துணை

சிற்றிதழ்களில் எழுத ஆரம்பித்த காலகட்டத்தில் ,1986ல் , திருமலை ஆசிரியத்துவத்தில் வந்துகொண்டிருந்த தீபம் இதழில் ஒரு கதை எழுதினேன். ‘ரோஜா பயிரிடுகிற ஒருவர்’. முதிர்ச்சி இல்லாத நடைகொண்ட அந்தக்கதையை நான் தொகுப்புகளில் சேர்க்கவில்லை. நீண்ட இடைவேளைக்குப் பின் அக்கதையை வாசித்த நினைவை ஒரு நண்பர் என்னிடம் பகிர்ந்து கொண்டார்.”ஜே, அது வைலோப்பிள்ளி ஸ்ரீதர மேனன் தானே?” .புன்னகை மட்டும் செய்தேன். மலையாளக்கவிஞர் வைலோப்பிள்ளி ஸ்ரீதரமேனனை நான் அவரது சொந்த வீட்டில்ற்குச் சென்று சந்தித்த அனுபவத்தைப்பற்றிய கதைதான் அது.

திரிச்சூரில் அவர் குடியிருந்தார். காசர்கோட்டில் வேலைபார்த்த நான் அவரது வீட்டை விசாரித்துக் கண்டுபிடித்து சென்றேன். அப்போது பணி ஓய்வுபெற்றிருந்தார். பெரிய ஓட்டுவீடு. விசாலமான முற்றத்தைச் சுற்றி மண்ணாலான சுற்றுச்சுவர். உள்ளே ஏராளமான செம்பருத்திச்செடிகள் பூத்துக்குலுங்கின. சிவப்புமலர்கள். அடுக்குச்செம்பருத்திகள், வெள்ளைச்செம்பருத்திகள். சுத்தமாகக் கூட்டப்பட்டிருந்த முற்றம். வீட்டுக்கதவு மூடப்பட்டிருந்தது. கண் தொடும் தூரம் வரை யாருமே இல்லை. கவிஞர் ஒருமாதிரியானவர் என்று சொல்லப்படுவதுண்டு. மானுடம் மீது பெரும் காதலும் மனிதர்கள் மீது சலிப்பும் கொண்டவர் அவர் என்பார்கள். சீக்கிரமே உணர்ச்சி உச்சங்களுக்குச் செல்லக்கூடியவர் என்றும், நிலையற்ற குணாதிசயம் கொண்டவர் என்றும் கேள்விப்பட்டிருந்தேன்.

கேரள இடதுசாரிகளுக்கு மிகப்பிடித்தமான கவிஞர்களில் ஒருவர் வைலோப்பிள்ளி ஸ்ரீதரமேனன். ‘சோர துடிக்கும் செறு கையுகளே பேறுக வந்நீ பந்தங்ஙள்!’ [ரத்தம் துடிக்கும் சிறு கரங்களே, வந்து இந்தப் பந்தங்களை ஏந்திக்கொள்ளுங்கள்!] என்ற அவரது வரி பெரும்பாலான இடதுசாரிப் போராட்டங்களில் ஒலிக்கும். பள்ளியில் மலையாள ஆசிரியராகக் கடைசிவரைக்கும் இருந்தார். இருபது வயதில் அவர் எழுதிய ‘மாம்பழம்’ என்ற கவிதைவழியாகப் பெரும்புகழ்பெற்றிருந்தார். அவரது கவிதைகள் இடம்பெறாத பாடநூல்களே பெரும்பாலும் இல்லை.

வைலோப்பிள்ளி ஸ்ரீதரமேனன் கடைசிவரைக்கும் உறுதியான இடதுசாரி. ஆனால் கட்சி சாராதவர். கட்சியின் போராட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறார். ஆனால் கட்சியிடம் எந்த லாபங்களையும் பெற்றுக்கொண்டதில்லை. நெருக்கடி நிலைக் காலகட்டத்தில் மார்க்ஸியக் கம்யூனிஸ்டுகளுடன் சேர்ந்து வெளிப்படையாக, தீவிரமாக, அரசை எதிர்த்து எழுதினார், தெருமுனைகளில் கவிதை பாடினார். அவரது மாணவரான சி.அச்சுதமேனன் முதல்வராக இருந்த ஒரே காரணத்தால்தான் சிறைவாசம் மேற்கொள்ளாமல் தப்பினார். ஆனாலும் கடுமையான சிக்கல்களுக்கு ஆளாகி வேலையை இழந்தார்.

