‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 57

பகுதி பத்து : கதிர்முகம் – 2

பீஷ்மகரின் சொல்தேர் சிற்றறை நோக்கி சென்ற ருக்மிணி இளம்தென்றலில் மலர்ச்சோலையில் நடப்பவள் போலிருந்தாள். அவளைத் தொடர்ந்த அமிதை அனல் மேல் தாவுபவள் போல உடல் பதறினாள். இருபக்கமும் நோக்கி தவித்து நெஞ்சிலிருந்து இதழ்களுக்கு வந்த சொற்களை மீண்டும் விழுங்கி மூச்சிரைத்தாள். அறை வாயிலில் நின்ற காவலன் அவளுக்கு முறைவணக்கம் செய்து வருகையை அறிவிக்க உள்ளே சென்றதும் கதவு மெல்ல மூடிக்கொண்டது. ருக்மிணியின் தோளைப்பற்றிய அமிதை “மகளே” என்றாள். ருக்மிணி திரும்பி புன்னகைத்து அமிதையின் கைகள்மேல் தன் கைகளை வைத்து “அஞ்ச வேண்டாம் அன்னையே” என்றாள். “சொல்தேர்ந்து உரைக்க உனக்கு கற்றுத்தரவேண்டியதில்லை மகளே. ஆயினும் இத்தருணம் என்னை அச்சுறுத்துகிறது” என்றாள் அமிதை. ருக்மிணி புன்னகையுடன் “என் தெய்வங்களும் மூதன்னையரும் உடனிருக்கிறார்கள், அஞ்ச வேண்டாம்” என்று மீண்டும் சொன்னாள்.

காவலன் வாயில் திறந்து அவளை உள்ளே செல்லும்படி தலைவணங்கினான். ருக்மிணி வாயிலைக் கடந்து உள்ளே சென்றபோது அவளுக்குப்பின் கதவு ஓசையின்றி மூடியது. அவள் காலடியோசையைக்கேட்டு ருக்மி பீடம் ஒலியுடன் பின்னகர விசையுடன் எழுந்து கைநீட்டி உரக்கக்கூவியபடி அருகில் வந்தான். “உன் சொல் சற்று முன் என்னை வந்தடைந்தது. அது உன் சொல்லா என்று மட்டுமே இப்போது அறிய விழைகிறேன்.” ருக்மிணி “அணுக்கச்சேடி வந்து சொன்ன சொல் என்றால் அது நான் உரைக்கப் பணித்ததே” என்றாள். ஒரு கணம் தளர்ந்த ருக்மி நெய்யில் தீயென பற்றிக் கொண்ட சினத்தின் விசையால் மீண்டும் சொல்லெடுத்து “எண்ணித்தான் இதை உரைக்கிறாயா?” என்றான்.

“இதில் மறு சொல் என உரைக்க நான் விழையவில்லை மூத்தவரே” என்றாள் ருக்மிணி. “இது என் இறுதிச்சொல் என்று கொள்க!” சினத்தால் உடைந்த குரலில் “ஒரு போதும் உன் விழைவு நிறைவேறாது” என்றான் ருக்மி. பீஷ்மகர் அவனிடம் “மைந்தா, நீ அமர்க! சொல்தேர் அவையென்பது அமர்ந்து பேசுவதற்குரியது. உணர்வுகளை பரிமாறுவதற்குரிய இடமல்ல இது. சொல்லாடி நல்முடிவை அடைய நாம் இங்கு கூடியிருக்கிறோம்” என்றார். “நான் சொல்லாடுவதற்கேதுமில்லை. என் சொல் இங்கு உள்ளது, நான் இதை ஏற்கப்போவதில்லை” என்றான் ருக்மி.

அரசரின் அருகே அமர்ந்திருந்த கீர்த்தி மெல்லிய குரலில் “அமர்ந்து கொள்ளுங்கள் இளவரசே. இளவரசியும் அமரட்டும்” என்றாள். சுஷமை “அவனுடைய சினம் இயல்பானதே. அரசன் சொன்ன சொல்லை திரும்பிப்பெறவேண்டுமென்பது வில் கிளம்பிய அம்பு மீள வேண்டுமென்பதைப்போல” என்றாள். ருக்மி தன் இருக்கையில் அமர்ந்து பெரிய கரிய கைகளை ஒன்றுடனொன்று விரல்பிணைத்து மடிமேல் வைத்துக்கொண்டு “ஆம். அவள் சொல்லட்டும்” என்றான். ருக்மிணி தன் இருக்கையில் அமர்ந்து மேலாடையை மடிமேல் வைத்து குழலை திருத்தியபின்பு கைகளை மார்மீது கட்டிக்கொண்டு விழிநிமிர்ந்தாள்.

