‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 61

பகுதி பத்து : கதிர்முகம் – 6

கௌண்டின்யபுரியின் மகளிர்மாளிகையின் பெருமுற்ற முகப்பில் சுடரொளிகொண்டு நிழல்நீண்டு நின்றிருந்த பொற்தேரின் நுகத்தில் கட்டப்பட்ட வெண்புரவிகளை கழுத்தை வருடி அமைதிப்படுத்தி சேணங்களை இறுக்கி கழுத்து மணிகளை சீரமைத்தபின் பாகன் தன் பீடத்தில் ஏறிக்கொண்டான். புரவிகள் குளம்போசை எழுப்பி முன்பின் கால் வைத்து நின்ற இடத்திலேயே அசைந்து நிற்க பொறுமையற்றது போல தேர் தோரண மணிகள் குலுங்க உடல்கொண்ட ஒளிகள் நலுங்க சற்று அசைந்தது. இளவரசி அறைநீங்கிவிட்டார் என கட்டியங்காரனின் சங்கொலி அறிவித்ததும் எழப்போகும் பறவை தலைதாழ்த்துவது போல முற்றத்தின் மறுமுகப்பில் நின்றிருந்த புரவி வீரர்கள் சற்றே முன்னகர்ந்து அணிகூர்ந்தனர்.

ஏழு புரவிகள் இழுத்த அகன்ற தட்டுகொண்ட திறந்த தேர் ஒன்றை வீரர்கள் கொண்டு முன்னால் நிறுத்த இசைச் சூதர்கள் அதில் ஏறி தங்கள் முதுகுகள் ஒட்டி முகம் வெளிப்பக்கமாக திரும்பியிருக்க மடியில் முழவுகளும் கொம்புகளும் சங்குகளும் மணிகளுமாக அமர்ந்துகொண்டனர். சற்றே சிறிய விரிதட்டுத் தேரில் மங்கலத் தாலங்களுடன் அணிப்பரத்தையர் ஏறி இரு நிரைகளாக வெளிப்புறம் திரும்பி நின்றனர். இளவரசியின் வருகை அறிவிக்கும் நிமித்திகர் பெருங்கூடவாயிலில் கையில் சங்குடன் உள்ளே நோக்கி நின்றார்.

உள்ளிருந்து அமிதை முதிய உடல் வளைத்து குறுகிய காலடிகளை வைத்து ஓடி வந்து மூச்சிரைக்க “அனைத்தும் சித்தமாகி விட்டதா காவலர்தலைவரே?” என்றாள். ”ஆம் செவிலியன்னையே” என்றார் காவலர்தலைவர். அமிதை திரும்பிச்சென்று படிகளில் ஏறி இடைநாழியில் ஓடியபடி “இளவரசி வருக!” என்றாள். அறையிலிருந்து கிளம்பிவிட்டிருந்த ருக்மிணி இரு சேடியர் தொடர செஞ்சுடர் விரித்த மணிசெறிந்த அணிகளுடன் இளஞ்செந்நிறப் பட்டாடை படியில் அலைக்கும் நீரலைகள் போல் ஒலிக்க எதிரே வந்தாள். அமிதை சொல்லிழந்து மார்பில் கைவைத்து நோக்கி நின்றாள்.

படியிறங்கி பெருங்கூடத்துக்கு வந்த அவளை விழிதூக்கி நோக்கிய வீரன் தன்னை மறந்து கையில் சங்குடன் வீணே நின்றான். அமிதை அவனை நோக்கி கையசைத்து சங்கொலி எழுப்பும்படி ஆணையிட்டாள். அவன் திடுக்கிட்டு விழிப்பு கொண்டு வலம்புரியை வாய்பொருத்தி இளங்களிறு போல் ஒலியெழுப்ப முற்றமெங்கும் அனைத்து உடல்களிலும் விதிர்ப்பு எழுந்தது. புரவிகள் அசைய தேர்களும் திடுக்கிட்டு சித்தமாயின.

முற்றத்தை வளைத்த பந்தங்களின் ஒளியில் செம்மலர்கள் செறிந்த மலர்க்கிளை போல ருக்மிணி பெருங்கூட வாயிலில் தோன்றியதும் இசைச்சூதர் தங்கள் வாத்தியங்களை மீட்டி மங்கலப்பேரிசை முழக்கினர். அணிப்பரத்தையர் குரவையொலி எழுப்ப வீரர்கள் ”அன்னமென எழுந்த திருமகள் வாழ்க! அழியா மங்கலம் கொண்ட விதர்ப்பினி வாழ்க! கௌண்டின்யபுரியின் மணிமுத்து வாழ்க! விந்தியம் விளைந்த வைரமணி வாழ்க!” என்று குரலெழுப்பினர்.

