பிரிவின் விஷம்

”வாழ்க்கையை வகுத்துச்சொல்லச் சொன்னால் நான் இப்படிச் சொல்வேன். உறவும் பிரிவும். அவ்வளவுதான்”என்றார் மலையாளக்கவிஞர் பாலசந்திரன் சுள்ளிக்காடு முழுப்போதையில். பயங்கரமான ஒரு ஏப்பம். இமைகளை முழுமூச்சாக உந்தி மேலே தூக்கி சிவந்த விழிகளால் என்னைப்பார்த்து ”..ஆனால் என்ன விஷயம் என்றால் பிரிவுக்கு உறவை விட நூறுமடங்கு எடை அதிகம்”. ஒருநிமிடநேரம் தூங்கியபிறகு கண்ணைத்திறந்து, சட்டைப்பையை மார்பெங்கும் தேடிக் கண்டுபிடித்து, மொத்தக்கையையும் உள்ளே விட்டுத் துழாவி, கசங்கி முதுமை எய்திவிட்டிருந்த சிகரெட்டை எடுத்து, வாய்க்காகத் தேடியபடி ”தீப்பெட்டியை எடுடா மயிரே” என்றார்.

1988 இல் சென்னையில் ஜெமினி பார்ஸன் காம்ப்ளெக்ஸ் கட்டிடத்தில் மாத்ருபூமி நிருபராக இருந்த கெ.ஸி.நாராயணன் தங்கியிருந்த அலுவலகமும் வீடுமான அபார்ட்மெண்டில் தினமும் மலையாள எழுத்தாளர்கள் சந்தித்துக்கொள்வார்கள். மாதம் தோறும் சென்னைக்குச் செல்லும் நானும் அங்கே தங்குவேன். திருமணமானபின் அருண்மொழியுடன் சென்றும் தங்கியிருக்கிறேன். அது ஒரு பொது இடம்போல. கெஸி.நாராயணன் போல அனைவர் மேலும் மாறா நட்புக்கொண்டவர்களை அபூர்வமாகவே பார்க்க முடியும். இன்றும் அவர் ஒரு பெரிய மையம்.

அந்த அறைக்கு எல்லாரும்தான் வருவார்கள். இதழாளர்கள். இளம்கவிஞர்கள் கேரளத்திலிருந்து வரும் இலக்கியவாதிகள். வேறுபெயர் கொண்ட புரட்சியாளர்கள். ரகசியப்போலீஸ்காரர்கள். ஸக்கரியா,புனத்தில் குஞ்ஞப்துல்லா போன்றவர்கள் அடிக்கடி வந்து தங்குவார்கள். புலியும் ஆடும் சேர்ந்து தண்ணீர் குடிக்கும் படித்துறை அது. இலக்கிய விவாதம், கோட்பாட்டுச்சண்டை, நடுவே பாட்டு, குடி மேலும் குடி என நள்ளிரவு தாண்டி , சிலசமயம் விடிய விடிய, அங்கே நிகழ்ச்சிகள் ஓடும். அந்த அறைக்கு கேரள இலக்கியத்தில் ஓர் அழியா இடம் உண்டு. கெ.ஸி.நாராயணன் திரும்ப கோழிக்கோடு போவது வரை அந்த மையம் நீடித்தது

சுகுமாரன்

ரகசியப்போலீஸார் தங்களுக்கான ‘இன்பர்மேஷன் அலவன்ஸை’ ப் பொது நிதியாக ஆக்கி மது வாங்க வேண்டும் என்பது விதி. பதிலுக்கு அவர்கள் தவம்செய்தாலும் அடையமுடியாத தகவல்கள் அங்கே பரிவுடன் பகிர்ந்தளிக்கப்படும். உயர்மட்டத்தில் சாதாரணமாக உலவும் இதழாளர்களும் அதிகாரிகளும் அங்கே வந்து சரித்திரம் எத்தனை அபத்தமாக இயங்கிக்கொண்டிருக்கிறது என்று புட்டு வைப்பார்கள். பல நூல்கள், கருத்தரங்குகள், இதழ்கள் அங்கே சாதாரணமாகக் கருக்கொண்டன. ஆசியாநெட் தொலைக்காட்சி பற்றிய முதல் கருவே அங்குதான் விவாதிக்கப்பட்டது. அங்கே சுகுமாரன் இருமுறை வந்திருக்கிறார். எஸ்.ராமகிருஷ்ணனைக்கூட ஒருமுறை கூட்டிச் சென்றிருக்கிறேன்.

