‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 48

பகுதி எட்டு : குருதியும் காந்தளும் – 6

முதற்கணத்தில் திரௌபதியெனத் தெரிந்த ருக்மிணி ஒவ்வொரு சொல்லாலும் சிரிப்பாலும் விலகி விலகிச்சென்று பிறிதொருத்தியாக நிற்பதை திருஷ்டத்யும்னன் பார்த்துக்கொண்டிருந்தான். அவளுடைய மெலிந்த நீண்ட உடல் நாணம் கொள்வதற்கென்றே வடிவம் பெற்றது போலிருந்தது. ஒவ்வொரு சிறு எண்ணமும் உடலில் ஓர் இனிய அசைவாக வெளிப்பட்டன. எப்போதும் நிகர்நிலையில் நிற்கும் திரௌபதியின் தோள்களை எண்ணிக்கொண்டதுமே ருக்மிணியின் உடலால் எங்கும் நிகர்நிலையில் நின்றிருக்க முடியாது என்று பட்டது.

ருக்மிணி தன் நெற்றிக்குழலை கையால் வருடி ஒதுக்கி “நான் தங்களை வரச்சொன்னது ஒரு கோரிக்கைக்காகவே” என்றாள். “சொல்லுங்கள் அரசி. அது என் குலதெய்வத்தின் ஆணை என்று கொள்வேன்” என்றான் திருஷ்டத்யும்னன். “இளையோனே, நான் இளைய யாதவரை கைபிடித்தது அவரது பட்டத்தரசியாகும் பொருட்டே. என்னை மணக்கையில் அவருக்குப் பிறிதொரு துணைவி இல்லை. இந்நகரை அடைந்து இதன் முடியை நான் சூடிய பின்னரே அவர் சென்று சத்யபாமையை மணந்தார். ஆனால் அதற்கு முன்னரே ஜாம்பவதியை மணந்திருக்கிறார். எனவே அவள் முதன்மை கொண்டவளும் அல்ல. சொல்லப்போனால் அவள் மூன்றாமவள்” என்றாள். “ஆம். அதை அறியாத எவருள்ளனர் இந்நகரில்” என்றான் திருஷ்டத்யும்னன்.

“நன்று சொன்னீர். அவளன்றி பிறர் அனைவரும் அறிந்த உண்மை அது. அவளிடம் அதைச் சொல்ல எவருக்கும் துணிவில்லை. இளைய யாதவர் கூட அவளை அஞ்சுகிறார். ஏனென்றால் இந்நகரம் யாதவரால் நிறைந்துள்ளது. அவர்கள் அவளை தங்கள் குலத்திருமகள் என்று கொண்டாடுகிறார்கள். அதுவே அவளை ஆணவம் கொண்டவளாக்குகிறது” என்றாள் ருக்மிணி. “பாரதவர்ஷமே அஞ்சும் இளைய யாதவர் ஒவ்வொரு நாளும் அவள் முன் சென்று ஏவலன் என பணிந்து நிற்கிறார் என்கிறார்கள் சேடியர். சினந்து அவள் வாயிலை மூட அதன் வெளியே நின்று தட்டித் தட்டி கெஞ்சுகிறார் என்கிறார்கள். அச்செய்தி கேட்கையில் என் உள்ளம் குமுறுகிறது, ஆனால் அவளை மணந்த நாள் முதல் இதுவே நேர்கிறது.”

“அது ஓர் அலங்காரமாக சொல்வது என்று…” என திருஷ்டத்யும்னன் சொல்லத்தொடங்க உரக்க இடைமறித்து “இல்லை, அது உண்மை” என்றாள் ருக்மிணி. “இந்நகருக்கு வருகையில் என்னை அவர் முன்னரே மணந்துள்ள செய்தி அவளுக்குத் தெரியாது. தானே முதன்மைத் துணைவி என்று எண்ணி சத்ராஜித் அளித்த மகள்செல்வத்துடன் இங்கே வந்தாள். மகட்செல்வம் என அவள்தான் அதை சொல்லவேண்டும். விதர்ப்பநாட்டில் இருந்து நான் கொண்டுவந்த நகைகளை வைத்திருக்கும் பெட்டியே அதைவிட மதிப்புள்ளது.” திருஷ்டத்யும்னன் “அவர் எளிய யாதவப்பெண் அல்லவா?” என்றான். “ஆம், கன்றுமேய்த்து காட்டில் வாழ்ந்தவள்… இன்று தன்னை அரசி என எண்ணிக்கொள்கிறாள்” என்றாள் ருக்மிணி.

