‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 50

பகுதி ஒன்பது : அஞ்சிறை அன்றில் – 1

வரதா என்ற பெயர் ருக்மிணிக்கு என்றுமே உளம் நிறையச் செய்யக்கூடியதாக இருந்தது. சிற்றிளமையில் அன்னையின் ஆடை நுனியைப் பற்றாமல் அவளால் படகில் அமர்ந்திருக்க முடிந்ததில்லை. அணிப்படகு அலைகள் மேல் எழுந்தமர்ந்து செல்கையில் அவள் ஆடையின் பொன்னூல்பின்னலை அள்ளி தன்மேல் சுற்றிக் கொண்டு, அதன் நூல்சுருளை விரலில் சுருட்டி வாயில் கவ்வி நின்று விழிவிரித்து வரதாவின் நீர்ப்பெருக்கை நோக்குவாள். படகின் அசைவு மிகுகையில் திரும்பி அச்சத்துடன் அன்னையை அணைத்துக் கொள்வாள். “இவள் ஏன் இத்தனை அச்சுறுகிறாள்? நீச்சல் அறிந்தவள் அல்லவா?” என்று தந்தை கேட்க அவள் அன்னை புன்னகைத்து “அவள் அச்சம் கொள்ளவில்லை. வேறேதோ உணர்வால் நெஞ்சு நிறைந்திருக்கிறாள்” என்றாள்.

பீஷ்மகர் அவளை அள்ளி தன்னருகே இழுத்து குனிந்து விழிகளை நோக்கி “என்ன உணர்வு கண்ணே?” என்று கேட்டார். “நானும் இவள் அச்சம் கொள்கிறாள் என்றுதான் நினைத்தேன். ஆனால் ஒவ்வொரு முறையும் படகில் ஆற்றின் மேல் பயணம் செய்து மீள்கையில் அவள் கேட்கும் வினாக்கள் அவள் உள்ளம் எங்கெங்கோ ஓடுவதையே காட்டுகின்றன” என்றாள் அன்னை. அவள் தந்தையின் கைகளை உதறி அன்னையை நோக்கி செல்ல தந்தை அவளை மீண்டும் கை பற்றி தன்னருகே இழுத்து இடை வளைத்து உடல் சேர்த்து வலக்கையால் அவள் சிறு கன்னத்தைப் பற்றி மேலே தூக்கி விழிகளை நோக்கி கேட்டார் “எதைப் பார்க்கிறாய்? இந்த ஆற்றைப் பார்க்கையில் உனக்கு என்ன தோன்றுகிறது?அச்சமுறுகிறாயா?”

“இல்லை” என்று அவள் தலையசைத்தாள். “அப்படியென்றால்?” என்றார் தந்தை. அவள் கை நீட்டி “வரதா என்றால் என்ன பொருள்?” என்றாள். “வரம் தருபவள்” என்றார் தந்தை. “வரதா ஒரு மூதன்னை. நரைத்த வெண்தலைமுடிகொண்டவள். இனிய புன்னகை நிறைந்தவள். நமது கௌண்டின்யபுரியின் அத்தனை இல்லங்களுக்கும் கிணறுகளில் முலைப்பாலென ஊறி வருவது இவளுடைய நீர் அல்லவா? இந்த நதியின் கரையில் நமது முன்னோர் பிறந்தனர், மறைந்தனர். எரிந்து உப்பாக மாறி இதில் கலந்தனர். நாமும் இதன் கரையில் முளைத்தெழுந்தோம், இதன் நீரில் என்றுமிருப்போம்” என்றார். அன்னை “குழந்தையிடம் என்ன பேச்சு இது?” என்றாள். “குழந்தையல்ல, அவள் இந்த மண்ணின் இளவரசி. வரதாவும் அவளும் நிகர்” என்றார் பீஷ்மகர்.

“தந்தையே, நான் வரதாவை கனவில் பார்த்தேன்” என்றாள் அவள். “கனவிலா? படகில் சென்றாயா என்ன?” என்று தந்தை சிரித்தார். “இல்லை, ஒரு மூதன்னையாக என் கனவில் வந்தவள் இவளே” என்றாள் அவள். அன்னை சிரித்தபடி “இதெல்லாம் அவள் செவிலியன்னை அமிதையின் சொற்கள். குழந்தையின் நெஞ்சில் கதைகளை நிறைப்பதே அவள் வேலை” என்றாள். “சொல்! கனவில் எப்படி வந்தாள் வரதை? என்ன சொன்னாள்? என்ன செய்தாள்?” என்றார் தந்தை. இரு கைகளையும் விரித்து “மூதன்னை!” என்றாள் ருக்மிணி. “நீண்ட கூந்தல். முகமெல்லாம் சுருங்கி கையெல்லாம் வற்றி நன்றாக முதுமைகொண்டிருந்தாள். வெண்ணிற ஆடையும் வெண்ணிற தலைமயிரும் நுரைபோல காற்றில் பறந்தன” என்று சொன்னபின் திரும்பி தன் அன்னையைப் பார்த்து “அவள் விழிகளும் அன்னையின் விழிகள் போலிருந்தன” என்றாள்.