கவிஞர் பாலசந்திரன் சுள்ளிக்காடு கேரளத்தின் முக்கியமான கவிஞர். இளம் வயதிலேயே பெரும்புகழ் பெற்றவர். எழுபதுகளில் நக்ஸலைட் இயக்கத்தில் சேர்ந்து தீவிரமாக இயங்கி அவ்வெழுச்சியின் குரலாக அறியப்பட்டார். பின்னர் அவ்வியக்கத்தின் வீழ்ச்சியால் மனம் பேதலிப்புண்டு சிகிழ்ச்சைபெற்றார். மேடைகளில் உக்கிரமான சொற்களுடன் வேகமான தாளக்கட்டுடன் ஒலிக்கும் உணர்ச்சிகரமான கவிதைகள் அவருடையவை. அவரது வாழ்க்கைக்கதையை அரவிந்தன் அவரையே நடிக்க வைத்து ‘போக்குவெயில்’ என்ற திரைப்படமாக எடுத்திருக்கிறார். தமிழில் அவரது சுயசரிதை ‘சிதம்பரநினைவுகள்’ என்ற பேரில் வெளிவந்திருக்கிறது.

பாலசந்திரன் சுள்ளிக்காடு  அவரது நெருக்கமான நக்ஸலைட் தோழர்களின் மரணத்தைப்பற்றியும், மரணத்தைவிடக் குரூரமான பிரிந்துசெல்லல்களைப்பற்றியும் சொன்னர். அதன்பின் அவர் ஜான் ஆபிரஹாமைப்பற்றி எழுதிய பெரும்புகழ்பெற்ற ”எவிடெ ஜான்?” என்ற கவிதையை மார்பில் ஓங்கி அறைந்து இதயம்வெடிக்கப் பாடினார். ஒருகும்பல் மேலதிக மதுவுக்காக நள்ளிரவில் அலைபாய்ந்தபடி கிளம்பிச்சென்றது. கவிஞரின் ஆத்மா மேலும் மதுவை நாடியதென்றாலும் உடல் புவியீர்ப்புவிசையை வெல்ல முடியாமல் தவித்தது.

”பிரிவைப்பற்றி எழுதாதவன் கவிஞன் இல்லை. மேலே உள்ள தாயோளி  அதற்காக மட்டும்தான் கவிஞர்களை பூமிக்கு அனுப்புகிறான்”என்றார் கவிஞர். சிகரெட்டை பற்ற வைத்து இருமுறை இழுத்தபோது கை பொத்தென்று பக்கவாட்டில் விழுந்தது. முகவாய் வந்து மார்பில் முட்டிக்கொண்டது.கீழுதடு முன்னால் துருத்த சீரான குரட்டை ஒலி கேட்க ஆரம்பித்தது. நான் எழுந்து சென்று சிகரெட்புகையும் மதுநெடியும் வியர்வை வீச்சமும் கலந்த அறையை திறந்து பால்கனிக்குப் போய் நின்றேன். நாலாவது மாடிக்கு கீழே சென்னையில் இரவு விளக்குகள் வீணாக எரிய, காலியான சாலைகள் கருமையாக வழிந்தோடின. கடற்காற்று என்னை தழுவியது.

இரண்டுநாட்களுக்கு முன்னர் நான் வாசித்த சுகுமாரனின் கவிதையை எண்ணிக்கொண்டேன். வாசித்தபோது என்னைக் கொந்தளிக்கச் செய்த கவிதை. அதன்பின் மீண்டும் மீண்டும் எனப் பலமுறை வாசித்த, ஊரிலிருந்து வரும்போது பஸ்ஸில் மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்த கவிதை. அப்போது கவிதையின் உணர்ச்சிகரம் மட்டும்தான் மனதுக்கு வந்தது. ஒரு சொல்கூட நினைவில் எழவில்லை.

