பகுதி பத்து : கதிர்முகம் – 10
தொலைவு ஓசைகள் மேல் கற்பனைகளை சேர்க்கிறது, மறைவு உருவங்களை பெருக்குகிறது என்ற முதுசொல்லின் பொருளை யாதவர் அறிந்தனர். காட்டுக்குள் எழுந்த விதர்ப்பத்தின் படையோசை தன்னை பெருக்கிக்கொண்டே அணுகிவந்தது. இடியோசைபோல திசையில்லாமல் சூழ்ந்துகொண்டது. அச்சம் ஒவ்வொரு ஓசையையும் அவர்களின் பிடரியில் எடைமிக்க கற்களென விழச்செய்தது.
விழிகள் தெறிக்க முகம் சுளிக்க யாதவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி வாளைத் தூக்கி ஆட்டி “விரைவு விரைவு” என்றனர். படைத்தலைவன் ஒருவன் பலராமரை அணுகி “மூத்தவரே, வருவது பெரும்படை என தெரிகிறது” என்றான். “பெரும்படையை வெல்லாவிட்டால் இளையோனுக்கு ஏது பெருமை?” என்று அவர் சிரித்தார். இன்னொருவன் “பல்லாயிரம் பேர்!” என்று கூவினான். “பல்லாயிரம் தலைகள்” என்று கைதூக்கி பலராமர் எதிர்கூவினார்.
படைத்தலைவன் “நாம் நூறுபேர்கூட இல்லை” என்றான். “நம்மால் இளைய யாதவரையும் அரசியையும் சூழ்ந்து காக்கமுடியாது. அவர்களை தாங்கள் முன்னால் அழைத்துச்செல்லுங்கள். படையுடன் நான் இங்கு நின்று அவர்களைச் செறுத்து நேரம் பெறுகிறேன். என் உயிர் இங்கு அகலும், ஆனால் மூன்றுநாழிகை நேரத்தை இளையவருக்கு காணிக்கையென ஈட்டியளிப்பேன்” என்றான். பலராமர் “மூடா, நாம் அவனை காக்கவில்லை, அவன் ஆழியால் நாம் சூழ்ந்து காக்கப்பட்டிருக்கிறோம். அச்சமிருப்பின் அதை எண்ணிக்கொள்” என்றார்.
”இல்லை மூத்தவரே” என படைத்தலைவன் சொல்லவர “நீ இன்னும் இளைஞன். காலப்பெருஞ்சுழியின் பேராற்றலை அறியாதவன். வரட்டும், காண்பாய்” என்ற பலராமர் ”சித்தமாகுங்கள்” என வாள்தூக்கி கூவினார். கணந்தோறும் வளர்ந்து அணுகிய முழக்கம் ஓசைத்திரளெனத் திரிந்து பரவிச்சூழ மரங்களை உலைத்து கிளைகளைப் பிளந்து குளம்பொலிகளாகி வாளோசையாகி போர்க்கூச்சல்களாகி வந்தனர் விதர்ப்பத்தின் புரவிப் படையினர். முதற்புரவி மேல் உருவிய வாளுடன் வந்த சிசுபாலனை இளைய யாதவன் திரும்பி நோக்கி புன்னகைத்தான்.
அவனுக்குப் பின்னால் குழல்பறக்க வெறித்து இழுபட்ட முகம் காற்றோவியமென உறைந்திருக்க புரவியில் கடுகிவந்த ருக்மி இடக்கையில் ஏந்திய நீண்ட வில்லும் வலக்கையில் எடுத்த அம்புமாக உரக்கக் கூவினான் “நில்லுங்கள் யாதவரே! இனி எங்கள் எல்லை விட்டு நீங்கள் அகல முடியாது. யாதவர்களின் போர் முடிந்து விட்டது. என் குலமகளை திருப்பி அளித்து பணிந்தீர் என்றால் உயிர்கொண்டு உங்கள் நகர் மீளமுடியும். இது என் ஆணை… நில்லுங்கள்!”
