«

»


Print this Post

மகாமகோகிருமி


மகாமகோகிருமி என்று மேலையறிஞர்களால் மெய்சிலிர்ப்புடன் புகழப்பட்ட சென்னை மெட்டால்லோ லாக்டமேஸ்- 1 அல்லது சி.எம்-1 கிபி 2010 நவம்பரில் அமெரிக்காவில் பாஸ்டன்நகரில் கண்டடையப்பட்டது. ஏற்கனவே புகழ்பெற்ற நியூடெல்ஹி மெட்டல்லோ லாக்டமேஸ் வரிசையில் ஒன்றுமுதல் முந்நூற்று எழுதுபத்திரண்டு வரையிலான மகாகிருமிகள் இந்த கிருமிக்குமுன் சேவகர்களாகவும் எடுபிடிகளாகவும் வேலைபார்ப்பவை மட்டுமே என்று கண்டறியப்பட்டது. சி.எம்.1 கிருமியானது இன்று மனிதர்கள் கண்டுபிடித்திருக்கிற எந்த ஒரு நோய்முறி மருந்துக்கும் எவ்வகையிலும் கட்டுப்படாது என்பதுடன் அத்தகைய நோய்முறி மருந்துகளை அது மிகுந்த விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டு அவற்றை கிரியாஊக்கியாக ஆக்கிக்கொள்ளும் தகவலும் அறிவியலாளர்களால் வெளிப்படுத்தப்பட்டது.

சி.எம்.1 கிருமியின் தோற்றுவாய் எது என்பதை மருத்துவஅறிஞர்கள் ஆராயத்தலைப்பட்டார்கள். ஆனால் அதற்கு மருத்துவர்கள் மட்டும்போதாது, சமூகவியல், அரசியல், இலக்கிய, மொழியியல் அறிஞர்களின் உதவிதேவைப்படும் என்பதனால் இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது. பொதுவாக இந்திய மருத்துவர்கள் அபாரமான திறமை உடையவர்கள். இந்திய மருத்துவம் மலிவானது. இவை இரண்டுமே முக்கியமான காரணங்கள் என்று கண்டுபிடிக்கும்படி பன்னாட்டுமருந்துநிறுவனங்களின் கூட்டமைப்பு பரிந்துரைத்ததன் பேரில் அவ்வாறே கண்டுபிடிக்கப்பட்டது.

திறமையான இந்திய மருத்துவர்கள் அதன் காரணமாக அற்புதமான தன்னம்பிக்கை கொண்டவர்கள். சுண்டல்சாப்பிட்டபடியே குடலாபரேஷன் செய்த ஒரு கோவை மருத்துவரை பேட்டி எடுத்த குழு மானுடவரலாற்றில் உணவுக்குழாயின் தொடுகை கிடைக்காமல் குடலை அடைந்த முதல் சுண்டலை கண்டுபிடித்து அதை மேலதிக ஆய்வுக்காக அமெரிக்காவுக்கு தனி விமானத்தில் அனுப்பிவைத்தது. இதய அறுவை சிகிழ்ச்சையை பன்னீர்புகையிலை குதப்பி சீர்காழி கோவிந்தராஜன் பாட்டை பாடியபடி நிகழ்த்தும் திருச்சி டாக்டர் கோவிந்தப்பாவின் திறமையை அது பாராட்டியது. இவர் டிராக்குலா கோவிந்து என்றழைக்கப்படுவதற்கு கண்ணாடி வழியாக அவர் அறுவை செய்வதைப் பார்த்து பதைக்க நேர்ந்த ஒரு பாமரரே காரணமென கண்டடைந்து குழு ஆறுதல் தெரிவித்தது.

இந்தியமருத்துவம் கடுமையான போட்டி காரணமாக மலிவில் இருந்து மலிவுநோக்கிச் சென்றது என்று பதிவுசெய்த குழு ஒருகட்டத்தில் சிறுகுடலறுவை செய்துகொண்டால் மலக்குடலறுவை இலவசம் என்ற அளவில் சிகிழ்ச்சைகள் அளிக்கப்பட்டன என கண்டறிந்தது.. இதனால் இந்திய நோயாளிகளுக்கு வருமுன்காக்கும் நோக்கம் மிகுதியாகி வரப்போகும் நோய்களுக்கான சிகிழ்ச்சைகளை முன்னரே செய்துகொண்டார்கள். இருபதுவருடம் கழித்து கீல்வீக்கம் வருமென இப்போதே அறுவைசெய்துகொள்ளும் போக்கு மிகுதியாகி விபத்துகளுக்குக் கூட முன்னரே எலும்புமுறிவுச் சிகிழ்ச்சைகள் செய்துகொள்ளப்பட்டன.

இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு மட்டுமே இந்த சி.எம்.1 கிருமி தாக்குதல் நடந்திருக்கிறது என்பதை குழு கண்டடைந்தது. இது எவ்வாறு நிகழ்தது என்பதை குழு அவதானித்து அறிக்கை அளித்தது. அதன்படி இந்தச் சுற்றுலாப்பயணிகள் அவர்களின் ஊர்களிலேயே இந்தியச்சுற்றுலாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிடுகிறார்கள். அவர்களுக்கு இந்தியப்பண்பாட்டின் ஒரு பக்கம் மட்டுமே அறிமுகம் செய்யப்படுகிறது. மதுரை கோபுரம், பரதநாட்டியம், ஜல்லிக்கட்டு, இட்லி, கலைஞர் மு.கருணாநிதி போன்ற பாரம்பரியச்சின்னங்கள் தமிழக அரசின் விளம்பரங்கள் மூலம் தெரிவிக்கப்படுகின்றன. கிழக்குகடற்கரைச்சாலை நட்சத்திரவிடுதிகளில் அறை எடுத்து பெட்டிகளுடன் அவர்கள் மீனம்பாக்கம் வந்திறங்குகிறார்கள்.

கால்வைத்த கணம் முதல் மாற்று இந்தியப்பண்பாடு அவர்களை எதிர்கொள்கிறது. மூக்கில் விட்டு சிறுகை அளாவிய கூழை துடைக்காமல் கடவுச்சீட்டை வாங்கி நோக்கி திருப்பி அளிக்கும் அதிகாரி, கழிப்பிடத்தில் வாசனையடிக்கும் தொன்மையான சிறுநீர், துருப்பிடித்து தூசு பிடித்த அம்பாசிடர் கார்கள், அவற்றுக்கு குறுக்கே மஞ்சள்பையுடன் பாய்ந்துசெல்லும் மக்கள் என அவர்கள் அதை ஒரே மூச்சில் எதிர்கொள்கிறார்கள். பலவற்றை அவர்கள் உடனடியாக புரிந்துகொண்டாலும் நகரச்சாலைகளின் ஓரங்களில் மஞ்சளாக பிசின் போல கிடப்பது என்ன என்று கண்டுபிடிப்பதற்குள் அதை மிதித்து மிதித்த காலை தொட்டுப்பார்த்து தொட்டுப்பார்த்த கையை டிஷ்யூதாளில் துடைத்து துடைத்ததாளை கைப்பைக்குள் போட்டுக்கொள்கிறார்கள்.

நட்சத்திரவிடுதியில் அவர்கள் கமழ்ந்தபடி நுழையும்போதே வயிற்றுக்குள் பலவகையான ஒலிகளை கேட்கிறார்கள். குதிரைப்பந்தயம் பார்க்க மரக்காலரியில் அமர்ந்திருப்பது போல இருந்தது என ஒரு அம்மையார் இதை பதிவுசெய்திருக்கிறார். இரவில் அவர்கள் நிலையழிகையில் அதற்குள் அவர்களுக்கு இந்திய ஆங்கிலத்தின் சாத்தியங்களை அறிமுகம் செய்திருக்கும் விடுதி மேலாளர் அதற்கு கருவேப்பிலை மற்றும் வெந்தயம் போட்ட குளிர்ந்த மோர் சிறந்த மருந்தாக ஆகுமென அறிவிக்கிறார்.

