சங்கரமதம், அத்வைதம்,மாயாவாதம்

அன்புள்ள ஜெ

தமிழில் தத்துவ நூல்களை வாசிக்கையில் சங்கர மதம், அத்வைதம், மாயாவாதம் என்ற மூன்று சொற்கள் மாறிமாறிப் பயன்படுத்தப்படுகின்றன. இவை ஒன்றா பலவா? இச்சொற்களை விளக்க முடியுமா?

ஆர். வெள்ளியங்கிரி

அன்புள்ள வெள்ளியங்கிரி அவர்களுக்கு,

சங்கரமதம் அத்வைதம் மாயாவாதம் ஆகிய மூன்றும் அனேகமாக ஒன்றே. ஆனால் நுட்பமாக சில வேறுபாடுகள் உள்ளன. அவ்வேறுபாடுகளை புரிந்துகொள்ளாவிட்டால் சில இடங்களில் பொருட்குழப்பம் ஏற்படக்கூடும்.

சங்கர மதம்

ஆதிசங்கரரின் அத்வைதக் கோட்பாடு மற்றும் மெய்ச்சொல் கொள்கை ஆகியவற்றின் அடிப்படையிலும் அவரது நெறிகாட்டல்களின் அடிப்படையிலும் சங்கர மடங்களால் முன்வைக்கப்படும் தத்துவ + வழிபாட்டு முறையே சங்கர மதம் என்று சொல்லப்படுகிறது.

கேரளத்தில் காலடி என்ற சிற்றூரில் எட்டாம் நூற்றாண்டில் பிறந்த சங்கரர் வேதாந்த மரபைசேர்ந்த கௌடபாதர் என்பவரின் மாணவரான கோவிந்தரின் மாணவர். பௌத்த தரிசனங்களையும் நியாயவியலையும் கற்றுத்தேர்ந்த சங்கரர் பிரம்ம சூத்திரம், உபநிடதங்கள் ஆகியவற்றுக்கு எழுதிய உரைகள் மூலமும் விவேக சூடாமணி என்ற தன் மூலநூல் வழியாகவும் அத்வைத கருத்துக்களை முன்வைத்தார். அவற்றை பரப்ப இந்தியாமுழுக்க பயணம் செய்து தெற்கே சிருங்கேரி [கர்நாடகம்] வடக்கே பத்ரிநாத் [ உத்தரப்பிரதேசம்] கிழக்கே பூரி[ ஒரிஸா] மேற்கே துவாரகை[ குஜராத்] ஆகிய இடங்களில் மடங்களை உருவாக்கினார்.

சங்கரரின் கோட்பாடுகளில் மெய்ச்சொல் கொள்கையையே காலப்போக்கில் சங்கரமடங்கள் முக்கியமாக கொண்டன. வேத உபநிடதங்களை வலியுறுத்தும் போக்கு மெல்ல வேள்விகள், ஆலயவழிபாடு, சடங்குகள் ஆகியவற்றுக்கு மைய இடம் தருவதாக மாறியது. சாதிய நோக்கு முன்னால் வந்தது. வேதாந்தம் உயர்தள விவாதத்தில் மட்டுமே இடம்பெற்றது. அத்வைதத்த்தின் தத்துவநோக்கையும் அன்றாடவாழ்வின் சடங்குவாதத்தையும் இணைக்க விரிவான உரைகள் உருவாக்கப்பட்டன.

சங்கரர் உருவாக்கிய மடங்கள் நான்கு. சிருங்கேரி, பத்ரிநாத், பூரி, துவாரகை. இதைத்தவிர பிற்காலத்தில் உருவான காஞ்சி மடம். இவை ஒட்டுமொத்தமாக முன்வைக்கும் தரப்பை சொல்லவரும்போது சங்கரமதம் என்று சொல்லப்படுகிறது. அது சங்கரர் முன்வைத்த அத்வைதம் மட்டுமல்ல, கூடவே சடங்குகளும் உண்டு. சங்கரர் முன்வைத்தது அத்வைதத்தையே. அவர் எந்த மதத்தையும் உருவாக்கவில்லை. அத்வைதத்தை பரப்ப அவர் உருவாக்கிய சீட பரம்பரையே சங்கர மடங்கள். அச்சங்கர மடங்கள் சங்கரர் பேரால் உருவாக்கிய தரப்பே சங்கர மதம்.

