பகுதி எட்டு : குருதியும் காந்தளும் – 4
அக்ரூரர் கைகளைக் கூப்பியபடி “இளைய யாதவரே! நெடுங்காலம் முன்பு மதுராவை கம்சன் ஆண்டபோது ஒருநாள் அவன் தூதர்களில் ஒருவன் என்னை அணுகி மதுராவின் பெரு நிதிக்குவையில் பாதியை எனக்களிப்பதாக கம்சன் எழுதி அனுப்பிய ஓலையை காட்டினான். நிகராக விருஷ்ணிகுலத்தின் ஆதரவை நான் அளிக்கவேண்டும் என்றான். அந்நிதிக்குவை கார்த்தவீரியரால் திரட்டப்பட்டது என்று நானறிவேன். இந்த பாரதவர்ஷத்தின் பெருங்கருவூலங்களிலொன்று அது. நவமணிகளும் பொன்னும் குவிந்தது. அந்த ஓலையை அக்கணமே என் முன் எரிந்த கணப்பிலிட்டேன். திரும்பி அவனிடம் ‘என்னுள் வாழும் அறத்தின் தெய்வங்கள் என் மூதாதையரால் அங்கு பதிட்டை செய்யப்பட்டவர்கள். அதை வாங்கும் செல்வம் கம்சனிடமுமில்லை. விண்ணகர் ஆளும் இந்திரனிடமும் இல்லை’ என்று அவனிடம் சொன்னேன்” என்றார்.
“என் வாழ்நாளில் ஒரு போதும் செல்வத்தை விரும்பியதில்லை. ஒரு கணம்கூட அரியணை அமர எண்ணியதில்லை. நெறி நின்ற குலமூத்தான் என்ற சொல்லையன்றி புகழுரை எதையும் உன்னியதில்லை. இங்கு நுண்வடிவில் எழுந்தருளியிருக்கும் என் மூதாதையர் அறிக! இச்சொல் ஒவ்வொன்றும் உண்மை” என்றார். மெல்லிய ஓங்காரமென அவ்வவையிலிருந்த அனைவரும் அதை ஏற்றனர். “அந்தகக்குலத்தின் கருவூலத்தில் இருந்த சியமந்தக மணி மண்ணில் விழுந்த சூரியனின் விந்து என்று நான் அறிந்திருந்தேன். இப்புவியில் மானுடர் கொள்ளும் விழைவனைத்தையும் அறிந்த ஒற்றைவிழி என்று ஒரு சூதன் பாடக் கேட்டிருக்கிறேன்” என அக்ரூரர் தொடர்ந்தார்.
“இந்த அவையில் ஒரு முறை சியமந்தகத்தைப் பற்றி பேச்சுவந்தபோது இளைய யாதவர் அது வெறும் ஒரு கல் அல்ல, மணி. மண்ணின் சாரமே மணி எனப்படுகிறது என்றார். புவியாழத்தில் பல்லாயிரம் கோடி மணிகள் புதைந்துள்ளன. எரிமலை எழுந்தோ நிலம் பிளந்தோ நதி அகழ்ந்தோ அவற்றில் சில வெளிவருகின்றன. மண்ணுக்குரியவர் அரசரென்பதால் அவை அரசரை அடைகின்றன. மீண்டும் அவர்களின் கருவூலத்தின் இருளில் புதைகின்றன. புறஒளி காணும் மணிகள் சிலவே. அவை நெஞ்சாழத்தில் வாழும் ஒளிராத எண்ணங்கள் என்பர் சூதர். அறியா விழைவுகள் ஒளி கொள்ளாமலிருக்க வேண்டுமென்பதே முன்னோர் வகுத்த முறை என்று நான் அன்று சொன்னேன். இளைய யாதவர் புன்னகைத்து ‘அக்ரூரரே, காலங்களுக்கு ஒருமுறை ஒரு மணி தன் இருளிலிருந்து வெளிவருகிறது. மானுடரிடம் ஆடி மீண்டும் மண் புதைகிறது. அதை வெல்பவன் தன் ஆழத்தை வென்றவன். மணிக்கென ஒளியேதுமில்லை, நம் விழியிலமைந்த விழைவுகளால் மட்டுமே அதை ஒளி பெறச்செய்கிறோம்’ என்றார்.”
அன்று பிறிது பலவும் பேசி அவை கலைந்து வீடு திரும்பினேன். அக்கணமே அதை மறந்திருந்தேன். ஆனால் அன்று அவ்விரவின் துயிலில் கரிய ஓடை ஒன்று ஒழுகி வருவதுபோல பாதாள நாகமொன்று என்னை அணுகுவதைக் கண்டேன். என் முன் தன் கரிய படத்தை அது விரித்தபோது அதன் வால் நுனி இருளின் ஆழத்தில் எங்கோ அப்போதும் உருகி வழிந்து வந்து கொண்டிருந்தது.