செம்பஞ்சுக் குழம்பிட்ட நீலச் சிறு பாதங்களை மெல்ல வைத்து படிகளிறங்கி அணிகள் இமை இமைக்க ஆடை காற்றென ஒலிக்க தேரை அணுகி படிகளில் கால்வைத்து ஏறி செம்பட்டு இட்ட சேக்கையில் ருக்மிணி அமர்ந்து கொண்டாள். அவளுக்குப்பின் சிறு பீடத்தில் அமிதை அமர்ந்தாள். நிமித்திகன் விரைந்து கைகாட்ட புரவிகள் எழுந்தன. வெண்புரவிகள் இழுக்கும் பொன்ரதத்தில் செம்மணிகள் சுடர ருக்மிணி சென்றது இளஞ்சூரியன் முகில் மேலெழுந்தது போல என்றுரைத்தனர் இடைநாழியில் நின்ற ஏவலர்.

நகரின் தெருக்கள் கருக்கலுக்கு முன்னரே துயிலெழுந்திருந்தன. கடைகள் அனைத்தும் திரைதூக்கி நடைதிறந்து கொத்துச்சுடர்கள் எரிந்த நெய்விளக்கின் ஒளியில் விற்பனைப் பொருட்களாலும் வண்ண ஆடைகள் அணிந்த வணிகர்களாலும் பொலிந்தன. நகரெங்கும் பரவியிருந்த பலநூறு குலமூதாதையர் ஆலயங்கள் அனைத்திலும் அன்று கொடையும் பலியும் பூசையும் நிகழ்வதால் படையல் மலர்களுடனும் நறுஞ்சாந்துடனும் சுண்ணத்துடனும் படையல் பொருட்களுடனும் நகர்மகளிர் புத்தாடை அணிந்து சிரித்துப்பேசியும் கூவியழைத்து அணிகுலுங்க ஓடியும் ஒழுகிக்கொண்டிருந்தனர்.

புரவிக்குளம்புகளின் ஒலிகேட்டு அஞ்சிநின்று திரும்பி நோக்கி அணியூர்வலத்தைக் கண்டு விழிவிரிந்து பிறரை அழைத்து சுட்டிக்காட்டினர். கைவளை குலுங்க வீசி வாழ்த்தொலித்தனர். வீடுகளுக்குள் இருந்து சிறுவர் அரைத்துயில் திரண்ட கண்களுடன் ஓடிவந்து அணியை நோக்கினர். காலைப்புழுதி பனிகொண்டு கிடந்த நகர்த்தெருக்களில் குளம்புத்தடங்கள் நடுவே சகடக்கோடுகள் சென்றன.

ஆடி நிறைவு நாளென்பது நீண்ட களியாட்டமொன்றின் தொடக்கம். ஆடி நிறைவுக்குப் பின் முப்பது நாட்கள் வரதாவில் மீன் பிடிக்கலாகாது என நெறியிருந்தது. உழுது மரமடித்து சேறு நொதிக்கவிட்ட நிலம் பூத்து செங்குருதி இதழ் காட்டுவது வரை கால் படக்கூடாது என்று வேளிர் முறைமை கூறியது. மேழிகளைக் கழுவி அறைசேர்த்து காளைகளை நீராட்டி கொட்டில் அணைத்து வேளிர் விழவுக்கு ஒருங்குவர். வரதாவில் மீன்பிடித் தோணிகளனைத்தும் கரைசேர்க்கப்பட்டு மணலில் கவிழ்க்கப்பட்டு அரக்கு கலந்த தேன்மெழுகு பூசி மெருகேற்றப்படும்.

மரப்பேழைகளிலிருந்து புத்தாடைகள் வெளியே எழும். ஊனுணவுக்கென மலைகளிலிருந்து கொண்டுவரப்படும் கன்றுகளையும் ஆடுகளையும் மலைப்பன்றிகளையும் குலங்களுக்கு ஒரு குழுவென அமர்ந்து விலைகொடுத்து கொண்டு அனைவருக்குமென பங்கிட்டளிப்பார்கள். தினைவறுத்து தேனுடன் உருட்டிய இன்னுருளைகளும் அக்காரப்பாகில் கம்புசேர்த்து நீளமாக உருட்டி எடுத்த தேன்குழல்களும் இல்லங்களெங்கும் கலம் சேர்க்கப்படும். உலர்ந்த கிழங்குகளை அக்காரத்துடன் இடித்து நெருப்பிலிட்டு உருக்கி எடுத்த பாகை மர அச்சில் வார்த்து எடுக்கும் தேனடைகளை மழைச்சாரல் மண்டிய காற்றை உண்டு நீர்கொள்ளாமல் இருக்க வாழையிலையில் பொதிந்து மாவிருக்கும் கலங்களில் வைப்பார்கள்.

