இலக்கியக்கோட்பாடுகள்

[மறுபிரசுரம்] இலக்கியக் கோட்பாடு என்பது இலக்கியத்தை எப்படி எழுதுவது, எப்படி வாசிப்பது என்று அதை எழுதுபவர்கள் மற்றும் வாசிப்பவர்கள் அல்லாத மூன்றாம் தரப்பினரால் கூறப்படும் உறுதியான கருத்துநிலைபாடு .

இலக்கியத்தைப்பற்றி யோசிக்கும்போது கருத்துக்கள் தோன்றுகின்றன. பிற்பாடு இவை கொள்கைகளாகவும் கோட்பாடுகளாகவும் ஆகின்றன. ஒரு எண்ணம் சற்று சந்தேகத்துடன் முன்வைக்கப்படும்போது அது கருத்து எனப்படுகிறது. உறுதியாக முன்வைக்கப்பட்டால் அதை கொள்கை என்கிறார்கள். சொன்னவருக்கு கொஞ்சம் சந்தேகம் வந்த பிறகும் பிறருக்கு அதன்மேல் உறுதிப்பாடு இருக்கும் என்றால் அது கோட்பாடு. இலக்கியக்கருத்தைக்கொண்டு இலக்கியத்தை புரிந்துகொள்ள முடியும், கொள்கையைக் கொண்டு அதைச் சொன்னவரை புரிந்துகொள்ள முடியும், கோட்பாட்டைக் கொண்டு கோட்பாட்டினை புரிந்துகொள்ள முடியும் என்பதே இவற்றின் பயன்பாடு.

கோட்பாடுகளை பொதுவாக மேலைக்கோட்பாடு கீழைக்கோட்பாடு என்று இரண்டாகப்பிரிப்பார்கள். மேலே இருப்பது மேல் என்பது ‘மிஷனரி பொசிஷன்’ என்று பிற்கால ஆய்வாளர்களால் குறிப்பிடப்பட்டது. ஆகவே மேலைக்கோட்பாடு கருவுருவாக்கம் கொண்டதாகவும் கீழைக்கோட்பாடு கருச்சுமப்பதாகவும் காணப்படுகிறது. ஏராளமாக உற்பத்தி செய்து அவற்றை இயன்ற இடமெல்லாம் பரப்பி அவை என்னாகின்றன என்று தெரிந்துகொள்ள முயலாமல் மேலே செல்வது மேலைக்கோட்பாட்டின் உயிரியல் இயல்பு. எல்லாக்கோட்பாடுகளையும் தனக்குப்பின்னால் ஓடவிட்டு முந்திவருவதை ஏற்று பூட்டிக்கொண்டு விழிபிதுங்குவது கீழைக்கோட்பாட்டின் உயிரியல்பு.

ஒரு உற்சாகத்தில் மேலைக்கோட்பாடு விளையாடியதன் விளைவை கையில் ஏந்தி அவர்களின் வாசலில் கண்ணீருடன் சென்று நின்று கீழைக்கோட்பாடு நிற்கும்போது ‘மூஞ்சிய பாத்தா என்னோடது மாதிரியே இல்லியே’ என்று மேலைக்கோட்பாடு கதவைச் சாத்திக்கொள்வதும் அடிக்கடி நிகழ்கிறது. கீழை நாட்டு பல்கலைகளில் அனாதைக்கோட்பாடுகள் அலைந்து திரியும் நிலை இதனால் உருவாகிறது. சிலசமயம் ஒரு தாலாட்டுப் பாடலின் அடிப்படையில் அவை ஒன்றை ஒன்று ஆரத்தழுவி ‘அண்ணா! தம்பீ!’ என்று மெய்சிலிர்ப்பதும் உண்டு. நிறைய கீழைக்கோட்பாடுகளின் கழுத்தில் உச்சகட்டத்தில் திறந்து பார்க்கவேண்டிய டாலர்கள் தொங்குவதும் சாதாரணம்.

மேலைக்கோட்பாட்டின் முக்கியமான தொடக்கம் என்று அரிஸ்டாடில் என்ற அறிஞர் உருவாக்கிய கதார்ஸிஸ் என்பதைக் குறிப்பிடுவது பள்ளிப்பாட வழக்கம். ‘அரிசித்தட்டிலி’ என்ற செந்தமிழ்ச் சொல்லின் மரூஉவே அப்பெயரென்றும் கதார்ஸிஸ் என்பது கதையுரசல் என்ற தீந்தமிழ் சொல்லே என்றும் அறிஞர் வேதநேயர் சொல்வதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். இலக்கியப்படைப்பில் ஒன்றி கதறி அழும் வாசகர்கள் அதன் மூலம் அப்படைப்பை வாசித்ததையும் சேர்த்து அனைத்துப் பாவங்களையும் களைந்து தூய்மை அடைவதே இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. ஏராளமாக வாசிப்பவர்கள் அதிக தூய்மை அடைந்து அடைந்து ஒரு கட்டத்தில் அழுக்குகளுக்காக வெளியே தேடியலைய ஆரம்பிக்கும் நிலை ஏற்படுகிறது.