சீறும் ஒலியில் ‘இதை உனக்கென கொணர்ந்தேன்’ என்றது நாகம். நான் திகைத்து அதை நோக்கி நிற்க அதன் வாய் திறந்தது. இரு நச்சுப் பற்கள் மணிக்குருவியின் அலகுகள் போல ஒளியுடன் தெரிந்தன. நடுவில் செந்நிற நாக்கு பற்றிக்கொள்ளும் அனல் என பதைத்தது. தாடை விரிந்து வாய் அகன்று விரிய உள்ளிருந்து செம்முகில் கிழித்து வரும் இளஞ்சூரியன் போல மணியொன்று எழுந்து வந்தது. அதன் செம்மை மெல்ல மறைய இந்திரநீல நிறம் கொண்டது. இருகைகள் நீட்டி அதை இரந்து நின்றேன். நாகம் படம் வளைத்து பின்னால் சென்றது. ‘அதை விழைகிறேன்! அதை கொள்ள விழைகிறேன்!’ என்றபடி என் கைகளை மீண்டும் நீட்டினேன். நாகம் சவுக்குச் சொடுக்கென என் கைகளைத் தீண்டியது.
திடுக்கிட்டு விலகி அக்கைகளால் நெஞ்சை பற்றிக்கொண்டபோது கைக்குள் குளிர்ந்த கல்லொன்றிருப்பதைக் கண்டு வெறித்து நோக்கினேன். என் கைகளில் இருந்தது ஒரு நீலவிழி. அது என்னை நோக்கி புன்னகைத்தது. நாதவிக்க விழித்துக் கொண்டபோது என் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. தொலைதூரத்தில் இருந்து இருண்ட காடுகளின் உப்புக் காற்று ஓலமிட்டபடி வந்து என் அறைக்குள் சுழன்று கொண்டிருந்தது. இருளில் கண்மூடியபோது நான் அந்த மணியை மீண்டும் அருகே என கண்டேன்.
அவையீரே, அதன்பின் சியமந்தக மணி என்னும் சொல்லே என் அகத்தை நடுங்க வைத்தது. திருட்டுப் பொருளை புதைத்து மறைத்தவன் போல எப்போதும் ஓர் எச்சரிக்கை கொண்டிருந்தேன். அவ்வெச்சரிக்கையை வெல்ல மிகையான புறக்கணிப்பை நடித்தேன். அதை விலக்க விலக்க என்னுள் முளைத்து கிளை விரித்து எழுந்தது. ஒரு கணமேனும் நினைவில் நான் அதை விட்டு விலகவில்லை. பல்லாயிரம் முறை வினவிக்கொண்டேன், அதை நான் விழைவது எதற்காக என்று. அதை கொள்ள விழைகிறேனா? கொண்டபின் அதை வைத்து என்ன செய்ய எண்ணுகிறேன்? எதற்கும் மறுமொழியில்லை. அதை விழைந்தது என் உள்ளமல்ல என் கைகள் என்று தோன்றியது. கைகளில் ஏந்தி நெஞ்சோடு அதை அணைக்க வேண்டும் என்பதற்கு மேல் நான் எதையும் விழையவில்லை என்று இன்று அறிகிறேன். அவையீரே, அவ்விழைவு நான் அடைவதல்ல, அந்த மணியால் என்னுள் நிறைக்கப்பட்டது.
சததன்வா சியமந்தக மணியுடன் சென்றான் என்ற செய்தி வந்தபோது நான் அடைந்த உணர்வு என்பது ஓர் ஆறுதல்தான். அது என்னிலிருந்து விலகிச் செல்கிறதே என்ற நிறைவு அது. இனி ஒருபோதும் அது என்னை வெல்லும் என்று அஞ்சத்தேவையில்லை என எண்ணினேன். ஆனால் யாதவ அரசி அந்த மணியை வென்று வரும்படி என்னிடம் ஆணையிட்டார். அப்போது அறிந்தேன், அதை என் அகம் கொண்டாடுவதை. என்னுள் அந்த மணி எழுப்பிய விழைவு என்பது அதுவே என்று சொல்லி என் அகத்தை நம்பவைத்தேன். சததன்வாவை வென்று அவ்வெற்றியின் அடையாளமாக சியமந்தகத்தை நான் கொள்வேன், என் இரு கைகளிலும் அதை ஏந்தி நிற்பேன், நெஞ்சில் அதை அணிந்து கொள்வேன், இந்த அவைக்கு திரும்பி வந்து யாதவ அரசியிடம் அதை அளிக்கையில் என் வீரத்திற்குப் பரிசாக விருஷ்ணி குலத்துத் தலைவனாகிய எனக்கே அதை அவர் அளிப்பார் என்று என் உள்ளம் கற்பனை செய்தது.