ஒவ்வொன்றும் சித்தமாகி வருகையில் நாள்களை எண்ணி பின்பு மணிகளையும் நொடிகளையும் எண்ணி காத்திருப்பர் நகர்மக்கள். ஆடி முழுமைக்கு சில நாட்களுக்கு முன்னரே மழை நின்று சாரலாகும். அன்னையின் ஆடையின் முந்தானை நூல் பிசிறு போன்றது அச்சாரல் என்பர் சூதர். இளையோர் அதிலாடிக் களிப்பார்கள். சேற்றுக்களி படிந்த நகருக்குள் நுழைந்து வரதாவில் காலளைந்து வழுக்கி விழுந்தெழுந்து புரண்டு கூவி நகைப்பார்கள். பின் இளவெயிலாகும். வெயில் மூத்து வெள்ளியாகும். வரதா வெளுத்து ஒதுங்குவாள். சேறு சிப்பிகளாகும். “ஆடி முடிகிறது. ஆவணிப் பொன்முகில்கள் எழுகின்றன” என்று நிமித்திகர் அறிவிப்பார்.

ஆடிமுடிவைக் கொண்டாட அணிகொண்டிருந்த சிற்றாலயங்களின் கருவறைக்குள் நெய்விளக்கு ஒளியில் மூதாதை தெய்வங்கள் வெள்ளிவிழிகள் பொறித்த முகங்களுடன் புன்னகைக்கும் வாய்களுடன் வீதியை நோக்கி அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு முன் விரித்த வாழையிலைகளின்மேல் ஆவி பறக்கும் அன்னமும் அப்பங்களும் அக்கார அடிசிலும் படைக்கப்பட்டிருந்தன. சூழ்ந்திருந்த பந்த ஒளியில் அன்னம் குருதிநிறம் கொண்டிருந்தது. மலர்சூடி அமர்ந்திருந்த மூதன்னையருக்கு முன்பு குருதியுடன் சேர்த்துப் பிசைந்த அன்னம் கவளக் குவைகளாக படைக்கப்பட்டிருந்தது.

படையல் மேடைகளில் இருவிரலால் உடுக்குகளை மீட்டி பூசகர் நிற்க முதுவேலர் உடம்பெங்கும் நீறு பூசி விரிசடை தோளிலாக்கி காலில் கட்டிய கழல்மணிகள் ஒலிக்க தோள்கள் நடுங்க கைகள் விதிர்த்து துடிக்க சன்னதம் கொண்டு துள்ளி ஆடினர். மலையிறங்கி வந்த அறியாத் தொல்மொழியில் ஆவதையும் அணைவதையும் உரைத்தனர். முழவுகளை மீட்டிய சூதர்கள் அவர்கள் மண் நிகழ்ந்தபோது ஆற்றிய பெருவினைகளை பாடலெடுத்துப் பரவினர். அவர்களின் கொடிவழி வந்த குடியினர் காலை நீராடி ஈர ஆடை அணிந்து குழலில் மலர்முடித்து உடலில் நறுஞ்சுண்ணமும் சாம்பலும் பூசி கை வணங்கி நின்றிருந்தனர்.

கல்பாவிய மையச்சாலை வழியாக சகடங்கள் கடகடத்து ஒலிக்க தேர்களும் புரவிகளும் சென்றன. காவல் புரவிகளின் எடை மிகுந்த லாடக் குளம்புகள் நூறு துடிகள் இணைந்தொலித்த ஓசை என அவ்வணி ஊர்வலத்தை முன்னெடுத்துச் சென்றன. சாலைகளின் இருபக்கமும் உப்பரிகைகளில் நின்ற நகர் மக்கள் குரவையொலி எழுப்பி புது மலரள்ளி வீசி விதர்ப்பினியை வணங்கினர். “ஆடி நிறையும் நன்னாளில் முதல் முகமென எங்கள் முன் எழுந்தருள வேண்டியது திருமகளே” என்றார் ஒரு முதியவர். “இன்று கண்ட இந்த முகம் இவ்வாண்டு முழுக்க எங்கள் இல்லங்களில் வளம் நிறைக்கும்” என்றார் பிறிதொருவர்.

கௌண்டின்யபுரியின் மக்கள் ஆடி நிறைவிற்கு ருக்மிணி எழுந்தருள்வதை பதினெட்டு ஆண்டுகளாக ஒவ்வொரு முறையும் விழி நிறைய கண்டவர்கள். அன்னை மடியமர்ந்து சிறு நீலமலர் போல அவள் சென்றதை முன்பு கண்டிருந்த அன்னையர் மேனி பொலிந்து அவள் சென்றதைக்கண்டு விழி நிறைந்து கை கூப்பினர். வாழ்த்தொலிகளால் கொண்டு செல்லப்பட்டவள் போல அவள் நகரத்தெருக்களில் சென்றாள்.

