கலாம்- கேள்விகள்

index

அன்புள்ள சார்

மேதகு அப்துல் கலாம் அவர்கள் இறந்த்தும் அனைத்து சமூக வலைதளங்களிலும் அவர் குறித்த அஞ்சலி செய்திக்குறிப்புகள் வ(ளர்)ந்த வண்ணம் இருக்கின்றன.

முதலில் என் நண்பர் (மருத்துவர்) ஒருவரே வேறு விதமாக ஆரம்பித்தார்.. அவர் நகராட்சி பள்ளிகளுக்கு என்ன செய்தார் என.. அப்போதிருந்த மனநிலையில் அவரை எதிர்த்து பேச என்னிடம் ஏராளமான தகவல்கள் இருந்தன. அவரை எள்ளி நகையாடியாயிற்று.. அதன்பின் சாரு எழுதிய பதிவை ரகு கொடுத்தான். சாரு அவரை ரஜினியுடன் ஒப்பிட்டிருந்தார். விவேக்கையும் வைரமுத்துவையும் அவர் விதந்தோதியதையும் கிண்டலடித்திருந்தார். கிரீஸ் நாடு தடுமாறும் வேளையில் யூரோவை புகழ்ந்திருந்தார். இதெல்லாம் எனக்கு போதுமானதாக இருந்தது வலைத்தளத்தில் ஓட்டுவதற்கு. ஓட்டி முடிந்து இறுதியில் எனக்கு ஆரம்பத்தில் என் நண்பர் கேட்ட கேள்வியின் சாரம் புரிந்திருந்த்து. ஆகவே என் குழப்பத்திற்கு உங்களிடம் தெளிவு கிடைக்கும் என இதை எழுதுகிறேன்.

கலாம் அவர்கள் சிறந்த விஞ்ஞானி. அணு ஆயுதம் மூலமும் செயற்கைக்கோள் மூலமும் இந்தியாவின் வளர்ச்சிக்கும் சர்வதேச அளவில் நமது மரியாதைக்கும் காரணமானவர். அப்பொழுதும் அதன் பின் குடியரசுதலைவராக இருந்த போதும் பாரதரத்னாவான போதும் சற்றும் கர்வம் கொள்ளாத எளிமையான மனிதர். யாரையும் எடுத்தெறிந்து கூடப்பேசாத அளவிற்கு சாந்தமானவர் என்பதே அவரைப்பற்றி படித்தும் பழகியவர்களிடம் கேட்டும் தெரிந்து கொண்டது. அவர் அரசியல்வாதியாகி மக்களின் தலைவரான போதும் அவர் மீது எந்தவித குற்றச்சாட்டும் வந்தில்லை. அவர் வகித்த பதவிகளில் அவர்முன் இருந்தவர்கள் செய்த சாதனைகளைவிட இவர் செய்த்து அதிகம்.

அணுஆயுத சாதனைக்கு பிறகான பொருளாதார தடை காலங்களில் வல்லரசு கனவை விதித்து மக்களிடம் குறையத்துவங்கிய நாட்டுப்பற்றை தூக்கி நிறுத்தியதில் (குறிப்பாக மாணவர்களிடம்) இவர் பங்கு என்றும் போற்றுதலுக்குரியது.

இவரது எளிமை அறிவு கனவு போன்றவை மக்களிடம் இவரது செல்வாக்கை உயர்த்தியதால் பத்திரிக்கைகளும் இவரை தூக்கிப்பிடிக்க துவங்கின. இவர் ரோல்மாடலானார். தன் பிள்ளை காந்தியையோ அல்லது காமராஜரையோ ரோல்மாடலாக கொள்ளாமல் விஞ்ஞானியை கொண்டதில் பெற்றவர்களுக்கு பெருமையாகத்தானே இருக்கும். அவர்கள் விரும்புவது அதைத்தானே.. இதை நன்றாக புரிந்து கொண்ட பல்கலைகழகங்களும் அவரை பட்டமளிப்புக்கும் சிறப்புரைகளுக்கும் அழைக்க இவரும் மாணவர்களொடு அன்புடன் உரையாட அனைத்தும் அடுத்தடுத்த கல்வியாண்டுகளில் B.E சேர்க்கையில பணமாக அறுவடை செய்யப்பட்டன. இன்றைக்கு சீரியல்களுக்கு நடுவே இஞ்சினியரிங் காலேஜ் விளம்பரங்கள் வருகின்றன் அவைகளில் இவர் நிழற்படமும் தவறாது இடம்பெருகின்றன.