இன்று எண்ணுகையில் கூசவைக்கும் எண்ணமென்றிருந்தாலும் அப்போது என் ஆழத்துப் பகற்கனவில் ஒவ்வொரு கணமும் தித்தித்தது அது. இங்கிருந்து படை கொண்டு செல்கையில் சததன்வாவைக் கொன்று அவன் குருதியில் அந்த மணியை முக்கிக் கொண்டுவருவதைப் பற்றி மட்டுமே நான் நினைத்தேன். பிறிதெதையும் ஒரு கணமும் எண்ணவில்லை என்பதை என் மூதாதையர் மேல் சொல்நட்டு இந்த அவை முன்பு வைக்கிறேன். நான் வகுத்த திட்டங்கள் ஒவ்வொன்றும் அவனைக் கொன்று அந்த மணியைப் பறிக்கவே. அவனிடமிருந்து அழைப்பு வந்தபோது கண்ட முதற்கணமே அவன் கழுத்தை அறுப்பதைக் குறித்து மட்டுமே எண்ணினேன். அதன் முழுப்பெருமையையும் நானே கொள்வதுகுறித்து, கிருதவர்மனைத் தவிர்ப்பது குறித்து மட்டுமே திட்டம் வகுத்தேன்.
கலத்திலிருந்து இறங்கி அவன் முன் நின்றபோது தன் கழுத்தில் சியமந்தக மணியை அணிந்தபடி அவன் என் எதிரே வந்தான். நெஞ்சில் விழித்திருந்தது இளங்கதிர். அதன் நோக்கு என் இரு விழிகளை நிறைத்தது. பின் நான் எதையும் எண்ணவில்லை. அந்த மணியை கொள்வதன்றி பிற அனைத்தும் பொருளற்றதென்றும் மண்ணில் வாழ்வொன்று எனக்கு அமைந்தது அதன் பொருட்டே என்றும் உள்ளம் ஓடியது. அந்த மணியும் நானும் மட்டுமே இருக்கும் ஓர் உலகில் வாழ்ந்தேன்.
சததன்வா எங்களை அழைத்து தன் மாளிகைக்கு கொண்டு சென்றான். நாங்கள் தங்குவதற்கு தனியிடமும் பணியாளரும் அமைய ஆணையிட்டான். நீராடி உணவுண்டு மீள்வது வரை அந்த மணியை அன்றி பிறிது எதையுமே எண்ணவில்லை என்பதை இன்று வியந்து கொள்கிறேன். தன் அவையைக் கூட்டி முறைப்படி வாழ்த்தளித்து எங்களை மதிப்புகூர்ந்தான் சததன்வா. பின்பு தன் அணுக்கர் கூடிய உள்ளவையில் எங்களை அமரச் செய்து தன் இலக்குகளை சொன்னான். யாதவ அரசுடன் போர் புரிய விழையவில்லை என்றும் ஆனால் துவாரகையின் படையொன்று வருமென்றால் காசியும் மகதமும் இருபக்கமும் நிற்க அதை எதிர்கொள்ள சித்தமாக இருப்பதாகவும் உரைத்தான். அவன் சொற்களை அவன் கூறவில்லை, அந்த மணி உரைத்தது.
அந்தகக் குலமும் விருஷ்ணி குலமும் ஒருங்கிணைந்தால் மகதத்துடன் இணைந்து பிறிதொரு மாநகரை காசிக்கு அருகே அமைக்க முடியுமென்றும் கங்கையின் பெருக்கு இருக்கையில் வணிகம் குறைபடாது என்றும் சததன்வா சொன்னான். கிருதவர்மன் அவற்றை ஏற்றுக்கொண்டான். நான் தலையசைத்தேன். அன்று இரவு விருந்துண்ணவும் சூது கூடவும் சததன்வா எங்களை அழைத்தான். அவன் மாளிகையின் அணிக்கூடத்தில் அவன் அமைச்சர் இருவரும் சேர்ந்துகொள்ள அவனுடன் கிருதவர்மனும் நானும் பகடையாடினோம்.
