கலாம் – கடிதங்கள்

2

அன்புள்ள ஜெ அவர்களுக்கு,

கலாமின் இறுதி ஊர்வலத்தைப் பார்த்தபோது  ஒவ்வொருவரும் அவர் செய்த‌ அரிய‌, சின்ன விஷயங்களை சொன்னபோது கண்களில் முட்டி அழுகையோடு கண்ணீர் வரக்காத்திருந்தன. இளகிய மனம் கொண்டவன் என்ற பிரஞ்ஞையால் அப்படி தோன்றுவதாக நினைத்திருந்தேன். ஆனால் சின்ன ஊர்களிலும் ஒவ்வொருவரும் ப்ளக்ஸ் வைத்து மெழுகுவர்த்தியை ஏற்றி அஞ்சலி செலுத்துவதும், குழந்தையிலிருந்து வயதானவர் வரை உள்ளவர்களின் கபடமற்ற அழுகையை பார்க்கும்போது இந்த துக்கம் எனக்கு மட்டுமல்ல என்று தோன்றியது.

எப்போதும் அடாவடி செய்யும் ஆட்டோ டிரைவர்கள்கூட அன்றைய தினம் சிலர் இலவசமாக ஓட்டியதாக தெரிகிறது. பல கடைகள் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கடைகள் மூடப்பட்டிருந்தன‌. பொதுவாக எப்படியாவது பணம் சம்பாதிக்க நினைக்கும் தமிழர்கள் அப்படி செய்பவர்கள் அல்ல‌, அன்றைய ஒரு தினம் விடுமுறை என்பது பெரிய ஆச்சரியம்தானே?. ஒரு 96 வயது மார்ஷல் ஒருவர் அவருக்கு இறுதி மரியாதை செலுத்துகிறார். இது என் கடமையல்லவா என்கிறார். கிட்டத்தட்ட இந்தியா முழுவதும் இது மாதிரி நடந்துள்ளது, தமிழர் என்பதால் தமிழகத்தில் சற்று அதிகமாக நடந்துள்ளது என நினைக்கிறேன்.

அவர் புத்தகத்தை எத்தனை பேர் படித்திருப்பார்கள், அதனால் எத்தனை பேர் ஊக்கம் பெற்றிருப்பார்கள். எத்தனை பேர் அவரின் கண்டுபிடிப்புகளை அறிந்திருப்பார்கள் எத்தனை பேர் அதன் மூலம் நேரடி பயனையாவது பெற்றிருப்பார்களா? அரசியல்வாதிகள்மூலம் இலவசங்கள், பதவிகள், வேலைவாய்ப்புகள், வேறுவகை லாபங்கள் என்று பெற்றிருக்கும் இந்த மக்கள் எதைக்கண்டு அவர்களுக்குக் கொடுக்காத மரியாதையை கலாமிற்கு கொடுக்க நினைக்கிறார்கள்?

அவரின் எளிமைக்கு இவ்வளவு பெரிய பரிசா? லெளகீக வாழ்வில் மட்டும் குறியாக இருக்கும் மனிதர்கள்கூட கலாம் பொருட்டு எதையாவது செய்யவேண்டும் என நினைக்கிறார்க‌ள். தொலைக்காட்சி, இணையம் மூலமாக பார்க்கும்போது இது அப்பட்டமாக தெரிகிறது இன்னொரு பத்தாண்டுகளில் மற்றொரு கலாமிற்கு இதைதான் செய்வார்கள் என நினைக்கிறேன். ஆனால் ஏன் இத்தனைபேர் உருகுகிறார்கள்?. ஏன் எதன் பொருட்டு இத்தனை செய்கிறார்கள் என்ற கேள்விதான் மீண்டும் மீண்டும் எழுகிறது. தனக்‌காக வாழாமல் நமக்காக வாழ்ந்தவன் என்கிற எண்ணம் அவர்களை வாட்டுகிறதா? கலாமை மற்றொரு காந்தியாக நினைக்கிறார்களா?