பலராமர் நகைத்தபடி அருகே சென்று கிருஷ்ணனிடம் “இளையோனே, என்ன இது தோளுக்கு நிறைவளிக்காத சிறுபோர் என்று உளம் சோர்ந்து இருந்தேன். நான் நிறைவுகொண்டு நகர் மீள என் குல தெய்வம் அருளியிருக்கிறது போலும்” என்றார். இளையவன் “தங்கள் ஊழ்முனை நோக்கி கடுகி விரைவதில் மானுடர் காட்டும் குன்றா ஊக்கம் மகிழ்வளிப்பது மூத்தவரே” என்று சிரித்தான். “பாவம் இளையோன்” என்றார் பலராமர். “ஆம், ஆனால் ஒருவன் அடைவதெதுவும் அவனை மீட்பதென்றே பொருள். இப்பாதையில் எவ்வுயிரும் செல்வது மீட்பை நோக்கியே” என்றான் இளையவன்.
”போர்க்களம் நின்றதுமே வேதாந்தத்தை பிழியத்தொடங்கிவிட்டாய் இளையோனே. என் சிறு மண்டைக்குள் இதெல்லாம் இறங்குவதில்லை” என்றபடி தன் புரவியைத் திருப்பி தன் அருகே வந்த புரவியின் முதுகில் இருந்து கதைகளை எடுத்து இரு கைகளிலும் அணிந்த கங்கணத்தின் கொக்கியில் பொருத்தியபடி பெருங்குரலில் நகைத்தபடி ருக்மியை எதிர்கொண்டு சென்றார் பலராமர்.
ருக்மிணியை புரவியில் விட்டுவிட்டு பிறிதொரு புரவியில் சிட்டுக்குருவிபோல் தாவி ஏறி அவ்விரைவிலேயே திருப்பி முழுவிரைவில் வந்த சிசுபாலனை நோக்கி திரும்பிய இளைய யாதவனின் விழிகள் பாதிமூடி கனவிலென்றாயின. அவனை நோக்கிய ருக்மிணி மெல்ல அவளறிந்த இளையவன் அவனிலிருந்து பட்டுச்சால்வையென நழுவிக் கழன்று விலக பிறிதொரு பேருருவம் எழுவதை கண்டாள். அவன் தோள் பெருகிய நான்கு தடக்கைகளில் மூன்றில் சங்கும் சக்கரமும் கதாயுதமும் எழுந்தன. அஞ்சல் என்று காட்டியது நான்காவது அணிச்செங்கை.
விண்ணில் மோதிக்கொள்ளும் வல்லூறும் செம்பருந்துமென சந்தித்தார்கள் சிசுபாலனும் இளைய யாதவனும். இரு வாள்கள் ஒன்றையொன்று அறிந்தன. இழுபட்டு விலகி ஒன்றையொன்று கவ்வின. கொம்பு தட்டி ஆடும் கலைமான்கள் போல. மண்டை முட்டியபடி பாயும் வரையாடுகள் போல. தந்தங்கள் கோர்க்கும் மதகளிறுகள் போல. அலகு உரசிப் பூசலிடும் நீர்நாரைகள் போல. வெட்டிக்கொள்ளும் இரு மின்னல்கள் போல. அவர்களின் வாள்களின் மின்னலால் புரவியேறிய அவர்களின் உடல்கள் சூழப்பட்டன. பின்னர் அங்கு இருவர் மறைந்து நான்கு கைகள் கொண்ட ஒற்றை உடல் தன்னுள் தான் ததும்பிக்கொண்டிருந்தது.
