முடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் 2

சூத்திரம் மூன்று

ததா த்ருஷ்ட்டு: ஸ்வரூபே அவஸ்தானம்

[அப்போதே பார்ப்பவன் தன்னிலையில் உறைகிறான்]

இந்தச் சூத்திரத்தில் மூன்று சொற்கள் உள்ளன. மூன்று தன்னிலைகள் என இதை வகுக்கலாம். திருஷ்டு என்றால் பார்ப்பவன், அவதானிப்பவன், உணர்பவன். மனதை உணரும் தன்னிலை என்று இதைச் சொல்லலாம். இரண்டாவது சொல் ஸ்வரூபம். தன்னுடைய உண்மையான அகநிலை. அல்லது தூய தன்னிலை. இங்கே இன்னும் அது ஒரு உருவகம்தான். மூன்றாவது அவஸ்தை. அந்த தூய நிலையில் உறைதல் என்ற நிலை. தான் என தன்னை உணர்பவன் அந்த உணர்தல் மூலம் உருவாகும் அலைகள் அனைத்தையும் அடக்கி இல்லாமலாக்கிக் கொண்டால் மட்டுமே தூய தன்னிலையாக தன்னை உணர்ந்து அந்நிலையில் அமைய முடியும் என்று இச்சூத்திரத்தை விளக்கலாம்

இச்சூத்திரத்தில் அவஸ்தானாம் என்ற சொல்லை சுட்டிக்காட்டுவது மரபு. அதாவது தூய தன்னிலை என்பது ஒரு அறிதல் அல்ல. அது நிலை. ஒரு அமைதல்தான்.

ஓர் உவமை மூலம் விளக்கலாம். நான்குபக்கமும் நிலைக்கண்ணாடிகள். நடுவே ஒரு சுடர் விளக்கு. நாம் காண்பது விளக்குகளினாலான ஒரு மாபெரும் வெளி. இதுவே நம் மனம். சுடரைக் காண நாம் முதலில் செய்ய வேண்டியது ஆடிகளை களைதல். அப்போது சுடர் மட்டும் எஞ்சுகிறது.

அதாவது மனதை அறியும் செயலாலேயே மனம் அலைகளாக ஆகிறது. அலைகள் அடங்காமல் மனதை அறிவதும் சாத்தியமல்ல. இச்சிக்கலையே யோகம் முதலில் எதிர்கொள்கிறது.

தடாகத்தின் ஆழத்தைக் காண்பதற்கு முதலில் அதன் அலைகள் அடங்கவேண்டும்.  மனச்செயல்பாட்டை நிறுத்தாமல் மனதை உருவாகும் அடிப்படை அமைப்பை , மனதின் ஆழத்தை நாம் காணமுடியாது.

சூத்திரம் நான்கு

வ்ருத்தி ஸாரூப்யம் இதரத்ர

[உளச்செயல் தோற்றம் பிறவற்றிலேயே]
யா பெரல்மான் எழுதிய குழந்தைகளுக்கான அறிவியல் அறிமுக நூலான ‘பொழுதுபோக்குப் பௌதிகம்’ நூலில் ஒரு வினா. “உங்களால் முகம் பார்க்கும் கண்ணாடியைப் பார்க்க முடியுமா?” . சின்னவயதில் ஏன் பார்க்க முடியாது என்ற எண்ணமே நம் மனதில் எழும். பெரல்மான் சொல்வார், நாம் கண்ணாடியை பார்க்க முடியாது , அதன்மீது பிரதிபலிப்பவற்றையே காண்கிறோம் என. எதையுமே பிரதிபலிக்காத கண்னாடி கண்ணுக்கு தென்படாது .

சாதாரணமாக மனம் என நாம் சொல்வது எதை ? மனதில் ஓடுவதைத்தான். மனதில் ஓடுவது மனம் எதையெல்லாம் எதிர்கொள்கிறதோ அதெல்லாம்தான். மனம் என்பது ஒரு மாபெரும் எர்திர்வினை மட்டுமே. நாம் மனமென அறிவதெல்லாம் மனதில் பிறவிஷயங்கள் பிரதிபலிப்பதைத்தான். ஒரு நிபுணர் நம்மை மனவசியம் செய்து நம் மனதை ‘அப்படியே’ பதிவுசெய்தால் அதில் என்ன இருக்கும்? நம்மைச்சுற்றி உள்ள விஷயங்கள்தான் சிக்கலான முறையில் பின்னிப்பிணைந்து காணப்படும். அபப்டியானால் நம்மைச்சுற்றி உள்ளவற்றின் ஒரு சிக்கலான வடிவம்தான் நமது மனமா?