இவ்வாறு இவர் அறியாமலே பெரும் கல்வி வியாபாரத்துக்கும் பெற்றோர்களின் பேராசைக்கும் பலியாகிவிட்டாரோ. நவீனத்துவத்தின் முகமாக இவர் நிறுத்தப்படுகிறார். ஆகவே பின்நவீனத்துவ்வாதிகள் இவரை விமர்சிக்கிறார்களோ..

ரஜினியும் இப்படி எளிமையாகவே இருக்கிறார். பத்மஸ்ரீ விவேக்கும் வைரமுத்துவம் விதந்தோதுகிறார்கள். சைவ உணவே உண்கிறார். ரோல்மாடல்..ஆனால் அவரது பெயரைச்சொல்லி பத்திரிக்கைகளிலும் சினிமாவிலும் பெரும் வியாபாரம் ஆனால் அவர் சிறு குறு தயாரிப்புகளில் நடிக்கவே முடியாது… அதைப்போலவே இவரும் அரசுப்பள்ளிகளின் நிலைக்கு ஒன்றும் செய்யமுடியாத கையறு நிலையில் இருந்துவிட்டாரோ என ஐயம் ஏற்படுகிறது. பார்த்தீர்களா..சாரு எழுதியதும் புரிந்துவிட்டது..

நான் என்றும் போற்றுகிற மனிதர் கலாம் அவர்கள். ஆகவே இந்த குழப்பம் என்னை இரு நாட்களாய் படுத்துகிறது. கேள்வியை ஒருவாறு கேட்டுவிட்டேன் என நினைக்கிறேன். இதுவே சற்று ஆறுதலாய் இருக்கிறது.

அன்புடன்

R. காளிப்ரசாத்

அன்புள்ள காளிப்பிரசாத்

நீங்கள் அனுப்பியது கடிதம் அல்ல கட்டுரை.

உங்கள் கேள்விகள் வெறும் குழப்ங்கள். கலாம் நீங்கள் நினைப்பதை ஏன் சொல்லவில்லை என்ற வரியாக மட்டுமே அதைப்புரிந்துகொள்ளமுடியும்

பொதுவாகச் சூழலில் எழும் கேள்விகளை இப்படித் தொகுத்துக்கொள்கிறேன். இவற்றுக்குப் பதில் சொல்வது என் வேலை அல்ல, அதிலும் இப்போதிருக்கும் நிலையில் என நினைத்தேன். ஆனால் நீங்கள் சொல்புதிது வட்டத்தைச் சார்ந்தவர் . உங்களுக்கே இவ்வினாக்கள் என்பதனால் இதை எழுதுகிறேன்

1. கலாம் அறிவியலாளர் அல்ல. பொறியியலாளர். அவர் பெரிதாக எதையும் கண்டுபிடிக்கவில்லை. அவருக்கு உலக அறிவியலாளர்கள் நடுவே பெரிய இடம் இல்லை.

2 கலாம் அரசியல்- சமூகப்பிரச்சினைகளில் கருத்துச் சொல்லவில்லை. அரசு சார்பாளராகவே இருந்தார்.

3 கலாம் கல்வியை தனியார்மயமாக்குவது போன்றவற்றில் எதிர்க்கருத்து கொண்டிருக்கவில்லை. கல்விவணிகர்களின் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்

4 கலாம் இலக்கிய அறிவோ நுண்ணுணர்வோ கொண்டவராக இருக்கவில்லை. இலக்கியம், கலைகள், தத்துவசிந்தனை ஆகியவை பற்றி தட்டையான பார்வை கொண்டிருந்தார்.