அவர்களைச் சூழ்ந்த இரு தரப்பு வீரர்களும் அப்போர் கண்டு ஒருகணம் வியந்து நின்றனர். வெள்ளிநாடா போல் வளைந்தது யாதவனின் வாள். அதனுடன் இணைந்து சுழன்றது சிசுபாலனின் வாள். காதல்கொண்ட நாகங்கள் என முத்தமிட்டும் அணைத்தும் வழிந்து விலகியும் மீண்டும் பாய்ந்து கவ்வியும் கொஞ்சின இரு வாள்களும். ஒளிர்ந்து சுழலும் ஓராயிரம் நீர்த்துளிகள் போல எங்குமிருந்தன அவ்வாள்களின் நுனிகள். உலோகக் கூர்முனைகள் முத்தம் முத்தமென்று தாவின. முத்தங்களை முத்தங்களால் செறுத்தன. குன்றாப் பெருங்காதலின் வெள்ளியுருகிய துளிகள் விண்ணில் சிதறின.
ஒன்றென நூறென கோடியென. காற்றில் கொஞ்சிக் கொஞ்சி குரலெழுப்பின சிறுகுருவிக்கூட்டங்கள். காற்றில் கண்காணாச் சிற்பமொன்றை செதுக்கியெடுத்தன சிலம்பும் சிற்றுளிகள். ஒருவரையொருவர் முற்றிலும் நிரப்பிக் கொண்டு இனியென்ன என்று திகைத்து நின்றனர். விட்டுச்சென்று மீள கண்டெடுத்தவர்கள் போல ஒருவரையொருவர் அறிந்தனர். அங்கு உடல் விட்டு பிறிதொரு விழியில் எழுந்து ஒருவர் பிறர் நோக்கி முழுதுணர்ந்து அமைந்தனர்.
பலராமரை எதிர்கொண்ட ருக்மி ”இது என் எஞ்சாப்போர் யாதவரே. இங்கு வெல்லாவிடில் இருந்தும் இறந்தவனாவேன்” என்று கூவியபடி தன் நீண்ட அம்புகளால் அவரை அடித்தான். சுழன்ற இரும்புக்கதைகளால் ஆன முட்டையோட்டுக்குள் அணுகமுடியாதவராக சிரித்துக் கொண்டிருந்தார் பலராமர். அந்த உலோகக்கவசத்தில் ஓசையுடன் முட்டிவிழுந்தன ருக்மியின் அம்புகள். “இளையவனே, நீ இக்கதைச்சுழலை மீறி வரல் இயலாது… இவை நான் இப்பிறவிமுழுக்க வழிபட்ட என் தெய்வங்கள்” என்றார்.
”எனில் இங்கு இறப்புக்கென வந்துள்ளேன் யாதவரே. புகழுடன் எஞ்சுகிறேன்” என்று ருக்மி பெருகிச்சூழும் பலநூறு கைகளுடன் நாணிழுத்து ஆவமழை பெய்தான். பட்டுத் தெறித்த அவன் அம்புகளால் சூழப்பட்டு புரவிப் பெருங்காலடிகள் நிலத்தில் ஈரத்தோல் முரசின்மேல் முழைக்கழிகளென பதிய அணுகி வந்த பலராமர் ஒரு கணம் திரும்பி போரில் முழுதமைந்திருந்த இளைய யாதவனையும், சிசுபாலனையும் நோக்கியபோது ருக்மியின் அம்பு ஒன்று அவர் தோளில் தைத்தது. அவரது கதை விரைவழிய அந்த இடைவெளியில் நுழைந்த பிறிதொரு அம்பு அவர் விலாவில் பாய்ந்தது.
திரும்பி கூச்சலிட்டு நகைத்து “வென்று விட்டாய் இளையோனே” என்றபடி ஒரு கையால் கதையைச் சுழற்றி முன்னால் பாய்ந்தார் பலராமர். அக்கணம் யாதவர்படை பெருங்குரலெடுத்தது. ருக்மி திரும்பி நோக்க மார்பில் அம்புபட்டு புரவியில் இருந்து தெறித்து நிலம்பொத்தி விழுந்த சிசுபாலனை கண்டான். விண்முகிலில் இருந்து விழுந்த கந்தர்வன் என அவன் கிடந்தான். ருக்மி “சிசுபாலரே” என்றபடி அவனை நோக்கி பாய்ந்தான். பலராமர் “அவன் களம் நிறைவுகொண்டது விதர்ப்பனே. இனி அவன் தலையறுப்பதொன்றே மீதி” என்றபடி அவன் வில்லை தன் கதையால் அடித்து உடைத்தார். அவன் திரும்புவதற்குள் வாளையும் தெறிக்கச்செய்தார்.