இந்தியமண்ணில் யாரும் யாருக்கும் எதற்கும் மருத்துவ ஆலோசனை சொல்லலாம் என்றும், அவ்வாறு சொல்வது வணக்கம் சொல்வதைப்போன்றது மட்டுமே என்றும், சொன்னவருக்கு திருப்பி ஒரு மருத்துவ ஆலோசனை சொல்லி நின்றுவிடவேண்டும் என்றும் அறியாத பயணி உடனே அதை வரவழைத்து அருந்துகிறார். கருவேப்பிலைகளை தின்பதா இல்லை திருப்பிக்கொடுத்துவிடவேண்டுமா என்பது உணவுக்குறிப்பில் ஏன் விளக்கப்படுவதில்லை என்பதை கேட்டு தெரிந்துகொள்கிறார். அந்த மோர் கூவமோரத்து குந்தியிருப்புக்கடை ஒன்றில் முத்தம்மா ஆயாவால் கூவத்தின் பங்களிப்போடு உறைகுத்தி கடையப்பட்டு மாதக்குத்தகை முறையில் தினமும் விடுதிக்கு கொடுக்கப்படுவது என்பதனால் காலையில் பயணி வெளுத்த மாபெரும் பல்லிபோல படுக்கையில் இருந்து நட்சத்திர மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்படுகிறார்.

மணிப்பூரைச் சேர்ந்த சமையற்காரர்களால் வைக்கப்படும் சாம்பாரை உண்டு அந்நிலை அடைந்த பயணிகளும் உண்டு. தொலைக்காட்சியில் நெடுந்தொடர்களைப் பார்த்து வீழ்ந்தவர்களும் பதிவுசெய்யப்பட்டிருக்கிறார்கள். விடுதியின் நடன அறையில் இந்தியபாணி குத்துநடனம் ஆடி கைகால் உடைந்தவர்களும் இருக்கிறார்கள். பிறர் இந்தியாவில் தயாரான வெளிநாட்டு மது என்ற விபரீத பெயர் ஏந்திய புளித்து மேலும் புளிக்கவிடப்பட்ட கரும்புச்சாக்கடைத்தெளிவை அருந்தி அந்நிலைக்குக் கொண்டு செல்லப்பட்டவர்கள். இந்த பானமே த ஸ்பிரிட் ஆ•ப் இண்டியா என்று விளம்பரங்களில் சொல்லப்படுகிறது என்று அவர் புரிந்துகொள்கிறார். இண்டியன் ஸ்பிரிச்சுவாலிட்டி கனமானது என்பதை அவர் மருத்துவமனை படுக்கையில் உயிர்நீர் சொட்டுசொட்டாக உள்ளே செல்வதை பார்த்தபடி புரிந்துகொள்கிறார்.

இந்தியாவில் அறுவைசிகிழ்ச்சை மலிவு என்பதனால் அதுவே இந்தியாவின் சிகிழ்ச்சை முறையாக அமைவதில் ஆச்சரியமில்லை. நோயுற்ற பகுதியை கையால் தொட்டு கண்ணால் பார்க்காமல் சிகிழ்ச்சை அளிப்பதில்லை என்பது இந்திய மருத்துவர் கூற்று. கூற்று என்பதை எமன் என்று பொருள்கொள்ளவேண்டாம். மேலும் டாலருடன் வரும் ஒரு நோயாளியை அறுவைசெய்யாமல் விடுவது அவரது சுற்றுலாவை முழுமை செய்யாமல் விடுவதைப்போன்றதே. இந்த உபசரிப்புக்கு இந்திய அரசு மருத்துவச் சுற்றுலா என்று பெயரிட்டிருக்கிறதென்பதை உணர்க. சுற்றுலாவே மருத்துவம் மருத்துவமே சுற்றுலா என்பதே இதன் சாரம்.