வைலோப்பிள்ளி மரபான ஒரு சூழலைச் சேர்ந்தவர். நிலப்பிரபுத்துவக் குடும்பத்தில் பிறந்தவரென்றாலும் அவரது மனம் அந்த அமைப்பில் இருந்து முழுமையாகவே விலகியது. மரபுசார்ந்த பழக்கவழக்கங்கள், மதநம்பிக்கைகள் போன்றவற்றில் அவருக்கு ஈடுபாடில்லை.அவருக்கு அறிவியல் என்ற  கருத்தமைப்பு மீது பெரிய மோகம் இருந்தது. இயற்கையையும் சமூகத்தையுமெல்லாம் அறிவியல்ரீதியாகவே அணுகவேண்டும் என்று அவர் சொன்னார். ஆனால் அவர் தர்க்கபூர்வமானவர் அல்ல. உணர்ச்சிக்கொந்தளிப்பானவர். கேரளப்பண்பாட்டுக்கூறுகள் மீது பற்று மிக்கவர். அப்பண்பாட்டுக்கூறுகள் கேரள மரபுக்கவிதையிலேயே வெளிப்பட முடியுமென அவர் எண்ணினார். முழுக்க முழுக்க மரபிலேயே எழுதிய ஸ்ரீதரமேனன் புதுக்கவிதை இயக்கத்தின் பரம எதிரி

ஆனால் அவர் கேரளப்பண்பாட்டுக்கூறுகள் என்று எண்ணியது அனைத்துமே வேளாண்மைசார்ந்த வாழ்க்கை சார்ந்தவை. அவரது புகழ்பெற்ற கவிதைகளின் தலைப்புகளிலேயே அதைக் காணலாம். வித்தும் கைக்கோட்டும் [விதையும் மண்வெட்டியும்] கன்னிக்கொய்த்து [புரட்டாசி அறுவடை]  மகரக்கொய்த்து [மார்கழி அறுவடை]. உழுபவர்களுக்கு நிலம் சொந்தமாக்கப்படவேண்டுமென்ற கருத்தை உருவாக்கியதில் அவரது ‘குடியொழிக்கல்’ [குடியிறக்குதல்] போன்ற கவிதைகளுக்குப் பெரும் பங்குண்டு. பின்னர் ஈ.எம்.எஸ் தலைமையில் கம்யூனிச அரசு வந்தபோது அது நடைமுறைப்படுத்தப்பட்டது

கேரளப்பண்பாட்டுக்கூறுகளை நவீனப்படுத்தியவர் அவர். புகழ்பெற்ற திருவோணம் என்ற கவிதையின் கரு இது. ‘முன்பு ஒருகாலத்தில் ஒரு பேராலயத்தை பூதங்கள் வந்து கட்டின. விடிவதற்குள் கோயிலைக் கட்டிமுடித்துவிடவேண்டுமென்பது அவற்றுக்கான விதி. ஆனால் தங்கக்கொடிமரத்தின் பணிமுடிவதற்குள் கோழி கூவிவிட்டது. கொடிமரத்தைக் கோயில் குளத்தில் வீசிவிட்டுச் சென்றுவிட்டன அவை. இப்போதும் கோயில்குளத்தில் அலைகள் நிலைத்த கணத்தில் ஒரு பொற்கீற்று போல கொடிமரம் தெரிகிறதென அந்த ஊரில் சொல்கிறார்கள். நமக்குத் திருவோணம் அப்படிப்பட்ட ஒரு நினைவு. சேர்ந்து விதைத்து, சேர்ந்து கொய்து, பகிர்ந்துண்டு வாழ்ந்த நாளின் பொன்னொளிக்கதிர் அது. நம் அலைகள் அடங்கும் ஆழத்தில் அது எப்போதுமுள்ளது’

வைலோப்பிள்ளி கவிதைகள் செவ்வியல் சாயல்கொண்டவை. உவமைகளையும் படிமங்களையும் செறிவாக அடுக்கி எழுதப்பட்டவை. ‘இலையே இல்லாமல்,கொம்பு கனத்து வளைய, பூக்கும் செடிகள் போல’ என்று அவற்றை விமரிசகர் சொல்வதுண்டு. ‘இவ்விரவின் தனிமையில் என் எண்ணப் புறாக்கள் சிறகடித்து வானிலேறி கூடணையும் உன்னில் சாளரக்கதவைத்திறந்து நீ வெளியே நிலவொளியை நோக்கி நிற்பதுபோல உன் விழிகளுக்குள் இருந்து ஆத்மாவும் நோக்கி நிற்கிறது போலும்!’ என ஒருவரியில் மூன்று படிமங்களைக் கோர்த்துவிடுவார். அக்காலகட்டத்தில் அவர்மேல் எனக்கு பெரும் பிரேமை இருந்தது. தனிமையில் அவரது கவிதைகளை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொள்வது என் வழக்கம்.

