அன்புள்ள ஜெ,
தமிழில் அத்வைதம்- விசிஷ்டாத்வைதம் சம்பந்தமாக வாசித்துக்கொண்டிருக்கிறேன். இங்கே என்னுடைய சிக்கல் என்னவென்றால் தமிழில் அத்வைதம் பற்றி நல்ல நூல்களே அனேகமாக இல்லை. விசிஷ்டாத்வைதம் பற்றி நிறைய நூல்கள் உள்ளன. ஆனால் அவை எல்லாமே வைணவ பக்தி நோக்கிலே எழுதப்பட்டுள்ளன. விஷ்ணுவிடம் சரணாகதி அடைவதுதான் விசிஷ்டாத்வைதம் என்ற அளவில்தான் அவை பெரும்பாலும் காணப்படுகின்றன.தத்துவார்த்தமாக தூயநிலையில் நாம் அதை அறியவே முடிவதில்லை. வைணவனாக நின்றுதான் அறியமுடிகிறது. அந்நூல்களில் சங்கரரின் தத்துவங்கள் சாதாரண தளத்தில் நின்று கண்டிக்கப்படுகின்றன. பெரும்பாலான நூல்களில் சங்கரருக்கும் விசிஷ்டாத்வைதத்துக்கும் உறவே இல்லை என்ற அளவில்தான் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் சாதாரண வாசகனாக நான் வாசிக்கும்போது ஒரே தத்துவதரிசனத்தின் இரு பார்வைகள் அவை என்ற எண்ணமே ஏற்படுகிறது. இந்த தத்துவங்களை நான் ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு என் மனதில் வரையறைசெய்துகொள்ள வேண்டியிருக்கிறது. நீங்கள் இவற்றை எங்காவது வரையறை செய்து எழுதியிருக்கிறீர்களா?
ஆர். வெள்ளியங்கிரி
அன்புள்ள வெள்ளியங்கிரி,
நீங்கள் குறிப்பிடும் சிக்கல் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக நம் மரபில் இருந்துகொண்டிருக்கிறது. பல்வேறு தத்துவதரிசனங்கள் இங்கே உள்ளன. ஆனால் அவற்றுக்கு இடையே உரையாடலே இல்லை. ஒவ்வொரு தரிசனமும் ஒரு மதமாக ஆகி தங்கள் தரப்பை மட்டுமே குருபரம்பரையாகக் கற்று அதையே நம்பிக்கொண்டு முன்செல்கிறது. வரலாற்று நோக்கே காணக்கிடைப்பதில்லை. ஒட்டுமொத்தப்பார்வை உருவாவதில்லை. ஆகவே விவாதங்கள் பரஸ்பர நிராகரிப்பாகவே நிகழ முடிகிறது. அவை விதண்டாவாதங்களாக ஆகி மனக்கசப்பை நோக்கிச் செல்கின்றன
பத்தாம் நூற்றாண்டு முதல் கடுமையான மதப்போர்கள் இங்கே நிகழ்ந்து வந்தன. காரணம் பொதுவான மதவிவாத சபைகள் இல்லாமலிருந்ததே. பதிமூன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னர் நாயக்க அரசர்கள் சைவம் வைணவம் சாக்தம் ஆகிய மூன்றுமதங்களையும் தங்கள் அதிகாரம் மூலம் இணையச் செய்தார்கள். சைவக்கோயிலில் வைணவச் சன்னிதிகளையும் வைணவக்கோயிலில் சைவ சன்னிதிகளையும் அமைத்து வழிபாடுகளை கலந்தார்கள். விளைவாக மதச்சண்டை நடைமுறைத்தளத்தில் இல்லாமலாகியது. ஆனால் தத்துவ தளத்தில் மதநம்பிக்கையாளர்கள் தத்தம் வாசலை இறுக்கி மூடிக்கொண்டு உள்ளே ஒடுங்கித்தான் கிடந்தார்கள்.