“அவர் அவளை மணம்கொண்ட செய்தியை அறிந்தேன். அவருக்கு யாதவகுலத்தில் மணமகள் தேவை என்பதை நானும் அறிந்திருந்தேன். ஜாம்பவர் குலத்தில் அவர் மணம் கொண்டதும் எனக்கு ஒப்புதலே. அவர்களிருவரும்தான் முதலில் வந்தனர். ஜாம்பவானும் அவரது குலத்தவரும் ஜாம்பவதியை வசந்தம் எழுந்தபின்னர்தான் அழைத்துவந்தனர்” என ருக்மிணி தொடர்ந்தாள். “அவரும் அவளும் நுழைந்தபோது நான் அவளை எதிர்கொள்ள என் அணித்தேரில் என் அகம்படியினருடனும் அணிச்சேடியருடனும் சென்றேன். இளைய யாதவருக்கு நிகரமர்ந்து அணித்தேரில் தோரணவாயிலுக்குள் நுழைந்த அவள் அரசணிக்கோலத்தில் தேரூர்ந்துசென்ற என்னைக் கண்டு திகைத்தாள். இளைய யாதவரிடம் ஏதோ கேட்க அவர் இயல்பாக பதில் சொன்னார். என்ன என்று சீறியபின் கையிலிருந்த மலர்களை வீசிவிட்டு தேர்பீடத்திலிருந்து எழுந்து வெளியே குதிக்கப்போன அவளை கைப்பிடித்து இறுக்கிக் கொண்டார். அதை நான் தொலைவிலேயே கண்டேன்.”

“என்ன சொன்னார் என்று தெரியாது. அவள் அதன்பின் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் முகம் சிவந்து கண்கலங்க அப்பீடத்தில் எரியும் மெழுகுப்பாவை போல் அவள் அமர்ந்திருந்ததை கண்டேன். நகர் நுழையும் முறைமைகள் நிகழும்போதும் அவள் விழிகளை சந்திக்க முயன்றேன். மூத்தவளென்ற நிலையில் நின்று மங்கலம் காட்டி மலர் கொடுத்து மஞ்சளரிசி தூவி வாழ்த்தி அவளை நகருக்குள் அழைத்துக் கொண்டேன். நகர்வலம் செல்லும் தேரில் இளைய யாதவரின் மறுபக்கம் அவளுக்கு நிகராக நானும் அமர்ந்தபோது அவள் உடல் கொண்ட வெம்மையையே என்னால் உணர முடிந்தது. நடுவே மலர்ந்த முகத்துடன் அவ்வாடலில் களிப்பவராக இளைய யாதவர் அமர்ந்திருந்தார்” என ருக்மிணி தொடர்ந்தாள்.

எங்கள் இருவரையும் கண்டு இருபக்கமும் நகர் தெருக்களில் கூடியிருந்த யாதவர் வாழ்த்தி குரல் எழுப்பினர். மலர் மழை சொரிந்தனர். மூவரும் அமர்ந்திருந்த பொற்தேர் அந்திமுகில் ஒழுகுவதுபோல நகர்த்தெருவில் சென்றது.  அவ்வணிவலம் முழுக்க ஓரக்கண்ணால் நான் அவள் விழிகளையே நோக்கிக் கொண்டிருந்தேன் அவை சிவந்து இமைகளில் நீர்ப்பிசிர்களுடன் தெரிந்தன. பற்களைக் கடித்து உதட்டைப் பொருத்தி தருக்கித் தலைதூக்கி பொற்பீடத்தில் அமர்ந்திருந்தாள்.

குனிந்து அவள் கைகளைப் பார்க்கையில் நகங்கள் உள்ளங்கைகளுக்குள் புதைவதுபோல முறுகப்பற்றி இருப்பதைக் கண்டேன். முழங்கையிலும் கழுத்திலும் பச்சை நரம்புகள் புடைத்து கிளை விட்டிருந்தன. எக்கணமும் போர்க்கூச்சலிட்டபடி கொற்றவை என எழுந்து தன் இடையமர்ந்த உடைவாளை உருவி அவள் என் மேல் பாய்ச்சுவாள் என்று அஞ்சினேன். படைக்கலம் பயின்றவளென்றும் போர்முகப்பில் எழும் திறம் கொண்டவளென்றும் அவளைப் பற்றி சூதர்கள் சொல்லியிருந்தனர். நானும் படை பயின்றவளே என்றாலும் ஒரு போதும் போர்க்கலை எனக்கு உகக்கவில்லை. அவளுடன் அத்தேர்த்தட்டில் அமர்ந்திருக்க அஞ்சினேன். எப்போது அப்பயணம் முடியும் என்று எண்ணி அமர்ந்திருந்தேன்.