பகடைக்களம் விரிக்கையில் அவன் என்னிடம் ‘விருஷ்ணி குலத்தவரே, பகடைக்கு என்ன பணயம் வைக்கிறீர்?’ என்றான். நான் சொல்லெழா விழிகளுடன் நோக்க ‘பகடையில் வென்றால் விருஷ்ணி குலம் என்னுடன் நிற்க வேண்டும்’ என்றான். அக்கணமே நான் ‘நான் வென்றால் அந்த சியமந்தக மணி என்னுடையதாக வேண்டும்’ என்றேன். அவன் ஏதோ சொல்ல வாயெடுக்க அவன் அமைச்சர் அவனை கையால் தொட்டபடி ‘ஆம். அது பணயமென்றிருக்கட்டும். அரசர் ஏற்கிறார்’ என்றார். நானும் ‘இச்சொற்களை ஏற்கிறேன். நான் வென்றால் சியமந்தக மணி என் மார்பில் அணி செய்ய வேண்டும். தோற்றால் என் அரசும் குடிகளும் படையும் சததன்வாவின் இவ்வரசை துணை செய்யும்’ என்றேன்.
பகடை தொடங்கியது. அவையீரே, அப்பகடை ஆடியது நாங்களல்ல. ஒவ்வொரு முறையும் புரண்டு புரண்டு ஊழென ஆடல் காட்டிய பகடையின் எண்களில் குடியிருந்தது வானகத்தையும் மண்ணையும் ஆளும் தொல் தெய்வங்களே. பன்னிரண்டென மீண்டும் பன்னிரண்டென புரண்டு அவை என்னை வெல்லச் செய்தன. என் நெஞ்சில் கை வைத்து கண்ணீர் மல்க உடல் நடுங்க அமர்ந்திருந்தேன். சததன்வா எழுந்து தன் கழுத்திலிருந்த சியமந்தக மணியை ஆரத்துடன் கழற்றி என் கழுத்தில் அணிவித்தான். என் நெஞ்சில் அதன் விழி திறந்தது. கால்பட்ட மண் காற்றாகி ஏழு பாதாளங்களும் திறக்க விழுந்து கொண்டிருக்கும் உணர்வை அடைந்தேன்.
அப்போது சததன்வாவின் பின்னாலிருந்த அமைச்சர் எழுந்து பின்னால் இருந்த வாயிலைத் திறந்து ஏவலர் எழுவரை உள்ளே வரச்செய்து நாங்கள் அருந்திய கலங்களை எடுத்துப்போகச் சொல்லி ஆணையிட்டார். அக்கலங்களை எடுத்துப்போக வந்தவர்களின் கைகளை தொட்டுச் சென்ற என் விழிகள் ஒரு கையில் மெல்லிய நடுக்கத்தைக் கண்டதும் திகைத்து விழிதூக்கி அவன் முகத்தை நோக்கினேன். அக்கணமே என் உட்புலன் அறிந்தது, என்னுடன் வந்த யாதவ வீரனாகிய அவன் துவாரகையின் ஒற்றன் என.
அவர்கள் வெளியே சென்றதும் நான் எழுந்து சியமந்தகத்தை கழற்றப்போனேன். ‘இல்லை, அது தங்களுக்குரியது. அணிந்து கொள்ளுங்கள்’ என்றார் அமைச்சர். ‘இதை என்னால் அணிய முடியாது. என் உடலை இதன் எடை அழுத்துகிறது’ என்று சொல்லி அதை கழற்றி குறுமேடை மேல் வைத்தேன். திரும்பி நோக்குகையில் குருதிவிடாய் கொண்ட தெய்வமொன்று குடியிருக்கும் கிருதவர்மனின் விழிகளை கண்டேன். அதை கிருதவர்மனின் நெஞ்சில் அணிவித்து அத்தெய்வத்தை மகிழ்விக்க வேண்டுமென்று எண்ணினேன். ஆனால் அதற்குள் மீண்டும் அதை எடுத்து என் கழுத்தில் அணிவித்து சததன்வா சொன்னான் ‘இது தங்களிடம் இருக்கட்டும். இது தங்களிடம் இருக்கும்போது நீங்கள் இளைய யாதவரின் படைத்தலைவரல்ல. இதை அணிந்தபோதே என்னவர் ஆகிவிட்டீர்.’
அச்சொற்களைக் கேட்டதுமே என்ன நிகழ்ந்ததென்று அறிந்து கொண்டேன். ஒற்றன் அப்போதே கிளம்பியிருப்பான். இனி ஒரு போதும் இளைய யாதவரின் அணுக்கனாக நான் இருக்க முடியாது. உடல் தளர்ந்து விழிநீர் சோர என் இருக்கையில் மீண்டும் விழுந்தேன். ‘வென்றவர் இப்படி கலங்குவதை இப்போதுதான் பார்க்கிறேன்’ என்றான் சததன்வா. ‘இல்லை, இந்த மணி மானுடக்குருதி கொண்டது. நூறு விழவுக் களங்களில் என் தோள்கோத்த இளையோன் சத்ராஜித்தின் தலை கொய்த மணி இது. இதை எங்ஙனம் என் தோளில் அணிந்தேன்? எக்கணம் அவ்வெண்ணம் எனக்குத் தோன்றியது?’ என்றபின் குனிந்து அருகிலிருந்த என் வாளை எடுத்து என் கழுத்தில் பாய்ச்சிக் கொள்ளச்சென்றேன். அதை கருதியிருந்தவர் போல் அமைச்சர் என் கைகளை பற்றிக் கொண்டார்.