நகராளும் ஒன்பது கொற்றவையரின் ஆலயங்கள் பிறை வடிவமாக வளைந்து நகரை கையணைத்துச் சென்ற வரதாவின் கரை ஓரமாகவே அமைந்திருந்தன. நகர் நடுவே இருந்த அரண்மனையிலிருந்து கிளம்பி கிழக்கு கோட்டையின் வாயில் வரை சென்று வெளியே இறங்கி வரதாவில் அமைந்த பெரிய படித்துறையை அணுகியது அரச நெடுஞ்சாலை. அங்கே நீருக்குள் காலிறக்கி நின்ற படகுத்துறையில் பாய் சுருக்கிய காவல்படகுகள் மொய்த்து அலைகளிலாடிக் கிடந்தன. அவற்றை நோக்கிச்சென்ற கல்பாவிய சாலையில் இருந்து பிரிந்து சென்ற செம்மண் சாலை வரதாவின் கரைமேடு வழியாகவே சென்றது.

ஆடியில் வணிகமில்லாததனால் பொதிப்படகுகள் ஒன்றிரண்டே தெரிந்தன. நான்கு துலாக்கள் கரையிலிருந்து பொதிகளைத் தூக்கி அப்படகுகளின் திறந்த நீளப்பரப்பில் வைத்துக் கொண்டிருந்தன. அலைகளில் துள்ளிய படகுகள் அன்னை ஊட்டும் உணவுக்கு வாய்திறந்த சிறுபறவைக் குஞ்சுகள் போல் தோன்றின. பயணியர் படகுகளில் சிற்றூரில் இருந்து மக்கள் வந்திறங்கி பலவண்ணங்கள் குழம்பிய பெருக்கென வழிந்து நகருக்குள் நுழைந்துகொண்டிருந்தனர்.

வரதாவின் ஓரமாக அமைந்த மலர்ச்சோலையின் நடுவே இருந்தது சைலபுத்ரியின் ஆலயம். ஆற்றுப்படுகை என்பதனால் பெரு மரங்களை அடுக்கி அடித்தளமெழுப்பி அதன் மேல் மரத்தால் கட்டப்பட்டு சுண்ணமும் அரக்கும் கலந்த வெண்சாந்து பூசி வண்ணச்சித்திரங்கள் வரைந்து சிறு களிச்செப்பு போல அணி செய்யப்பட்டிருந்த சைலபுத்ரியின் ஆலயத்தின் முன் பட்டு விதானத்துடன் சிறு பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. அமைச்சர் சரணரும் ஆலய காரியக்காரரும் ஏவலர் எழுவரும் முரசும் கொம்புமேந்திய சூதர் சூழ இளவரசிக்காக காத்து நின்றிருந்தனர்.

வரதாவின் இளங்காற்றில் சோலைவனத்து இலைகள் குலைந்து கிளைகள் கொப்பளித்துக் கொண்டிருந்தன. வானில் விடியலின் கன்னிவெளிச்சம் பரவியிருந்தமையால் இலைகள் நிழல் வடிவங்களாகவே தெரிந்தன. சோலைக்கு அப்பால் ஓடிய வரதாவின் நீர்ப்பரப்பின் பகைப்புலத்தில் ஒவ்வொரு இலையையும் தனித்தனியாக பார்க்க முடிந்தது. காலையிலே நீர் தெளித்து இறுக்கப்பட்டிருந்த செம்மண் பாதையில் சகடத் தடங்கள் பதிந்து புரிமுறுகும் ஒலியுடன் சைலபுத்ரியின் ஆலயத்தை அணுகின.

காவலுக்கு முன்சென்ற புரவிவீரர்கள் படைக்கலங்களை தாழ்த்தியபடி இரு பிரிவாக பிரிந்து ஆலயத்தை வளைத்து மறுபக்கம் சென்று இணைந்து நின்றனர். இசைச்சூதர் எழுப்பிய நல்லிசையை அணிச்சேடியரின் வாழ்த்தை அங்கே கூடி நின்றவர்கள் எதிரொலியென எழுப்பி வரவேற்றனர். இசைச்சூதரின் தேர் இடப்பக்கம் விலகி வளைந்து சென்று நின்றது. அணி குலையாமல் இசை முறியாமல் அதிலிருந்து இறங்கிய சூதர் மூன்று நிரைகளாக தங்களை தொகுத்துக் கொண்டனர்.