எனக்குள் அக்கவிதை இல்லாத இடங்களிலெல்லாம் மனவிரல்களால் துழாவித் துழாவிச் சலித்தேன். ஆச்சரியமாக இருந்தது. ஒருசொல் கூட நினைவில் மீளவில்லை. பெருமூச்சுடன் அதை அப்படியே விட்டுவிட்டு உள்ளே சென்று ஒரு நாற்காலியை எடுத்து வந்து பால்கனியில் போட்டுக்கொண்டு அமர்ந்துகொண்டேன். எனக்கே போதை ஏறியது போலிருந்தது. சிகரெட் புகையும் மதுவாடையும் தூக்கக்கலக்கமும். வெளியே பார்த்துக்கொண்டிருந்தவன் பின்பு கம்பியில் தலைவைத்துத் தூங்கிவிட்டேன்.

அரைத்தூக்கத்தில் நான் என் அம்மாவைக் கண்டேன். அம்மா ஒரு பசுவுடன் கோயிலைச் சுற்றி சென்றுகொண்டிருக்கிறாள். அம்மாவை நான் கூப்பிட்டேன். திரும்பிப்பார்த்தாள். என் மனம் அதிர்ச்சியில் ஒருகணம் நின்றே விட்டது. அம்மாவின் கண்களுக்கு என்னை அடையாளம் கண்ட பாவனையே இல்லை. முற்றிலும் அன்னியமான கண்கள். அம்மா அம்மா அம்மா என்று ஒலியே இல்லாமல் கூவினேன். என் நெஞ்சு உருகிக் கொண்டிருந்தது. தொண்டை அடைத்தது. என் கண்களில் வழிந்த சூடான கண்ணீரை நான் உணர்ந்தேன்.

கண்விழித்துக் கண்ணீரைத் துடைத்தேன். கீழே ஒரு கார் ஹெட்லைட் ஒலி நிழல்களை வானில் எழுப்ப வளைந்து சென்றது. உள்ளே மின்விசிறி கரக் கரக் கரக் என்று சுழன்றது. கவிஞர் நன்றாக ஒருக்களித்துச் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அறைக்குள் பலவகையான காகிதப்பொட்டலங்கள். சிகரெட் எச்சங்கள். புட்டிகள், மூடிகள், கெ.ஸி.நாராயணன் உடற்பயிற்சி செய்ய வைத்திருந்த டம்பல்ஸ். பலவகையான புத்தகங்கள். ஆங்கிலம் மலையாளம். அப்போது பெரிய மீன் ஒன்று நீருக்குள் இருந்து மேலே எழுந்து வருவது போல மொத்தக் கவிதையையும் நான் வரிவரியாக நினைவுகூர்ந்தேன்.
*

முதற்பெண்ணுக்குச் சில வரிகள்

இரவின் திரைக்குள் மறையும் திசைகள்
இரண்டு அலைவேளைகளுக்கு இடையில் மௌனம்

அல்லது

இரண்டு மௌனங்களுக்கு இடையில் அலைமீட்டல் என
கரையின் புறங்களில் கடலின் முடிவற்ற சங்கீதம்

உனது பிம்பம்
நிலைக்கண்ணாடியிலிருந்து கிளம்பி வந்ததுபோல்
நடந்து மறைந்தாள் எவளோ.

இதோ
நீ எதிர்ப்பட்ட அநாதிக்காலத்தின் ஏதோ ஒரு நொடி
ஆனந்த வெளியாக ஒளி ததும்பி
நிற்கிறது நினைவில்

இதோ
பார்வையில் அகலும் பெண்முகங்களில் எல்லாம்
உனது நீர்த்திரைக் கண்களைத் தேடி அலுக்கிறது
பொழுதின் தனிமை

பரிசுப்பொருட்களும் குதூகலமுமாய் வந்தவர்கள்
மயானம் கலைபவர்களாய்ச் சொல்லாமல் போகிறார்கள்
நட்போ காதலோ
இப்படித்தான் வாய்க்கின்றன பெண்ணே
எனது உறவுகள்