சததன்வா பாய்ந்து அந்த வாளை எடுத்து வீசினான். ‘என்ன இது மூத்தவரே? என் அவையில் தாங்கள் இப்படி நடந்து கொண்டால் அப்பழியை நான் எப்படி சுமப்பேன்? நன்று… இந்த மணியை நீங்கள் துறக்கிறீர்கள் என்றால் அவ்வண்ணமே ஆகுக! என்னிடம் இருக்கட்டும். தங்களுக்காக கிருதவர்மரிடம் இதை அளிக்கிறேன். தாங்கள் திரும்பிச் செல்லலாம்’ என்றான்.
நான் எழுந்து ஒரு சொல் சொல்லாமல் திரும்பி அந்த அவையிலிருந்து ஓடி படியிறங்கி என் அறைக்கு வந்தேன். சாளரங்களையும் கதவுகளையும் மூடிவிட்டு என் இருக்கையில் இருளில் அமர்ந்து தலையை கைகளில் புதைத்துக் கொண்டேன். என் அகம் நிறைந்திருந்த அனைத்தும் உடைந்து நொறுங்கி சரிவது போல அழத்தொடங்கினேன். நள்ளிரவுவரை அங்கிருந்து அழுது கொண்டிருந்தேன். உடனே கிளம்பிச் சென்று இளைய யாதவரின் காலடியில் விழுந்து என் சிறுமை பொறுக்க வேண்டும் என்று சொல்லி மன்றாட்டு வைக்கவேண்டுமென்று விழைந்தேன். எழுந்து வெளிவந்து இடைநாழியில் நடந்து படிகளில் இறங்கும்போது அங்கு சததன்வாவின் காவலரை கண்டேன். அவ்விரவில் என்னால் என் படைகளை திரட்டிக்கொண்டு மீளச்செல்ல முடியாதென்றுணர்ந்தேன்.
எனது படைகளின் தலைவன் கிருதவர்மன். அவன் ஆணையின்றி கலங்கள் எழுவதும் நிகழ்வதல்ல. என்ன செய்வதென்றறியாமல் இரவில் குறடுகள் ஒலிக்கும் ஒலி அச்சுறுத்தும் பேயென பின்னால் தொடர இடைநாழியில் முன்னும் பின்னும் நடந்து கொண்டிருந்தேன். புலரும்போது கிருதவர்மனை சந்தித்து உடனடியாக நமது படைகளுடன் திரும்பி மதுராவுக்குச் சென்றுவிடலாம் என்று எண்ணினேன். கிருதவர்மனின் அறைக்குச் செல்லும் வழியிலும் சததன்வாவின் படைகள் காவலிருக்கக் கண்டேன். சிறை வைக்கப்பட்டிருக்கிறேனா என்று எண்ணினேன். கிருதவர்மனின் படைகளின் உதவியின்றி இருக்கையில் சிறை வைக்கப்பட்டவனேதான் நான் என்றுணர்ந்தேன். மீண்டும் என் அறைக்குச் சென்று இருளில் அமர்ந்து சாளரம் வழியாகத் தெரிந்த கங்கைப் பெருக்கின் இருண்ட பளபளப்பை நோக்கிக் கொண்டிருந்தேன். அதன் மேல் ஒளிவிரிவது வரை அங்கிருந்தேன்.
கரைப்பறவைகள் நீர்ப்பரப்பில் எழுந்து சுழல்வதை பார்த்தபடி விடியலை எதிர்கொண்டேன். விடிந்ததும் என்னை எழுப்ப வந்த ஏவலனிடம் ‘நான் நீராட வேண்டும்’ என்றேன். நீராட்டறைக்கு அவன் என்னை இட்டுச் சென்றான். நீராடிக்கொண்டிருக்கையில் ‘கிருதவர்மரை இங்கு வரச்சொல்க!’ என்று ஆணையிட்டேன். ‘ஆணை’ என்று சொல்லி அவன் சென்று சற்றுக் கழித்து மீண்டு வந்து ‘கிருதவர்மர் அரசருடன் சொல்லாடிக் கொண்டிருக்கிறார்’ என்றான். கிருதவர்மன் சியமந்தகத்தை அணிந்திருக்கிறானா என்று கேட்க நாவசைந்தது என்றாலும் கேட்கவில்லை. நான் செய்வதற்கொன்றுமில்லை என்று உணர்ந்துகொண்டவனாக ஆடைகளை அணிந்துகொண்டேன். கச்சையில் படை வாளையும் துவாரகையின் இலச்சினையையும் சூடிக் கொண்டேன்.