“ஆம, அப்படித்தானே இருக்கும்” என்று சொல்லி பீஷ்மகர் சிரித்தார். “என்னடி சொன்னாள் உன் நதியன்னை?” என்றாள் அரசி. “ஒன்றுமே சொல்லவில்லை. நான் என் அரண்மனைப் படிகளில் இறங்கும்போது முற்றத்தில் நின்றிருந்தாள். நீ யார் என்று கேட்டேன். வரதா என்று சொன்னாள். படியிறங்கி அருகே வரும்படி என்னை அழைத்தாள். நான் அவளை நோக்கி இறங்கும்போதுதான் பார்த்தேன் அவளுடைய ஆடை அந்த முற்றம் முழுக்க விரிந்து பரவியிருந்தது. வெண்ணிறமான அலைகளாக அது நெளிந்தது. முற்றத்தில் இறங்கியபோது அந்த ஆடையென்பது பால் நிறமான குளிர்நீரே என்று தெரிந்தது. என் முழங்கால் வரைக்கும் அந்த நீர் மேலேறி வந்தது” என்றாள் ருக்மிணி.

“நான் அருகே சென்றதும் அவள் என் தோளை வளைத்து மெல்ல அணைத்து என்னை நோக்கி குனிந்து கையை நீட்டு குழந்தை என்றாள். நான் கையை நீட்டியதும் ஒரு சிறிய நீலமணிக்கல்லை என் உள்ளங்கையில் வைத்தாள். நான் அதை நோக்கி வியந்து இது என்ன என்று சொல்லி தலை நிமிர்ந்தபோது அவள் இல்லை. முற்றத்தில் நான் மட்டும் நின்றிருந்தேன். என் அருகே மேலிருந்து பொழிந்தவை போல கொன்றை மலர்களும் நீலச் செண்பகமலர்களும் உதிர்ந்து கிடந்தன” என்றாள் ருக்மிணி. பின்னால் நின்றிருந்த முதிய சேடி “பொன்னும் மணியும் மலர்வடிவில்… கதைகளில் வருவதைப்போலவே” என்றாள்.

பீஷ்மகரும் அவர் அரசி சுஷமையும் ஒருவரை ஒருவர் நோக்கிக் கொண்டனர். “அந்த மணி எப்படி இருந்தது?” என்றாள் அரசி. “என் கையில் அதை அவள் தந்தபோது ஆலங்கட்டி போலிருந்தது. அதன் தண்மை தாளாமல் கைவிட்டு கை மாற்றிக் கொண்டேன். ஒரு சில கணங்களுக்குப் பிறகு அது அனலென சுடுவது போலத் தோன்றியது. ஓடிச்சென்று என் அறைக்குள் ஒரு சிறிய குங்குமச்சிமிழைத் திறந்து அதற்குள் அதை போட்டு வைத்தேன்” என்று சொன்னாள் ருக்மிணி. “குங்குமச்சிமிழை காலையில் திறந்து பார்த்தாயா?” என்று கேட்டு பீஷ்மகர் சிரிக்க, அவர் தொடைகளைப் பற்றிக் கொண்டு முகவாய் தூக்கி விழி விரிய “ஆம் தந்தையே, திறந்து பார்த்தேன். உள்ளே ஒன்றுமே இல்லை” என்றாள். “ஆனால் சிமிழை மூடி கையில் எடுத்தால் உள்ளே ஒரு மணி இருப்பதை என்னால் உணர முடிகிறது.”

“அசைத்துப் பார்த்தால் ஒலி கேட்கிறதா?” என்றார் பீஷ்மகர். “இல்லை. ஆனால் உள்ளே அந்த மணி இருப்பது தெரிகிறது. நான் அரண்மனைக்குச் சென்றதும் எடுத்துவருகிறேன், உங்களுக்கும் தெரியும்” என்றாள். பீஷ்மகர் “இவள் இங்கு வாழ்வதைவிட முகிலில் வாழும் நேரமே அதிகம் போலும்” என்று சொல்லி சிரித்தார். “முகிலில் வாழும் வயது அல்லவா? வளர்ந்தபின்னர்தான் மண்ணில் நூறுமடங்கு எடையுடன் ஒட்டிக்கொள்ள வேண்டியிருக்கிறதே” என்றாள் சுஷமை.

இளமைமுதலே வரதாவில் ஒவ்வொரு நாளும் படகில் செல்லவேண்டுமென்று ருக்மிணி உறுதி கொண்டிருந்தாள். கௌண்டின்யபுரியின் அரண்மனையின் பின்பகுதி நேராக வரதாவின் படித்துறை நோக்கி சென்று நீரில் இறங்கி அலைகளை அளைந்தபடி நிற்கும். அதன் இறுதிப்படியில் நிற்கும்போது நீருக்குள் சென்று ஆழத்து வானத்தில் அறுபட்டு நின்றிருக்கும் படிகளை காணமுடியும். அந்த விளிம்பிலிருந்து தாவி ஆழத்தில் விரிந்த நீலவானுக்குள் சென்றுவிட முடியும் என்று தோன்றும். அவள் அந்தப்படிகளில் நின்றிருப்பதை விரும்புவாள். அவளுக்கென்றே செய்யப்பட்ட அணிப்படகும் அதன் குகன் கர்க்கனும் அவளுக்காக எப்போதும் காத்திருப்பார்கள்.

கோடையில் மாலை மங்கலாகத் தொடங்கியதுமே நகர்மக்கள் படகுகளில் ஏறி வரதாவின் மேல் செல்வார்கள். பட்டுப் பாய்களும் அணிபடாம்களும் ஒளிவிடும் வண்ணங்களில் ஆற்றின்மேல் சிறகு விரிக்க அவை காற்றில் மிதந்துசெல்லும் பட்டாம்பூச்சிகள் போல சென்று கொண்டிருக்கும். அவள் அரண்மனையின் உப்பரிகை ஆற்றை நோக்கி திறந்திருந்தது. அதன் மேலிருந்து பார்க்கையில் அவை மலர்க்கூட்டங்கள் அலைகளில் நெளிவது போல எழுந்தமைந்து செல்வது தெரியும். படகுகளில் இருந்து சூதர்பாடல்களும் அவற்றுடன் இழையும் இசையும் சிரிப்பொலிகளும் எழுந்து வரும்.