இதை முன்னுணர்ந்தே அரிஸ்டாட்டிலின் முன்னோடியான பிளேட்டோ [பாளையத்தான் என்ற தூயதமிழ்ச் சொல்லின் மரூ, பார்க்க செந்தமிழ் சொல்முறிப்பகராதி] இலக்கியம் முதலிய கலைகளை அவற்றை ரசிக்கும் உணர்ச்சியே இல்லாத தத்துவஞானிகள் எப்போதும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவேண்டும் என்று குறிப்பிட்டார். பிற்பாடு மத அறிஞர்களும் அதன் பின்னர் அரசியல் அறிஞர்களும் அதன்பின்னர் புரட்சிக்காரர்களும் இக்கருத்தையே முன்னெடுத்தார்கள். இன்று கோட்பாட்டாளர்கள் அதை கடைப்பிடிக்கிறார்கள்.

நல்ல கலை என்பது உள்ளடக்கத்தில் தத்துவத்தைக் கொண்டிருக்கும். தத்துவத்தை கேட்பவர்கள் உடனடியாக அதை மறுக்கிறார்கள். ஆகவே கலைக்குள் தத்துவத்தை பேரீச்சையில் கொட்டையைப்போல உள்ளே வைத்து கொடுக்க வேண்டும் என்பது ரோமாபுரியின் உதித்த ஹெலனிஸ்டிக் அழகியல். கொட்டையை பக்குவமாக துப்பிவிட்டு பேரீச்சையைச் சாப்பிடுவதே நுண்ணிய ரசனை எனப்படுகிறது. சதையை துப்பிவிட்டு கொட்டையை மெல்வது கலையிலக்கிய விமரிசனம். கொட்டையின் அடிப்படையில் பேரீச்சையை மதிப்பிடுவதன் மூலமே மேலதிக இலக்கியக் கலைக்கோட்பாடுகள் உருவாகின்றன. அவற்றில் இருந்து தந்திரமாக தப்புவதற்கான முயற்சியின்மூலம் கலையிலக்கியங்கள் புதிய அழகியலைக் கண்டுபிடிக்கின்றன. இந்த முரணியக்கம் இலக்கியச்செயல்பாட்டின் அடிப்படை விதியாகும். இந்த முரணியக்கத்தை இலக்கியவாதிகள் விமர்சகர்களை கண்டதும் ஓடிப்போய் கட்டிப்பிடித்து நலம்விசாரித்துவிட்டு திரும்பும்போது கெட்டவார்த்தையை வாய்க்குள் முணுமுணுக்கும் பரவலான வழக்கத்தில் இருந்து அறியலாம்.

உயர்ந்தகலை என்பது உயர்ந்த மனிதர்களை படைக்கும் என்று நம்பிய மேலைக்கோட்பாடு கூடவே அக்கலைஞர்கள் கீழ்மையானவர்கள் என்று வகுத்தது. இவ்வாறாக கீழ்மையானவர்கள் கீழ்மையானவர்களாக ஆக எண்ணுபவர்களை மேன்மைப்படுத்தும் பொருட்டு உருவாக்குவதே கலை என்ற வரையறை உருவாகியது. இது மத்தியகாலகட்ட கலைக்கோட்பாடு என்று சொல்லப்படுகிறது. இதன் மூலம் கலைக்கு இரு பக்கமும் இருவகை மக்கள் உருவானார்கள். ஒருசாரார் கீழே இருந்துகொண்டு அதை மேலே தூக்குகிறார்கள் இன்னொருசாரார் மேலே இருந்துகொண்டு அதை கீழே குனிந்து தூக்குகிறார்கள். முதல்வகையினர் படைப்பாளிகள், கலை அவர்களின் தலைக்குமேலே உள்ளது. இரண்டாம் வகையினர் ரசிகர்கள், கலை அவர்களின் காலுக்கு கீழே உள்ளது. பிந்தையவர்கள் முந்தையவர்களுக்கு பணம் அளித்து புரக்க கடமைப்பட்டவர்கள் என்பது மத்தியகால நம்பிக்கை. உணர்ச்சிமீதூறும்போது கையுறைகளை கழற்றி கலைஞர்கள் மேல் வீசும் வழக்கம் இக்காலகட்டத்தில் உருவானது, அக்காலத்தில் ஆணுறைகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

மத்திய காலகட்ட கலைக்கோட்பாடு கலைஞர்களை மூன்று வகையாக பிரிக்கிறது. ஜிப்சிகள் ,ஜிப்ஸிகளைப்போன்றவர்கள், கிட்டத்தட்ட ஜிப்ஸிகளைப் போன்றவர்கள். முறையே இவர்கள் கீழ்த்தரக் கலைஞர்கள், நடுத்தரக் கலைஞர்கள், உயர்தரக்கலைஞர்கள் என்று பிரிக்கப்பட்டார்கள். கீழ்த்தரக்கலைஞர்கள் பிரபுக்களின் இல்லங்களில் மதுவிருந்துகளில் உயர்தர பரிசுகள் பெற்றுக்கொண்டு ஆடுவார்கள். நடுத்தரக் கலைஞர்கள் மக்கள்கூடும் சந்திப்புகளில் சில்லறைகள் விட்டெறியப்பட்டு நடிப்பார்கள். உயர்தரக் கலைஞர்கள் ஆளில்லாத தேவாலயங்களில் பியானோவை இசைத்து தங்களுக்குள் பாடிக்கொள்வார்கள். அவர்களுக்காக பாதிரிகள் பிரார்த்தனை செய்வார்கள். அவர்கள் எழுதுவது காவியம் என்றும் பாடுவது செவ்வியல் இசை என்றும் அவர்கள் பாடுவதைக்கேட்டு பாடத்தெரியாத பாதிரிகள் பாடுவது காஸ்பல் இசை என்றும் சொல்லப்பட்டது. நல்ல கலை என்பது தூக்கத்துக்கோ துக்கத்துக்கோ இட்டுச்செல்லவேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