அரண்மனை முகப்பில் வந்த அக்ரூரர் தலைவணங்கி ‘இரு அரசியருடன் தாங்கள் அமர்ந்திருப்பது தேவர் படைகொண்டு அவுண நிரைவென்று கயிலை நகர்மீளும் வேலவன் போல் தோன்றுகிறது அரசே’ என்றார். கிருதவர்மரும் சாத்யகியும் எங்கள் இருவரையும் வணங்கி முகமன் கூறினர். பெருமுற்றத்தில் வைதிகர் கங்கை நீர் தெளித்து வேதம் ஓதி வாழ்த்த, அரண்மனை மகளிர் மங்கலம் காட்டி வரவேற்க, இசைச்சூதர் வாழ்த்திசைக்க, அவள் அரண்மனை புகுந்தாள். அவள் கையில் அணித்தாலத்தில் ஆநிரை மங்கலம் ஐந்தையும் அளித்து வலக்காலெடுத்து வைத்து மாளிகை புகச்சொன்னார் அக்ரூரர். ‘இவ்வரண்மனையில் திருமகள் எழுக!’ என்றார். அவள் திரும்பி ‘இன்னொரு திருமகள் இங்கு முன்னரே அமர்ந்திருக்கிறாளென்று என்னிடம் எவரும் சொல்லவில்லை அக்ரூரரே’ என்றாள். அக்ரூரர் ‘திருமகள்கள் எட்டு வடிவினர் என்றுதானே நூல்கள் சொல்கின்றன?’ என்றார். ‘அவ்வண்ணமெனில் இன்னும் ஐவர் உளரோ?’ என்று அவள் கேட்க அக்ரூரர் அதை வேடிக்கையாக எடுத்துக் கொண்டு ‘ஆம் ஐவர் வரினும் மகிழ்வே’ என்றார். அவள் தாலத்தைத் தூக்கி வீசப்போகின்றவள் போல சற்றே அசைந்தாள். பின் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு வலக்காலெடுத்து வைத்து மாளிகைக்குள் புகுந்தாள்.

அவளை வலப்பக்கமும் என்னை இடப்பக்கமும் நிறுத்தி இருவருக்கும் வாழ்த்து மங்கலம் செய்து அரண்மனைக்குள் கொண்டு சென்றனர் மங்கல மூதன்னையர். மகளிரவைக் கூடத்தில் அமர்ந்து மூவினிப்பை அருந்தி முறைமை முடித்த உடனேயே அவள் எழுந்து ‘போதும், இனி ஒரு கணமும் இவளருகே அமர மாட்டேன். இன்று சொல்கிறேன் யாதவரே, எனக்கிழைக்கப்பட்ட இவ்வஞ்சத்தை ஒரு போதும் பொறுத்துக் கொள்ள மாட்டேன். யாரிவள்?’ என்றாள். இளைய யாதவர் பதற்றத்துடன் எழுந்து ‘யாதவ இளவரசி, இவள் என் துணைவி, விதர்ப்ப நாட்டு இளவரசி’ என்றார். அவள் ‘இவளை நீர் முறைப்படி மணந்துள்ளீரா?’ என்றாள். இளைய யாதவர் சிறுவர்கள் தவறுசெய்துவிட்டு நிற்பதுபோல தலை கவிழ்ந்து நின்றார்.

‘இவளை நீர் மணந்ததை ஏன் என்னிடம் சொல்லவில்லை? வஞ்சகனே, கைப்பற்றி குடிவந்து அமர்ந்த அரசியையும் மறைக்கும் கீழ்மை கொண்டவனா நீ?’ என்று அவள் கைநீட்டி கூச்சலிட்டாள். அவர் பதற்றத்துடன் ‘ஓசையிடாதே அரசி. இது பொதுக்கூடம்….’ என்றார். ‘சொல்! என்னிடம் ஏன் மறைத்தாய்?’ என்று அவள் மேலும் கூச்சலிட்டாள். ‘நீ என்னிடம் இதை கேட்கவில்லையே!’ என்றார் இளைய யாதவர். மூச்சிரைக்க ‘கேட்டேன். நூறு முறை கேட்டேன்’ என்று அவள் கூவினாள். ‘என்ன கேட்டாய்?’ என்று அவர் கேட்டார் .

