ஒழுக்கம்:கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

 எப்படி இருக்கிறீர்கள்? சென்னைப் பயணம் நல்லபடியாக அமைந்ததா? இணையத்தில் உங்கள் பதிவுகளின் மூலம், நீங்கள் வரிசையாகத் திருமணங்களில் பங்கெடுத்து பழகியவர்களையும் மதிப்புக்குரியவர்களையும் பெரியவர்களையும் நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் சந்திக்கும் வாய்ப்புப்பெற்றுவருகிறீர்கள் என்பது அறிந்து மகிழ்ச்சி.

 கலாச்சாரம் ஒழுக்கம் பற்றிய உங்களின் பதில்கள் [ஒழுக்கம், பண்பாடு:இரு கேள்விகள் ] நன்றாக இருந்தன. இன்றைய இளைஞர்களில் பெரும்பான்மையினருக்கு இருக்கும் அறியாமை அது. ‘பழம்பெருமைமிக்க தமிழ்க் கலாச்சாரம் அழிகிறது, ஒழுக்கம் கெட்டுப்போய்விட்டது’ என்று விரக்தியும் கோபமும் கொண்டு வெறிபிடித்தவர்களைப் போல் வாதாடும் நிறைய பேரைச் சந்தித்திருக்கிறேன். ‘எதப்பா அந்தக் கலாச்சாரம்? எதெல்லாம் தமிழ்க் கலாச்சாரத்துக்குள்ளே அடக்கம்’ என்று திருப்பிக் கேட்டால், இது கூடவா தெரியாது என்பதுபோல் முறைப்பார்கள். ஆனால் ஒருவர் கூட தெளிவாக பதில் சொல்லியதில்லை. சங்க காலத்து களவொழுக்கம் பற்றிப் பேசினாலோ, ஆங்கிலேயர்கள் கொண்டுவந்த ஒழுக்கம் பற்றிய கருத்துக்கள் இப்போது தமிழ்ப் பண்பாடாக ஆகிவிட்டது என்று சொன்னாலோ நமக்குத் தமிழினத் துரோகி என்று பட்டம் கொடுத்துவிடுவார்கள். மறுபரிசீலினைக்கு அநேகமாக ஒருவர்கூட முன்வந்ததில்லை. தங்களைத் தாங்களே பண்பாட்டுக் காவலர்களாக நியமித்துக்கொண்ட பலர் பரப்பும் அவதூறுகளும் இதற்குக் காரணம். முன்பெல்லாம் சிவசேனாவைக் கடுமையாக விமர்சித்த பலர் இப்போது ‘அவனுக்கு இருக்கற மொழிப்பற்றும், இன உணர்வும், கலாச்சாரத்தைக் காக்கற தீவிரமும் நம்ம ஆளுங்களுக்கு இல்லையே’ என்று பேச ஆரம்பித்திருப்பது பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. சமீபத்தில் நடிகர்கள் நடத்திய உண்ணாவிரதத்தின் போது, அந்தப் பந்தலில் ‘தமிழர் சேனா’ என்ற இயக்கத்தின் சார்பில் பிட் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தைக் கற்காலத்துக் கொண்டுபோய்விடும் இலட்சியத்தோடு ஒரு கும்பல் தயாராகிவிட்டதோ என்று பயமாகவே இருக்கிறது.

 சார்லஸ்.

அன்புள்ள சார்லஸ்

உங்கள் கடிதம்.

ஏன் ஒழுக்கம் சார்ந்த விஷயங்களை சிவசேனாவோ பாட்டாளி மக்கள் கட்சியோ கையில் எடுத்துக்கொள்கின்றன? அதில் ஓர் உளவியல் இருக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒன்று தெரியும், உள்ளூர அவன் ஒழுக்கமானவனல்ல. ஆழ்மனதுக்கு ஒழுக்கமேதும் இல்லை. அந்த ஒழுக்கமின்மை சமூகத்தில் பரவிவிட்டால் தான் வாழும் உலகம் சிதைந்து விடும் என அவன் அச்சம் கொள்கிறான். ஆகவே பொது ஒழுக்கத்துக்காக அவன் கவலை தெரிவித்தபடியே இருக்கிறான்.  இதை நாம் செய்தித்தாள் படிக்கும் பொது இடங்களில் எல்லாம் ஒலிக்கக் கேட்கலாம். அந்த சாதாரண மனிதனை ஒழுக்கத்தைக் காக்க நடக்கும் செயல்பாடுகள் கவர்கின்றன. அவற்றைச்செய்பவர்களைப்பற்றி ஒரு நல்ல எண்ணம் உருவாகிறது. இதைத்தான் அரசியல் கட்சிகள் ஓர் உத்தியாகக் கையில் எடுத்துக்கொள்கின்றன
ஜெ