அன்புடன்,

கே.ஜே.அசோக்குமார்

Kjashokkumar.blogsopt.com

ஜெ
அரசியல் செய்திகளில் அம்மாவிற்கும் தங்கைக்கும் ஆர்வம் இல்லாமல் போய் பல நாட்களாகின்றன. அம்மாவிற்கு இவையெல்லாம் எப்போதும் இப்படி தான் நடக்கிறது என தோன்றிவிட்டது, தங்கையை பொறுத்த வரை பெத்த ரெண்டு வானர கூட்டத்த மேய்ச்சு, ஸ்கூலுக்கு அனுப்புறதே தினந்தோறும் நடக்கும் ஒரு நுண்ணரசியல் சதிராட்டம் என்ற நிலையில் யார் வந்தா என்ன, யார் வராட்டா என்ன என்ற ஒரு நினைப்பு தான்.

கடந்த வருடம் லோக் சபா தேர்தல் முடிவுகள் அறிவிக்கையில் வீட்டில் தான் இருந்தேன். எதிர்பாராத அரசியல் திருப்பத்தை முகநூல் நண்பர்களிடன் ஆன்லைனில் பேசி ஆர்வத்துடன் விவாதித்துக் கொண்டிருந்தேன், ஏனென்றால் வீட்டில் ஒரு சலனமும் இல்லை, முதல் ஆச்சரியத்திற்குப் பிறகு. மல்லிப் பொடி அரைக்கணும், தேங்காய் உரிக்கணும், உங்க அப்பா காலைல 11 மணிக்கு முன்னாடி வந்து சாப்பிட்டா எனக்கு அடுத்த வேலைய பாக்கலாம் என வேலை போய்க்கொண்டிருந்தது. அதற்கு மேல் அரசியலுக்கும், சமூக நிகழ்வுகளுக்கும் ஒரு சராசரி வீட்டில் உள்ளவர்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என நினைத்துக் கொண்டேன். அப்பா தினமும் நியூஸ் பார்ப்பதால் தினசரி செய்திதாள் வாங்குவதை நிறுத்தி ரொம்ப காலம் ஆகிவிட்டது. நான் ஊருக்கு போகும் போது எனக்காக வாங்கி வருவார். அவர் மேலோட்டமாக வாசித்து வைத்துவிடுவார்.

வாட்ஸ் அப் தங்கை என்னிடம் பிள்ளைகளுக்கு பல்லு விழுந்த போட்டோ, அவர்கள் legoவில் செய்த பொம்மைகள் செய்த படம், தினசரி அழுத்தத்தை போக்க என்னை வம்பிற்கிழுத்து நக்கல் emoticons அனுப்புவதற்கான ஒரு சேவை மட்டுமே என உபயோகித்து வருகிறாள், கடந்த இரு வருடங்களாக.

நேற்று காலை வேலைக்கு வந்தவுடன் அவளிடமிருந்து திரு.அப்துல் கலாம் காலமான தொலைக்காட்சி அவசர செய்தி அலைபேசியில் எடுக்கப்பட்ட படமாக வந்திருந்தது. அந்த படத்தை பார்த்தவுடன் இனம் புரியாத தனிமை கொஞ்ச நேரம் மனதை அப்பிக் கொண்டது. பிறகு தான் அதைக் குறித்து அவள் எதுவும் பேசவில்லை என்றும் உறைத்தது. அந்த படம் மட்டும் தான், வேறு ஒரு வார்த்தை அவளிடமிருந்து வரவில்லை. ஒரு அவசர பகிர்தல், பிறகு மௌனம் என்று தோன்றியது. நான் இருந்த மனநிலையில் அப்படி ஒரு அதீதமான நோக்கத்தை அவளின் செய்கைக்கு கொடுத்தேனா என தெரியவில்லை. ஆனால் இது முதல் முறை என என்னால் சொல்ல முடியும்.