5 கலாம் இந்தியாவை ராணுவமயமாக்குவதில் ஈடுபட்டிருந்தார். ராக்கெட் தொழில்நுட்பம் பயனற்ற போர்வெறியை உண்டுபண்ணுவது. அவரது அறிவு அமைதிப்பணிகளில் பயன்படவில்லை. ராக்கெட் தொழில்நுட்பத்துக்குச் செலவிட்ட தொகைக்கு ரோடு போட்டிருக்கலாம்

6 கலாம் இஸ்லாமியராக இஸ்லாமிய அடையாளத்துடன் இஸ்லாமைப் பிரச்சாரம் செய்யவில்லை. இந்துச்சடங்குகளில் கலந்துகொண்டார். இந்துத் துறவிகளை மதித்தார். ஆகவே அவர் இஸ்லாமியப்பெயர்தாங்கி மட்டுமே.

இவ்வளவுதானே?

*

1 கலாம் தன்னை ஓர் அறிவியல் மேதையாக என்றுமே சொல்லிக்கொண்டதில்லை. அவர் முதன்மையான கண்டுபிடிப்பாளார் அல்ல. அறிவியல்கோட்பாட்டாளரும் அல்ல. அப்படி அவரை எவரும் சொல்லவும் இல்லை.

ஆனால் அவர் அறிவியல் கற்று அறிவியலில் ஆய்வு செய்து அதில் சில சாதனைகளை நிகழ்த்தியவர். அவரை அறிவியலாளர் [சயன்டிஸ்ட் ] என்று சொல்லக்கூடாதென்றால் பிறகு யார் அறிவியலாளர்? அவர் அறிவியலாளர் அல்ல என்று சொல்பவர்களுக்கிருக்கும் தகுதி என்ன?

தொழில்நுட்பநிபுணர் [டெக்னோகிராட்] என்றால் அறிவியலின் தொழில்நுட்பத்தை நிர்வாகத்திலும் வணிகத்திலும் கையாளத்தெரிந்தவர் என்றுதான் பொருள். கலாம் அறிவியலில் அரைநூற்றாண்டுக்காலம் ஆய்வுகள் செய்தவர், தேவையான பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர். விளைவுகளை காட்டியவர். அவர் செய்த ஆய்வுகள், அவரது ஆய்வேடுகள் அனைத்துமே எழுத்தில் கிடைக்கின்றன. அவர் அறிவியலாளர் அல்ல, தொழில்நுட்பநிபுணர் மட்டுமே என்று சொல்வது சிறுமைப்படுத்தும் நோக்குடன் திட்டமிட்டு செய்யப்படும் அவதூறு மட்டுமே.

கலாம் தனக்கென ஏற்றுக்கொண்ட அறிவியல்துறையும் ஆய்வுமுறையும் முற்றிலும் வேறுவகையானவை. அவர் எளிதாக இந்தியாவை விட்டுச்சென்று ஏதேனும் மேலைநாட்டு ஆய்வகத்தில் கொழுத்த ஊதியத்தில் பணியாற்றி அந்த ஆய்வகங்கள் அங்குள்ள அரசுகளின் , தொழில்நிறுவனங்களின் ரகசியத் திட்டங்களுக்கு ஏற்பச் செய்யும் ஆய்வுகளில் கூட்டாகப் பங்கெடுத்து ஒருவேளை நோபல் பரிசு கூடப் பெற்றிருக்கலாம். நாம் அப்போது அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடியிருப்போம்.

கலாம் இந்தியாவின் சவலைக்குழந்தையாக இருந்த ராக்கெட் தொழில்நுட்பத்துறையில் புகுந்தார். இங்குள்ள தேவைகளுக்கு ஏற்ப இருக்கும் நிதிவாய்ப்புகளைக்கொண்டு பல்லாண்டுக்காலம் பணியாற்றினார். தொடர்ந்த முயற்சியின் விளைவாக அவர் எண்ணியவற்றை நிகழ்த்தினார்.

இங்குள்ள அறிவியல் -தொழில்நுட்பத் தேவை என்பது புதியவற்றைக் கண்டுபிடிப்பது அல்ல. நமக்கு மறைக்கப்பட்டதைக் கண்டுபிடிப்பது. அது சில மூடர்கள் எழுதியது போல ரிவர்ஸ் எஞ்சீனியரிங் அல்ல. ஏனென்றால் கண்டுபிடிக்கப்பட்ட பொருளே நம்மிடம் இல்லை, அதை திருப்பிச்செய்ய. அப்பொருள் என்ன என்று ஊகித்து அதன் சாத்தியங்களை ஊகித்து அதை மீண்டும் புதியதாகக் கண்டுபிடிக்கும் செயல் அது.

