இரவு – ஒரு வாசிப்பு

இரவு – ஜெயமோகன்

இந்த நாவலை நான் ஃபேஸ்புக்கில் தமிழில் எழுதத் தெரியாதிருந்த காலத்திலேயே படித்து விட்டதால், இதைப்பற்றி அப்போது எழுத முடியாமலேயே போய்விட்டது. இது விமர்சனமல்ல, வாசிக்காதவர்களுக்கு அறிமுகப்படுத்தும் சிறு முயற்சி !

பாபநாசம் வெற்றிக்குப் பின் ஜெயமோகன் தலைக் கொம்பின் நீளம் சில செண்டி மீட்டர்கள் கூடிவிட்டிருக்கும் என்றாலும் இந்த இரவு நாவலுக்காக அவர் புகழ் பாடுவதில் தவறில்லை என்பது என் எண்ணம். இந் நாவலை எப்படி இன்னும் படமாக்காமல் விட்டிருக்கிறார் எனப் புரியவேயில்லை ? கெளதம் மேனன் போன்றோர் இயக்கினால் இந் நாவல் ஒரு கவிதை போல படமாகும், ஆனால் ஓடாது

இருந்தாலும் ஒரு விஷுவல் ட்ரீட்டாய், ஓர் இன்பத் தழும்பாய் அப்படம் சினிமாக் காதலர்கள் மனதில் பதியும் என்பதில் நான் உறுதியாய் இருக்கிறேன் !

ஜெயமோகனை எளிதாய் அணுக, நான் பலருக்கும் பரிந்துரைப்பது இந்த இரவு நாவலைத்தான். இன்னும் கொஞ்சம் எளிதாக வேண்டுமானால் உலோகம் வாசியுங்கள் என்பேன், ஆனால் உலோகம் ஒரு ஃபேக் நாவல் என இலக்கிய வெறியர்கள் துவேஷிப்பதால்(அதன் பதிப்பே அந்த லட்சணத்தில்தான் இருக்கும்) அதைப் பரிந்துரைப்பதை பெரும்பாலும் தவிர்ப்பேன், இருந்தாலும் ஜெயமோகனின் எழுத்துக்கள் உங்களுக்கு ஒவ்வாமையையே தருகிறதெனில் உலோகம் முயற்சியுங்கள், கதைக்களமும் உங்களை ஈர்ப்பதாகத்தான் இருக்கும்(விடுதலைப் புலிகள்)

சரி இரவு நாலலுக்குள் போவோம், அப்படியென்ன சினிமாவாய் எடுக்குமளவு இதில் சிறப்பு ?

கதாநாயகன் ஓர் ஆடிட்டிங் வேலையாய் கேரளா வருகிறான். தென்னந் தோப்பு, வயல்கள், காயலுக்கு போகும் கால்வாய், அதில் செல்லும் படகு என்கிற ரம்மியமான சூழல் கொண்ட இடத்தில் அமைந்திருக்கும் ஒரு குடிலில் தங்கியிருப்பான்.

வேலை முடிந்த நேரம் போக, இணையதள வலைப்பக்கங்கள், சமூக வலைத்தளங்களில் உலவுவதே நாயகனின் பிரதான பொழுதுபோக்காய் சில நாட்கள் அமைகிறது !

ஃபேஸ்புக்கில் ஒரு ஐடியில் ஒரு சர்ச்சைகளைத் தூண்டும் பதிவைப் போட்டுவிட்டு, அதற்கு லைக்ஸ், கமெண்ட் என்ன வந்திருக்கிறது என்று அரைமணிக்கொரு முறை போய்ப் பார்ப்பான். எதுவும் சரியான ரெஸ்பான்ஸ் இல்லாவிடில் அவனே வேறொரு ஃபேக் ஐடியில் போய் அந்தப் பதிவில் அசிங்கமாகத் திட்டிவிட்டு வர, பிறகு நிஜ ஐடியில் போய் அதற்குப் பதில், சண்டை, இந்த சதி தெரியாமல் வீம்புக்கு வந்து மாட்டும் சில அப்பாவிகளுடன் இரண்டு ஐடிக்களும் சேர்ந்து தர்க்கம் செய்வது………..இப்படி நாம் இப்ப செய்யும் எல்லாச் ஜகஜ்ஜாலங்களையும் 2010 லியே இரவு நாவலில் அழகுற பதிந்திருப்பார் ஆசிரியர் !

இப்படியாகக் கட்டக் காப்பியும்,, மழையும், காயலும், மீனும், படகும், புட்டும், கடலைக் கறியுமென நகரும் பக்கங்கள் சற்றே உங்களை நெளியச் செய்யும் வேளையில்தான் நீலிமா உள்ளே வருவாள் பாருங்கள், நீங்கள் அவுட் அங்கிருந்து கதை செல்லும் பாணியே அலாதியாக இருக்கும் !

ஒரு நாள், மாலை மையை அள்ளிப் பூசிக்கொண்டிருக்கும் நேரம், வயல்வெளியே உலவுகையில் அருகிலிருக்கும் வீட்டு நபர்களின் நட்பு எதேச்சையாக கிட்ட, அங்கிருந்து விறுவிறுப்புக்கும், இதுவரை எங்குமே கேட்டிராத, பார்த்திராத, அனுபவித்திராத ஒரு புது உலகத்திற்குள் நுழையும் கதை.