அணிச்சேடியரின் தேர் வலப்பக்கமாக விலகிச்சென்று நிற்க அதிலிருந்து தாலங்களுடன் நிரை குலையாது இறங்கிய சேடியர் ஆலயமுகப்பு நோக்கி தாலங்களுடன் சென்று தலை வணங்கி மங்கலம் காட்டினர். மங்கலச் சேடியர் விலக பொன்துலங்கும் மெல்லொளி எழுப்பி ஆடி வந்து நின்றது வெண்புரவிகள் இழுத்த தேர். கணக்குகூர்ந்து அமைத்த தேர் நின்றபோது யாழின் ஆணியை முறுக்கும் மெல்லிய ஒலியை மட்டுமே எழுப்பியது. தலைக்கோலி “விதர்ப்பினி! விண்ணளக்கும் மாயனின் துணையென பொலியும் அன்னபூரணி, இவ்வாலயத்திற்கு எழுந்தருளியுள்ளார்” என்று சொல்ல காரியக்காரர் தலைவணங்கி “அடியோங்கள் வாழ்த்தப்பெற்றோம். இளவரசி, தங்கள் வரவு சிறப்புறுக!” என்றார். அமைச்சரும் தலை வணங்கி “இளவரசி நல்வரவு கொள்க!” என்றார். அமிதை குனிந்து ருக்மிணியின் குழலைத் திருத்தி விரித்தாள். முந்தானையின் மடிப்பை மெல்ல சீர் செய்து ஒரு கையால் அதன் நுனியை பற்றிக் கொண்டாள். ருக்மிணி இடுப்பின் ஆடை மடிப்புகளை கையால் அழுத்தியபடி வலக்கையால் நெஞ்சைத் தொட்டு ”வணங்குகிறேன் அமைச்சரே” என்றபடி இறங்கி செம்மண் பரப்பின் மேல் காலை வைத்து நடந்தாள். அவள் கால்கள் சிவப்பதை அமிதை குனிந்து நோக்கினாள்.

இருபுறமும் இசைச்சூதர்களின் பேரிசை எழுந்து அலையடிக்க அவள் ஆலயத்துள் நுழைந்ததும் ஆலயச்சூதர் இரு பிரிவினராகப் பிரிந்து இசையுடன் அவளை தொடர்ந்தனர். அவளுக்கு இடப்புறம் நடந்த காரியக்காரர் ”நிமித்திகர் வகுத்த நன்னேரத்தில் எழுந்தருளியுள்ளீர்கள் இளவரசி. சைலபுத்ரியின் பேரருள் தங்கள் மேல் பொழிவதாக!” என்றார். முகமண்டபத்தில் வெண்மலர் விரித்து அமைக்கப்பட்ட மலர்வட்டத்தின் நடுவே ஏழு திரியிட்ட குத்துவிளக்கு சுடரிதழ்கள் நெளிய நின்றிருந்தது. சாளக்கிராமம், பொற்குவளைநீர், மலர், காய், கனி, தேன், அரக்கு, கோரோசனை என எட்டு மலைமங்கலங்கள் அன்னைக்கு படைக்கப்பட்டிருந்தன.

கருவறையில் வெண்காளை மேல் வலக்கால் மடித்து அமர்ந்து வலது மேல்கையில் விழிமணி மாலையும் இடது மேல்கையில் முப்பிரி வேலும் கொண்டு, கீழிருகைகளில் அஞ்சலும் அருளலும் காட்டி, நீலம் பதித்த பொன் விழிகள் மலர்ந்து, மணிமுடி சூடி அன்னை அமர்ந்திருந்தாள். செங்குழம்பு பூசப்பட்ட அவள் இடக்கால் நகங்கள் பொற்சிப்பிகளாக தெரிந்தன. காலடியில் வெண்மலர்கள் கணி வைக்கப்பட்டிருக்க அருகே புதுமரத்தாலங்களில் அன்னங்களும் மலைத்தேனும் படைக்கப்பட்டிருந்தன. இருபுறமும் நின்ற பூசகர் விழிதிருப்பி காரியக்காரரை நோக்க அவர் கண்ணசைத்ததும் பூசனைகள் தொடங்கின.

