எம்.எஸ்.விஸ்வநாதனை நான் இருமுறை சந்தித்திருக்கிறேன். முதல்முறையாகச் சந்தித்தது ஷாஜியின் நூல் வெளியீட்டுவிழாவில். ஷாஜி அவருக்கு நெருக்கமானவர். மீண்டும் சந்தித்தபோது அவருக்கு அந்நிகழ்ச்சி நினைவில் இருக்கவில்லை. ஷாஜியையே நினைவிருக்கவில்லை. பொதுவாக அவரது இசை பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். அவரது பெரும்பாலான பாடல்களை அவர் நினைவில் வைத்திருக்கவில்லை. முதுமை என்பதை விட மேலாக அவரது இயல்பு அது என்று தெரிந்தது. மிதந்து சென்றுகொண்டிருந்தார். அந்த அலையெல்லாம் இசை.
நான் நினைவறிந்த நாள்முதல் எம்.எஸ்.வி இசையை கேட்டுக்கொண்டிருக்கிறேன். இன்றும்கூட கேட்டேன். ஒவ்வொருநாளும் அவரது ஏதேனும் ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது. அன்றெல்லாம் அது கூடவே இருக்கிறது. மகத்தான மெட்டு உருவாக்குநர் அவர் என்று திரையிசையை அறிந்தவர்கள் சொல்வார்கள். ஒருவகையில் நான் அதிருஷ்டசாலி. தமிழகத்தில் பெரும்பாலானவர்கள் கேட்டிராத அவரது அற்புதமான மலையாள மெட்டுக்களையும் நான் கேட்டிருக்கிறேன்
எம்.எஸ்.விக்கு அஞ்சலி