வைலோப்பிள்ளி அப்போது தனியாகத்தான் இருந்தார். அவரது அந்தரங்க வாழ்க்கையைப்பற்றி சில தகவல்கள் அதிக அழுத்தம் அளிக்கப்படாமல் வெளிவந்திருந்தன. நாற்பது வயதுவரை திருமணத்தில் நாட்டமில்லாமலிருந்த வைலோப்பிள்ளி  பின்பு சக ஆசிரியையும் தன் வாசகியுமான பானுமதியம்மாவைக் காதலித்து மணம்புரிந்துகொண்டார். பிறர் பார்வையில் கேலிப்பொருளாகுமளவுக்கு தீவிரமான காதலில் அனைத்தையும் மறந்து வாழ்ந்த ஆறுவருடக் குடும்ப வாழ்க்கையில் இரு குழந்தைகள் பிறந்தன. சட்டென்று ஏதோ ஒரு மனக்கசப்பில்  மனைவியைப்பிரிந்தார். ஏன் என்பது அவர்கள் இருவருமன்றிப் பிறர் அறியவே முடியவில்லை, இனி அது சாத்தியமும் இல்லை.

ஆரம்பத்தில் சற்று வீராப்பாக இருந்த பானுமதி அம்மா பின்னர் இறங்கிவந்தார். மன்னிப்பு கோரினார். சரணாகதி அடைந்தார். வைலோப்பிள்ளி மதித்த பல நண்பர்களைக் கண்டு சமாதானம்செய்துவைக்கும்படி கோரி மன்றாடினார். ஆனால் வைலோப்பிள்ளி கடைசிவரை இரங்கிவரவேயில்லை. தன் மகன்களுக்குத் தேவையான அனைத்தையுமே செய்தார். சம்பளத்தில் பெரும்பகுதியை அவர்களுக்கே கொடுத்துவிட்டு மிகச்சிறு தொகையில் சிக்கனமாக வாழ்ந்தார். தானே சமைத்து உண்டு, தானே வீட்டைப்பெருக்கி, தானே துணிகளை துவைத்து முழுத்தனிமையில் இருந்தார். அவரது தனிமை அச்சமூட்டுவது என்று பலர் எழுதியிருக்கிறார்கள்.

நான் வாசலைத்தட்டலாமா என்று எண்ணினேன். ஆனால் பொதுவாகப் பழைய மனிதர்களுக்கு தட்டும் ஒலி எரிச்சலை உருவாக்குகிறது. யோசித்தபின் ”மாஷே” என்று கூப்பிட்டேன் [மாஸ்டர் என்றசொல்லின் மரூஉ] பதில் இல்லை. உள்ளே யாரும் இருப்பதாகவும் தெரியவில்லை. மீண்டும் அழைத்தேன். பின்பு மெல்ல ஒட்டுத்திண்ணையில் ஏறித் திறந்து கிடந்த சன்னல் வழியாக உள்ளே பார்த்தேன். பக்கவாட்டில் இருந்து ஒரு கொழுத்த வெள்ளைப்பூனை மெல்ல வந்து என்னைப்பார்த்து வாயை நன்றாகத் திறந்து மியாவ் என்றது. ”ஆரா?” என்று பெண்குரலில் அது கேட்பதுபோலவே இருந்தது.

நான் அதைத் தவிர்த்து உள்ளே பார்த்தேன். உள்ளே இருந்து இன்னொரு பூனை வந்து உள்ளே நின்றபடி கண்களைச் சுருக்கி மீசையை அசைத்து என்னை நோக்கி மியாவ்? மியாவ்? என்று மீண்டும் மீண்டும் கேட்டது. கொழுத்தபூனை என்னருகே வந்து வாலைச் செங்குத்தாக தூக்கியபடி கனத்த குரலில் ‘ங்க்யாவ்?’ என்று அதட்டியது. நான் திண்ணையை விட்டு இறங்கிவிட்டேன். அது அந்தத் திண்ணையில் ஏறி , நன்றாக உடலைக் குறுக்கி அமர்ந்துகொண்டு காதுகளை இருபக்கமாக திருப்பி ‘ம்ம்ங்ஹே?’ என்று ஒருமுறை கேட்டபின் கண்களைச் சுருக்கி மூடிக்கொண்டது. நான் அதையே பார்த்துக்கொண்டிருந்தேன். உள்ளே இருந்த பூனை சன்னல்மேல் ஏறிக்கொண்டது. அது என்னைப்பார்த்துக் கத்திக்கொண்டே இருந்தது