அமர்ந்தது அனைவரையும் சினம் அடக்கி இயல்பாக்கியது. சில கணங்கள் அனைவரும் சொல்லின்றி அமர்ந்திருக்க கீர்த்தி “இளவரசி, தாங்கள் சேதிநாட்டரசரை மறுத்தமை இளவரசரை சினம் கொள்ளச்செய்திருக்கிறது. தங்கள் ஒப்புதல் கிடைத்தது என்றெண்ணி அவர் சேதிநாட்டரசருக்கு தங்கள் கையை வாக்களித்துவிட்டார். இன்று தங்கள் ஒப்புதல் இன்மை அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. சொல் வழுவுவதென்பது விதர்ப்பத்தின் இளவரசருக்கு சிறப்பல்ல என்றறிவீர்” என்றாள். சுஷமை “என்ன முறைப்பேச்சு இது? இங்கென்ன அவையா கூடியிருக்கிறது?” என்று சொன்னபடி முகம் சிவக்க கைகளை நீட்டி “ருக்மிணி, உன் சொல் பேதைப்பெண்ணொருத்தியின் சொல்லல்ல, விதர்ப்பத்தின் இளவரசியின் சொல். அதைப்பேண வேண்டியது உன் கடமை” என்றாள்.

“அன்னையே, நான் எவருக்கும் சொல்லளிக்கவில்லை. என் சொல்லென்ன என்று எவரும் கேட்கவுமில்லை” என்றாள் ருக்மிணி. “நீ மறுக்கவில்லை. நான் உன்னிடம் சேதிநாட்டரசன் உன் அன்புக்குரியவனா என்று கேட்டேன். ஆம் என்று நீ சொன்னாய்.அதையே உன் ஒப்புதல் என்று இளவரசனிடம் நான் அறிவித்தேன்” என்றாள் சுஷமை. ருக்மி “உன் ஒப்புதலை தந்தையிடமும் அன்னையிடமும் உசாவி அறிந்தபின்னரே நான் சொல்லளித்தேன்” என்றான். “மூத்தவரே, என்னிடம் நீங்கள் கேட்கவில்லை” என்றாள் ருக்மிணி. ருக்மி “உன்னிடம் நேரில் கேட்கும் மரபு இங்கு இல்லை. உன் விழைவை உகந்த முறையில் உசாவி அறிதல் மட்டுமே அரண்மனை வழக்கம்” என்றான்.

“மூத்தவரே, சிசுபாலரை என் அன்புக்குரியவர் என்றே எண்ணுகிறேன். என் அருள்கொண்டு நிறைபவர் என்று என் உள்ளம் சொல்கிறது. ஆனால் என் கை பற்றுபவர் அவரல்ல. வெறுப்பினால் அல்ல, என் கொழுநர் அவரல்ல என்பதனால் இதை சொல்கிறேன். அவர் என் கைபிடிக்க இயலாது. ஏனென்றால் அது நிகழாது” என்றாள். “நிகழும்…” என்றபடி தன் இருக்கையின் கைகளில் ஓங்கி அறைந்து ருக்மி எழுந்தான். “நிகழ்ந்தே ஆகும். நான் விதர்ப்பத்தின் இளவரசன். என் சொல் இங்கு திகழும். இல்லையேல் இந்நகரில் என் சடலம் விழும்.”

ருக்மிணி அவனை கனிவு நிறைந்த கண்களால் நோக்கி “என் சொற்களை புரிந்து கொள்ளுங்கள் மூத்தவரே. ஒரு பெண்ணின் கொழுநனே அவளை மணக்க முடியும். அவன் அவள் கை பற்றுவது என்பது அவ்வுறவை உலகறியும் தருணம் மட்டுமே. அவன் எவரென்று முன்னரே ஊழ் வகுத்துவிட்டது. காலம் அவனை அவளை நோக்கி கொண்டுவருகிறது. அவள் அறியாமலிருக்கலாம். அவனும் அறியாமலிருக்கலாம். மண்ணில் எவருமறியாமல் இருந்தாலும் அவர்கள் அறத்துணைவர்களாகிவிட்டார்கள்” என்றாள்.

இகழ்ச்சியுடன் இதழ்களை வளைத்து “நீ அறிந்துவிட்டாய் போலும்” என்று ருக்மி சொன்னான். “சொல், உன் கைபற்றப்போகும் கொழுநன் எவன்?” ருக்மிணி அவனை நோக்கி புன்னகையுடன் “நான் அறிந்ததே இன்றுதான். அவர் துவாரகை ஆளும் இளைய யாதவர்” என்றாள். தன்மேல் குளிர்ந்த எடை ஒன்று வீசப்பட்டது போல ருக்மி சற்று பின்னடைந்தான். உடனே கைகளை ஓங்கி அறைந்தபடி முன்னால் வந்து “என்ன சொல்கிறாய்? பேதை! எண்ணிச்சொல்கிறாயா?” என்றான். மறுகணம் அத்தனை சொற்களும் அலை பின்வாங்குவது போல் மறைய இரு கைகளையும் விரித்து உதடுகளை அசைத்து அருகிலிருந்த அனைவரையும் மாறி மாறி நோக்கினான். உயிரற்றவை போல் அவன் கைகள் தொடையை ஒட்டியபடி விழுந்தன.

சுஷமை “என்னடி சொல்கிறாய்?” என்று மூச்சடைக்கும் குரலில் கூவினாள். “நாம் மகதத்தின் சிற்றரசு. மகதத்தின் முதன்மைப் பகைவனுக்கு நீ மாலையிடுவதா?” கீர்த்தி “இளவரசி, யாதவ அரசரை எப்போது பார்த்தீர்கள்?” என்றாள். “நான் அவர் உடலை பார்த்ததில்லை” என்றாள் ருக்மிணி. “அவரை சொல்லால் அறிந்தேன். என் முன் எழுந்து வரக்கண்டேன்.”