நவீனகாலக் கலைக்கோட்பாட்டை உருவாக்கியவர் என்று ஜான் ரஸ்கின் சொல்லபடுகிறார். இவர் நவீன ஓவியர்களைப்பற்றி ஒரு மிகக்கனமான நூலை எழுதினார். அதில் அவர்கள் கலைஞர்களை பொறுக்கிகள் அல்லது நாடோடிகள் என்று சொல்லி அவமதிக்கும் மத்தியகால வழக்கத்தை மிகமிகக் கடுமையாகக் கண்டிக்கிறார். அவர்களை கிறுக்கர்கள் என்று சொல்வதே முறை என்று நிறுவுகிறார். இந்நூல் அத்தனை பெரியதாகையால் அதை வாசிக்காத அனைவருமே அதை நம்பும் நிலை ஏற்பட்டது. விளைவாக கலைஞர்களும் கிறுக்கர்களாக ஆகவேண்டிய வரலாற்றுக் கட்டாயத்துக்கு ஆளானார்கள். அவர்கள் மிதமிஞ்சி மதுவருந்திவிட்டு முச்சந்திச் சண்டைகளில் ஈடுபடுவது காது முதலிய உறுப்புகளை வெட்டி காதலிகளுக்கு அனுப்புவது சிபிலிஸ் நோய் பெறுவது போன்ற வழக்கங்கள் உருவாயின.

இந்தக்காலகட்டத்தில் கலைஞர்கள் தங்களை கிறுக்காக காட்டிக்கொள்ளும் பொருட்டு விசித்திரமான செயல்களைச் செய்துகொண்டே போக அவர்களை பின்தொடர்து செல்லும் தத்துவ ஆசிரியர்களும் இலக்கிய விமர்சகர்களும் அவற்றுக்கு உளவியல் விளக்கமும் குறியியல் விளக்கமும் கொடுத்து அவற்றை கிறுக்கல்லாமல் ஆக்கிக்கொண்டே போகும் வழக்கம் பிறந்தது. ஆகவே புதிய புதிய கிறுக்குகளுக்காக கலைஞர்கள் தேட ஆரம்பித்தார்கள். சால்வடேர் தாலி என்பவர் மீசைக்கு நவச்சாரம் போட்டுக்கொண்டார். அந்தோனின் ஆர்ட்டாட் என்பவர் என்பவர்ஆணுறை என்பது ஒருவகை ஆடையே என்று கண்டு பிடித்தார்.அவற்றை கலைஞர்களின் அன்றாடப்பழக்கமே என விமர்சகர்கள் நிரூபிக்கும் வரை அவர்கள் பிறரை துணுக்குற வைப்பது நீடித்தது.

பொதுவாக ஒரு கலைஞரின் படைப்பூக்க கிறுக்குத்தனத்தை அவரைப் பார்க்கவருபவர்களும் சாதாரணமாகச் செய்ய ஆரம்பிக்கும்போது அது முடிவுக்கு வருகிறது. இந்த முரணியக்கம் மூலம் கலை முன்னகர்ந்தது. வான்காவின் காதுக்கு மொழியியல் விளக்கம் அளிக்கப்பட்டது, அதுவே காதுமையமொழியியல் என்று பிற்கால பாடநூல்களில் இடம்பெற்றது. மாப்பசானின் சி·பிலிசுக்கு அளிக்கப்பட்ட குறியியல் விளக்கம் ஆச்சரியமாக அமெரிக்கச் சமூகநலத்துறையில் ‘பாத்துப்போடு’ [Play safe ] என்ற கோட்பாடாக மாறி சுவரொட்டிகளில்கூட இடம்பெற்றது.

கலைஞர்களை உளப்பகுப்பு செய்யும் முறை அதைத்தொடர்ந்து உருவாகியது. சிக்மண்ட் ·ப்ராய்ட் என்பவர் மனநோயாளிகளை சாய்வுப்படுக்கையில் படுக்கவைத்து இருட்டில் அமர்ந்து கேள்விகள் கேட்டு அவர்களை வசியம் செய்தபோது அவர்கள் பல நாவல்களில் தாங்கள் வாசித்த கதைகளின் சாயலில் தாங்கள் புனைந்த பலான கதைகள் மூலம் அவரை திருப்பி வசியம் செய்தார்கள். அந்த முறையே உளப்பகுப்புமுறை என்று சொல்லப்படுகிறது. சிக்மண்ட் ·ப்ராய்ட் நோயாளிகள் பேசுவது இலக்கியம்போல இருப்பதனால் இலக்கியம் என்பதும் ஒரு நோயே என்ற கோட்பாட்டை வகுத்தளித்தார். இதனடிப்படையில் இலக்கியப்படைப்புகளை வாசித்து விரிவாக நோய் நிர்ணயம் செய்து அதற்கு மருந்துகளை பரிந்துரைப்பதே உளப்பகுப்பு இலக்கிய விமரிசனக் கோட்பாடு என்று சொல்லப்பட்டது.

