்தப் பரிசுகள் வழங்கப்பட்டன.

கவிதை விருது ‘ பூமியை வாசிக்கும் சிறுமி’ கவிதை தொகுப்புக்காக கவிஞர் சுகுமாரனுக்கு வழங்கப்பட்டது.

சுந்தர ராமசாமி நினைவாக வழங்கப்படும் கணிமை விருது இந்த வருடம் தமிழ் லினக்ஸ் கே.டி.ஈ குழுவினருக்கு வழங்கப்பட்டது.

மாணவர் பரிசுத்திட்டத்தின் கீழ் அவர் எழுதிய கட்டுரைக்காக கிருபாளினி கிருபராஜாவுக்கு பரிசு வழங்கப்பட்டது.

விழாவில் சிகாகோ பல்கலைக் கழக பேராசிரியர் சாஷ எபலிங் ( Sascha Ebeling) சிறப்புரை ஆற்றினார்.

ரொறொன்ரோ விருது விழா 17 ஜூலை 2010 வீடியோ கொழுவி:
http://www.youtube.com/watch?v=bst9BgEMrpM

**

இலக்கியத்தேட்டம் விருது பெற்ற என் ஆதர்ச கவிஞர் சுகுமாரனையும் என் மதிப்புக்குரிய ஆ.சிவசுப்ரமணியன் அவர்களையும் நா.சுப்ரமணியம் அவர்களையும் வாழ்த்துகிறேன்

http://www.jeyamohan.in/?p=4244 வேதசகாயமுராஇன் விமர்சனங்கள்
http://www.jeyamohan.in/?p=6223 உலக இலக்கியச்சிமிழ்

http://www.jeyamohan.in/?p=7409 அலைகளென்பவை

முந்தைய கட்டுரைகேரளா கபே
அடுத்த கட்டுரைதுவைதம்