அன்றைய தினம் வேலையில் ஓடி, இரவு அம்மாவை தொலைபேசியில் அழைத்தேன். அந்த நேரத்தில் திரு கலாம் மனதில் ஓரத்தில் போய்விட்டார். முகநூலை திறக்கும் போது பார்க்கும் நண்பர்களின் பதிவுகளின் மூலம் நியாபகப்படுத்தப்பட்டு கொண்டிருந்தார் ஆனால் விலகிக் கொண்டும் இருந்தார். அம்மாவிற்கு உடல்நிலை தற்காலிகமாக சரியில்லை. இப்போ எப்படி இருக்கு உடம்பு என நான் கேட்டவுடன் அவரிடமிருந்து வந்த பதில், “பெரியவர் போயிட்டாருடா”. எனக்கு அந்த வார்த்தையிலிருந்து நூலை பிடித்து புரிந்து கொள்ள ஒரு கணம் எடுத்தது. இதுவரை அரசியல் செய்திகளை, தலைவர்களை குறிக்கையில் ஒரு அக்கறையின்மை இன்றி அம்மா பேசியதில்லை (ராஜீவ் காந்தியை தவிர, அது என்றும் நிலைத்திருக்கும் குற்றவுணர்வு என தோன்றுவதுண்டு…) திரு. கலாம் எப்படி காலமானார் என எனக்கு தெரியாததை சொல்லி கொடுப்பதை போல செய்திகளை சொன்னார்கள். சமீபத்தில் குடும்பத்தின் மூத்த பெரியவர் ஒருவர் இறந்து விட்டார். தலை சீவிக் கொண்டிருக்கும் போது அப்படியே உட்கார்ந்து உயிர் பிரிந்துவிட்டது. அம்மாவிற்கு அவர் தன்னுடைய அப்பா ஸ்தானத்தில் இருந்தவர் எனலாம். அவருடைய இறப்பையும், திரு. அப்துல் கலாமின் இறப்பையும் ஒன்றின் அடுத்து ஒன்றாக வைத்து பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் அளவில் நல்ல விதத்தில் இருவரும் போய் சேர்ந்த்தார்கள். தான் நம்பும் ஒரு தெய்வம் தன் இருப்பை நிறுவிச் சென்றது போன்ற ஒரு நிகழ்தல். பெரியவர் வழியாக இன்னொரு பெரியவரிடம் மனதளவில் அணுகி சென்ற ஒரு தருணம்.

திரு. அப்துல் கலாம் ஜனாதிபதியாக பதவிக்காலத்தை முடித்த பிறகு அவரைக் குறித்த எந்த செய்தியும், வீட்டின் தினசரி அவசரகதியின் திரையை கிழித்து உள்ளே வந்ததாக எனக்கு நினைவில்லை. மேன்மக்களை குறித்து செய்திகள் வந்தாலும் சரி, பேசப்படாவிட்டாலும் சரி ஏதோ ஒரு வழியில் அவர்களை மனிதர்கள் உணர்ந்து கொண்டேயிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அவர்களின் இழப்பை தங்களுடைய இழப்பாக ஆக்கிக் கொள்கிறார்கள்.

அம்மா இன்னொன்றையும் சொன்னார்கள்.அப்பா காலையில் கடைக்கு சென்று செய்தித்தாளை வாங்கி முழுவதும் வாசித்துக் கொண்டிருந்தார்.

முத்துக்கிருஷ்ணன்

அன்புள்ள ஜெ,

கலாம் பற்றிய கேள்விக்கு தங்களின் பதில் பற்றி இக்கடிதம். நீங்கள் சொன்ன பதிலையே மிகவும் சுருக்கமாக நண்பர்களுடன் விவாதித்தபோது சொன்னேன்.
அவர் மீது எனக்கும் பல விமர்சனங்கள் உண்டுதான் என்றாலும்.