மெய்ச்சொல் கொள்கை [சப்தபிரமணச் சித்தாந்தம், சப்த சித்தாந்தம்]

உண்மையை அறிவதற்கான அறிதளங்கள் [பிரமாணங்கள்] மூன்று. நேர்க்காட்சி , ஊகம் , முன்ன்னறிவு. [ பிரத்யட்சம் , அனுமானம், சுருதி] முதல் இரண்டுக்கும் முன்னறிவே அடிப்படையானதென்றும் முன்னறிவென்பது ரிஷிகளால் சொல்லபட்ட ஆப்தவாக்கியங்களே என்றும் சொல்லும் வேதாந்தக் கொள்கையே மெய்ச்சொல்கொள்கை.

முற்காலத்தில் மீமாம்சகர்கள் முன்னறிவு என்றால் சுருதி என்று பொருள் கொண்டு வேதங்களையே அது குறிக்கிறது என்று வாதிட்டார்கள். இது சுருதிவாதம் எனப்பட்டது. அக்கொள்கையின் நீட்சிநிலைதான் இது.

ஆனால் வேதாந்தம் முன்னோடி தத்துவஞானியரால் கற்பிக்கப்பட்ட மெய்ஞானமே முன்னறிவு என்கிறது. அம்மெய்ஞானம் வேதசூத்திரங்களிலும் உபநிடதங்களிலும் மட்டுமே உள்ளது என்பது இதன் விரிவு. சங்கரர் இதை தன் மெய்காண்முறையின் அடிப்படையாகக கருதுகிறார். சங்கர மதத்தின் அடிப்படையே இதுதான் .

இதன் விதிகள்

1] வேதங்களும் உபநிடதங்களுமே மூலஞானம்

2 ] மூலஞானமே பிற அனைத்து ஞானங்களுக்கும் அடிப்படை அமைக்கிறது. மூலஞானம், நேர்காட்சி இரண்டையும் இணைக்கும் ஊகம் என்பதே அறிதலின் அடிப்படை.

3] ஆகவே பிறகு வந்த ஞானங்கள வேத உபநிடதங்களை மறுக்க முடியாது

4] மூலஞானமும் பிற அறிதல்களும் முரண்படும்போது மூலஞானமே உண்மையாக இருக்கும்.

இந்த நிலைபாட்டுக்கும் உண்மையான அத்வைதத்துக்கும் தொடர்பு கிடையாது. உண்மையில் அத்வைதம் முன்னர் இருந்த வேதஞானத்தின் பெரும் பகுதியை மறுத்து எழுந்ததாகும் . வேதங்களில் உள்ள ஞானகாண்டம் என்று சொல்லப்படும் தூய அறிவை மட்டுமே முன்வைத்து அதன் பெரும்பகுதியான சடங்குகளையும் யாகங்களையும் நிராகரித்தது. அக்காலகட்டத்தில் மாபெரும் சக்தியாக இருந்த வைதிக மீமாம்சகர்களை எதிர்கொள்ள சங்கரர் மெய்ச்சொல்கொள்கையை ஓர் உத்தியாக கைக்கொண்டார். அதாவது தன் கொள்கைக்கு வேதங்களே மூலம் என்றும் தான் சொல்வதெல்லாம் வேதங்களில் சொல்லப்பட்டதே என்றார்.

சொல்லப்போனால் சங்கரர் வேள்விகளால் பயனில்லை என்பதே வேதத்தை ஆதாரமாகக் கொண்ட கருத்து என வாதிட்டார். அவரது விரிவான கல்வியையும் தர்க்கத்தையும் வைதிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சங்கரர் உரைகளில் இவ்வாறு வேதத்தின் வாலுக்கு எதிராக தலையை கொண்டுசென்று நிறுத்தும் முயற்சி காரணமாக அற்புதமான அறிவார்ந்த கழைக்கூத்தாட்டங்களும் நடனங்களும் உள்ளன.

