கரடி- ஒரு கடிதம்

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு ,

நலமா ? . இயல் விருது பெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துகள் . உங்களுக்கு கடிதம் எழுதி வெகு நாட்கள் ஆகிவிட்டன . தொடர்ந்து உங்கள் கட்டுரை , சிறுகதைகள் போன்றவைகளைப் படித்துகொண்டு இருக்கிறேன் .

வெண் முரசு என்னும் விசுவரூப படைப்பு வேறு இன்னும் வாசிப்பின் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை அளிக்கிறது . சமீபத்தில் நீங்கள் எழுதிய மூன்று சிறுகதைகளையும் படித்தேன் (கரடி, பெரியம்மாவின் சொற்கள் , ஒரு கணத்துக்கு அப்பால் ) . எனக்கு மூன்றும் மிகவும் பிடித்திருந்தது . என்றாலும் மனதுக்கு நெருக்கமாய் நின்று எண்ணங்களை அலைக்கழித்துக் கொண்டிருப்பது எனது அன்பு ஜாம்பன் வந்து , வாழ்த்து , கிட்டத்தட்ட மனிதனைப் போன்ற ஓர் உயிரினமாய் மாற்றப்பட்டு , பிரபலமாக்கப்பட்டு , பின்னர் ஒற்றைத் தோட்டாவால் மோட்சம் அடைந்தவதாய் முடியும் “கரடி” கதையே .

மிகவும் லேசான மொழிநடை , முதல் ஓரிரு வரிகளிலே என்னை கதைக்குள் கொண்டு சென்றுவிட்டது.
“பதினெட்டுவயதான ஆண்கரடியை ஒரு மரமுக்காலியில் அமரச்செய்து சர்வாங்க சவரம் செய்தேன்” இந்த வரிவந்த உடனே ஒரு வித்தியாசமான கதைக்குள் செல்லப் போகிறோம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி மேல்செல்ல வைக்கிறது .

இக்கதைக்கான முதல் விதை எவ்வாறு உங்கள் மனதில் தோன்றியிருக்கலாம் என்று மனம் எண்ணிக்கொண்டே இருக்கிறது .கதையில் வரும் முதலாளி மனிதர்களை மிருகத்தை விட கேவலமாக நடத்துகிறார் என்றாலும் ஜாம்பனின் மீது கொஞ்சம் பாசம் காட்டுகிறார் . ஆனால் அந்த சர்க்கஸில் முதலாளியின் எந்த ஒரு வசைச் சொற்களும் அவர்களை ஏதும் செய்யவில்லை (அவர்கள் கண்டுகொள்ளவில்லை). ஏதோ அவருக்கு அடிமையாய் வாழும் மிருகங்கள் போன்று , மாறாக முதலாளி தங்கள் பக்கம் பார்த்ததால் கூட பெருமை கொள்பவர்களாக திரிந்துகொண்டிருக்கிறார்கள் .

“அவர் குடித்துமுடித்த கோப்பையில் எஞ்சிய துளிகளை நான் நாவில் விட்டுக்கொள்வதுண்டு.”

அவ்வாறு என்னைக் கவர்ந்த ஒரு வரி பின் வருமாறு . மிகவும் நுட்பமான வரி
.
“ஏளை சொல் அம்பலம் ஏறுமா? நமக்கென்ன? இருந்தாலும் லே பாருங்கலே, மோலாளி பாத்தாருண்ணா பாடு பரலோகமாக்கும்னுட்டு பத்துநாப்பது வட்டம் சொன்னேன். ஆருகேக்கானுக? திமிருல்லா…” என்றேன். ”ஊஞ்சலிலே ஆடுறப்ப சொறிஞ்சுதுன்னா கீளவிளுந்து செத்துப்போயிரும்.. தொப்பியப்பிடிக்கணுமானாகூட இப்பிடி சொறிஞ்சா நடக்காதுல்லா?” என்று மேலே போனேன். முதலாளி என்னிடம் ஒன்றும் சொல்லாமல் உள்ளே போனார். நான் முதலாளிக்கு நெருக்கமானவனாக ஆன உணர்வை அடைந்து உல்லாசமாக சீட்டியடித்து”

ஆனால் முதலாளிக்கு யாரும் பொருட்டல்ல .

மாரிக்கும் , கதைசொல்லிக்கும் நடக்கும் உரையாடல் மிகவும் ரசித்த இடம் . இந்த அங்கதம் தான் கடைசியில் ஏற்படும் ஆழ்த்த தாக்கத்திற்குக் காரணம் என்று எண்ணுகிறேன் .

ஜாம்பன் கொஞ்சங்கொஞ்சமாய் மனிதர்களின் செயல்களைக் கண்டு அதனை பின்பற்றுகிறது . எடுத்துக்காட்டுக்கு ஜாம்பனுக்கு மருந்து தெளிக்கப்படும் இடம்

“வெண்ணிறமான பொடியைப்போட்டு அண்டாவில் கலக்கி மஞ்சள்திரவத்தை உண்டுபண்ணியபோது சர்க்கஸில் அனைவரும் தும்மினார்கள். பொறுத்துப்பார்த்த ஜாம்பனும் அதன் அடக்கத்தை மீறி இரண்டு தும்மல் போட்டுவிட்டு ‘மன்னிக்கணும் முதலாளி’ என்று முதலாளியைப் பார்த்தது.