மூன்று சுடராட்டு நறும் புகையாட்டு மலர்ப்பொழிவு மந்திரம் ஓதுதல் கொடையளித்தல் பாதம் சூடுதல் என வழிபாடுகள் முறைமையாக நடந்தன. கைகூப்பி ருக்மிணி நிற்க அமிதை அவள் மேலாடையைப் பற்றியபடி கைகளை நெஞ்சோடு சேர்த்து அழுத்தி நின்றாள். சைலபுத்ரி முலைமுகிழாத சிறுமி. உலகறியாத இளம்புன்னகை கொண்டவள். அந்தக் காளை மேல் இருந்து குதித்தோடி வந்து இடை வளைத்து கட்டிக் கொள்வாளென்று தோன்றியது. அவளுக்கு வெண்சிற்றாடை அணிவித்து அதன் மேல் நீலமணி பதித்த பொன்னாரமும் பொன்மேகலையும் சுற்றியிருந்தார்கள். சிறுமுலை எழுந்த மார்பில் செந்நிறக் கல்பதிந்த ஆரம் சரிந்தது. அணிகளுக்குள் அவள் சிறைப்பட்டவள் போலிருந்தாள்.

அன்னையை வணங்கி திரும்பிய ருக்மிணி நின்று அங்குள்ள மரங்களை நோக்கி ”அன்னையே, இங்கு முன்பொருமுறை வந்தபோது மகிழ மரத்திலேறி விழுந்தேனே நினைவிருக்கிறதா?” என்றாள். ”ஆம், இளவரசி” என்றாள் அமிதை. ”இங்குள்ள அத்தனை மரங்களிலும் நான் ஏறியிருக்கிறேன். இப்போதுகூட இவ்வணிகளின்றி வந்திருந்தால் இம்மரங்களிலேறி மலர் உதிர்த்திருப்பேன்” என்று உடல் சுற்றி சூழநோக்கி முகம் மலர சிரித்து “எப்போதும் கனி பழுத்திருக்கும் ஏழு நெல்லி மரங்கள் இங்குள்ளன. ஒவ்வொன்றின் சுவையும் நானறிவேன். இங்குள்ள செண்பகங்கள் ஏழுவகையானவை. மூன்று கிளைகளை ஒரே சமயம் பற்றிக்கொண்டு அதில் ஏற வேண்டும். முல்லைக் கொடி படர்ந்த பந்தல்மேல் கூட இளவயதில் நான் ஏறியிருக்கிறேன்” என்றாள்.

“ஆம், இளவரசி” என்றாள் அமிதை. முதிய காரியக்காரர் “இளவரசி, அனைத்தும் நினைவில் வைத்திருக்கிறீர்கள்” என்றார். “ருத்ரரே, ஓவ்வொரு நாளும் சிறுமியென இச்சோலையில் ஆடிக்கொண்டிருக்கிறேன்” என்றாள் ருக்மிணி. பூசகர் கொண்டு வந்த தாலத்தில் இருந்து சந்தனச் சாறெடுத்து நெற்றியிலும் கழுத்திலும் பூசினாள். வலம் வந்து நான்கு வாயில்களையும் வணங்கிவிட்டு முகப்புக்கு வந்தாள்.

“இளவரசி, இன்னும் எட்டு அன்னையர் எஞ்சியுள்ளனர்” என்றாள் அமிதை. ”ஆம்” என்றபடி ருக்மிணி மெல்ல நடந்து வந்தாள். அவளைக்காத்து தேர் திரும்பி நின்றிருந்தது. “ஏறிக்கொள்ளுங்கள் இளவரசி” என்று அமிதை சொல்ல படிகளில் காலெடுத்து வைத்து ஏறி அவள் அமர்ந்து கொண்டதும் சரணர் தலைவணங்கி விரைந்தோடி தன் புரவியிலேறிக் கொண்டார். அவரும் இரு காவலர்களும் முழுப்பாய்ச்சலில் அடுத்த துர்க்கையின் ஆலயம் நோக்கி சென்றனர்.

ருக்மிணி திரும்பி ஆலயத்திற்குள் அமர்ந்திருந்த அன்னையை நோக்கி “சைலபுத்ரி வெண்பனி சூடிய இமவானின் மகள். செம்புலித்தோல் அணிந்த அனல்வண்ணனுக்காக பிறந்தவள்” என்றாள். அமிதை ”ஆம் இளவரசி. ஆனால் தான் எதற்காகப் பிறந்தோம் யாருக்காக மலைமகள் வடிவெடுத்தோம் என்று இன்னமும் அறிந்திலாத இளம் கன்னி அவள்” என்றாள்.

தேர் நகர்ந்து வாயிலை கடக்கும்போது ருக்மிணி மீண்டும் ஒரு முறை நோக்கி ”அனைத்தும் அறிந்தும் தன் அறியா இளமையில் திளைப்பவளென்று தோன்றுகிறது அவள் முகம்” என்றாள். விடியத்தொடங்கிவிட்டிருந்தது. வரதாவின் மறுகரையில் செறிந்திருந்த குறுங்காட்டில் இருந்து பறவைக்கூட்டங்கள் எழுந்து நீர்ப்பரப்பின் மேல் சிறகடித்தன.