எல்லாவற்றையும் விட ஒரு சாதாரண எளிய குடும்பத்தில் பிறந்து தன் கல்வியையும் உழைப்பையும் மட்டுமே மூலதனமாக கொண்டு தன் குடும்பம் சுற்றம் தவிர ஒட்டு மொத்த ஜனத்தொகைக்கும் பெரும் பங்களிப்பாற்றிய சரித்திர நாயகராக உயர்ந்த ஆளுமை அவர். சமகால இந்திய வரலாற்றில் இது போன்ற முன்னுதாரணங்கள் மிகவும் குறைவே.

லஞ்சமும் வசதி மிக்க பெரிய இடத்து பையன்கள் மட்டுமே படிக்க முடியும் என்றும் ஆகிவிட்ட துறைகள் மிகுந்த கல்விச்சூழலில் அவரின் எளிய பின்புலமும் கல்வியும் அவைகளைக்கொண்டு அவர் செய்த சாதனைகளும் பெரும் வரலாற்று உதாரணங்களாகி நிற்கின்றன. அவ்வகையில் எத்தனையோ எதிர்கால மாணவர்களுக்கு பெரும் முன்னுதாரனமாக, மானசீகமான வழிகாட்டியாக என்றுமே அவர் இருப்பார்.

(பொறியியலாளர்கள்) விஞ்ஞானிகளுடன் அன்றாடமும் புழங்குபவன் என்ற அடிப்படையின் என்னுடைய அவதானங்கள் சிலவற்றை சொல்லலாம் என நினைக்கிறேன்.
விஞ்ஞானிகளும் சாதாரண மனிதர்களே அவர்களின் பொது அறிவு சாமான்ய மனிதர்களைப்போன்றதே, அவர்கள் ஈடுபட்டுள்ள குறிப்பிட்ட துறையைத்தவிர.

தட்டை தொலைக்காட்சிக்கு பழகாத நவீன கைபேசிகளை இயக்கத்தெரியாத முன்னோடியான விஞ்ஞானிகள் சிலரை நான் அறிவேன். ஏன் கணினியைக்கூட இயக்கத்தெரியாது என்பதால் என்னுடைய பேராசிரியர் ஒருவருக்கு கணினியில் தட்டச்சு செய்வது மின்னஞ்சல் அனுப்புவதற்கென்றே முழுநேரமாக பணியாற்றும் செயலாளர் ஒருவர் இருந்தார்.

இலக்கிய ஞானமும் கலை நுண்ணுர்வும் ஒரு விஞ்ஞானிக்கு இருக்கலாமா, என்றால் நிச்சயமாக இருக்கலாம்தான்.
ஆனால் முழுநேர தொழில்முறை விஞ்ஞானி ஒருவர் சகல கலைகளிலும் வித்தகனாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்து நியாமல்லவே?

தொலைக்காட்சி நாடகங்கள் பார்த்து உலக அரசியல் உலக இலக்கியம் பயின்று சகலகலா வல்லவனாக இல்லாமல், தங்கள் ஆளுமையை ஒடுக்கி குறுக்கி ஒரு துறவியைப்போல ஒரு சிறு துறையில் மட்டுமே கவனத்தை செலுத்த முடிந்ததால் மட்டுமேதான் பல மேதைகளால் அவர்கள் துறையின் ஆழ அகலங்களுக்குள் சென்று சாதிக்க முடிந்திருக்கிறது என்பதை பெரும்பாலும் மறந்து விடுகிறோம்.

அணு ஆராய்ச்சி, ராக்கெட் போன்ற ராணுவ முக்கியத்துவமில்லாத துறைகளிலும் ஆராய்ச்சியாளனாக இருப்பது பொருளாதார ரீதியாக தற்கொலைக்கு நிகரானது. ஆராய்ச்சியாளனாக பெரும் ஊதியங்களை எதிர்பார்ப்பது சாத்தியமில்லை. பி.எச்டி.காம் வலைப்பக்கத்தில் (http://phdcomics.com/comics.php) பல சிரிப்புத்துணுக்குகள் இதைப்பற்றி உண்டு.