[பானுமதி]

மீண்டும் ‘மாஷே மாஷே’ என்று உரக்கக் கூவினேன். உள்ளே யாரோ பாத்திரத்தை வைக்கும் ஒலி கேட்டது. உள்ளே ஆளிருக்கிறார்கள். சற்றுநேரம் கழித்துக் கவிஞர் உள்ளே வந்தார். கை வைத்த பனியனும் வேட்டியும் அணிந்திருந்தார். மூக்குக்குகீழே தடித்து உதடுவிளிம்புகளில் மெலிதாகும் கேரளபாணி நரை மீசை. நல்ல உயரம். சிவந்த நிறம். ”ஆரா?” என்றார்.

நான் எப்படித் தொடங்குவதென்று தெரியாமல் ”நான் மாஷைப் பார்க்கவந்தேன்” என்றேன். அவர் உடனே ”வேண்டாம்…எனக்கு ஒன்றும் வேண்டாம்…”என்று சொல்லிவிட்டுத் திரும்பினார். பூனை எழுந்து அவரை நோக்கி ஏதோ கேட்க அவர் ”எந்தா?”என்று கேட்டு அதனிடம் அந்தப்பக்கமாக உள்ளே வா என்றார். நான் ”மாஷே நான் மாஷின் வாசகன். உங்களைப் பார்க்க காஸர்கோட்டிலிருந்து வருகிறேன்” என்றேன். ”எதற்குப் பார்க்கவேண்டும்?”என்றார் முகம் சுளித்தபடி. ”நான் உங்கள் கவிதைகளைப் படித்திருக்கிறேன். எனக்குப் பிடித்த கவிஞரே நீங்கள்தான்…உங்களைப் பார்க்கவேண்டுமென்று வந்தேன்”

”எனக்கு யாரையும் பார்க்க விருப்பம் இல்லை” என்றார். பூனை மீண்டும் ஏதோ சொன்னது. அவர் அதனிடம் செல்லமும் கோபமுமாக ’பேசாமல் அந்தப்பக்கமாக வா, இப்போது கதவைத் திறக்கமுடியாது’ என்று சொல்லிவிட்டு ”நிற்க வேண்டாம். எனக்கு அன்னியர்களுடன் பேசுவதற்கு விருப்பம் இல்லை”என்றார் ”நான் காஸர்கோட்டிலிருந்து வருகிறேன்” ”சரி, காசர்கோட்டுக்கே போ. இப்போது என்ன அதற்கு? கவிதை எழுதிவிட்டேன் என்பதனால் நான் நிம்மதியாக வாழக்கூடாதா? போ…போ” என்று சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டார். பூனையிடம் அந்தவழியாக வாடி என்று கடைசியாகச் சொன்னார்

பூனை எழுந்து சோம்பல் முறித்துப் பின்பக்க வழி நோக்கி வாலைநீட்டியபடி மெல்லச் சென்றது. கிழட்டுப் பெண்பூனை. நான் அது போவதையே பார்த்து நின்றேன். செம்பருத்தி மரங்களுக்கு அடியில் வாடிய பூக்கள் கிடப்பது வழக்கம். ஆனால் நன்கு கூட்டப்பட்டிருந்தது. உள்ளே சமையல்செய்கிறார் என்று தோன்றியது. தனக்குத்தானே கேரளபாணியில் சுவையாக விரிவாக சமைத்துக்கொள்வார் என்று சொன்னார்கள்.மூளை ஓடாமல் கொஞ்சநேரம் நின்றுவிட்டுத் திரும்பும்போது சட்டென்று எனக்கு கடும்கோபம் வந்து உடலே நடுங்க ஆரம்பித்தது. திரும்பிப்போய்க் கதவை ஓங்கி உதைக்க வேண்டும் போல் இருந்தது.