இக்கோட்பாட்டின்படி எல்லா மானுடச்செயல்பாடுகளும் காமத்துக்காகவே செய்யப்படுகின்றன. காமத்தில் நேரடியாக ஈடுபட வாய்ப்பில்லாதவர்கள் கிரிக்கெட் விளையாடுவது, பியானோ வாசிப்பது, அரசியல்கிளர்ச்சிகளில் ஈடுபடுவது , உளப்பகுப்பாய்வு செய்வது போன்ற மாற்று முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். இலக்கியமும் அத்தகையதேயாகும். இந்தக்கோட்பாட்டின் அடிப்படையில் இலக்கியவடிவங்கள் தீர்மானிக்கப்பட்டன. ஒரே ஒரு உச்சம் இருப்பதனால் சிறுகதை ஆண்தன்மை கொண்டது என்றும் நாவல் பல உச்சங்களுக்கு வாய்ப்புள்ள பெண்மைவடிவம் என்றும் ஆய்வாளர் வகுத்தமை குறிப்பிடத்தக்கது. புதுக்கவிதை சிட்டுக்குருவித்தன்மை கொண்டது என்றும் மரபுக்கவிதை நாய்த்தன்மை கொண்டது என்றும் மேலதிக விளக்கங்கள் இவர்களால் அளிக்கப்பட்டன.

·ப்ராய்டின் நண்பர் சி.ஜி.யுங் என்பவர் ஆழ்படிமம் என்ற கோட்பாட்டை முன்வைத்தார். உலகத்தில் உள்ள அத்தனை பேரும் அவர்களின் பாட்டி சொன்ன கதைகளையே திருப்பிச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் என்பதே இதன் அடிப்படை. அவ்விஷயம் யுங்குக்கு அவரது பாட்டியால் சொல்லிக்கொடுக்கப்பட்டது. எல்லா கதைகளையும் சுருக்கி சுருக்கி பாட்டிக்கதைகளாக ஆக்க முடியும், எல்லா பாட்டிக்கதைகளையும் பாட்டிகளாக ஆக்க முடியும், எல்லா பாட்டிகளையும் ஒரே பாட்டியாக ஆக்க முடியும், அந்த பாட்டியே எல்லாவற்றுக்கும் காரணம் என்று அவர் நிறுவினார். அந்தப்பாட்டி முன்னரே செத்துப்போய்விட்டாள் என்பதனால் மேற்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. ஆகவே இலக்கியத்தை அதன் பாட்டுக்கு விட்டுவிடலாம் என்பதே அவரது நம்பிக்கை. ·ப்ராய்ட் யுங் இருவரும் நிறைய நூல்களை எழுதியிருக்கிறார்கள். ·ப்ராய்ட் எழுதிய நூல்கள் தெளிவாக புரியக்கூடியவை. யுங் எழுதிய நூல்களை வாசித்தபின் ·ப்ராய்ட் புரியாமலாகிவிடுவார் என்பதனால் அவர்கள் இருவரையும் சேர்த்தே வாசிப்பது கல்வித்துறை மரபு.

புரட்சியிலக்கியம் என்பது இதற்குச் சமகாலத்தில் உருவாகி வந்த ஒன்று. ஜெர்மனிய யூதரான கார்ல் மார்க்ஸ் அவரது நண்பர் ·ப்ரடரிக் எங்கல்சுடன் இணைந்து மூலதனம் என்ற மாபெரும் நூலை எழுதினார். இதன்படி அவர் ஒட்டுமொத்த சமூகத்தையும் மூன்றாக பிரித்தார். அடக்கி ஆளும் முதலாளிகள், சுரண்டப்படும் தொழிலாளிகள், நடுவே மாட்டிக்கொண்டு முதலாளிக்குமுன் தொழிலாளிகளாகவும் தொழிலாளிக்கு முன் முதலாளியாகவும் தோற்றமளிக்கும் நடுத்தரவர்க்கம். இந்தப் பிரிவினையை மார்க்ஸ் அவரது குடும்பத்திலேயே கண்டடைந்தார். மார்க்ஸ் குடும்பத்தின் முதலாளி. அவரால் பாலியல் ரீதியாகச் சுரண்டப்பட்ட வேலைக்காரி ஹெலன் டெமுத் உழைக்கும் வர்க்கம். இருவரையும் சமாதானப்படுத்திய ஜென்னி மார்க்ஸ் நடுவர்க்கம். மார்க்ஸ் நோயுற்றபோது அதிகாரம் ஜென்னியின் கைகளுக்குச் சென்று சேர்ந்தது. அதுவரை மார்க்சுக்கு சேவைசெய்த ஹெலன் டெமுத் ஜென்னிக்குச் சேவைசெய்யலானார்.

இந்தப்பிரிவினை அக்காலத்து ஐரோப்பியக்குடும்பங்கள் அனைத்திலும் இருந்தமையால் எளிமையாகப் புரிந்துகொள்ளப்பட்டு பிரபலம் அடைந்தது. இதை இலக்கியத்தில் அப்படியே போட்டுப்பார்க்கலாமென்று பலர் முயன்றபோது முற்போக்கு இலக்கியம் உருவாகித்து. முற்போக்கு இலக்கியம் தொழிலாளிகள் புரட்சி செய்து முதாலாளியை ஒழித்துவிட்டு அதிகாரத்தை புரலட்டேரியன்கள் எனப்படும் நடுவர்க்கத்தினரிடம் பணிவுடன் ஒப்படைப்பதைப்பற்றி பேசுவதாகும். இதை பெரும்பாலும் நடுவர்க்கத்தவரே எழுதி அவர்களே வாசித்து இன்புற்று அவர்களே விமர்சனக்கோட்பாடுகளையும் உருவாக்கிக்கொண்டார்கள்.