ஒட்டுமொத்தமான பார்வையும் வரலாற்று அணுகுமுறையும் ஐரோப்பிய இந்தியவியலாளர்களாலேயே சாத்தியமாகியது என்பதே உண்மை. கிரிபித், மோனியர் விலியம்ஸ் போன்றவர்களுக்கு நாம் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறோம். அவர்களே இந்து ஞானமரபை ஒட்டுமொத்தமாக தொகுத்து நமக்களித்தார்கள். அனைத்து தரப்பையும் ஒரு பொதுவாசகன் அறிவதற்கான வாய்ப்பை அளித்தார்கள். அதன் விளைவாகவே இன்றைய இந்திய தத்துவ ஞானம் உருவாகி வந்தது
இன்றும் மரபான குருபரம்பரை வழியாக இந்து ஞானமரபின் ஏதேனும் கிளைகளை கற்பவர்கள் இந்த வரலாற்று அணுகுமுறையும் ஒட்டுமொத்த நோக்கும் இல்லாத ஒருவகை மூர்க்கர்களாகவே இருக்கிறார்கள் என்பதைக் காணலாம். தமிழகத்தில் ஆசார வைணவர்களும் ஆசார சைவர்களும் மதக்காழ்ப்பும் குருட்டுநம்பிக்கையும் கொண்டவர்களாகவும் ஆராய்ச்சி மனநிலைக்கு எதிரானவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்கள் எழுதிய நூல்களே அதிகமும் தமிழில் கிடைக்கின்றன. அவற்றின் வழியாகச் சென்று நாம் எந்த தத்துவத்தையும் புரிந்துகொள்ள முடியாது.
அந்நூல்களை நாம் வெளியே நின்று ஆராயலாம். அந்த மதங்களின் சில நுட்பமான உள்விஷயங்களைப் புரிந்துகொள்ள அவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம். இன்றும் ஒட்டுமொத்த பார்வைக்கும் வரலாற்று நொக்குக்கும் நாம் இந்தியவியல் முன்னோடிகளின் நூல்களையே சார்ந்திருக்க வேண்டியுள்ளது. அவர்களை சார்ந்தே விவேகானந்தரும் அரவிந்தரும் ஜெ.கிருஷ்ணமூர்த்தியும் ஓஷோவும் எல்லாம் சிந்தித்தார்கள். இந்தியவியலாளர்களுக்கு அவர்களுக்கே உரிய புரிதல் சிக்கல்கள் உள்ளன. மனநிலைச்சிக்கல்களும் உள்ளன. அவற்றை கருத்தில்கொண்டபடி அவர்களை துணைகொண்டு மூலநூல்களை நாமே வாசிப்பதே நல்ல முறையாகும். சமநிலை கொண்ட ஒரு குரு அமைவாரென்றால் மேலதிக அதிருஷ்டம்
விசிஷ்ட்டாத்வைதம்
பிரம்மமும் சீவங்களும் பிரபஞ்சமும் வெவ்வேறானவை என்றும் பிற அனைத்தையும் பிரம்மமே உருவக்கி தன்னிலடக்கிக்கொண்டுள்ளது என்றும் சொல்லும் பிற்கால வேதாந்த மரபு விசிஷ்டாத்வைதம் எனப்படுகிறது. இதுஅத்வைதத்திலிருந்து முரண்பட்டு கிளைத்தது. விசிஷ்டாத்வைதத்தின் மையகுரு ராமானுஜர். ஆனால் அதன் விளைநிலம் நம்மாழ்வாரின் பாடல்களே.
விசிஷ்டாத்வைதம் இருமூலங்கள் கொண்டது. சங்கரரின் அத்வைத தரிசனத்தை மறுத்த வேதாந்த கோட்பாடுகள் ஒன்பதாம் நூற்றாண்டுமுதலே இருந்தன. அவர்களில் முக்கியமானவர் பாஸ்கரர். இவர் ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்தார். இவர் பிரம்மசூத்திரத்துக்கு எழுதிய உரையான பாஸ்கர பாஷ்யத்தில் பிரம்மம் குணங்களுக்கு அப்பாற்பட்ட முற்றொருமை அல்ல என்றும் அது குணவடிவ தன்மை கொண்டு பிரபஞ்சமாகி வருகிறது என்றும் சொன்னார். இவரது கோட்பாட்டை பதினொன்றாம் நூற்றாண்டைசேர்ந்த யாதவபிரகாசர் வளர்த்தெடுத்தார். பிரம்மம் முழுமுதன்மையாக பிரிவுபடாமலும் பிரபஞ்சமாக பிரிவுபட்டும் இருதள இருப்பு கொண்டது இரண்டையும் இணைத்து அறிதலே பிரபஞ்ச உண்மையை அறியும் வழியாகும் என்பது இவர்களின் கோட்பாடு. இது பிரிவொருமைக் கோட்பாடு எனப்பட்டது.