மிக இயல்பாக தன்னிச்சையாக நாம் நம் சூழலை பிரதிபலித்தபடியே இருக்கிறோம். ஓர் ஆதிவாசியின் மனம் காட்டுக்குள் வைக்கப்பட்ட கண்ணாடி . நகரச்சாலையோரம் வைக்கப்பட்ட கண்ணாடிதான்  நாகரீக மனிதனின் மனம்.

அதே போலநம்மை சூழலும் பிரதிபலிக்கிறது. மனச்சுமையுடன் கடற்கரைக்கு சென்றால் நம்மை அறியாமலேயே மனம் ஓர் விடுதலையை அடைகிறது. கடல் என்ற விரிவு நம் மனத்தை விரிய வைக்கிறது . மறு கணம் நம் மனம் கடலை நம் துயரங்களின் அலைகளாக அறிய ஆரம்பிக்கிறது. திரும்பிவிடுகிறோம். நமக்குள் இருப்பனவற்றையே நாம் வெளியிலும் காண்கிறோம். நிகழ்மனம் மற்றும் அறியும் மனம்போல இங்கே இன்னொரு இரட்டை ஓட்டத்தை நாம் காண்கிறோம்.

நாம் பிறவற்றில் , அதாவது நம்மைச்சுற்றி உள்ள இயற்கையில்  காண்பது நம் மனதின் செயல்பாடுகளையே. நமது கோபம் , உற்சாகம் அனைத்தும் நம்மைச்சுற்றியுள்ளவற்றில் நமக்கு தெரிகிறது. இயற்கையில் நாம் காணும் ‘உணர்ச்சிகள்’ ‘அழகுகள்’ எல்லாமே நம்  மனதிலிருந்து வெளிவருபவைதான்.

திரைப்படத்தின் படத்தொகுப்பில் இதற்கு நல்ல உதாரணம் உண்டு. பாறைமீது அலையடிக்கும் கடலின் அலையை அவன் அவளிடம் தன் காதலை சொன்னதும் காட்டினால் அதன் அர்த்தம் மனஎழுச்சி. அக்காதலி  இறந்துபோனபிறகு தாடியுடன் அவன் வந்து கடற்கரையில் அமர்ந்திருக்கும்போது அதே கடலைலையைக் காட்டினால் அது துயரக் கொந்தளிப்பாக தெரிகிறது.

இலக்கியத்தில் சூழல் விவரிப்புகள் எப்போதுமே மனத்தின் வெளிவிளக்கங்கள்தான். கதையில் மழை பெய்கிறது என்றால் அது கதாபாத்திரங்களின் மனதில் பெய்யும் வேறு ஒரு மழையின் வெளிக்குறியீடுதான் . சங்க இலக்கியங்கள் மனதை நேரடியாக சொல்வதேயில்லை, இயற்கையைப் பற்றி மட்டுமே சொல்கின்றன. அதில் மனதை ஏற்றி சொல்கின்றன. நிலமாக அக்கவிதைகளில் தெரிவது மனமே. பிற்பாடு இலக்கண ஆசிரியர்கள் இதை தற்குறிப்பேற்ற அணி என்றார்கள்.

நம்மைச்சுற்றி விரிந்து பரந்து கிடக்கும் இவையெல்லாமே நம் மனதின் காட்சிவடிவம்தான். நம்மையே நாம் எங்கும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இவ்விரு தளத்தையும் வகுக்கிறது இந்தச் சூத்திரம். விருத்தி என்றால் உளச்செயல். ஸாரூப்யம் என்றான் தோற்றம் . இதரத்ர என்றால் பிறவற்றில்.

பிறவற்றிலேயே நாம் உளச்செயலை காணமுடியும் என வகுக்கிறது இந்தச் சூத்திரம். நாம் மனதை நோக்கி அதைக் காணமுயன்றால் காண்பது வெளியே உள்ளவற்றை. வெளியே நோக்கினால் காண்பது  உளச்செயலின் படிமங்களை. ஆக மனம் என எப்போதும் நாம் பிறவற்றையே கண்டுகொண்டிருக்கிறோம்.
 
ஏன் நிலைக்கண்ணாடியை நாம் காணமுடிவது இல்லை. ஏனெனில் அது முழுமையாக பிரதிபலிக்கும் தன்மையை கொண்டுள்ளது என்பதனாலேயே. ஆனாலும் பிரதிபலிக்கும் பிம்பங்கள்தான் கண்ணாடி என்று சொல்லிவிடமுடியாது. பிரதிபலிக்கும் செயலைச் செய்தபடி ஒரு கண்ணாடி காணப்படாமல் இருந்துகொண்டிருக்கிறது.