சோவியத் ருஷ்யாவில் இருவகையான ஆட்சிக்கோட்பாடுகள் இருந்தன. போருக்குப்போகும் சிப்பாய்களுக்கு சொர்க்கம் கிடைக்கும் என்று ஜார் மன்னர் சொன்னார். அரசாங்கம் கிடைக்கும் என்று லெனின் சொன்னார். இரண்டுமே படைவீரர்களுக்கு தெரியாதவை என்பதனால் பாதிப்பேர் சொர்க்கத்தையும் மீதிப்பேர் அரசாங்கத்தையும் தேர்ந்தெடுத்தார்கள். அவர்கள் முறையே வெண்படை செம்படை என்று சொல்லப்பட்டார்கள். செம்படை வென்று கம்யூனிச அரசை உருவாக்கியது. வெண்படையினருக்கு நரகமும் செம்படையினருக்கு சைபீரியாவும் அளிக்கப்பட்டது.

செம்படை அரசின் தலைவராக இருந்தவர் ஸ்டாலின். இவருக்கு எழுதப்படிக்க தெரியாதென்பதனால் பிறர் இவருக்காக எழுதினார்கள். ஆகவே இவர் தத்துவ ஞானியாக ஆகி இலக்கியக்கோட்பாடுகளை உருவாக்க ஆரம்பித்தார். இக்கோட்பாடுகளில் முக்கியமானது சோஷலிச யதார்த்தம் என்பதாகும். அதில் உள்ள சோஷலிசத்தை யதார்த்தமும் யதார்த்த்தை சோஷலிசமும் சமன் செய்வதனால் அதன் முரணியக்கம் செவ்வனே நிகழ்கிறது என்று ஸ்டாலின் கருதினார். சோஷலிசத்தை ஏற்காதவர்கள் சைபீரியா என்ற யதார்த்ததை ஏற்கவேண்டும் என்ற கருத்து அவரால் நடைமுறைப்படுத்தப்பட்டது. சோஷலிசத்தை ஏற்றுக்கொண்டவரக்ள் யதார்த்தத்தை அதன் அடிப்படையில் உருவாக்கவேண்டும். சோஷலிச யதார்த்தம் கெட்டி அட்டையுள்ள மலிவுவிலை நூல்கள் மூலம் சோஷலிசம் இல்லாமல் யதார்த்தம் மட்டுமே இருந்த நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டது. இந்நாடுகளில் இது ‘மொழிபெயர்ப்புயதார்த்தவாதம்’ என்றும் சொல்லப்பட்டது. ‘மலிவுவிலையதார்த்தவாதம்’ என்ற பெயர் அவதூறாளர்களால் சொல்லபப்ட்டது

இக்காலகட்டத்தில் மார்ட்டின் ஹைடெக்கர் என்ற பலவீனமான கணவர் மனிதனின் ஆகப்பெரிய பிரச்சினை ‘ஏன்?’ என்று மௌனமாகக் தனக்குள் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்வதே என்று கண்டுபிடித்தார். பதில் இல்லாத அளவில் அந்த கேள்வியைக் கேட்கும்போது ஏண்டா கேட்டோம் என்றாகிற நிலையை அவர் இருத்தலியல் பறதி [ஆங்ஸ்ட்] என்று குறிப்பிட்டார். உயிரோடு இருக்கத்தான் வேண்டுமா என்ற எண்ணம் எழுந்துவிடுகிறது. அது இருத்தலியல் கேள்வி என்று சொல்லப்படுகிறது. இருக்கிறேனா இல்லையா என்ற கேள்வி அதற்கு அடுத்த நிலை. இது இருத்தலியல் பதிலின்மை எனப்படுகிறது. இருந்தாரா இல்லையா என்ற கேள்வி ஆயுள்காப்பீட்டூழியர்களால் பின்னர் எழுப்பப்படுகிறது. இது இருத்தலியல் சமன் என்று சொல்லப்படுகிறது. மூன்றும் கலந்ததே இருத்தலியல்.

இருத்தலியல் என்பது இருப்பை அர்த்தமற்றதாக்குகிறது என்றவர் ஜீன் பால் சார்த்ர். ஆகவே படுத்தலே சிறந்தது. இருத்தலியலின் சிக்கலே தனிமை தான். ஆகவே சேர்ந்து படுப்பது அதற்கு தீர்வு. இதற்காக அவர் சீமோன் த பூவா என்ற பெண்மணியுடனும் அவர் தேடிக்கொடுத்த அவரது மாணவிகளுடனும் அதை செய்து பார்த்தார். இவ்வனுபவங்களை ‘வாந்தி’ என்றபேரில் தத்துவக்குறிப்புகளாக எழுதிவைத்தார். மனிதனின் சிக்கலை துளை என்ற தத்துவக்கட்டுரையில் அலசும் சார்த்ர் துளையை அடைத்தல் என்பதே ஒட்டுமொத்த மானுடவாழ்க்கையின் குறியீடு என்று சொல்கிறார். மரணம் ஒரு பெரிய துளை. இலக்கியம் அதைவிட பெரிய துளை, அதை இலக்கிய விமர்சனம் என்ற கார்க்கை வைத்தே அடைக்க முடியும்.