888

அன்புள்ள ஐயா வணக்கம்
என் கேள்விக்கு மிக நீண்ட விளக்கம் அளித்ததற்கு நன்றி. ஓரளவு தெளிவு பெற்றுளேன். ஒரு வகையில் உங்களை என் வழிகாட்டியாக கொள்கிறேன்.
20 வருடங்களுக்கு முன் கிராமம் சிறுநகரங்களில் பெண்கள் சுடிதார் அணிவதையோ ஆண்களுடன் தெருவில் பேசுவதையோ மற்றவர்கள் உறுத்து பார்ப்பார்கள். ஆனால் இன்று கிராமத்தில் கூட சுடிதார் வந்து விட்டது. இன்று பெருநகரங்களில் ஜீன்ஸ் அணியும் பெண்கள் சாதாரணம். இந்த தலை முறைக்கு அது உறுத்தலாக இல்லை. இன்னும் 20 வருடங்கள் கழித்து கிராமங்களில் (அப்படி ஒன்று இருந்தால்) கூட ஜீன்ஸ் சாதாரணம் ஆகலாம். 40, 50 வருடங்கள் கழித்து பெண்கள்  குடிப்பது, புகைப்பது போன்றவை அந்த தலைமுறைக்கு சாதரணமாக இருக்கலாம்.
அதே போல் பால் உறவும் அவ்வாறு அனுமதிக்கப் படலாம்.
ஆக, ஒழுக்க விதிகள் காலந்தோறும் மாறுபாடு அடையக் கூடியவை. சரி  பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்றோ பெண்களுக்கான ஒழுக்க விதிகள் இவைதான் என்றோ…(உதாரணமாக புகைத்தல், குடி உள்ளிட்டவை) எனக்கு யாரும் எடுத்து சொல்லவில்லை. எப்படி என் மனதுக்குள் இப்படி ஒரு எண்ணம், பொது புத்தி உருவானது? எல்லோருக்கும் இதே போல் உள்ளதே?விக்டோரியன் மொராலிட்டி’  பற்றி கூறினீர்கள். இவ்வாறு கலாச்சார மாற்றம் குறித்து ஏதேனும் புத்தகம் உள்ளதா?ரகுஅன்புள்ள ரகுநாதன்

அப்படி தனியாக புத்தகங்கள் ஏதும் வந்தது மாதிரி தெரியவில்லை. ஆனால் எஸ்.வி.ராமகிருஷ்ணன் எழுதி உயிர்மை வெளியிட்டிருக்கும் சில நூல்கள் இந்த தளத்தை’ சமூகவரலாறு சார்ந்து சிந்திப்பதற்கான அடிபப்டைகளை அமைத்துத் தருகின்றன. ‘வைஸ்ராயின் கடைசி நிமிடங்கள்’ ஓர் உதாரணம். சென்றகாலத்தைப்பற்றிய ஒரு சித்திரத்தை அவை அளிக்கின்றன
ஜெ

**

அன்புள்ள ஜெயமோகன்

ஒழுக்கத்தைப்பற்றி நீங்கள் எழுதியிருந்த விளக்கம் மிகவும் முதிர்ச்சியுடன் காணப்பட்டது. இரண்டு வகையிலேதான் எல்லாரும் பதில் சொல்வார்கள். ஒழுக்கம் கறாராக இருக்க வேண்டும் என்று சொல்லும் பழமைவாதிகள் உண்டு. ஒழுக்கமாவது ஒன்றாவது என்று சொல்லும் புதுமைவாதிகள் உண்டு. புதுமைவாதிகளாக இருப்பவர்கள் திடீரென்று ஒரு வயதில் பழமைவாதிகளாக ஆகிவிடுவதைக் காணலாம். பழமைவாதிகளாக இருப்பவர்கள் தங்கள் குடும்பத்துக்குள் என்று வரும்போது புதுமைகளை அங்கீகரிப்பதையும் காணலாம். ஒழுக்கத்தைப்பற்றி பேசுபவர்கள் உண்மையிலேயே ஒழுக்கத்தைப்பற்றித்தான் பேசுகிறார்களா இல்லை வேறு எதையோ பேசுவதற்கு ஒழுக்க விஷயங்களை ஒரு சாக்காகக் கொள்கிறார்களா என்பதெல்லாம் யோசிக்க வேண்டிய காரியங்கள். ஒழுக்கத்தை ஒரு தனிநபர் விஷயமாக கொள்ளலாம். அந்த தனிநபர் விஷயம் சமூகத்தின் ஒருமைப்பாடுக்கும் நட்புக்கும் பங்கம் வராதபடி இருந்தால் ஒன்றும் சிக்கல் இல்லை என்று எனக்கு தோன்றுகிறது

கனகராஜ்

அன்புள்ள கனகராஜ்

நீங்கள் சொல்வதை ஏற்கிறேன். ஆனால் தனிமனித அளவிலும் ஒரு விஷயம் கவனத்துக்குரியது. சமூகத்தை பாதிக்காமல் ஒருவன் எதை வேண்டுமானாலும் செய்யலாமா? அவனுடைய உள்ளத்தையும் உடலையும் அழிக்கக்கூடியவற்றைச் செய்ய அவனுக்கு உரிமை உண்டா? அதைத்தான் நான் சொன்னேன். பிறரைச் சுரண்டாமலிருப்பதே ஒழுக்கம் என. பிறரைச் சுரண்டும் ஒழுக்கமின்மையானது பிறரை மட்டுமல்ல சுரண்டுபவனையே மெல்லமெல்ல அழிக்க ஆரம்பிக்கும்
ஜெ

முந்தைய கட்டுரைநகைச்சுவை:கடிதங்கள்
அடுத்த கட்டுரைநகைச்சுவை:மேலும் கடிதங்கள்