கி பி எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவரான நம்மாழ்வார் ஆழ்வார்களில் முதன்மையானவர். நெல்லையருகே ஆழ்வார் திருநகரி [திருக்குருகூர்] என்ற ஊரில் பிறந்தவர். பிற ஆழ்வார் பாடல்களில் வெளிப்படும் உக்கிரமான பக்தியுடன் தத்துவ நோக்கும் வெளிப்படும்பாடல்கள் அவரால் எழுதப்பட்டவை. பத்தாம் நூற்றாண்டில் நாதமுனி ஆழ்வார்பாடல்களை தொகுத்து அளித்தார். அவரது மாணவரும் மகனுமாகிய யமுனாச்சாரியார் ‘சித்ரத்ரயம்’ என்ற நூலை இயற்றினார். இதுவே ஒருவகையில் விசிஷ்டாத்வைதத்தின் முதல் நூல்.
பதினொன்றாம் நூற்றாண்டில் காஞ்சீபுரமருகே ஸ்ரீபெரும்புதூரில் ராமானுஜர் பிறந்தார். இவர் யாதவப்பிரகாசர் யமுனாச்சாரியார் ஆகிய இருவருக்கும் மாணவர். பிரிவொருமைக் கோட்பாடு மற்றும் ஆழ்வார்பாடல்களில் உள்ள பிரபத்தி – அதாவது உணர்ச்சிப்பெருக்கான அர்ப்பணிப்பு கொண்ட பக்தி- இரண்டையும் இணைத்து உருவாக்கப்பட்டதே ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம். ராமானுஜரின் முக்கிய நூல்கள் பிரம்மசூத்திரத்துக்கு எழுதப்பட்ட ஸ்ரீபாஷ்யம், கீதா பாஷ்யம், வேதாந்த சாரம், வேதாந்த தீபம், வேதாந்த சம்கிரஹம் ஆகியவை.
விசிஷ்டாத்வைதம் சங்கர வேதாந்தத்தை ஒட்டியும் வெட்டியும் உருவானது. ராமானுஜரின் நூல்களில் சங்கரரை அவர் விரிவாக நிராகரித்தே தன் தரப்பை நிறுவுகிறார். முரண்பாடுகளை ஓர் அட்டவணையாக இப்படி தொகுக்கலாம்.
1] அத்வைதம்: பிரபஞ்சத்தில் உள்ள ஆத்மாக்கள் எல்லாம் ஒன்றே . விசிஷ்டாத்வைதம்: ஆத்மாக்கள் ஒன்றல்ல, தனித்தன்மைகள் கொண்ட பல.
2] அத்வைதம்: இப்பிரபஞ்சம் ஒரு மாயக்காட்சி. ஒன்றேயானபிரம்மத்தை ஆத்மா பலவானபிரபஞ்சமென மயங்குகிறது .
விசிஷ்டாத்வைத மறுப்பு: பிரம்மத்திலிருந்து உருவாகி பிரம்மத்தின் பகுதியாக நிலைநிற்கும் ஓர் உண்மையே இப்பிரபஞ்சம்
3]அத்வைதம்: பிரம்மம் மட்டுமே உள்ளது பிறவெல்லாம் பொய்மைகள்.
விசிஷ்டாத்வைத மறுப்பு: மூவகை உண்மைகள் உண்டு. பிரம்மம், ஆத்மா, பிரபஞ்சம்
4] அத்வைதம்: பிரம்மமே ஆத்மாவும்.