“இப்போது தெரிகிறது என்ன நிகழ்ந்ததென்று” என சுஷமை கூச்சலிட்டாள். “அவன் உனக்கு தூதனுப்பியிருக்கிறான். சூதன் வழியாக உன் நெஞ்சில் விழைவை எழுப்பியிருக்கிறான். நீ பேசுவது அவ்விழைவால்தான்.” ருக்மிணி “இல்லை அன்னையே” என்றாள். சுஷமை “உன் உள்ளத்தை நான் அறிகிறேன். சிசுபாலரின் சிற்றரசைவிட பெரியது துவாரகை என்று நீ எண்ணுகிறாய். மகளே, நீ அவனை மணம் கொள்வதை ஒருபோதும் உன் தமையர் ஏற்கப்போவதில்லை. மகதம் அதை ஒப்பப்போவதும் இல்லை. நிகழாதவற்றை எண்ணாதே. துவாரகையின் அரசியென நீ ஆவது அரிது” என்றாள்.

“அரசியாவதைப்பற்றி நான் எண்ணவில்லை. அவருடன் காடு சூழ்ந்து கன்று மேய்க்கவும் சித்தமாக இருக்கிறேன். அன்னையே, நான் சொல்வது அரசுகொள்வதைப்பற்றி அல்ல” என்றாள் ருக்மிணி. சுஷமை பற்களைக் கடித்தபடி “உயர்காதலைப்பற்றி அல்லவா? காவியங்கள் சொல்லும் காதலைப்பற்றி இப்போது எனக்கு கவிச்சொல் உரைக்கப்போகிறாயா?” என்றாள். ருக்மிணி “இது காதலும் அல்ல அன்னையே. இதை எங்ஙனம் உங்களுக்குரைப்பேன் என்றறிகிலேன். நான் அவர் துணைவி. அதை வரதாவை, தெற்கே எழுந்த விந்தியனை விழிகளால் நோக்கி அறிவது போல ஐம்புலன்களாலும் அறிகிறேன். என் உளத்தால் விழியால் சொல்லால் மாற்றிவிடக்கூடியதல்ல அது. நான் இங்கு வருவதற்கு முன்பே இங்கிருந்ததும் நான் சென்றபின்பும் எப்போதும் என எஞ்சுவதுமான ஓர் உண்மை அது” என்றாள்.

ருக்மி தலையை சினம் கொண்ட யானை போல அசைத்துக் கொண்டிருந்தான். கீர்த்தி “மகளே, நீ அமர்ந்திருப்பது விதர்ப்பத்தின் மந்தண மன்றில். விதர்ப்பத்தின் இளவரசியென பேசு. இங்கு நம் அனைவரையும் இணைப்பது ஒன்றே. நாம் நாடுவது விதர்ப்பத்தின் நலம் மட்டுமே” என்றாள். “பொறுத்தருள்க சிற்றன்னையே. எக்கணம் நான் அவருடையள் என்று உணர்ந்தேனோ அப்போதே விதர்ப்பத்தின் இளவரசி அல்லாமல் ஆகிவிட்டிருக்கிறேன். நான் அவர் அறத்துணைவி மட்டுமே. பிறிதெவரும் அல்ல. என் உடல் இம்மண்ணில் வாழ்வதும் என் உள்ளம் இக்காலத்தில் திகழ்வதும் அவருக்கென மட்டுமே.”

பீடத்தை ஊன்றி பின்னால் தள்ளியபடி எழுந்த ருக்மி அவளருகே வந்து கை நீட்டி “நாணில்லையா உனக்கு, தொல்புகழ் விதர்ப்பத்தின் மன்றமர்ந்து இச்சொல்லை எடுக்க? நீ ஷத்ரியப்பெண். கன்று மேய்த்து கான்சூழும் யாதவனுக்கு தொழும்பப் பணி செய்ய விழைகிறாயா? முடி சூடி இந்நகராண்ட மூதன்னையர் அனைவரையும் இழிவுபடுத்துகிறாயா? இந்நகர் வாழும் ஒவ்வொருவர் நினைவிலும் பழியென எஞ்சப்போகிறாயா?” என்றான். ருக்மிணி “இவ்வெண்ணங்கள் எவையும் என்னுள் இல்லை. நான் அவருடையவள் என்ற சொல்லுக்கு அப்பால் என் சிந்தை சூழ இங்கு ஏதுமில்லை. மூத்தவரே, நீங்கள் ஆண்மகன், என் பெண்ணுள்ளம் எண்ணுவதை தாங்கள் உணரமுடியாது. ஆனால் காதல் கொண்டு கைபற்றி மகவு ஈன்று முலையூட்டி கனிந்தமைந்த என் மூதன்னையர் என் அகம் அறிவர். இங்கிருந்து விண் சென்று அவர் முன் நிற்கையில் என் காதல் ஒன்றினாலேயே அவருக்கு நிகரமரும் தகுதி கொண்டவளாவேன்” என்றாள்.