இந்த உத்தி சங்கரருக்கு பெரும் செல்வாக்கை உருவாக்கியது. சங்கரர் மறைந்ததுமே அது அத்வைதத்தை திருப்பி தாக்கியது. வைதிகர்களுக்கும் சங்கரருக்கும் உள்ள தீர்க்கமுடியாத முரண்பாட்டை சங்கரருக்கும் மூலநூல் வேதங்களே என்ற ஒற்றைவரியை பயன்படுத்தி இல்லாமல் செய்தார்கள் . சங்கர மதம் உருவாகியது.

அத்வைதம்

முழுமுதன்மையான பிரம்மமே உண்மை பிறவெல்லாம் மாயை என்று வாதிடும் வேதாந்த தரப்புக்கு அத்வைதம் என்று பெயர். அ+த்வைதம் என்றால் இரண்டின்மை என்று பொருள்.

அத்வைதத்துக்கு அடிப்படைகள் ரிக் வேதம் முதலே உள்ளன. உபநிடதங்களில் அவை கூர்மைப்பட்டன . பாதராயணரின் பிற்கால வேதாந்தம் அவற்றை மேலும் வளர்த்து திட்டவட்டமான கோட்பாடாக மாற்றியது. சங்கரர் பாதராயணரில் இருந்து தொடங்கி அவரை நிராகரித்து மேலே செல்கிறார். பாதராயணரின் பிரம்ம சூத்திரம் பிரம்மம் தன்னிலிருந்து பிரபஞ்சத்தை உருவாக்குகிறது என்ற கொள்கை கொண்டது. இது வளர்ச்சிநிலை வாதம் என்று சொல்லபடுகிறது. சங்கரர் அப்படி பிரம்மம் தன்னை இன்னொன்றாக்கினால் பிரம்மத்தின் முழுமுதல்தன்மை குறைவுபடுகிறது என்றார். ஆகவே அவர் பிரம்மம் எவ்விதத்திலும் மாற்றம் அடையாத முழுமுதன்மை என்று சொல்லி பிரபஞ்சம் அதன் மாயத்தோற்றமே என்று வாதிட்டார். இது உருமயக்கவாதம் எனப்படுகிறது.

சங்கரரின் விமரிசகரான ராமானுஜாச்சாரியார் சங்கரரை மாறுவேட பௌத்தன் என்றார். காரணம் சங்கர வேதாந்தத்தில் அந்த அளவுக்கு பௌத்த செல்வாக்கு உண்டு என்பதே. நாகார்ச்சுனர் முதலியோரால் முன்வைக்கப்பட்ட பௌத்த சூனியவாதம் இயற்கை என்ற முடிவற்ற பிரவாகத்தின் கணங்களையே உண்மை என்று அறிகிறோம் என்றது . நாம் அறிந்ததுமே உண்மை மாறிவிடுகிறது. நாம் அறிந்தது நம்மில்தான் நிலையாக உள்ளது. ஆகவே நம்மால் இயற்கையை அறியமுடியாது. இவ்வாறுமுற்றிலும் நம் அறிவுக்கு அப்பாற்பட்ட பிரம்மாண்டவெளியே சூனியம் .

அதன் அடுத்தபடியாகிய அறிவக வாதம் [விக்ஞான வாதம்] பிரபஞ்சம் நிலைநிற்பது நாம் அறிந்து நம் அறிவாக அகத்தில் நிறுத்தியுள்ளவற்றிலேயே என்றது. நாம் அறிவதெல்லாம் நம் அறிவை மட்டுமே என்றது. புறப்பிரபஞ்சம் உண்டா என்ற வினாவுக்கு அறியமுடியாது என்பதே சூனியவாதிகளின் பதில். புறப்பிரபஞ்சமென்பது நமது அறிதல் மட்டுமே என்பது அறிவகவாதிகளின் பதில்.