வைலோப்பிள்ளி ஸ்ரீதரமேனன் குரூரமானவராக இருந்ததில் ஆச்சரியமில்லை என்று பிற்பாடு எண்ணிக்கொண்டிருக்கிறேன். சுந்தர ராமசாமியிடம் அந்நிகழ்ச்சியைச் சொன்னேன். ‘அவர் ஒரு மஸோக்கிஸ்ட்.. சுயவதையில்தான் அவருக்கு மகிழ்ச்சி இருக்கிறது. ஆகவே அதற்கான தருணங்களை உணர்ச்சிகரமாக அமைத்துக்கொள்வார். சுயவெறுப்பு, தன்னிரக்கம் போன்றவற்றைக் கற்பனைசெய்து உருவாக்கி அவற்றைப் பெருக்கிக் கொள்வார். தன்மீதே அவர் செலுத்தும் குரூரத்தின் ஒருபகுதியைத்தான் நீங்கள் கண்டீர்கள்’ என்றார் சுந்தர ராமசாமி. ‘பொதுவாக உணர்ச்சிகரமானவர்கள் மென்மையானவர்கள் என்று நாம் நினைக்கிறோம். அது உண்மை அல்ல. அவர்கள்தான் உக்கிரமான குரூரம் நோக்கியும் செல்வார்கள். சமநிலை கொண்டவர்கள் அந்த அளவுக்கு நெகிழவும் மாட்டார்கள், அந்த அளவுக்குக் குரூரமும் கொள்ளமாட்டார்கள்’ என்று தன் கோட்பாட்டை விளக்க ஆரம்பித்தார்.

இருக்கலாமென்றே தோன்றுகிறது. வைலோப்பிள்ளி ஸ்ரீதரமேனனையும் பானுமதியம்மாவையும் சந்திக்க வைத்தார்கள் நண்பர்கள். சந்திப்புகளில் பானுமதி அம்மா கதறி அழுது இருமுறை மயக்கமடைந்து விழுந்திருக்கிறார். ஆனால் வைலோப்பிள்ளி  தலைகுனிந்து ஒருசொல்கூடப் பேசாமல் சிலைபோல அமர்ந்திருந்ததுடன் சரி. பானுமதி அம்மா ஓய்வு பெற்றார். குழந்தைகளுக்குத் திருமணம் ஆகியது. எல்லாவற்றிலும் வைலோப்பிள்ளி ஸ்ரீதரமேனன் பங்கெடுத்தார். ஆனால் மனைவியுடன் பேசுவது மட்டும் கிடையாது. நோயில் கிடந்த பானுமதி அம்மா சந்திக்க ஆசைப்பட்டபோதுகூட முடியாது என்று மறுத்துவிட்டார். அவருக்கு மணிவிழா நடைபெற்றபோது மேடையில் அவர் அருகே பானுமதியம்மா அமர்ந்திருந்தார். அவர் மனைவியிடம் ஒருசொல்கூடப் பேசவில்லை.

சகமனிதர்கள் அனைவரையும் அவர் அப்படித்தான் நடத்தியிருக்கிறார். 1987இல் அவர் தன் வீட்டுக்குள் தனிமையில் இறந்துகிடந்ததை யாரோ கண்டுபிடித்துச் சொல்லி ஊருக்குத் தெரிந்தது. கேரளத்தின் கலாச்சாரத் தலைநகரமான திரிச்சூரில் அவரது இறுதிப்பயணத்துக்கு இருபதுபேர்கூட வரவில்லை. அவர் தன் உடலை நிளா நதிக்கரையில் எரியூட்டவேண்டுமென இறுதி ஆசை எழுதி வைத்திருந்தார். அதற்கு நிளாநதிக்கரை குடியிருப்போர் எதிர்ப்பு தெரிவித்தமையால் குடும்பச் சுடுகாட்டில் அவர் எரிந்தார்.

நாளிதழ்களில் அவரது மரணம் பற்றி விரிவான செய்திகளை வாசித்தேன். சடலத்தைப் பார்க்க நோயுற்றிருந்த பானுமதி அம்மா மகன் கைப்பற்றி வந்தார். வெள்ளைவேட்டியும் சட்டையும் கண்ணாடியுமாகக் கிடந்த வைலோப்பிள்ளி ஸ்ரீதரமேனனைக் கண்டதுமே அப்படியே தளர்ந்து அவர் உடல்மீது விழுந்து ‘நான் ஒரு தப்பும் செய்யவில்லை…நம்புங்கள்.. நான் ஒரு தப்பும் செய்யவில்லை…என்னை தயவுசெய்து நம்புங்கள்’ என்று கூவிக் கதறி அழுதார்.

நான் அப்போதுதான் ஒரு விஷயத்தை நினைவுகூர்ந்தேன். அது என் பிரமையாகவும் இருக்கலாமென இப்போதும் ஐயப்படுகிறேன். அந்த வெள்ளைப்பூனையை வைலோப்பிள்ளி ஸ்ரீதரமேனன் ‘பானு’ என்றுதான் அழைத்தார்.

முதற்பிரசுரம் 2011 சைரன் வார இதழ். மறுபிரசுரம்

முந்தைய கட்டுரைதேவதேவனை தவிர்ப்பது…
அடுத்த கட்டுரைகொலம்பஸ் தமிழ்ச்சங்க உரை