புரவிதிருப்பி பாய்ந்து வந்த இளைய யாதவன் “மூத்தவரே, விலகுங்கள்! இது என் போர்” என்றான். தோளிலும் விலாவிலும் வழிந்த குருதியுடன் பலராமர் ”ஆம், நீ செலுத்த வேண்டிய கடன் இது” என்றார். ”உன் முன் தலைதாழ்த்தாது களம் நின்றேன் என்ற பேர் ஒன்றே எனக்குப் போதும் யாதவனே” என்றபடி ருக்மி அருகே வந்த வீரனின் வில்லைப்பிடுங்கி நாணொலி எழுப்பிப் பாய்ந்து இளைய யாதவனை எதிர்கொண்டான். அவன் அம்பு சென்று தொடுவதற்குள் வாளால் அதை தட்டி வீழ்த்திய இளைய யாதவன் மறுகணத்தில் அவனை மிக அணுகி வாளால் அவன் வில்லின் நாணை அறுத்தான்.
வீரன் ஒருவனின் வாளைப் பெற்று சுழற்றி இளைய யாதவனின் வாளைத் தடுத்தான் ருக்மி. முழு எடையாலும் அவன் வீசிய பருத்த நீண்ட வாள் இளைய யாதவனின் கையில் பட்டுநூல் என மின்னிய மெலிந்த வாளை உடைக்க முடியவில்லை. புகைக்கோடு என அது வளைந்து அவன் வாளைத் தவிர்த்து விலகி மீண்டும் எழுந்தது. செந்நா பறக்க வளைந்து சீறல் ஒலியெழுப்பி அவனைச் சூழ்ந்து பறந்தது வெள்ளிப்பாம்பு. அதன் கூர் நாவின் நுனி தன் தோளை தொட்டுச் செல்வதை ருக்மி உணர்ந்தான். அவன் நுண்நரம்பு ஒன்றைத் தீண்டியது அந்த முத்தம். யாழ் கம்பி அறுந்தது போல் உடலெங்கும் அவ்வதிர்வை உணர்ந்தான். அவன் இடத்தோள் செயலிழந்தது.
மீண்டும் சீறி அருகணைந்தது அப்பாம்பு. அதன் காற்றை உணர்ந்து அதைத் தவிர்க்க உடல் வளைத்தபோது அவன் வலத்தோளை தீண்டியது. நஞ்சு தொட்ட சிற்றுயிர் என மெய்சிலிர்த்து அசைவிழந்து பின் துடித்து மீண்டெழுந்து கட்டுச்சரடுகள் அறுந்து சிதறிய விறகுக்குவியல் என கைகால்கள் உதற புரவியில் தளர்ந்து அதன் கழுத்தில் ஒட்டினான். கிளை ஒன்று அறைய தூக்கி வீசப்பட்டு மணலில் மல்லாந்து விழுந்தான். வாளைத் தூக்கியபடி இளைய யாதவன் பாய்ந்து நிலமிறங்கி ”நீ வீழ்த்திய என் தமையனின் குருதியைக் கண்டபின் உன்மேல் கருணையில்லை விதர்ப்பனே” என்றபடி அவன் நெஞ்சில் கால் வைத்து வாளை ஓங்கினான்.
“வெட்டுக யாதவனே. தலைகொய்து என்னை மீட்டருள்க!” என்று ருக்மி விழித்த ஈரக்கண்களும் வலிப்புகொண்ட முகமுமாக கூவினான். புரவியில் இரு கைகளை விரித்தபடி விரைந்து வந்த ருக்மிணி ”யாதவரே, பொறுங்கள். அவர் என் தமையன். என் தந்தையின் ஒரே புதல்வர். இப்புவியில் நான் கடன்பட்டவர்” என்றாள். அருகணைந்து “மூத்தவரே, இன்னும் உங்கள் விழிதிறக்கவில்லையா? நீங்கள் ஈட்டியதென்ன என்று அறியவில்லையா?” என்றாள்.