“ஒவ்வொரு சொல்லையும் எண்ணி வந்திருக்கிறாள். இது இவள் சொல் அல்ல. எவ்வண்ணமோ அத்தனை சொற்களையும் இவள் உள்ளத்தில் அவன் ஏற்றிவிட்டான். தந்தையே, துவாரகையின் அரசன் மாயச்சொல் கொண்டவன் என்கிறார்கள். பல்லாயிரம் காதம் நீண்டு அவன் கை வந்து ஒவ்வொருவரையும் தொட்டெழுப்பும் என்கிறார்கள். குலமகள் உள்ளத்திலும் நஞ்சென ஊறும் பெருங்காமத்தைத் தொடுப்பவன் என்கிறார்கள். இன்று அறிந்தேன் அவை உண்மை. நம் அரண்மனையில் இற்செறித்த இளவரசியை வென்றுவிட்டது அவன் காமக்கணை” என்றான் ருக்மி.

விருஷ்டி “இளவரசே, நாம் ஏன் வீண் சொல்லெடுக்க வேண்டும்? விதர்ப்பத்தின் இளவரசி தன் சொல்லை இங்கு வைத்துவிட்டாள். இனி ஆவதென்ன என்று சிந்திப்போம். மன்று நின்று கை பற்றி மாலையிட வேண்டியவள் அவள். அவள் விரும்பாத ஒன்றைச் செய்ய தாங்கள் ஆணையிட முடியாது. அவ்வண்ணம் விரும்பாத பெண்ணின் கைபற்ற சேதி நாட்டரசரும் எண்ணமாட்டார்” என்றாள். ருக்மி “அப்படியென்றால் என்ன செய்ய வேண்டுமென்கிறீர்கள்? தாங்கள் சொல்லுங்கள்” என்றான். “இளவரசி சொன்னதுமே தாங்கள் சினம் கொண்டு எழுந்துவிட்டீர்கள். அவள் விழைவு போல யாதவனை கைபிடித்தால் அதிலென்ன பிழை?” என்றாள் விருஷ்டி.

“அது நிகழலாகாது. அதன்பின் விதர்ப்பம் இருக்காது” என்று உரக்கக்கூவியபடி அவளை நோக்கி திரும்பினான் ருக்மி. “நாம் ஷத்ரிய தகுதி கொண்டவர்கள். ஆனால் மலைக்குடிகளை படைகளாகக் கொண்டமையால் வல்லமை அற்றவர்கள். அன்னையே, விந்தியனின் காலடியில் கிடக்கும் தொன்மையான கல்லுருளை போன்றவர்கள் நாம். வேத வேள்விக்கு மண் தகுதி இல்லை என்று விலக்கியிருந்த காலம் ஒன்றிருந்தது. இன்னும் அவ்விழிவு முற்றிலும் விலகவில்லை. மகதத்தின் அருளால் இன்று ஷத்ரிய மன்றில் நமக்கொரு பீடம் அமைந்துள்ளது. அந்நன்றியைக் கொன்று குலமிலி ஒருவன் அவையில் சென்றமரும் இழிவை ஒரு போதும் ஏற்கமாட்டேன்.”

விருஷ்டி ருக்மிணியிடம் “மகளே, நன்கு சிந்தித்து சொல்லெடு. துவாரகையின் அரசரைப்பற்றி நீயறிந்ததெல்லாம் எவரோ உரைத்த சொல்லினூடாகவே. அச்சொற்கள் தேர்ந்த அரசுசூழ்மதியினரால் சமைக்கப்பட்டவையாக இருக்கலாம். மகதத்தின் வாளேந்திய கைகளில் ஒன்றாகிய விதர்ப்பத்தின் இளவரசி நீ. உன்னைக் கவரும் பொருட்டு வீசப்பட்ட தூண்டில் இரையாக அச்சொற்கள் இருக்கலாம்” என்றாள். சுஷமை “அதிலென்ன ஐயம்? இது ஓர் அரசியல் சூழ்ச்சி. பிறிதொன்றுமல்ல” என்றாள். “அன்னையே, அச்சூழ்ச்சியை வெல்லும் கலை எனக்குத் தெரியும். அரசு சூழ்தலை நானும் கற்கத்தொடங்கி நெடுநாட்களாகிறது” என்றான் ருக்மி.

ருக்மிணி “அன்னையரே, மூத்தவரே, இச்சொற்களுடன் நீங்கள் நின்றிருக்கும் எந்நிலத்திலும் என் கால்கள் இல்லை. நான் உணர்ந்திருப்பது காலமற்ற வெளியில் வாழும் தெய்வங்கள் கூறுவது. நான் இளைய யாதவரின் அறத்துணைவி. அவர் கைபற்றுவதற்கென்று இங்கு பிறவி கொண்டவள். என்னை கருவறையிலிருந்து கை தொட்டு எடுத்த அன்னை அதை அறிவாள். என் உடலை முதலில் நோக்கிய நிமித்திகர் அறிவார். இங்கு ஒரு சொல்லுமன்றி அமர்ந்திருக்கும் எந்தையும் அறிவார்” என்றாள். அனைவர் விழிகளும் திரும்ப பீஷ்மகர் மெல்ல உடலை அசைத்து “ஆம் மைந்தா. அவள் உளம் கொண்ட வகையிலேயே இது நிகழ்ந்தாலென்ன?” என்றார்.