விதர்ப்ப நாட்டில் கோடை மிக நீண்டது. பகல் முழுக்க தெருக்கள் உலைக்களத்து வாள்கள் போல சிவந்து பழுத்து எரியும். கருங்கல் மதில்கள் அடுப்பின் மேல் வைக்கப்பட்ட கலங்கள் போல கொதிக்கும். சந்தனமும் வேம்பும் கலந்த குழம்பும் பன்னீரும் உடம்பில் தடவிக் கொண்டு கல் மஞ்சங்களில் இளைப்பாறி பகல் கழிப்பர் மக்கள். மாலையில் முதல் காற்று எழுந்ததுமே நகரம் களிப்போசையுடன் எழுவதை கேட்க முடியும். சற்று நேரத்தில் குளித்து புத்தாடை அணிந்து முகம் மலர களியாடியபடி நகர் மக்கள் அனைவரும் தெருக்களில் இறங்குவர்.

கௌண்டின்யபுரியின் மாளிகைகள் அனைத்திற்குமே வரதாவை நோக்கிச் செல்லும் பின்பக்கப்பாதை ஒன்றிருந்தது. செல்வந்தர் ஒவ்வொருவரும் தங்களுக்கென சிறுபடித்துறை ஒன்றை கொண்டிருந்தார்கள். அணிப்படகுகள் எத்தனை வைத்திருக்கிறார்கள் என்பதே அங்குள்ள உயர்குடியினரின் மதிப்பை அளப்பதாக இருந்தது. பீதர் நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட பெரிய வண்ணப்பட்டுப் பாய்களை ஒவ்வொருவரும் வாங்கி இல்லங்களில் சுருட்டி வைத்திருப்பர். பறக்கும் சிம்மநாகம் கொண்ட பாய்கள், முப்புரி வேல் ஏந்தி உருண்ட விழிதிறந்த யவனநாட்டு நீர்த்தேவன் வரையப்பட்ட கொடிகள். கலிங்கத்துப் பட்டால் அமைந்த பாய்களில் பல்தெரிய சீறும் சிம்மங்களும் அவற்றின் காலடியில் குறுகி ஒடுங்கிய யானைகளும் வரையப்பட்டிருக்கும்.

வசந்தமெழுகையில் கொன்றை பூப்பதற்கு முன்பே வரதா பூத்துவிடுவாள் என்று சூதர்கள் பாடுவதுண்டு. கௌண்டின்யபுரியின் மாளிகைநிரைகளை வரதாவில் அமர்ந்தபடி நோக்குவது ருக்மிணிக்கு ஒவ்வொருமுறையும் உளக்கிளர்ச்சியளித்தது. மாளிகைகளை பெரியபீடங்கள் போல கற்பாளங்களை அடுக்கி கூரையிட்டு அவற்றின்மேல் வரதாவின் வண்டலைப் பரப்பி மலர்ச்செடிகளை வளர்ப்பது விதர்ப்ப நாட்டு வழக்கம். தண்டகாரண்யத்தின் மேலைச் சரிவிலெழுந்த மலைப்பாறைகளை ஆப்புகளை அறைந்து பிளந்து தகடுகளாக வெட்டி எடுத்து வரதாவின் பெருக்கில் கொண்டு வந்து நகரில் இறக்குவார்கள். யானைகள் இழுக்கும் துலாக்கள் அவற்றைத் தூக்கி கற்சுவராலான மாளிகைகளின்மேல் சீராக அடுக்கும். சிலநாட்களிலேயே அந்தக்கூரைமேல் மலர்ச்செடிகள் பசுந்தளிர் தழைத்து எழுந்து வரும்.

மலைச்சரிவில் அமைந்திருந்த கௌண்டின்யபுரி படிகளாக இறங்கிச்செல்லும் மாளிகை முகடுகளால் ஆனது. அரண்மனை உப்பரிகை மீதிருந்து பார்க்கையில் மலர்த்தோட்டங்களின் அடுக்குகளாகவே நகரம் தெரியும். ருக்மிணி வடபுலத்துப் பெருநகர்களை பற்றி கேட்டிருந்தாள். அவை தாமரைமொக்குகள் போன்ற குவைமாடங்களும் வெண்ணிறமான பெரும்சுவர்களும் வளைமுகடுச் சாளரங்களும் கொண்டிருக்கும் என்று சூதர்கள் பாடினார்கள். “இங்கு ஏன் நாம் குவைமாடங்களை அமைப்பதில்லை?” என்றாள். “இளவரசி, விதர்ப்பம் அனலோனின் கைகளால் எப்போதும் தழுவப்பட்டது. அனலிறங்காவண்ணம் நாம் நமது கூரைகளுக்கு மேல் மலர்த்தோட்டங்களை அமைத்திருக்கிறோம். உள்ளே மலர்களின் மணமும் வரதாவின் தண்மையும் நிறைந்துள்ளன” என்றாள் செவிலியன்னை.