அது எல்லாவகையிலும் அறிவியலே. ஆனால் அறிவியலின் மூலக்கண்டுபிடிப்புகளுக்கு உள்ள மதிப்பு அதற்கு இல்லை. அதைக் கண்டுபிடித்தமைக்காக அவர்கள் அங்கீகரிக்கப்படுவதில்லை.

கலாம் போன்றவர்கள் அவ்வகையில் பெரிய தியாகிகள். அவர்கள் செய்வதும் மகத்தான அறிவியல் ஆய்வே. ஆனால் அறிவியலாளர்களாக கொண்டாடப்பட மாட்டார்கள். தொடர்ந்து மேலை ஊடகங்களால் மட்டம் தட்டப்படுவார்கள். நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் அதைச்செய்தார் என்பதனால்தான் கலாம் சிறுமைசெய்யப்படுகிறார்

கலாமுக்கு முன்னால் இத்துறைகளில் பணியாற்றிய பல முன்னோடி மேதைகள் கொல்லப்பட்டிருக்கின்றனர். டாக்டர் ஹோமி பாபா, ஹோமிசேத்னா விக்ரம் சாராபாய் போன்றவர்களின் மர்மமான இறப்புகள் நாமறிந்ததே. மரணத்தின் நிழலில் இந்தப் பணியை ஆற்றியிருக்கிறார். அதன்பொருட்டே அவர் மணம்புரிந்துகொள்ளவும் இல்லை. வெளிநாட்டுக் கருத்தரங்குகள், ஊடகப்புகழ்கள் எதையுமே நாடாமல் ஒரு கர்மயோகி போல இப்பணியை ஆற்றியிருக்கிறார். சிறுமதியாளர்களால் அவமதிக்கப்பட வேறென்ன தேவை?

அவரது கண்டுபிடிப்புகள் பலவற்றை அவரால் வெளியே சொல்லக்கூட முடியாது. ஆயினும் பலவற்றை எப்படி மீண்டும் புதிதாகக் கண்டுபிடித்தோம் என அவர் விரிவாகவே எழுதியிருக்கிறார். அவற்றை படித்துப்பார்க்கக்கூட முடியாதவர்கள் நம்மிடம் பேசும் அறிவுஜீவிகள்.

2. கலாம் தான் யாரென தெளிவாக உணர்ந்து அதை எப்போதும் முன்வைத்தவர். அவர் ஓர் அறிவியலாளர். அவரது பணி தொழில்நுட்பம். அதற்கு அப்பால் எந்த பிரச்சினையிலும் சிக்கி நேரத்தை வீணடிப்பவர் அல்ல. எது உன் இலக்கோ அதற்கு அப்பால் செல்லவேண்டாம் என்றே மீண்டும் மீண்டும் சொல்கிறார். அவர் அரசியலுக்கு வரவில்லை. அரசியல்வாதியாகச் செயல்படவில்லை. ஆகவே எதிலுமே அவர் கருத்துச் சொன்னதில்லை

பெருநிதியும் அமைப்பும் தேவைப்படும் அறிவியல்துறை அவருடையது. ஆகவே அவர் அரசுக்கு எப்போதும் அணுக்கமானவராகவே இருக்கமுடியும். அது ஐன்ஸ்டீனாக இருந்தாலும் சரி, அப்படித்தான் இருந்தாகவேண்டும். அவர் அத்தனை அரசுகளுடனும் இணக்கம் கொண்டவராக, அரசியலைக்கொண்டு தன் இலக்கை அடைபவராகவே இருந்தார். ஆகவே அவர் சமூக- அரசியல் கருத்துக்களைச் சொன்னதில்லை.