ருக்மி கைகளைத்தூக்கி ஏதோ சொல்வதற்குள் பீஷ்மகர் “ஆம். நீ உணர்வதை நான் அறிகிறேன். மகதத்தின் சிற்றரசனாகிய நான் துவாரகைக்கு மகள்கொடை அளிக்க முடியாது. ஆனால் நாம் ஷத்ரியர். இங்கொரு சுயம்வரப் பந்தல் நாட்டுவோம். சிசுபாலனும் ஜராசந்தனும் பாரத வர்ஷத்தின் ஷத்ரியர் அனைவரும் அவையமரட்டும். முடிந்தால் இளைய யாதவர் வந்து இவளை வென்று செல்லட்டும். அதை மறுக்க எவராலும் முடியாது அல்லவா?” என்றார். கீர்த்தி “ஆம். இப்போது நான் இதையே எண்ணினேன். ஷத்ரியப்பெண்ணுக்கு நம் குல மூதாதையர் வகுத்த உரிமை அது. தன்னை வென்று செல்லும் ஆண்மகனைக்கோர அவளுக்கு அனைத்து உரிமையும் உள்ளது. இதுவன்றி பிற வழியேதும் இல்லை” என்றாள்.

சுஷமை “அப்படியென்றால் என் மைந்தன் சொன்ன சொல்லென்ன ஆகும்?” என்றாள். ருக்மி “ஆம், சேதி நாட்டரசரின் கை பற்றி என் தங்கை அவருக்குரியவள் என்று நான் சொன்னேன். என் சொல் இங்கு வாழும். என் வாள் அச்சொற்களைத் துணைக்கும்” என்றான். விருஷ்டி “இளவரசே, தாங்கள் விழைந்தால் எளிதில் இத்தருணத்தை கடந்து செல்லலாம். நம் அவையில் குடிச்சான்றோர் எழுந்து இளவரசிக்கு முறையான சுயம்வரம் தேவையென்று கோரட்டும். குடியவை ஆணையிட்டதற்கப்பால் அரசனுக்கு சொல்லில்லை அல்லவா? அவர்களைக் காட்டி சிசுபாலரிடம் இங்கு ஒரு சுயம்வரத்தை நாம் அமைத்திருக்கும் செய்தியை சொல்லிவிடலாம்” என்றாள்.

ருக்மி “அன்னையே, சிசுபாலர் என் உடலின் மறுபாதி போன்றவர். என் உள்ளம் எண்ணுவதை அக்கணமே அறிபவர். இந்த எளிய அரசுசூழ்தலை நான் சொல்ல எண்ணும்போதே அச்சொற்களின் ஆழத்தை அவர் வாசித்தெடுப்பார். அவர் முன் சென்று நடிக்க என்னால் இயலாது” என்றான். விருஷ்டி “தன்னை தன் கொழுநன் வென்று செல்ல வேண்டுமென்று உரைக்க ஷத்ரியப்பெண்ணுக்கு உரிமை உண்டல்லவா? இளவரசி அவரிடம் சொல்லட்டும், அவர் தன்னை வென்று செல்லட்டும் என்று. சேதிநாட்டரசர் வீரரென்றால் அவ்வறைகூவலைத் தவிர்த்து முன் செல்ல எண்ணமாட்டார்” என்றாள்.

ருக்மி பொறுமையிழந்து இரு கைகளையும் விரித்தபடி சாளரத்துக்கு வெளியே தெரிந்த வரதாவை நோக்கியபடி இல்லை என்பது போல தலையை பல முறை அசைத்தான். பீஷ்மகர் “மைந்தா…” என்று ஏதோ சொல்லத்தொடங்க திரும்பி “இல்லை, இனி நான் எதுவும் உரையாடுவதற்கில்லை. இந்த மணம் முடிவாகிவிட்டது. இது மட்டுமே நிகழும்” என்றான். விருஷ்டி “இளவரசே, ஷத்ரியப்பெண்ணை எவரும் தடுக்கவியலாது” என்றாள்.

“தடுக்க முடியும்” என்றபடி ருக்மி அருகே வந்தான். “நானோ என் தந்தையோ கைபற்றி அளிக்காமல் இவளை அவன் மணம் கொண்டு செல்ல முடியாது. நான் இவளை கையளிக்கமாட்டேன். என் தந்தை கையளிப்பார் என்றால் அக்கணமே அவர் காலடியில் என் கழுத்தை வெட்டி வீழ்வேன். என் வாள் மேல் ஆணை!” பீஷ்மகர் “என்ன சொல்கிறாய்? இது…” என்று சொல்வதற்குள் சுஷமை ஓங்கிய குரலில் “என் மைந்தனின் ஆணை அது. அது மட்டுமே இங்கு வாழும். அவன் வாளாலும் சொல்லாலுமே இந்நகர் வெல்லும்” என்றாள்.