விசிஷ்டாத்வைத மறுப்பு: ஆத்மா பிரம்மமல்ல அது தனித்துவம் கொண்ட ஒரு இருப்பு.
ராமானுஜர் முக்கியமான வினா ஒன்றுடன் தொடங்குகிறார். பிரம்மத்தை ஆத்மா மற்றும்பிரபஞ்சமாக ஆக்குவது எது? மாயை என்பது அத்வைதத்தின் பதில். மாயையை உருவாக்குவது எது ? பிரம்மம் என்றால் பிரம்மம் குறையுடையது என்று பொருள். பிரம்மமே ஆத்மா என்றால் மாயையின் உருவாக்கமான ஆத்மா மாயைக்கு காரணமாக இருக்க முடியாது. இதற்கு பதிலளிக்கும் ராமானுஜர் பிரம்மம் மாயையின் மூலம் பிரபஞ்சமாக ஆவதில்லை, அது பிரபஞ்சமும் கூட என்கிறார்.
ராமானுஜ கோட்பாட்டை ஓர் உவமை மூலம் விளக்கலாம். கடலில் வாழும் மீன் அறியும் கடல் என்பது அது புழங்கும் சிறிய நீர்ப்பரப்பும் மணலும் பாறைகளும் மற்ற மீன்களும் அதுவும் மட்டுமே. ஆனால் அதுவல்ல கடல். அதேசமயம் அது கடலும் கூடத்தான். மீனறியும் கடல் பொய்யோ மாயையோ அல்ல. அது உண்மை .கடல் என்ற பேருண்மையின் ஒரு பகுதியான சிறு உண்மையே மீன் அறியும் கடல்.
எத்தனை விரிந்தாலும் மீனின் தர்க்கபுத்தி கடலை அறிந்துவிட முடியாது. கடலை மீன் அறிவதற்கான வழி சிறிது சிறிதாக தன்னை ரத்து செய்துகொள்வதே. அதன் தன்னுணர்வுநிலை இல்லாமலாகும் தோறும் அதனால் கடலை உணர முடியும். ஆகவே அதன் முன் உள்ள ஒரே வழி தன் முன் உள்ள சிறிய நீர்வெளியை கடலென எண்ணி மயங்காமலிருப்பது. அப்பால் உள்ள கடலை அறியும்பொருட்டு தன்னை முழுமையாக அதற்கு ஒப்படைத்துவிடுவது. இதுவே ஆழ்வார் பாடல்களில் பிரபத்தி என்று சொல்லப்படும் முழுமையான ஒப்புணர்வு ஆகும். இதன் மூலம் மனம் விரியும் ஒருவர் கடல் என்பது தன்னையும் உள்ளடக்கிய ஒன்று என அறியும் மீன் போல தன்னையிழந்து பிரம்மத்தை உணர்கிறார். எல்லா வேதாந்தக் கோட்பாடுகளுக்கும் பொதுவாக உள்ள கூறு என்பது அனைத்தும் பிரம்மத்தில் தோன்றி பிரம்மத்தில் அடங்குகின்றன என்ற தரிசனமாகும். அதை ராமானுஜரும் சொல்கிறார்.
விசிஷ்டாத்வைதம் முழுக்கமுழுக்க தமிழ் பண்பாட்டில் உதித்ததும் தமிழ் பண்பாட்டின் குரலாக ஒலிப்பதும் ஆன ஒரு தத்துவக் கோட்பாடு. ஆழ்வார் பாடல்களில் வெளிப்படும் பிரபத்தியை நாம் சிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர் குரவையில் காண்கிறோம். அதாவது ஆழ்வார்களுக்கு முன்னரே இக்கோட்பாடு நம் நாட்டார் வாய்மொழி மரபில் வாழ்ந்துள்ளது. ஆழ்வார் பாடல்களின் அழகியலும் உணர்வுநிலைகளும் முழுக்க முழுக்க சங்க இலக்கிய அகத்துறையின் நீட்சியே.