அதிலும் அவரது தனி நோக்கு ஒன்று உண்டு. முற்றிலும் எதிர்மறை விஷயங்களை அவர் தவிர்ப்பதைக் காணலாம். சாதகமான ,நம்பிக்கையூட்டும் அம்சங்களை அடையாளம் கண்டு அவற்றின் வேருக்கு நீரூற்ற மட்டுமே முயல்கிறார். இது ஒரு செயல்வீரர் தனக்கெனக் கண்டு கொண்ட வழிமுறை. அவரது ஆளுமை இதில் உள்ளது. சுஜாதா அவரைப்பற்றி எழுதிய கட்டுரையில் தன் கீழ் பணியாற்றுபவர்களின் கடமைதவறல்களைக்கூட கண்டிக்கும் வழக்கம் அவருக்கில்லை என்பதையும் முற்றிலும் நேர்நிலை அணுகுமுறை மட்டுமே கொண்டவர் என்பதையும் பதிவுசெய்திருப்பதைக் காணலாம்.

என்னிடம் கலாம் எதிர்மறையாக எதையுமே எழுதவேண்டாம், எதையும் விமர்சிக்கவேண்டாம் என்றார். அது நான் சொன்ன கருத்துக்களால் பெரிய விவாதங்கள் உருவாகியிருந்த காலம். அந்த ஆலோசனையை நான் கருத்தில்கொள்ளவில்லை. அது என் வழி அல்ல, அவ்வளவுதான்

கலாம் கருத்துக்கள் சொல்லியிருந்தால் என்ன ஆகும்? அவரை ஃபேஸ்புக்கில் கும்மியடித்து கோமாளியாக ஆக்கியிருப்போம். ஒருநாளும் சோர்வுறாது கடைசிக்கணம் வரை அவர் செய்த பணிகளை செய்யவிடாமல் ஆக்கியிருப்போம்.கலாம் கருத்துச்சொல்லவில்லை என்று சொல்லும் சில்லுண்டிகள் தாங்கள் ஃபேஸ்புக்கில் எல்லாவற்றுக்கும் பொங்கி வெடிப்பதனால் கலாமைவிட ஒருபடி மேலானவர்கள் என்று நம்மிடம் சொல்லவிரும்புகிறார்கள்.

3 வாழ்க்கையின் கடைசிநாட்களில் அவர் மாணவர்களைச் சந்திக்கவிரும்பினார். எல்லா வகையான மாணவர்களையும் முடிந்தவரை சந்திக்க முயன்றார். மாணவர் மத்தியில் உயிரிழந்தார். ஆகவே கல்விக்கூட அழைப்புகள் எதையும் அவர் மறுக்கவில்லை. அடுத்த தலைமுறையிடம் ஒரு நம்பிக்கையை விட்டுச்செல்ல அவர் விழைந்தார்

அதைவிட்டுவிட்டு அவர் கல்விக்கூடங்களை ஆராய்ந்து விமர்சனம் செய்யவேண்டுமென எதிர்பார்ப்பதுபோல அபத்தம் வேறில்லை. அவர் கல்வியாளர் அல்ல. கல்வி பற்றிய கருத்து கொண்டவரும் அல்ல.

4 கலாமின் இலக்கிய ஞானம் குறைவு. கலைநுண்ணுணர்வு தட்டையானது. அவர் ஒரு அறிவியலாளர். இந்தியக்கல்விமுறை அப்படிப்பட்ட ஒருபக்கம் மட்டும் வளர்ந்தவர்களையே உருவாக்குகிறது. அது அவரது சாதனைகளை இல்லாமல் ஆக்கிவிடுகிறதா என்ன? காந்திக்குக் கூட இலக்கிய நுண்ணுணர்வே இல்லை. பஜனைகளை எழுதியவர்களை அவர் பெரிய கவிஞர்களாக சொல்லிக்கொண்டிருந்தார். சரி, கலாமை விடுவோம். நம் அரசியல்வாதிகளில், பிரபல அறிவுஜீவிகளில் எத்தனை பேருக்கு இலக்கிய நுண்ணுணர்வு இருக்கிறது?

5 கலாம் உருவாக்கிய ராக்கெட் தொழில்நுட்பம் போர்த்தளவாடம் மட்டும் அல்ல என்பதையாவது நாம் வாசித்துத் தெரிந்துகொள்ளலாம். நவீனச் செய்தித் தொழில்நுட்பத்தின் அடித்தளமே ராக்கெட்தான்.