அந்த வீட்டில் வாழ்பவர்கள் இரவு வேளைகளில் மட்டுமே விழித்திருப்பர். இயற்கை வெளிச்சங்கள் அன்றி செயற்கை ஒளி மூலம் அந்த இரவை பார்ப்பதை தவிர்ப்பவர்கள். சாப்பாடு செய்ய அல்லது சாப்பிட, நாளைக் கொண்டாட மட்டும் அதிகபட்சமாக சிறிய மெழுகு வர்த்தி வெளிச்சங்களை பயன்படுத்துவர். புதிதாக அந்தக் கம்யூனிட்டிக்கு அறிமுகமாகுபவர்களுக்காக மட்டுமே அந்த மெழுகுவர்த்தி வெளிச்சம்.

அதைத்தாண்டி, அவர்கள் அந்த இரவில் வாழ்வதை பெரும்பாக்கியமாகவும், எல்லாக் காட்டு மிருகங்களும் இரவில்தான் விழித்து, உலவி வாழும் அதுவே இயற்கை நியதி. ஆக இரவில் வாழ்வதே இயற்கையோடு இயைந்து வாழ்தல் என்றும் ஆழமாக நம்புவர்கள்.

பகல்வேளைகளில் தூங்கி மாலை ஏழு மணிக்கு மேல்தான் விழித்து தன் வாழ்க்கையை நகர்த்துவர். குழந்தை குட்டி, படிப்பு, சாப்பாட்டுக்கு என்ன வழி ? என்றெல்லாம் சிந்திக்க விடாமல், இந்தக் கம்யூனிட்டியில் இருப்பவர்களுக்கு நிரந்தர வருவாய் உள்ளவர்கள் போல பென்ஷன், சொத்து, பரம்பரை பணக்காரர்களாய் இருப்பதைப் போலவே சாமர்த்தியமாய் வடிவமைத்திருப்பார் ஆசிரியர்.

இந்தவகை மக்களுக்காகவே இயங்கும் ரகசியக் ராக் கடைகள், ஹொட்டேல்கள், ஆசிரமங்கள், சர்ச்கள், காயல் படகுகள் என்று நாம் ஒவ்வொரு பக்கங்களைக் கடக்க கடக்க வாய்பிளக்கும் காட்சிப் படிமங்களை பதித்தவாறே கடந்துக் கொண்டிருப்பார் ஜெயமோகன் !

இரவை ஊடுருவி தன் கண்காளாலேயே அந்த இருட்டுக்குப் பழகி அவர்கள் வாழும் அந்த வாழ்க்கையை வாசிக்க வாசிக்க, தன்னிச்சையாக அப்படி ஒரு வாழ்வை வாழ்ந்து பார்க்க ஆசைப்பட்டு, இருளை கண்களால் தடவிப் பார்த்து ஏதேனும் தட்டுப்படுகிறதா என ஒரு நாள் முயல்வீர்கள் பாருங்கள், அப்போது இந்த நாவலின் தாக்கம் உங்களுக்குப் புரியவரும்

அந்த இரவு ஜீவிக் குடும்பத்துடன் ஏற்படும் தொடர்பால் ஒரு தேவதையுடன் அந்த நாயகன் பழகும் வாய்ப்பு, அந்தப் பேரழகால் காதலாக மாறுகிறது.

அவளுடன் இருட்டில் அவன் படகில் பயணம் செய்வது, மேலே முழு நிலா தகிக்க, அந்த வெளிச்சத்தில் நடுக் காயலில் அவளுடன் கூடும் காட்சி, சில நாட்களிலேயே இருட்டுக்குப் பழகிவிடும் கண்கள், இருளில் உலவுவதையெல்லாம் தெளிவாக பார்க்குமளவு கிட்டிவிடும் பார்வைத்திறன் என இன்பரசம் ததும்ப, வியப்பு விரிய, அழகாகச் சொல்லிச் செல்வார்.

இடையிடையே உரையாடல்களில் வரும் தர்க்கங்கள் பலருக்கு மிக ஆர்வத்தை தூண்டுபவைகளாகவும், சிலருக்கு கடும் வெறுப்பைத் தூண்டுவதாகவும் அமைந்திருக்கும்.

கதைப்போக்கு…….. சாமியார், ஃபாதிரியார், கள்ளக்காதல், கள்ள உறவு என்றெல்லாம் போய் சினிமா பாணி க்ளைமேக்ஸ் இருக்கும், இருந்தாலும் காதல் ஆழமாய்ச் சொல்லப்பட்டிருக்கும் என்பதால், ஜெயமோகன பீதிபோபியோவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்தப் பீதியை போக்க வல்ல ஆக்கம்தான் இரவு.

பெரிய இலக்கிய வகையாகவெல்லாம் இல்லாமல் எளிய, ஆனால் ஒரு புதிய உலகத்தைக் காட்டியிருக்கும் இந்த ஜெயமோகனின் இரவு நாவலை அவசியம் வாசித்து விடுங்கள், அதன்பின் கொற்றவை, விஷ்ணுபுரம், காடு போன்ற சவாலான ஆக்கங்களையும் இலகுவாக வாசித்து, பேரிலக்கியவாதியாக மாறி, பல சேவைகள், அறிவுரைகள், விமர்சனங்கள், தாக்குதல்கள், கள மோதல்கள் என தூள் பறத்தலாம்

இரவு ( நாவல்)
ஆசிரியர் : ஜெயமோகன்
தமிழினி பதிப்பகம்
முதல் பதிப்பு 2010
விலை ரூ.160/- udumalai.com ஆன்லைன் மூலமும் எளிதாக வாங்கலாம் !

ராஜராஜேந்திரன்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 48
அடுத்த கட்டுரைபளிங்கறை பிம்பங்கள்