இப்போதும்
நீ வரலாம் என்று திறந்துவைக்கும் கதவுகளில்
வெறுமையின் ஒளி

இப்போதும்
மறதியின் இருளில் மெல்லச்சரியும் நாட்களின் விளிம்பில்
உனது மூக்குத்தியின் அலையும் சுடர்

உனது நேசப்பெருவெளி பசுமை தீய்ந்து
பனியில் உறைந்தது எப்போது?
உனது அன்புப்பிரவாகம் உலர்ந்து
பாறைகளின் மௌனம் திரண்டது எப்போது?

கானல்கள் உன் பதில்கள்
அறிந்தும்
என்னோடு அலைகின்றன கேள்விகள்

இனி
காத்திருக்கப் பொறுக்காது கடலின் சங்கீதம்

நாளை
நமது நேசத்தை ஒப்படைக்கப்போகிறேன்
காலத்தின் காட்சி சாலையில்.

எங்காவது
எப்போதாவது
வழிகள் கலந்து பிரிகின்றன உறவுகள்

இனி
காற்றில் ஆறும் காயங்கள்
வடுவாக எஞ்சும் உன் பெயர்

இவ்வளவும் ஏன்,
இன்னும் நான் நேசிக்கும் முதல்பெண் நீ

*

நவீனத்தமிழில் பிரிவைப்பற்றி எழுதப்பட்ட மிகச்சிறந்த கவிதை என நான் இதையே குறிப்பிடுவேன். இது என் அகத்தில் என் அம்மாவின் தற்கொலைக்குபின் நான் அறிந்த பிரிவெனும் பிரபஞ்ச உண்மையைக் காட்டும் கவிதையாக உருமாறிப் பதிந்திருப்பதைக் கவிதை பற்றி அறிந்தவர்கள் வியப்பாக எண்ண மாட்டார்கள். ஒரு கவிதையின் ஊற்றுமுகம் எவ்வளவு விசித்திரமானதாக இருக்குமோ அதேயளவு அதன் அழிமுகமும் வியப்பூட்டும் தற்செயல்களால் ஆனதே.

இக்கவிதையின் ஒவ்வொரு வார்த்தையும் எனக்கே உரிய தனியனுபவத்தின் இருண்ட, மிக இருண்ட, படிகளில் இறங்கி எனது ஆழம் நோக்கிச்செல்கிறது. ”இரண்டு அலைவேளைகளுக்கு இடையில் மௌனம் அல்லது இரண்டு மௌனங்களுக்கு இடையில் அலைமீட்டல் என கரையின் புறங்களில் கடலின் முடிவற்ற சங்கீதம்”. அம்மாவின் மறைவுக்குப் பின் பித்துப்பிடித்த முழுத்தனிமையில் காஸர்கோட்டில் இருந்த நாட்களில் தூக்கமில்லாத இரவுகளும் தன்னிலை உணராத பகல்களுமாக நகர்ந்தன என் நாட்கள். நெற்றுப் போல காலத்தின் அலைகளில் மிதந்தலைந்தேன்.

நான் தனியாகத்தங்கியிருந்த பழைய முஸ்லீம் தறவாட்டுவீடு கடலோரமாக இருந்தது. திண்ணையில் நின்றால் கடல் தெரியும். குடிசைகள் ஏதும் இல்லாத முற்றிலும் காலியான பெரிய கடற்கரை.  ஒளிக்கரங்களால் மாறி மாறி ஓயாமல் கடலைத் துழாவிக்கொண்டிருக்கும் கலங்கரை விளக்கு. பெரும்பாலும் கடற்கரையில் சென்று இருப்பேன். அலைகளின் மாற்றமில்லாத குரல். மீண்டும் மீண்டும் ஒன்றையே சொல்லிக்கொண்டு புலம்பும் அதன் எல்லைகளில்லாத கரிய துயரம். அலைகளுக்கு நடுவே உள்ள இறுகிய கனத்த மௌன இடைவேளையில் என் உள்ளிருந்து ஒரு கடல் வந்து மார்பின்கரையை ஓங்கி அறைந்து கூச்சலிடும்.

