உப்புநீர் – கடிதங்கள்

எழுத்தாளர் நண்பருக்கு..

வணக்கம். எழுத்துகள் வழி அறிமுகம் தாங்கள் எனக்கும். நான் தங்களின் இணையத்தள தொடர் வாசிப்பாளி. காடு நாவல் என்னுள் தங்களின் முதல் பிம்பத்தை விதைத்தது. தொடர் வாசிப்புகளுக்கு இணையம் வழிக் காட்டியது. தங்களின் எழுத்து பிரமிக்கத்தக்கது என தோன்றிக் கொண்டேயிருக்கும். கடிதம் எழுதத் தோன்றிய மன உணர்வை அடக்கிக் கொண்டேன். அந்நேர மனவெழுச்சியை வென்று விட்டால் கடித போக்குவரத்திற்கான அவசியம் நேராது என தோன்றியது. இருந்தாலும் வரையாடும் காஞ்சிரமரமும் எனக்குள் தடமாக பதிந்துக் கிடக்கிறது.

மீண்டும் தங்களை இணையத்தில் தொடர்புக் கொள்ள தோன்றிய நிகழ்வு தங்களின் அனல்காற்று நாவலை படித்தப் போது எழுந்தது. அனல்காற்றின் வீச்சு என்னுள் குமைந்து அடங்கிய பின் கடைசி அத்தியாயம் சில சமரசங்களுக்குட்பட்டதோ.. அல்லது பொங்கி குளிர்தல் என்னும் நிகழ்வை இன்னும் சற்று மெருகேற்றியிருக்க வேண்டுமோ.. என்று தோன்றியது. ஒருவித மன நிலைக்குள் தடையற்று நகரும் இலக்கியக் குவிப்பு நாவலென்ற தளத்தில் நம்மை வந்தடையும் போது சில செயற்கைபாடுகள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து வரும் பிளாஸ்டிக் குப்பி போல என்றெண்ணி அப்போதும் தங்களுக்கு கடிதம் எழுத நினைத்த என்னை கட்டுப்படுத்திக் கொண்டேன்.

உச்சவழுவும் அப்படிதான். இலக்கியத்தின் உச்சம் என தோன்றியது. அக்கதை நிறைய அனுபவங்களை என்னுள் விரித்தது. வாழ்வு என்பதை ஒரு சதுர வடிவ பிரேமிற்குள் ஒப்புமைப் படுத்திக் கொள்வோமெனில் இக்கதை ஒரு வட்டமாக அதனுள் பயணித்து சதுரங்களின் முனையைத் தொடாது இரு முனைகளுக்குமான நடுப்பகுதியை அசால்ட்டாக தொட்டு பயணிப்பது போன்று தோன்றியது. இரு வடிவங்களுக்குமான உரசல் இலக்கிய அனுபவமாக விரிகிறது. இம்முறையும் தங்களுக்கு கடிதம் எழுத தோன்றிய உணர்வை ஒளித்துக் கொண்டேன்.

இன்று உப்பு நீரின் வடிவிலே எம்.எஸ்.வி.க்கான நினைவஞ்சலியை படித்தேன். தொடர்பு கொள்ள வேண்டுமெனத் தோன்றியது. சொல்லியேயாக வேண்டுமென தோன்றியது. பெரியம்மாவின் சொற்களுக்குள் சிக்கிக் கொண்டதுப் போன்ற ஒரு உணர்வு.

தங்களுக்கு நன்றி.

கலைச்செல்வி, திருச்சி.

‘எல்லாம் நம்ம கூடத்தான்….நம்ம பெரியப்பன் செத்துப்போயிட்டாரு…அதான் ஊருக்குப்போறேன். நல்லதுக்கு போவல்லேண்ணாலும் கெட்டதுக்கு போயிடுறது….ஆளுங்க வேணுமே.. நமக்கு நல்லது நடக்கல்லேண்ணாலும் கெட்டது நடந்திரும்லா?”

ஐய்யோ உண்மையில் ஆடி விட்டேன். இது வரை நல்லதுக்கு போவல்லேண்ணாலும் கெட்டதுக்கு போகனும் என்பது அவர்களின் துக்கத்தை பகிர என்று மட்டுமே நினைத்து இருந்தேன், ஆனால் இப்பொளுது தான் இப்படியும் (நமக்கு நல்லது நடக்கல்லேண்ணாலும் கெட்டது நடந்திரும்லா?”

) இருக்கும் என்று தெரிந்து கொண்டேன். இது உண்மை. இந்த உண்மை தெரிய எனக்கு 44 நான்கு ஆண்டுகள் ஆகிவிட்ட்து. (எனக்கு வயது 44). மிக்க நன்றி.

உமாசங்கர்

முந்தைய கட்டுரைபளிங்கறை பிம்பங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 49