‘உங்கள் நெஞ்சில் நிறைந்திருப்பவள் நான் மட்டுமே அல்லவா என்றேனே?’ என்றாள் சத்யபாமா. ‘ஆம். நீயும் உன்னுருவங்களும் மட்டுமே அங்குள்ளன என்று சொன்னேனே’ என்று அவர் சொன்னார். ‘அப்படியென்றால் இவள் யார்? இவள் எங்குள்ளாள்?’ என்று அவள் கேட்க ‘இவளும் நீயே. திருமகளே, உனக்கு எட்டு வடிவங்கள் என்று நூல்கள் சொல்கின்றன’ என்றார். ‘இந்தப் பசப்புச் சொல் எனக்கு உவப்பல்ல. இதைக்கேட்டு உளம் மயங்கும் எளிய பெண்ணும் நானல்ல. இக்கணமே திரும்ப என் ஆயர்குடி மீள்கிறேன். அங்கு சென்று கன்று மேய்த்து வாழ்கிறேன். இவளுக்கு இளையவளாக இங்கு வாழ மாட்டேன்’ என்றாள். ‘இது என்ன வீண் பேச்சு அரசி?’ என்று அக்ரூரர் இடைமறிக்க ‘நீர் விலகும். குலமூத்தாராக இருந்தும் இவ்வஞ்சகனுக்கு சொற்றுணை நின்ற நீவிர் இழிதகையோரே. உம்மிடம் பேச எனக்குச் சொல்லில்லை. இன்றே நான் திரும்ப எனக்கு தேர் பூட்டுங்கள்’ என்றாள்.

இளைய யாதவர் “யாதவ அரசி, நீ இங்கு இளையவள் என்று எவர் சொன்னது?’ என்றார். அவள் நின்று திரும்பி ‘இவளை முன்னரே மணம் கொண்டுவிட்டால் நான் இளையவளல்லவா?’ என்றாள். ‘அரசி, நீ வயதில் மூத்தவள். யாதவக் குடிகளின் முதல்வி. இந்நகரின் அரசி’ என்றார். அச்சொற்களைக் கேட்டு பதைத்து என் நெஞ்சை பற்றிக்கொண்டேன். என் சொற்கள் உதடுகளில் தவித்தன. ‘இவள் என் இளையவளா? சொல்லுங்கள், ஒவ்வொரு தருணத்திலும் என் காலடி பணிபவளா?’ என்று அவள் கேட்க ‘அதிலென்ன ஐயம்?’ என்றார் இளைய யாதவர். ‘நானே இந்நகரின் பட்டத்தரசி….?’ என்று அவள் சொல்ல ‘ஆம் ஆம் ஆம்’ என்றார்.

தான் சற்று தணிந்ததை தானே உணர்ந்து அவள் மீண்டும் சினம் கொண்டு ‘வேண்டாம், இச்சொற்கள் ஒவ்வொன்றும் என்னை மயக்குகின்றன. நான் விழையாத கீழ்மையை நோக்கி இழுக்கின்றன. நிகர் வைக்க ஒப்பேன். ஒரு தருணத்திலும் தலை வணங்க மாட்டேன். இன்றே இந்நகர்விட்டு கிளம்பிச்செல்கிறேன். அக்ரூரரே, இப்போதே என் ரதம் எழுக!’ என்றாள். அக்ரூரர் இளைய யாதவரை திரும்பி நோக்க அவர் ‘அவள் இந்நகரின் அரசி அக்ரூரரே. அவள் ஆணை ஒவ்வொன்றும் இந்நகரில் எவரையும் கட்டுப்படுத்துவதே’ என்றார். அக்ருரர் ‘அவ்வண்ணமே அரசி’ என்றார்.

‘என் ஆடைகள் மட்டுமே என்னுடன் இருக்கட்டும். என் அணுக்கச் சேடியரும் காவல் துணைவரும் தொடரட்டும். இன்று மாலையே நான் கிளம்புகிறேன். இந்நகரில் ஒரு வாய் உணவையும் உண்ணமாட்டேன்’ என்ற பின் அவள் திரும்பி விரைந்து உள்ளறைக்குள் செல்ல, சேடி ஒருத்தி ‘அரசி’ என்று பின்னின்று அழைத்தாள். ‘என்னைத் தடுக்க எவரேனும் முற்பட்டால் தலை கொய்வேன்’ என்று பாமா சினந்தாள். இளைய யாதவர் அவளுக்குப் பின்னால் கைநீட்டியபடி ‘பாமா, வேண்டாம். சொல்வதைக்கேள். இதோ பார்’ என்று பின்னால் சென்றார். அவள் கதவை அறைந்து மூடியதும் நின்றார். பின்னர் திரும்பி ஒன்றும் நிகழாததுபோல புன்னகை செய்து ‘சரி, நீ உன் அரண்மனைக்குச் செல் ருக்மிணி” என்றார்.