விருஷ்டி ருக்மிணியை நோக்கி “மகளே, இங்கு அனைத்தும் இனி உன் சொல்லில் உள்ளது” என்றாள். ருக்மிணி “நான் இச்சொற்களுடன் வாதிட இங்கு வரவில்லை. இங்கு கன்னியென சிறைப்பட்டிருப்பேனென்றால் அதுவும் எனக்கு உகந்ததே. அரண்மனையின் இருளறைக்குள் வாழும்போதும் நான் அவர் துணைவியென்றே இருப்பேன்” என்றாள். சுஷமை “என்ன பித்தெழுந்த பேச்சு! எங்கு பார்த்தாய் அவனை? அவன் யாரென்று நீயறிவாயா?” என்றாள்.

ருக்மிணி அவளை நோக்கி திரும்பி “நான் என்னை உயிர்கள் உண்ணும் அன்னமென உணர்ந்தேன் அன்னையே. அவர் அன்னத்தை முட்டி முட்டி முலையுறுஞ்சும் வைஸ்வாநரன். இங்கு நிகழ்ந்த உண்டாட்டின் உச்ச முயக்கத்தில் அவரை கண்டேன்” என்றாள். “என்ன உளறுகிறாய்?” என்றாள் சுஷமை. கீர்த்தி “இளவரசி, உளமயக்கால் எடுக்கும் முடிவல்ல இது” என்றாள். சுஷமை மூச்சிரைக்க “இது யார் உருவாக்கும் உளமயக்கு என்றறிவேன். இவள் செவிலியன்னை அமிதை… அவளை கட்டி வைத்து சவுக்கால் அடித்தால் என்ன நடக்கிறது என்று சொல்வாள்” என்றாள்.

ருக்மிணி “எவர் சொல்லும் எனக்கு ஒரு பொருட்டல்ல அன்னையே. இதற்கு மேலும் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. எந்தை முடிவெடுக்கட்டும்” என்றாள். ருக்மி “முடிவெடுத்துவிட்டோம். நீ சிசுபாலரை மணந்து மணமகளாக இவ்வரண்மனை விட்டு வெளியேறுவாய். இல்லையேல் இங்கே கன்னியென இருந்து மறைவாய். இளைய யாதவன் உன் கை தொடுவது இப்பிறவியில் நடக்காதென்று உணர்க!” என்றான். ருக்மிணி “அவ்வண்ணமெனில் அதுவே ஆகுக!” என்று சொல்லி மெல்ல எழுந்தாள்.

ருக்மி அவள் அருகே வந்து கனிந்து ஈரம் படர்ந்த குரலில் “தங்கையே, இதுநாள்வரை உன்னை நான் பிறிதென எண்ணியதில்லை. சேதி நாட்டரசருக்கு உன் கையை வாக்களிக்கையில்கூட உன் சொல் என் சொல்லென்றே எண்ணினேன். நீ இதுவரை கண்டிராத எவர் பொருட்டோ என்னையும் உன் தந்தையையும் இவ்வரசையும் துறக்கிறாய். பித்து கொண்டாயா? எங்ஙனம் பேதை என்றானாய்?” என்றான். ருக்மிணி அவனை நோக்கி “அறியேன் மூத்தவரே. ஆனால் நினைவெழுந்த நாள் முதல் இப்பபித்து என்னுள் உள்ளதென்று அறிகிறேன். இதன் வழியாகவே முழுமை கொள்கிறேன். நான் எய்துவது அனைத்தையும் இதுவே என்னிடம் கொண்டு சேர்க்கும்” என்றாள்.

தோள்கள் தளர எடைமிக்க உடல் கொண்டவன் போலாகி தன் பீடத்தில் சென்று ருக்மி அமர்ந்துகொண்டான். சுஷமை பற்களைக் கடித்து “இது வெறும் உளமயக்கு. ஓரிரு நாளில் தெளியும் பித்து. இதை தெளியவைக்க என்ன மருந்தென்று பார்க்கிறேன்” என்றாள். ருக்மிணி. “பித்துகளில் சில ஒரு போதும் தெளிவதில்லை அன்னையே” என்றாள். பீஷ்மகரை நோக்கி தலை வணங்கி “தந்தையே, என் உளம் அறிந்தவர் தாங்கள். ஆகவே தங்களிடம் மட்டும் நான் பொறுத்தருளும்படி கோரப்போவதில்லை. பிற அனைவரிடமும் கால் தொட்டு வணங்கி இவ்வெளியவள் மேல் சினம் கொள்ள வேண்டாமென்று கோருகிறேன்” என்று கை கூப்பி தலை வணங்கிவிட்டு கதவை நோக்கி சென்றாள். அவளுக்குப்பின்னால் விழிநட்டு அமர்ந்திருந்த ஐவரும் மூச்சுவிட்டு உடல் தளர்வதை அவள் கேட்டாள்.

வாயிலுக்கு வெளியே நின்றிருந்த அமிதை அவளை நோக்கி வந்து “என்ன சொன்னார்கள்?” என்றாள். “என் சொற்களை சொல்லிவிட்டேன் அன்னையே” என்றாள் ருக்மிணி. “என்ன சொன்னார் இளவரசர்?” என்று கேட்டாள் அமிதை. “என் இறுதிநாள் வரை இற்செறிப்பொன்றே எஞ்சும் என்றார்” என்று புன்னகையுடன் ருக்மிணி சொன்னாள். செயலிழந்து நின்ற அமிதை எட்டு வைத்தோடி அவளருகே வந்து கைகளைப்பற்றிக் கொண்டு “என்ன இது இளவரசி? இளவரசர் அவ்வாறு சொன்னாரா என்ன?” என்றாள். “ஆம், என் கையை சேதி நாட்டரசருக்கு அவர் அளித்துவிட்டார். அச்சொல்லை அவர் திரும்பப் பெற இயலாது” என்றாள் ருக்மிணி.