புன்னகையுடன் காலை எடுத்து “உன்னால் காக்கப்படுபவன் இவன் என்றறிவேன்” என்ற யாதவன் குனிந்து ருக்மியிடம் சொன்னான் “முதல்முறை உன்னைக் கொல்லாது விட்டது எனது கருணை. இம்முறை உன் இளையோளின் அருள். களத்தில் முழுமையாக தோற்காமல் உன் ஆணவம் அமையாது விதர்ப்பனே. உரைக்கும் சொல்லெதுவும் வீணாவதில்லை என்று உணர்க! நீ உரைத்த வஞ்சினமே நிகழட்டும்” என்றபடி வாள்முனையால் அவன் வலது மீசையை சீவினான்.
“எழுக இளையோனே! இனியொரு கருணையை நீ பெறப்போவதில்லை” என்றார் பலராமர். மண்ணில் மெல்லப்புரண்டு செயலற்ற கைகள் உடலின் இருபக்கங்களிலும் துவள முழங்காலை ஊன்றி மூச்சிழுத்து எழுந்த ருக்மி தன்னைச் சூழ்ந்து வாள் தாழ்த்தி நின்ற சிற்றரசர்களையும் விதர்ப்பத்தின் வீரர்களையும் நோக்கினான். அவர்கள் அனைவர் விழிகளிலும் போர் முடிந்துவிட்டிருந்தது. அப்பால் சிசுபாலனை மச்சநாட்டரசன் தோள்பற்றி தூக்க அவன் குருதிவழியும் நெஞ்சை முதிய வீரன் ஒருவன் தன் தலைப்பாகையால் அழுத்திக் கட்டினான். தலைப்பாகையை நனைத்து ஊறி அவன் விரலிடுக்குகளில் வழிந்தது செங்குருதி.
”உன் படைகளோடு திரும்பிச் செல்க! கைகோர்க்கும் களம் இங்கு முடிந்தது. படை கோர்ப்பதற்கு நமக்கொரு களம் இனியும் உண்டு” என்றான் இளைய யாதவன். தள்ளாடி நின்றபடி தன் படைகளை விலகச் சொல்லி தலையாட்டிவிட்டு திரும்பி ருக்மி சொன்னான் ”ஆம் யாதவரே, களம் ஒன்று வரும். அதை நான் மிக அண்மையில் காண்கிறேன். அனைத்துக் கணக்குகளையும் குருதியே எழுந்து வந்து மோதித் தீர்த்துக்கொள்ளும் பெருங்களம் அது.” இளைய யாதவன் புன்னகையுடன் “ஆம்” என்றான்.
அதே புன்னகை முகத்தில் தங்கியிருக்க திரும்பி ருக்மிணியின் கையை பற்றிக்கொண்டு “செல்வோம்” என்றான். அவள் பிறிதொருவர் அங்கிருப்பதையே உணராதவள் போல நகை மலர்ந்த முகத்தில் விழிகள் அவனையே நோக்கியிருக்க அவனுடன் சென்றாள். புரவியில் அவர்கள் ஏறப்போகும்போது மெல்லிய உறுமல் ஒன்றைக்கேட்டு இளைய யாதவன் திரும்பி நோக்கினான். குருதி வழியும் நெஞ்சை வலக்கையால் அழுத்தி தன்னைத் தாங்கிய வீரர்களை உதறி தள்ளாடியாடி நின்ற சிசுபாலனின் விழிகளை சந்தித்தான். புன்னகையுடன் புரவியில் ஏறிக்கொண்டு “பிறிதொரு முறை சந்திப்போம் இளையோனே” என்றபடி அதை முன் செலுத்தினான்.