ஆகவே சார்தர் இருத்தலும் இன்மையும் என்ற நூலை முடிந்தவரை சிக்கலாக பிரம்மாண்டமாக எழுதி அதை எவரும் படிக்கமுடியாதபடிச் செய்தபின், அதில் உள்ள கருத்துக்களைச் சுருக்கமாகச் சொல்லி அவற்றை அந்நூலை வாசிக்காமல் மறுக்கமுடியாத நிலையை உருவாக்கி சிந்தனைத்துறையில் வெற்றி பெற்றார். மனிதன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு புண்ணாக்கும் இல்லை என்ற ஆழமான கருத்தை அதில் அவர் சொல்லியிருந்தார். அந்தக்கருத்தை ஏற்றுக்கொண்டு இருக்கிறேனா, இல்லை இல்லையா, அல்லது இல்லாமலிருக்கிறேனா என்றெல்லாம் கொள்கைக்குழப்பம் அடையும் கதாபாத்திரங்களை கா·ப்கா , காம்யூ போன்ற எழுத்தாளர்கள் எழுதினார்கள். அவற்றை வாசித்து வாசித்தோமா, இல்லை வாசிக்காமலேயே இருந்தோமா , இல்லை வாசிக்காமல் இல்லாமலிருந்தோமா என்ற சந்தேகத்தை உலகமெங்கணும் உள்ள வாசகர்கள் அடைந்தார்கள். இதை இருத்தலிய அலை என்ற கோட்பாட்டுக்கொந்தளிப்பாக குறிப்பிடுகிறார்கள்.

இருத்தலியல் எளிதாக கீழைநாடுகளில் புரிந்துகொள்ளப்பட்டது. பொதுவாக நடுவயது முற்போக்குப் பிராமணர்கள் இதை அடைந்தார்கள் என வரலாறு பதிவுசெய்கிறது. சிறுவயதில் பூணூல் போட மறுக்கையில் அவர்கள் மார்க்சியர்களாக ஆகிறார்கள். திரும்பப் போடுவதா வேண்டாமா என்ற குழப்பம் அவர்களை நடுவயதில் இருத்தலியலாளர்களாக ஆக்குகிறது. ‘சரிதான் கழுதை’ பையனுக்கு பூணூல் போட முடிவெடுக்கும்போது பின்நவீனத்துவர்களாக ஆகிறார்கள். பிராமணரல்லாதவர்களில் இது வேறுவகையில் செயல்படுகிறது. மதுக்கடையில் இரண்டு வலிது தாண்டப்படுகையில் அவர்களுக்கு இருத்தலியல் சிக்கல்கள் ஏற்படுகிறது. ஆனால் சிறுநீர் கழித்தல் மூலம் அவர்கள் இருப்புணர்வை வலுவாக அடைகிறார்கள். ஆகவே அவரக்ளில் இது நீடிப்பதில்லை.

பூவாத்தாள் இரண்டாவது பாலினம் என்ற புத்தகத்தை எழுதினார். அந்நூலை உலகமெங்கும் ஆண்கள் வாசித்து கிளர்ச்சி அடைந்தார்கள். பெண்விடுதலை பேசும் பெண் இன்னமும் கவற்சியானவள் என்று ஆண்கள் கருத ஆரம்பித்ததும் உலகமெங்கும் பெண்களிடையே அந்த மோஸ்தர் காட்டுத்தீ போல பரவியது. பெண்விடுதலைச் சட்டைகள், பெண்விடுதலைக் காதணிகள், பெண்விடுதலை உதட்டுச்சாயங்கள் ,பெண்விடுதலை உயர்குதிக்காலணிகள் பிரபலமடைந்தன. பெண்கள் நாலாதிசையிலும் கவிதைகள் எழுத ஆரம்பித்தார்கள். இது பெண்ணிலக்கியம் என்று சொல்லப்பட்டது. பெண்விடுதலையை ஏற்றுக்கொண்ட இலட்சியத்தோழனை கணவனாக ஏற்றுக்கொண்டபின் காதலனைப்பற்றி கவிதைகள் எழுதுவது பெண்ணிலக்கியத்தின் மையக்கருப்பொருளாகும். அழகான பெண்கள் அழகைப்பற்றியும் அழகில்லாத பெண்கள் யோனியைப்பற்றியும் கவிதைகள் எழுதும் மரபு கடைப்பிடிக்கப்படுகிறது.

சோவியத் ருஷ்யாவில் கல் உடைப்பவர்கள் கல்லூரிக்கும் கல்லூரி ஆசிரியர்கள் கல்லுடைக்கவும் செல்லக்கூடிய நிலை உருவாகியது. இதை கல்லாசார புரட்சி என்று சொன்னார்கள். கல்லுடைப்பதற்குச் சென்ற சில பேராசிரியர்கள் கல்லை உடைக்க கல்லின் அமைப்பை முக்கியமாக கருதவேண்டும் என்று கண்டறிந்து கோட்பாட்டை உருவாக்கினார்கள். அவர்கள் திரும்பவும் கல்லூரிக்கு வந்தபோது அந்தக்கோட்பாட்டை சொல்லுடைக்க பயன்படுத்திக்கொண்டார்கள். மிகயீல் பக்தின் என்ற பேராசிரியர் மிகவும் பக்தியுடன் உருவாக்கிய இக்கோட்பாடு பின்னர் பலவகைகளில் வளர்ந்து அமைப்பியல் என்று பெயர்பெற்றது. பிரெஞ்சுக்காரர்களுக்கு பின்பக்கம் மிகவும் பிடிக்கும் என்று பாலியலாளர் ஹாவ்லக் எல்லிஸ் சான்றுரைத்திருக்கிறார். ஆகவே அவர்கள் பின்அமைப்புவாதத்தை வளர்த்தெடுத்தார்கள். இதை தெரிதா என்ற அறிஞர் முதலில் உருவாக்கியதாகச் சொல்லப்படுகிறது.