சங்கரர் இக்கோட்பாடுகளில் இருந்தே தொடங்குகிறார்.சங்கரர் சொல்லும் பிரம்மம் முழுமுற்றான ஒருமை என்ற அளவில் பௌத்தர்கள் சொல்லும் மகாதர்மத்துக்கு இணையானதே. பருண்மையான புறவுலகம் என்பது இல்லை, பருண்மை என்பதே நம் புலன்கள் உருவாக்கும் ஒருவகை அறிதல்தான் என்பது அறிவகவாதிகளின் கோட்பாடு. மாறாக அத்வைதம் புறவுலகம் உண்மையில் உள்ள ஒன்றுதான், ஆனால் அதன் குணங்கள், சாரங்கள், வடிவங்கள் எல்லாமே மாயை என்கிறது. அதாவது பௌத்தம் அறிதலே பிரபஞ்சம் என்று சொல்லும்போது அவ்வறிதலுக்கு ஒரு சாரம் இருப்பதை மறுக்கிறது. அத்வைதம் அனைத்துக்கும் பிரம்மம் என்ற சாரத்தை முன்வைக்கிறது.

சங்கரர் சொல்வதென்ன என்ற வினாவுக்கு அவரது சில அடிப்படைசொற்றொடர்களை முன்வைப்பதே சிறந்த வழியாகும். ஏனெனில் சங்கரவேதாந்தம் மிகசிக்கலாக பற்பல கோணங்களில் விளக்கப்பட்டுள்ளது. அவையனைத்தும் இணைந்த ஒன்றே இன்றைய அத்வைதம். ‘பிரம்மமே உண்மை, பிரபஞ்சம் பொய். உயிர் பிரம்மம் .வேறு ஒன்றுமில்லை ‘ [ ப்ரம்ம சத்ய : ஜகன் மித்ய: ஜீவோ ப்ரம்மைவ நாபர:] இதுவே அத்வைதத்தின் சாரமாக உள்ள சூத்திரவாக்கியம்

விவேக சூடாமணியில் சங்கரர் சொல்லும் விளக்கம் மேலும் திட்டவட்டமானது “‘நிரந்தரமானவையும் அழியக்கூடியவையுமான பொருட்களை வேறுபடுத்தி அறிந்து கொள்வதன் வழியாக பிரம்மம் மட்டுமே உண்மை என்றும் உலகம் மாயையே என்றும் அறிக”

மாயை

அறிபவன் அறிபொருள் ஆகிய இரு தளங்களுக்கும் இடையே உள்ள தவிர்க்க முடியாத விதி ஒன்றினால் பொய்யறிதல் உண்மையாக தென்படும் தன்மையே மாயை . மாயை ஆரம்பகாலம் முதலே இந்திய மெய்யியலில் இருந்துவரும் கருத்து . சங்கரரின் அத்வைத தரிசனத்துக்கு பிறகே அது மிக விரிவான தத்துவக் கலைச்சொல்லாக ஆயிற்று. மாயை என்ற சொல் பல தளங்களில் பயன்படுத்தப்படுகிறது. உண்மையை மறைக்கும் திரை என்ற பொருளிலேயே அது பொதுவாக பயன்பட்டாலும் பிற்கால மதங்களில் பிரபஞ்ச சாரமான சக்தியின் அலகிலா அழகுத்தோற்றமாக கருதப்படுவதும் உண்டு. உதாரணம் சாக்தேய மதத்தில் மகாமாயை என்பது இறைவியின் தோற்றமேயாகும்.

அத்வைதம் கீழ்க்கண்டவகையில் பயன்படுத்துகிறது.அவை:

1] நிலையற்ற இவ்வுலகம் நிலையான ஒருமுழுமுதல்பொருளில் இருந்து உருவாகிறது. அழியாத ஒன்றிலிருந்தே அழியும் உலகப்பொருள்கள் உருவாகின்றன. அந்த மூலப்பொருள்இவ்வாறு மாறுவதன்மூலம் தன்னை மாற்றிக் கொள்வதோ குறைவுபடுவதோ இல்லை. ஏன் அது இத்தோற்றம் கொள்கிறது எப்படி தோற்றம் கொள்கிறது என்பது நம் அறிவுக்கு அப்பாற்பட்டது. நாம் பார்ப்பது அதன் தோற்றநிலைகளை மட்டுமே.அதாவது முழுமுதல் பொருளை பிரபஞ்சமாக மயங்கி பார்க்கும் நிலை

2] இப்பிரபஞ்சத்தின் சாரமாக உள்ள முதல்முழுமை அறிவின் எந்த எல்லைக்குள்ளும் வராத ஒன்று. அதை அறிவின் எல்லைக்கு உள்ளே கொண்டுவரும் செயலே மாயை ஆகும். அதாவது முழுமுதல் பொருளை அதன் முழுமுதல்தன்மையை குறைத்து அணுகும் நிலை