ஆகவே நோயாளிக்கு உடனடியாக அறுவை சிகிழ்ச்சை செய்யப்படுகிறது. நாடெங்கிலும் இருந்து அறுவை செய்து தேறிய மருத்துவர்கள்தான் உயர்தர மருத்துவமனைகளில் வேலைசெய்கிறார்கள். இவர்கள் முதலில் சடலங்களிலும் பின்னர் கிராமத்து மக்களிலும் அறுவை செய்து ஐயம்தீரக் கற்றவர்களாகவே இருப்பார்கள் என்பதனால் எந்தக் கவலையும் தேவையில்லை என்று அரசு தெரிவிக்கிறது. தமிழக நாட்டுப்புறங்களில் மருத்துவர் மட்டுமல்ல அவரது ஆசிபெற்ற கம்பவுண்டர், நர்சம்மா, மருத்துவரின் மகன், அவருக்கு சாப்பாடு கொண்டு வருபவர்கள் என எவரும் அறுவை சிகிழ்ச்சை செய்யலாம். மேலும் வறுமைக்காலங்களில் கிட்னி நுரையீரல் போன்ற பலவகையான உறுப்புகளை கிழித்து எடுத்து விற்கும் வழக்கமும் இங்கே காணப்படுகிறது. ஆகவே அறுவைசிகிழ்ச்சை தமிழகத்தின் தேசியப்பண்பாடாக உள்ளது

அறுவைசிகிழ்ச்சையின்போது கைமறதியாக உள்ளே வைக்கப்பட்ட பஞ்சு, கத்தரிக்கோல், மூக்குக்கண்ணாடி, துப்பறியும் நாவல் போன்றவற்றை மீட்டு எடுக்க அகழ்வாய்வுநிபுணர்களும் பங்கெடுக்கும் இரண்டாவது அறுவையும் தென்தமிழ்நாட்டில் பிரபலமாக இருந்தது. அறுவைசிகிழ்ச்சைக்குப் பின்னர் உதிர இழப்புக்கு ஈடாக காக்டெயில் குருதி என்ற முறைப்படி பலவகையில் கலக்கப்பட்ட குருதியை ஏற்றுவது இந்திய வழக்கம். அறுவை செய்யப்பட்ட நோயாளியை வராண்டா, கிணற்றடி ,தொழுவம் ,சமையலறை கழிப்பறை என எங்கே இடமிருக்கிறதோ அங்கே படுக்க வைப்பது இந்தியாவில் பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட வழக்கமாக உள்ளது. இந்தியாவின் சமூக அடுக்குகளுக்கு ஏற்ப கட்டில்களுக்கு அடியிலும் நோயாளிகள் தங்க வைப்பதுண்டு.

இந்தியச் சிகிழ்ச்சைமுறை உலகமெங்கும் இல்லாத பலவகையான சிறப்புகள் கொண்டது. மருத்துவமனைகள் குடியிருப்புப் பகுதியுடன் இணைந்திருப்பதனால் மருத்துவமனைக் கிருமியை சமையலறைக் கிருமி சமன்செய்கிறது. இது திருப்பியும் நிகழ்கிறது. மருத்துவமனையில் அறுவை செய்து எடுக்கப்பட்ட உடலுறுப்புகள் ரத்தம் சீழ் முதலியவை குடிநீராராதாங்களில் போடப்படுகின்றன. இவை சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், பன்றிகள் மற்றும் ஆடென உண்ணப்படும் தெருநாய்கள் வழியாக மனிதர்களிடம் சென்று நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றன என்பது இந்தியாவில் நடந்த சோதனைகள் மூலம் வெற்றிகரமாக கண்டறியப்பட்டது. நோய்கள்க்கான மருந்துகளை எட்டாம்வகுப்பு படித்த நர்சுகளின் சேவைகளை பயன்படுத்திக்கொண்டு மாற்றிக்கலந்து கொடுப்பதன் விளைவாகவும் புதிய நோய்முறி சாத்தியங்கள் கண்டடையப்படுகின்றன. மாற்றிக்கொடுக்கப்பட்ட மருந்தால் நோயாளி இறந்தால் அம்மருந்தின் விலையும் நோயாளியின் பில்லில் சேர்க்கப்படுகிறது.