கௌண்டின்யபுரியின் மாளிகையின் அனைத்துச் சுவர்களும் கருங்கற்களாலானவை. கோடையிலும் அவை சற்று குளிர்ந்திருக்கும். கீழ்க்கதிர் எழும்போது அனல் மூண்டு சாளரங்களைக் கடந்து உள்ளே வரும் காற்று அவற்றை சற்றே வெம்மையுறச் செய்தாலும் இரவுகளில் மீண்டும் அவை குளிர்ந்து தென்றலை தைலம் தொட்ட இறகென ஆக்கும். இளவேனிலில் கௌண்டின்யபுரியின் அனைத்து இல்லங்களுக்கு மேலும் மலர்கள் பூத்து வண்ணங்கள் நிறைந்திருக்கும். நகர்மையத்தில் அமைந்த மூவிழியன் ஆலயத்தின் கோபுரத்தின் மேலிருந்து நோக்கினால் அது ஒரு பூத்த மலைச்சரிவென்று மட்டுமே தோன்றும், அடியில் ஒரு நகரமிருக்கும் எண்ணமே எவருக்கும் எழாது.

மழைக்காலத்தில் கௌண்டின்யபுரியின் மாளிகையின் சுவர்களனைத்தும் நீர் வழிந்து குளிர்ந்து நீராடிய குதிரைவிலா என நடுங்கிக்கொண்டிருக்கும். நீர்ப்படலம் பட்டெனப் பூத்திருக்கும் கற்பரப்புகளில் கைகளால் எழுத்துகளை வரைந்திட முடியும். ருக்மிணி தன் சுட்டுவிரலால் நீலம் என்று எழுதுவாள். செவிலியன்னை அவள் பின்னால் வந்து “அக்கனவை இன்னுமா எண்ணியிருக்கிறாய் பேதை?” என்றாள். “அது மீள மீள வருகிறதே அன்னையே” என்றாள் ருக்மிணி. “நமது கலவறையில் நீலமணிகள் குவிந்துள்ளனவே. ஏதாவது ஒன்றை எடுத்து நீ அணிந்து கொள்ளலாமே. நீலமணிகளை நீ தேர்வதே இல்லை” என்றாள் செவிலி. “அத்தனை நீலத்தையும் நான் பார்த்துவிட்டேன். அவையெல்லாம் வெறும் கற்கள். நான் வரதாவிடமிருந்து பெற்றது ஒரு நீல விழி. அது என்னை நோக்கும். நான் அதனுடன் விழி தொடுக்க முடியும்” என்றாள். “பித்தடி உனக்கு” என்று சொல்லி செவிலி அன்னை நகைத்தாள்.

மழைவிழுகையில் கௌண்டின்யபுரியின் அனைத்து தெருக்கள் வழியாகவும் நீரோடைகள் வழிகண்டு இணைந்தும் பிரிந்தும் பொழிந்தும் சென்று வரதாவில் சிற்றருவிகளென விழுந்து கொண்டிருக்கும். “கௌண்டியன் தன் அன்னைக்கு பளிங்குமணி மாலைகளை அணிவிக்கும் பருவம்” என்று பாடினர் சூதர். வரதா செந்நிறப்பட்டாடை அணிந்து பெருகி கரைகளை வருடிச் செல்லும் பருவம். ஆற்றின் நீர்ப்பரப்பின் மேல் மழை நீலத்திரையென எழுந்து நின்றிருக்கும். தெற்குக் காற்றில் நெளிந்தாடி மறுகரை நோக்கி சென்று அங்குள்ள மரங்களை அறைந்து கொந்தளிக்கச்செய்தபின் சுழன்று திரும்பி வரும். வரதாவின்மேல் எப்போதுமிருக்கும் பறவைக்கூட்டம் அப்போது மறைந்திருக்கும். மழையுடன் மிக தனித்த உரையாடல் ஒன்றில் வரதா இருப்பதுபோல் தோன்றும்.

அந்த அமைதியை அறிவதற்கென்றே பெருமழையில் படகில் செல்ல வேண்டுமென்று ருக்மிணி விழைவாள். “மழைக்காலத்தில் வரதா கணிக்க முடியாதவள் இளவரசி. ஆற்றில் மூங்கில் கூட்டங்கள் சுழன்று மிதந்து வரக்கூடும். மலையிலிருந்து முதலைகள் இறங்கக்கூடும். இந்நகரில் எவரும் மழைபெருகிய வரதாவில் செல்வதில்லை” என்று செவிலி அவளை இளவயதிலேயே அச்சுறுத்தினாள். “ஒரு நாளேனும் வரதாவில் செல்லாமலிருக்க என்னால் முடியாது” என்று அவள் உறுதி சொன்னாள். அதன்பின்னரே அவளுக்கென்றே பீஷ்மகர் கூரையிட்ட மழைக்காலப் படகொன்றை செய்தார். மெழுகுப்பாய்க் கூரையிட்ட நீள்படகு முன்னும் பின்னும் இரு காவல் படகுகள் துணைவர பன்னிரு குகர்களால் நீள் கழியும் துடுப்புகளும் கொண்டு செலுத்தப்பட்டு வரதாவில் எழும்.