“அவரது சினம் இயல்பே. அன்னையே, நான் இளைய யாதவரை இனி அடைவதற்கேதுமில்லை. இங்கு பிறந்தபோதே அவர் துணைவி என்றே வந்தேன். எங்கு எவ்வண்ணமிருப்பினும் அவர் குலமகளென்றே அமைவேன். விதர்ப்பத்தின் மகளிர் அறை இருளும் துவாரகையின் அரியணையும் எனக்கு நிகர்தான்” என்றாள். அவள் பின்னால் ஓடிவந்தபடி “ஆயினும் மகளே…” என்ற அமிதை “நான் சென்று இளவரசர் காலில் விழலாமா? அரசியர் முன் கண்ணீர்விட்டு என்னவென்று நான் உரைக்கிறேன். அவர்கள் என்னை அறிவார்கள். என் மடியில் நீங்கள் தவழ்ந்து வளர்ந்ததை அவர்களுக்கு சொல்லவேண்டியதில்லை” என்றாள்.

ருக்மிணி “அன்னையே, ஒவ்வொருவரும் தங்கள் வலைகளில் அமர்ந்திருக்கிறார்கள். எவரும் இங்கு விழைவதை செய்வதில்லை. இயல்வதையே ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்” என்றாள். அமிதை ருக்மிணியை நோக்கி தன் நெஞ்சிலெழுந்த சொற்களெதையும் இதழ்களால் கூறமுடியாத தவிப்புடன் நின்றாள். பின் அவளுக்குப்பின்னால் தவித்துக்கொண்டு நடந்து அவள் அறை வரை தொடர்ந்தாள். ருக்மிணி மஞ்சத்திற்கு சென்று மேலாடையைக் களைந்து மெல்லாடை அணிந்து உப்பரிகைக்குச் சென்று பீடத்தில் அமர்ந்து நகரின் மேல் நின்ற முகில்திரளின் நிழல் மெல்ல மிதந்து சென்ற வரதாவின் நீர்ப்பெருக்கை நோக்கினாள்.

அமிதை அங்கு நின்று சற்று நேரம் அவளை நோக்கினாள். பின்னர் வாயிலை மெல்ல மூடி பின்னகர்ந்து இடைநாழியில் விரைந்து அரசரின் அவையை அடைந்தாள். வாயிலில் நின்று “எளியோள், அரசரிடம் முகம் காட்ட வேண்டும்” என்று வாயிற்காவலனிடம் சொன்னாள். அவன் உள்ளே சென்று சொல் பெற்று மீண்டு அவளை உள்ளே செல்லும்படி பணித்தபோது இருகைகளையும் கூப்பியபடி அறைக்குள் நுழைந்தாள். அங்கு மூன்று அரசியரும் பீஷ்மகரும் மட்டுமே இருந்தனர். சினத்துடன் ஏதோ சொல்லிக் கொண்டிருந்த சுஷமை எழுந்து அவளை நோக்கி “அனைத்தும் உன் ஆடல்தானா? என் பேதையின் நெஞ்சில் அவ்விளைய யாதவன் அனுப்பிய நஞ்சை நிறைத்தவள் யார்? நீயா இல்லை உன்னைச்சூழ்ந்துள்ள சேடியரில் துவாரகையின் உளவாளி என அமர்ந்துள்ள எவளோ ஒருத்தியா? இப்போதே அறிந்தாகவேண்டும்” என்றாள்.

கண்ணீருடன் கைகளைக் கூப்பியபடி “எப்பழியையும் ஏற்க நான் சித்தமாக இருக்கிறேன் அரசி. என் கன்னியின் நெஞ்சை உரைக்கவே இங்கு வந்தேன். என் சொற்களை இங்கு வைக்க ஒப்புதல் அளிக்க வேண்டும்” என்றாள். “உன் விழிநீரையும் பசப்புகளையும் கேட்க இங்கு நாங்கள் சித்தமாக இல்லை. நிகழ்ந்ததென்ன என்று அறியவே விழைகிறேன். என் கன்னியின், என் மகளின் உள்ளத்தை வென்று அவனிடம் சேர்க்க நீ என்ன பெற்றாய்? இப்போதே அதை அறிந்தாக வேண்டும்” என்றாள்.

பீஷ்மகர் எழுந்து கூரிய குரலில் “சுஷமை, இனி உன் சொல் எழலாகாது” என்றார். “ஏன்? நான்…” என்று சுஷமை தொடங்க உரத்த குரலில் பீஷ்மகர் “இனி ஒரு சொல் எழுமென்றால் உன் தலையை வெட்டி இங்கு வீழ்த்திவிட்டு மறுசொல் எடுப்பேன்” என்றார். அவள் திகைத்து அவரை நோக்க அஞ்சிய நா வந்து இதழ்களை வருடிச் சென்றது. குரல்வளை அசைந்தது. அமிதையிடம் ” சொல்க!” என்றார் பீஷ்மகர்.