பின்னர் “கரடி மனிதனின்” அரங்கேற்றம் . ஜாம்பன் பிரபலமாகாவே, கூடவே பிரச்சனைகளும் முதலாளிக்கு வருகிறது . அதனைச் சமாளிக்க கரடி பாலனை கரடியாக்க முயல்கிறார் . வேறு வழியின்றி அவரும் அதற்கு ஒதுக்ககொள்ள வேண்டியதாகிறது . கரடி பாலனுக்கு அவமானம் தாங்கமுடியவில்லை . ஒரு மிருகத்தை மனிதனாக்கிச் சம்பாதிக்க ஒரு மனிதனை மிருகமாக்கி அதில் வெற்றியும் கொள்கிறார் முதலாளி .
ஒரு கணத்தில் ஜாம்பனும் பாலனும் (வேறு வழியின்றி ) ஒன்றாகிவிடுகின்றனர் . மற்றவர்கள் பாலன் அதிக சம்பளம் பெறுவதைப் பற்றி பேசியும், அவனது யோகம் என்றும் எண்ணிக்கொள்கிறார்கள் .

ஜாம்பன் மெல்ல மெல்ல மனிதர்களின் உடல் மொழியினையும்,பாலன் கரடியின் உடல் மொழியினையும் பெற்றுவிடுகின்றனர்.போகப் போக கூடவே வேலைபார்ப்பவர்களும் பாலனைக் கரடி என்று கிண்டல் செய்கின்றனர் .

இறுதில் அந்தச் சாவு நடந்தேறுகிறது . பாலனின் பொருட்களை அவரவருக்குத் கிடைத்த வரை எடுத்து செல்கின்றனர் .

“அப்புநாயர் அவன் வைத்திருந்த பாதி தீர்ந்த பவுடர் டப்பாவை எடுத்துக்கொண்டார். அவன் பவுடர் போட்டுநான் பார்த்ததேயில்லை.”

என்ற வரியைக் கடக்கும் போது நான் அறியாத “கட்டழகு” பாலன் ஒரு வினாடி கண்ணாடி முன் நிற்பதைப் போன்ற எண்ணம் வெட்டிச் செல்கிறது .

முடிவில் இன்ஸ்பெக்டர் வந்தவுடன் விசாரித்து(!) ஜாம்பனின் மேல் கொலைப்பழி சுமத்தப்படுகிறது .

“ஜாம்பன் சுருக்கம் விழுந்த தோலால் மூடப்பட்டு தொங்கிய தசைகள் மெல்ல அதிர நூற்றுக்கிழவரைப்போல நடுக்கத்துடன் வந்து நின்றது. முதலாளியை நோக்கி மெல்ல தலைதாழ்த்தி வணங்கியபின் சிறிய மின்னும் கருங்கண்களால் எங்களை மாறி மாறிப்பார்த்தது”

மிகவும் கஷ்டப்பட்டு கடந்த வரி மேலே கூறியது . என்றாலும் ஜாம்பான் முன்பே அறிந்திருக்கும் அதன் முடிவை.

“A Beast is a Beast ” என்று கூறும்பொழுது எனக்கு Bicentennial Man படத்தில் வரும் andrew கேரக்டர் நினைவுக்கு வருகிறது . அவன் தன்னை மனிதனாக ஏற்றுக்கொள்ள அனைவரிடமும் போராடுகிறான் . நீதிமன்றம் வரைச் செல்கிறான் .அவன் எதிர்பார்பதெல்லாம் ஓர் அங்கீகாரம் மனிதன் என்ற அங்கீகாரம் . மனிதனையே மிருகம் போன்று நடத்தும் உலகில் ஒரு மிருகத்திற்கு அதற்குரிய இடம் மட்டுமே அளிக்கும் மனிதமனம். சொல்லப்போனால் அதைவிடக் கீழான இடம் மட்டுமே அளிக்கப்படும்.

“ஏலே, ஒத்தக்குண்டு போரும்லே”. இறுதியில் ஜாம்பன் மிகமிக மித வேகத்தில் மண்ணில் புழுதி பறக்க சரிந்து விழும் காட்சி எனது மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது .மனதில் என்றும் நிற்க போகிறான் ” ஜாம்பன்” .

ஏற்கனவே மாடன் மோட்சம் படித்து இதே போன்றதொரு ஒரு கதை எழுதிவிட வேண்டும் என்ற எண்ணம் இருந்துகொண்டே இருக்கிறது , இப்பொழுது அதனுடன் “கரடி” யும் சேர்ந்து கொண்டது .

உங்கள் படைப்புகளுக்கு நன்றி .

இப்படிக்கு ,
பிரவின் சி
http://ninaivilnintravai.blogspot.in/

கரடி

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 46
அடுத்த கட்டுரைஎம்.எஸ்.வி நினைவஞ்சலி [புறப்பாடு II – 10, உப்பு நீரின் வடிவிலே]