நான் கலாமை முதலில் பார்த்ததே அன்றைய இந்திய தொலைத்தொடர்புத்துறை கருத்தரங்கு ஒன்றில்தான். ராக்கெட் தொழில்நுட்பம் மூலம் எப்படி செயற்கைக்கோள் விடமுடியும், எப்படி செய்தித்தொடர்பு உருவாகும், எப்படி செல்போன் முதலியவை வரும், எப்படி அது தொழில்வாய்ப்புகளைப் பெருக்கும் என ஒரு தாளைப்பார்த்து வாசித்தார். இடதுசாரிகளாக இருந்த நாங்கள் அவரை அன்று கேலிசெய்து சிரித்தோம்.

இன்று நாம் ஈட்டும் செல்வத்தின் பெரும்பகுதி செய்தித்தொழில்நுட்பம் மூலம் வருவது. ராக்கெட் தொழில்நுட்பத்தை சர்வதேச அளவில் மிகமிகக்குறைந்த செலவில் நாம் அடைந்தோம். நாம் செலவிட்ட தொகையை செய்தித்தொழில்நுட்பத்தில் எப்போதோ பலமடங்காக ஈட்டிவிட்டோம்.இன்று அதை ஆஃப்ரிக்க நாடுகளுக்கு விற்கிறோம்.

தொழில்நுட்பம் என்றுமே வீண்செலவல்ல. அரேபியநாடுகளின் எண்ணையின் பணத்தில் மிகப்பெரும்பகுதியை தொழில்நுட்பத்தைக் கொடுக்கும் ஐரொப்பாவும் அமெரிக்காவுமே கொண்டுசெல்கின்றன. தொழில்நுட்பம் இல்லாத நாடுகளே சுரண்டப்படுகின்றன, வறுமை நோக்கிச் செல்கின்றன.

மேலும் ஆயுதமே ஒரு நாட்டின் பொருளியலைத் தீர்மானிக்கும் சக்தி. நம்மிடம் இருக்கும் ராக்கெட்டும் அணுகுண்டும்தான் ஒவ்வொரு சர்வதேசப்பேரத்திலும் நமக்கு சாதகமான சீட்டுகள். எளிமையான கேள்வி, ஏன் அமெரிக்கா ஈராக்கை சூறையாடியது, ஏன் ஈரானுடன் ஒப்பந்தம் போட்டது? ராக்கெட்டும் அணுகுண்டும் கையிலிருப்பதனால்.அந்த ஆற்றலை நமக்களித்த, தம் தொழில்நுட்பத்தை உருவாக்கிய அறிவியலாளர்களை நாம் ஆயுதம்செய்பவர்கள், வெறும் தொழில்நுட்பர்கள் என்கிறோம்.

6. கலாம் தன்னை என்றும் இஸ்லாமியராக உணர்ந்தவர். வட்டி வாங்கும் வங்கியில் கணக்கு வைக்கக்கூட மறுத்தவர் என என் உறவினர் சொல்லி அறிந்திருக்கிறேன்.முஸ்லீமாக வாழ்ந்து முஸ்லீமாகவே மறைந்தார். ஆனால் அவரது இஸ்லாம் என்பது வெறுப்பால் ஆனதாக இருக்கவில்லை. அவர் பிறமதங்களை, பிற மதநூல்களை, பிற மதத்தலைவர்களை இழிவுசெய்யவில்லை, வெறுக்கவில்லை. அந்தச் சமநிலைக்காகவே இஸ்லாமிய வெறியர்களால் அவர் வெறுக்கப்படுகிறார்.

*

கலாமின் மீது எனக்கு பல விமர்சனங்கள் உண்டு. அவரது கவிதைகள் மீது முக்கியமாக. எனக்கும் பத்து கவிதைகள் கொடுத்தார். அவற்றின் பாதிப்பிலிருந்து விடுபட பலநாட்கள் ஆயின.

அவரது அறிவியல்நம்பிக்கை எனக்கு ஏற்புடையது அல்ல. அவர் நேரு யுகத்தினர். நிரூபணவாத அறிவியலை முழுமையாகவே நம்பியவர். தொழில்நுட்பமே உலகைக் காக்கும் என அவர் ஆத்மார்த்தமாக நினைத்தார். அணுசக்தி போன்றவற்றில் அவரது நம்பிக்கை ஆழமானது. அதை என்னால் ஏற்கமுடியவில்லை. ஆனால் அவர் தான் நம்பியதை முன்வைத்த முன்னோடி.