ருக்மிணி அமர்வதற்காக அதில் முகப்பருகே சிறு பீடமொன்றை அமைத்திருந்தனர். மழை கொதிக்கவைத்த வரதாவின் நீர்ப்பரப்பை நோக்கியபடி அவள் கைகளால் முகம் தாங்கி கன்னப்பிசிறுகளில் நெற்றிச்சுரிகளில் நீர்த்துளிகள் சுடர அமர்ந்திருப்பாள். விதர்ப்பத்தின் மழையும் கடுமையானதே. இடைவெளியின்றி பல நாட்கள் பெய்து கொண்டிருக்கும். விண்விழுதுகள் என்று அவற்றை சூதர் பாடுவர். முகில்கள் முற்றிலும் வானை மூடி கதிரென ஒன்று அங்கே எழுந்த நினைவையே நெஞ்சிலிருந்து அகற்றியிருக்கும். இனி இந்த மழை ஊழிக்காலம் வரை இவ்வண்ணமே தொடருமென்று உளமயக்கு ஏற்படும். எங்கும் தொழில்களேதும் நிகழாது. நகர் மாந்தர் அனைவரும் வீடுகளுக்குள் இரும்புக் கலங்களில் அனலிட்டு கூடி அமர்ந்து கதைகளை சொல்லிக் கொண்டிருக்க அவள் மட்டும் தனியே சிலிர்த்தும் சிரித்தும் நெளிந்தும் உவகை கொண்டிருக்கும் வரதாவின் மேல் தனித்து அமர்ந்திருப்பாள்.

“இந்த மழையில் என்னடி பார்க்கிறாய்? ஆறும் காற்றும் வானும் ஒன்றென தெரிகிறது” என்பாள் செவிலி. “இல்லையே. நான் பார்க்கிறேனே” என்பாள் ருக்மிணி. “எதை?” என்று அருகே நின்று செவிலி நோக்குவாள். “நீர் ஆழத்தில் பெரிய மீன்கள் மழைக்கென விழி திறந்து அசையாது நின்றிருப்பதை பார்க்கிறேன்” என்பாள் ருக்மிணி. “ஒவ்வொரு மீன் விழியிலும் ஒரு துளி நீலம் இருக்கிறது. அன்னையே, நான் கனவில் கண்ட அந்த நீலமணி இந்த ஆற்றின் ஆழத்தில் எங்கோ கரந்துள்ளது. மீன் விழிகள் ஒவ்வொன்றிலும் அதன் ஒளியை காண முடிகிறது” என்பாள். “பேதை என்று இப்பருவத்தை வீணே சொல்லவில்லை பெரியோர்” என்று செவிலி நகைப்பாள்.

மழை ஓயும்போது கீழ்வானில் பெருவாயில் ஒன்று திறப்பதுபோல முகில்கள் விலகி ஒளி பரவிய நீல வானம் தெரியும். கீழிருந்து ஒளி கொண்டு வரதா அதை அணுகிவரும். அந்த ஒளிபட்டதும் மழைசொட்டி கிளை குறுகி நின்றிருக்கும் கௌண்டின்யபுரியின் காடுகள் அனைத்திலும் இருந்து பறவைகளின் ஒலிகள் எழும். ஈரச்சிறகுதறி வானில் எழுந்து சுழன்று அவை மகிழ்வொலி எழுப்பும். காகங்களும் வெண்கொக்குகளும் கொற்றிகளும் நாரைகளும் நீர்ப்பரப்பின் மேல் எழுந்து சுழன்று அமிழ்ந்து எழுந்து பறக்கும். நிழல்சிறகுகள் நீருக்குள் நீந்திவர அணுகும் கொக்குக் கூட்டங்களை நோக்கி அவள் முகம் மலர்ந்திருப்பாள். சிறகு ஒடுக்கி மெல்ல வந்து தங்கள் நீர்ப்பாவைகள் மேல் அமர்ந்து மெல்லிய அலைகளை எழுப்பியபடி குவிந்து முன் செல்லும் நாரைக் கூட்டங்கள் அவள் உடலை சிலிர்த்து நெளிய வைக்கும்.

“என்னடி செய்கிறது?” என்பாள் அமிதை. “அவை தங்கள் சிவந்த கால்களால் என் உடலை துழாவுகின்றன” என்பாள். அவை தங்களுக்குள் முனகிக் கொள்ளும் ஒற்றைச் சொற்களைக் கூட அவளால் கேட்க முடியும். அவற்றின் உடலில் எழும் மெல்லிய சாம்பல் மணத்தை அவளால் முகர முடியும். ஐம்புலன்களும் கூர்தீட்டப்பட்டு உச்சநிலையில் நின்றிருந்த பருவம் அது. “பருவங்கள் நீர்நிலைமேலும் பேதைப்பெண்மேலும் படர்வதுபோல் எங்குமில்லை என்பார்கள் மூதன்னையர்” என்று செவிலி சொல்வாள்.

மழைக்காலம் முடிந்து மிகக்குறுகிய வசந்தம். கௌண்டின்யபுரியின் அனைத்து இல்லங்கள் மீதும் பசும்புல்லும் தளிர்செழித்த செடிகளும் முளைத்து பரவும். கற்சுவர்கள் முழுக்க பாசி படிந்து பச்சைப் பட்டாடை சுற்றியது போலாகும். கற்சுவர்களில் நெல்லிபோல சிற்றிலைவரிசை பரப்பில் வேர்பற்றி படர்செடிகள் எழுந்து இல்லங்களையும் அப்போது எழுந்த தளிர்கள் என காட்டும். கற்பாளங்கள் பரப்பப்பட்ட தெருக்களின் இடுக்குகளில் எப்போதும் கசியும் நீருக்குள் இளஞ்செம்மையும் பசுமையும் கலந்த நீர்ப்பாசி படிந்து பளபளக்கும். நீர் வழிந்த தடத்தில் படிந்த பாசியின் பசுமை சிலிர்த்த சுவர்களில் சிறிய பறவைகள் வந்து தொற்றி அமர்ந்து சிற்றலகுகளால் கொத்தி உணவு தேடும். சாளரங்களின் வழியாக அப்பறவைகளின் சிற்றொலியைக் கேட்டு குழந்தைகள் உவகைக் குரல் எழுப்புவார்கள். “சிற்பியின் கை தெரியாத சிற்றுளிகள்” என்று அவற்றை ருக்மிணி நினைப்பாள். உளி கொத்தும் ஒலிகளால் அவை அனைத்து மாளிகைகளையும் தொட்டுத் தொட்டு மீட்டிக் கொண்டிருக்கும்.