இரண்டாவது துர்க்கையின் ஆலயம் ஈச்சமரங்கள் சூழ்ந்த சிறுகாட்டுக்குள் இருந்தது. பெரிய மரத்தடிகளை நட்டு அவற்றின் மேல் மூங்கில்கள் பாவி தரையிட்டு ஈச்சஓலைக்கூரை அமைத்து தவக்குடில் போல் கட்டப்பட்ட ஆலயம் கூப்பிய கை போல் எழுந்து ஒளி ஊறிக்கொண்டிருந்த முகிலற்ற வானின் பகைப்புலத்தில் நின்றிருந்தது. முந்தைய நாள் புதிதாக வேயப்ப்பட்டிருந்த பழுத்த ஈச்சையோலைப்பரப்பு பொன்னிறக் கூந்தலின் அலைகள் போல் தெரிந்தது. முகப்பந்தலின் அருகே சென்று நின்ற தேரை நோக்கி முன்பே அங்கு சென்று நின்றிருந்த சரணரும் பிரம்மசாரிணி ஆலயத்தின் காரியக்காரரும் ருக்மிணியை முகமன் சொல்லி வரவேற்றனர்.

சாலையிலிருந்தே தெரிந்த திறந்த கருவறையில் வலது மேல்கையில் உருத்திரவிழி மாலையும் இடதுமேற்கையில் கமண்டலமும் வலது கீழ்க்கையில் சுவடியும் இடது கீழ்க்கையில் அருட்குறியுமாக வெண்கலை ஆடை அணிந்து சடைமகுடம் சூடி அன்னை அமர்ந்திருந்தாள். கழுத்திலும் இடையிலும் உருத்திரவிழிக் கருமணி மாலைகள் சுற்றியிருந்தாள். பாதி விழி மூடி புன்னகை இதழ் ஊறி தன்னுள் எழுந்த நினைவொன்றில் முற்றிலும் நனைந்து அவள் இருந்தாள்.

ஆலயத்தை மும்முறை வலம்வந்து கருவறையின் படிநிரைக்கு இடம் நின்று அன்னையை வணங்கினாள் ருக்மிணி. மலரும் நீரும் பெற்று மீள்கையில் பின்னால் கைகட்டி வந்த காரியக்காரர் “தன்னுள் ஈசன் உறைவதை அறிந்து பிற அனைத்தையும் ஒதுக்கி தவம் பூண்டு நின்றிருக்கும் அன்னை இவள் என்பர் நூலோர்” என்றார். ருக்மிணி அதை கேட்டது போல் தெரியவில்லை. திரும்பி வந்து தேரில் ஏறி அமர்ந்தபின் ஆலய வாயில் தாண்டும்போதுகூட அவள் திரும்பிப் பார்க்கவில்லை.

அனலடுப்பில் நீர்க்கலம் வெம்மையை வாங்கத் தொடங்குவதுபோல் தெரிந்தாள். வெம்மைகொள்வதன் ரீங்காரம் எழுகிறது. கலப்புறம் சிவக்கிறது. அறியாது கை நீட்டுபவள் போல ருக்மிணியின் தோளை தொட்டுப் பார்த்தாள் அமிதை. அவள் உடல் வெம்மை கொண்டிருப்பதை அறிந்து மெய்யோ என மயங்கி பிறிதொரு முறை தொட்டு உறுதி செய்து கொண்டபின் மூச்செறிந்தாள். அவள் முகத்தில் இலைத்தழைப்பினூடாக வந்த வரதாவின் ஒளி திவலைகளாகத் தெறித்து சிதறிச்சென்றது.

மூன்றாவது அன்னை செம்மலர்கள் பற்றி எரிந்த அரளிக்காட்டின் நடுவிலிருந்தாள். கொம்பரக்கு கலந்த சுண்ணத்தால் இளஞ்செந்நிறம் பூசப்பட்ட மரப்பலகைகளால் கட்டப்பட்ட ஆலயத்தின் மேற்கூரை வாழைப்பூ போல் அமைந்திருந்தது. முகமண்டபம் அதிலொரு இதழ் எழுந்து வளைந்தது போல். செம்பட்டாலான பந்தலில் நின்றிருந்த காரியக்காரர் அவளை அணுகி வணங்கி முகமன் சொல்லி உடன் வந்தார். “அன்னைக்கு முதல்ருத்ரை என்று பெயர். கன்னி கொள்ளும் முதல் அனல் அவள். உள்ளம் கொண்ட பிறைசூடிக்காக இங்கு ஐந்தழல் நடுவே தவம் செய்கிறாள்” என்றார்.