கிருதவர்மனை சந்திக்காமல் அங்கிருந்து செல்வதெப்படி என்று என் சிந்தையை ஓட்டினேன். படைகள் என் உதவிக்கு வருவது இயல்வதல்ல. சததன்வாவின் காவலர்களைக் கடந்து நான் செல்வதும் அரிது. சாளரம் வழியாக மரக்கிளையில் தொற்றி இறங்கி கங்கைக்குச் சென்று குதித்து நீந்தி உள்பெருக்கில் நின்றிருக்கும் திருஷ்டத்யும்னரின் படகுகளை நோக்கி நான் செல்ல முடியும். ஆனால் அப்போதுதான் என் தோள்களிலும் கால்களிலும் முதுமையை உணர்ந்தேன். பலநூறு முறை பல நூறு வழிகளில் அந்த மாளிகையிலிருந்து தப்பி கங்கையில் நீந்தி திருஷ்டத்யும்னரை அடைந்து நடந்ததென்ன என்று சொன்னேன். பலநூறுமுறை எனையாளும் இளைய யாதவரின் கால்களில் தலை வைத்து கண்ணீர் உகுத்து என் பிழை பொறுக்கக்கோரி மன்றாடினேன். ஆனால் ஒன்றும் நிகழாமல் அவ்வறைக்குள்ளேயே அமர்ந்திருந்தேன்.
வெளியே வெயில் ஒளி கொண்டது. காலைப் பறவைகளின் குரல்கள் அணைந்தன. மாளிகை முகப்பில் தேர்களும் வண்டிகளும் எழுப்பிய சகட ஒலிகளும் குதிரைகளின் கனைப்பு ஒலிகளும் கலந்து ஒலித்துக் கொண்டிருந்தன. நாழிகை மாறுவதற்கேற்ப மாளிகையின் கண்டாமணி ஒலித்தது. முற்பகல் தொடங்கும்போது என்னைத் தேடி மூன்று வீரர்கள் வந்தனர். அவர்கள் கையில் சிறிய தந்தப் பேழை ஒன்றிருந்தது. முதியவீரன் என்னிடம் ‘விருஷ்ணி குலத்தலைவரே, இந்தப் பேழையை அரசர் தங்களிடம் அளிக்கச் சொன்னார்’ என்றான். ‘ஏன்?’ என்று கேட்டபடி எழுந்தேன். ‘அரசர் இவ்வூரைவிட்டு நீங்கிவிட்டார்’ என்றான். நான் அந்தப் பேழையை வாங்கி திறந்தேன். உள்ளிருந்து புன்னகைக்கும் நீல நச்சு விழியை கண்டேன். அவையோரே, அப்போது என்னுள் எழுந்தது உவகைதான். ஏனென்றால் அந்த இரவெல்லாம் நான் அதைப்பற்றியே எண்ணிக்கொண்டிருந்தேன். அதை முற்றிழந்துவிட்டேன் என்று எண்ணி ஏங்கினேன். அது இல்லாமல் என் வாழ்க்கை குறைவுபட்டுவிட்டது என உளம்தவித்தேன்.
ஆழத்திலிருந்து எழுந்த ஐயத்துடன் ‘அரசர் எங்கே சென்றார்?’ என்றேன். ‘அவர் இப்போது காடுகளுக்குள் புகுந்திருப்பார். இதை தாங்கள் வைத்திருக்கவேண்டுமென்றும் இது தங்களுக்குரியது என்றும் ஆணையிட்டார்’ என்று முதியவீரன் சொன்னான். ‘ஏன் அவர் ஊர் நீங்குகிறார்?’ என்று கேட்டேன். ‘இளைய யாதவரின் படகுப் படை கங்கையில் எழுந்து நம்மை சூழ்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு நாழிகைக்குள் அவர்கள் கரையிறங்குவார்கள். நமது படகுகள் அவர்களை எதிர்கொள்ள முடியாது என்கிறார்கள்’ என்றான் முதிய வீரன். பதறி எழுந்து உரக்க ‘கிருதவர்மர் எங்கே?’ என்று கேட்டேன். ‘அவரும் இங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார், தாங்களும் தப்பிச் செல்வதே முறையானது’ என்று அந்த முதியவீரன் சொன்னான்.