ஒவ்வொரு அனுபவமும் அதுவேதான். தெருவின் நெரிசலில் ஒரு பக்கவாட்டு முகம், ஒரு பின்புறநடை, ஒரு கையசைவு கணநேரம் அம்மாவாக ஆகி நிகழ்ந்து மறையும். ‘ஜெயா’ என்ற அவள் அழைப்பாக கார்கள் ஆரன் அடிக்கும். நடுவே உண்மையைவிடத் துல்லியமான உண்மையாக அனைத்துப்புலன்களையும் நிறைத்து அம்மா என் முன் இருப்பாள்.நேற்று இன்று அழிந்த ஒரு காலத்தில். ”நீ எதிர்ப்பட்ட அநாதிக்காலத்தின் ஏதோ ஒரு நொடி ஆனந்த வெளியாக ஒளி ததும்பி நிற்கிறது நினைவில்” திறந்து வைத்த அறைக்கதவு அதற்கப்பால் அவள் புடவையின் அசைவுக்காக ஒவ்வொரு கணமும் காத்திருக்கும். திறக்கப்பட்ட வாசல்கள் அனைத்தும் அவள் வருகைக்கு முந்தைய கணத்தைக் கொண்டுவிடும். அவற்றுக்கு அப்பால் விரிந்த ‘வெறுமையின் ஒளி’

அம்மா முகத்தில் ஐந்துகல் மூக்குத்தி உண்டு. வெள்ளிக்கற்கள். நான் நள்ளிரவில் சிறுநீர்கழிக்க எழுந்திருக்கும்போதெல்லாம் அம்மா வீட்டுக்குப் பின்பக்கம் ஒட்டுத்திண்ணையில் காரிருளுக்குள் தனிமையாக அமர்ந்திருப்பாள். கடலாழத்தில் கிடக்கும் ஒரு கற்சிலை போல. மெல்லிய மினுமினுப்பாக அவள் மூக்குத்தி. ‘மறதியின் இருளில் மெல்லச்சரியும் நாட்களின் விளிம்பில் உனது மூக்குத்தியின் அலையும் சுடர்’ அம்மாவின் அருகே சென்று அமர்ந்து அவள் உடலின் வெம்மையுடன் ஒண்டிக் கொள்வேன். கவனமில்லாமல் என் தலையில் அவள் கைவிரல்கள் அலையும். அம்மா வெகு தூரத்தில் இருப்பாள். அவள் கண்கள் நிலைத்திருக்கும் வான்வெளியில் மின்னும் நட்சத்திரங்கள் அளவுக்கு அத்தனை தொலைவில்.

என்ன நினைத்திருந்தாள்? என்ன ஓடியது அவள் நெஞ்சில்? ‘பார்வையில் அகலும் பெண்முகங்களில் எல்லாம் உனது நீர்த்திரைக் கண்களைத் தேடி அலுக்கிறது பொழுதின் தனிமை’ .கேள்விகள். மீண்டும் மீண்டும் கேள்விகள். தற்கொலைசெய்துகொள்பவர்கள் ஒருபோதும் பதில் சொல்லிவிடமுடியாத பல்லாயிரம் கேள்விகளை விட்டுச்செல்கிறார்கள். ”காற்றில் ஆறும் காயங்கள்.வடுவாக எஞ்சும் உன் பெயர்”

வெளியே காலடி ஓசைகள். குழறல்கள். ”எங்கே கவிஞன்? எழுப்பு அந்த நாயை”என்று ஸக்கரியாவின் போதைக் குரல். பாலசந்திரன் சுள்ளிக்காடு தூங்கிக்கொண்டிருந்தார். உள்ளே போய் அவரது கலைந்த தலையை முள்தாடி மண்டிய முகத்தைத் தொட்டுப்பார்க்கவேண்டும் போலிருந்தது.

முந்தைய கட்டுரைஜெ.சைதன்யாவின் மொழியியல் நோக்கு
அடுத்த கட்டுரைகைதிகள் – கடிதங்கள்