ருக்மிணி படிகடந்த போதே விழிதூக்கி அன்னையை நோக்கினாள். தழல் கொழுந்துகளென உடல்வரிகள் நெளியும் வேங்கை மேல் வலது மேற்கையில் முப்பிரி வேலும் இடது மேற்கையில் வாளும் கீழ் கைகளில் அஞ்சல் அருளல் முத்திரைகளுமாக அன்னை அமர்ந்திருந்தாள். அவள் தலையில் இளம்பிறை ஒளிவிட்டது. திறந்த விழிகள் எங்கென இன்றி திசைவெறித்தன. முக மண்டபத்தில் செம்மலர்க் களம் நடுவே ஒற்றைக் கொழுந்து நின்றாடிய தீப்பந்தம். அதன் நெய்யுருகி சொட்டி மலர்கள் பொசுங்கிய மணம் எழுந்தது.

“ஊழ்கமலைமுடி போல் அன்னை தன் தவத்தை பிறையென நெற்றியில் சூடுகிறாள்” என்றார் பூசகர். மூன்று பூசகர்கள் கொழுந்தாடும் பந்தங்களைச் சுழற்றி அன்னைக்கு சுடராட்டு காட்ட தானும் ஒரு தழலாக அவள் அங்கிருந்தாள். அவள் நெற்றியில் அமைக்கப்பட்டிருந்த வெண்பளிங்கு கீற்றுநிலா குருதி சூடிய வாளென மின்னி அணைந்தது.

நான்காவது அன்னையின் ஆலயத்திற்குச் செல்லும்போது ருக்மிணி மிகவும் மாறிவிட்டிருப்பதை அமிதை உணர்ந்தாள். அறியா ஒருவர் குடி வந்த இல்லம் போல் ஆகியது அவள் உடல். இனி தன்னால் அதை தொடமுடியுமென்று அவளுக்கு தோன்றவில்லை. கூஷ்மாண்டையின் ஆலயத்தின்முன் போடப்பட்ட மரப்பட்டைப் பந்தலில் தேர் நின்றது. வந்து பணிந்த காரியக்காரர் ”நான்காவது துர்க்கையின் ஆலயம் இளவரசி” என்றபோது சிம்மம் என மெல்ல எழுந்து தேர்ச்சகடங்கள் முனக கால் வைத்து இறங்கினாள். அவள் உடலின் எடையும் பல மடங்காகிவிட்டது போல.

கருவறையில் நுங்கென முலைகள் திமிர்த்த கன்னங்கரிய உடலில் அறுந்த தலைகளாலான குருதி சொட்டும் மாலை அணிந்து பல்சிரிக்கும் கபாலங்களை குண்டலங்களாக்கி விழுதுகளென விரிந்த நெடுஞ்சடைகளுடன் கனல்விழிகள் விரித்து குருதியுண்ட ஓநாய் என நாநீட்டி அன்னை நின்றிருந்தாள். இரு மேற்கைகளிலும் வெங்குருதி நிறைத்த கலங்கள். வலது கீழ் கையில் முப்பிரி வேல். இடது கீழ் கையில் ஒளிரும் வாள். அவள் காலடியில் சந்திரனும் சூரியனும் வளைந்து தாழ அவர்களின் தலைமேல் குருதி சொட்டியது. கீழே கற்பீடத்தின் வளைவுகளில் கைகூப்பி வியந்திருந்தனர் முனிவர்.

ஏழு தூண்கள் சூழ்ந்த முகமண்டபத்தில் பன்னிரு குவளைகளில் புதிய குருதி படைக்கப்பட்டிருந்தது. அவ்வளையத்தின் நடுவே காலையில் அவள் பலிகொண்ட மோட்டெருமையின் வெட்டுண்ட தலை நிணவிழுதுகள் வழிய, கொம்புகள் விரிய தலை சரித்து, முள்மயிர் கொண்ட இமைகளுக்குள் சிப்பிகள் என வெண்விழி மட்டும் தெரிய, வாயோரத்தில் மடிந்து தொங்கிய தடித்த நீலச்செந்நா குருதி துளித்து மணியாகி நிற்க வைக்கப்பட்டிருந்தது. காரியக்காரர் ”அன்னை இப்புவி வெல்ல எழுந்த பெருஞ்சினம் கொண்டவள். தவ நிறைவில் இறைவன் அணுகாமை கண்டு அனலானவள்” என்றார். எச்சொற்களுக்கும் அப்பால் இருந்தாள் ருக்மிணி.

முந்தைய கட்டுரைஎம்.எஸ்.வி பாடும்போது
அடுத்த கட்டுரை3. நான் பிரம்மத்தை நிராகரிக்காமலிருப்பேனாக!