விதர்ப்பத்தின் குளிர்காலம் விரைந்து முடிந்துவிடும். பகல் முழுக்க வெயிலும் இரவில் குளிரும் என்பது அங்குள்ள பருவக் கணக்கு. காலை சற்று பிந்தியே விடியும். ஆடைகளை தலையையும் உடலையும் சுற்றிப் போர்த்தியபடி ஆயரும் பிறரும் ஒளி எழுந்த உடனே தெருக்களில் உடல் குறுகி விரைந்து சென்றுகொண்டிருப்பர். வணிகரும் உழவரும் வெம்மை எழுந்து தெரு காய்ந்த பிறகே இல்லம்விட்டு கிளம்புவார்கள். இரவெல்லாம் சொட்டிய பனித்துளியின் தடங்கள் படிந்த புழுதிப்பாதையில் குளம்புகள் பதிய மணியொலிக்க கன்றுகள் வரதா நோக்கி சென்று கொண்டிருக்கும். மாளிகை உப்பரிகை விளிம்பில் அமர்ந்த அவள் அவற்றின் ஒவ்வொரு குளம்படியையும் தன் விழிகளால் தொட்டெடுக்க முடியும் என்பது போல் பார்த்திருப்பாள்.

வெயில் தெருக்களை காயவைத்து பனிப்பொருக்குகளை மீண்டும் புழுதியாக்கி இலைகளை ஒளிரச்செய்யும்போது அணிபடாம்களை சுருட்டி மேலே தூக்கி கடைகளைத் திறப்பார்கள் வணிகர்கள். நகரம் ஓசை எழுப்பத் தொடங்கும். உச்சி ஏற ஏற வெம்மை கொண்டு நகரத்தெருக்கள் மீண்டும் கொதிக்கும். வெயிலுக்கு அஞ்சிய நகர்மக்கள் தங்கள் இல்லத்திண்ணைகளுக்கு திரும்புவார்கள். அங்கிருந்து வெண்வெயில் திரையென நின்றிருக்கும் தெருக்களை நோக்கியபடி அமர்ந்து கதை தொடுப்பார்கள். கௌண்டின்யபுரியின் சொல்வணிகம் முழுக்க அப்போதுதான் நிகழும் என்பார்கள் சூதர்.

மாலை எழுந்ததும் வரதாவிலிருந்து நீராவியும் நீர்ப்பாசியும் கலந்த மணத்துடன் வெம்மை கொண்ட காற்று எழுந்து நகர் மீது பரவி சாளரங்களைக் கடந்து இல்லங்களுக்குள் நுழைந்து வியர்வை வழிந்த உடல்களை ஆற்றி உப்புவீச்சம் கொண்டு செல்லும். மாலை மேலும் இருள்கையில் மறுபக்கம் தண்டகத்தின் காடுகளிலிருந்து வரும் குளிர்காற்று வீசத்தொடங்கும். அக்காற்றில் வரதாவின் நீரலைகள் குளிர்ந்து உலோகப் பரப்பு போலாகும். சால்வைகளை சுற்றிக்கொண்டு தெருக்களிலும் அங்காடிகளிலும் மக்கள் கூடி பேச்சொலிப்பார்கள். ஆலயங்களின் முன் கூடி வாழ்த்தெழுப்புவார்கள். இசைக்கூடங்களில் முழவுகளும் யாழ்களும் குழல்களும் இசை எடுக்கத்தொடங்கும்.

குளிர்காலத்திலும் வரதாவின் மேல் படகில் சென்றாகவேண்டும் என்பாள் ருக்மிணி. அணிப்படகில் ஏறி பட்டுச் சால்வையை கழுத்தைச் சுற்றி அமைத்து உடல் ஒடுக்கி அமர்ந்து கருமை கொண்டு ஆழம் மிகுந்து செல்லும் வரதாவை நோக்கிக் கொண்டிருப்பாள். குளிர் காலத்தில் விண்மீன்கள் முன்னரே எழுந்துவிடும். இரவு அடருந்தோறும் ஓசை மிகுந்ததாக ஆகும். நகரத்தில் விளக்குகள் எழும்போது சுடர் வரிசை வரதாவின் நீருக்குள் ஆழங்களில் அனல்கோடுகளை நெளிந்தாடச்செய்யும்.

நகரோசைகள் அனைத்தும் மெல்லிய பனிப்படலத்தால் மூடப்பட்டு நீருக்குள் என ஒலிக்கும். பொழுது மாறுதலை தெரிவிக்கும் பெருமுரசு தோல் நனைந்து ஒலிப்பது போல் எழும். கொம்போசை காட்டுக்குள் நெடுந்தொலைவில் கேட்கும் யானையின் சிறு பிளிறலென அதிரும். குளிர்காலத்து வரதா தனக்குள் ஏதோ இனிய நினைவொன்றைப் புதைத்து ஊழ்கத்தில் ஆழ்ந்தது போல் இருப்பாள். அதன்மேல் இன்னதென்றறியாத ஏக்கமொன்றைச் சுமந்து ருக்மிணி அமர்ந்திருப்பாள்.