கடும் சினத்துடன் இளைய யாதவரிடம் ‘என்ன சொன்னீர்? விதர்ப்ப நாட்டரசன் மகள் இளையவளா? இங்கு மணி முடி சூடி கோலேந்தி நான் அமர்ந்திருக்கலாகாதா? இந்த யாதவக்கீழ்மகளுக்கு நான் அடிமைசெய்ய வேண்டுமா?’ என்றேன். அவர் ‘யார் சொன்னது அதை?’ என்று அக்ரூரரை நோக்கி ‘அப்படி சொன்னது யார்? இப்போதே தெரிந்தாகவேண்டும்’ என்றார். ‘பசப்பாதீர். இப்போது அதைச் சொன்னதே நீர்தான்’ என்றேன். ‘நானா? நான் எப்போது சொன்னேன்?’ என்றார். நான் என் பொறுமையை தக்கவைத்தபடி ‘அவளே மூத்தவள் என்று சொன்னீர் அல்லவா?’ என்றேன். ‘ஆம்’ என்றார் புரியாதவர் போல. ‘கள்வனே, அப்படியென்றால் நான் யார்?’ என்றேன்.

‘என்ன பேச்சு இது? அவள் மூத்தவள் என்றால் நீ இளையவள் என்று ஆகவேண்டுமா என்ன? இருவரும் நிகராக அமரலாகாதா?’ என்றார். ‘இதோ சொல்கிறேன், இருவரும் என் நெஞ்சில் முற்றிலும் நிகரானவர்கள். போதுமா?’ என்றார். அதற்கு மேல் என்ன சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. ‘அவளே இந்நகரின் அரசி என்றீர்கள்?’ என்றபோது என் குரல் தாழ்ந்திருந்தது. ‘ஆம்’ என்றார். ‘அப்படியென்றால்?’ என நான் பேசத்தொடங்க ‘அரசி, அவள் கோரியது இந்நகரின் அரசப்பொறுப்பை. அதை நான் வாக்களித்தேன். அவள் இந்நகரின் அரசி. ஆனால் நீ இந்நாட்டின் அரசி. அவள் துவாரகையின் முடிசூடுவாள். நீ யாதவப்பேரரசின் முடி அணிவாய்’ என்றார். எனக்கு உண்மையிலேயே ஒன்றும் புரியவில்லை.

அக்ரூரர் சிரித்தபடி ‘இப்பூசலை இப்படி முகமண்டபத்தில் நிகழ்த்தவேண்டுமா அரசே? இன்னும் பல்லாண்டுகள் நிகழப்போகும் ஒரு நாடகமல்லவா இது?’ என்றார். இளைய யாதவர் ‘ஆம். உணவுண்டு ஓய்வெடுத்து மேலும் ஊக்கத்துடன் இதை நடத்துவதே முறையாகும்’ என்றார். அவர் சொல்வதென்ன என்றறியாமலே நான் ‘ஆம்’ என்றேன். என்னைச் சூழ்ந்திருந்த பெண்களெல்லாம் சிரிக்கத் தொடங்கியபின்னர்தான் அறிவின்மை எதையோ சொல்லிவிட்டேன் என்று உணர்ந்தேன். ‘நான் எவரிடமும் பூசலிட விரும்பவில்லை. எனக்கு நிகரில்லாதவர்களிடம் நான் பேசுவதில்லை’ என்றேன். ‘ஆம், பேசவே வேண்டியதில்லை அரசி. தூதர்கள் வழியாகக்கூட சமரிடலாமே’ என்றார் இளைய யாதவர். அது ஏதேனும் சூது அடங்கிய சொல்லா என நான் எண்ணி குழம்பினேன்.