3] முழுமுதல் சக்தியானது தன்னை பலவாறாக பிரிந்தும் வளர்ந்தும்தான் நிகழ்த்திக் கொள்ள முடியும். ஆகவே பிரபஞ்சம் அது தன்னை நிகழ்த்திக் கொள்ளும் முறை. அதாவது மாயை என்பது முழுமுதன்மையின் வல்லமை அல்லது விளையாட்டு . இந்த தளத்தில் இது இரண்டு முறையில் செயல்படுகிறது ஒன்று திரைமாயை [ஆவரணம்] இன்னொன்று உருமாயை [ விக்ஷேபம்] முதல்வகை மாயை உள்ளதை மறைக்கிறது. இரண்டாம் வகை மாயை இல்லாததை உண்டுபண்ணிக் காட்டுகிறது

4]இயற்கை என்ற வடிவில் நம் முன் முக்குணம் கொண்டு நிற்பதை அத்வைதிகள் மாயை என்கிறார்கள்

5] உயிர்க்குலங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் உணர்ச்சிகள் மற்றும் செயல்களினாலான வலை மாயை எனப்படுகிறது.

மாயாவாதம்

அறிவதெல்லாம் மாயையே என்று சொல்லும் தத்துவக் கோட்பாடுதான் மாயாவாதம். மாயாவாதம் மூன்று தளம் கொண்டது

1 ] மனிதன் அறிவது முழுமையான உண்மையை அல்ல. அவனது அறிவுக்கு அப்பால்; அவனறியாத அல்லது அறியமுடியாத ஒன்று உள்ளது அதன் சில தளங்களையே அவன் அறிகிறான்[ பண்டை வேதாந்தம்]

2 மனிதனின் அறிவு தன்னளவில் உண்மையை குறைப்படுத்தி மட்டுமே அறியும் இயல்புகொண்டது. ஆகவே அவன் தன் அறிவால் உணரக்கூடியதெல்லாமே அவனால் திரிக்கப்பட்ட உண்மையையே [ பிற்கால பௌத்தம்]

3] மனிதன் அறிவதெல்லாம் அவனது மனமயக்கமே. அவன் அறிவதற்கு அப்பால் உள்ள முழுமுதல் உண்மையின் மாயத்தோற்றமே அவனது அறிதல்கள் [ அத்வைத வேதாந்தம்]

மாயவாதம் எல்லா சிந்தனைமரபுகளிலும் ஏதோ ஒருவடிவில் ஆதிகாலம் முதலே உள்ளது. ரிக் வேதத்தில் மாயவாதத்தின் அடிப்படையை அமைக்கக் கூடிய சிந்தனைகள் நிறையவே உள்ளன. நாம் பிரபஞ்சமாக காணும் இந்த பன்மைத்தோற்றமானது இதற்கு அப்பாற்பட்ட ஓர் ஒருமையின் வெளிவிளக்கம் அல்லது தோற்றநிலையே என ரிக்வேதம் மீண்டும் மீண்டும் சொல்கிறது. ‘பல இடங்களிலும் எரியும் அக்கினி ஒன்றே. எங்கும் ஒளிரும் சூரியனும் ஒன்றே. அனைத்தையும் வெளிப்படுத்தும் புலரியும் ஒன்றே. அந்த ஒன்றே இவையெல்லாம் ‘ [ ரிக் வேதம்] . உபநிடதங்களில் இத்தரிசனம் வளர்ச்சி அடைந்தது.’அது நீயேதான்'[ சாந்தோக்ய உபநிடதம்] போன்ற புகழ் பெற்ற ஆப்தவாக்கியங்கள் வெளிப்படுவது இப்பார்வையே. ‘அப்பால் உள்ள ஒன்று’ என்ற பார்வை வலுப்படும்தோறும் இப்பிரபஞ்சம் அதன் தோற்றம் மட்டுமே என்ற கோணமும் வளர்ந்தது.