இவ்வாறு தொடர்ச்சியாகச் செய்யப்படும் அறுவைகள் மூலம் படிப்படியாக மகாமகோ கிருமி உருவாகியிருக்கலாமென குழு கண்டடைந்தது. இந்தியக்கிராமங்களில் மருத்துவர்களும் அவர்களைப்போன்றவர்களும் எந்நோய்க்கும் உடனடியாக உக்கிரமான மருந்துகளை அளிக்கிறார்கள். ஆகவே வழக்கமான மருந்துகள் சீக்கிரமே வலுவிழக்கின்றன. உடனே மருந்துகளின் வீரியத்தை மேலும் கூட்டுகிறார்கள். ஒரு கட்டத்தில் அசாத்தியமான மருந்துகளைக்கூட அவர்கள் சோதனைசெய்து பார்க்கிறார்கள். மதுரையில் ஒரு மருத்துவர் கீரையில் பூச்சி வராமலிருக்க அடிக்கப்படும் எண்டோசல்பைனை குறைவான அளவில் நோயாளிக்குக் கொடுத்தால் அது சிறந்த பாக்டீரிய எதிர்ப்பு என்று கண்டுபிடித்தார். அதன்பின்னர் பாலிடால்கூட அதற்கு பயன்படுத்தப்பட்டது. அவ்வாறு எல்லா மருந்துகளையும் வென்று மேலெழும் பாக்டீரியா உருவாகி வந்தது என்று குழு ஊகித்தது

இந்த பாக்டீரியா ஒரு நட்சத்திர மருத்துவமனையில் செய்யப்பட்ட அறுவை சிகிழ்ச்சையின்போது கத்தி போன்ற கருவிகள் வழியாக பயணி ஒருவரில் நுழைந்திருக்கலாமென நம்பப்படுகிறது. ஆனால் அவர்கள் எப்படியும் கருவிகளைக் கழுவாமல் பயன்படுத்தப்போவதில்லை. கழுவப்பட்ட கருவிகளினூடாக எப்படி சி.எம்.1 கிருமி பரவியது என்று ஆராயப்புகுந்த குழு அவை கூவம் நீரில் மாசறக் கழுவப்பட்டன என்று கண்டடைந்தது. 2010 மார்ச் மாத வாக்கில் கூவத்தின் கிருமிகளும் மகாமகோ கிருமியும் சந்தித்து உறவுகொண்டிருக்கலாம் என்று ஆய்வாளர் சொல்கிறார்கள். இந்த உறவு சிவசக்தி லீலை போன்றிருந்ததாக விளக்கிய ஆன்மீக அறிஞர்கள் புதிய மகாமகோ கிருமிக்கு கார்த்திகேயன் என்று பேரிட்டார்கள். கார்ட் 2010 என்ற புதுப்பெயர் கொண்ட இக்கிருமி ஆறு வெள்ளைக்காரப் பெண்களிடம் ஏக காலத்தில் வளர்ந்ததாகவும் தெரிகிறது.

கார்ட் 2010 உலகத்திற்கு இந்தியாவின் கொடை என்று அறிவித்த முதல்வர் ‘எல்லாரும் அமர நிலை அடையும் வழியை இந்தியா உலகுக்கு அளிக்கும் ஆம் இந்தியா உலகுக்கு அளிக்கும், ஆம் ஆம் இந்தியா உலகுக்கு அளிக்கும்’ என்று பாரதி பாடிய தீர்க்கதரிசனம்தான் என்னே என்று இறும்பூது எய்தினார்.

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/7723

9 comments

Skip to comment form

 1. ramji_yahoo

  என்ன ஆச்சு தசாவதாரமும், என் டி டி வியும் (பர்கா டாட் நிகழ்ச்சி) மாற்றி மாற்றி பார்த்ததன் விளைவா.

  கார்டிப் பல்கலை கழக பேராசிரியர் வால்ஷ் நன்றாக பேசினார் அல்லவா.

 2. Joseph Mani

  தாங்கள் டெட்டால் மற்றும் லைப்பாய் போன்ற சிறந்த கிருமி நாசினிகளை நமது மருத்துவர்கள் உபயோகிக்கின்றார்கள் என்ற தகவலை ஏன் இருட்டடிப்பு செய்து விட்டீர்கள்.
  மேலும் நாம் டெட்டால் உபயோகிக்கும் விதம் குறித்து ஐரோப்பிய மருத்துவ மேதை ஒருவர் வியந்து விரல் வைத்த இடத்தை குறிப்பிடலாகாது.

 3. jasdiaz

  Yesterday I went to Besant Nagar beach to buy fish. The woman selling the fish took it to the roadside and “cleaned” it in the stagnant water collected after the rains next to the overflowing dustbin.