குறிப்பாக இந்தியாவில் மிகவும் கடினமானதாக கருதப்படும் ஐஏஎஸ் போட்டித்தேர்வுகளை விடவும் சிரமமானது மத்திய அரசின் CSIR நிறுவனம் நடத்தும் ஆராய்ச்சி உதவித்தொகைக்கு தகுதி பெறுவதற்கான தேர்வு, என்று பரவலான கருத்து உண்டு. பின்னைய தேர்வுக்காக தயாராகி முயன்று முடியாமல் தோற்றபின் ஐஏஎஸ் போட்டித்தேர்வுகளில் வென்று ஐஏஎஸ் அதிகாரிகளாக பணியாற்றும் நண்பர்கள் எனக்கு உண்டு.

ஆனால் இந்தத்தேர்வில் வென்ற மாணவர்களுக்கு அளிக்கப்படும் உதவித்தொகை என்பது சொற்ப ஆயிரங்களே. பிரதமர், கல்வி அமைச்சர் போன்ற பிரபலங்களுக்கு தொடர்ந்து பல கடிதங்கள் எழுதி பல ஆண்டுகள் முயன்று போராடிய பிறகு சமீப ஆண்டுகளாகத்தான் இந்த உதவித்தொகை ஓரளவு உயர்த்தப்பட்டுள்ளது. சமீப ஆண்டுகளாக இத்தேர்வு சற்று எளிதாக்கப்பட்டதுடன் மொத்த உதவித்தொகை பெறும் மாணவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வுக்கு கலாம் அவர்கள் ஆற்றிய பங்கு மிகவும் முக்கியமானது.

ஒரே வாரத்தில் பல ஒலிம்பிக் தங்கப்பதங்கள் வென்ற மைக்கேல் பெல்ப்ஸ் எனும் அசகாய நீச்சல் வீரருக்கு பரிசுமேடையில் நிற்கும்போது பாவம்.. தேசியகீதம் நினைவுக்கு வரவில்லையா, அல்லது தெரியவில்லையா, தெரியவில்லை. வாயை மட்டும் சும்மா அசைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்தார். இதை கேலி செய்து சிரித்த தோழியிடம் ”அவன் எட்டு தங்கப்பதக்கங்கள் வாங்கியவன், தேசியகீதம் தெரியாவிட்டால் பரவாயில்லை” என்று கோபமாக ஒரு நண்பன் பதில் சொன்னது நினைவுக்கு வருகிறது.

ஏரிகள் வெட்டி, சாலைகள் அமைத்து, சாலையோரங்களில் மரங்களை நட்டு என்று எல்லா வகைகளிலும் மக்களுக்கு சேவை செய்வது அசோகச்சக்கரவர்த்தி போன்ற மாமன்னர்களுக்கு வேண்டுமானால் சாத்தியப்படலாம்.

எளிய மீனவக்குடும்பத்தில் பிறந்த ஒரு ஏழை மாணவனாக கலாம் சென்ற உயரமும் சாதித்திருப்பவைகளும் சாதனைகளே. சில விஷயங்களில் அவரின் பிற்போக்குத்தனம், உறுதியின்மை, கலைக்குறைபாடுகள் இவற்றை ஒப்பிட, உழைப்பால் உயர்ந்த மாமனிதனாக, அவர் துறையின் சாதனையாளராக, கருணையும் நல்லெண்ணமும் கொண்ட எளியவராக, அப்பழுக்கற்ற தலைவராக, கர்மயோகியாக அவர் வாழ்க்கை என்றுமே முன்னுதாரணமான ஒன்று.

வேணு தயாநிதி

முந்தைய கட்டுரைகலாம் பற்றி சுஜாதா
அடுத்த கட்டுரைஅஞ்சலி : சசிப்பெருமாள்