நான் என்ன செய்வதென்றறியாமல் அவ்வறைக்குள் சுற்றி வந்தேன். எதை எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை. எங்கு செல்வதென்று எண்ணியதுமே காசிதான் என் நினைவுக்கு வந்தது. என் அன்னையின் நகர் அது. காசி மன்னனின் அத்தை மகன் என்பதால் என்னை அந்நகர் ஒரு போதும் புறந்தள்ளாது. அங்கு செல்வது வரை செலவிடுவதற்கான பொன் என்னிடமிருக்கிறதா என்று என் கச்சைக் கிழியை எடுத்துப் பார்த்தேன். நிறைவுற்றவனாக அதை எடுத்து என் இடையில் கட்டிக் கொண்டேன். விரைந்து அறையைவிட்டு வெளியே சென்றவன் மீண்டும் உள்ளே வந்து அப்பேழையை பார்த்தேன். அதை என்னுடன் எடுத்துச் சென்று காசி மன்னருக்கு அளித்தால் என்னை அவர் ஏற்றுக் கொள்வார் என்று தோன்றியது.
அடைக்கலம் கோரிச்செல்வதை எண்ணியதுமே ஒருகணம் உயிரை மாய்த்துக் கொள்வதைப் பற்றி எண்ணினேன். அங்கே அந்த மணியுடன் நின்று படைகொண்டுவரும் இளைய யாதவரை எதிர்கொள்வதைப் பற்றியும் எண்ணினேன். ஒவ்வொன்றும் என் மீது பழியையே சுமத்தும் என்று தோன்றியது. நான் அந்த மணியைச்சூடி அமர்ந்திருப்பதை ஒற்றன் வாயிலிருந்து அறிந்துதான் இளைய யாதவர் படைகொண்டு வருகிறார். அந்த மணியுடன் அங்கு நிற்பதென்பது அதற்கு மீண்டும் சான்றுரைப்பது. அந்த அறையில் சியமந்தக மணி இருக்க உயிரை மாய்த்துக் கொள்வதென்பது மேலும் வலுவான சான்று. இயல்வது ஒன்றே, உயிரோடிருப்பது. விருஷ்ணி குலத்து மன்றில் என்றேனும் ஒருநாள் எழுந்து என்ன நிகழ்ந்ததென்று உரைப்போம். அதன்பின் உயிரை மாய்த்துக் கொண்டு அச்சொற்களுக்கு வலுவூட்டுவோம் என எண்ணினேன். ஆகவே காசிக்கு நான் சென்றேன்.
ஆனால் சியமந்தகத்தை பிறிதொருவன் கையில் அளிக்க என் மனம் துணியவில்லை. காசி மன்னரிடம் என் குருதியை எண்ணி அடைக்கலம் தரும்படி மட்டுமே கோரினேன். அவர் ஒப்புக்கொண்டதும் அந்நகரில் சிறிய துறைமுகங்களிலொன்றில் வணிகருடன் சென்று தங்கிக் கொண்டேன். இளைய யாதவரின் படைகள் காசிக்குள் புகுந்ததும் காசி அவரை வரவேற்று நிகர் அரியணை அமர்த்தி முறைமை செய்ததும் என்னை அச்சுறுத்தியது. சியமந்தகத்துடன் வணிகப்படகிலேறி உஜ்ஜயினி வந்தேன். அங்கிருந்து மாறுவேடத்தில் துவாரகையை அடைந்தேன். விருஷ்ணி குலத்துப் பேரவை வேறெங்கும் இல்லை என்று தோன்றியது. இங்கு இளைய யாதவர்முன் நுண்வடிவில் அமர்ந்திருக்கும் விருஷ்ணிகுலத்து மூதாதையரிடம் என் சொற்களை முன் வைக்க வேண்டும் என இங்கு வந்தேன். இதோ முன் வைத்துவிட்டேன்.
“என்னுடன் சியமந்தகத்தை கொண்டுவந்தேன். அதை இங்கு இளைய யாதவரின் அவை முன் வைக்கிறேன். மானுடரின் விழைவுகள் மேலேறி குருதியும் கண்ணீரும் கொண்டு அனல் வழியாகவும் புனல்வழியாகவும் பயணம் செய்து எங்கு வரவேண்டுமோ அங்கு அது வந்துள்ளது என இப்போது அறிகிறேன்” என்று சொன்ன அக்ரூரர் தன் இடையிலிருந்த சிறிய தந்தப்பேழையை எடுத்துத் திறந்து அரசமேடையில் இளைய யாதவரின் முன் கொண்டு சென்று வைத்தார். அவையோர் அனைவரும் அறியாமலேயே பீடத்திலிருந்து எழுந்து தலைநீட்டி அதை நோக்கினர். மலர்மேல் நீர்த்துளிபோல அது செந்நிறப்பட்டின்மீது அமர்ந்திருந்தது. முதலில் ஒளியற்றதாகத் தெரிந்தது, மெல்ல அதன் ஒளி பெருகி சிறிய நீலச்சுடர் போல எரியத்தொடங்கியது.