வரதாவின் மேலே அவள் வளர்ந்தாள் என்று அமிதை சொல்வதுண்டு. “அன்னை பெற்றாள், நான் பேணினேன். வரதா அவளை பெண்ணாக்கினாள்” என்பாள். “மணம் கொண்டு இந்நகர் விட்டு செல்வாயல்லவா? வரதாவை எங்ஙனம் பிரிந்து செல்வாய்?” என்று தோழியர் கேட்பதுண்டு. “செல்கையில் வரதாவையும் ஒரு குவளையில் அள்ளிச் செல்வேன். செல்லும் நகர் பாலையாயினும் அந்நீரை ஊற்றி ஒரு பெரு நதி எழச்செய்வேன்” என்பாள் ருக்மிணி. பின்னர் நகைத்து “எனக்கு ஒரு துளியே போதுமடி” என்பாள்.

நள்ளிரவில் துயில் கலைந்து எழும்போதும் தன் உப்பரிகை மேல் வந்து நின்று தொலைவில் இருளுக்குள் எழுந்த இருள் நீலப் பெருக்காக தெரியும் வரதாவை நோக்கிக் கொண்டிருப்பாள். சில பொழுதுகளில் அவ்வண்ணமே விடியும் வரை அமர்ந்திருப்பாள். வரதாவில் விடியலெழும் அழகை ஒவ்வொரு நாளும் அன்று புதிதென காண்பாள். கிழக்கே எழும் முதல் ஒளிக்கசிவை வரதாவின் ஆழத்திற்குள் பார்க்கமுடியும். விடியலையே தன்னுள்ளிருந்து அவள் எடுத்து விண்ணுக்கு வழங்குவது போல. முத்துச் சிப்பியின் அகம் போல ஒளி பல நிறங்களில் வானிலிருந்து கசிந்துபரவும். வானே திவலைகளாக மாறி உதிர்வது போல் எழுந்து வரும் வெண்பறவைகள். கடந்து சென்ற பிறகும் அவற்றின் நிழல் ஆற்றின் அலைகளின் அடியில் எப்போதைக்குமென எஞ்சியிருப்பது போல் தோன்றும்.

விண்செந்நிறம் தேர்ச்சாலை போல சூரியனிலிருந்து அவளுடைய உப்பரிகை வரை நீண்டு வரும். அதனூடாக சூரியன் உருண்டிறங்கி அவள் மாளிகை முற்றத்திற்கு வந்து நிற்கும் என்பது போல. பாய்ந்திறங்கி அதன் வழியாக ஓடி இளநீலம் தகதகக்கும் அந்த வட்டக் கதவைத் திறந்து உள்நுழைந்து நீலப் பேரொளி நிறைந்த பிறிதொரு உலகுக்கு சென்றுவிட முடியும் என்பது போல.

இக்கனவுகளுடன் இங்கிருக்கிறேன் என்பதை எங்கோ எவரோ உணர்கிறார்களா என்ன? ஒரு போதும் ஒருவரும் உணராமல் போகும் கனவுகள் பார்க்கப்படாத மலர்கள்போலும். இவற்றை என்றேனும் சொல்லாய் சமைக்க என்னால் இயலுமா? என் உடல் ஒவ்வொரு கணமும் மாறிக் கொண்டிருப்பதை உணர்கிறேன். ஒவ்வொரு காலையிலும் எழுந்து என் முகத்தைப் பார்க்கையில் அங்கு முந்தையநாள் இரவு கனிந்து வந்த பிறிதொருத்தி நின்றிருப்பதை பார்க்கிறேன். ஒவ்வொரு தனிமையிலும் உருமாறிக்கொண்டிருக்கிறேன்.

என் நெஞ்சே, என்றோ எங்கோ நின்று திரும்பிப் பார்க்கையில் இவ்வினிய கனவுகளை எவருடையதோ என்று நினைவு கூர்வேனா? சுட்டு விரல் நீட்டி நான் கொண்டு செல்லும் இந்த நீர்த்துளி எத்தனை கணம் நீடித்திருக்கும்? என்றும் அழியாத வைரம் போல் இதை எங்கேனும் சேர்த்து வைக்க இயலுமா? அரியவை இலக்கின்றி நிகழ்வதில்லை என்பார்கள். இப்பெருங்கனவுகள் என்னுள் நிகழ்வதற்கு இவற்றை ஆக்கிய தெய்வங்கள் என்ன இலக்கு வைத்துள்ளன? தெய்வங்கள் சூடாத மலரேதும் இப்புவியில் மலருவதில்லை என்று விறலியர் பாடுவதுண்டு. எவர் சூடும் நறுமண மலர் இது?

ஏதோ நினைப்பிழந்து சில சமயம் அவள் நெஞ்சு நிறைந்து விழி கசிந்து விம்முவாள். தனிமையில் கைகளில் முகம் சேர்த்தமர்ந்து கண்ணீர் விடுவாள். அவள் விசும்பல் ஒலி கேட்டு ஓடி வந்து தோள் தொட்டு “என்னடி இது? ஏன் அழுகிறாய்?” என்பாள் அமிதை. “அறியேன் அன்னையே. அழுகையில் நானடைந்ததனைத்தும் நிறைவுறுகிறது என்று தோன்றுகிறது” என்று கண்களைத் துடைத்து புன்னகை செய்வாள். செவிலியன்னை தன் மேலாடையால் கண்களைத் துடைத்தபின் “நீ அழுவது துயரால் அல்ல என்று அறிவேன் மகளே. ஆயினும் உன் கண்ணீர் கண்டு என் நெஞ்சு நெகிழ்கிறது” என்பாள்.