என் கருத்துக்கள் பல அவருடன் முரண்படலாம்.ஏனென்றால் அவர் முந்தைய தலைமுறைக்காரர். ஆனால் அவற்றுக்கு அப்பால் சென்று அவரை மதிப்பிடாமல் என் முன் நம்பிக்கைக்காக அவரை நான் பழிக்கமுயன்றால் நான் அற்பன் என்றே பொருள்.

கலாம் வெறும் கனவுஜீவி அல்ல. அவரது திட்டங்கள் பல துறைகளில் இன்னும்கூட நாட்டுக்கு வழிகாட்டக்கூடியவை. மின்னுற்பத்தியைப் பெருக்கி பெட்ரோலிய நுகர்வைக் குறைத்து உபரியை கட்டுமானத்திட்டங்களுக்கு அளிப்பது போன்ற அவரது பல ஆலோசனைகள் இன்னமும் நம் முன் உள்ளன

என்னதான் இருந்தாலும் ஒன்று அப்பட்டமானது. அவர் தனக்கென வாழவில்லை. இந்த நாட்டை அவர் விரும்பினார். இதன் மக்கள் சுபிட்சமாக வாழவேண்டுமென கனவுகண்டார். அதற்காக தன் முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தார். தனக்கென எதையும் சேர்க்கவில்லை. அத்தகைய மகத்தான முன்னுதாரணங்கள் நம் முன் இன்று குறைவே.

தனக்கும் தலைமுறைகளுக்கும் சொத்துசேர்ப்பதன்றி பிறிது எதையுமே அறியாதவர்கள் தலைவர்களாகக் கொண்டாடப்படும் இந்நாட்டில் இளைய தலைமுறையினர் அண்ணாந்து நோக்கும் இலட்சிய வடிவங்கள் மிகச்சிலவே. ஆகவேதான் கலாம் கொண்டாடப்படுகிறார். இலட்சியவாதத்திற்கு இன்னும் இங்கே பெருமதிப்பு உள்ளது என்பதையே காட்டுகிறது இது.

இந்தியாவின் அனைத்து சாதகமான முன்னுதாரணங்களையும் அடித்து நொறுக்கவேண்டும் என்பதற்காகவே முழுமூச்சுடன் முயலும் ஊடகவாதிகள் என்றும் இங்கு உண்டு. விவேகானந்தர், காந்தி, நேரு, அரவிந்தர் ,ஜே கிருஷ்ணமூர்த்தி என அவர்களால் நொறுக்கப்படாத பிம்பங்கள் மிகக்குறைவு. ஆகவே கலாம் வருங்காலத்தில் கூலிப்படைத்தாக்குதலுக்கு மேலும் ஆளாவார்

ஆனால் அதற்கு அப்பால் அவர் வாழ்வார். நேற்று நான் ஆட்டோவில் சென்றபோது அந்த ஓட்டுநர் வழிதவறினார். வழக்கமாக ஆட்டோ ஓட்டுவதில்லையா என்று கேட்டேன். ’நான் வேறு வேலைசெய்பவன், ஆட்டோ ஓட்டுநர் கலாமுக்கு அஞ்சலி செலுத்த ராமேஸ்வரம் சென்றிருப்பதனால் நான் எடுத்துவந்தேன்’ என்றார். அந்த ஆட்டோ நிலையத்தில் மட்டும் பதினாறுபேர் சொந்தச்செலவில் சென்றிருக்கிறார்கள் என அறிந்தேன்.

நாகர்கோயில் நகர்முழுக்க கலாமின் படங்கள். போஸ்டர்கள். எந்த அமைப்பும் வைத்தவை அல்ல. மக்களே சொந்தச்செலவில் வைத்தவை. தனிநபர்கள் வைத்தவை. இந்தப்பற்று இந்த நாட்டை நேசித்த கலாம் என்னும் ஆளுமைக்கு மக்கள் அளித்த கைம்மாறு

ஜெ

முந்தைய கட்டுரை3. நான் பிரம்மத்தை நிராகரிக்காமலிருப்பேனாக!
அடுத்த கட்டுரைஅமெரிக்கப்பயணம் புகைப்படங்கள்