உபநிடதக் கருத்துக்களை தொகுத்து வேதாந்தம் என்ற அமைப்பை உருவாக்கிய பாதராயணர் தனது பிரம்ம சூத்திரங்களில் இப்பார்வையை மேலும் வளர்த்தெடுத்தார். இயற்கை என்பது பிரம்மமே [பிரம்ம சூத்திரம்] என்பது அவரது கூற்று. பிரம்மத்திலிருந்து பிறந்து பிரம்மத்தில் மறையும் ஒன்றுதான் பிரபஞ்சம். பிரம்மமே இயற்கையாக நம்மால் உணரப்படுகிறது. அதன் மீது தன் விளக்கத்தை கூறியபடித்தான் சங்கரர் தனது அத்வைத தரிசனத்தை முன்வைக்கிறார். சங்கரர் தன் மாயாவாதத்ததை பௌத்த தரிசனங்களுடன் வேதாந்தத்தை இணைப்பதன் மூலமே உருவாக்கினார். பண்டைவேதாந்தம் பிரம்மத்தின் துலங்குநிலை , விரிவு நிலை என்றே பிரபஞ்சத்தைக் கருதியது. பிரம்மம் வேறு பிரபஞ்சம் வேறுதான். பிரபஞ்சத்தின் மூலகாரணம்தான் பிரம்மம். அத்வைதமோ பிரம்மம் மட்டுமே உள்ளது என்றும் அதை பிரபஞ்சமாக எண்ணி மயங்குவது ஜீவாத்மாவின் அவித்தை அல்லது அறியாமையினால்தான் என்றும் சொல்கிறார்.

இக்கருத்து பிற்கால பௌத்த தரிசனங்களான சூனியவாதம், அறிவகவாதம் ஆகியவற்றின் நீட்சியாக பெறப்பட்டது. சூனியவாதத்தின்படி நாம் இயற்கை என்ற முடிவற்ற பிரவாகத்தின் கணங்களையே உண்மை என்று அறிகிறோம். நாம் அறிந்ததுமே உண்மை மாறிவிடுகிறது. நாம் அறிந்தது நம்மில்தான் நிலையாக உள்ளது. ஆகவே நம்மால் இயற்கையை அறியமுடியாது. இவ்வாறுமுற்றிலும் நம் அறிவுக்கு அப்பாற்பட்ட பிரம்மாண்டவெளியே சூனியம் .

அறிவக வாதம் பிரபஞ்சம் நிலைநிற்பது நாம் அறிந்து நம் அறிவாக அகத்தில் நிறுத்தியுள்ளவற்றிலேயே என்றது. நாம் அறிவதெல்லாம் நம் அறிவை மட்டுமே என்றது. புறப்பிரபஞ்சம் உண்டா என்ற வினாவுக்கு அறியமுடியாது என்பதே சூனியவாதிகளின் பதில். புறப்பிரபஞமென்பது நமது அறிதல் மட்டுமே என்பது அறிவகவாதிகளின் பதில். நாகார்ச்சுனர் சூனியவாதத்தையும் திக்நாகர் அறிவகவாதததையும் முன்வைத்தனர்.

இவர்களை மறுத்து சங்கரர் புறவுலகம் என்பது நம் அறிவால் உருவாவதோ நம் அறிதலோ அல்ல அது உண்மையில் உள்ளது என்று வாதிட்டார். அது பிரம்மமேதான். ஆனால் அதில் நாம் அறியும் வடிவம், குணம்,சாரம் அனைத்துமே நமது மனப்பிரமைகளே . நம் அறியாமையின் பொலிவுகள் அவை. அவை விலகுகையில் அறிபவன், அறிபொருள், அறிவு மூன்றும் ஒன்றான நிலை எஞ்சுகிறது. இதுவே சங்கர மாயாவாதம். சங்கரர் பார்வையில் பிரம்மம் மட்டுமே உள்ளது. அது சத்து. உலகம் பிரம்மமும் நம் மாயையும் ஒன்றான வடிவம் அது சத்தும் அசத்தும் கலந்தது. அவ்வுலகம் பற்றி நாம் கொள்ளும் பலவகையான கற்பனைகள் மாயை அல்லது அசத்து.