அக்ரூரர் சிரித்தபடி ‘இந்தப்பூசல் இனி யாதவப்பேரரசின் முறைமைசார் கலைநிகழ்வென அறிவிக்கப்படுகிறது. இனி சூதர் இதைப்பற்றி கவிதை புனையலாம். பாணர் பாட விறலியர் ஆடலாம்’ என்றார். இளைய யாதவர் பேராவலுடன் ‘நாடகம் கூட எழுதப்படலாமே அக்ரூரரே’ என்று சொல்ல அக்ரூரர் ‘உறுதியாக செய்யப்படலாம். நானே புலவர்களிடம் சொல்கிறேன்’ என்றார். முகம் மலர்ந்து ‘எந்தப்புலவர்?’ என்று இளைய யாதவர் கேட்டார். ‘சுபகர் நல்ல புலவர், மகத அவையிலிருந்து வந்திருக்கிறார்’ என்று அக்ரூரர் சொல்ல முகம் சுளித்து ‘அவரா? அவருக்கு குலவரலாறுகள் மட்டுமே தெரியும். அசங்கர் எழுதலாமே’ என்றார் இளைய யாதவர். ‘அவர் இன்னமும் காவியம் என எதையும் எழுதவில்லையே?’ என்றார் அக்ரூரர்.

‘என்ன சொல்கிறீர் அக்ரூரரே? காவியமென்பது எளிதா என்ன? அதிலும் இது சிருங்கார காவியம்’ என்றார் இளைய யாதவர். ‘போர்க்காவியம் அல்லவா?’ என்றார் அக்ரூரர். ‘அப்படியா? நான் இன்பச்சுவை மிகுந்திருக்குமென நினைத்தேன்’ என்றார் இளைய யாதவர். ‘இன்பச்சுவை மட்டுமே காவியமாகாதே…’ என்றார் அக்ரூரர். ‘அக்ரூரரே, இது பெருங்காவியம் அல்ல. நாடகக் காவியம். இதற்கு ஒன்பது மெய்ப்பாடுகளில் மூன்றே போதும்.’ அக்ரூரர் ‘இதில் பீபத்ஸம் வருமா?’ என்றார். ‘ரௌத்ரம் உண்டு. பீபத்ஸம் தொடரத்தானே வேண்டும்?’ என்றார் இளைய யாதவர். பெருமூச்சுடன் ‘நாம் இருவரிடமும் பணிப்போம். இரண்டு நாடகக் காவியங்களில் எது மேல் என்று நோக்குவோம்’ என்றார். அக்ரூரர் கவலையுடன் ‘நாம் எதிர்பார்க்கலாம் இளையவரே… ஆனால் நல்ல காவியமென்பது இயல்பாக நிகழ்வது’ என்றார்.

அவர்கள் மிகக் கூர்ந்த நோக்குகளுடன், முகமெங்கும் பொறுப்புணர்வு தெரிய பேசிக்கொண்டிருக்க நான் அவர்களை மாறிமாறிப்பார்த்தேன். இளையவனே, உண்மையில் என்ன நிகழ்கிறது என்றே எனக்குப்புரியவில்லை. இளைய யாதவர் திரும்பி என்னிடம் ‘ருக்மிணி, உன் விழைவுப்படி மிகச்சிறந்த அரசகவிஞரையே தேர்ந்தெடுப்போம்’ என்றார். நான் ஆமென்று தலையசைத்தேன். அக்ரூரர் ‘விதர்ப்ப அரசிக்கு எந்த மனக்குறையும் வரலாகாது’ என்றார். இளைய யாதவர் அருகே நின்ற சாத்யகியிடம் ‘அவைக்கவிஞர்களை உடனே கூட்டச்சொல்லும்’ என்று சொல்ல அவர் தலைவணங்கி வெளியேறினார். ஏதோ போருக்கான மன்றெழல் போல இருந்தன அவர்களின் முகங்களும் சொற்களும் செயல்களும்.

அக்ரூரர் என்னிடம் ‘நான் உடனே கிளம்புகிறேன் அரசி. பணிகள் நிறையவே உள்ளன. எல்லா நிகழ்வுகளையும் தங்களுக்கு முறையாக அறிவிக்கிறேன்’ என்றபின் தலைவணங்கி அறையை விட்டு வெளியே சென்றார். நான் என்ன செய்வதென்றே அறியாமல் நின்றிருந்தேன். அவர் விடைபெற்றபோது அரசியைப்போல வாழ்த்தினேன். உடனே இளைய யாதவரும் ‘அனைத்தும் தங்கள் விழைவுப்படியே நிகழும் அரசி’ என்று என்னிடம் முறைப்படி சொல்லி அறைக்குச் சென்றார்.