“அவை முன் நான் சொன்ன இச்சொற்கள் ஒவ்வொன்றும் உண்மையென்று இதோ என் குருதியால் நிறுவுகிறேன்” என்றபடி அக்ரூரர் தன் வெண்ணிற ஆடைக்குள்ளிருந்து குறுங்கத்தியொன்றை எடுத்து தன் கழுத்தை வெட்டப் போனார். அக்கணத்திற்கு ஒரு கணம் முன்னரே கிளம்பிய இளைய யாதவரின் படையாழி அதைத் தட்டி தெறிக்க வைத்து சுழன்று மேலேறி சிட்டுக் குருவி சிறகடிக்கும் ஓசையுடன் சென்று அவர் கையில் அமர்ந்தது. பலராமர் பாய்ந்தெழுந்து அக்ரூரரைத் தூக்கி பின்னால் கொண்டு வந்து சுவரோடு சாய்த்து பற்றிக் கொண்டார். பதைத்தெழுந்த யாதவர் அவை கை நீட்டி கூச்சலிட்டது.
“அக்ரூரரே, எந்நிலையிலும் தாங்களே விருஷ்ணிகுலத்தலைவர்” என்றார் விருஷ்ணி குலத்து சசிதரர். “ஆம், ஆம்” என்று குரலெழுப்பியது அவை. சத்யபாமை எழுந்து “இவ்வவையில் யாதவப் பேரரசியென நின்று நான் ஆணையிடுகிறேன். அக்ரூரரை இவ்வரசு முழு உள்ளத்துடன் ஏற்கிறது. அவர் பிழையற்றவரென்று நான் சான்றுரைக்கிறேன்” என்றாள். பலராமர் தன் பிடியைவிட்டு பின்னால் நகர்ந்து “மூத்தவரே, திருமகளின் சான்றுக்கு அப்பால் தாங்கள் விழைவதென்ன?” என்றார். இரு கைகளாலும் முகம் பொத்தி உடல் குலுங்க அழுதபடி சுவரில் வழுக்கி இறங்கி முழங்கால் மேல் அமர்ந்து அக்ரூரர் குலுங்கி அழுதார். அவை அவரை நோக்கி நின்றது.
பலராமர் திரும்பி “இளையோனே, இதற்கு மேலும் உனது ஆணையென்ன?” என்றார். இளைய யாதவர் எழுந்து “மூத்தவரே. அக்ரூரரை எப்படி அரசி புரிந்து கொண்டாரோ அப்படி கிருதவர்மரை நானும் புரிந்து கொள்கிறேன். அவரை நான் பொறுத்து ஏற்கிறேன். அவர் விழைந்தால் இந்த அவையில் முன்பிருந்தது போலவே நீடிக்கலாம்” என்றார். பலராமர் உரக்க “என்ன சொல்கிறாய்?” என்றார். “அந்தகக் குலம் அவரை ஏற்குமென்றால் எனக்கு மறுப்பில்லை” என்றார் இளைய யாதவர். அந்தகர்கள் “ஏற்கிறோம்… கிருதவர்மரை நாங்கள் முழுதுள்ளத்துடன் ஏற்கிறோம்” என்று கூவினர்.
கிருதவர்மன் எழுந்து தன் தலைக்குமேல் இரு கைகளை கூப்பி கண்கள் வழிய “நான் நிறைவுற்றேன் அரசே! இச்சொற்களுக்காக என்றும் கடன்பட்டிருக்கிறேன். ஆனால் ஐயமற்ற குரலில் இனி துவாரகையின் படைகளுக்கு ஆணையிட என்னால் இயலாது. என் சிறுநகருக்குத் திரும்ப ஒப்புதல் அளியுங்கள்” என்றான். படியிறங்கி அவனை அணுகி தோளில் கை வைத்து தன் உடலுடன் சேர்த்துக்கொண்டு “தங்கள் விருப்பப்படி ஆகட்டும் கிருதவர்மரே. தாங்கள் விடைகொண்டு செல்கையில் துவாரகையின் அரச முறைப்படி வழியனுப்பி வைப்போம்” என்றார் இளைய யாதவர்.
தன் இருக்கையில் மார்பில் கைகளை கட்டிக்கொண்டு இறுகிய உடலும் உணர்வுகள் தெரியாத முகமுமாக திருஷ்டத்யும்னன் அமர்ந்திருந்தான். அவையின் அமைதியை உணர்ந்து திரும்பி நோக்கியபோது அத்தனை விழிகளிலும் சியமந்தகம் தெரிவதுபோல உளமயக்கு ஏற்பட்டது.