மாயாவாதத்தின் மூன்று நிலைகளில் சங்கரரின் அத்வைதமே சரியான மாயாவாதம் என்று சொல்லப்படுகிறது. பிற மாயாவாதங்களைப் போலன்றி நாம் அறிபவை முற்றாகவே பொய்த்தோற்றங்களே என்று வாதிடுவது அதுதான். சங்கர மாயாவாதம் இந்தியமெய்ஞான மரபில் மிக ஆழமாக வேரூன்றியது. சங்கரர் தன் கருத்துக்களுக்கு உபநிடதங்களை மேற்கொள் காட்டினாலும் ஆப்தவாக்கியங்களை வெகுவாக திரித்து பொருள்கொண்டே அதை நிகழ்த்துகிறார் என்பது இந்தியவியலாலர்களின் கருத்தாகும். மோனியர் வில்லியம்ஸ் [Monier Williams ]தன் இந்திய ஞானம் [Indian Wisdom] என்ற நூலில் ‘இந்திய சிந்தனையில் வேரோடியுள்ள மாயாவாதத்துக்கு உண்மையில் உபநிடதங்களில் ஆதாரம் இல்லை. அது பௌத்த இறக்குமதியே’ என்று சொல்கிறார்.

மாயாவாதம் பிற்கால தத்துவ ஞானியரால் மிகத்தீவிரமாக மறுக்கப்பட்டது. அதை முற்றாக மறுத்தவர்கள் பாஸ்கர ஆச்சாரியார் ராமானுஜர், மத்வர், விக்ஞான பிக்ஷ¤ ஆகியோர். சைவசித்தாந்தமும் பிற சைவஞான மரபுகளும் அதை ஏற்கவில்லை. ஆனால் சற்று உருமாறிய நிலைகளில் மாயாவாதம் எல்லா சிந்தனைகளிலும் காணப்படுகிறது. மாயாவாதம் பிற்கால மதங்களில் காணப்படும் விதங்கள் இவை:

1] நாம் காணும் பிரபஞ்சம் உண்மையல்ல, அல்லது நாம் அறியுமளவுக்கு உண்மையல்ல, அல்லது அறிவதற்கு அப்பால்தான் அதன் சாரம் உள்ளது

2] நாம் காணும் இப்பிரபஞ்சம் ஒரு முழுமுதல் சக்தியின் விளையாட்டு [லீலை] அல்லது அதன் வெளிப்பாட்டு நிலை [ பிரகாசம்] . அந்த முழுமுதன்மை இந்த பிரபஞ்சத்தோற்றம் மூலம் தன்னை நமக்குக் காட்டுகிறது. நமக்கு தன்னை காட்டும் நோக்குடனேயே இது இவ்வாறு உள்ளது

3] முக்தி அல்லது விடுதல் பெறும்போது இப்பிரபஞ்சம் திரைவிலகி வேறு ஒன்று தெரியும்.

மாயாவாதம் மதம்சார்ந்ததாக கருதப்படுவதனால் கோட்பாட்டு ரீதியாக அது நவீன காலகட்டத்தில் விவாதிக்கப்படுவது இல்லை. சுப்ரமணிய பாரதி மாயாவாதத்தை கண்டித்திருக்கிறார். ஆனால் ஓர் அடிப்படை மனநிலையாக மாயாவாதம் எப்போதுமே இலக்கியத்தில் உள்ளது . கனவு நனவு ஆகியவற்றுக்கிடையேயான இடைவெளியில் இயங்கும் புனைகதைகளில் மாயாவாதம் பலசமயம் முகம் காட்டுகிறது . மௌனி, லா.ச.ராமாமிர்தம் , கோணங்கி ஆகியோரின் கதைகள் உதாரணம். ‘எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?’ என்ற மௌனியின் வரி மாயாவாதத்தின் இலக்கிய வெளிப்பாட்டுக்கு சிறந்த உதாரணமாகும்

அத்வைதம் ஒரு மாயாவாதம். ஆனால் மாயாவாதம் என்பது அத்வைதம் உள்ளிட்ட பல சிந்தனைகளை தன்னுள் கொண்ட ஒரு பொது தத்துவநோக்கு.

முந்தைய கட்டுரைமனிதாபிமானமும் தத்துவமும்
அடுத்த கட்டுரைவிசிஷ்டாத்வைதம்