“நான் திரும்பி நோக்கியபோதுதான் அத்தனைசேடியரும் சிரிப்பை அடக்கிக்கொண்டிருப்பதைக் கண்டேன்” என்றாள் ருக்மிணி. திருஷ்டத்யும்னன் சிரித்துக் கொண்டு “அன்று தொடங்கிய ஆடல் இது என்று நினைக்கிறேன்” என்றான். “என்ன ஆடல்?” என்று ருக்மிணி சீறினாள். “எல்லாம் வெறும் பசப்பு. பெண்களின் உள்ளங்களை வைத்து ஆடும் பகடை. உணர்வுகளை எரிய வைத்தும் அணைய வைத்தும் தன் விழைவுக்கேற்ப கையாள்கிறார் கயவர். இளையோனே, நான் சலித்துவிட்டேன்” என்றாள்.

திருஷ்டத்யும்னன் “யாதவ அரசி அன்றே கிளம்பினாரா?” என்றான். “அவளாவது கிளம்புவதாவது! அவள் சரியான நாடகநடிகை இளையவனே” என்றாள் ருக்மிணி. “இணைந்து நடிக்கும் பெருநடிகர் இவர். அன்றே அவர் அவள் மாளிகைக்குச் சென்று அவள் வாயிலைத்தட்டி மன்றாடி நின்றார். அவளோ வாயிலை உள்ளிருந்து மூடிக் கொண்டாள். வெளியே நின்று தட்டி சலித்து இன்சொல் சொல்லி நயந்தும் அஞ்சியும் சொல்லாடி அவளை மயக்கினார். அவளுக்கு அவர் நின்றிருக்கும் இடம் அமைச்சும் அலுவலரும் காணும் மாளிகைவாயிலாக இருக்கவேண்டும் என்ற தெளிவு இருந்தது. அவர் தழையத் தழைய அவள் பேருருக் கொண்டாள். தன் காலைத்தூக்கி அவர் தலை மேல் வைத்தாள். உலகளந்த பெருமான் போல மூவுலகும் நிறைத்து ஓங்கி நின்றாள். அவள் கேட்டதை எல்லாம் அவர் ஒப்புக் கொண்டார். கேட்காததையும் வாக்களித்தார்.”

இந்நகரை முறைமைகளை சூதர் பாடல்களை அனைத்தையும் அவளுக்கென கொடுத்தார். இறுதியாக ‘பாமா, நீ இந்நகர் விட்டுச் சென்றால் ருக்மிணி அரசியாகிவிடுவாளல்லவா?’ என்ற ஒற்றைவினாதான் அவளை வீழ்த்தியது. ‘ஆம். ஒருபோதும் எனக்குரிய அரியணையை அவளுக்களித்து செல்லமாட்டேன்’ என்று சொல்லி அவள் இந்நகரில் நீடிக்க ஒப்புக் கொண்டாள். ‘ஆனால் நாளை நான் அரியணை அமர்கையில் என்னருகே அவள் அமரக்கூடாது’ என்றாள். ‘நாளை யாதவ குலச்சபை கூடுகிறது. ஷத்ரிய அரசி அதில் எப்படி அமர முடியும்?” என்று அவர் சொன்னார். அவள் அதை ஒப்புக் கொண்டு கதவை திறந்தாள்.

“அச்சொற்களுக்கு அதற்கு மறுநாள் ஷத்ரிய அரசுகளின் தூதர்கள் கூடிய அரசவையில் அதே அரசியின் அரியணையில் மணிமகுடம் சூடி நான் அமர்ந்திருப்பேன் என்பதே பொருளென்று அப்போது அவள் அறியவில்லை” என்று சொல்கையில் ருக்மிணி அறியாது புன்னகைத்துவிட்டாள். திருஷ்டத்யும்னன் உரக்கச் சிரித்ததைக் கண்டதும் ருக்மிணி சினந்து “என்ன சிரிப்பு? ஆண்களுக்கு இது வெறும் விளையாட்டு” என்றாள்.

திருஷ்டத்யும்னன் “அரசி பெண்களுக்கும் இது விளையாட்டல்லவா?” என்றான். “இளைய யாதவர் அன்றி பிறிதொருவர் இவ்வாடலை ஆட நீங்களும் ஒப்புக் கொள்வீர்களா?” என்றான். ருக்மிணி முகம் சிவந்து “ஆம். ஆடலின்போதே அவரது முழுத்தோற்றம் தெரிகிறது. அதையே நான் விழைகிறேன், என் நெஞ்சமர்த்தி வழிபடுகிறேன்” என்றாள். திருஷ்டத்யும்னன் “பிறகென்ன? இவ்வாடல் இறுதி வரை செல்லட்டும்” என்றான்.