இங்கே ஸாரூப்யம் என்ற சொல்லை சற்று கவனிக்கச் சொல்வார்கள். ஸ+ரூப்யம் என்றால் தோற்றம் என்று சொல்வதுடன் குறிப்பாக சமானமான தோற்றம் என்றும் சொல்லல்லாம். அது இச்சூத்திரத்துக்கு மேலதிகப் பொருளை அளிக்கிறது.

சூத்திரம் ஐந்து
வ்ருத்தய: பஞ்சதய்ய: கிளிஷ்டா அக்ளிஷ்டா

[உளச்செயல்கள் ஐந்து. தெரிந்தவை ,அருவமானவை]


மனம் செயல்படும் முறை ஐந்துவகையானது என்று வகுக்கும் பதஞ்சலி யோக சூத்திரம் அவை யாவை என இதற்கு அடுத்த சூத்திரத்தில் சொல்கிறது. இங்கே அந்த ஐந்தும் இரு வகையானவை என்று சொல்லப்படுகிறது. க்ளிஷ்ட என்ற சம்ஸ்கிருத சொல்லுக்கு தெளிந்த, திட்டவட்டமான என்ற பொருள்கள் உண்டு. அதற்கு எதிர்பதம் அக்ளிஷ்ட .

நம் மன இயக்கம் எதுவாக இருப்பினும் அதில் ஒரு சிறு பகுதியே நமக்கு தெரிகிறது இன்னொரு பகுதி தெரியாததாக உள்ளே மறைந்துள்ளது. மரத்தை நாம் பார்க்கும்போது வேர் கண்ணுக்குத்தெரிவது இல்லை .சிந்தனை கற்பனை உள்ளுணர்வு ஆகிய அனைத்துக்குமே இது பொருந்தும்.

ஒரு பறவையைப் பார்க்கிறோம். அடையாளங்களைவைத்து இது மைனா என்ற முடிவுக்கு வருகிறோம். அப்படி அடையாளம் காண்பதும் புரிந்துகொள்வதும் நாம் அறிந்த தளம் . ஆனால் அதேசெயல்பாட்டின் அறியாத தளம் ஒன்று நமக்குள் இயங்கிக் கொண்டிருக்கிறது. அப்பறவையை நாம் வேறு பலவிதமான வகைகளில் உள்வாங்கிக் கொண்டுமிருக்கிறோம். அது நமக்குள் ஒரு படிமமாக ஆகி விட்டிருக்கலாம். நம் கனவில் அது முற்றிலும் வேறு வகையில் வெளிப்பாடு கொள்ளலாம்.

நம் மனஓட்டத்தில் நம் செயல்களுடன் [ கர்மம்  ] சம்பந்தப்பட்டவையே நமக்கு தெரிகின்றன.  நம் உள்ளுணர்வுகள் மற்றும் பிறவிக்குணங்கள் [வாசனா ] ஆகியவற்றுடன் தொடர்புள்ளவை நமக்கு தெரிவதேயில்லை. செயல்களுடன் தொடர்புடையனவற்றை மேல்மனம் அல்லது பிரக்ஞை சார்ந்தவை என்றும் உள்ளுணர்வுகளுடன் தொடர்புடையனவற்றை ஆழ்மனம் அல்லது நனவிலி சார்ந்தவை என்றும் ஒரு புரிதலுக்காக ஒப்பிட்டுக் கொள்ளலாம். 

எல்லா மனச்செயல்களிளும் ஒரு முக்கியமான பகுதி தெரியாததாக , தெரிந்துகொள்ள முடியாததாக உள்ளது என்பதே இதற்கு பொருள். நவீன உளவியலில் இதற்கு ஏராளமான விளக்கங்கள் உள்ளன. தெரிந்துகொள்ள முடியாத அந்த பகுதியே மனிதர்களின் இயல்புகளை தீர்மானிக்கிறது என்று ·ப்ராய்டியம் சொல்கிறது. அதை அறிவதற்காக உருவாக்கப்பட்டதே  உளப்பகுப்பாய்வு என்ற ·ப்ராய்டிய வழிமுறை.
  [தொடரும் ]

முடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் 1

முந்தைய கட்டுரைஊமைச்செந்நாய்:கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅ.மார்க்ஸ் என்னும் வழக்குரைஞர்