ருக்மிணி “நானுணர்ந்த எதையும் என்னால் சொல்ல முடியவில்லை அன்னையே. ஆனால் எங்கோ ஒரு பாடலைக் கேட்கையில் அதன் ஒரு வரியில் அனைத்தையும் கண்டு கொள்கிறேன். நேற்று ஒரு சூதன் பாடிச் சென்ற வரி என்னை அதிரச் செய்தது. விண்நீலம், விரிகடல்நீலம், விழிநீலம், விசும்பு எழுந்த மலர்நீலம் என்று அவன் பாடினான். பொருளற்ற சொற்கள் போலிருந்தன அவை. பொருளற்றவையாக இருக்கும்போது மட்டுமே சொற்கள் அடையும் பேரழகையும் ஆற்றலையும் அடைந்தவையாகத் தோன்றின. இன்னதென்றறியாமல் ஓர் அக எழுச்சி கூடி என் உடல் சிலிர்த்தது” என்றாள். “எவர் பாடிய வரி அது இளவரசி?” என்றாள் செவிலி.

பெருமூச்சுடன் ருக்மிணி “அப்போது நான் படகில் அமர்ந்திருந்தேன். அச்சூதன் பாடிக்கொண்டிருந்த சிறிய அணிப்படகு என்னை கடந்து சென்றது. அதை தொடர்ந்து செல்ல ஆணையிடலாமென்று எழுந்தேன். அச்சூதனை உடனே வரச்சொல்லி அப்பாடலை முழுதும் பாட வைக்கலாமென்று எண்ணினேன். எதையும் இயற்றாமல் அங்கிருந்தது என் உடல். வானில் கடந்துசெல்லும் பறவை எதிர்பாரா கணத்தில் தலைக்குமேல் சொல்லிச் சென்ற ஒற்றைக் கூவல் ஒலி போல அந்த வரியை மட்டும் என்னில் எஞ்சவிட்டு அப்படகு கடந்து சிறிதென ஆகிச்சென்று மறைந்தது. மீண்டும் ஒரு முறை அவ்வரியை நான் கேட்கவே போவதில்லை என்றுணர்ந்து பதற்றம் கொண்டு எழுந்தேன். அமரமுனை நோக்கி ஓடிச்சென்று அகன்று சென்ற அப்படகை பார்த்து நின்றேன். பின்னர் மீண்டு வந்து அமர்ந்தபோது நெஞ்சு தாளாத ஏக்கத்தால் நிலையழிந்து கண்ணீர் விட்டேன்” என்றாள்.

ருக்மிணி தொடர்ந்தாள் “அன்னையே, பிறகு அறிந்தேன். அந்த வரி எளிய ஒரு தற்செயலாக இருக்கலாம் என என் உள்ளம் சொன்னது அப்போது. அக்கணம் என் உள்ளம் எழுந்த உணர்ச்சியை அது ஆடி போல் எனக்குக் காட்டியிருக்கலாம் என்றும் அடுத்த வரியைக் கேட்டால் நான் எழுந்தமர்ந்த அந்த உச்சத்திலிருந்து விழுந்துவிடக்கூடும் என்றும் அஞ்சினேன். அவ்வரிக்கு நிகர் வைக்கலாகாது என்றே என்னை அறியாது அதை நழுவ விட்டேன். பிறிதொரு முறை அடையப்படாதவை விண்ணின் பெருவெளியில் எப்போதைக்குமென மறைந்து செல்கின்றன. முடிவிலியை ஒவ்வொரு கணமும் அவை உணர்த்துகின்றன. அவை தெய்வங்களுக்குரிய வரிகளாக ஆகிவிடுகின்றன.”

“விண்நீலம், விரிகடல்நீலம், விழிநீலம், விசும்பு எழுந்த மலர்நீலம் என அவ்வரியை ஒவ்வொரு மூச்சுக்கும் ஒரு முறை என அப்பொழுது முதல் இக்கணம் வரை ஓயாது உரைத்துக் கொண்டிருக்கிறேன். என் உள்ளப் பெருக்கில் உருண்டுருண்டு அது மணியாக மாறிவிட்டிருக்கிறது. இங்கு அமர்ந்து ஒழுகும் பெருநதியை நோக்கி நிற்கையில் இதெல்லாம் என்ன என்ற பெருவியப்பை அடைகிறேன். இவை அனைத்தும் இனி மீளாது என்ற ஏக்கத்தையும் அடைகிறேன். ஏதோ சொல் பிதற்றிக் கொண்டிருக்கிறேன். இச்சொற்களின் பொருள் எனக்கும் தெரியவில்லை” என்றபின் அவள் கண்களை மூடி தன் தலையை கைகளில் தாங்கி அமர்ந்திருந்தாள்.

அவளை நோக்கி புன்னகைத்து நின்ற அமிதை மெல்லிய குரலில் “தேவதைகள் சூழ பறக்கும் இனிய பருவமொன்றை கடந்து சென்று கொண்டிருக்கிறாய் இளவரசி. பின்னிரவுகளில் கனிகள் கனியும் மணத்தை காற்றில் உணரமுடியும். அந்தக் கனிமரம் தன்னுள் வேர் முதல் தளிர் வரை ஊறிய இனிமையை அக்கனியில் தேக்கும் கணம் அது. அது தெய்வங்களுக்குரியது” என்றாள்.

முந்தைய கட்டுரைபுதுமைப்பித்தனின் வாள்
அடுத்த கட்டுரை“என்னதான் இருக்கிறது வேதத்தில்?”-சு. கோதண்டராமன்