ருக்மிணி எதையோ நினைவு கூர்ந்தவளாக புது சினத்துடன் “உம்மை வரவழைத்து நான் சொல்ல வந்தது அதுவல்ல” என்றாள். “சொல்லுங்கள் அரசி” என்றான் திருஷ்டத்யும்னன். “அந்த சியமந்தக மணியை அவளிடமே கொடுத்துவிட்டார் இளைய யாதவர். அது முறையல்ல.” திருஷ்டத்யும்னன் “அது அவர்களின் குலமணி அல்லவா?” என்றான். “அதைப்போல பல மணிகளை நானும் கொண்டுவந்தேன். அவை துவாரகையின் கருவூலத்தில்தான் உள்ளன. சியமந்தக மணி அந்தகக் குலத்திற்குரிய சின்னமாக இருக்கலாம். அதை அவளுக்கென்றே அக்ரூரர் அளித்தும் இருக்கலாம். ஆனால் எப்போது அது அரசுக் கருவூலத்தை அடைந்ததோ அப்போதே துவாரகைக்கு உரிமைப்பட்டது” என்று ருக்மிணி சொன்னாள்.

“நேற்று முன் தினம் நிகழ்ந்த யாதவ மன்று கூடலில் அந்த மணியை அவள் தன் கழுத்தில் அணிந்து அமர்ந்திருந்தாள். ஆகவே நாளை மறுநாள் கூடும் ஷத்ரிய தூதர்களின் பேரவையில் அதை நான் அணிந்து அமர்ந்திருப்பதே முறையாகும்” என்று ருக்மிணி சொல்ல திருஷ்டத்யும்னன் அதுவரை இருந்த புன்னகை அழிந்து “அதை யாதவ அரசி ஏற்கமாட்டார்” என்றான். “ஆம். அவள் ஏற்கவில்லை. என் சேடியை வசைபாடி திருப்பியனுப்பிவிட்டாள். அந்த மணியை தானே தன் அரண்மனைக்கருவூலத்தில் வைத்திருக்கிறாள். ஆனால் இந்நகரில் ஒவ்வொரு விழியும் நோக்கியிருக்கும், அரசப்பேரவையில் நான் அந்த மணி சூடி அமர்ந்திருக்கிறேனா இல்லையா என்று. அதைக் கொண்டே இங்கு என் இடமும் அவள் இடமும் முடிவு செய்யப்படுகிறது. அந்த மணியை அணியாது ஒரு போதும் நான் அவை அமரமாட்டேன். அதை அவளிடம் சொல்லுங்கள்” என்றாள்.

“இதில் நானென்ன சொல்வது?” என்றான் திருஷ்டத்யும்னன். “இளையோனே, இங்கு ஷத்ரிய குலத்தவராக நீங்கள் மட்டுமே உள்ளீர்கள். சாத்யகியும் அக்ரூரரும் பிற அனைவருமே யாதவர்கள்” என்றாள் ருக்மிணி. திருஷ்டத்யும்னன் “ஆம். அதனால் என்னை சத்யபாமா அயலாக அல்லவா பார்ப்பார்கள்?” என்றான். “இல்லை. அவள் தங்களை அழைத்துப் பேசியதை நான் அறிவேன். அவளுக்காக அந்த மணியை மீட்டுவந்தவர்களில் நீங்களும் ஒருவர். அவள் முகத்தை நோக்கி இவ்வுண்மையை நீங்கள் சொல்ல முடியும்” என்றாள் ருக்மிணி.

“இல்லை அரசி…” என திருஷ்டத்யும்னன் தயங்க “அவள் யாதவ குலங்களுக்கு மட்டுமே அரசி. ஷத்ரியர் அனைவருக்கும் பேரரசி நானே. சியமந்தகம் இவ்வவையில் என் நெஞ்சில் ஒளிவிட்டாக வேண்டும்” என்று ருக்மிணி சொன்னாள். திருஷ்டத்யும்னன் ஏதோ சொல்லவர அவள் கையசத்து “நான் தங்களிடம் விண்ணப்பிக்கவில்லை. என் ஆணையை மேற்கொள்வதாக சற்றுமுன் சொன்னீர். இது என் ஆணை!” என்றாள். “ஆணை” என தலைவணங்கி “நான் சொல்கிறேன் அரசி” என்றான் திருஷ்டத்யும்னன்.

முந்தைய கட்டுரைகனடா CMR FM நேர்காணல் – 1
அடுத்த கட்டுரைஇரவு – ஒரு வாசிப்பு