“அரசே, என்னிடம் இளவரசர் கூறியதனைத்தையும் இளவரசியிடம் நானே சொன்னேன்” என்றாள் அமிதை. “மகதம் விழைவதை, நம் இளவரசர் இலக்காக்குவதை, இந்நகர் நாடுவதை அவளுக்கு விளக்கினேன். இளவரசியின் உளம் கொள்ளும்விதம் அவற்றை நிறுத்தவும் என்னால் இயன்றது. நானறிவேன், இளவரசி பிறிதொன்றை எண்ணவும் இல்லை. சேதி நாட்டரசர் இங்கு வந்தபோது அவள் உள்ளம் அவரை கொள்ளவும் இல்லை, விலக்கவும் இல்லை. ஆனால் எங்கோ அவள் அறிந்தாள், அவள் கொழுநன் அவரல்ல என்று. எங்ஙனம் அறிந்தாள் என்பதை எவரும் சொல்ல முடியாது. பெண்களுக்குப்பின்னால் விழியறியாமல் அவள் மூதன்னையர் வந்து நிற்பதாக சொல்வார்கள். அத்தெய்வங்களே அதை அறியும்.”

“ஆனால் ஒன்றறிந்தேன். விழவுக்கு நீராட அவள் எழுந்தபோது மீண்டும் அவள் கைகளும் கால்களும் சூடிய ஆழியையும் சங்கையும் நான் கண்டேன். அப்போது நானுமறிந்தேன் அவள் பாதம் சூடுவதன்றி கைபற்றும் தகுதியற்றவர் சேதி மன்னர் என்று” என்றாள் அமிதை. “அவன் இளைய யாதவனே என்று அவளிடம் சொன்னது யார்?” என்றார் பீஷ்மகர். “அரசே, சிற்றிளமையில் அவள் கண்ட ஒரு கனவை பலநூறு முறை நம்மிடம் உரைத்திருக்கிறாள். வரதா அவளுக்கு அளித்த அந்த நீலமணிக்கல்லைப்பற்றி. அதன் பொருள் ஒன்றே, துவாரகை ஆளும் நீலனே அவன்” என்றாள் அமிதை.

பீஷ்மகரின் விழிகளை நோக்கியபடி “நேற்றுமாலை உண்டாட்டில் ஒரு தென்னகத்துச் சூதன் நீலமணிவண்ணனைப்பற்றி பாடினான். அப்போது அவள் அறிந்தாள் அவனை” என்றாள் அமிதை. அவளை நோக்கி பொருளற்றவையென்றான விழிகளுடன் நின்ற பீஷ்மகர் சென்று தன் பீடத்திலமர்ந்து தன் கைகளைக் கோத்து மடிமேல் வைத்து தலைகுனிந்தார். பின்பு நிமிர்ந்து “ஆம். இப்போது உணர்கிறேன். இதுவரையிலான அனைத்தும் ஒன்றுடனொன்று பிசிறின்றி முயங்குகின்றன. இவள் பிறந்தது அவனுக்காகவே” என்றபின் திரும்பி சுஷமையிடம் “அரசி, அவள் அவனுக்குரியவள். இது என் ஆணை” என்றார்.

“ஆம் அரசே, தங்கள் ஆணை” என்றாள் சுஷமை. அமிதையிடம் “ஷத்ரியர்களுக்கு மண முறைகள் பல உண்டு. சுயம்வரம் கோருவது ருக்மிணியின் உரிமை. அவள் அதை செய்யலாம்” என்றார் பீஷ்மகர். அமிதை “இல்லை அரசே. இளவரசி தன் தமையனை மீறி, தங்களைக் கடந்து, அவ்வண்ணம் கோரப்போவதில்லை. அதன் வழியாக தங்கள் இருவரையும் இந்நகர் மக்கள் முன்னும் சேதி நாட்டரசர் முன்னும் சிறுமையாக்க துணியமாட்டாள். அவள் உள்ளத்தை நான் அறிவேன்” என்றாள்.

பெருமூச்சுடன் தலையசைத்த பீஷ்மகர் “ஆம், அவளை நானும் அறிவேன்” என்றார். விருஷ்டி எழுந்து “அரசே, ஷத்ரியப் பெண்ணுக்கு காந்தர்வ மணமும் உரியதே” என்றாள். பீஷ்மகர் திகைத்தவர் போல் அவளை நோக்கினார். “இளைய யாதவர் வரட்டும், அவளை இங்கிருந்து கவர்ந்து செல்லட்டும். அது எவருக்கும் பழி அளிக்காது. இளைய யாதவருக்கு புகழ் சேர்க்கும். அவர் அவள் காதலுக்காக வருவாரென்றால் குடிகளுக்கு பிறிதொரு விளக்கமும் தேவையில்லை” என்றாள் கீர்த்தி. பீஷ்மகர் முகம் மலர்ந்து “ஆம், அதுவே உகந்த வழி” என்றார்.

முந்தைய கட்டுரைபுலவர் பாடாது ஒழிக!
அடுத்த கட்டுரைகண்ணதாசன்