தமிழ்ப் பண்பாட்டின் மூன்று முக்கிய தத்துவ அம்சங்கள் விசிஷ்டாத்வைதத்தில் உள்ளன.
1] எந்நிலையிலும் ஒருமையை ஏற்காமல் பன்மையை நோக்கி செல்லும் நோக்கு
2] உலக வாழ்வை நிராகரிக்காமல் அதை கொண்டாடும் நோக்கு
3] தர்க்கத்துக்குப் பதிலாக அழகியலையும் உணர்வுகளையும் முன்வைக்கும் போக்கு.
விசிஷ்டாத்வைதமே பிற்பாடு பக்தியியக்கம் மூலம் இந்தியாவெங்கும் பரவிய கிருஷ்ணபக்தி மரபுக்கு அடிப்படையாகும். அவ்வகையில் பார்த்தால் அத்வைதம் ஓர் அறிவார்ந்த பாதிப்பையே உருவாகியது. விசிஷ்டாத்வைதமோ பெரும் மக்களியக்கமாக ஆயிற்று. அதன் பாதிப்புகள் இருபதாம் நூற்றாண்டு சிந்தனைகளில் கூட பலவகைகளில் தொடர்கின்றன. குறிப்பாக காந்தியின் ஆன்மீகம் விசிஷ்டாத்வைத அடிப்படை கொண்டதேயாகும். பாரதியின் ஆன்மீகமும் விசிஷ்டாத்வைதக் கோட்பாடான பிரபத்தியை காட்டுவதே.
பிரபத்தி
விசிஷ்டாத்வைதம் திரும்பத் திரும்பச் சொல்லும் மனநிலை பிரபத்தி என்பதாகும். பிரபத்தி என்றால்
இயல்பான வரம்பற்ற பக்தி. விசிஷ்டாத்வைத நோக்கு இதை அடிப்படை கோட்பாடாக முன்வைக்கிறது. பக்தியானது அறிந்து தெளிந்து நோக்கம் கொண்டு உருவவது. பிரபத்தி தன்னிச்சையானது, கட்டற்றது, நிபந்தனைகள் அற்றது. தாய்ப்பசு மீது கன்றின் பிரியம் போல வேறு சாத்தியங்களே இல்லாதது. செடியில் பூ போல அடிப்படை விதியாலேயே உருவாவது. பிரபத்தி உருவாவதற்கே இறையருள் தேவை என்று ராமானுஜர் சொல்கிறார். பெரியாழ்வார் விஷ்ணுவிடம் கொண்டது பக்தி. ஆண்டாள் கொண்டது பிரபத்தி. நம்மாழ்வார் பாடல்களில் நாயகி பாவமாக பிரபத்திநிலை அழகிய கவித்துவத்துடன் சொல்லப்பட்டுள்ளது
மண்ணை இருந்து துழாவி
வாமனன் மண்ணிது என்னும்
விண்ணைதொழுது அவன் மேவு
வைகுந்தம் என்று கைகாட்டும்
கண்னை உள்நீர் மல்க நின்று
கடல்வண்ணம் என்னும் அன்னே என்
பெண்ணை பெருமயல் செய்தார்க்கு
என் செய்கேன் பெய்வளையீரே
[செவிலி கூற்று]
செவிலித்தாய் தன் மகள் பெருமாள் மீது கொண்ட காதலைக் கண்டு சொல்கிறள். ‘மண்ணை இருந்து துழாவி அன்று வாமனன் மூன்ரடி வைத்த மண் இது என்கிறாள். விண்னை தொழுது அவனிருக்கும் வைகுண்டம் அது என்கிறாள். கண்ணில் நீர் பெருக கடலைக் கண்டு அவன் வண்ணமல்லவா இது என்கிறள்; எதைக்கண்டாலும் அவன் நினைபபகவே இருக்கிராள். என் பெண்ணிடம் இத்தனை பெருங்காதலை நிறைத்தவனை நான் என்னவென்று சொல்வது? என்ன செய்வது?’
என்ற நாலாயிர திவ்ய பிரபந்த பாடலை உதாரணமாக காட்டலாம்