நீலியும் இசக்கியும்

அன்புள்ள ஜெயமோகன்,

தங்களுடைய நீலி கட்டுரை படித்தேன். இதே போன்றதொரு கதையை எங்கள் ஊரில்(சாத்தான்குளம் அருகில்) இசக்கிஅம்மன் கோவிலில் வில்லுப்பாட்டாக கேட்டிருக்கிறேன். அதுவும் நீலி கதைதான். ஆனால் கொஞ்சம் மாற்று வடிவம். இது வில்லுப்பாட்டாக இரவு ஒன்பது மணிக்கு ஆரம்பித்து விடிய‌ காலை 4 மணிவரை பாடப்படும் கதை. கீழே இருப்பது கதை சுருக்கம் மட்டுமே.

ஒரு அழகான‌ ஊரில் ஒரு அம்மன் கோவில் இருக்கிறது அதற்கு ஒரு பூசாரி இருக்கிறான். அதே ஊரில் ஒரு அழகான தாசி இருக்கிறாள். பூசாரிக்கு தாசியின் மீது ஆசை. அதற்காக தாசி வீட்டுக்கு செல்கிறான். தாசியின் தாயாரோ பணம் இருந்தால் உள்ளே வா என்கிறாள். ஏழை பூசாரியோ கையில் பணம் இல்லாமல் தாசியை மறக்கவும் முடியாமல் திண்டாடுகிறான். அடுத்த நாள் தாசிவீட்டுக்கு செல்கிறான். தாசியின் தாயார் பணம் கேட்கிறாள். மடிக்குள் இருந்து ஒரு நகையை எடுத்துகொடுக்கிறான். அதுவும் அம்மனுக்கு சொந்தமான நகை. ஒவ்வொரு முறை செல்லும் போதும் ஒவ்வொரு நகையாக திருடி கொண்டு கொடுக்கிறான். ஒரு கட்டத்தில் தாசிக்கு மனதளவிலும் அவன் மீது நாட்டம் வருகிறது. ஆனால் தாசியின் தாயார் பணம் மீதே குறியாக இருக்கிறாள். திருடி திருடி அம்மன் கோவில் நகை அனைத்தையும் கொடுக்கிறான். அன்று கொடுக்க நகை இல்லை. வெறுங்கையுடன் வரும் பூசாரியை பார்த்ததும் தாசியின் தாயார் கண்டபடி திட்டுகிறாள். இனி தாசி வீட்டுக்கும் செல்லமுடியாது, கோவிலுக்கும் செல்லமுடியாது என்ற நிலை வந்ததும் எங்காவது ஓடிவிடலாம் என்று அந்த ஊரைவிட்டே புறப்படுகிறான். இது அனைத்தையும் கேள்விப்பட்ட தாசி அவன் பின்னே ஓடுகிறாள். நீ போகும் இடமே எனக்கும் போக்கு. நாம் எங்காவது சென்று புது வாழ்க்கை ஆரம்பிக்கலாம் என்று சொல்கிறாள். இரண்டு பேரும் காட்டு வழியே செல்கிறார்கள். சோர்வுற்ற அவர்கள் ஒரு கள்ளிச்செடியின் நிழலிலே ஓய்வெடுக்கிறார்கள். தாசியோ பூசாரியின் தொடையில் தலைவைத்து நன்றாக தூங்குகிறாள். அவளை விட்டுவிட்டு சென்றுவிடலாம் என்று நினைக்கும் பூசாரி, முதலில் மணல் கூட்டி அவள் தலையை அதில் வைத்து செல்ல நினைத்தாலும் ஒரு கணப்பொழுதில் இத்தனை இன்னலுக்கும் காரணம் இவள்தானே என்று நினைத்து ஒரு கல்லை தூக்கி அவள் தலையில் போட்டு கொன்றுவிட்டு தப்பி ஓடுகிறான். அவளோ அங்கேயே பேயாக, நீலியாக உலவுகிறாள்.

அடுத்த ஜென்மத்தில் பூசாரி ஒரு வியாபாரிக்கு மகனாக பிறந்து, இளம் வயதில் வியாபாரம் செய்ய அந்த வழியே வருகிறான். தூரத்தில் அவனை பார்த்த நீலிக்கு அவன் யார் என்று தெரிகிறது. ஒரு அழகிய பெண்ணாக உருவெடுக்கிறாள். அதே கள்ளிச்செடியின் கிளையை ஒடித்து ஒரு குழந்தையாக மாற்றுகிறாள். பின்னர் அவனை பின் தொடர்ந்து என் கணவனே என்னை விட்டு செல்லாதீர்கள் என்று செல்கிறாள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம் எல்லாம் நியாயம் பேச சொல்கிறாள். அவர்களும் ஒரு குழந்த்தையோடு வந்த பெண் பொய்சொல்லமாட்டாள் என்று கூறி அவன் தான் அவளுடைய புருசன் என்று நினைக்கிறார்கள். அவன் எவ்வளவோ சொல்லியும் கேளாமல் இருவரையும் ஒரு அறைக்குள் தள்ளி கதைவை வெளியே பூட்டிவிடுகிறார்கள். அறைக்குள் சென்ற பெண் நீலியாக உருவெடுக்கிறாள், குழந்தையை மீண்டும் கள்ளி கிளையாக்கி அதை கொண்டு அவன் வயிற்றை கிழித்து குடலை எடுத்து மாலையாக போட்டுக்கொள்கிறாள்.

அவள் கோபம் தணிந்ததும் ஈசனிடம் சென்று கொல்லும் வரம், வெல்லும் வரம், கொடுக்கும் வரம் எல்லாம் வாங்கி இப்பொழுது இசக்கி அம்மனாக வந்த அமர்ந்திருக்கிறாள் என்று கதையை முடிப்பார்கள்.

இன்றும் இக்கதை கோவிலில் வில்லுப்பாட்டாக இசக்கி கோவிலில் பாடப்படுகிறது.

இப்படிக்கு
சு.பொன்முகுந்தன்.

முந்தைய கட்டுரைதுதிபாடி வட்டம் தேவையா?
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 45