பூவாத்தாள் காலத்தில் பெண்கள் முன்பக்கம் விடுதலைபெறுவது அவர்களில் பலவகையான புதிய அசைவுகளை உருவாக்கி விடுதலையுணர்வை அளிக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டது. இது சமூகத்திலும் பலவகையான சலனங்களை உருவாக்கியது. இந்த வழக்கம் உலகமெங்கும் பரவியதனால் பெண்களில் வளர்ச்சி துரிதப்பட்டது. இந்தவகையான வளர்ச்சியை விரும்பாத ஆண்கள் கச்சிதமான வடிவத்துக்காக குரல் கொடுக்க ஆரம்பித்தார்கள். எந்த ஒரு கலைப்படைப்பும் உரிய கட்டுக்குள் மூச்சுத்திணறியபடி இருக்கவேண்டும் என்று இவர்கள் வாதிட்டார்கள். வடிவத்தால் கட்டுப்படுத்தப்படாத கட்டற்ற அழகியல் என்பது சரிவுக்கு இடம்கொடுக்கும் என்றார்கள் . இந்த முரணியக்கம் மூலம் உருவான சிந்தனைச் சுழற்சியே நவீனத்துவம் என்று சொல்லப்பட்டது. வழக்கம்போல இதற்கு பிரெஞ்சுக்காரர்கள் உருவாக்கிய அடுத்தகட்ட வளர்ச்சி பின்நவீனத்துவம் என்று சொல்லப்பட்டது.

எழுத்தாளனுக்குள் உடுருவி ஆராய்ச்சி செய்வதற்கு எப்போதுமே மேலைத்தத்துவக் கோட்பாடு விழைந்திருக்கிறது. உளவியல் விமரிசனங்கள் அவற்றின் எல்லைகளை அடைந்தபோது மேலே செல்ல வழியில்லாமல் தவித்த ஆய்வாளர்கள் எழுத்தாளனை விட அவன் சடலம் இன்னும் நுட்பமாக ஆய்வுக்கு உதவுகிறது என்று கண்டடைந்தார்கள். குறைந்தபட்சம் அது எதிர்வினையாற்றுவதில்லை. ஆகவே எழுத்தாளன் இறந்துவிட்டான் என்று ரோலான் பார்த் என்ற அறிஞர் சொன்னார். ஆமாம் இறந்துவிட்டான் என்று மற்ற விமர்சகர்களும் சொன்னார்கள். எழுத்தாளர்கள் விமர்சகர்களை மறுப்பது பண்பாடல்ல என்பதனால் அவர்களும் அதை ஒத்துக்கொண்டார்கள். இதன் பின் எழுத்தாளர்கள் விமர்சகர்களுக்கு சுயவிலாசமிட்ட தபால் உறையை அனுப்பி தங்களைப்பற்றி தெரிந்துகொள்ளும் வழக்கம் பிறந்தது.

இந்த கருத்துநிலையை ழாக் தெரிதா படைப்புக்குள் மேலெடுத்தார். படைப்பை வாசகன் தன் இஷ்டத்துக்கு வாசிக்கலாமென்று அவர் கண்டுபிடித்தார். வாசிக்கும்போதுதான் படைப்பு உருவாகிறது. வாசித்து முடித்ததும் அது இல்லாமலாகி குறிப்புகள் மட்டும் எஞ்சுகின்றன. அவை உடனே கட்டுரைகளாக ஆகி, கோட்பாடுகளாக பிரிந்து, நூல்களாக வளர்ந்து, மானியங்களாக உருவம் பெற்று வங்கிகளுக்குச் சென்று சேர்கின்றன. இச்செயல்பாட்டை அவர் வாசிப்புமையவாதம் என்று சொன்னார். தெரிதாவில் இருந்து முன்னகர்ந்த கிரீன்பிளாட் என்பவர் வாசிப்பதற்கு நூலே தேவையில்லை வாசிப்பவனின் செயல்களை வைத்தே நூல்களை நாம் கற்பனைசெய்துகொள்ளலாம் என்றார். இது வாசக எதிர்வினைக் கோட்பாடு என்று சொல்லப்படுகிறது.

இந்தகாலகட்டத்தில் பின்நவீனத்துவர்களுக்கும் மார்க்சியர்களுக்கும் இடையே சண்டை உக்கிரமாக நடந்தது என்பதை நாம் கவனிக்க வேண்டும். மார்க்ஸியர்கள் கடவுள் இல்லாமல் தட்டுத்தடுமாறிய காலகட்டத்தில் லெனின் வரலாறு என்ற கடவுளைக் கண்டுபிடித்தார். ஸ்டாலின் வரலாற்றின் மைந்தர் என்று அழைக்கப்பட்டார். ‘வரலாறு தன் ஒரே பேறான புதல்வனை மண்ணுக்கு அனுப்பி இவ்வாறாக மனித குலம் மீது கருணை கூர்ந்தது’ என்று மார்க்சிய வாய்ப்பாடு சொல்வதை நினைவுகூரலாம். சிறைக்கு அனுப்பப்பட வாய்ப்பிருந்தபோது ·பிடல் காஸ்ட்ரோ என்ற புனிதர் ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’ என்று ஆற்றிய உக்கிரமான பிரார்த்தனை இன்றும் மெய்சிலிர்ப்புடன் அவர்களால் சொல்லப்படுகிறது. நிகழ்ந்தது நிகழ்வது நிகழப்போவது எல்லாமே வரலாற்றின் லீலைகள் என்று சொல்லப்பட்டது