  I have to throw it away after paying Rs 250/-. I have decided to stop eating fish now.

  jas

 4. ragavendiranthmmampatty

  இந்த கட்டுரையை விஜய் டிவியில் கலந்துக் கொண்ட மருத்துவ சங்கத் தலைவர் அவர்களுக்கு சமர்ப்பணம் என தலைப்பிட்டு இருக்கலாம், அவரின் மெயில் ஐடி தேடிக் கண்டுபிடித்து அவருக்கு இந்த கட்டுரையை ஒரு பார்சல் செய்யுங்கள் ,

 5. bala

  ஐயன்மீர்,
  உமது தீர்க்க தரிசனம் கண்டு யாம் இறும்பூது எய்தினோம்..எவனாவது ஆங்கில்த்தில் மொழிபெயர்த்து விட்டால் தொலைந்தீர்.. அடுத்த ஆண்டு மருத்துவத்தின் நோபெல் உமக்குத்தான்..

 6. sankar.manicka

  பாலா,
  நோபல் என்பதை “No பல்” பரிசு என்று தான் படிக்கவேண்டும். டாக்டர்கள் படித்தால் கொதித்தெழுந்து பல்லை உடைப்பார்கள்.

 7. sankar.manicka

  எங்கள் கம்பெனி மருந்தை நீங்கள் 1000 பேருக்கு ஆளுக்கு 20 மாத்திரைகள் என்று பரிந்துரை செய்தால் உங்களுக்கு டிஜிடல் கெமரா, டி.வி.டி பிளேயர் என்றெல்லாம் பரிசு கொடுப்போம் என்று சொல்லி டாக்டர்களை லஞ்சம் கொடுத்துக் கெடுப்பதே இந்த மருந்து கம்பெனி ரெப்ரசன்டேடிவ்கள் தான்.

  இப்படி குருட்டாம்போக்கில் ஆன்டிபயாடிக் மருந்துக்களை பரிந்துரை செய்தால், நம்மூரிலிருந்து அதை எதிர்த்து வளரும் நோய்க்கிருமிகள் பெருகத்தானே செய்யும் ?

 8. கோவை அரன்

  பிரிட்டனில் இதுவரை 37 பேருக்கு இந்த நோய்த்தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இவர்களில் 17 பேர்தான் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சிகிச்சைக்காக பயணம் செய்திருந்தார்கள். அப்படியானால் மற்றவர்களுக்கு இந்தக் கிருமி எங்கிருந்து தொற்றியது?

  இந்தியாவில் ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் தறிகெட்ட விகிதத்தில் பயன்படுத்தப்படுகின்றன என்பது நிஜம்தான். தேவையில்லாமல் இந்த மருந்துகளை பெரும்பாலான டாக்டர்கள் எழுதிக் கொடுக்கிறார்கள். நோயாளிகள் பலரும் டாக்டரைக் கேட்காமலேயே மருந்துக்கடைகளில் ஆன்ட்டி பயாடிக் வாங்கி சாப்பிடுவதும் நடக்கிறது. அளவுக்கு அதிகமாக ஆன்ட்டி பயாடிக் பயன்படுத்துவதுதான், மருந்துகளுக்குக் கட்டுப்படாத சூப்பர் பக் போன்ற கிருமிகள் உருவாவதற்குக் காரணமாகிறது. இந்தியாவில் தெளிவான மருந்துக்கொள்கை இல்லாததே இதற்கெல்லாம் காரணம் என்கிறார்கள் நடுநிலையான டாக்டர்கள். இதுதான் சில டாக்டர்களின் பேராசைக்கும், மருத்துவத்துக்கு செலவழித்தே பலர் ஏழைகள் ஆவதற்கும் காரணம் ஆகிறது. இவை எல்லாமே நமக்குள் தீர்த்துக்கொள்ள வேண்டிய பிரச்னைகள்.

  இதையெல்லாம் சுட்டிக் காட்டி, நம் தேசத்துக்கு ரெட் கார்டு போடுவதை அனுமதிக்க முடியாது!

  இங்கே http://www.thenaali.com/inner.php?id=172

 9. stride

  என்ன ஜாஸ் கேள்வி இது? stagnant நீரில் பிடிக்கும் மீன்களை stagnant நீரில் தானே கழுவ வேண்டும்.

  சிவா

Comments have been disabled.