பின்நவீனத்துவர்கள் இதை வரலாற்றுவாதம் என்று சொல்லி மறுத்தார்கள். வரலாறு என்று ஒன்று இல்லை, அது வரலாற்றின் பூசாரிகள் காசு தண்டல்செய்வதற்காக கண்டுபிடித்தது என்றார்கள். ‘அடப்பாவி, வரலாற்றையா சொல்கிறாய், நாக்கு அழுகிப்போகாதா?’ என்று மார்க்சியர்கள் வசைபாடினார்கள். நாற்பத்தேழாயிரத்துச் சொச்சம் நூல்கள் வழியாக இந்த உரையாடல் நடைபெற்றது. கடைசியில் வரலாற்றுவாதம் பேசிய மார்க்சியர்களில் சிலர் புலம்பெயர்ந்த யாழ்ப்பாண வேளாளர் சிலரை டிம் ஹார்ட்டன் காபி கடையில் சந்தித்து உரையாடும்போது கந்தபுராணம் பற்றி அறியநேர்ந்தது. சூரபத்மனும் முருகனுடைய தோற்றமே என்ற யாழ்ப்பாணிகளின் கூற்று புதிய திறப்பாக அமைந்தது. வரலாற்றை மறுக்கும் வாதங்களும் வரலாற்றின் விளையாட்டே என்று வாதிட்டார்கள். இது திருவிளையாடல்கோட்பாடு என்றும் புதுவரலாற்றுவாதம் என்றும் சொல்லப்பட்டது.

விளைவாக பின்நவீனத்துவம் இரண்டாகப் பிளக்கப்பட்டு வரலாற்றின் ஆயுதமும் கொடியுமாக ஆக்கப்பட்டது. மார்க்ஸியப்பின்நவீனத்துவம் அல்லது பின்நவீனத்துவ மார்க்சியம் அல்லது பின்மார்க்ஸியநவீனத்துவம் உருவாகி அது மேலும் நூல்களாக வளர ஆரம்பித்தது. இலக்கியக்கோட்பாட்டின் விதிகளில் ஒன்று குழப்பம் மிகும்தோறும் அதிக கோட்பாடுகள் உருவாகும் என்பதே. ஆகவே இந்த இணைப்பின் விளைவாக விளிம்புநிலைவாதம், பின்காலனியவாதம், கீழையியம் என்றெல்லாம் மேலும் மேலும் கோட்பாடுகள் வர ஆரம்பித்தன. கோட்பாடுகளின் சுமை தாங்காமல் இலக்கியத்தின் கிளைகள் ஒடிய ஆரம்பித்தபோது கோட்பாடுகளை கட்டுப்படுத்தும் புதிய கோட்பாடுகள் உருவாகி வந்தன. ஒருகட்டத்தில் கோட்பாடுகளின் போக்குவரத்து ஸ்தம்பித்து எங்கும் ஆரன் ஒலிகள் மட்டும் நிறைந்தது.

இந்நிலையை ஆராய்ந்த சென்னை அய்யரான ராமச்சந்திரன் என்பவர் இதற்கு முன்னுதாரணம் ஏதேனும் உள்ளதா என்று இந்திய மரபை கவனித்தார். பன்னிரண்டு முதல் பதினான்காம் நூற்றாண்டு வரை தமிழகச் சூழலில் அத்வைதம் விசிஷ்டாத்வைதம், துவைதம், துவைதாத்வைதம், அத்வைதாதுவைதம், அத்தைவிசிஷ்டம், விசிஷ்டதுவைதம், துவைதவிசிஷ்டம், துவையலத்வைதம் ,அத்வைதவிஷிஷ்டம் என்றெல்லாம் கொள்கைகளும் அக்கொள்கைகளுக்கு உரைகளும் அந்த உரைகளுக்கு உரைகளும் அந்த உவ்வுரைகளுக்கு சொல்லடைவுகளும் அச்சொல்லடைவுகளுக்கு அகராதிகளும் அந்த அகராதிகளுக்கு தோத்திரங்களும் அந்த தோத்திரங்களுக்கு மறு விளக்கங்களும் உருவான நிலை இருந்ததை கண்டடைந்தார். இதை அவரது தாத்தா ஒட்டுமொத்தமாக பகவான்லீலை என்று வரையறுத்திருந்தார்.

ராமச்சந்திரன் அதை ஆங்கிலத்தில் மூளையின் லீலைகள் என்று விளக்கி ·பாண்டம்ஸ் அ·ப் பிரெயின் என்று ஒரு புத்தகத்தை எழுதினார். அழகியல் என்பது மூளையின் சிக்கலே என்று அவர் சொன்னது அக்கணமே ஒரு கோட்பாடாக ஆன விந்தையைக் கண்டு மனமுடைந்து அவர் உளப்பகுப்பாளரிடம் சென்று மல்லாந்தபோது அவர் ‘கோட்பாடுகளை ஒன்றும் செய்ய முடியாது. கோட்பாடுகளை எதிர்ப்பவர்கள் கோட்பாடுகளை உருவாக்குபவராக ஆவார். உலகில் உள்ள அத்தனை கோட்பாட்டாளர்களும் கோட்பாடுகளை எதிர்த்தவர்களே’ என்ற கோட்பாட்டை சொல்லி மருந்து எழுதிக்கொடுத்ததாக கூறப்படுகிறது

மறுபிரசுரம் முதற்பிரசுரம் : Oct 26, 2011

முந்தைய கட்டுரைஎம்.எம்.கல்புர்கி கொலை
அடுத்த கட்டுரைகோதானம்